Advertisement

7

இந்திரஜித் ஊருக்கு கிளம்புவதற்கு முதல் நாள் குழலியை தன் தாயுடன் அனுப்பிவிட்டிருந்தான். சென்னை வந்து ஓரிரு நாட்கள் இருந்தவர்கள் மூன்றாம் நாள் ஊருக்கு கிளம்பியிருந்தனர்.

 

குழலியை கயல்விழியின் வீட்டில் சென்று விட்டு வந்திருந்தனர் ஸ்ரீனிவாசனும், தரங்கிணியும். இந்திரஜித் ஊருக்கு கிளம்பிய அன்று அவளிடமும் வீட்டினரிடமும் போன் செய்து பேசிய பின்னே தான் ஊருக்கு சென்றிருந்தான்.

 

அமேரிக்காவிற்கு சென்ற பின்னரும் கூட அவளுக்கு அழைத்து பேசியிருந்தான். “குழலி நான் இங்க வந்துட்டேன். அதைச் சொல்லத்தான் கூப்பிட்டேன். இனிமே எப்போ கூப்பிட முடியுமோ தெரியலை”

 

“டைம் கிடைக்கும் போது கண்டிப்பா கூப்பிடுறேன். நீ வொர்ரி பண்ணிக்காதே. பத்திரமா இரு” என்றுவிட்டு போனை வைக்க அவளுக்கு எரிச்சலாக இருந்தது.

 

‘இவங்கலாம் எதுக்கு கல்யாணம் பண்ணிக்கறாங்க. அந்த வேலை தான் முக்கியம்ன்னா அதையே கட்டியிருக்க வேண்டியது தானே’ என்று ஆத்திரம் எழுந்தது அவளுக்கு.

 

‘இதில் நேரம் கிடைக்கும் போது தான் இவர் பேசுவாராம். இங்க யாரும் அவர் பேசுவார்ன்னு தவம் கிடக்கலை’ என்று தனக்குள் அவனைக் குறித்து பொருமிக் கொண்டாள். கயல்விழியோ தாய் வீட்டிற்கு வந்திருக்கும் மகளை சீராட்டிக் கொண்டிருந்தார்.

 

அவரெங்கே அறிவார் வந்த மகள் திரும்பிச்செல்ல அடம் பிடிப்பாள் என்று. அவள் தோழிகள் கல்லூரி செல்வதை பார்த்ததும் அவளுக்கும் தன் படிப்பை தொடர ஆசை வந்தது.

 

அது அவளின் முதலாம் வருட படிப்பின் இறுதி நாட்கள். எப்படியோ அன்னையை சமாளித்து அவள் பரிட்சைக்கு பணம் கட்டி தேர்வெழுதியிருந்தாள். அவள் வராதிருந்த நாட்களில் தொடர்ந்த பாடத்தை தோழிகளிடம் கேட்டறிந்து படித்துக் கொண்டாள்.

 

கல்லூரியில் இடைப்பட்ட நாட்களாய் வராதிருந்ததற்கு உரிய விளக்கம் கொடுத்த பின்னரே அவளை தேர்வெழுத அனுமதித்திருந்தனர்.

 

கயல்விழி மகளிடம் எவ்வளவோ சொன்னார். “நீ திரும்ப மருமகனோட ஊருக்கு போகப் போறே, அப்புறம் எதுக்கு குழலி பரிட்சை எழுதணும்ன்னு அடம் பிடிக்கறே”

 

“ம்மா ப்ளீஸ்ம்மா எனக்கு படிக்கணும். அவர்கிட்ட நான் பேசிக்கறேன், நான் படிப்பை விடுறதை அவர் விரும்ப மாட்டார். நான் அவர்கிட்ட சொல்லிட்டேன்” என்று சொல்லியிருக்க அதன் பிறகு அவர் மறுக்கவில்லை.

 

தரங்கிணியிடம் மட்டும் போன் செய்து அவர் சொல்லியிருக்க அவரும் மருமகள் படிப்பை தொடர்வதைத் தான் விரும்பினார்.

இந்திரஜித் எப்போதாவது போன் செய்வான். பெரிதாய் எதுவும் விசாரித்திருக்கவில்லை அவளைப் பற்றி. அவன் நலன் குறித்த தகவல்கள் மட்டுமே பகிர்வான், பின் வேலை இருக்கிறது என்றுவிட்டு போனை வைத்துவிடுவான்.

 

அவன் ஊருக்கு கிளம்பும் நாளும் வந்திருந்தது. பெங்களூர் வந்து இறங்கியிருந்தான். முதல் நாளே குழலிக்கு அழைத்து சொல்லியிருந்தான்.

