Advertisement

 

2

குழலி வைத்துவிட்டு சென்றிருந்த காப்பியை தூக்கி எறிய மனமில்லாது அருந்தினான் இந்தர். முதல் நாள் காலையில் சாப்பிட்டது தான் அதன் பின்பு உணவென்பதே இறங்கியிருக்கவில்லை அவனுக்கு.

 

காலையில் அவன் அலுவலகம் கிளம்பிக் கொண்டிருக்கும் போது அவன் அன்னையிடம் இருந்து அழைப்பு வந்தது.

 

“சொல்லுங்கம்மா” என்றவாறே போனை எடுத்து காதில் வைத்திருந்தான்.

 

“எப்பா இந்தர் ஆத்தாவுக்கு ரொம்பவும் சீரியஸா இருக்கு. இன்னைக்கோ நாளைக்கோன்னு இழுத்திட்டு இருக்கு, அது மனசுல உன்னைய பார்க்கணும்ன்னு இருக்கோ என்னவோ”

 

“வாரவுக பூரா உன்னையத்தான் கேக்குறாக ஒரு எட்டு வந்து பார்த்துட்டு போய்யா” என்றார் தரங்கிணி.

 

லலிதாம்பிகாவிற்கு உடல் நலம் குன்றியதில் இருந்தே தரங்கிணியும், இந்தரின் தந்தையும் பெரியாத்தாவின் மூத்த மகனுமாகிய ஸ்ரீனிவாசனுக்கும் அங்கு தான் ஜாகையே.

 

ஸ்ரீனிவாசனின் தம்பி வெங்கடேசன் லலிதாம்பிகாவுடன் தான் இருந்தார். அவர்களுக்கு ஒரே ஒரு தங்கை அடுத்த ஊரில் தான் அவர் கணவருடன் வசித்து வருகிறார்.

 

பத்து நாட்களுக்கு ஒருவராக வந்து பார்த்துக் கொண்டிருந்தனர் பெரியாத்தாவை. கடந்த பதினைந்து நாட்களாகத் தான் லலிதாம்பிகாவின் உடல் மேலும் சீர்கெட ஆரம்பித்திருக்க அனைவருமே அங்கிருந்தனர்.

 

பிள்ளைகள் மட்டும் படிப்பு, வேலை என்று இருந்துவிட பெரியவர்கள் மட்டுமே பெரியாத்தாவின் வீட்டில். அத்தையின் மக்கள் பள்ளி செல்லும் பிள்ளைகள் என்பதால் அவர்கள் மட்டும் அங்கிருந்தவாறே பள்ளிக்கு சென்று வந்தனர்.

 

கண்ணை மூடி ஓரிரு நிமிடங்கள் உணவு மேஜையிலேயே அமர்ந்துவிட்டிருந்த இந்தரை பெரியாத்தாவின் நினைவுகளே ஆக்கிரமித்திருந்தது.

 

பெரிதாய் அவருடன் அவனுக்கு ஒட்டுதல் இல்லையென்றாலும் வீட்டிற்கு முதல் வாரிசு என்பதால் பெரியாத்தாவிற்கு அவன் மீது தனி பிரியமே இருந்தது.

 

அதை அவ்வப்போது அவரின் செயலில் அவனுக்கு உணர்த்திக் கொண்டு தானிருந்தார் அவர். சிறு வயதில் அவரிடம் ஒட்டுதலுடன் இருந்தவன் ஒரு வயதிற்கு பின்பு படிப்பு என்று வந்தபின் அவன் கவனத்தை முழுதாய் அதில் திருப்பியிருந்தான்.

 

ஸ்ரீனிவாசனுக்கும் வேறு ஊருக்கு மாற்றல் என்பதால் பிள்ளைகளுடன் அவர் அவ்வூருக்கு குடி பெயர்ந்திருந்தார்.

 

அதன் பின்பு விடுமுறை தினங்களில் ஊருக்கு வந்தாலும் முன்பு போல அதிக நாட்கள் தங்குவதை அவன் விரும்புவதில்லை. “ரொம்ப வெயிலா இருக்கும்மா இங்க, எப்போ ஊருக்கு போகலாம்” என்று தரங்கிணியை அரித்து எடுத்து நான்கே நாட்களில் ஊருக்கு கிளம்பி விடுவர். லலிதாம்பிகாவிற்கு தான் பேரனின் செயலில் மனம் வாடிப்போகும்.

