Advertisement

5

குழலியை இந்தரின் அறைக்குள் அனுப்பிவிட்டு தரங்கிணி கீழே சென்றுவிட்டார். திருமணம் என்ற போது கூட வராத பதட்டம் அந்த அறைக்குள் நுழையும் போது அவளுக்கு வந்தது.

 

நல்ல வேளையாக அறையில் இந்திரஜித் இல்லை. அதை கண்டதும் இழுத்து பிடித்திருந்த மூச்சை நிம்மதியாய் வெளியேற்றியவள் கட்டிலில் வந்து அமர்ந்தாள்.

 

அறையில் எந்தவித ஆர்ப்பாட்டமும் இல்லை அதுவே அவளை சற்று இயல்பாக்கியது. அவள் லலிதாம்பிகாவின் வீட்டிற்கு வரும் போது எப்போதாவது அந்த அறைக்கு வந்ததுண்டு.

 

இப்போது தான் அறையை முழுதாய் பார்க்கிறாள். நீண்ட விசாலமான அறை. நான்கு சுவற்றிலும் இரண்டிரண்டு சன்னல்கள் வீதம் இருக்க அதை திறந்துவிட்டாலே போதும் காற்றுக்கு பஞ்சமே இருக்காது, தென்றலாய் வருடிச் செல்லும் காற்று.

 

அவள் யோசித்துக் கொண்டிருக்கும் போதே குளியலறை கதவை திறந்து இந்திரஜித் வெளியில் வந்துக் கொண்டிருந்தான்.

 

அந்த அறையை போலத்தான் அவனையும் எப்போதாவது தான் பார்த்திருக்கிறாள். பெரியாத்தா “என் பேரனை கட்டிக்கோ” என்று சொல்லும் போது கூட அவன் முகம் அவளுக்கு நினைவில் இருந்ததில்லை.

அவனை அவள் ஊன்றி கவனித்ததேயில்லை, அவனுமே அப்படித்தான். சில வருடங்களாக அவனை திருமணம் செய்யச்சொல்லி வீட்டில் அரித்துக் கொண்டிருந்தார்கள். அதனால் அவனால் நிம்மதியாய் அவன் வேலையை கவனிக்க முடியவில்லை என்ற குறை அவனுக்கு.

 

‘இப்போ என்ன நான் கல்யாணம் பண்ணணும் அவ்வளவு தானே, சரி பண்ணிக்கறேன்’ என்று சொல்லித்தான் அவன் திருமணத்திற்கு ஒப்புக் கொண்டிருந்தான்.

 

எதிரில் அவனையே பார்த்துக் கொண்டு பதட்டத்துடன் அமர்ந்திருந்தவளின் அருகே வந்து இயல்பாய் கட்டிலில் அவன் அமர சட்டென்று எழுந்து நின்றிருந்தாள் குழலி.

 

“ஈசி குழலி உட்காரு”

 

“இல்லை பரவாயில்லை”

 

“உட்காருன்னு சொன்னேன்” என்று அவன் அழுத்தமாய் சொல்லவும் கட்டிலின் விளிம்பில் அமர்ந்தாள்.

 

“நான் நேரா விஷயத்துக்கே வந்திடறேன்” என்று அவன் சொல்லவும் என்னவோ ஏதோவென்று அவன் முகத்தை நிமிர்ந்து பார்த்தாள் அவன் மனைவி.

 

“நீ பயப்படற அளவுக்கு எல்லாம் எந்த விஷயமும் இல்லை. சோ பீ கூல்” என்றவன் தொடர்ந்தான்.

 

“எனக்கு இப்போ கல்யாணம் பண்ணிக்கறதுல இஷ்டமில்லை. வீட்டில எல்லாரும் சில வருஷமாவே என்னை கம்பெல் பண்ணிட்டு இருந்தாங்க. இப்போ திரும்பவும் எல்லாரும் சொல்லவும், இதுக்கு மேல என்னால தள்ளிப் போடமுடியலை. சரின்னு சொல்லிட்டேன், அதுக்கு அப்புறம் தான் உனக்கே தெரியுமே. நீ இங்க இருக்க”

 

“நமக்கு ஒருத்தரை ஒருத்தர் முன்னவே அறிமுகம் இருந்தாலும் பெரிசா பேசிக்கிட்டதில்லை சரி தானே” என்றுவிட்டு அவளை பார்த்தான்.

 

“என்ன நான் சொல்றது சரி தானே” என்று அவன் கேட்க தலையை ஆட்டினாள்.