 

பெங்களூருக்கு அவன் வந்த அன்று ஒருவருமே அவனை வரவேற்க அங்கில்லை. பெங்களூர் வந்ததில் இருந்து தனிமை தான் அவனுக்கு பழக்கமென்றாலும் ஏனோ யாருமே அவனை பார்க்க வரவில்லை என்பது அவனுக்கு வருத்தமாகத் தானிருந்தது.

 

அவன் வீட்டிற்கு போன் செய்ய அவர்கள் ஊரில் இருப்பதாக சொன்னார்கள். குழலியை அழைத்து வரத்தான் சென்றிருக்கிறார்கள் என்று புரிய அதன் பின் அவன் எதுவும் கேட்கவில்லை.

 

இரண்டு நாட்கள் கடந்திருந்தது வீட்டில் இருந்து எந்த தகவலும் இல்லை. குழலிக்கு அழைக்க அழைப்பு எடுக்கப்படாமலே ஓய்ந்தது.

 

அடுத்த பத்து நிமிடத்தில் அவளே அவனுக்கு அழைத்திருந்தாள். “தண்ணி எடுக்க போயிருந்தேன். போன் வீட்டில இருந்துச்சு” என்று விளக்கம் கொடுத்தாள் அவன் கேட்பதற்கு முன்னே.

 

“எப்போ வர்றீங்க இங்க??” என்பது தான் அவன் கேட்ட முதல் கேள்வியே.

 

“நீங்க எப்போ வந்து அழைச்சுட்டு போவீங்க??” என்று அவள் பதில் கேள்வி கேட்டாள்.

 

“என் வேலைப்பத்தி தெரியும்ல உனக்கு. நீ அம்மா அப்பா கூட வந்திடு. இல்லைன்னா அத்தை கூட கிளம்பி இங்க வா. நான் வேணா அத்தைகிட்ட சொல்லவா” என்றான் அவன்.

 

“ஓகே அப்புறம் பேசறேன்” என்று பட்டென்று போனை கத்தரித்துவிட்டாள் அவள்.

 

ஏதோ கோபமாக வைக்கிறாள் என்று மட்டும் அவனுக்கு புரிந்தது. ஆனால் என்னவென்று அவனுக்கு விளங்கவில்லை.

 

குழலிக்கு கோபமே தான் அவன் மீது. ஆதங்கமாய் இருந்தது இப்போது கோபமாகியிருந்தது. எப்போதுமே அவள் அன்னை ஒரு விஷயம் சொல்லிக் கொண்டே இருப்பார் சிறு வயது முதல். அதைக் கேட்டு வளர்ந்தவளுக்கு அந்த விஷயமே மனதில் ஆழவே பதிந்திருந்தது.

 

“ஆம்பிளை இல்லாத வீடுன்னு தான் எல்லாரும் அதை அவங்களுக்கு சாதகமா ஆக்கிக்கறாங்க. என்ன இருந்தாலும் புருஷன் கடைசி வரைக்கும் கூடவே இருக்கணும்” என்பது தான் கயல்விழி அடிக்கடி சொல்வது.

அவர் தன் கணவர் பாதியில் தன்னைவிட்டு சென்றதால் தானே இவ்வளவு கஷ்டமும். அவர் இருந்திருந்தால் ஒருவரும் தங்களை நெருங்க முயற்சித்திருப்பார்களா என்ற எண்ணத்தில் அவ்வப்போது அவர் தன் வருத்தத்தை சொல்வது தான்.

 

குழலிக்கு அதை தனக்கானதாகவே எடுத்துக் கொண்டிருந்தாள். இந்திரஜித் அவளை நீ உன் அம்மா வீட்டில் இரு என்று சொன்னது அவளுக்கு அவ்வளவு வருத்தம்.

 

‘ஏன் நான் இங்க இருக்க மாட்டேனா?? நான் அவர் கூட ஊருக்கு போகக்கூடாதா?? அப்படி என்ன பண்ணிட்டேன் நான்?? இப்படியான கேள்விகள் அவளுக்குள் எழவே செய்தது.

 

இறுதியாக அவள் எதிர்பார்த்தது ஒன்று அவன் அவளை கூட்டி வந்து ஊரில் விட்டுச் செல்ல வேண்டும். அல்லது அவளை கூட்டிச் செல்லவாவது அவன் வரவேண்டும் என்பது.

