Advertisement

குழலி பதிலேதும் சொல்லவில்லை. “குழலி அம்மா பாவம்டி. அவங்க ஒண்ணு செஞ்சிருந்தா அது உனக்கு நல்லதுன்னு நினைச்சு மட்டும் தான் செஞ்சிருப்பாங்க. நீ ஒண்ணும் அதை புரிஞ்சுக்காத முட்டாள் இல்லைன்னு எனக்கு தெரியும்”

 

“நீ ஊருக்கு போறதுக்கு முன்னாடி அவங்ககிட்ட பேசிட்டு போடி. உனக்கு கோபம்ன்னா அதை கொஞ்சம் தள்ளி வைச்சுக்கோ. உனக்காகவே வாழற மனுஷிடி அவங்க” என்று ஜோதி சொல்லவும் போதும் நிறுத்து என்பதாய் கை நீட்டினாள் அவள்.

 

“எனக்கு தெரியும் எங்கம்மாவை. அவங்களுக்கும் என்னை தெரியும் தானே, அப்போ அவங்களும் என்னை புரிஞ்சுப்பாங்க” என்றவள் “நான் கிளம்பறேன்” என்று எழுந்தாள்.

 

“குழலி நான் தப்பா பேசியிருந்தா மன்னிச்சிருடி” என்று அவள் கையை பிடித்துக்கொண்டாள் ஜோதி. தான் அதிகமாய் பேசிவிட்டோமோ என்றிருந்தது அவளுக்கு.

 

ஜோதி அப்படி சொல்லவும் குழலிக்கு என்னவோ போலாக “நீ எதுக்கு சாரி சொல்றே, நான் தான் ஏதோ யோசனையில இருந்திட்டே, சரிடி நாம கிளம்புவோம் நேரமாச்சு”

 

“இங்கவே இப்படியே நம்மோட உறவு முடிஞ்சிட கூடாது. திரும்பவும் நாம எல்லாம் ஒண்ணா சேர்ந்து மீட் பண்ணணும், நாம எப்பவும் தொடர்பில இருக்கணும் நண்பர்களா நாம கடைசி வரைக்கும் இருக்கணும்”

 

“போடி நீ வேற கல்யாணம் பண்ணிகிட்டு போய்ட்டா எல்லாரும் தனித்தனி தீவாகிடுவோம். இதுல எங்க நாம மீட் பண்ண” என்றாள் தோழியொருத்தி.

 

“அப்படி இருக்கக்கூடாதுன்னு தான் அவ சொல்றாடி லூசு. பசங்க மட்டும் கல்யாணத்துக்கு அப்புறமும் அவங்களோட பிரண்ட்ஸ் கூட இருக்காங்க. நாம மட்டும் ஏன் நம்மோட பிரண்ட்ஸ் மிஸ் பண்ணணும். குழலி நீ சொல்றது தான் சரி நாம எப்பவும் தொடர்புள்ள இருப்போம்டி. இதே மாதிரியே எப்பவும் இருப்போம்” என்று சொல்லி அவரவர் விடைபெற்றனர்.

 

கல்லூரியில் இருந்து வெளிவந்த குழலிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. தோழிகளுடன் பேசிக்கொண்டே வெளியில் வந்தவள் வெளியே நின்றிருந்த காரைப் பார்த்துவிட்டு அப்படியே நின்றுவிட்டாள்.

 

“என்னடி நின்னுட்டே??”

 

“ஒண்ணுமில்லை” என்றவள் அந்த காரை தாண்டிப் போக இந்தர் காரின் கதவை திறந்து வெளியில் வந்தான். காரின் மீது சாய்ந்து நின்றுக்கொண்டு அவளையே பார்த்திருந்தான்.

 

அவள் அதை கண்டுக்கொள்ளாது நடக்க “குழலி அண்ணே வந்திருக்கார்டி, போ உன்னை பார்க்கத்தான் வந்திருக்காங்க” என்றாள் ஜோதி.

 

“அதுக்கு என்ன பண்ணலாங்கற”

 

“இப்போ தானேடி உனக்கு அவ்வளவு பாடம் எடுத்தேன். எல்லாம் வேஸ்ட் போடி, நாங்க போறோம்” என்ற ஜோதி தோழியை விட்டு முன்னால் நடக்க ஆரம்பித்தாள். மற்றவர்களும் அவளுடன் சேர்ந்துக் கொண்டே முன்னே நடக்க குழலி பின்னால் தனியே நின்றாள்.

 

இந்தருக்கு வந்த கோபத்தில் அவளை நாலு அறை வைக்க வேண்டும் என்றே தோன்றியது. அவளைப் பார்க்கத்தானே அவ்வளவு தூரத்தில் இருந்து வந்திருக்கிறான் என்று கூட தோன்றாமல் எனக்கென்னன்னு போறாளே என்று கனன்று கொண்டிருந்தான்.

 

குழலி தானாய் வருவதாக இல்லையென்பதை உணர்ந்தவன் மனைவிடம் என்ன வெட்கம் மானம் பார்க்க என்ன இருக்கிறது அவளைவிட்டால் பிடிக்க முடியாது என்று எண்ணி அவள் முன் சென்று நின்றான்.

