Advertisement

22

குழலிக்கு பெங்களூர் திரும்பிச் செல்லும் எண்ணமில்லை. ஆனால் போகாமலும் இருக்க முடியாது. அவள் ஒன்றும் தாய் வீட்டில் இருக்கவில்லையே, அங்கிருந்திருந்தால் ஒரு வேளை அவள் திரும்ப ஊருக்கு செல்லலாமா வேண்டாமா என்று நிச்சயம் யோசித்திருப்பாள்.

 

இப்போதோ அவளிருப்பது அவளின் மாமியார் வீட்டில் தானே. பெரியாத்தாவின் வீடு அவளின் மாமியாரின் வீடு தானே. அவளின் சின்னத்தை ராகினி வேறு இருக்கிறார்.

எப்போது பார்த்தாலும் அவளை ஏதாவது ஒன்று சொல்லி மட்டம் தட்டிக்கொண்டே இருப்பவரிடம் யாரையும் அவளால் விட்டுக்கொடுக்க முடியாதே. எவ்வளவு நாள் ஓட்ட முடியுமோ அவ்வளவு நாள் ஓட்டுவோம் என்று தான் எண்ணிக் கொண்டிருந்தாள்.

 

இன்னும் ஒரு நாள் தான் நாளைய தேர்வு முடிந்துவிடுமே என்று நினைக்க நினைக்க அழுகை வந்தது. அவளின் எதிர்பார்ப்பு என்னவென்று அவளுக்கே புரியவில்லை.

 

இந்தர் அவளிடம் ஒரு வார்த்தை கூட ரம்யாவை பற்றி சொல்லியிருக்கவில்லையே என்று அப்படியொரு வருத்தம் அவளுக்கு இருந்தது உண்மை தான். இப்போது வரை அந்த வருத்தம் அவளுக்கு இருக்கிறது.

 

அவன் ரம்யாவை பற்றி அவளிடம் சொன்ன பிறகும் கூட அந்த வருத்தம் போகவில்லை. அவள் கேட்டபிறகு தான் அவன் சொன்னான் என்பதால், தான் அவனுக்கு நெருக்கமாகவில்லை என்ற எண்ணத்தையே அது கொடுக்க அதனாலேயே அவளால் அதிலிருந்து மீளவே முடியவில்லை.

 

சொல்லவில்லை சொல்லவில்லை என்று அதையே பிடித்து தொங்கிக் கொண்டிருந்தாள் அப்போதும் இப்போதும்.

 

இப்போது வருத்தத்தோடு கோபமும் சேர்ந்துவிட்டது. அது அவன் இப்போதும் கூட உடன் ஊருக்கு வந்து விட்டுவரவில்லை என்று தான். அதனாலேயே பெங்களூருக்கு உடனே திரும்பிச் செல்ல அவள் பிரியப்படவில்லை.

 

ஒரு வழியாய் இரவு உறக்கம் மெல்ல அவளை ஆட்கொள்ள கனவில் இந்திரஜித் வந்தான். அவளை அணைத்து முத்தமிட்டான். குப்பென்று வியர்த்துவிட எழுந்து அமர்ந்தால் பொழுது விடிந்திருந்தது. நேரம் பார்க்க அது ஏழு என்று சொல்ல குளித்து முடித்து அவள் தயாராகி வர கயல்விழி வந்திருந்தார் காலை உணவைக் கொண்டு.

 

“வா கயலு என்ன இன்னைக்கு காலையிலவே வந்துட்டே??” என்றார் வெங்கடேசன்.

 

“இல்லண்ணே இன்னைக்கு குழலி கடைசி பரிட்சை அதான் ஒரு எட்டு பார்த்துட்டு போகலாம்ன்னு வந்தேன்”

இவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போதே குழலி இறங்கி வந்தவள் அன்னையை பார்த்தும் பார்க்காதது போல சமையலறை நோக்கிச் செல்ல “குழலி” என்ற வெங்கடேசனின் குரலில் திரும்பி வந்தாள்.

