Advertisement

 

3

பெரியாத்தாவின் இறப்பிற்கு பின் அவள் அவ்வீட்டிற்கு செல்லவேயில்லை. கயல்விழி எவ்வளவோ அழைத்தும் அவள் வர மறுத்துவிட்டாள். விடிந்தால் காரியம் அதற்குப்பின் அவரவர் ஊருக்கு கிளம்பிச் சென்றுவிடுவர்.

கயல்விழிக்கு மகளை குறித்த பயம் எழுந்தது. இப்படியே அவள் இருந்துவிடுவாளோ என்று எண்ணி இரவெல்லாம் உறங்காதிருந்தார்.

 

பொழுது விடிந்த பின்னே மகளின் முன்னே தான் சென்று நின்றார். “என்னம்மா??”

 

“ஆத்தா வீட்டுக்கு போறேன் இன்னைக்கு காரியம்ல நீ கண்டிப்பா வரணும் குழலி”

 

“நான் வரலைம்மா”

 

“குழலி நீ வரணும்” என்றார் அவர் சற்று அழுத்தமாய்.

 

“ம்மா…”

 

“வர்றே” என்றவர் அவள் கையை பிடித்து இழுக்க அவளோ அழுத்தமாய் கால்களை தரையில் ஊன்றி நிற்க அவளை நகர்த்தவே முடியவில்லை அவரால்.

 

“இப்போ நான் அங்க வந்து என்ன பண்ணப் போறேன்”

 

“நீ தான் குழலி எல்லாம் செய்யணும்?? ஏன்டி இப்படி பிடிவாதம் பிடிக்கறே?? இதுல என்னத சாதிச்ச சொல்லுடி… எனக்கு உங்கப்பனாலையும் நிம்மதி இல்லை இப்போ உன்னாலயும் எனக்கு நிம்மதி இல்லை” என்றவர் அதே இடத்திலேயே அமர்ந்துக் கொண்டு ஓவென்று அழ ஆரம்பித்தார்.

 

“எதுக்கு நீ எங்கப்பனை இதுல இழுக்கறே… அந்த மனுஷனுக்கு அல்ப்பாயுசு போய் சேர்ந்திட்டார். அவர் என்ன பண்ணார்ன்னு அவரை குறை சொல்றே”

 

“அதே தான் சொல்றேன் அந்த மனுஷன் என்னை இப்படி பாதியில தவிக்கவிட்டு போய்ட்டாரே. அவர் இருந்திருந்தா நான் ஏன் இப்படி இருக்க போறேன். போனவரு என்னையும் கூட்டிட்டு போயிருந்தா நான் நிம்மதியா இருந்திருப்பேன்ல”

 

“நிம்மதியா இருந்திருக்க மாட்டே, செத்து போயிருப்பே” என்றாள்.

 

“ஓ!! நான் சாகலைன்னு தான் உனக்கு வருத்தமா போறேன்டி செத்து போறேன் நானும் செத்து போறேன்” என்று பித்துப்பிடித்தவர் கத்திக்கொண்டே கயல்விழி எழவும் குழலிக்கு பதட்டமாகியது.

 

“அம்மா பேசாம இரும்மா நான் எதுவும் சொல்லலை. இப்போ என்ன தான் வேணும் உனக்கு காலையிலவே ஏன் என்னை கடுப்பேத்துற”

 

“ஆத்தா வீட்டுக்கு வான்னு சொன்னேன்”

 

“வர்றேன்” என்றவள் அதற்கு மேல் எதுவும் பேசாது கயல்விழியுடன் கிளம்பினாள்.

 

இவர்களுக்காகவே அங்கு அவர்கள் காத்திருந்தார்கள் போலும், அம்மாவும் பெண்ணும் உள்ளே வரவும் காரியத்திற்கான வேலை தொடங்கியது.

இந்தரின் பார்வை அவர்கள் உள்ளே வரவும் ஏறிட்டு பின் திரும்பிக் கொண்டது. எல்லாம் முடிந்து மதிய உணவும் வந்துவிட வீட்டு ஆண்கள் முதலில் அமர வைக்கப்பட்டனர் உணவருந்த.

 

“குழலி கொஞ்சம் வா” என்று தரங்கிணி அழைக்க “சொல்லுங்கத்தை”

 

“எல்லாருக்கும் பரிமாறும்மா எனக்கு உள்ள கொஞ்சம் வேலையிருக்கு. உங்கம்மாக்கு சித்திக்கு எல்லாம் அரிசிப்பெட்டி கொடுக்கணும் நான் போய் அந்த வேலையை பார்க்குறேன்” என்று அவர் நகர்ந்துக் கொண்டார்.

