Advertisement

 

20

நான்கு தேர்வு முடிந்திருந்தது குழலிக்கு. தினமும் கயல்விழி வீட்டில் இருந்து தான் அவர்களுக்கு உணவு வருகிறது. ராகினி எப்போதுமே சுறுசுறுப்பில்லாதவர் தான். அதனாலேயே தான் கயல்விழியிடம் பெரிதாய் எந்த ஒட்டுதலும் இல்லாவிட்டாலும் தனக்கு ஒரு வேலை மிச்சமாகிறதே என்று அவர் உணவு கொண்டு வருவதற்கு தடை சொல்லவில்லை.

 

‘இந்த மதினி எல்லார்கிட்டயும் வரிஞ்சுகட்டிட்டு சண்டைக்கு போகும். ஏன் என்கிட்டவே எத்தனை முறை சண்டைக்கு வந்திருக்கு. இப்போ என்னமோ மகளுக்காக தினமும் சத்தமேயில்லாம சோறு செஞ்சு கொண்டு வருது’ என்று ராகினி யோசிக்காமல் இல்லை.

 

தாய்க்கு மகளின் மீதான பாசத்தை படம் போட்டா விளக்க முடியும். தாய் மகள் என்ற காரணமே போதுமே அவர்களின் உறவையும் பாசத்தையும் அதுவே விளக்கிவிடுமே.

மறுநாளுடன் அவளின் தேர்வு முடிந்துவிடும். அது ஒவ்வொரு வருடமும் வரும் இறுதித்தேர்வு போல அல்ல, மாணவன் / மாணவி என்ற அழகிய பருவமும் நிறைவு பெரும் நாளும் அது தானே.

 

குழலியை பொறுத்தவரை அது மாணவ பருவம் முடிவுக்கு வரும் நாள் மட்டுமல்ல. தன் வாழ்க்கையில் அடுத்து என்ன என்று அவள் யோசிக்க வேண்டிய நாளும் அது தான்.

 

அவள் அங்கு தேர்வெழுதுவதற்காக மட்டும் வரவில்லை. இந்தரை அவளாக பிரிந்து வந்திருக்கிறாள். அவன் மீது கோபம் கொண்டு வந்திருக்கிறாள். அந்த கோபம் இப்போதும் அவன் மீது இருக்கிறதா என்றால் அதற்கு அவளிடத்தில் எந்த பதிலும் இல்லை.

 

நினைவுகள் மீண்டும் சிக்மங்களூரையே சுற்றி வந்தது. அழகாய் விடிந்த காலைப்பொழுது இந்தரின் கரம் அவளை அணைத்து படுத்திருந்தது.

 

மெதுவாய் அவன் கரம் விலக்கி எழுந்தவள் குளித்து முடித்து வந்த பின்னே தான் அவனை எழுப்பினாள். போர்வையை தலைவரை போர்த்தியிருந்தவனின் போர்வையை அவள் விலக்க அந்த கள்வன் அவளிடம் மாட்டிக் கொண்டிருந்தான்.

 

குழலி அவனைவிட்டு எழுந்து செல்லவுமே அவன் விழித்திருந்தான். நல்ல தரிசனத்தை ஏன் விடுவானே என்று படுத்திருந்தவன் எதிர்பாராதது குழலி அவன் போர்வையை எடுப்பாள் என்று.

“முழிச்சுட்டு இருக்கீங்களா நீங்க??” என்றவள் அவனை முறைத்தாள்.

 

“ஹ்ம்ம்”

 

“எப்போ முழிச்சீங்க??”

 

“நீ என் பக்கத்துல இருந்து எழுந்து போகும் போதே”

 

“அதுக்கு அப்புறமும் எழுந்துக்கலை அப்படின்னா”

 

“ஆமா அப்படித்தான் என் பொண்டாட்டி நான் பார்த்தேன்”

 

“உங்களை…”

 

“என்னை… சொல்லு குழலி என்னை என்ன பண்ணப் போறே”

 

“போங்க…” என்றவள் நகர செல்லும் அவளின் கரம் பற்றி தன் மேல் போட்டுக் கொண்டான் இந்திரஜித்.