 

இந்தர் தலையை உலுக்கிக்கொண்டு எழுந்து நின்றிருந்தான். பெரியாத்தாவைப் பற்றிய நினைவுகளுக்கு தற்காலிகமாக தடைப்போட்டு அவன் அலுவலகத்திற்கு போன் செய்தான்.

 

அவன் ஊருக்கு வந்து சேர நள்ளிரவுக்கு மேலாகியிருந்தது. அவனின் தம்பி ஆத்விக் வெளிநாட்டில் இருந்ததால் அவனால் வரமுடியவில்லை அங்கு. கிட்டத்தட்ட அனைவருமே அங்கு இருந்ததை கண்டதுமே அவனுக்கு எதுவோ உறைத்தது.

 

“நீ போய் ஆத்தாவை பாரு இந்தரு” என்றார் அவன் தந்தை.

 

பதிலேதும் சொல்லாது பெரியாத்தாவின் அறைக்குள் நுழைந்திருந்தான் அவன். வெகு மாதங்கள் கழித்து அவரை பார்க்கிறான், ஆளே உருக்குலைந்து போயிருந்தார் அப்பெண்மணி.

 

அருகே சென்று அவரருகே அமர்ந்தவன் சுருக்கங்கள் விழுந்திருந்த அவரின் கையை எடுத்து தன் கைகளுக்குள் அடக்கிக்கொண்டு அதிலேயே கண்ணை மூடி சில நிமிடங்கள் அமர்ந்திருந்தான். எதுவோ அடைக்கும் உணர்வு அவனுக்கு.

 

எப்போதும் அவனை எந்த உணர்வுகளுமே பெரிதாய் ஆட்கொண்டதில்லை. எந்த உணர்வுகளுக்கும் அவன் மனதில் பெரிதாய் அவன் இடமே கொடுத்ததுவுமில்லை. யாரிடமும் அன்பாய் அவன் பேசி யாருமே பார்த்திருக்க மாட்டர்.

 

அவன் குணமே அப்படித்தான் அதிகம் யாரிடமும் வைத்துக்கொள்ள மாட்டான். ஏனோ பெரியாத்தாவை இப்படி பார்க்கையில் உள்ளிருந்து ஏதோவொரு உணர்வு எழுந்து அவன் தொண்டை குழியை அடைத்தது மட்டும் உண்மை.

 

சில நொடிகள் தான் அந்த உணர்வுகளை கட்டுக்குள் கொண்டு வந்தவன் அவர் கரம் விடுவித்து எழுந்து நின்று அவரை பார்த்துவிட்டு வெளியே சென்றுவிட்டான். அவன் மொட்டை மாடிக்கு வந்திருக்க பின்னாலேயே ஓடி வந்திருந்தாள் அவனின் அத்தை மகள் வாணி.

 

அவள் விஷயத்தை சொல்லும் முன்பே வீட்டினரின் அழுகுரல் நடந்ததை அவனுக்கு சொல்லியிருக்க மனதில் பாரம் கூடியிருந்தது அவனுக்கு.

 

அவனுக்காகவே அந்த உயிர் காத்திருந்தது போல அவனை கண்ட மாத்திரத்தில் அவ்வுயிர் பிரிந்து சென்றிருந்தது போலத்தான் இருந்தது. அப்போதிலிருந்து அந்த மொட்டை மாடியை விட்டு அகலாதிருந்தவன் தான், குழலியின் வருகைக்கு பின்பே வாயை திறந்திருந்தான்.

