Advertisement

 

19

அவள் திருவாதவூருக்கு வந்த பின்னே இந்தர் அவளுக்கு அழைக்கவேயில்லை. அவளுமே அவனிடம் பேசவில்லை. தரங்கிணி மட்டும் அவ்வப்போது அவளுக்கு அழைத்து பேசுவார்.

 

‘வாழ்க்கை ஒரு வட்டம் தான் போல திரும்பவும் ஆரம்பிச்ச இடத்துக்கே வந்து நிக்குது’ என்று விரக்தியாக எண்ணினாள் குழலி.

 

முதல் நாள் பரிட்சை முடிந்து வீட்டுக்கு வந்திருவளின் எண்ணத்தை இந்தர் தான் ஆக்கிரமித்திருந்தான். சிக்மங்களூரில் நடந்த நிகழ்வுகள் அனைத்தும் சுகமாயும் சோகமாயும் அவளுக்குள் ஒருங்கே வலம் வரத்துவங்கியது.

 

இந்தர் சட்டென்று அவளை தூக்குவான் என்று எதிர்பாராதிருந்தவளின் அதிர்ந்த பார்வையை சிரிப்புடன் நோக்கினான் அவள் கணவன்.

 

“கீழே இறக்கி விடுங்க” என்றாள் திக்கிக்கொண்டே!!

 

“ஹ்ம்ம் இறங்கலாம் இறங்கலாம்” என்றான் அவன் சுவாதீனமாய்.

 

“ப்ளீஸ் எனக்கு என்னமோ மாதிரி இருக்கு” என்றாள் உள்ளே சென்ற குரலில்.

 

இந்தர் அவளை கட்டிலில் இறக்கிவிட அங்கிருந்து இறங்கி அப்படியே ஓடிவிடலாமா என்று தோன்றியது அவளுக்கு. அப்படி செய்தால் ஏதோ சினிமாத்தனமாக இருக்காது என்று எண்ணியவள் அவன் இறக்கிவிட்ட வாக்கிலேயே அப்படியே அமர்ந்திருந்தாள் எப்புறமும் நகராது.

 

சினிமாவில் வில்லன் கதாநாயகியை கட்டிலில் இறக்கிவிட்டு அவளை பலாத்காரம் செய்யும் காட்சி எல்லாம் கண்ணுக்குள் ஓடி அவளை மேலும் கலவரப்படுத்திக் கொண்டிருக்க இந்தரின் முகம் அவளுக்கருகே.

 

முத்தம் கொடுக்கும் நெருக்கம், அவனை தடுக்கும் வழியறியாது கண்களை இறுக மூடிக்கொண்டாள் அவள். மூடிய இமைகளின் மீது ஈரம் படியவும் சட்டென்று கண் விழிக்க இந்தர் அவள் மூடியிருந்த இமையின் மீது முத்தம் வைத்தது புரிந்தது.

மனதில் தோன்றிய சஞ்சலமும் பயமும் மெல்ல அகல வெட்கமும் நாணமும் மெல்ல அவளுக்குள் உற்பத்தியாகிக் கொண்டிருந்தது.

 

“பயந்துட்ட போல” என்றவனின் கேள்விக்கு ஆமென்றா பதில் சொல்ல முடியும் என்ன நினைப்பான் அவளை என்று தோன்ற பேசாது அமர்ந்திருந்தாள்.

 

“நோ வொரிஸ் எதையும் உன் விருப்பம் இல்லாம செய்ய மாட்டேன்”

 

“கல்யாணம் பண்ணும் போது என் விருப்பம் கேட்கலை நீங்க”

 

“தட்ஸ் யூவர் பால்ட், நாம பண்ணது லவ் மேரேஜ் இல்லை. அரேன்ஜ் மேரேஜ். எங்க வீட்டில என்னை கேட்டு தான் கல்யாணம் பண்ணி வைச்சாங்க. உனக்கும் அப்படித்தான்னு நினைக்கிறேன்” என்றவன் சொல்லவும் வாயை மூடிக் கொண்டாள்.