 

“விடுங்க”

 

“விட மாட்டேன்… இன்னைக்கு உன்னை விட மாட்டேன்னு நேத்தே உன்கிட்ட சொன்னேன் மறந்திட்டியா”

 

“அச்சோ ஏன் இப்படியெல்லாம் பேசறீங்க. எனக்கு என்னமோ மாதிரி இருக்கு” என்றவள் விலகி எழப் போக “இந்த மாதிரி எஸ்கேப் எல்லாம் கூடாது சொல்லிட்டேன்” என்றவன் அவளை விட்டுவிட பலகணிக்கு சென்றுவிட்டாள்.

 

அதற்குள் ஆத்விக் அழைத்துவிட அவனிடம் பத்து நிமிடத்தில் வந்துவிடுவதாகக் கூறியவன் குளித்து தயாராகி வர இருவரும் குடிலை விட்டு வெளியில் வந்தனர்.

 

அன்று முழுதும் சுற்றிப்பார்ப்பது என்று முன்பே முடிவு செய்திருந்தார்கள் அவர்கள். “இந்தர் நீங்க தனியா போங்க நாங்க தனியா சுத்தி பார்த்துக்கறோம்” என்றார் அவர் இருவருக்கும் தனிமை கொடுக்கும் பொருட்டு.

 

முதல் நாளில் இருந்து பார்க்கிறார் தானே அவர்கள் இருவரையும். ஏதோவொரு மாற்றம் நல்லதான மாற்றம் தெரிந்தது அவர்களிடம்.

 

“அம்மா அதெல்லாம் வேணாம் எல்லாம் ஒண்ணா போலாம்”

 

“எதுக்கு அத்தை எங்களை தனியா போகச் சொல்றீங்க?? மாமாவும் நீங்களும் தனியா இருக்கணுமா அதானா” என்று குழலி கிண்டலாய் சிரிப்புடன் கேட்கவும் “என்னம்மா குழலி இப்படி உண்மையை பொசுக்குன்னு உடைச்சிட்ட, உங்கத்தை அதை தான் நேத்துல இருந்து சொல்லிட்டு இருக்கா” என்றார் ஸ்ரீனிவாசன்.

 

“ச்சு பேசாம இருங்க அவ கூட சேர்ந்து நீங்களும் கிண்டல் அடிக்கறீங்க”

 

“அத்தை அப்போ அதான் உண்மையா” என்றாள் குழலி தொடர்ந்து.

 

“ஆமாடி அப்படித்தான் வைச்சுக்கோ. போங்க போங்க நீயும் உன் புருஷனும் கிளம்புங்க” என்றார் அவர்.

 

அங்கே காதில் புகையுடன் நின்றிருந்த ஒரு ஜீவனின் நிலையை பார்க்க நமக்குமே பரிதாபமாகத் தான் இருந்தது. ‘ஆத்விக் நீ தப்பு பண்ணிட்டே, வெளிநாட்டுல உன் பின்னாடி சுத்தின பொண்ணுல எதையாச்சும் நீ கரெக்ட் பண்ணியிருக்கணும்டா’

 

‘ஆனா அப்படியொரு சம்பவம் தான் நடக்கலையே. எந்த பொண்ணும் தான் என் பின்னாடி வரவேயில்லையே. இந்த அம்மாவும் அப்பாவும் உனக்கு பொண்ணு பார்க்க மாட்டாங்கடா ஆத்விக். பாரு அவங்களே உனக்கு ஆப்பு மேல ஆப்பா வைக்குறாங்க. இவிங்க ஜோடியா தனியா போனா நான் மட்டும் தனியாவே சுத்தணுமா’

 

“ஆத்விக் நீ…”

 

“போதும் போதும் நீங்க எனக்கு பண்ணதெல்லாம் போதும். நீங்க ஜோடியா தனித்தனியா சுத்துங்க. நான் தனியாவே சுத்துறேன்”

 

“டேய் அடுத்த முறை நீ…” என்ற தரங்கிணியிடம் மெல்ல கையை தூக்கி “நிப்பாட்டும்மா அடுத்து எங்க போறது என் பொண்டாட்டி கூடன்னு எல்லாம் நான் பார்த்துக்கறேன். பொண்ணை மட்டும் சீக்கிரமா பார்த்து கட்டி வைக்கிற வழியை பாருங்க” என்றவன் அங்கிருந்து நகர்ந்துவிட்டான்.

 

“என்னடா இவன் இப்படி அவசரப்படுறான்”

 

“விடுங்கம்மா” என்றுவிட்டு தன் மனைவியுடன் கிளம்பிவிட்டான் இந்தரஜித்.