 

“நீ நிறைய பேசுவே அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்கன்னு உங்கம்மா சொன்னாங்க. நீ என்ன இவ்வளவு சைலென்ட்டா இருக்கே” என்றான் இந்திரஜித். (சத்தமில்லாம இருக்கறது எல்லாம் முதல் நாள் மட்டும் தான்னு அவனுக்கு எங்க புரிய போகுது என்று விதி சத்தமில்லாமல் சிரித்தது)

 

“சரி ஓகே அதை விடுவோம் நான் பேச வந்ததை பேசிடறேன். நாம ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுக்க கொஞ்சம் அவகாசம் தேவைப்படும் அதுக்கு பிறகு நம்மோட வாழ்க்கையை தொடங்கலாம்ன்னு எனக்கு தோணுது. நீ என்ன நினைக்கிறே??” என்றான் அவளைப் பார்த்து.

 

‘இதில் அவள் என்ன பதில் சொல்லிவிட முடியும் வேண்டாம் என்றா. அப்படி சொன்னால் என்ன நினைப்பான் அவன்’ என்று அவள் தனக்குள் கேட்டுக் கொண்டிருக்க இந்தரின் குரல் அவளைக் கலைத்தது.

 

“என்ன நான் பேசிட்டே இருக்கேன் நீ எதுவும் சொல்ல மாட்டேங்குறே”

 

“சரி”

 

“என்ன சரி??”

 

“நீங்க சொன்னதுக்கு சரி”

 

“இங்க பாரு குழலி எனக்காக நீ எதையுமே செய்ய வேண்டியதில்லை. நான் சொன்னது என்னோட கருத்து மட்டும் தான். அதை நான் உன் மேலே திணிக்க விரும்பலை”

 

“உனக்கு என்ன சொல்லணுமோ அதை நீ என்கிட்ட சொல்லலாம், தப்பேயில்லை. நான் சொல்றதை கேட்டு நீ அப்படியே செய்யணும்ன்னு எதுவுமில்லை. நான் சொல்றது உனக்கு புரியுதா” என்றான் அவளின் பார்வையையும் எண்ணத்தையும் கணிக்க முடியாதவனாய்.

 

“ஹ்ம்ம் புரியுது”

 

“இன்னும் கூட பேசலாமே. ஒரு வார்த்தையில தான் பதில் சொல்லணுமா”

 

அவளுக்கு என்ன பேச என்று நிஜமாகவே தெரியவில்லை, அவள் பேசாமலே இருக்கவும் “சரி நீ படு”

 

“கீழேயா”

 

“ஏன்?? மேலவே படு” என்றுவிட்டு அவன் விளக்கணைத்து ஒரு புறம் படுத்துக் கொண்டான். அவளுக்கும் ஒரு வகையில் நிம்மதியாகவே இருந்ததுவோ மறுபுறம் படுத்தவளை நிம்மதியான உறக்கம் ஆட்கொண்டது.

 

அன்னையை தவிர வேறு யாருடனும் படுத்ததேயில்லை. யார் வீட்டிற்கு சென்றாலும் அவளுக்கு கயல்விழி உடன் இருக்க வேண்டும். சற்று முன்பு கூட அவளுக்கு அந்த எண்ணமே அம்மா வேணும் என்ற ரீதியில் தான் இருந்தது.

 

தரங்கிணி அவளை தயார் செய்த போது கூட கண்கள் கலங்கி போயிருந்தாள். எல்லாமே அறைக்குள் நுழையும் வரையில் தான் இருந்தது. இந்திரஜித் பேசியதும் சற்று ஆசுவாசமாய் இருந்தது.

 

அனைத்தையும் விட அதிசயத்தக்க விதமாய் படுத்ததுமே உறக்கம் வந்ததும் அன்னையுடன் உறங்கும் நிம்மதியை அவள் உணர்ந்ததும் தான்.

 

ஒரு வாரம் அந்த ஊரிலேயே கழிந்திருக்க மறுநாள் அவர்கள் ஊருக்கு கிளம்பும் நாளும் வந்தது. எல்லா பெண்களையும் போல அவளும் பிரிவுத்துயரில் அழுக கயல்விழியால் அதைத் தாள முடியவில்லை.

முதல் முறையாய் மகளை பிரிவது அவருக்குமே அப்படியொரு கஷ்டமாக இருந்தது. இதெல்லாம் எப்போதும் நடப்பது தானே, தான் அழுதால் மகள் இன்னமும் கலங்குவாள் என்று எண்ணி தன்னைத்தானே தேற்றிக் கொண்டார்.

