Advertisement

 

4

“என்ன முடிவு பண்ணுவேன்னு நானும் தெரிஞ்சுக்கலாமா??” என்ற இந்தரின் குரலில் மாமியாரும் மருமகளும் குரல் வந்த திசையை நோக்கினர்.

 

அவனைக் கண்டதும் “அத்தை நான் வீட்டுக்கு கிளம்பறேன்” என்றுவிட்டு அவள் நகர எட்டி அவளின் கரம் பற்றியிருந்தான் அவளுக்கு மாலையிட்டவன்.

 

தரங்கிணி அங்கிருந்து நகர்ந்துவிட்டார் அவர்களே பேசிக்கொள்ளட்டும் என்று. குழலி அவனிடம் இருந்து கரத்தை விடுவிக்க முயன்றவள் முடியாது போகவும் “கையை விடுங்க” என்றாள் அவனிடம்.

 

“எனக்கு பாதியில கைவிட்டு எல்லாம் பழக்கமில்லை” என்றான் அவன் இருபொருள்பட

 

“ஓ!! அப்படியா அப்போ ஏன் உங்க பொண்டாட்டி அவ அம்மா வீட்டுக்கு போனதும் தொலைஞ்சு போகட்டும்ன்னு திருப்பி கூப்பிடவேயில்லை”

 

“உனக்கு இப்போதைக்கு என் கூட வர இஷ்டமில்லைன்னு நினைச்சேன். நீ படிப்பை முடிச்ச பிறகு வருவேன்னு இருந்தேன்”

 

“நம்புற மாதிரி இல்லை”

 

“சரி நம்ப வேணாம்”

 

“கையை விடுங்க”

 

“கைவிட முடியாது இந்த கையை மட்டுமில்லை உன்னையும் தான்”

 

“நான் உங்களுக்கு செட்டாக மாட்டேன்”

 

“அப்படின்னு யார் சொன்னா??”

 

“அது அது வந்து… யார் சொன்னா என்ன?? அதானே உண்மை விட்டுடுங்க என்னை” என்றவளுக்கு தனக்கு என்ன வேண்டும் என்று கேட்க தெரியவில்லை. ஏனென்றால் அது அவளுக்கே புரியவில்லை.

 

“உனக்கு என்ன வேணும் இப்போ??”

 

“நான் எங்கயும் வரமாட்டேன்”

 

“ஏன்??”

 

“வரமாட்டேன்”

 

“அப்போ நான் என்ன செய்யணும்??”

 

“உங்களுக்கு செட் ஆகற பொண்ணா பார்த்து கல்யாணம் பண்ணிக்கோங்க. நான் டிவோர்ஸ் கொடுத்திர்றேன்” என்றாள்.

 

முதல் முறையாக அவள் வாயில் இருந்து டிவோர்ஸ் என்ற வார்த்தை உதிர்ந்ததை கேட்டவனுக்கு கோபம் சுர்ரென்று ஏறியது. இருந்தும் அமைதியாகவே அவளைப் பார்த்தான்.

 

“நான் யாரை கல்யாணம் பண்ணிக்கணும்ன்னு நீ எனக்கு சொல்லத் தேவையில்லை. உனக்கு டிவோர்ஸ் வேணும்ன்னா சொல்லு கொடுக்கறேன், நீ உனக்கு பிடிச்சவனை கட்டிக்கோ” என்று அவன் சொல்ல “நீங்க எப்படி அப்படி சொல்லலாம்??” என்று கத்தினாள்.

 

“மெதுவா பேசு இங்க நீயும் நானும் மட்டும் தான் இருக்கோம். நம்ம ரெண்டு பேரைப்பத்தி பேசிட்டு இருக்கோம், இது ஊருக்கே கேட்குற மாதிரி பேசணும்ன்னு என்ன அவசியம்” என்று அவன் அடக்கப்பட்ட கோபக்குரலில் சொல்லவும் குழலியின் முகம் சுருங்கியது.

 

“எனக்கு இப்படித்தான் பேசத் தெரியும். இதுக்கு தான் நான் சொன்னேன், நான் உங்களுக்கு சரியான ஆளில்லைன்னு. என்னைய ஏன் தொல்லை பண்றீங்க??”