 

“என்னங்க கிளம்பிட்டான்??”

 

“நீ இதுக்கு தானே ஆசைப்பட்டே”

 

“வா நாம போவோம்” என்றவர் தன் மனைவியை தோளோடு அணைத்து சென்றார்.

 

இந்தர் குழலியை நீர்விழ்ச்சியை காண அழைத்துச் சென்றான். சோவென்ற சத்தத்துடன் ஆர்பரித்து கொட்டும் நீரை பார்க்க பார்க்க அதில் சென்று குளிக்க ஆசை வந்தது அவன் மனைவிக்கு.

 

“குளிக்கலாமா” என்றாள் ஆசையாய்.

 

“டிரஸ் எடுத்திட்டு வரலையே”

 

“பரவாயில்லை காஞ்சுடும்”

 

“செம குளிரா இருக்கு நீ தண்ணியில குளிக்கறேன்னு சொல்றே. வேணாம் குழலி சளி பிடிச்சிக்க போகுது” என்றான்.

 

“ப்ளீஸ் ப்ளீஸ்” என்று பல ப்ளீஸ் போட்டு அவன் சரியென்று சொன்னது தான் தாமதம் வேகமாய் பெண்கள் குளிக்கும் பகுதிக்கு சென்று கொட்டும் அருவியில் குதூகலமாய் நனைந்தாள் அவள்.

 

இந்தர் அவளுடன் செல்லவில்லை. அவன் பார்வை முழுதும் தன் மனைவியின் மீதே இருந்தது. அவள் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சியில் அவன் முகமும் மலர்ந்தது. கடந்த இரண்டு வருடத்தை இது போல அனுபவிக்கவில்லை என்ற ஆதங்கம் எழுந்தது அவனுக்கு.

 

தவறு அவள் மீது மட்டுமல்ல அவன் மீதும் தானே இருக்கிறது. அவளைப் புரிந்து தானும் நடந்திருக்க வேண்டும் தானே. முடிந்தது முடிந்ததாகவே இருக்கட்டும், நடப்பது அனைத்தும் நன்மைக்கே என்று எண்ணிக் கொண்டான்.

 

மொத்தமாய் நனைந்து நின்றிருந்தவளை பார்த்து வா என்பது போல் இவன் கையாட்ட திரும்பி நின்றிருந்தவள் இவனை கவனிக்கவில்லை. அவன் பார்வை மனைவியை விட்டு இம்மியும் நகரவில்லை, அருகே யாரோ “இந்தர்” என்று அழைக்கும் வரை தொடர்ந்தது.

 

அப்போதும் கூட அவள் மீதிருந்த பார்வையை விலக்க பிரியப்படாதவனாய் மெல்ல திரும்பியவனின் புருவம் சுருங்கியது, கண்கள் இடுங்கியது எதிரில் இருந்தவளைப் பார்த்து.

 

“எப்படியிருக்கே இந்தர்??”

“ஹ்ம்ம் இருக்கேன்” என்றான் அவன் எங்கோ பார்த்துக் கொண்டு.

 

“நான் இங்க இருக்கேன் இந்தர் நீ எங்கயோ பார்க்குறே”

 

“உன்னை பார்க்க என்ன இருக்கு சொல்லு”

 

“ஐ யம் சிங்கிள் நவ்”

 

“சோ வாட்??”

 

“வில் யூ மேரி மீ” என்று அவள் கேட்கவும் அப்படியொரு கனல் பார்வை அவனிடத்தில்.

 

“உன் புருஷன் ஒத்துக்குவானா??” என்றான் அடக்கப்பட்ட நிதானமான குரலில்.

 

“நான் சொன்னதை நீ சரியா கவனிக்கலைன்னு நினைக்கிறேன். நான் இப்போ தனியா தான் இருக்கேன், நாங்க பிரிஞ்சுட்டோம். உன் பேச்சை நான் கேட்காம கல்யாணத்துக்கு அவசரப்பட்டது தான் என்னோட தப்பு”

 

“அதுக்கு தான் இப்போ இப்படி நிக்கறேன். எனக்கு தெரியும் யூ ஸ்டில் லவ் மீன்னு”

 

பல்லைக் கடித்தவாறே “ஆஹான் எங்கே இந்த பக்கம்??” என்றான்.

