Advertisement

 

23

இருவரும் ஒன்றுமே பேசிக்கொள்ளவில்லை. ஆனால் அவர்கள் இருவரின் பார்வையும் ஒருவரை ஒருவர் தழுவிக்கொண்டிருக்க மறக்கவில்லை. கயல்விழி தான் மருமகன் வந்திருப்பதை பார்த்துவிட்டு கறிக்குழம்பு வைத்து கொடுத்திருந்தார்.

 

கணவனுக்கு பிடித்த சமையல் என்பதை குறித்துக் கொண்டாள் குழலி. எல்லாம் கயல்விழியின் செயல் தான் என்றும் புரிந்தது.

 

சாப்பிட்டு அவள் அனைத்தும் ஒதுங்க வைத்து மாடிக்கு வர இந்தர் அறைக்குள்ளேயே குறுக்கும் நெடுக்குமாய் நடந்துக் கொண்டிருந்தான்.

 

“தூக்கம் வருது தூங்கலாம்” என்றான்.

 

‘தூக்கம் வந்தா தூங்க வேண்டியது தானே. நான் என்ன தாலாட்டா பாட முடியும்’ என்று மனதிற்குள் அவனுக்கு கவுண்ட்டர் கொடுத்தாள் அவன் மனைவி.

 

இந்தர் கட்டிலில் படுத்ததுமே உறங்கிவிட அவனின் அலுப்பு புரிந்தது அவளுக்கு. அறையில் இருந்த சன்னலை எல்லாம் திறந்துவிட்டாள் வெளிக்காற்று நன்றாக அறைக்குள் வீசட்டும் என்று.

 

அவனருகில் படுத்தவள் தான் வெளி வாசல் கதவு தொடர்ந்து தட்டப்படும் சத்தம் கேட்டுத்தான் திடுக்கிட்டு விழித்திருந்தாள்.

 

அவசரமாய் எழுந்து முகம் கழுவி படிகளில் வேகமாய் இறங்கியவள் வாசல் கதவை திறக்க அங்கு கயல்விழி நின்றிருந்தார்.

 

“வெளி லைட்டை போடு மணி ஆறாக போகுது” என்று சொல்லவும் அருகில் இருந்த சுவிட்சை தட்டிவிட்டாள் அவள் ‘இவ்வளவு நேரமாகவா உறங்கிவிட்டோம்’ என்று எண்ணியவாறே.

 

“நைட்டுக்கு என்ன செய்யட்டும்??”

 

“எதுக்கும்மா??”

 

“சாப்பிடத்தான்”

 

“நானே செஞ்சுக்கறேன்ம்மா”

 

“ஏன்??”

 

“என் புருஷனுக்கு நான் செஞ்சு போட்டுக்கறேன்னு சொன்னா சரின்னு விடுறதை விட்டுட்டு கேள்வி கேட்டுட்டு இருக்கே” என்று மகள் சிடுசிடுக்கவும் கயல்விழி மகிழ்ந்து போனார் அவள் பேச்சில்.

 

குழலி பெங்களூரில் இருந்து கிளம்புவதற்கு முன்பே தரங்கிணி அவள் வரப்போகும் விஷயத்தை கயல்விழியிடம் சொல்லியிருந்தார். உடன் இருவரின் முகமும் சரியில்லை என்பதையும் அவர் கோடிட்டு காட்ட அது முதல் அத்தாய்க்கு மகளைக் குறித்த கவலையே.

 

தன் வாழ்க்கையை மகள் பாழாக்கிக் கொள்கிறாளே என்று. அவருக்கு இருந்த ஒரே ஆறுதல் மகள் தன் மீது உள்ள கோபத்தால் அவரின் பெரியாத்தாவின் வீட்டில் தங்கியது மட்டுமே.

 

ஒரு வேளை தன்னுடன் தங்கினால் அவள் மீண்டும் முறுக்கிக்கொண்டு பெங்களூர் செல்ல மறுப்பதற்கு வாய்ப்பிருக்கிறதே அதனால் தான் பயம் அவருக்கு.

 

இப்போது மகள் பேசுவதை கேட்டு உள்ளே பூரிப்படைந்தது அவருக்கு. தவிர அவள் இயல்பாய் அவருடன் உரையாட ஆரம்பித்ததும் அவரின் மகிழ்ச்சிக்கு காரணம். “ரெண்டு பேரும் சேர்ந்து கோவிலுக்கு போயிட்டு வாங்களேன்”

 

“நாளைக்கு போறோம்மா அவர் தூங்குறார்”

 

“சரி” என்று கிளம்பப் போனவர் “குழலி நான் ஜோதி அம்மாகிட்ட பூ கட்டச் சொல்லியிருந்தேன். அவங்க இப்போ கொண்டு வந்து தருவாங்க, வாங்கி வைச்சுக்க”

 

“இப்போவா நாளைக்கு வைச்சுக்கறேன்”

 

“சொன்னா சரின்னு கேளு” என்றார்.