 

“உன்னை நான் எந்தவிதத்துல தொல்லை பண்ணேன்னு உன் மனசாட்சியை தொட்டு சொல்லு. உன்னை உடல் ரீதியாவோ மனரீதியாவோ கூட நான் காயப்படுத்தினே இல்லை. அப்புறம் ஏன் அப்படி சொன்னே??”

 

“உன் விருப்பத்தை மதிச்சு தான் நான் பேசாம இருக்கேன். மத்த எல்லார்கிட்டயும் சொன்னதை தான் உன்கிட்டயும் சொல்றேன். உனக்கா எப்போ அங்க வரணும்ன்னு தோணுதோ அப்போ நீ வா…”

 

“நான் வரமாட்டேன்”

 

“அது உன்னிஷ்டம்” என்றவன் உள்ளே சென்றுவிட அழுகையாய் வந்தது அவளுக்கு.

 

தான் அவனிடம் என்ன எதிர்பார்க்கிறோம் என்று அந்த பேதை நெஞ்சுக்கு தெரியவில்லை. கண்ணீர் மட்டும் நிற்காது வழிந்தது. எப்படி நடந்து வீட்டிற்கு வந்தாளோ அறியாள்.

 

வாயிலில் நின்றிருந்த கயல்விழியை தாண்டிச் செல்லும் போது அவர் அழைத்ததை கூட கருத்தில் கொள்ளவில்லை. உள்ளே சென்று கதவை அடைத்துக் கொண்டு கட்டிலில் விழுந்தவள் தலையணையில் முகம் புதைத்து தன் மனக்குமுறலை கண்ணீராய் வெளிப்படுத்தினாள்.

 

இரண்டு வருடத்திற்கு முன்பு நடந்த நிகழ்வுகள் கண் முன்னே நிழலாடியது. நேற்று நடந்தது போல இருந்தது அந்நிகழ்வு.

 

“குழலி குழலி” என்று அழைத்தவாறே அங்கு வந்தார் லலிதாம்பிகா.

 

“எதுக்கு ஆத்தா என் பேரை ஏலம் விட்டுட்டு இருக்கே” என்றவாறே அங்கு வந்தாள் குழலி.

 

“ஹ்ம்ம் வேண்டுதல், ஏன் குழலி உன்னை காலையிலேயே இங்க வரச்சொன்னேன்ல. நிதானமா வர்றே, உன் சின்ன அத்தையை இந்த மிளகாவை மேலே காய வைக்க சொன்னேன். இன்னும் காயப்போடலை, நீ கொஞ்சம் போட்டுட்டு வர்றியா”

 

“அத்தை செய்யலைன்னா என்ன, என்னை செய்ன்னு சொன்னா செய்யப் போறேன் ஆத்தா எதுக்கு தனியா கிடந்து புலம்பிட்டு இருக்கே”

 

“இங்க வீட்டுல நான் தனியா புலம்புவேன்னு இல்லாம உன் மாமன் போன் கூட பண்ணாம இருக்கான். உன் தாத்தனுக்கு என்னாச்சோ ஏதாச்சோன்னு மனசு கிடந்து அடிச்சுக்குது” என்ற லலிதாம்பிகா அப்படியே நிலைப்படியில் அமர்ந்துவிட சட்டென்று அவரை தாங்கிக்கொண்டாள் குழலி.

 

“ஆத்தா சும்மா பயந்துக்கிட்டு தாத்தாவுக்கென்ன நூறு வயசு வரைக்கும் இருப்பாரு. அவரு குடுமி எப்பவும் உன் கையில தான் சும்மா கவலைப்படாம அந்த குடுமியை எப்படி பிடிச்சு ஆட்டலாம்ன்னு யோசி” என்று அவள் பேசவும் லேசாய் புன்னகை எழுந்தது அவருக்கு.

 

“குழலி நான் ஒண்ணு சொல்லுவேன்”

 

“சொல்லுத்தா”

 

“நீ பேரனை கட்டிக்கிறியா??” என்றார் மனம் கொள்ளா ஆசையுடன்.