 

“மனசு சரியில்லை அதான் இங்க வந்தேன்”

 

“நான் எதுக்கு வந்திருக்கேன் தெரியுமா”

 

“நீயும் என்னை மாதிரியே மனசு சரியில்லாம வந்தியா??”

 

“இல்லை ஹனிமூன் கொண்டாட வந்தேன்”

 

“இந்தர்!!” என்றாள் அப்பெண் அதிர்ந்து.

 

அவள் ரம்யா, இந்தருடன் கல்லூரியில் பயின்றவள். இந்தருக்கு கல்லூரி காலத்தில் இருந்தே அறிவியலின் மீது அதீத ஈடுபாடு இருந்தது. எந்தவொரு பரிசோதனை செய்வதென்றாலும் ஆய்வென்றாலும் முதல் ஆளாய் அவன் தானிருப்பான்.

 

ஏரோனாடிக்கல் எஞ்சினியரிங் முடித்ததும் தனியாக வேறு சில படிப்பையும் முடித்தவன் அந்த வருடம் இஸ்ரோவில் தற்காலிக பணிக்காக ஆட்கள் தேர்ந்தெடுக்க நடத்தப்பட்ட தேர்வுகளில் கலந்துக்கொண்டு தேர்வாகியிருந்தான்.

 

கல்லூரியில் தான் ரம்யா அவனுக்கு பழக்கமானாள். அவள் வேறு பிரிவு அவன் வேறு பிரிவு முதல் வருடம் மட்டும் அனைவருக்கும் ஒன்றே என்பதால் அப்போதிருந்து அவளைப் பார்த்திருந்தான்.

 

அவளுக்கும் அவனை பிடித்திருந்தது. காதல் இருந்ததே தவிர பெரிதாய் அவளுடன் ஊர் சுற்றி என்றெல்லாம் அவன் பொழுதை கழிக்கவில்லை. படிப்பு முடிந்ததுமே அவளிடம் சொல்லிவிட்டான் அவனின் லட்சியம் பற்றி.

 

“ரம்”

 

“ஹ்ம்ம்” என்றவள் அவன் கரத்துடன் கரம் கோர்த்திருந்தாள்.

 

“என்னைப்பாரு”

 

“சொல்லுடா” என்றவள் அவனைப் பார்த்தவாறே அமர்ந்தாள்.

 

“நான் இஸ்ரோல வேலைக்கு ட்ரை பண்றேன்”

 

“தெரியும்டா அதையே எத்தனை தடவை தான் சொல்வே. அப்துல் கலாம் அய்யாவை பார்த்து உனக்கும் அந்த ஆசை வந்துச்சுன்னு நீ சொல்லி சொல்லி அதை நான் கேட்டு கேட்டு என் காது ஜவ்வே கிழிஞ்சு போச்சு பாரேன்”

 

“ம்ப்ச் சொல்றதை கேளு”

 

“சரி சொல்லு”

 

“அங்க வேலைக்கு சேர்ந்த பிறகு தான் எதுனாலும். இனிமே அடிக்கடி நம்ம கல்யாணம் எப்போ எப்போன்னு கேட்காதே சரியா”

 

“கேட்கலை விடுப்பா, சரியான சாமியார்டா நீ”

 

“ஏய் எதுக்கு அப்படி சொல்றே??”

 

“பின்னே ஒரு ஹக் பண்ணியிருக்கியா. இல்லை கிஸ் தான் அடிச்சிருப்பியா, எல்லாத்தையும் நானே கொடுக்க வேண்டியதா இருக்கு”

 

“அதெல்லாம் நம்ம கல்யாணத்துக்கு பிறகு வட்டியும் முதலுமா சேர்த்து வாங்கிக்கோ”

 

“எப்போமே பொண்ணுங்க தான் எல்லாம் கல்யாணத்துக்கு அப்புறம்ன்னு சொல்வாங்க. நம்ம கதையில எல்லாம் தலைகீழ போடா நீயும் உன் லட்சியமும்” என்றாள் அவள் கிண்டலாய்.

 

அப்போது அனைத்திற்கும் சரி சரியென்று தலையாட்டியவள் அவனுக்கு வேலை கிடைக்கும் முன்னேயே அவனிடம் அவளின் கல்யாண பத்திரிக்கையை கொண்டு வந்து நீட்டியிருந்தாள்.

