Advertisement

 

“எனக்கு பிடிச்சிருக்கான்னு நீ கேட்கவேயில்லைன்னு நீங்க சொன்னப்போ கூட நான் ரொம்ப நம்பினேன். நிஜமாவே உங்களுக்கு என் மேல பிரியம் வந்திடுச்சுன்னு”

 

“அது தான் நிஜம் குழலி”

 

“இல்லை அப்படியில்லை உங்களை நான் ரொம்ப நம்புனேன். நீங்க அவளை நினைச்சுட்டு தான் என்கூட வாழலைன்னு எனக்கு இப்போ நல்லாவே புரியுதுங்க, புரியுது. என்னை உங்களுக்கு பிடிக்கலைன்னா கூட என்னால ஏத்துக்க முடியும். ஆனா அவளை நினைச்சு என்னை…” என்று முடிக்க முடியாது ஓவென்று அவள் சத்தமிட்டு அழவும் இந்தருக்கு என்னவோ போலாகிவிட்டது.

 

“குழலி லூசு மாதிரி பேசாதே. நீயா எதையாச்சும் நினைச்சு உளறாதே புரியுதா. ரம்யா அவ வாழ்க்கை தான் பெரிசுன்னு போய்ட்டா, அவளை நான் இப்பவும் ஏன் நினைச்சுட்டு இருக்கணும் சொல்லு”

 

“அவளை நினைக்கலைன்னா ஏன் உடனே நீங்க கல்யாணம் பண்ணலை. எனக்கு தெரியும் உங்களுக்கு பொண்ணு பார்த்திட்டு இருந்தாங்க. நீங்க தான் கல்யாணத்தை தள்ளிப்போட்டீங்க”

 

“எஸ் நான் தான் தள்ளிப்போட்டேன், ஏன்னா எனக்கு அப்போ தான் வேலை கிடைச்சு இருந்துச்சு. நான் டெம்பரவரியா தான் அங்க வொர்க் பண்ணிட்டு இருந்தேன். என் வேலை எனக்கு பர்மனென்ட் ஆகவும் மேரேஜ் பண்ணிக்கலாம்ன்னு தோணிச்சு அதான் பண்ணிக்கலை”

 

“அதைவிட எனக்கு பெரிய ஆம்பிஷன் ஒண்ணு இருந்துச்சு அது ஏதாவதொரு மிஷன்ல நானும் ஒரு அங்கமா ஆகணும்ன்னு. அதுக்குள்ள போய்ட்டா என்னால எதையுமே யோசிக்க முடியாது குழலி”

 

“குடும்பம், குழந்தைங்கன்னு எந்த நினைப்பும் வைச்சுக்க முடியாது. அதனால தான் எனக்கு கல்யாணம் வேணாம்ன்னு இருந்தேன்”

 

“அப்போ என்னை மட்டும் ஏன் கல்யாணம் பண்ணீங்க??”

“ஏன்னா எங்க வீட்டில என்னை கல்யாணம் பண்ணிக்கோன்னு போர்ஸ் பண்ணிட்டு இருந்தாங்க. அதனால தான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன், அவங்களுக்காக மட்டுமில்லை பாட்டிக்காக தான் முக்கியமா கல்யாணம் பண்ணிக்கிட்டேன்”

 

“உங்க மனசுல வேற பொண்ணு இருக்கும் போது என்னை கல்யாணம் பண்ண எதுக்கு சம்மதிச்சீங்க??”

 

“என் மனசு இருந்தவ எப்பவோ செத்து போய்ட்டா குழலி புரிஞ்சுக்கோ. சும்மா சும்மா அவளை மனசுல வைச்சுட்டு உன்னை கல்யாணம் பண்ணேன்னு சொல்லாதே. அது ரொம்ப அசிங்கம், நான் அப்படி செய்யறவனும் இல்லை”

“நீங்க என்ன சொன்னாலும் என் மனசு ஆறவே மாட்டேங்குது. எனக்கு சொல்றதுக்குன்னே நீங்க காரணம் வைச்சிருக்கீங்க வரிசையா. தயவுசெஞ்சு எனக்கு நீங்க எந்த விளக்கமும் கொடுக்கத் தேவையில்லை. என்னை அப்படியே விட்டிருங்க” என்றவள் கட்டிலில் குப்புற விழுந்தாள்.