 

அதை அவள் வாயால் சொல்லாதது அவளின் தப்பு தான். ஆனால் அவ்வெண்ணம் அவளை கொண்டவனுக்கும் தோன்றியிருக்கவில்லை என்பது தான் அவர்களின் இடைவெளியை அதிகமாக்கியது.

 

மேலும் ஒரு வாரம் கடந்திருக்க இடையில் தரங்கிணி அவனுக்கு இரண்டு முறை அழைத்து பேசியிருந்தார். “இந்தர் என்னன்னு தெரியலை குழலி நாங்க போய் கூப்பிட்டா வரலை. படிக்கணும் காலேஜ் ரெண்டாவது வருஷம் சேரப் போறேன்னு அது இதுன்னு ஏதோ சாக்கு சொல்றா”

 

“எனக்கென்னவோ எதுவும் சரியாப்படலை. என்னன்னு நீயே பேசி சரி பண்ணு” என்றுவிட்டு போனை வைத்துவிட மனைவிக்கு அழைத்து பேசினான் இந்திரஜித்.

 

“சொல்லுங்க” என்றவளின் குரலே ஒட்டாது ஒலித்தது போல இருந்தது அவனுக்கு.

 

“அம்மாகிட்ட ஏதோ சொன்னியாமே”

 

“என்ன??”

 

“அதை நீ தான் சொல்லணும். காலேஜ் கண்டினியூ பண்றேன்னு சொன்னியா??”

 

“ஆமா”

 

“சரி பண்ணு அதை என்கிட்ட முன்னாடியே சொல்லியிருக்கலாம்ல”

 

“எல்லாமே உங்ககிட்ட சொல்லிட்டு தான் செய்யணுமா??”

 

“சொல்லிட்டு செய்யணும்ன்னு நான் சொல்லலை. உன்னை என்கிட்ட அனுமதி வாங்கணும்ன்னு சொல்லலை, தகவல் சொல்லியிருக்கலாம்ன்னு தான் சொன்னேன்” என்றுவிட்டு போனை வைத்துவிட்டான்.

 

தரங்கிணிக்கு அழைத்து அவன் மனைவி படிப்பை தொடர்வதைப் பற்றி இவன் கூற அவர் மகனைப் பிடித்து நன்றாக திட்டிவிட்டார். “இதெல்லாம் உனக்கு முதல்லயே தெரியாதா. தெரிஞ்சு தானே கல்யாணம் முடிச்சோம்”

 

“அப்போ படிப்பைப் பத்தி எதுவும் பேசலை. இப்போ திடிர்ன்னு படிப்பு அது இதுன்னு காரணம் சொல்லிட்டு இருக்கா. நான் ஒண்ணும் அவ படிக்க வேணாம்ன்னு சொல்லலை. தாராளமா படிக்கட்டும், அந்த படிப்பை இங்க இருந்து படிக்கட்டுமே” என்றார் அவர்.

 

“அம்மா விடுங்க அவளுக்கு பழகின இடம் அங்க படிக்கணும்ன்னு நினைக்கிறா. அப்படியே விடுங்க, படிப்பு முடியவும் இங்க வரப்போறா அவ்வளவு தானே” என்று சாதாரணமாக சொன்னான் மகன்.

 

“எனக்கென்னவோ அப்படியே அது முடியும்ன்னு தோணலை. என்னவோ பண்ணுங்க” என்றுவிட்டு அவர் போனை வைத்துவிட்டார்.

 

ஆனாலும் மனது கேட்காது அவர் மீண்டும் ஊருக்கு சென்றவர் மருமகளை வருந்தி அழைக்க இம்முறை கயல்விழி மகளை கேள்வி கேட்க ஆரம்பித்தது மட்டுமல்லாது அவளுக்கு கடிந்து கொள்ளவும் செய்தார்.

 

குழலிக்கு எதுவொன்று என்றாலும் பெரியாத்தாவிடம் சொல்லி விடவேண்டும். அவள் வந்த நேரம் அவருக்கு மெல்ல உடல் சீராக இல்லை. அப்போது தான் ஒவ்வொன்றாக அவரை படுத்த ஆரம்பித்திருந்தது.

 

கால் வலி, வயிறு வலி என்று மாற்றி மாற்றி அவருக்கு ஒவ்வொன்றாய் வர அவருடன் வீட்டில் அவளால் இயல்பாய் பேச முடியாமல் போனது. அவள் வீட்டிற்கு செல்லும் தருணங்களில் ஒன்று அவர் மருத்துவமனை சென்றிருப்பார், அல்லது உறங்கிக் கொண்டிருப்பார்.

