Advertisement

 

21

“குழலி எங்கேம்மா போனே?? உன்னை காணலைன்னு பயந்துட்டேன். என்கிட்ட சொல்லிட்டு வந்திருக்கலாம்ல” என்றான் அவளருகே நெருங்கியவாறே.

 

மெல்ல விலகியவள் “ஹ்ம்ம்”

 

“குழலி என்னாச்சு?? பாரு எவ்வளவு நனைஞ்சு இருக்கேன்னு. சளி பிடிச்சுக்க போகுது” என்று அவள் ஈரக்கூந்தலில் கை வைத்து கோத “கையை எடுங்க” என்றாள் வெடுக்கென்று.

 

“குழலி”

 

“கிளம்பலாம் எனக்கு தலைவலிக்குது” என்று அவள் சொல்லவும் ஒரு பெருமூச்சை வெளியேற்றிவன் “ச்சே!! அவ்வளவு தானா நான் பயந்தே போயிட்டேன். என்னம்மா பண்ணுது டாக்டர்கிட்ட போவோமா??” என்றான்.

 

“எங்கயும் போக வேண்டாம், ரூமுக்கு போனா போதும்” சிடுசிடுப்புடன்.

 

‘என்னாச்சு இவளுக்கு திடிர்ன்னு தலைவலிக்குதுன்னு சொல்றா. புது தண்ணியில குளிச்சது ஒத்துக்கலையோ’ என்று எண்ணியவன் ‘ஒரு வேளை பசியில வந்த தலைவலியா இருக்குமோ என்று யோசித்து “லஞ்ச் டைம் ஆச்சு குழலி சாப்பிட்டா தலைவலி போய்டும், சாப்பிட்டு வேணா ரூமுக்கு போய்டுவோமே”

 

“நீங்க இருந்து சாப்பிட்டு வாங்க எனக்கு ரூமுக்கு போகணும்”

 

“ரொம்ப வலிக்குதா குழலி” என்றான் கரிசனையாய்.

 

அதில் அவள் விழிகள் கலங்கிட அதை அவனறியாது மறைத்தவள் “ப்ளீஸ்” என்று தன் தலையை அவள் பிடிக்கவும் அவன் தன் அன்னைக்கு அழைத்து பேசினான். அவர்களை சாப்பிட்டு அறைக்கு செல்ல சொல்லிவிட்டான்.

 

தன் மனைவியை அழைத்துக்கொண்டு அவர்கள் குடிலுக்கு வர குழலி நனைந்திருந்த உடையை மாற்றி வேறு அணிந்து வந்தாள். பின் தலையை பிடித்துக்கொண்டு கட்டிலில் அமர்ந்தவளின் அருகே வந்து அவன் அமரவும் நிமிர்ந்து “என்ன??” என்றாள் வெடுக்கென்று.

 

“என்னாச்சு குழலி??”

 

“ஒண்ணுமில்லை”

 

“தலையை பிடிச்சுட்டு ஒண்ணுமில்லைன்னு சொல்றே. என்ன பிரச்சனைன்னு சொல்லுமா??” என்றான்.

 

“நீங்க தான் எனக்கு இப்போ பிரச்சனையே. சும்மா நைனைன்னுட்டு” என்றாள் கடுப்புடன்.

 

சட்டென்று எழுந்துவிட்டான் இந்தர். ‘வேதாளம் மீண்டும் முருங்கைமரம் ஏறியேவிட்டது’ என்று அவனுக்கு புரிந்து போனது. மேற்கொண்டு பேச்சை வளர்த்தால் என்ன சொல்வாளோ என்று அவளைவிட்டு அவன் விலகி செல்லப் போக அவளோ “ஓ!! அப்போ அவ்வளவு தானா??” என்றாள்.

 

“அப்படின்னா??”

 

“எப்படியும் இல்லை” என்று மீண்டும் முகத்தை திருப்பிக் கொண்டாள் அவள்.

 

எதுவோ சரியில்லை என்று அவனுக்கு புரிந்தது ஆனால் என்னவென்று அவனுக்கு விளங்கவில்லை. “குழலி ஏதாச்சும் சாப்பிடுறியா?? நான் போய் வாங்கிட்டு வரட்டுமா??”

 

“ஹ்ம்ம் போய் கொஞ்சமா விஷம் வாங்கிட்டு எனக்கு மொத்தமா கொடுத்திடுங்க போய்டறேன்” என்று அவள் சொல்லவும் புரியாது அவளைப் பார்த்தான்.

 

சற்றே எரிச்சலான குரலில் “என்ன குழலி பேசிட்டு இருக்கே?? இப்போ நான் என்ன கேட்டுட்டேன் உன்னை. உனக்கு என் மேல எதுவும் கோபமா??” என்றான் நேராகவே.