 

குழலி அனைவரிடமும் விடைபெற்றவள் பெரியாத்தாவிடம் வந்தாள். “என் பேரனை கட்டிக்கோன்னு சொன்னப்ப இப்படி பேசாத ஆத்தான்னு சொன்னே. இப்போ பாரு ரெண்டு பேருக்கும் ஜோடி பொருத்தம் எப்படியிருக்குன்னு”

 

“இதை பார்க்க உங்க தாத்தனுக்கு கொடுத்து வைக்கலையே” என்று சந்தோசமாய் ஆரம்பித்து அவர் கண்ணீரில் முடிக்க “ஆத்தா எதுக்கு அழுகறே, இதுக்கு தான் உன் பேரனுக்கு என்னைய கட்டி வைச்சியா. இனிமே நான் இல்லாம நீ சந்தோசமா இருப்பல்ல”

 

“அதான் எனக்கு பதிலா என் பேரனை படுத்தி எடுக்க போறியே” என்று அவர் பதிலுக்கு சொல்ல இருவரின் மனமுமே சற்று லேசாகி இருந்தது.

 

ஒரு வாரம் ஓடி போயிருந்தது கணவனும் மனைவியும் பெங்களூருக்கு வந்து. ஸ்ரீனிவாசனும், தரங்கிணியும் சென்னையில் இருந்தனர்.

 

ஸ்ரீனிவாசனுக்கு சென்னையில் வேலை, தலைமை செயலகத்தில் பணிபுரிகிறார் அவர். இந்திரஜித் அவன் வேலையின் பொருட்டு பெங்களூரில் குடியிருக்கிறான்.

 

“குழலி வீட்டை நல்லா பார்த்துக்க. எதெது எங்கெங்க இருக்குன்னு நல்லா பார்த்துக்கிட்டல்ல. உனக்கு என்ன சந்தேகம்ன்னாலும் எனக்கு ஒரு போனை பண்ணிடு சரியா. அவன் வேலைன்னு போயிட்டான்னா வீட்டையே மறந்திடுவான்”

 

“அப்பப்போ அவனுக்கு போன் பண்ணி என்ன பண்றான் என்னன்னு கேட்டுக்க. எப்போவாச்சும் சிடு சிடும்பான் கண்டுக்காத, சத்தம் பேசினா அதுக்கும் முறைப்பான். அதெல்லாம் கண்டுக்காம போய்டு. அப்பப்போ போன் போடு, ஊருக்கு பேசு”

 

“மாமாக்கு நாளைக்கு ஆபீஸ் போயே ஆகணும். ஆத்விக் அடுத்த வாரம் ஊருக்கு வர்றான், அவன் வந்ததும் நாங்க வர்றோம். அண்ணன் கல்யாணத்தை பார்க்கலைன்னு போன்லவே புலம்பல் அவன்”

 

“கவனமா இருந்துக்கோ நாங்க போயிட்டு வர்றோம்” என்று ஆயிரம் பத்திரம் சொல்லி அவர்கள் கணவன் மனைவியை தனியே விட்டு ஊருக்கு கிளம்பியிருந்தனர்.

 

அவர்கள் கிளம்பியதும் வீடே அமைதியாகி போன உணர்வு குழலிக்கு. கண்கள் குளம் கட்டியது, அவளுக்கு நன்றாய் பழகிய தரங்கிணியும் கிளம்பியது தான் அவளுக்கு வருத்தமே.

 

ஏனோ இந்திரஜித்திடம் இன்னமும் அவளுக்கு பெரிதாய் எந்த ஒட்டுதலும் வந்திருக்கவில்லை. அவர்கள் இருந்த ஒரு வாரமும் அவள் வீட்டை விட்டு வெளியே எங்கும் பெரிதாய் சென்றிருக்கவில்லை.

இரவு ஒரு மாதிரி கவலையாகவே அவளுக்கு கழிந்தது. இந்திரஜித் எப்போதும் போலவே இருந்தான். வீட்டிற்கு சென்றதும் தரங்கிணி போன் செய்து பேசினார் அவளிடம்.

 

“நைட்க்கு என்ன செய்யட்டும்” என்று வந்து நின்றாள் குழலி.

 

“என்ன புதுசா கேட்கறே??”

 

“அத்தை இருக்க வரை அவங்க செஞ்சாங்க. எனக்கு தெரியாதுல உங்களுக்கு என்ன பிடிக்கும் பிடிக்காதுன்னு அதான்”

 

“நீ எது செஞ்சாலும் நான் சாப்பிடுவேன்” என்றவன் தன் மடிகணினியின் புறம் பார்வையை திருப்பிக்கொண்டான்.