 

அங்கு வெங்கடேசனின் மனைவி ராகினி இருக்க “அத்தை நீங்க இலை போடுங்க நான் பரிமாறுறேன்” என்றவளை முறைத்தார் அவர்.

 

“உன் மாமியா உனக்கு வேலை கொடுத்தா நீ அதை எனக்கு திருப்பி விடுறியா. இத்தனை நாளா நான் கிடையா கிடந்தது உங்களுக்கு பத்தலையா. என்னால முடியலைன்னு தானே சித்த இப்படி உட்கார்ந்திருக்கேன் அது பொறுக்கலையா உனக்கு” என்றுவிட்டு அவர் எழுந்து உள்ளே சென்றுவிட வெளியில் இருந்து குரல் வந்தது உணவை வைக்குமாறு.

 

குழலி திரும்பி தன் அன்னையை தேட அவர் அவ்விடத்தில் இல்லை. அவளுக்கு நன்றாகவே புரிந்தது நடப்பது கூட்டு சதி என்று. அவளுக்கும் வேறு வழியிருக்கவில்லை பரிமாறுவதற்கு இலையை தூக்கிக்கொண்டு வெளியில் வந்தாள்.

 

உணவு முடிந்ததும் வீட்டு பெண்களுக்கு அரிசிப்பெட்டி, பாத்திரம் கொடுக்கும் வழமை அவர்களுக்கு. ஸ்ரீனிவாசனுடன் பிறந்த தங்கைக்கு மட்டுமல்லாது கயல்விழிக்கும் சேர்த்து தான் முறை செய்தனர் அவர்கள்.

 

தரங்கிணி ஒரு குணம் என்றால் ராகினி வேறு ரகம். எதையும் வெடுக்கென்று தான் பேசுவார். இப்போதும் கூட கயல்விழிக்கு சீர் செய்வதை பார்த்து முகம் சுளிக்கத்தான் செய்தார்.

 

“புருஷனே இல்லையாம் இவளுக்கும் வேற நாம செஞ்சு அழுகணும்” என்று அவள் பேசியது மற்றவர்களுக்கு கேட்டதோ இல்லையோ கார்குழலியின் காதில் தெளிவாய் விழுந்து வைத்தது.

 

அவருக்கு பதில் கொடுக்கும் நோக்குடன் அவள் சட்டென்று திரும்ப இந்திரஜித் அவர்களை கண்டித்துக் கொண்டிருந்தான்.

 

“சித்தி என்ன பேசறீங்க நீங்க. உங்களுக்கும் ஒரு பொண்ணு இருக்கு, எதையும் பேச முன்ன யோசிச்சு பேசுங்க. நீங்க ஒண்ணும் உங்க காசுல எதையும் செய்யலையே. அப்பாவும் அம்மாவும் ஆத்தாவுக்காக இதை செய்யறாங்க”

 

“அத்தையோட உறவு வேணும்ன்னு இதை செய்யறாங்க. நீங்க பேசுறதை பார்த்தா எந்த உறவும் வேணாங்கறது போல இருக்கு. இனிமே இப்படி பேசாதீங்க, புருஷன் இல்லைன்னா என்ன வேணும்னாலும் பேசலாமா”

 

“அவங்களுக்கு நீங்க எந்த உதவியும் செய்ய வேண்டாம் இப்படி நீங்க பேசாம இருந்தாலே அது அவங்களுக்கு பெரிய உதவி செய்யறது போலத்தான். உங்களை என்னவோன்னு நினைச்சேன்”

 

“என்னைக்காச்சும் அவங்க இந்த வீட்டு வாசலைத் தேடி உதவி வேணும்ன்னு வந்து நின்னிருக்காங்களா என்ன?? இனிமே நீங்க இப்படி பேசுறதை பார்த்தா நான் என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது” என்று நிதானமாய் அதே சமயம் அழுத்தமாகவும் அமைதியான குரலிலேயே சொல்லி முடித்திருந்தான்.

 

குழலி எதுவும் சொல்ல தேவையிருக்கவேயில்லை அவள் பேசியிருந்தால் சண்டை கூட வந்திருக்கும். இந்தர் தான் பொறுமைசாலி ஆகிற்றே அதனாலேயே அப்பேச்சு அமைதியாக முடிந்திருந்தது. ராகினி மேற்கொண்டு ஒரு வார்த்தை கூட திருப்பி பேசியிருக்கவில்லை.