 

“என்னத்தை என்னை பார்க்காம கூட கிளம்பிட்டீங்க” என்றவாறே படிகளில் இறங்கி வந்துக் கொண்டிருந்தான் இந்திரஜித்.

 

“இல்லை நீங்க தூங்கிட்டு இருக்கீங்கன்னு குழலி சொன்னா அதான்…” என்றார் அவர்.

 

“குழலி அடிச்சு பிடிச்சு எழுந்து கீழே இறங்கறதை பார்த்ததுமே நானும் எழுந்திட்டேன் அத்தை. ஆமா கோவிலுக்கு போகச்சொல்லிட்டு இருந்தீங்க யாரை??”

“ஆமா இவகிட்ட சொன்னேன் ரெண்டு பேரும் சேர்ந்து போயிட்டு வாங்கன்னு”

 

“சரி அத்தை நாங்க போயிட்டு வர்றோம்” என்று அவரிடம் சொன்னவன் “குழலி நீ போய் கிளம்பு போயிட்டு வந்திடுவோம்”

 

“உங்களுக்கு காபி”

 

“வேணாம் நீ ரெடியாகி வா”

 

“ஹ்ம்ம்” என்றவள் உள்ளே சென்று விட்டாள்.

 

“நான் கிளம்பறேன்” என்று கிளம்ப போன குழலியை நிறுத்தினான்.

 

“இருங்க அத்தை அதுக்குள்ள கிளம்பணுமா??”

 

“நான் இங்க இருந்து என்ன பண்ணப் போறேன்??” என்று விழித்தார் அவர்.

 

“நாங்க சந்தோசமா ஒண்ணா வெளிய போகறதை பார்க்கத்தானே தவம் கிடந்தீங்க. அதை பார்த்துட்டு கிளம்புங்க” என்று அவன் சொல்லவும் உள்ளம் மட்டுமல்ல கண்களும் நிறைந்து போனது அவருக்கு.

 

குழலி அதிசயமாய் பட்டுப்புடவை ஒன்றை உடுத்திக்கொண்டு கீழே வர உண்மையிலேயே கயல்விழியின் மனம் நிறைந்து தான் போனது.

 

‘நேத்து இவ இங்க வைச்சுட்டு போயிருந்த துணிமணி எல்லாம் கொண்டு வந்து கொடுத்தது நல்லதா போச்சு. அதில இருந்து பட்டுப்புடவை எடுத்து கட்டிட்டு வந்திருக்கா’ என்று மகளை குறித்து பெருமைபட்டுக் கொண்டார் அவர்.

 

அந்நேரம் சரியாய் ஜோதியின் அன்னையும் பூ கொண்டு வந்திருப்பதாகக் குரல் கொடுக்க பூவை வாங்கி வந்து மகளின் தலையில் சூட்டினார்.

 

“கிளம்புங்க” என்றவர் திருப்தியாய் அவர் சொல்லவும் “நீயும் எங்களோட வாம்மா” என்றாள் மகள்.

 

“நான் வீட்டை பார்த்துக்கறேன் நீங்க போயிட்டு வாங்க” என்று அவர் சொல்லவும் அவர்கள் கிளம்பிவிட்டனர். செல்லும் அவர்களை கண்குளிர பார்த்து ரசித்திருந்தார் அவர்.

 

இருவரும் திரும்பி வரவும் கயல்விழி வீட்டிற்கு கிளம்பிவிட்டார். “குழலி நைட்க்கு டிபன் செஞ்சு வைச்சிருக்கேன் சாப்பிட்டு நேரமா படுங்க” என்றவரை மகள் முறைத்தாள்.

 

“என்னைய முறைக்கிறதை விடு. உன் புருஷனுக்கு நாளைக்கு நீ செஞ்சு போட்டுக்க. இப்போ போய் சாப்பிடுங்க” என்றுவிட்டு அவர் கிளம்ப “அம்மா” என்றழைத்தாள் மகள்.