 

“சொல்லுங்க மாமா”

 

“அம்மா வந்திருக்கா நீ பாட்டுக்கு உள்ளே போறே. என்னன்னு கேட்க மாட்டியா??”

 

அவள் கயல்விழியிடம் திரும்பி “என்ன??” என்றாள்.

 

“குழலி நீ பண்ணுறது சரியில்லை” என்றார் வெங்கடேசன்.

“அண்ணே விடுண்ணே” என்ற கயல் தன் கையில் இருந்த சிறு காகிதத்தை பிரித்து அதிலிருந்த விபூதியை எடுத்து மகளின் நெற்றியில் இட்டார்.

 

“இது வரைக்கும் எழுதின பரிட்சை மாதிரி இதையும் நல்லபடியா எழுதி முடிக்கணும்ன்னு வேண்டிக்கிட்டேன்” என்றார்.

 

“ரொம்ப தான் அக்கறை”

 

“குழலி அம்மாவை இப்படித்தான் மரியாதை இல்லாம பேசுவியா”

 

“நான் மரியாதை இல்லாம என்ன மாமா பேசினேன். என்னை வேணாம் போன்னு அவங்க தான் சொன்னாங்க. பெத்த பொண்ணு அவங்களுக்கு முக்கியமில்லை. என்னை விட்டுக்கொடுத்திட்டாங்க தானே” என்று சொல்லும் போதே தொண்டையடைத்து விட கயல்விழியின் இமையோரம் நனைந்தது.

 

“அண்ணே நான் வீட்டுக்கு கிளம்பறேன்” என்றுவிட்டு அவர் கிளம்பிவிட்டார்.

 

“குழலி ஆனா நீ…”

 

“விடுங்க மாமா” என்றவள் காலை உணவை முடித்துக்கொண்டு கல்லூரிக்கு கிளம்பிவிட்டாள்.

 

வினாத்தாளை வாங்கியவள் வேக வேகமாய் எழுதி முடித்திருந்தாள் வினாக்களுக்கான விடைகளை. இரண்டு மணி நேரத்திலேயே அனைத்தும் முடித்திருந்தாலும் உடனே கிளம்பும் எண்ணம் அவளுக்கு இல்லை.

 

வீட்டுக்கு போய் மட்டும் என்ன செய்ய ஊருக்கு கிளம்ப வேண்டுமே ஓரிரு நாளில் என்ற எண்ணமே சுற்றி சுற்றி வர எழுதிய விடைகளை சரிபார்க்கிறேன் பேர்வழி என்று மீண்டும் அனைத்தையும் படித்து முடிக்கும் போது மேலும் அரை மணி நேரம் மட்டுமே கழிந்திருந்தது.

 

அதற்கு மேல் அங்கு உட்கார அவளுக்கு பிடிக்கவில்லை. வெறுமையான உணர்வு அவளை ஆட்டிப்படைக்க விடைத்தாளை கொடுத்துவிட்டு வெளியில் வந்து தன் தோழிகளுடன் எப்போதும் வந்து அமரும் வேப்பமரத்தின் கீழ் அமர்ந்தாள்.

 

வேப்பமரம் அவளின் வெம்மையை சற்றே தணித்திருந்தது வீசிய காற்றின் மூலமாய். அவளின் தோழிகள் ஒவ்வொருவராய் வர அவர்களுடன் பேசிக் கொண்டிருந்தாள். கல்லூரியின் கடைசி நாளாயிற்றே அவர்களுக்கு அங்கிருந்து கிளம்பும் எண்ணமே வரவில்லை.

 

“அடியே எங்களுக்கு தான் காலேஜை விட்டு கிளம்ப மனசுவரலன்னா உனக்கென்னடி ஆச்சு. நீயும் இங்கவே உட்கார்ந்திருக்கே, உன் புருஷன் உனக்காக காத்திட்டு இருப்பார். நீ ஜாலியே இருப்பல்ல”

 

“என்னடி ஜாலி??” என்றாள் குழலி சிடுசிடுவென்று.