 

“எனக்கெதுக்கு கோபம் வரணும். உங்களை யார் கூட பார்த்தா எனக்கென்ன??”

 

‘ஆக இவளுக்கு அது தான் பிரச்சனை போல. என்னை ரம்யா கூட பார்த்திருக்கா. பார்த்தது மட்டும் தானா இல்லை பேசினதும் கேட்டாளான்னு தெரியலையே என்று அவன் மனம் யோசனைக்கு தாவ அவளே “என்ன சாக்கு சொல்லி என்னை சமாளிக்கலாம்ன்னு யோசிக்கறீங்களா” என்றாள்.

 

“எனக்கு அதுக்கு எந்த தேவையும் இல்லை” என்றவன் “சோ நீ ரம்யாவை பார்த்திருக்க. அதான் உன் கோபத்துக்கு காரணமா??” என்று நேரடியாக விஷயத்திற்கு வந்துவிட்டான் அவன்.

 

“என் மேலே உனக்கு சந்தேகமா??”

 

“உங்களை ஒரு பொண்ணோட பார்த்து சந்தேகப்படுற அளவுக்கு நான் ஒண்ணும் தரம் தாழ்ந்து யோசிக்கறவ இல்லை”

 

“அப்போ உனக்கு என் மேலே வேற என்ன கோபம்?? அதை நீ சொல்லாம நான் எப்படி தெரிஞ்சுக்க முடியும்” என்றான் அவன் நிதானக்குரலில்.

 

“அதை நானே கேட்கணும்ல. என்கிட்ட நீங்க சொல்ல மறந்த கதையை நானே தெரிஞ்சுக்கிட்டு வந்து ஏங்க நீங்க என்கிட்ட சொல்லலைன்னு நானே கேட்கணும் அப்படித்தானே” என்றாள் இகழ்ச்சியாய்.

 

“குழலி அவளைப்பத்தி சொல்ல ஒண்ணும் பெரிசா இல்லை. நானே அவளை மறந்திட்டேன்”

 

“ஆமாமா நீங்க அவளையே மறந்திட்டு என்னை கல்யாணம் பண்ணவர் தானே” என்றாள் அவள் கிண்டலான குரலில்.

 

“குழலி நீ ஏன் இப்படி பேசறேன்னு எனக்கு புரியுது. உனக்கு முழுசா சொன்னாத்தான் புரியும்” என்றவன் “அவ பேரு ரம்யா”

 

“நான் பேரை கேட்கலையே”

 

“குழலி வெயிட் நான் சொல்லி முடிக்கறதுக்குள்ள நீ குறுக்க பேசினா என்ன அர்த்தம்” என்று அவன் சொல்லவும் முகம் சுருங்கியவள் அமைதியானாள் ‘நீயே பேசு’ என்பது போல.

 

“நான் காலேஜ் படிக்கும் போது அவளை லவ் பண்ணேன்” என்று ஆரம்பித்தவன் அனைத்தும் சொல்லியிருந்தான்.

 

“இதை இப்போ வந்து ஏன் என்கிட்ட சொல்லிட்டு இருக்கீங்க. அதான் என்னை போனா போகுதுன்னு கல்யாணம் பண்ணிக்கிட்டீங்களே. உங்க பெருமை என்ன அதென்ன இதென்னன்னு தான் எல்லாரும் பேசுறாங்களே. நான் தான் தப்பு பண்ணேன் வீம்புக்காரி வம்புக்காரின்னு கண்டவனும் என்னை கையை நீட்டி பேச வைச்சவர் தானே…”

 

“குழலி பேச்சு வேற எங்கயோ திசை மாறுது”

 

“எந்த திசையும் மாறலை. எல்லாம் என்னோட மனக்குமுறல். பெத்த அம்மா நான் தப்பு பண்ணதா சொல்லி உங்க கால்ல விழுந்து என்னை கூட்டிட்டு போகச் சொல்றாங்க”

 

“அங்கேயே நான் தோத்து போயிட்டேன் தெரியுமா. யாரு வேணாலும் என்னைப்பத்தி என்ன வேணா பேசட்டும். நான் தப்பே கூட பண்ணியிருக்கலாம் ஆனா எங்கம்மா உங்க கால்ல வந்து விழுந்தாங்க. நான் தப்பு செஞ்சேன்னு”

 

“அவங்க அப்படி செஞ்சிருக்க கூடாது. என்னை முதல்ல விட்டுக்கொடுத்தது நீங்க, அடுத்து எங்கம்மா” என்று அவள் பேசப்பேச அவள் கண்களில் நீர் அருவியாகியிருந்தது.

