Advertisement

6

 

“எனக்கு நீங்க பாடம் எடுக்கிற அளவுக்கு நான் என்ன தப்பு பண்ணேன்?? சொல்லுங்க என்ன தப்பு பண்ணேன்??”

 

“இப்படித்தான் எல்லார்கிட்டயும் நீ சண்டை போடுவியா?? அக்கம் பக்கத்துல இருக்கவங்ககிட்ட ஒண்ணு அனுசரிச்சு போகணும் இல்லையோ நாம தள்ளி இருக்கணும்”

 

“அதைவிட்டு சண்டை போட்டா என்ன அர்த்தம். என்னைக்காச்சும் நான் சத்தமா பேசி நீ பார்த்திருக்கியா. இந்தளவுக்கு கூட நான் பெரிசா பேசினதே இல்லை. என்னையவே இவ்வளவு தூரம் நீ பேச வைச்சிருக்கே”

 

“என்னயவே குற்றம் சொல்றீங்க. அந்த செக்யூரிட்டி என்ன பண்ணான்னு நீங்க ஏன் கேட்கலை??”

 

“சரி என்ன பண்ணான்??”

 

“அதை இப்போ கேட்டு”

 

“கேட்கலைன்னு சொன்னல்ல சொல்லு என்ன பண்ணான்??”

 

“உங்களுக்கு எந்த உதவி வேணும்ன்னாலும் என்ன கேளுங்க. நான் வந்து செஞ்சு தர்றேன்னு சொல்றான். எவ்வளவு திமிர் அவனுக்கு”

 

“இவ்வளவு தானா” என்றான் அவன் மிகச் சாதாரணமாய்.

“ஓ!! அது உங்களுக்கு ரொம்ப சின்ன விஷயமா??”

 

“இங்க பாரு குழலி நான் தான் அவன்கிட்ட காலையில போகும் போது சொல்லிட்டு போனேன். உனக்கு எதாச்சும் வாங்கிட்டு வரணும்ன்னா உதவியா இருக்கச் சொல்லி. நீ இங்க புதுசுல அதான் ஒரு வார்த்தை சொல்லிட்டு போனேன். அவன்கிட்ட சொன்னதை உன்கிட்ட சொல்ல மறந்திட்டேன்”

 

“நான் கேட்டனா உங்களை எனக்கு உதவி வேணும்ன்னு. அப்படியே எனக்கு எதுவும் வேணும்ன்னா நீங்க வாங்கிட்டு வந்து கொடுங்க, இல்லை நானே போய் வாங்கிக்கறேன். எனக்கு எதுக்கு இன்னொரு ஆளு ஹெல்ப்”

 

“அம்மா தாயே தெரியாம சொல்லிட்டேன், ஆளை விடு இனிமே எதுவும் சொல்லலை. ஆனா உனக்கு கடைசியா சொல்றேன், இனிமே நீ யார்கிட்டயும் சண்டைக்கு போகக்கூடாது. இங்க எனக்குன்னு ஒரு மரியாதை இருக்கு அதை கெடுத்திடாதே” என்று சற்று காட்டமாகவே சொல்லிவிட்டு அலுவலகம் கிளம்பிவிட்டிருந்தான்.

 

அவன் பேசிச் சென்றது அவளுக்கு கஷ்டமாக இருந்தது. ‘நான் என்ன அவர் மரியாதையை கெடுத்தேன். அவங்க என்கிட்ட எப்படி நடந்துக்கிட்டாங்களோ நானும் பதிலுக்கு அவங்ககிட்ட நடந்துக்கிட்டேன். இதுல என் தப்பு என்ன இருக்கு’

 

‘நானா வலிய போய் யார்கிட்டயும் சண்டை போடலையே. அவங்க என்கிட்ட தேவையில்லாத பேசினாங்க அதுனால தானே சண்டை வந்துச்சு’ என்று தனக்குள் பொருமிக் கொண்டாள்.

 

வெளிய போனாதானே பிரச்சனை இனிமே போக வேண்டாம் என்று தனக்குள் முடிவெடுத்துக் கொண்டு அவள் வீட்டிலேயே அடைந்து கிடந்தாள்.

 

அதுவுமே அவளுக்கு ஒருவித சோர்வையும் சலிப்பையும் தான் கொடுத்தது. முதலாம் வருடம் கல்லூரி சேர்ந்திருந்தவளை பிடித்து தான் திருமணம் செய்து வைத்துவிட்டிருந்தனர்.

 

ஒரு வேளை அவர்கள் மற்ற கணவன் மனைவியை போல் இருந்திருந்தால் அவளுக்கு எதுவுமே தோன்றியிருக்காதோ?? என்னவோ??