 

யாரோ படியேறி வரும் அரவம் கேட்டது. அவன் எழுந்து நின்றிருக்க வந்தது அவனின் சித்தி கமலா. “என்னப்பா இப்படியே உட்கார்ந்தா எப்படி காலாகாலத்துல எல்லாம் நடக்க வேணாமா. கீழே இறங்கி வாப்பா”

 

“வீட்டுக்கு மூத்த பேரன் இல்லையா. உன் தம்பி என்னமோ இங்க இல்லாத படிப்புன்னு வெளிநாட்டுக்கு போய் படிக்க போய்ட்டான். நீ தானே நெய் பந்தம் பிடிக்கணும், விரசா வா, வேலை கிடக்கு”

 

“வர்றேன் நீங்க போங்க சித்தி” என்றுவிட்டு அவன் இறங்கி சென்ற ஐந்து நிமிடம் கழித்து அவன் இறங்கினான்.

 

உடம்பு சரியில்லாமல் அவர் இறந்ததினால் வெகு நேரம் வைத்திருக்க விரும்பவில்லை. கிட்டத்தட்ட அனைத்து சொந்தங்களும் அவ்வூரிலேயே இருந்ததினால் மளமளவென்று வேலையை ஆரம்பித்திருந்தனர்.

 

அடுத்த ஒரு மணி நேரத்தில் சடங்குகள் ஆரம்பித்திருக்க இந்தரின் தந்தை ஸ்ரீனிவாசன் தான் அனைத்தும் செய்துக் கொண்டிருந்தார். அவருக்கு மொட்டை அடிக்கப்பட்டு மீசை மழிக்கப்பட்டு வெள்ளை வேட்டியுடனும் நெற்றியில் பட்டையுடனும் நின்றிருந்தார் அவர்.

 

வாய்க்கரிசி போடச்சொல்லி சொல்ல ஒவ்வொருவராய் பெரியாத்தாவின் சுற்றி வந்துக் கொண்டிருந்தனர். “குழலி நீயும் போ இந்தர் போயிட்டு இருக்கான், அவன் பின்னாடியே போ” என்று உறவுகள் குரல் கொடுக்க கார்குழலி அந்நொடியில் எதுவும் சொல்ல முடியாமல் அவளும் உடன் சென்றாள்.

 

எல்லாம் முடிந்து அவரின் உடலை தூக்கிக்கொண்டு எழவும் என்ன தோன்றியது கார்குழலிக்கு அப்படியொரு அழுகை வர ஓவென்று அழுதாள்.

 

அதுவரையில் ஒரு சொட்டு கண்ணீரை கூட அவள் சிந்தியிருக்கவில்லை. இறுமாப்புடன் அவள் அமர்ந்திருந்த தோற்றம் மற்றவர்களுக்கு அவள் மேல் கோபத்தை கூட வரவழைத்திருந்தது.

 

அதற்கு நேர்மாறாய் அழுது தீர்த்தவளை கண்டு தாய் மனம் பொறுக்காது கயல்விழி மகளை மடி தாங்கிக் கொண்டார். இந்திரஜித் நடப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான்.

 

“உன்னை பார்க்கக்கூடாது உன் கூட பேசக்கூடாதுன்னு இருந்தவளை பார்க்கவும் பேசவும் வைச்சுட்டல்ல நீ வைராக்கியகாரி தான் ஆத்தா. நீ ஜெயிச்சுட்ட, என்னை அழவும் வைச்சுட்டல்ல” என்று சொல்லி சொல்லி அழுதவளை பார்த்தவருக்கும் கண்ணீர் வழிந்தது.

 

அவளை சமாதானம் செய்யவே முடியவில்லை யாராலும். அவளை குளிக்க வைத்து வீட்டை அலசிவிட்டு தானும் குளித்து வந்து மகளருகே அமர்ந்த கயல்விழியை மெல்ல ஏறிட்டாள் மகள்.

 

பின் அவரின் மடியில் தலை வைத்து படுத்துக் கொண்டவள் “அம்மா நம்ம வீட்டுக்கு போகலாம்மா” என்று சொல்ல திக்கென்று ஆகிப் போனது அத்தாய்க்கு.

 

தன் மகளுக்கு ஏதோ ஒரு நல்லது நடக்கப் போகிறது. அவரின் பெரியாத்தா அதை நடத்தி முடித்து தான் சென்றிருக்கிறார் என்று அவர் எண்ணியிருக்க அதெல்லாம் இல்லை என்பது போலிருந்தது மகளின் செய்கை.