 

“வந்து வண்டியில ஏறு??”

 

“அதை முதல்லயே சொல்லியிருக்கலாம்ல” என்று குழலி சொல்லவும் ‘அப்போ நான் கூப்பிடலைன்னு தான் இவ வரலையா’ என்று யோசனை போக காரின் கதவை திறந்து அவளுக்கு வழிவிட்டான்.

 

‘இவளை நம்பலாமா அமைதியா இருக்கா’ என்று அவளைப் பார்த்துக்கொண்டே சுற்றி வந்து ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்து காரை கிளப்பினான். அவளோ சாவதானமாக கார் சன்னலின் கதவை இறக்கிவிட்டு தன் தோழிகளுக்கு பை சொல்ல அவர்கள் வாயை பிளந்துக் கொண்டு பார்த்தாலும் தோழிக்கு பதிலுக்கு கையாட்டினர்.

 

அடுத்த அரைமணியில் அவர்கள் வீட்டிலிருந்தனர். இவர்களுக்காகவே காத்திருந்தது போல வெங்கடேசன் ஓடி வந்தார். “வா இந்தர் உங்களுக்கு தான் வெயிட் பண்ணிட்டு இருக்கோம்”

 

“என்னாச்சு சித்தப்பா என்ன விஷயம்??”

 

“ஒண்ணுமில்லைப்பா இவளோட தூரத்து சொந்தத்துல ஒரு துக்கம் இப்போத்தான் சேதி வந்துச்சு. பெரிய சாவு, நாங்க ரெண்டு பேருமே ஊருக்கு கிளம்பறோம். நீ இன்னைக்கே கிளம்பறேன்னு சொன்னியே. இன்னைக்கு இங்கவே இருங்க. நாங்க போயிட்டு காலையில வந்திடுறோம். நீங்க ரெண்டு நாள் கழிச்சு கிளம்பினா போதும்”

 

“அவங்க ஊருக்கு கிளம்புறதுனா கிளம்பட்டுமே. நாம வர்ற வரைக்கும் எதுக்கு பாவம் காத்திட்டு இருக்கணும்” என்ற ராகினியை வெங்கடேசன் முறைத்தார்.

 

“சித்தி சொல்றதும் சரி தானே சித்தப்பா நாங்க இன்னைக்கே கிளம்புறோம்”

 

“ஏன்யா நீயே அங்க இருந்து அவ்வளவு தூரம் வண்டி ஓட்டிக்கிட்டுவந்திருக்கே, கொஞ்சம் கூட ரெஸ்ட் எடுக்காம மறுபடி வண்டி எடுத்திட்டு இன்னைக்கே கிளம்பவா, அதெல்லாம் வேணாம்” என்று திட்டவட்டமாய் மறுத்தார் அவர்.

 

குழலிக்கும் அவர் சொல்வது சரியாகவே தோன்ற “மாமா தான் சொல்றாங்கல்ல இன்னைக்கே கிளம்பணும்ன்னு என்ன அவசரம்” என்றாள் கணவனை பார்த்து.

 

“இல்லை குழலி” என்றவன் பேசப்போக “குழலி புருஷன் சொல்றதை கேட்கணும். அவன் தான் இன்னைக்கே கிளம்பலாம்ன்னு சொல்றான்ல” என்று அவனுக்கு முன்னே பேசப் பாய்ந்தார் ராகினி.

 

“அத்தை நானும் உங்களை மாதிரி தான், மாமா பேசுறதை கேட்காம நீங்க எப்படி பேசுறீங்களோ நானும் அப்படியே பேசுவேன்” என்ற குழலியை அப்பட்டமாய் முறைத்தார் ராகினி.

 

‘கிரகம் கிரகம் எங்க இருந்து தான் இந்த தரங்கிணி அக்கா இப்படியொருத்தியை மருமகளா பிடிச்சுதோ தெரியலை. கூட கூட பேசிட்டு இருக்கா, அக்காவை சொல்லி என்ன செய்ய அவங்க வேணாம்ன்னு தான் சொன்னாங்க. எல்லாம் என் அத்தை கிழவியை தான் சொல்லணும்’

 

‘அது செஞ்ச வேலை தான் இவ என்னைய பேசுறா’ என்று குழலியை மனதிற்குள் வறுத்தெடுத்தார்.

 

குழலி அப்படி சொல்லவும் வெங்கடேசன் சிரிக்கவும் ராகினி இன்னும் நன்றாக முறைத்தார் குழலியை.

 

“அவளை விடுங்க நீங்க என்ன சொல்றீங்க??” என்று மகனையும் மருமகளையும் பார்த்தார் வெங்கடேசன்.

 

“அதான் குழலி சொல்லிட்டாலே சித்தப்பா நாங்க இன்னைக்கு இங்க இருக்கோம்” என்றான் இந்தர்.

 

“சரிய்யா நீங்க இருங்க வண்டி சொல்லியிருக்கேன் இப்போ வந்திடும் நாங்க கிளம்பறோம்”

 

“சித்தப்பா வண்டி எதுக்கு சொன்னீங்க. என் வண்டி எடுத்திட்டு போங்க??”