 

‘உனக்கு வாய் அதிகம்டி குழலி’ என்று தன்னையே திட்டிக் கொள்ளவும் செய்தாள்.

 

“நிஜமாவே நீ பயந்துட்டே தானே. நான் அப்படியே உன் மேல பாஞ்சிடுவேனோன்னு”

 

“இல்லை அப்படியில்லை”

 

“ரொம்ப டயர்டா இருக்கு வண்டி ஓட்டினது, நீ எதிர்பார்த்தது இன்னைக்கு இல்லை பயப்படாதே. நாளைக்கு தான் அது, பீ ரெடி” என்று அவள் விழிகளோடு உறவாடிக் கொண்டே சொல்ல அவள் முகத்தில் அக்கணமே செம்மையேறியதை திருப்தியுடன் பார்த்து ரசித்தான் அவள் கணவன்.

 

அவள் மேல் படர்ந்தவாறே கட்டிலின் உள்ளே ஏறி அவன் படுக்க அவளுக்கு ஒரு கணம் மூச்சு முட்டிப்போனது. அவன் முழுதாய் அவள் மீது படர்ந்திருக்கவில்லை ஆனால் அவன் மூச்சுக்காற்று முழுதும் அவளை வெம்மையாக்கியது உண்மையே.

 

அவன் நகரவும் இழுத்து பிடித்த மூச்சை மெல்ல வெளியேற்றினாள். அந்நேரமே படுக்க வேண்டும் என்றெல்லாம் இல்லை, ஆனால் இயல்பு போல அவனருகே படுத்தவளும் உறங்கிப் போயிருந்தாள்.

 

இருவருடைய அலைபேசியும் மாற்றி மாற்றி அடித்துக் கொண்டிருக்க அடித்துப் போட்டது போல உறங்கியவர்கள் இன்னமும் எழுந்திருக்கவில்லை. அருகே கிடந்த தலையணையை அணைப்பதாய் எண்ணி இந்தரை அணைத்து படுத்திருந்தாள் குழலி.

 

நேரம் செல்லச் செல்ல குளிர் வேறு தாக்க அவன் அருகாமை அவளுக்கு இதத்தை கொடுத்திருக்க வேண்டும். அதனாலேயே அவனிடம் மேலும் மேலும் ஒண்டினாள்.

 

விடாது அடித்த அலைபேசியின் ஒலி ஒருவழியாய் இருவரில் ஒருவரின் உறக்கத்தை மெல்ல கலைக்க கண்களை திறவாமலே கையால் அலைபேசியை துழாவியன் அதிர்ந்து கையை விலக்கி கண்ணைத் திறந்து பார்த்தவன் ஆனந்த அதிர்ச்சியடைந்தான்!!.

 

குழலி அவனை நெருங்கி அணைத்திருந்தாள், இந்தரும் இப்போது தன் கரம் கொண்டு அவளை இறுக்கிக் கொண்டான். சற்று தள்ளி விடாது அடித்துக் கொண்டிருக்கும் அலைபேசி அவன் எண்ணத்தில் இருந்து தூரத்தில் சென்றது.

 

இம்முறை அவன் அலைபேசி தன் சத்தத்தை நிறுத்திவிட குழலியின் அலைபேசி சத்தத்தை எழுப்பிக் கொண்டிருந்தது, என்னை எடுக்கற வரை நான் ஓயமாட்டேன் என்பது போல் அது தொடரவும் ஒரு சலிப்போடே எட்டி போனை எடுத்து காதில் வைத்தான் இந்தர்.

 

ஆத்விக் தான் அழைத்திருந்தது. “என்னடா” என்றான் சலிப்போடு.

 

“உங்களுக்கு சாப்பிடுற எண்ணமே இல்லையா??”