 

சில சமயங்களில் அவர் விழித்திருந்தாலும் அவரின் சோர்ந்த முகத்தை கண்டு அவரிடம் சாதாரணமாய் பேசிவிட்டு வீட்டிற்கு வந்துவிடுவாள் குழலி.

 

தரங்கிணி மீண்டும் வந்து அவளை அழைக்கவும் அவளுக்கு பிடிவாதம் இன்னமும் அதிகரித்தது. எல்லாரையும் அனுப்பி வரச் சொல்றாரு, அவரு நேர்ல வந்து கூட்டிட்டு போனா என்ன என்ற ஆதங்கம் கோபமாய் உருவெடுத்திருந்தது.

 

அதே கோபத்தோடே அவள் பெரியாத்தாவிடம் பேசவென்று வீட்டிற்கு வர அப்போது தான் தரங்கிணியின் பேச்சை அவள் கேட்க நேர்ந்தது.

 

“எல்லாரும் சேர்ந்து நான் சொல்லச் சொல்ல கேட்காம அவரசப்பட்டீங்க. இப்போ பாருங்க ஆளுக்கு ஒரு பக்கம் தனித்தனியா இருக்காங்க. இதுக்காகவா அவங்களுக்கு கல்யாணம் பண்ணி வைச்சோம்”

 

“நான் அப்போவே சொன்னேன் இந்தருக்கும் குழலிக்கும் செட்டாகாதுன்னு. ஒருத்தரும் என் பேச்சை கேட்கவே இல்லை, இப்போ யாருக்கு கஷ்டம். என் புள்ளை தானே கஷ்டப்படுறான் இப்போ” என்று அவர் தன் ஆதங்கத்தை பெரியாத்தா மற்றும் தன் கணவரின் முன் கொட்டிக் கொண்டிருந்ததை வாயிலில் நின்றிருந்த குழலி கேட்டிருக்க சாதாரணமாய் முடிந்திருக்க வேண்டிய பிரச்சனை இன்னும் பூதாகரமானதாய் போனது.

 

குழலியால் அந்த வார்த்தையை தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. இன்னும் ஒரு இரண்டு முறை இந்தர் அவளை வாவென்று அழைத்திருந்தால் அவளாகவே வந்திருப்பாளோ?? என்னவோ?? தரங்கிணியின் பேச்சை கேட்டிருந்தவள் உள்ளுக்குள் நொறுங்கிப் போனாள்.

 

‘என்கிட்ட என்ன குறை நான் அவருக்கு பொருத்தமில்லாதவளா…’ என்று நினைத்து நினைத்து மறுகினாள்.

 

அது முதல் அவள் இந்திரஜித்தின் அழைப்பை முற்றிலும் தவிர்த்தாள். யார் வந்து அவளை அழைத்த போதும் பொருந்தாதது பொருந்தாததாகவே இருக்கட்டும் என்று எண்ணினாள்.

 

ஒரு முறை பெரியாத்தாவிடம் நேரிலேயே சென்று சண்டை போட்டு வந்தாள். “எப்போ பார்த்தாலும் பேரனை கட்டிக்கோ, கட்டிக்கோன்னு நீ சொல்லிட்டே இருந்தியே. அதனால தான் எல்லாரும் கேட்டப்போ நான் சரின்னு சொன்னேன்”

 

“இப்போ மட்டும் நான் அவருக்கு செட்டாகாம போய்ட்டானா”

 

“குழலி என்னடி சொல்றே அப்படி யாரு சொன்னா உன்னை” என்றார் அவர்.

“சும்மா மழுப்பாத ஆத்தா எல்லாம் எனக்கு தெரியும். என்னை எல்லாரும் கிள்ளுக்கீரையா நினைச்சு கிள்ளி வைக்கறீங்க. நான் உங்க எல்லாருக்கும் இளப்பாம போயிட்டேன்ல”

 

“நீ கட்டிக்கொன்னா நான் கட்டிக்கணும். நீ ஊருக்கு போன்னு சொன்னா போகணும், வான்னு சொன்னா வரணும். செட்டாக மாட்டேன்னு சொன்னா அதையும் நான் கேட்டுக்கணும். எனக்குன்னு ஒரு மனசு இல்லியா”

 

“என்னை ஊருக்கு போன்னு சொன்னாருல உன் பேரன். அவருக்கு என்னை வந்து கூட்டிட்டு போகணும்ன்னு தோணாதா. ஒண்ணு என்னை கூட்டிட்டு வந்து அவரு விட்டிருக்கணும், அதுவும் செய்யலை, கூட்டிட்டும் போக வரலை”

 

“போன்ல வான்னு சொன்னா போதுமா. நான் யாரு அவருக்கு, என்னை அவருக்கு பிடிக்கலைன்னா ஏன் கட்டிக்கிட்டாரு” என்று தன் போக்கில் பொருமி தீர்த்திருந்தாள் பெரியாத்தாவிடம்.