 

அதன்பின்னே அவள் பின்னால் சென்று பாத்திரம் விளக்கி வைப்பவர்களுக்கு உதவி செய்துவிட்டு உள்ளே வந்தவள் கயல்விழியை தேட அங்கு அவரில்லை. தரங்கிணியிடம் வந்தவள் “அத்தை அம்மா எங்கே??” என்றாள்.

 

“மதினி அப்போவே வீட்டுக்கு போய்ட்டாங்க” என்றவர் “ஹான் குழலி மேலே இந்தர் இருப்பான் அவன் ரூமை கொஞ்சம் கிளின் பண்ணிடறியா” என்று தன் போக்கில் சொல்லிவிட்டு நகரப் போனவரின் கரம் பிடித்து தடுத்தாள் அவள்.

 

“சொல்லு குழலி”

 

“நீங்க என்ன பிளான் பண்றீங்க அத்தை??”

 

“நான் என்ன பிளான் பண்ணணும்ன்னு நீ நினைக்கிறே??”

 

“அத்தை நான் என்ன கேட்கறேன்னு உங்களுக்கு தெரியும்”

 

“சரி தெரியும்”

 

“நான் என்ன நினைக்கிறேன்னு உங்களுக்கும் தெரியும்”

 

“சரி இருந்திட்டு போகட்டும்”

 

“அத்தை நீங்க என் பொறுமையை சோதிக்கறீங்க”

 

“நான் என்ன பண்ணணும்??”

 

“நான் வீட்டுக்கு போறேன்” என்றவள் அந்த அறையின் கதவைத் தாண்டி வெளியே போக “குழலி ஒரு நிமிஷம் நில்லு” என்ற தரங்கிணியின் குரலைக் கூட பொருட்படுத்தாது நடந்தாள்.

 

“குழலி நில்லு!!” என்று இம்முறை சற்று சத்தமாகவும் அதிகாரமாகவும் அவர் சொல்ல அப்படியே நின்றாள், திரும்பிக் கூட பார்க்கவில்லை.

 

அவரே அவளருகில் வந்தார் “குழலி கடைசியா கேட்கறேன் உனக்கு ஏன் இங்க இருக்க பிடிக்கலை?? என் பையனை ஏன் பிடிக்கலை??”

 

அவள் பதில் பேசாது உதட்டை அழுந்த கடித்தவாறே நின்றிருந்தாள்.

 

“சொல்லு குழலி உன்னோட பதில் எனக்கு தெரியணும். நானும் பலமுறை உன்கிட்ட கேட்டுட்டேன் நீ பதிலே சொல்லலை. அத்தைக்கிட்ட மட்டும் ஏதோ சொல்லியிருக்க, அது என்னன்னு இப்போ சொல்லு. இந்தரை உனக்கு ஏன் பிடிக்கலை??”

 

“அவருக்கு நான் செட் ஆக மாட்டேன் அத்தை” என்ற அவளின் பதிலை கேட்டதும் பதறிப்போனது தரங்கிணிக்கு.

 

“குழலி என்ன பேச்சு இதெல்லாம்??”

 

“உண்மை தானே அத்தை உங்க மகனுக்கு நான் பொருத்தமில்லை தானே”

“குழலி நீ எதை மனசுல வைச்சுட்டு பேசறேன்னு எனக்கு இப்போ தான் புரியுது”

 

“என் மனசுல எதுவுமில்லை அத்தை. நீங்க எல்லாரும் சேர்ந்து பேசித் தான் எங்க கல்யாணம் நடந்துச்சு. நடந்ததுல என் தப்பு என்ன இருக்கு சொல்லுங்க”

 

“நான் பேசறதை நீ கொஞ்சம் கேட்கறியா??”

 

“நீங்க எல்லாரும் சேர்ந்து முடிவு பண்ணி அது இப்போ எந்த நிலையில இருக்குன்னு உங்களுக்கே தெரியும். இனிமே யார் சொல்றதையும் நான் கேட்கிறதாயில்லை அத்தை. என் வாழ்க்கையை இனிமே நான் தான் முடிவு பண்ணுவேன்”

 

“என்ன முடிவு பண்ணுவேன்னு நானும் தெரிஞ்சுக்கலாமா??” என்ற குரலில் குழலியும் தரங்கிணியும் ஒரே சேர திரும்பி பார்த்தனர்.

Advertisement