 

“பசிக்கலைடா உங்களுக்கு பசிச்சா நீங்க சாப்பிடுங்க. நான் போனை வைக்குறேன்” என்ற இந்தரின் குரலை ஆத்விக்கின் குரல் தடுத்தது.

 

“அண்ணா ஒரு நிமிஷம் என்னை பேசவிடு”

 

“என்னடா”

 

“நாங்க மதிய சாப்பாடு எல்லாம் முடிச்சாச்சு”

“முடிச்சிட்டீங்கல்ல அப்போ போய் படுத்து தூங்குங்க, இல்லைன்னா போய் சுத்தி பாருங்க”

 

“டேய் அண்ணா என்னை பேசவிடுடா முதல்ல” என்று எதிர்முனை கத்த சற்றே அடங்கினான் இந்தரஜித்.

 

“இப்போ மணி என்னன்னு தெரியுமா, நைட் டின்னர் டைம் ஆச்சு. இன்னும் தூங்கிட்டு இருந்தா அர்த்த ராத்திரியில உங்களுக்கு பசிக்கும். அப்புறம் நீ கண்ணே மணியேன்னாலும் உனக்கு சோறு கிடைக்காது பார்த்துக்க” என்று ஆத்விக் சொல்லவும் சட்டென்று எழுந்து அமரப்போனவனை இன்னமும் அணைத்து பிடித்திருந்தவளின் அருகே மீண்டும் இறங்கி படுத்தான் அவன்.

 

“சரி நாங்க கொஞ்ச நேரத்துல வர்றோம்” என்றுவிட்டு போனை வைத்தவன் அருகே படுத்திருந்தவளின் நெற்றியில் மென்மையாய் இதழ் பதித்தான்.

 

“குழலி எழுந்திரு” என்று மெல்ல அவள் காதோடு சொன்னான்.

 

அவளிடம் லேசாய் அசைவு தெரிந்தது. ஆனாலும் உறக்கம் அவள் கண்ணைவிட்டு சென்றிருக்கவில்லை ஆதலால் கண் திறவாமல் படுத்திருந்தாள்.

 

“சாப்பாடு கூட வேணாமா நான் மட்டும் போதுமா” என்று அவளருகே குனிந்து அவன் சொல்லவும் மூடியிருந்த சிப்பி இமைகள் பட்டென்று திறந்து கொண்டது.

 

‘என்ன பண்ணிட்டு இருக்க குழலி, அவரை கட்டிப்பிடிச்சிட்டு தூங்குற. மானத்தை வாங்குறியே’ என்று தன்னையே நொந்துக் கொண்டு அவள் எழுந்து அமர்ந்திருந்தாள்.

 

“மணி என்ன??”

 

“தெரியலை”

 

“இருட்டின மாதிரி தெரியுது”

 

“ஹ்ம்ம் இருட்டி தான் போச்சு” என்று அவன் சொல்லவும் அவள் அலைபேசியை தேட இந்தர் அவளிடம் அதை நீட்டவும் யோசனையாய் அவனை ஏறிட்டாள்.

 

“நம்ம ரொம்ப நேரமா தூங்கிட்டோம் போல. ஆத்விக் உனக்கும் எனக்கும் மாத்தி மாத்தி போன் பண்ணிட்டு இருந்திருக்கான். நம்மளை எழுப்பறதுக்கு”

 

“அச்சோ மணி ஏழாகிப்போச்சு” என்றவள் கட்டிலில் இருந்து துள்ளிக்குதித்துக் கொண்டு இறங்கினாள்.

 

“மெல்ல மெல்ல எதுக்கு அவசரம்”

 

“அவங்க எல்லாம் என்ன நினைச்சுட்டு இருப்பாங்க. மதியம் தூங்க ஆரம்பிச்சது இவ்வளவு நேரமா தூங்கியிருக்கோம். தப்பா நினைச்சுக்க மாட்டாங்க”

 

“மாட்டாங்க” என்றான் அவன் உறுதியாய்.