 

அவர் நிற்கவும் அவரருகே நெருங்கி வந்தவள் அவரை அணைத்துக் கொண்டாள். “சாரிம்மா” என்று சொல்லவும் “போடி” என்றவர் மகளை தள்ளி நிறுத்தி அவள் தலைமேல் கைவைத்து ஆசிர்வதிப்பது போல செய்துவிட்டு பின் கிளம்பிவிட்டார்.

 

இரவு உணவுக்கு பின் குழலி மாடியேறி வர இந்தர் அவளின் வரவை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தான். குழலிக்கு தான் அறைக்குள் வருவதா வேண்டாமா என்றிருந்தது. புதிதாய் அன்று தான் திருமணம் முடிந்தது போலவும் முதல் முறையாய் அவன் அறைக்குள் அடியெடுத்து வருபவள் போலவும் உணர்ந்தாள்.

 

“குழலி”

 

“ஹ்ம்ம்”

 

“அங்கவே நின்னுட்டு என்ன யோசனை வா” என்றவன் தானே எழுந்து அவளருகில் வந்தான்.

 

அவள் கைப்பிடித்து அழைத்து வந்தவன் அவளுடன் கட்டிலில் அமர்ந்தான். “நான் ஏன் இங்க வந்தேன்னு நீ கேட்கவே இல்லை”

 

“எதுக்கு கேட்கணும்??”

 

“அப்போ அதுக்கு உனக்கு பதில் தெரியுமா??”

 

“ஹ்ம்ம் தெரியும்” என்றாள் மெல்லிய குரலில்.

 

“சரி சொல்லு”

“சொல்ல மாட்டேன்”

 

“அப்போ உனக்கு தெரியாதுன்னு சொல்லு”

 

“தெரியும்”

 

“அப்போ பதில் சொல்லு”

 

“என்னை பார்க்கத்தான். என்னை உங்க கூடவே ஊருக்கு கூட்டிட்டு போகத்தான் வந்திருக்கீங்க” என்றாள் மிக மெல்லிய குரலில்.

 

“சத்தமா தான் சொல்லேன்”

 

“அதான் நான் சொன்னது உங்களுக்கு கேட்டுச்சுல்ல”

 

“உன்கிட்ட நான் ரம்யா பத்தி முன்னாடியே சொல்லலைன்னு உனக்கு என் மேல ரொம்ப வருத்தம்ல”

 

“அதைப்பத்தி பேச வேணாம்” என்றவளின் முகம் சுருங்கியது.

 

“இங்கப்பாரு நான் உன்கிட்ட மறைக்கணும்ன்னு எல்லாம் நினைக்கவே இல்லை. உண்மையாவே எனக்கிருந்த சூழ்நிலையில தான் உன்கிட்ட அதைப்பத்தி நான் பேசலை. நீ என்னை புரிஞ்சுக்கணும் குழலி”

 

“புரியுது”

 

“குழலி இப்படி சிங்கிள் வேர்ட்ல ஆன்சர் பண்ணாதம்மா. நீ ரொம்ப கோபமா இருக்கேன்னு எனக்கு பயமா இருக்கு”

 

“எனக்கு எந்த கோபமும் இல்லை உங்க மேல. நிஜமாவே எனக்கு புரியுது. நீங்க என்னை புரிஞ்சுக்கலைன்னு வருத்தப்பட்ட நானும் உங்களை புரிஞ்சுக்காம தானே இருந்திருக்கேன். உங்களை குறை சொல்ல எனக்கென்ன தகுதி இருக்குங்க”

 

“குழலி நிஜமாவே நீ தான் பேசறியா?? அன்னைக்கு அவ்வளவு கோபமா பேசினே??” என்றான் கேள்வியாய்.

 

“எனக்கு வீம்பு அதிகம் நீங்க என்னைத் தேடி வரலைன்னு. இப்போ கூட என் வீம்பை நான் விடலையே, என்னைத்தேடி தான் உங்களை வரவைச்சுட்டேனே. என்னமோ அதை நினைச்சு  என்னால சந்தோசப்பட முடியலைங்க, நான் உங்களை ரொம்ப கஷ்டப்படுத்தறனா” என்றாள் அவன் முகத்தை பார்த்து.