 

“உனக்கென்னம்மா நீ செட்டில் ஆகிட்டே, மாமன் பிள்ளையவே கட்டிக்கிட்ட, எங்களை பாரு படிச்சு முடிச்சாச்சு. இனி எங்க வீட்டில மாப்பிள்ளை பார்த்து எங்களுக்கு எப்போ கல்யாணம் முடிய”

 

“அதுவே பாரு உனக்கு கண்ணுக்கு லட்சணமா, நல்லா சம்பாதிக்கிற நல்ல மாப்பிள்ளை அதுவும் சொந்ததுலவே, ஜம்முன்னு கல்யாணம் பண்ணிகிட்டே”

 

“எங்களுக்கு ஒரு மாமனும் இல்லை அவனுக்கு பிள்ளையும் இல்லை. அப்படியே ஒண்ணு ரெண்டு இருந்தாலும் எல்லாம் எங்களுக்கு சின்னதா இருக்கு”

 

“கண்ணுக்கு லட்சணமான, நல்லா சம்பாதிக்கிற மாப்பிள்ளை இருந்தா போதுமாடி நல்லா வாழறதுக்கு” என்றாள் கார்குழலி.

 

“வேறென்ன வேணும்ன்னு நீ நினைக்கிறே” என்றாள் தோழியர் கூட்டத்தில் ஒருத்தி.

 

“நம்ம மனசை புரிஞ்சவர் வரணும்ன்னு உங்களுக்கு எல்லாம் தோணவே இல்லையா”

 

“மனசை புரிஞ்சுக்கிட்டு தான் கல்யாணம் பண்ணா எவளுக்குமே இந்த ஜென்மத்திலே கல்யாணம் நடக்காது. லவ் மேரேஜ்ல கூட அது இப்போலாம் நடக்கறதில்லை தெரியுமா”

 

“ஏன்டி ஜோதி அப்படி சொல்றே?? ஏன் அது ஏன் நடக்காது??”

“சரி எனக்கு நீ முதல்ல இதுக்கு பதில் சொல்லு உனக்கான பதில் தன்னால கிடைக்கும்” என்றாள் ஜோதி என்ற தோழி.

 

“கேளு”

 

“நல்லா புரிஞ்சுட்டுகிட்ட ஒருத்தனை நீ கல்யாணம் பண்ணிக்கறே. நீயும் புரிஞ்சுகிட்ட, அவரும் புரிஞ்சுகிட்டார், அப்படின்னா உங்களுக்குள்ள சண்டையே வராதுன்னு நீ உறுதியா சொல்வியா??”

 

“சண்டை ஏன் வரணும்??”

 

“அஞ்சு விரல் ஒண்ணா இருக்கிறதில்ல அதுலவே அவ்வளவு பேதமிருக்கு. கூட பிறந்தவங்களாவே இருந்தாலும் ஒவ்வொருத்தருக்கும் ஒரு ஒரு குணமிருக்கும். நம்ம கூடவே பிறந்து வளர்ந்தவங்ககிட்ட நாம சண்டை போடாம இருக்கோமா என்ன”

 

“எனக்கு தான் கூடப்பிறந்தவங்க யாருமில்லையே”

 

“ஹேய் நீங்க சொல்லுங்கடி, ரமா நீ உன் தம்பிகிட்ட சண்டை போடுவியா போட மாட்டியாடி”

 

“அதெல்லாம் நல்லா போடுவோம்டி”

 

“நீ சொல்லுடி பாரு உங்க அண்ணன்கிட்டயும் தங்கச்சிக்கிட்டையும் நீ சண்டை போட்டதில்லையா”

 

“அண்ணன்கிட்ட போட்டதில்லை ஆனா எனக்கும் என் தங்கச்சிக்கும் சண்டை வரும்”

 

“நல்லா கேட்டுக்கோ குழலி. கருத்து ஒருத்தருக்கொருத்தர் வேறுபடும். உங்கம்மா உன்னை ஒரு வார்த்தை சொல்லிட்டாங்கன்னு அவங்ககிட்ட பேச மாட்டேன்னு இருக்கியே”

 

“அதைப்பத்தி இப்போ எதுக்குடி பேசுறே??”