 

அவள் உடல் அழுகையில் குலுங்குவதை அவனால் உணர முடிந்தது. “குழலி ப்ளீஸ் எதுக்கு அழறே?? கண்ணை துடை”

 

“யார் முன்னாடியும் அழக்கூடாதுன்னு இருந்த என்னை அழ வைச்சுட்டீங்கல்ல. எல்லாம் உங்களால போங்க இங்க இருந்து”

 

“குழலி ப்ளீஸ்”

 

வெடித்த அழுகையின் ஊடே “முதல்ல எங்கப்பா செத்தப்போ அழுதேன். அப்புறம் உங்க ஆத்தா என்னை அழ வைச்சுச்சு இப்போ நீங்க என்னை அழ வைக்கறீங்க” என்றாள் அவள்.

 

“அவங்கல்லாம் செத்து போய்ட்டாங்க நீ அழுதே, நான் உயிரோட தானே இருக்கேன் எதுக்கு அழறே?? ஒரு வேளை நான் ஏன் இன்னும் இருக்கேன்னு அழறியா” என்றிருந்தான்.

 

அவன் அவ்வளவு சமாதானம் சொல்லியும் கேட்காமல் இருக்கிறாளே என்ற எண்ணத்தில் அவன் சட்டென்று வார்த்தையை விட்டு விட அவளின் அழுகையை சமாதானம் செய்ய முடியாமலே போனது. அவனுக்கும் ச்சே என்றானது.

 

புரிந்துக்கொண்டால் பரவாயில்லை, புரிந்து கொள்ளவே மறுப்பவளை என்ன செய்ய என்று அவனுக்கு புரியவில்லை. அவனுக்கு கட்டுப்படுத்த முடியாது கோபம் வந்தது, ரம்யாவின் மீது மட்டுமல்ல, குழலியின் மீதும் தான்.

 

அவனின் கோபமும், அவளின் வீம்பும் பிடிவாதமும் அவர்கள் பெங்களூர் திரும்பி வந்த பிறகும் நீடித்தது. தரங்கிணிக்கு தான் அவர்கள் இருவரையும் பார்த்து கவலையாக இருந்தது. ‘கடவுளே எல்லாம் நல்லபடியா போயிட்டு இருக்குன்னு நினைச்சனே. என்னாச்சோ, என் கண்ணே பட்டுடுச்சோ, எல்லாம் சரியாகணும்’ என்று வேண்டுதல் வைத்தார் அவர்.

 

சிக்மங்களூருக்கு சென்றுவிட்டு பெங்களூருக்கு அவர்கள் திரும்பி வந்த இரண்டாம் நாள் தான் தரங்கிணி நினைவு வந்தவராக குழலியின் இறுதி தேர்வைப் பற்றி சொன்னார்.

 

“இந்தர் குழலிக்கு இன்னும் பத்து நாள்ல பரிட்சை வருது. கடைசி பரிட்சையாம்டா அவங்கம்மா நேத்து போன் பண்ணி சொன்னா. நான் தான் மறந்திட்டேன், நீ என்னப்பா சொல்றே” என்றார் மகனிடம்.

 

“அவர் என்ன சொல்றது நான் பரிட்சை எழுதணும், நான் ஊருக்கு போகணும்” என்றாள் அவள் வேகமாய்.

 

இந்தர் அவளை முறைத்து பார்த்தவன் “நீங்க கூப்பிட்டு போங்கம்மா” என்றதும் இம்முறை குழலியின் பார்வையோ அவனை துளைத்தது ‘இப்போ கூட நீங்க வந்து விட்டுட்டு போக மாட்டீங்களா’ என்ற பார்வை அது.

 

அதை தூசாக தட்டியவன் ‘நீ மட்டும் என்கிட்ட கேட்டுட்டா போகணும்ன்னு சொன்னே’ என்று பதிலுக்கு பார்வை கொடுத்தான்.

 

‘சொன்னா மட்டும்’ என்று மிதப்பாய் பார்த்தாள்.

 

‘போடி’ என்று அலட்சிய பார்வை கொடுத்தான்.

 

அதில் முகம் சுருங்கினாள் அவன் மனைவி. “நீங்களும் அப்பாவும் கூட போங்க, அவளை அவங்கம்மா வீட்டுல விட்டுட்டு சொல்லிட்டு வாங்க”

 

“நான் அங்க போக மாட்டேன்” என்று மீண்டும் எதிர்ப்பை கிளப்பினாள் அவள்.

 

‘இப்போ என்னடி பிரச்சனை??’ என்ற ரீதியில் அவளைப் பார்த்தான் அவன்.

 

“நான் போக மாட்டேன் அத்தை. நான் நம்ம பெரியாத்தா வீட்டில இருந்துக்கறேன். அங்க இருந்து தான் எக்ஸாம் எழுத போவேன்”

 

“குழலி உனக்கு தான் ராகினி பத்தி”

 

“நான் அங்க தான் இருப்பேன்” என்றவளை அனைவரின் முன்னேயும் முறைத்து நின்றிருந்தான் அவன்.