 

அவள் தன்னையே முக பாவம் பார்த்தவனின் மனம் மென்மையாக அவள் இருக்கன்னத்தையும் தன் இரு கரங்களால் தாங்கிக் கொண்டான். “இல்லை நீ என்னை கஷ்டப்படுத்துறதா நினைக்கிறே. ஆனா எனக்கு அது கஷ்டமாவே தெரியலை, ரொம்ப பிடிச்சி தான் அதை நான் செய்யறேன்”

 

“மனசுக்கு பிடிச்சவங்களுக்காக ஒண்ணை செய்யறது எவ்வளவு சுகம்ன்னு நான் உணர்றேன். உன்னை கூப்பிட வரமாட்டேன்னு வீம்பா சொன்ன என்னால ஒரு நாள் கூட நீ இல்லாம இருக்க முடியலை அது தான் நிஜம். உன்னைத்தேடி இப்படி நான் வருவேன்னு நானே நினைக்கலை தெரியுமா” என்றவன் அவள் கன்னத்தில் மென்மையாய் இதழ் பதிக்க குழலி கண்ணை மூடிக் கொண்டாள்.

 

“உனக்கு தோணலாம், நேத்து தான் நாம முதல் முறையா பிரியறோமான்னு. அப்போ முதல்ல எனக்கு புரியாதது இப்போ தான் புரியுது குழலி”

 

“நிஜம் தான் சொல்றேன் குழலி. உன்னை கல்யாணம் பண்ணிட்டு பெங்களூர் கூட்டிட்டு போனப்போ உன்னை ஒரு சண்டைக்காரியா பார்த்தேன், நீ நல்லா சமைக்கிறே எங்கம்மா மாதிரின்னு நினைச்சிருக்கேன்”

 

“எல்லாத்துக்கும் உனக்கு கோபம் வருதுன்னு சமயத்துல நீ பண்ணி வைக்கிற பிரச்சனைகளை பார்த்து எரிச்சலா கூட பார்த்திருக்கேன்”

 

“நம்ம கல்யாணம் முடிஞ்ச சில மாசத்துலயே யூஎஸ் போற சான்ஸ் வந்துச்சே ஞாபகம் இருக்கா. நீ எப்படி மறந்திருப்பே வாய்ப்பே இல்லை அதுக்கு” என்றவன் தொடர்ந்தான்.

 

“அப்போ உன்னை என்னோட கூட்டிட்டு போகாததுக்கு காரணம் அங்க உன்னை வீட்டில தனியா விட்டு போகணும். நீ அக்கம் பக்கம் சண்டையை இழுத்து வைப்பியோன்னு பயந்து தான்” என்று அவன் சொல்லவும் அனிச்ச மலராய் வாடியது அவள் வதனம்.

 

“நான் ஒண்ணும்…” என்று விளக்கம் சொல்ல முற்பட்டவளை தடுத்தான்.

 

“நீ அப்படி இல்லை எனக்கு இப்போ புரியுது. நம்ம இருந்த அபார்ட்மெண்ட் பக்கத்து வீட்டுல இருந்தவனை பத்தி நீ அப்போ சொன்னப்போ எனக்கு புரியலை. ஆனா புரிஞ்சப்போ நீ பக்கத்துல இல்லை”

 

“ஊருக்கு போயிட்டு திரும்பி வந்தப்போ வீடே அமைதியா இருந்துச்சு. யூஎஸ்ல கூட உன்னை மிஸ் பண்ணியிருக்கேன். ஆனா அதையெல்லாம் பெரிசா உட்கார்ந்து யோசிக்க எனக்கு அப்பவும் நேரமில்லை”

 

“பெங்களூர் திரும்பி வந்ததும் வீட்டில இருக்கவே என்னவோ போல இருந்துச்சு. உன்னை கூப்பிட்டா நீ வரவும் இல்லை, சரி நீ படிக்கணுமேன்னு பேசாம இருந்திட்டேன். ஏற்கனவே படிச்சிட்டு இருந்த பொண்ணை கல்யாணம் பண்ணிட்டோமேன்னு எனக்கு கில்டியா இருந்துச்சு”

 

“இங்க வந்ததும் காலேஜ் சேர்க்கணும் நினைச்சேன். ஆனா நீ ஊர்லவே ஜாயின் பண்ணவும் சரி உனக்கான சுதந்திரத்தை கொடுக்கணும்ன்னு அப்படியே விட்டுட்டேன்”

 

“நீ இல்லாதப்போ நான் எதையோ மிஸ் பண்ணதா உணர்ந்தேன். அது நீன்னு நான் அப்போ உணரலை. நீ இல்லாதது என்னை எந்தளவுக்கு பாதிச்சதுன்னு நீ தெரிஞ்சுக்கணும்”

 

“நான் இப்போ இஸ்ரோல வொர்க் பண்ணலை” என்றதும் “என்ன சொல்றீங்க நீங்க!!” என்றாள் அதிர்ந்து.

Advertisement