 

“காரணமிருக்கு உன்னை பெத்த அம்மா அவங்களை சின்ன வயசுல இருந்து நீ பார்க்கிறே. நீ அவங்களை புரிஞ்சுக்கிட்டியா. அப்படி தான் நம்மளை கல்யாணம் பண்ணிக்க போறவங்களும்”

 

“ஒண்ணா கூடவே வளர்ந்தவங்ககிட்டவே நமக்குள்ள கருத்து வேறுபாடு வரத்தான் செய்யும். அவங்ககிட்ட சில சமயம் நாம விட்டுக்கொடுத்தும் சில சமயம் சண்டை போட்டும்ன்னு போகும்”

 

“நம்மளை கல்யாணம் பண்ணிக்கிட்டவங்க, இல்லை பண்ணிக்க போறவங்க வேற குடும்பம். அரேன்ஜ் மேரேஜ்ல கல்யாணம் பண்ணிக்கிட்டு போனதுக்கு அப்புறம் தான் அவங்களை நாம தெரிஞ்சுக்குவோம்”

 

“அப்படியொரு சூழ்நிலையில என்னை புரிஞ்சுக்கலைன்னு என் மனசை புரிஞ்சுக்கலைன்னு பேசினா அது சுத்த பைத்தியக்காரத்தனம் தானே குழலி”

 

“லவ் மேரேஜ்ல மட்டும் என்ன வாழுது சொல்லு. ஒரு ஆணோ, பெண்ணோ வெளிப்பார்வையில அவங்களை பார்த்து பிடிச்சு கல்யாணம் பண்ணிட்டு அப்புறம் அங்க போனதும் நீ இப்படின்னு நான் நினைக்கலையேன்னு ஒப்பாரி வைப்பாங்க”

 

“ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள்ன்னு சொல்வாங்க. அதுக்குள்ள பிள்ளையை ஏன் பெத்துக்கறாங்க தெரியுமா. அந்த குழந்தை அவங்களுக்குள்ள பிணைப்பை ஏற்படுத்தும் அதுக்காக தான்”

 

“அப்போ யாருமே புரிஞ்சுக்கிட்டு வாழலைன்னு சொல்றியா. யாருக்குமே அப்படி கிடைக்காதுன்னு சொல்றியா”

 

“நான் அப்படி சொல்லலை. தொண்ணூறு சதவீதம் பேரு வாழ்க்கையில அப்படித்தான் நடக்குது. புரிதல் அப்படிங்கறது என்ன அவங்க கூட சேர்ந்திருக்கும் போது தானே வரும்”

 

“நமக்குள்ள சில பழ வழக்கங்கள் எப்படி வருதோ அப்படித்தான் புரிதலும் அவங்க கூட பழக பழக தான் வரும். அவங்க புரிஞ்சுக்கணும்ன்னு நாம எதிர்பார்க்கிற மாதிரி தானே அவங்களும் அப்போ எதிர்பார்ப்பாங்க”

 

“புரிதல் அப்படிங்கறது வரணும்ன்னா விட்டுக்கொடுக்கணும். நீ கொடுத்தா பதிலுக்கு அவங்களும் கொடுப்பாங்க. ஒரு சில லூசுங்க அப்போ கூட புரிஞ்சுக்காதுங்க அவங்களுக்காக காலம் முழுக்க விட்டுக்கொடுத்திட்டே இருக்கணும்ன்னு நான் சொல்லவரலை”

 

“குழலி நான் சொல்றது உனக்கு புரியுதா” என்றாள் ஜோதி அவள் எதையோ யோசிப்பது கண்டு.

 

Advertisement