 

மறுநாள் வேறுவிதமாய் அவர்களுக்கு விடிந்தது. முதல் நாள் கயல்விழியிடம் பேசியிருந்த குழலிக்கு அவர் ஆயிரம் அறிவுரை சொல்லியிருந்தார். ஏற்கனவே கணவன் சொல்வதை கேட்டு கேட்டு அவளுக்கு புளித்து போயிருந்தது, இதில் அன்னை வேறு, சலிப்பாய் இருந்தாலும் கேட்டுக்கொண்டாள்.

 

எப்போதும் போல் காலையில் அவனுக்கு முன்னே எழுந்து குளிக்கச் சென்றிருந்தாள். வெள்ளிக்கிழமை என்பதால் தலைக்கு ஊற்றி குளித்து அவள் வெளியே வர இந்திரஜித் எழுந்திருந்தான்.

 

குளியலறைக்கு சென்றவன் “குழலி” என்று குரல் கொடுக்க அடித்து பிடித்து ஓடிவந்தாள் அவள்.

 

“என்னங்க”

 

“என்ன இது??” என்றான்.

 

“என்ன??” என்று அவள் புரியாது விழித்தாள்.

 

“இங்க பாரு டைல்ஸ் முழுக்க மஞ்சளா இருக்கு. நல்லா கறை பிடிச்சிருக்கு. பார்த்து பார்த்து நான் இந்த டைல்ஸ் எல்லாம் பதிக்க சொன்னேன். இப்போ பாரு எப்படி இருக்குன்னு” என்று அவன் சொல்லவும் கண்களில் குளம் கட்டிப் போனது அவளுக்கு.

 

முதல் நாள் கயல்விழி சொல்லியிருந்தார் மஞ்சள் தேய்த்து குளி என்று. அங்கு வந்ததில் இருந்து அதை மறந்திருந்தாள், அன்னை சொல்லவும் வெள்ளிக்கிழமை ஆயிற்றே என்று கொஞ்சமே கொஞ்சம் மஞ்சள் தேய்த்து குளித்தது ஒரு குற்றமா.

 

எல்லாவற்றையும் விட அவன் பார்த்து பார்த்து பதித்த டைல்ஸ் அதை இப்படி அழுக்காக்கி விட்டாயே என்ற ரீதியில் பேசியது இன்னமும் அவளை அழ வைத்தது. தனிமையை உணர வைத்தது.

 

“உன் முகத்துல அப்பின மாதிரி இங்க தரையிலயும் அப்பி வைச்சிருக்கே. இன்னும் என்னெல்லாம் பண்ணப் போறியோ” என்றுவிட்டு கதவை அடைத்துக் கொண்டான்.

பின் குளித்து உணவருந்தி அவன் அலுவலகம் கிளம்பிவிட குளியலறைக்குள் புகுந்திருந்தவள் அந்த தரையில் இருந்து கறையை முழுமையாய் அகற்றிய பின்னர் தான் வெளியே வந்திருந்தாள்.

 

இரவு வீட்டிற்கு வந்திருந்த இந்திரஜித்திற்கு காலையில் நடந்ததெல்லாம் மறந்தே போயிருந்தது. அவன் வந்ததும் முகம் கை கால் எல்லாம் கழுவி வந்து அமர்ந்த போது கூட சுத்தமாய் இருந்த குளியலறை அவன் கண்ணில் படவேயில்லை.

 

இப்படியே வெறுமையாய் அவர்கள் வாழ்க்கை ஆரம்பித்து ஒரு மாதத்திற்கும் மேல் ஓடியிருந்தது. அன்று ஞாயிறு என்பதால் அவன் வீட்டில் இருந்தான்.

 

எப்போதும் ஞாயிறு அன்று அவளை எங்காவது சுற்றிக்காட்ட அழைத்துச் செல்வான். முதல் நாள் அவன் வேலை முடிந்து வர வெகு நேரமாகியிருந்ததால் அன்று எங்கும் செல்ல வேண்டாம் வீட்டிலேயே இருக்கலாம் என்று முடிவெடுத்திருந்தார்கள்.

 

காலையில் காய்கறி வண்டி அவர்களின் குடியிருப்புக்குள் வந்திருக்க காய் வாங்க சென்றவள் தான் காய்க்கறி கடைக்காரனிடம் சண்டை போட்டுக் கொண்டிருந்தாள்.

 

இந்திரஜித்திற்கு பொறுமையே போய்விடும் போல இருந்தது அவளின் செயலால். இவர்கள் வீட்டு காலிங்பெல் அழுத்தி தூங்கிக் கொண்டிருந்தவனை எழுப்பிய செக்யூரிட்டி வெளியில் நடப்பதை சொல்ல சட்டையை மாட்டிக் கொண்டு வெளியில் ஓடிவந்தான்.