 

“உனக்கு வேற பேச்சே இல்லையா. எப்போப் பார்த்தாலும் பேரனை கட்டிக்கோ பேத்தியை கட்டிக்கோன்னு அவனுக்கு இவ, இவளுக்கு அவன்னு பேசிட்டு இருக்க. பேசாம இருத்தா. நான் எங்கம்மா மாதிரி பாதியில படிப்பைவிட்டு கல்யாணம் பண்ண மாதிரி எல்லாம் விடமாட்டேன்”

 

“நான் படிச்சு எங்கம்மாவை வைச்சு காப்பாத்துவேன். அது வரைக்கும் நான் கல்யாணமே பண்ணிக்க மாட்டேன்”

 

“நாளைக்கு நீ கல்யாணம் பண்ணா எங்க போவியாம்”

 

“எல்லாரும் எங்க போவாங்களோ அங்க தான்”

 

“அதான் எங்கேன்னு சொல்லு குழலி”

 

“புருஷன் வீட்டுக்குத்தான்”

 

“அங்க போய் நீ உங்கம்மாவை எப்படி பார்த்துக்குவே” என்ற லலிதாம்பிகாவின் பேச்சு அவளை யோசிக்க வைத்தது.

 

“நல்லா படிச்சு அம்மாவை காப்பாத்தி நீ கல்யாணம் பண்ணுறதுக்கு. நீ கல்யாணம் பண்ணிட்டு உங்கம்மாவை காப்பாத்து”

 

“இல்லையில்லை நான் கல்யாணம் பண்ணிக்கப் போறதில்லை. நான் அம்மாவை பார்த்திட்டு அவங்களோடவே இருப்பேன்”

 

“அடியேய் நான் ஒண்ணு சொன்னா இவ ஒண்ணு புரிஞ்சுக்கறா. இதுக்கு தான் சொன்னேன் என் பேரனை கட்டிக்கோன்னு அவனைக் கட்டிக்கிட்டா உனக்கு இந்த கவலையெல்லாம் இல்லை”

 

“ஆத்தா…” என்று இவள் மறுத்து மறுமொழி கூறும் முன் வாயில் கேட் திறக்கப்படும் சத்தத்தில் இருவருமே திரும்பி பார்த்தனர்.

 

வெங்கடேசன் தன் தந்தை திருமாலுடன் உள்ளே வரவும் இவர்கள் பேச்சு தடைப்பட்டது. “வெங்கடேசா அப்பாவுக்கு என்னாச்சு. எதுக்கு அடிக்கடி மயக்கம் வருதாம் டாக்டர் என்ன சொன்னாரு” என்று தொடர்ந்து கேள்விகளாய் அடுக்கினார் லலிதாம்பிகா.

 

“ஆத்தா இப்போ தானே வந்தோம் போய் அப்பாவுக்கு குடிக்க எதாச்சும் கொடு. குடிச்சுட்டு அவரு சித்த படுக்கட்டும் அப்புறம் பேசுவோம்” என்றுவிட தன் கணவரை கவனிக்க ஆரம்பித்தார் அவர்.

 

அவரை படுக்க வைத்துவிட்டு இவர் வரவும் வெங்கடேசன் பேச்சை ஆரம்பித்தார். “ஆத்தா அப்பாவுக்கு பிரஷர் ரொம்ப அதிகமா இருக்காம். இன்னைக்கு முழுக்க அவங்க செக்கப் பண்ணியிருக்காங்க”

 

“நாளைக்கு தான் ரிப்போர்ட்டு எல்லாம் வருமாம். அப்போ என்ன ஏதுன்னு சொல்லிடறேன்னு சொல்லிருக்காங்க” என்றார்.

 

மறுநாள் மருத்துவமனைக்கு சென்ற போது தான் திருமாலின் இதயத்தில் பிளாக் இருப்பதாக மருத்துவர்கள் கூறினார்கள். அவரின் உடல் நிலை சீராக இல்லாததினால் அவருக்கு சில நாட்களோ அல்லது மாதமோ கழித்து தான் சிகிச்சையை செய்ய முடியும் என்றிருந்தனர்.

