Advertisement

என்னே அங்கு கயல்விழியின் குரல் தான் ஓங்கி ஒலித்தது. மகளுக்கு முன்னே தாய் ஆரம்பித்துவிடுவார் என்பதால் அதிகம் இவள் குணம் வெளியில் வந்திருக்கவில்லை.

 

கணவனுடன் வசிக்கும் வேளையில் அவளுக்கு தாயுடன் தனித்திருந்தது மட்டுமே நினைவில் இருந்தது. அவளின் சித்தப்பா கயல்விழியிடம் தகாத முறையில் நடக்க முயற்சித்ததும் தாயும் மகளும் அவரை விரட்டிவிட்டு விடிய விடிய பயத்துடன் அமர்ந்திருந்ததும் மட்டும் அவளுக்கு எப்போதும் ஓடிக் கொண்டிருக்கும்.

 

அதில் இருந்து வெளியில் வந்திருந்தாலும் அந்நிகழ்வை அவளால் எப்போதும் மறக்க முடிந்ததில்லை. பெங்களூருக்கு வந்த முதல் ஒரு வாரம் அவளுக்கு சாதாரணமாகவே கழிந்திருந்தது.

 

ஏனென்றால் தரங்கிணியும் ஸ்ரீனிவாசனும் அவர்களுடன் இருந்தனர். அதன் பின்பு தான் அவளை தனிமை பயம் வாட்டி எடுக்க ஆரம்பித்தது. எதேச்சையாக யாராவது பேசினாலும் அவர்கள் தப்பான நோக்கத்துடன் தான் பேச வருகிறார்களோ என்ற பயம் அவளுக்கு இருந்துக் கொண்டே இருந்ததின் வெளிப்பாடு தான் அவள் சண்டை போட ஏதுவாக இருந்தது.

 

வேண்டுமென்று அவள் யாருடனும் சண்டை போடவில்லை என்றாலும் அவளின் பயமும் அதற்கு ஒரு காரணமாகவே இருந்தது.

 

சூப்பர் மார்க்கெட்க்கு மனைவியை அழைத்து வந்திருந்தான் இந்தர். ஏதோ போன் வர “நீ பார்த்து வாங்கு இதோ வந்திடறேன்” என்றவன் போனுடன் வெளியில் வந்திருந்தான்.

 

அவன் திரும்பி உள்ளே வர அங்கு அப்படியொரு சண்டை போட்டுக் கொண்டிருந்தாள் அவன் மனைவி. கடைக்கு வந்தவர்கள் அத்தனை பேரும் அதைத்தான் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.

 

“குழலி என்ன பண்ணிட்டு இருக்கே நீ??” என்றவனின் குரல் என்றுமில்லாமல் சற்று சத்தமாகவும் கோபமாகவுமே வெளிப்பட்டிருந்தது.

 

“இவன் என்னை இடிக்க வந்தான். அதான் அடிச்சேன், ஆனா இவங்க எல்லாம் இவன் ஒண்ணுமே பண்ணலை. ரொம்ப நல்ல பையன்னு சொல்லி சப்போர்ட் பண்றாங்க. நீங்க வந்து என்னன்னு கேளுங்க” என்று அவனையும் இழுக்க “தயவு செஞ்சு நீ உடனே என்கூட கிளம்பு” என்று மட்டும் தான் சொன்னான் அவன்.

 

“அப்போ நீங்க அவனை என்னன்னு கேட்க மாட்டீங்களா??”

 

“வீணா எந்த பிரச்சனையும் வேணாம் குழலி பேசாம கிளம்பு”

 

“அதெப்படி சார் அவங்க எங்க ஸ்டாப்பை அடிச்சிருக்காங்க. மன்னிப்பு கேட்கச் சொல்லுங்க சார்” என்று அவர்கள் பேச “என்னது மன்னிப்பா அந்த நாய்க்கிட்ட நான் மன்னிப்பு கேட்கணுமா”

 

“தப்பு பண்ணவன் தான் மன்னிப்பு கேட்கணும் அவனை முதல்ல என்கிட்ட மன்னிப்பு கேட்கச் சொல்லுங்க. அப்புறம் நான் அடிச்சதுக்கு சாரி கேட்கறேன்” என்று இவள் பேச ஆரம்பித்தாள்.