 

அவர்களின் பேச்சை தடை செய்வது போல வந்து சேர்ந்தார் தரங்கிணி. “குழலி கொஞ்சம் என் கூட வாயேன். என்னால ஒத்தையில வேலை செய்ய முடியலை. நான் என்னமோ அவ சொத்தை சுருட்டிட்டு போய்ட்ட மாதிரி மூஞ்சியை தூக்கி வைச்சுட்டு இருக்கா உன் சின்னத்தை”

 

“என்னால முடியலை நீ வா” என்று அவர் அழைக்கவும் மறுக்காது எழுந்து சென்ற மகளை என்ன சொல்ல என்பது போல பார்த்திருந்தார் கயல்விழி.

 

அவள் அப்புறம் கூட்டிச் சென்ற தரங்கிணி அவளுக்கு வேலைக்கொடுத்துவிட்டு மீண்டும் உள்ளே வந்தார். “ஏன் மதினி உனக்கு உன் பொண்ணு வாழ்க்கைப்பத்தி கவலையே இல்லையா”

 

“நீ பாட்டுக்கு அவளை மடியில போட்டு கொஞ்சிக்கிட்டு கிடக்க, நானே ஏதோ நல்லது நடந்தா சர் தான் இருந்தா. நீ அதெல்லாம் நடக்க விடாம பண்ணிடுவ போல” என்றார் கயல்விழியிடம்.

 

“எனக்கு மட்டும் அந்த ஆசை இல்லையா. என்னைய மாதிரி என் பொண்ணு ஒத்தையில நிக்கணும்ன்னு எந்த ஆத்தாவும் நினைக்க மாட்டா. எங்க பெரியாத்தா புண்ணியத்துல நல்லது நடந்திடாதான்னு நானும் தவிச்சு போய் தான் இருக்கேன் மதினி அவளைப் பார்த்துக்கோங்க நீங்க” என்று சொல்லும் போது கயல்விழியின் விழியில் கண்ணீர் அரும்பியிருந்தது.

 

“மதினி எதுக்கு அழுதிட்டு, அத்தை எல்லாருக்கும் நல்லது தான் செய்வாக. சும்மா வருத்தப்படாதீக, எல்லாம் சரியாப் போவும். நான் போய் குழலியை பாக்குறேன்” என்றுவிட்டு நகர்ந்திருந்தார் தரங்கிணி.

 

எல்லா வேலையும் முடித்துவிட்டு மீண்டும் தாயிடம் வந்த கார்குழலி “அம்மா வீட்டுக்கு போகலாம்” என்று ஆரம்பித்த இடத்திலேயே வந்து நிற்க அய்யோவென்றிருந்தது அத்தாய்க்கு.

 

“குழலி” என்ற குரல் கேட்க “அத்தை நீ இங்க வா முதல்ல” என்று இவள் பதில் குரல் கொடுத்தாள் அதிகாரமாய்.

 

“என்ன குழலி??” என்றவாறே தரங்கிணி வர “நீ உன் மனசுல என்ன நினைச்சுட்டு இருக்கே??” என்றாள் மற்றவள்.

 

“நீ என் மருமகன்னுநினைச்சுட்டு இருக்கேன்”

 

“ஓஹோ அப்புறம் வேறென்ன நினைப்பிருக்கு உனக்கு”

 

“வேறென்ன நீ என் புள்ளையோட பொண்டாட்டின்னு நினைப்பிருக்கு” என்று தரங்கிணி சொல்லவும் “அப்படியொரு நினைப்பிருந்தா அதை அப்படியே பெரியாத்தாவோட சேர்த்து குழியில புதைச்சாச்சுன்னு நினைச்சுக்கோ”

 

“சும்மா சும்மா என்னை உங்க புள்ளையோட வந்து வாழுன்னு சொன்னீங்க. நானும் பெரியாத்தா கூடவே போய் சேர்ந்திடுவேன்” என்றவள் அன்னை அவளுடன் வருகிறாரா இல்லையா என்றெல்லாம் பார்க்கவில்லை கிளம்பிவிட்டிருந்தாள் வீட்டிற்கு.

Advertisement