 

“எய்யா எனக்கு தான் கார் ஓட்டத் தெரியாதே”

 

“நான் வேணா வந்து ட்ரோப் பண்ணுறேன்” என்றவனை குழலி முறைக்க வெங்கடேசனோ ‘இவனை என்ன செய்யலாம்’ என்று பார்த்தார்.

 

“ஆமாங்க இந்தர் வரட்டுமே. நாம அவன்கூட கார்ல போவோம்” என்றார் ராகினி ஈயென்று இளிக்காத குறையாய்.

 

அவர் சொந்த பந்தத்தின் முன் பந்தாவாய் சென்று இறங்க வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு. “ராகினி நீ என்ன எங்களை பார்த்திட்டு இருக்க, போய் துணி எடுத்து வை”

 

“துணியெல்லாம் எதுக்குங்க??”

 

“அப்போ துக்க வீட்டுக்கு போயிட்டு குளிக்காமலே அந்த ஊர்ல இருந்து இங்க வரவா??” என்று மனைவியை முறைக்க அவர் முணுமுணுத்துக் கொண்டே உள்ளே சென்றார்.

 

“குழலி நீ உள்ள போய் முகம் கைக்கால் கழுவிட்டு வந்து சாப்பாடு எடுத்து வைம்மா. ரெண்டு பேரும் சாப்பிடுவீங்க”

 

“இல்லை மாமா வந்து”

 

“போம்மா மாமா சொல்றேன்ல” என்று சொல்லவும் உள்ளே சென்றாள் இந்தரை திரும்பி பார்த்தவாறே.

 

“எதுக்கு சித்தப்பா எல்லாரையும் உள்ள அனுப்பிவிட்டீங்க. என்கிட்ட என்ன தனியா பேசணும் உங்களுக்கு?? காசு எதுவும் வேணுமா”

“எனக்கெதுக்குய்யா காசு உனக்கு தான் கொஞ்சம் அறிவு வேணும்”

 

“சித்தப்பா!!”

“பின்ன என்னய்யா நானே பிளான் போட்டு ராகினி கூட ஊருக்கு கிளம்பறேன். நீ வேற எனக்கு வண்டி ஓட்டிட்டு வர்றேன்னு உளறிட்டு இருக்கே”

 

“எதுக்கு சித்தப்பா பிளான் எனக்கு புரியலை??”

 

“உனக்கு விஞ்ஞானம் தெரிஞ்ச அளவுக்கு வீட்டு விஷயம் புரியலைடா மகனே. எதிர்காலத்துல என்ன தான் பண்ணப் போறியோ” என்றார்.

 

“சித்தப்பா ப்ளீஸ் எனக்கு புரியற மாதிரி பேசுங்க”

 

அவர் விளையாட்டு பேச்சைவிட்டு சற்று சீரியசாகவே பேச ஆரம்பித்தார். “எங்க அண்ணனுக்கும் அண்ணிக்கும் உங்க கவலை தான் பெரிய கவலையா இருக்கு இந்தர்”

 

“ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணி வருஷம் ரெண்டாச்சு. இப்படி ஆளுக்கொரு மூளையில இருந்தா பெத்தவங்களுக்கு சந்தோசமா இருக்குமா. இப்போ தான் சேர்ந்தீங்கன்னு சந்தோசப்பட்டா நேத்து அண்ணி போன் பண்ண பிறகு தான் எனக்கு புரியுது. மறுபடியும் ரெண்டு ஏதோ பிரச்சனைன்னு”

 

“அதெல்லாம் ஒண்ணுமில்லை சித்தப்பா” என்றான் அவன்.

 

“எதுவும் இல்லைன்னா சந்தோசம் தான் இந்தர். உங்க சித்திக்கு தூரத்து சொந்தம்ன்னு நான் சொல்லும் போதே உனக்கு புரியலையா. அவ மட்டும் போனா கூட போதும், நானும் எதுக்கு கிளம்புறேன்னு நீ நினைக்கிறே”

“எதுக்கு??”

 

“நீ எப்படிடா எங்க அண்ணனுக்கு பிள்ளையா பிறந்தே”

 

“சித்தப்பா வேணாம்”

 

“நீயும் குழலியும் தனியா வீட்டில இருங்க. அவ கூட பேசி என்ன பிரச்சனைனாலும் அதை இங்கவே தீர்த்திட்டு போ. ஊருக்கு போகும் போது ரெண்டு பேரும் சேர்ந்து சந்தோசமா போகணும் அதை நாங்க பார்க்கணும். அவ்வளவு தான் சொல்வேன்” என்றவர் ராகினியை அழைத்தார்.

 

“போகலாம் வா”

 

“இந்தர் கார்ல தானேங்க” என்ற மனைவியை முறைக்கவும் அவர் சொல்லியிருந்த கார் வந்துவிட அவர்கள் விடைப்பெற்று சென்றனர்.

 

கணவனும் மனைவியும் ஒருவரை ஒருவர் பார்த்தவாறே வீட்டிற்குள் நுழைந்தனர்.

Advertisement