 

“ஏன்??”

 

“ஹனிமூன் கப்பிள்ஸ் வர்றதுக்கு லேட் ஆகும்ன்னு அவங்களுக்கு தெரியாதா என்ன” என்று குறுஞ்சிரிப்புடன் சொன்னவன் குளியலறை நோக்கி விரைந்திருந்தான்.

 

குழலி தான் அதே இடத்திலேயே நின்றிருந்தாள். அவன் முகம் கழுவி வந்திருக்க “நேரம் ஆக ஆக நான் சொல்றதை தான் அவங்களுக்கும் நினைப்பாங்க” என்று அவன் சொல்லவும் அவளும் குளியலறை நோக்கி ஓடினாள்.

 

அவர்கள் கதவை பூட்டி வெளியில் வரவும் கீழிருந்து ஆத்விக் மேலே வந்துக் கொண்டிருந்தான் அவர்கள் குடிலை நோக்கி. அண்ணனை பார்த்து அவன் கையசைக்க பதிலுக்கு மற்றவனும் கையசைத்தான்.

 

“இவ்வளவு நேரமா உங்களுக்கு” என்றான் பொதுவாய்.

 

“தூங்கிட்டோம் அது ஒரு குத்தமாடா”

 

“இனிமே நான் இந்த மாதிரி இடத்துக்கு தனியா எல்லாம் வர மாட்டேன்” என்றான் அவன் மொட்டையாய்.

 

“தனியா எங்க வந்தீங்க எல்லாரும் ஒண்ணா தானே வந்திருக்கோம்” என்றாள் குழலி அவனுக்கு பதிலாய்.

 

“அட போங்கண்ணி நீங்க வேற எரிச்சலை கிளப்பிக்கிட்டு. தனியான்னு நான் சொன்னது சிங்கிளா வரக்கூடாது ஜோடியா வரணும்ன்னு” என்று சொல்லவும் ஏன் தான் வாயை கொடுத்தோம் என்று மீண்டும் அவள் எண்ண வேண்டியதாய் போனது.

 

“சரி விடுடா அடுத்த வருஷம் ஒண்ணா வந்திடு”

 

“என்னது அடுத்த வருஷமா அதுவரைக்கும் எல்லாம் தாங்காது சாமி” என்றவனின் முதுகில் ஓங்கி ஒரு அடி வைத்தான் இந்திரஜித்.

 

“அதுக்குள்ள என்னடா அவசரம் உனக்கு”

 

“எல்லாரும் உன்னை மாதிரியே இருப்பாங்களாக்கும். நாங்கலாம் முனிவர் மாதிரி எல்லாம் இல்லைப்பா, சாதாரண மனுஷன்”

 

“போடா சும்மா வாய் பேசிட்டு. அம்மாவும் அப்பாவும் எங்க??”

 

“அதை வேற ஏன்டா கேட்டு கடுப்பேத்துற. ரெண்டு பேருக்கும் நேத்து தான் கல்யாணம் ஆன மாதிரி தனியா சுத்த கிளம்பிட்டாங்க. நான் தான் ஒத்தையில சுத்திக்கிட்டு இருக்கேன்”

 

“ஏன்டா டூர் பிளான் போட்டமோன்னு மீ திங்கிங்”

 

அண்ணனும் தம்பியும் சகஜமாய் பேசிக் கொள்வதை ரசித்துக் கொண்டே வந்தாள் குழலி. ஓரோர் வீட்டில் அண்ணன் தம்பிகள் சண்டைகோழிகளாக இருப்பர், சில வீட்டில் அண்ணன் தம்பி என்றால் தம்பி அண்ணனிடம் மரியாதையாக நடந்துக்கொள்வார்.