 

“விட்டிடுங்கம்மா அவ சொன்னா கேட்கமாட்டா. வீம்பு, அடம், ஆத்திரம் எல்லாம் கண்ணை மறைக்குது அவளுக்கு. அவ இஷ்டப்படியே அவ எங்கயும் இருக்கட்டும் விட்டிருங்க. ஆனா ஒண்ணை மட்டும் தெளிவா சொல்லிடுங்கம்மா” என்று நிறுத்தினான் அவன்.

 

‘என்னவென்பது போல’ இருவருமே அவனை பார்த்திருந்தனர்.

 

“போன முறை மாதிரி அங்கவே டேரா போடுற ஐடியா இருந்தா அவ ஊருக்கே போக வேண்டாம். திரும்பி வர்றதா இருந்தா மட்டும் தான் போகணும். அதை அவகிட்ட தெளிவா பேசிடுங்க” என்று அன்னையை ஊடாலே வைத்து அவன் சொல்லவும் குழலியின் முகம் ஜிவ்வென்றானது கோபத்தில்.

 

அவன் அவர்கள் அறைக்கு வரவும் “நான் ஊருக்கு போறேன்னு சொன்னதும் ரொம்ப சந்தோசமா இருக்குமே உங்களுக்கு. எதுக்கு அத்தை முன்னாடி பெரிசா ஆக்டிங் எல்லாம், நான் திரும்பி வர்றதா இருந்தா தான் போகணும்ன்னு” என்றாள்.

 

“ஆமா சந்தோசம் தான் அதுக்கென்ன இப்போ” என்றான் அவனும் வீம்புக்கு.

 

அவன் பேச்சு அவனுக்கே பிடிக்கவில்லை. ‘நான் இப்படி இல்லை, என்னை இவ ரொம்ப பேச வைக்குறா’ என்று தன்னையே கடிந்துக் கொண்டான் அவன்.

 

“ஆமாமா சந்தோசமா தானே இருக்கும். உங்களுக்கு தான் என்னைய கண்டா பிடிக்காதே. என்னை ஊருக்கு கூட்டிட்டு போய் விடமுடியாதாம் ஆனா நான் திரும்பி வர்றதை பத்தி மட்டும் இவர் பேசுவாராம்”

 

“எதுக்கு நான் உன்னை கூட்டிட்டு போய் ஊர்ல விடணும்??”

 

“அதானே என்னையெல்லாம் கூட்டிட்டு போய் விடத்தோணுமா”

 

“குழலி வேண்டாம் நீ பேசுறது எதுவும் எனக்கு பிடிக்கலை. என்னை சந்தேகப்படுறியா நீ??”

 

“இல்லை…” என்றாள் பளிச்சென்று.

 

‘அப்புறம்’ என்பது போல பார்த்தான். “உங்களுக்கு அந்த திறமை எல்லாம் இல்லை” என்று அவள் சொல்லவும் அவனுக்கு சிரிப்பதா அழுவதா என்றே புரியவில்லை. என்ன பதில் இது என்று தான் பார்த்திருந்தான் அவளை.

 

“இதுவரைக்கும் உங்க மனசுல நான் இருந்தனான்னு எனக்கு தெரியாது. ஆனா இப்போ அங்க நான் இருக்கறதா தான் உணர்றேன். தவிர உங்களுக்கு என்னையே இம்ப்ரெஸ் பண்ணத் தெரியலை. இதுல வேற எவளையாவது நீங்க இம்ப்ரெஸ் பண்ணுறதாவது” என்று அவள் சொல்லவும் அவனுக்கு சுருசுருன்று வந்தது.

 

“அப்புறம் ஏன் அப்படி சொன்னே??”

 

“எப்படி??”

 

“என்னையெல்லாம் கூட்டிட்டு போய் விடமுடியாதான்னு”

 

“அது உண்மை தானே. என்னை கூட்டிட்டு போய் தான் உங்களுக்கு விடணும்ன்னு எப்பவும் தோணினதே இல்லையே. புதுசா எப்படி வரும்?? உங்களுக்கு காதலியவும் ஒழுங்கா தக்க வைச்சுக்க தெரியலை, பொண்டாட்டியவும் பார்த்துக்க தெரியலை” என்றுவிட்டு அவள் சென்றுவிட சரியான ஆத்திரம் அவனுக்கு. ‘என்னவெல்லாம் பேசிவிட்டாள்’ என்று அவனுக்கு மனதே ஆறவில்லை.

 

Advertisement