 

“குழலி அவன் அப்படி நினைக்கிறவன் இல்லைம்மா. நான் பேசுறேன் அவன்கிட்ட” என்று அவர் சொல்ல “நீ பேசினேன்னு எனக்கு தெரிஞ்சுது ஜென்மத்துக்கும் அவர் கூட போகுற எண்ணமே எனக்கு வராது சொல்லிட்டேன்”

 

“எனக்காக யாராச்சும் போய் அவர்கிட்ட பேசினா தான் அவருக்கு புரியுமா. அது எனக்கு ரொம்ப அசிங்கம். நீ பேசினே அப்புறம் நான் என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது” என்று அவரிடம் சொல்லிவிட அவரால் யார் பக்கமும் பேச முடியாமல் போனது.

 

தன்னால் தான் இந்த திருமணம் நடந்தது. அது பாதியிலேயே இப்படி ஆகிவிட்டதே என்ற குற்றவுணர்ச்சி ஆளாகிப் போனார் அவர்.

 

தரங்கிணி மகனிடம் மீண்டும் பேசினார் அவர் ஊருக்கு சென்று வந்தது பற்றி. இந்த முறை இந்திரஜித்திற்கு கோபம் வந்திருந்தது. அவளுக்கு போன் செய்தால் எடுத்து பேசவுமில்லை, அவன் வீட்டினர் வருந்தி அழைத்த போதும் அவள் வரவில்லை.

 

படிக்கட்டும் அவன் வேண்டாம் என்று சொல்லவில்லை. விடுமுறைக்கு கூட வீட்டிற்கு வர விருப்பமில்லை என்றால் அவனுடன் வாழ விருப்பமில்லையோ என்று தான் அவனுக்கு தோன்றியது.

 

அவனுக்கு இப்படி கெஞ்சுவதும் பிடிக்கவில்லை.
“இனிமே அவளை நீங்க யாரும் கூப்பிட வேணாம். எனக்கு அசிங்கமா இருக்கு வா வான்னு கெஞ்சுறதுக்கு. அவளுக்கா எப்போ வரணும்ன்னு தோணுதோ வரட்டும். அவ இஷ்டப்படியே விட்டிருங்க” என்றுவிட்டிருந்தான்.

 

இப்படியாக ஒன்றரை வருடங்கள் உருண்டோடியிருந்தது. அவர்களை இணைத்த பாலமான பெரியாத்தாவே பிரிந்த அவர்களை ஒன்று சேர்க்க வழியாயிருந்தார். அவன் திருமணத்திற்கு பின்னர் இரண்டொரு முறை மட்டுமே அவ்வூருக்கு வந்திருந்தான் அவன்.

 

மருவீட்டிற்கு வந்ததும் அதன் பின் பெரியாத்தாவிற்கு உடல்நிலை சரியில்லை என்று ஒரு நாள் வந்து பார்த்து சென்றிருந்தான்.

 

வந்தவனுக்கு ஒரு முறை நேரிலேயே சென்று மனைவியை பார்த்தால் என்ன என்று தோன்றியிருக்க கிளம்பியிருந்தவன் கண்டது அவள் யாருடனோ சண்டை போட்டுக் கொண்டிருப்பதை தான்.

 

‘இவ மாறாவே மாட்டாளா. யாருகிட்டயாச்சும் சண்டை போட்டுட்டே இருக்கணுமா இவளுக்கு. என்ன பொண்ணு இவ?? எப்படி வளர்ந்தா இவ?? கொஞ்சம் கூட நாகரீகமே இல்லை, படிச்சு என்ன புண்ணியம்’ என்று பொருமியவன் வந்த வழியே திரும்பிச் சென்றுவிட்டான்.

 

அவர்கள் பிரிந்திருக்க வேண்டும் என்று விதி முடிவு செய்த பின் காரணங்கள் ஒவ்வொன்றாய் வரத்தான் செய்தது. அது போல அவர்கள் சேர வேண்டும் என்று விதி போட்ட கணக்கின் படி அவர்கள் சேர்ந்து தானே தீருவார்.

 

எப்படி சேருவார்கள் அவரவர்களின் எண்ணங்களை மறந்து, மறுத்து, என்பதை விதியே முடிவு செய்யட்டும்.

Advertisement