 

“குழலி” என்று இவன் குரல் கொடுக்கவும் சட்டென்று பேச்சை நிறுத்திக் கொண்டாள். “இனிமே இப்படியெல்லாம் ஏமாத்தாதீங்க” என்று காய்கறி கடைக்காரனுக்கு அறிவுரை கூறி இந்திரஜித்தை நோக்கி நடந்து வந்தாள்.

 

“என்னாச்சு??” என்றான் இவளிடம்.

 

“ஒண்ணுமில்லை நம்ம ஊர்க்காரர் தாங்க. காய்கறி  விலை எல்லாம் ரொம்ப அதிகமா சொல்லிட்டு இருந்தாருங்க. அதான் பேசிட்டு இருந்தேன்” என்று ஒன்றுமே நடவாதது போல சொல்ல இந்தருக்கு தலைச்சுற்றி போனது.

 

அங்கு எதையும் பேச விருப்பமில்லை அவனுக்கு. மற்றவர்கள் முன் காட்சிப்பொருள் போல நிற்பதே அவனுக்கு பிடிக்காது. அங்கோ அத்தனை பேர் இவர்களைத் தான் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

 

வீட்டிற்கு வந்ததுமே மீண்டும் கேட்டான் என்ன பிரச்சனை என்று. “அந்தாளு எல்லாம் ரொம்ப அதிகமா சொல்லிட்டு இருந்தாரு. இங்க எல்லாமே யானை விலை குதிரை விலையா சொல்றாங்க. நம்ம ஊர்ல இருந்து பொழைக்க வந்திருக்காரு. நம்மளையே ஏமாத்தினா கோபம் வராதா” என்று நியாயம் பேசினாள் அவள்.

 

“இனிமே நீ அவன்கிட்ட எந்த பொருளும் வாங்க வேண்டாம். அடுத்த வாரத்துல இருந்து சூப்பர் மார்கெட் கூட்டிட்டு போறேன். ஒரு வாரத்துக்கு தேவையான காய்கறி அப்புறம் வீட்டுக்கு தேவையான மளிகைச்சாமான் எல்லாம் அங்கவே வாங்கிக்கலாம்” என்று அவன் சொல்ல கார்குழலிக்கு சந்தோசமாக இருந்தது நமக்காக பார்க்கிறாரே என்று.

 

இந்திரஜித் அறியவில்லை மறுவாரம் அதைவிட பெரிய களேபரம் நடக்கும் என்று. குழலி ஒன்றும் அறியாத பெண்ணெல்லாம் இல்லை ஆனால் எப்போதும் எதற்கும் அவளுக்கு ஒரு பயம் உண்டு.

 

தன் பயத்தை அவள் ஜெயிப்பது எதிர்த்து பேசுவதிலும் சண்டையிடுவதிலும் என்றாகிப் போனது தான் விந்தை. சிறு வயதில் தகப்பனை இழந்து அவளும் அவளின் தாயும் தனித்திருந்த போது அவளின் அப்பாவுடன் பிறந்த சகோதரரே தன் தாயிடம் தவறாய் நடக்க முயற்சி செய்ய அது வரையிலும் அமைதியாக இருந்த கயல்விழி அது முதல் தன்னை சுற்றி ஒரு வட்டம் போட்டுக் கொண்டார்.

 

அதுவரை கணவரின் ஊரில் வசித்து வந்தவர் பாதுக்காப்பின் பொருட்டு தன் சொந்த ஊருக்கு வந்து குடியேறினார். தன்னையும் தன் மகளையும் காத்துக்கொள்ள அவர் தனக்கு போட்டுக் கொண்ட ஒரு முகமூடி அனைவரையும் தன்னைவிட்டு ஒரு அடி தள்ளி வைப்பது என்பதை செயல்படுத்த ஆரம்பித்தார்.

 

ஒரு ஆண் பார்க்கும் பார்வையே பெண்ணுக்கு உணர்ந்திவிடும் அவனின் பார்வையின் பொருள் என்ன என்று. அதை உணர்ந்திருந்த கயல்விழி வலிய சென்று அவர்கள் வீட்டு பெண்களிடம் சண்டை இழுப்பார். ஒன்றுமே இல்லாத விஷயமாயிருக்கும் அதற்கெல்லாம் சண்டையிடுவார்.

 

அதனாலேயே ஊரில் அவருக்கு பெயர் சண்டைக்கோழி தான். தாயை பார்த்து வளர்ந்தவளுக்கும் அக்குணம் வந்திருந்தது.

 

Advertisement