 

அதுவரையில் அவரை கவனமாக பார்த்துக்கொள்ள சொல்லியிருந்தனர். தந்தைக்கு முடியவில்லை என்றதும் ஸ்ரீனிவாசனும் தரங்கிணியும் ஊரில் இருந்து வந்துவிட்டிருந்தனர்.

 

பத்து நாட்கள் நன்றாக இருந்தவர் பதினோறாம் நாள் அதிகாலையிலேயே அவர் உயிர் பிரிந்திருந்தது. எல்லாம் முடிந்து போயிருந்தது.

 

கெட்டது நடந்த வீட்டில் நல்ல விஷயம் பேச வேண்டும் என்று ஒருவர் ஆரம்பித்திருக்க பேச்சு எங்கெங்கோ சென்று இறுதியில் இந்தரின் திருமணத்தில் வந்து நிற்க, லலிதாம்பிகா வாய்விட்டு தன் விருப்பத்தை சொல்லிவிட்டிருந்தார்.

 

திருமாலுக்கும் கூட பேரனின் திருமணத்தை பார்க்க வேண்டும் என்ற எண்ணமிருந்தது என்று வேறு அவர் சொல்லியிருக்க யாராலும் மறுக்க முடியவில்லை.

 

“நம்ம குழலி தானே நல்ல பிள்ளை, நம்மளை எல்லாம் அனுசரிச்சு நடந்துக்குவா” என்று ஒவ்வொருவரும் ஒவ்வொன்றாய் சொல்ல தரங்கிணிக்கு மட்டும் யோசனை.

 

“என்ன யோசனை தரங்கிணி??”

 

“இல்லைத்தை வந்து…”

 

“என்னன்னு சொல்லு”

 

“இந்தர்க்கு அவ செட்டாவாளான்னு தெரியலை அதான் யோசிக்கறேன்” என்று மனதில் தோன்றியதை வெளிப்படையாய் உடைத்திருந்தார்.

 

“ஏன் உனக்கு இப்படி ஒரு யோசனை அப்பன் இல்லாத புள்ளைன்னு வேணாம்ன்னு நினைக்கறியா??”

 

“அத்தை எனக்கு அப்படியெல்லாம் எண்ணமில்லை. எனக்கும் குழலியை பிடிக்கும், ரொம்பவே பிடிக்கும். ஆனா உங்க பேரனை தான் எனக்கு தெரியுமே அவன் ஒரு ரகம், இவ வேற ரகம்”

 

“ரெண்டு பேருக்கும் நிறைய வேற்றுமைகள் இருக்கு அதுக்கு தான் யோசிக்கறேன் இது சரி வருமான்னு” என்று சொல்ல “எதுக்கு யோசிச்சுக்கிட்டு இந்தரையே கூப்பிட்டு கேட்போம், அவனுக்கு பிடிச்சா செய்வோம். இல்லைன்னா வேற யோசிப்போம்” என்றார் லலிதாம்பிகா.

 

இந்திரஜித்தை கேட்க அவன் எந்தவித மறுப்பும் சொல்லாது திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்துவிட பேச்சு இப்போது கயல்விழியிடம் செல்ல அவருக்கோ அப்படியொரு சந்தோசம்.

 

உடனே அவர் சம்மதத்தை சொல்லிவிட குழலியின் மறுப்பு அங்கு எடுபடவில்லை. இறுதியில் அவளுமே என்னைக்கு இருந்தாலும் கல்யாணம் பண்ணிக்க போறோம். அது யாரா இருந்தா என்ன என்ற எண்ணத்திற்கு வந்துவிட அடுத்த ஒரு மாதத்தில் திருமணத்திற்கு நாள் குறிக்கப்பட்டது.

 

அழகான மங்களகரமான நாளொன்றில் இந்திரஜித் கார்குழலியின் கழுத்தில் மங்கலநாண் அணிவித்து தன் மனைவியாக்கிக் கொண்டிருந்தான்.

Advertisement