 

“மேடம் இதை இத்தோட விட்டிருவோம். நான் தப்பு பண்ணதாவே இருக்கட்டும், நானே மன்னிப்பு கேட்கறேன். மன்னிச்சிடுங்க, நீங்க சார் கூட கிளம்புங்க முதல்ல” என்று சம்மந்தப்பட்ட அப்பையன் சொல்ல “நீ என்னடா போனா போட்டும்ன்னு மன்னிப்பு கேட்குறது” என்று எகிறினாள் இவள்.

 

“குழலி அதான் அவனே இந்த பிரச்சனையை விட்டிருவோம்ன்னு சொல்றான்ல விட்டிரு பேசாம வா” என்று சொல்லி அவளை இழுத்துச் செல்லாத குறையாக வீட்டிற்கு வந்திருந்தான் இந்திரஜித்.

 

அதுவரையில் மனைவியை பெரிதாய் எதுவும் குறை சொல்லாதிருந்தவன் முதல் முறையாய் அன்னைக்கு அழைத்து பேசிவிட்டிருந்தான். மறுநாளே அவர் கிளம்பி பெங்களூருக்கு வந்திருந்தார்.

 

குழலி குளித்துக் கொண்டிருக்கும் வேளையில் தாயும் மகனும் பேசிக் கொண்டிருந்தனர். “இதுக்கு தான் இந்தர் நான் அப்போவே சொன்னேன். அவ குணம் வேற உன் குணம் வேற. அவ உனக்கு செட்டாவாளான்னு பார்த்து முடிவு பண்ணுன்னு சொன்னேன்ல. பாரு இப்போ ரெண்டு பேருக்கும் கஷ்டம் தானே” என்றார் தரங்கிணி.

 

“அம்மா தேவையில்லாதது எல்லாம் பேச வேண்டாம். அவ ஏன் இப்படியிருக்கான்னு எனக்கு தெரியலை. அவ கூட உட்கார்ந்து பேச எனக்கு இப்போ நேரமில்லை, இல்லைன்னா நான் பேசிடுவேன்”

 

“உங்களுக்கே தெரியும் என்னோட வேலைப்பத்தி. அடுத்த வருஷம் செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பப்போற ராக்கெட் டீம்ல நானும் இருக்கேன். அதுக்காக நெறைய வேலை இருக்கும்மா”

 

ஆம் இந்திரஜித் ஏரோனாடிக்கல் எஞ்சினியரிங் முடித்ததும் அவனுக்கு அஸ்ட்ரோநெட் படிப்பில் நாட்டம் வர அதற்கென்று தனியாக படித்து முடித்தவன் முயன்று இஸ்ரோவில் வேலைக்கு சேர்ந்திருந்தான்.

 

இஸ்ரோவில் வேலை என்பது சாதாரணமான விஷயமல்ல. முயற்சி மட்டுமல்ல அறிவும் அனுபவமும் கூட அங்கு மிகமுக்கியம். தன் முயற்சியில் முன்னேறி வந்தவன் இப்போது தான் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்திருந்தான்.

அது அவனின் கனவு மட்டுமல்ல லட்சியமாகவும் இருந்தது. கண்ணுக்கு தெரிந்த நிலவிற்கு மட்டுமல்ல கண்ணுக்கு தெரியாத செவ்வாய் கிரகத்திற்கு செயற்கைக்கோள் அனுப்பத் துடிக்கும் நூற்றுக்கணக்கான விஞ்ஞானிகளுள் தானும் ஒருவனாகவே துடித்தான் அவன்.

 

தன் அன்னையிடம் “இன்னும் ஒரு வருஷத்துக்கு நான் ரொம்ப பிசிம்மா. அதனால தான் அவளோட என்னால டைம் அதிகம் ஸ்பென்ட் பண்ண முடியலை. இல்லைன்னா அவளை ஒரு டாக்டர்கிட்டயாச்சும் கூட்டிட்டு போயிருப்பேன். அடுத்த வாரம் நான் யூஎஸ் போறேன் ஒரு சின்ன ட்ரைனிங் இருக்கு எனக்கு” என்று இவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே குழலி எட்டிப் பார்த்தாள்.