 

“நான் அக்கம் பக்கத்துல சண்டை போடுறேன்னு சொன்னீங்க. நான் காரணம் சொன்னேன் நீங்க அவங்ககிட்ட எனக்காக பேசியிருக்க வேணாம். ஆனா அவங்ககிட்ட போய் சாரி சொல்லி என்னை அங்க விட்டுக் கொடுத்தீங்க”

 

“நான் சொன்னது எதையுமே நீங்க காது கொடுத்து கேட்கலை அப்போ. இப்போ அதே வீட்டை காலி பண்ணிட்டு வேற வீட்டுக்கு வந்திருக்கீங்க. அது கூட ஏன்னு எனக்கு தெரிஞ்சு போச்சு”

 

“குழலி நானே அதைப்பத்தி உன்கிட்ட சொல்ல நினைச்சேன்”

 

“அதையும் நீங்களா என்கிட்ட சொல்ல மாட்டீங்க. ஏன்னா உங்களுக்கு வேலை இருக்கும். வேலை இருந்தா பொண்டாட்டின்னு ஒருத்தி இருக்கறது மறந்திடும். அந்த பக்கத்து வீட்டுக்காரன் சரியில்லாதவன்னு மத்தவங்க சொன்னதும் தான் உங்களுக்கு புரிஞ்சது அப்படித்தானே”

 

“ஒரு நிமிஷம் நான் சொன்னதை நீங்க கேட்டிருந்தா அப்படியும் இருக்குமோன்னு யோசிச்சிருப்பீங்கல்ல. என்னை கண்டா சண்டைக்காரி போல இருந்திருக்கும் உங்களுக்கு”

 

“ஏன்டா இவளைப் போய் கட்டினோம்ன்னு மனசுல தோணியிருக்கும். நீங்க என்னை கட்டினது கூட ஒரு கட்டாயத்துல தானே” என்றாள் கசந்த முறுவலுடன்.

 

“குழலி நீ பாட்டுக்கு உன் இஷ்டத்துக்கு பேசாதே. நான் சொல்லலை சொல்லைன்னு சொல்றியே. நமக்குள்ள இதெல்லாம் ஷேர் பண்ணிக்க எங்க அவகாசம் இருந்துச்சு நீயே சொல்லு. நாமே ஒருத்தரை ஒருத்தர் நல்லா புரிஞ்சுக்கலை. ரெண்டு பேரும் சேர்ந்து பேசினது கூட ரொம்பவே குறைவு தான்”

 

“அன்னைக்கு பர்ஸ்ட் நைட்ல நாம புரிஞ்சுகிட்டதுக்கு அப்புறம் தான் எல்லாமேன்னு சொல்றதுக்கு டைம் இருந்துச்சு. ஆனா ரம்யா விஷயம் சொல்ல உங்களுக்கு டைம் இல்லை அதானங்க”

 

அவள் பேசும் போது கண்களில் கண்ணீர் நிற்காது பெருகிக் கொண்டே தான் இருந்தது. அதை அழுந்த துடைத்தவள் “எனக்கு தெரியும் என் மேல உங்களுக்கு இருந்த நம்பிக்கை அவ்வளவு தான். அவளை மனசுல வைச்சுட்டு தானே நீங்க என்கிட்ட இருந்து தள்ளியே இருந்தீங்க. அதைக்கூட புரிஞ்சுக்க முடியாதா என்னால”

 

“வாட் என்ன பேசறே நீ?? நம்மோட பர்சனல்ல அவளை ஏன் இழுக்கறே?? அவளுக்கும் அதுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. அவ என்னைவிட்டு போனதுக்கு அப்புறம் நான் அவளையே நினைக்க முட்டாளா என்ன”

 

“நீங்க முட்டாள் இல்லை என்னைத்தான் முட்டாள் ஆகிட்டீங்க??”

 

“நீ என்ன முட்டாள் ஆனே. அப்படி நான் உன்னை என்ன ஏமாத்திட்டேன்னு தேவையில்லாத வார்த்தை எல்லாம் கொட்டுறே குழலி” என்றவனின் குரலில் என்றுமில்லாத திருநாளாய் கோபமும் சத்தமும் அதிகமாக இருந்தது.

 

அதற்கு காரணம் மனைவி தன்னை புரிந்துக்கொள்ளாது பேசுகிறாளே என்றிருந்தது அவனுக்கு. “நேத்து எதுக்கு அப்படி கேட்டீங்கன்னு எனக்கு இப்போ தாங்க புரியுது” என்று சொல்லவும் இவள் எதை சொல்கிறாள் என்று அவன் நிஜமாகவே புரியாது விழித்தான்.

Advertisement