 

சத்தியமாய் இந்திரஜித் அதை எதிர்பார்த்திருக்கவில்லை. “என்ன இது??”

 

“என்னோட மேரேஜ் இன்விடேஷன்”

 

“சோ நீ என்னை நம்பலை. என்கிட்ட ஏன் முன்னாடியே சொல்லலை??”

 

“நான் இதுல செய்ய எதுவுமே இல்லை இந்தர். வீட்டில தான் எல்லாமே டிசைட் பண்ணாங்க. உனக்கு தான் அப்பா பத்தி தெரியுமே”

 

“நம்ம லவ் மேட்டர் கூட உங்கப்பாக்கு எப்பவோ தெரியும் தானே. புதுசா எனக்கு எதுக்கு ரம்யா காதுக்குத்துறே. உனக்கு கல்யாணம் அவ்வளவு தானே, போ போய் நல்லா இரு” என்று சிம்பிளாக முடித்துவிட்டிருந்தான்.

 

நான்கைந்து வருடமாகியிருந்தது அதற்கு பிறகு இப்போது தான் அவளைப் பார்க்கிறான். இந்தர் தேனிலவுக்கு வந்ததாய் சொன்னதை கேட்டதுமே அவள் முகம் இருண்டிருந்தது.

 

“இந்தர் நீ நிஜமா தான் சொல்றியா. நான் கேள்விப்பட்டேன் நீ தனியா தான் இருக்கேன்னு. ரெண்டு வருஷம் முன்னாடி நான் பாரீன் போக முன்ன நம்ம அசோக் கூட சொன்னானே. நீ என்னோட நினைப்பாவே இருக்கேன்னு”

 

“நான் தனியா இருந்தேன்னு வேணா சொல்லியிருப்பான் உன்னோட நினைப்பாவேன்னு அவன் சொல்லியிருக்க மாட்டான்”

 

“இந்தர்!!”

 

“என்கிட்ட நீ என்ன எதிர்பார்க்கிறே ரம்யா??”

 

“நீ என்னை ஏமாத்திட்டடா??”

 

“அதை என்னைப் பார்த்து சொல்லாத கண்ணாடி பார்த்து நீயே சொல்லிக்கோ. இப்போ எனக்கு வழியை விடு” என்றான் சிடுசிடுப்பாய்.

 

“எதுக்கு இப்போ எரிஞ்சு விழுறே?? எங்கே உன் பொண்டாட்டி அவளை காட்டு??”

 

“உனக்கு ஏன் அவளை காட்டணும்??”

 

“அப்போ நீ பொய் சொல்றியா??”

 

“அப்படியே வைச்சுக்கோ”

 

“நீ ஹனிமூன் வந்தேன்னு சொன்னது பொய் தானே”

 

“அவ இங்க தான் இருக்கா”

 

“எங்கே??”

 

“எதுக்கு கேட்குறே??” என்றான் எரிச்சலான குரலில்.

 

“நீ பொய் சொல்றியா உண்மை சொல்றியான்னு தெரிஞ்சுக்கணும் எனக்கு”

 

“உன்கிட்ட எதையும் எனக்கு நிரூபிக்க தேவையில்லை”

 

“அப்போ நீ பொய் தான் சொல்றே” என்றாள் மீண்டும்.

 

“இந்தர் நான் ஒரு முறை அவளை பார்க்கணும் ப்ளீஸ்” என்றாள் சட்டென்று இறங்கி வந்து.

 

‘சரியான இம்சை’ என்று சபித்தவன் “அங்கே பாரு” என்றுவிட்டு தன் மனைவியை பார்வையால் துழாவினான்.

“எங்க பார்க்கணும்??” என்று அவள் காட்டிய ஆர்வத்தில் எரிச்சலானவன் “அங்க” என்று இவன் கைக்காட்டிய திசையில் குழலி இல்லை. அவன் பார்வை தன் மனைவியை தேட இவளோ “சோ யூவர் லையர், இட்ஸ் ப்ரூவ்ட்”

 

“போடி” என்றுவிட்டு நகர குழலி தன் புடவையை சற்று தூக்கிப்பிடித்து காய வைத்துக் கொண்டிருந்தாள் சற்று தள்ளி.

 

நிம்மதி பெருமூச்சுடன் அவளைத் தேடிச் செல்ல அவளோ கடுகடுவென்றிருந்தாள்.

Advertisement