இப்படி நண்பர்கள் போல் பேசிக்கொள்ளும் அண்ணன் தம்பியை அவள் இப்போது தான் பார்க்கிறாள். தரங்கிணிக்கு போன் செய்ய அவர்களும் வந்துவிட ஐவரும் அந்த ரிசார்ட்டின் ரெஸ்டாரண்ட்டிலேயே உணவை அருந்தி முடித்திருந்தனர்.

 

அறைக்கு வந்த இருவருக்கும் உறக்கம் சற்றும் அண்டவில்லை. அது தான் இருவருமே பகலில் நன்றாய் உறங்கிவிட்டிருந்தனரே.

 

குழலி பலகணிக்கு செல்லப்போக “நானும் வர்றேன்” என்ற இந்தர் அவளின் கரத்துடன் தன் கரம் கோர்த்துக்கொள்ள இனிமையான மனநிலை இருவருக்குமே.

 

அங்கு இருவர் அமரும் சிறிய சோபா ஒன்றும் இருக்க இருவருமே அதில் அமர்ந்துக் கொண்டனர். கருத்த இருள் மட்டுமே அவர்களுக்கு துணையாய். நிலாப்பெண் மூன்றாம் நாள் தான் வெளியில் வருவாள். சில நாழிகையில் மீண்டும் மறைந்துக் கொள்வாள் அவள்.

 

மண்ணுலக பெண்களுக்கு மட்டுமல்ல அந்த விண்ணுலகப் பெண்ணான நிலாப்பெண்ணுக்கும் மாதாந்திர விடுப்பான மூன்று தினம் போலும். அவள் முகத்தை யாருக்கும் காட்டாது ஒளிந்திருந்தாள் அவள்.

 

“குழலி” என்று மென்மையாய் அழைத்தான் அவள் கணவன்.

 

“ஹ்ம்ம்”

“என்னை உனக்கு பிடிச்சிருக்கா??” என்று அவன் கேட்கவும் அருகிருந்தவனை திரும்பி பார்த்து அவன் கண்களை உற்று நோக்கினாள்.

 

“திடீர்ன்னு…”

 

“கேட்கணும்ன்னு தோணிச்சு, பதில் சொல்லேன்”

 

“ஹ்ம்ம் பிடிக்கும்” என்று இமை தாழ்த்தி அவள் சொல்லவும் அவளின் அந்த நாணம் அவனுக்கு பிடித்தது.

“என்னை கேட்க மாட்டியா??”

 

“என்ன கேட்கணும்??”

 

“எனக்கு உன்னை பிடிச்சிருக்கான்னு”

 

“அதுக்கு இப்போ அவசியமில்லைன்னு தெரியும்”

 

“அப்படின்னா”

 

“அப்படித்தான்”

 

“எனக்கு புரியும்படியா சொல்லேன். உன்னோட லாங்குவேஜ் எனக்கு சரியா புரியலை”

 

“உங்களுக்கு என்னை பிடிச்சிருக்குன்னு நீங்க சொல்லாமலே என்னால உணர முடியுது” என்று அவள் சொல்லவும் அவன் கரங்கள் அவளை தோளோடு அணைத்துக் கொள்ள அவன் இதழ்கள் அவள் கன்னத்தை ஈரப்படுத்தியது.

அழகான அந்த தருணம் இருவருக்குமே அவ்வளவு பிடித்திருந்தது. அவர்கள் தங்களின் இல்லறத்தை தொடங்கியிருக்கவில்லை, ஆனால் தங்களின் உள்ளத்தை பரிமாறிக் கொண்டிருந்தனர்.

 

அந்த இரவு அவர்களுக்கு ஏகாந்தமாய் மாறி என்றும் அவர்களின் நினைவில் நீங்காத பொக்கிஷமாய். மறுநாள் பொழுது தான் அவர்களிருவருக்கும் நல்ல பொழுதாய் அமையவில்லை.

Advertisement