 

‘இதென்ன இவரு ரோபோ மாதிரி இருக்காரு. இது வேணும் அது வேணும்ன்னு சொன்ன தானே சமைக்கிறவங்களுக்கு பிடிக்கும். என்னமோ செய் நான் சாப்பிடுறேன்னு சொல்றாரு. ஒரு வேலை உன் கையால விஷத்தை கொடுத்தா கூட சந்தோசமா சாப்பிடுவேன்னு சொல்வாங்களே அந்த மாதிரி சொல்லியிருப்பாரோ. அதுக்கெல்லாம் வாய்ப்பில்லையே’ என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டு அவள் இரவு உணவை கவனிக்கச் சென்றாள்.

 

இரண்டு நாட்கள் எந்தவித சலம்பலும் இல்லாது சாதாரணமாய் கழிந்திருக்க மூன்றாம் நாள் இந்திரஜித் வீட்டிற்கு வரும் போது ஆரம்பித்தது தலைவலி.

குழலி பக்கத்து வீட்டில் உள்ளவரிடம் சண்டைப் போட்டுக் கொண்டிருந்தாள். இவள் அவர்களை தமிழில் திட்ட பதிலுக்கு அவர்கள் கன்னடத்தில் திட்டிக் கொண்டிருந்தனர்.

 

லிப்ட்டை திறந்து வெளியே வந்தவனின் கண்களில் விழிந்த காட்சியில் அரக்கபரக்க ஓடி வந்தவனுக்கு அவ்வளவு அசிங்கமாக இருந்தது மனைவியின் செயலில்.

 

அப்படியொரு சத்தம் போட்டு கத்திக் கொண்டிருந்தாள். “குழலி” என்று இவன் சத்தம் கேட்டு கூட அவள் திரும்பவேயில்லை.

 

“குழலி என்னாச்சுன்னு சொல்லு. எதுக்கு இப்படி கத்துறே, எவ்வளவு பேர் பார்க்குறாங்க பாரு. டீசென்ட்டா பீகேவ் பண்ணு” என்று அவளுக்கு மட்டுமே கேட்கும் விதமாய் சொன்னான்.

 

அதற்குள் பக்கத்து வீட்டில் இருப்பவர்கள் இவனிடம் நடந்ததை சொல்ல அவர்களிடம் மன்னிப்பு கேட்டு குழலியை வீட்டிற்குள் இழுத்து வருவதற்குள் அவனுக்கு போதும் போதும் என்றாகிப் போனது.

 

“என்ன பண்ணி வைச்சிருக்கே நீ. எதுக்கு உனக்கு அவங்ககிட்ட சண்டை”

 

“அந்த பக்கத்து வீட்டு ஆளு என்கிட்ட வேணும்னே வந்து வழிஞ்சுட்டு பேசுறான், அதான் போய் நல்லா கேட்டு விட்டு வந்தேன்” என்றாள் இன்னமும் ஆறாத குரலில்.

“அவன் வழிஞ்சான்னு எப்படி சொல்றே??”

 

“இதுக்கெல்லாம் செய்முறை விளக்கமா கொடுக்க முடியும்” என்றாள் அவள் பதிலுக்கு.

 

“அவர் ஏதோ உனக்கு ஹெல்ப் பண்றதுக்காக பேசியிருக்கார். நீ அதை போய் தப்பா நினைச்சுக்கிட்டு அவர்கிட்ட சண்டை போட்டிருக்கே. சரி விடு இனிமே இப்படி பண்ணாத. தவிர உனக்கு இன்னொன்னு சொல்றேன் நல்லா கேட்டுக்கோ”

 

“எனக்கு சத்தமா பேசுறதே பிடிக்காது. அக்கம் பக்கத்துல எவ்வளவு பேர் வேடிக்கை பார்த்தாங்க தெரியுமா. நம்மளைப் பத்தி என்ன நினைப்பாங்க சொல்லு. இனிமே பார்த்து இருந்துக்கோ, யார்கிட்டயும் சண்டை போடாதே” என்று குழலிக்கு அட்வைஸ் செய்ய அவளுக்கு கோபமாய் வந்தது.

 

அவன் பேச்சை அவள் கேட்டிருந்தால் தானே அடுத்த நான்கு நாட்களில் செக்யூரிட்டியுடன் அப்படியொரு சண்டை. அலுவலகத்தில் இருந்தவனுக்கு போன் வர அடித்துப் பிடித்துக் கொண்டு வீட்டிற்கு வந்தவன் பார்த்தது செக்யூரிட்டியின் சட்டையை பிடித்திருந்த குழலியை தான்.

 

எப்படியோ நடந்ததை சமாளித்து விடிய விடிய அவளுக்கு பொறுமையாய் பாடம் எடுத்தான். “நேத்து ஏன் அப்படி சொன்னீங்க??” என்றாள் காலையிலேயே.

 

“என்ன சொன்னேன்??” என்று விழித்தான் இந்திரஜித்.

Advertisement