 

“என்ன” என்றான் இவள் வரவை உணர்ந்து.

 

“டிபன் சாப்பிட வாங்க” என்று அழைத்தாள் அவன் மனைவி.

 

“இதோ வர்றேன்”

 

“அத்தை நீங்களும் வாங்க” என்று அவள் சொல்ல இருவரும் எழுந்து வந்தனர்.

 

உணவு மேஜையில் பொது விஷயங்களை பேசிக் கொண்டிருந்தனர் இருவரும். “ஆத்விக் ஏன்மா இன்னும் வரலை?? இதோ வர்றேன் வர்றேன்னு சொல்லிட்டு இருக்கான். என்ன பண்ணிட்டு இருக்கான்னு நீங்க கேட்கலையா”

 

“நான் கேட்டா இன்னும் ஒரு மாசம் அங்க இருக்க வேண்டி இருக்கும். ஏதோ ஸ்பெஷல் கோர்ஸ் அதுன்னு இதுன்னு சொல்லிட்டு இருக்கான். என்னன்னு பாருங்க” என்றான்.

 

“ஆமா இந்தர் எங்கிட்டயும் அதான் சொன்னான். பார்ப்போம் இன்னும் ஒரு மாசம் தானே வந்திடுவான். ஆமா நீ யூஎஸ் போகணும்ன்னு சொன்னியே அது என்ன விஷயம்” என்று ஆரம்பித்தார் அவர்.

 

“ஆமாம்மா” என்றவன் அவர்களுக்கு பரிமாறிக் கொண்டிருந்த குழலியை பார்த்து “நீயும் உட்காரு உனக்கும் சொல்லணும்” என்று சொல்ல தானும் அமர்ந்தாள்.

 

“இன்னும் ஒரு வாரம் இல்லனா பத்துநாள்ல நான் யூஎஸ் கிளம்பறேன். அங்க எப்படியும் ஒரு ரெண்டு மாசம் இருக்க வேண்டி இருக்கும். ஒரு ஸ்பெஷல் ட்ரைனிங் அங்க அட்டென்ட் பண்ண வேண்டி இருக்கு”

 

“அப்போ நானு”

 

“நீ அதுவரைக்கும் அம்மா கூட இரு. சென்னைக்கு போ”

 

“நானும் உங்க கூட வர்றேன்” என்றாள்.

 

“நீயா” என்றவன் யோசித்தான்.

“ஆமா இந்தர் அவளையும் கூட்டிட்டு போ”

 

“இல்லம்மா வேணாம். ரெண்டு மாசம் தானே நான் திரும்பி வந்திடுவேன். அங்க இவளை வைச்சுட்டு என்னால சமாளிக்க முடியாது. குழலி சொன்னா புரிஞ்சுக்கோ நீ அதுவரைக்கும் அம்மா கூட இரு, இல்லைன்னா உங்க வீட்டுக்கு போ”

 

“இல்லை நான் இங்கவே இருக்கேன்” என்றாள் பிடிவாதக்குரலில்.

 

“சொன்னா கேளு குழலி நீ ஊருக்கு போ. நான் வந்ததும் போன் பண்றேன் நீ கிளம்பி வந்துடு” என்றான் அவன்.

 

“நிஜமா நான் ஊருக்கு போகணுமா”

 

“பின்னே நான் விளையாட்டாவா சொல்லிட்டு இருக்கேன். நீ ஊருக்கு போ”

 

“நான் எங்கம்மா வீட்டுக்கே போறேன்” என்றவளின் முகம் சரியில்லாமல் இருந்ததை தரங்கிணி உணர்ந்துக் கொண்டார்.

 

ஆனால் அவளுக்காக அவரால் பேசவும் முடியவில்லை. மகனின் கனவுக்கு முன்னால் மருமகளைப் பற்றி அவரால் எண்ண முடியவில்லை.

Advertisement