Advertisement

 

 

18

குழலி திருவாதவூரில் இருந்தாள். சொந்த ஊருக்கு வந்த போதும் அன்னை மீதிருந்த கோபத்தில் அவள் அங்கு செல்லவில்லை. பெரியாத்தாவின் வீட்டில் தான் இருந்தாள்.

 

இந்தருக்கும் அவளுக்கும் பேச்சுவார்த்தை இல்லாது போனாலும் அவளின் பிடிவாதத்தை கண்டவன் சொல்லியே விட்டான். “எதுக்கு அடம் பிடிக்கறே?? உங்கம்மா என்ன தப்பு செஞ்சாங்க?? உன் மேல பாசம் வைச்சதை தவிர… அங்க போய் தங்கினா தான் என்ன??” என்றவனை அவள் முறைப்போடு பார்த்தாள்.

 

‘பார்த்தா பார்த்துக்கோ எனக்கென்ன பயமா??’ என்றவன் அவள் பார்வையை தயங்காது எதிர்க்கொள்ள அவள் தான் வேறுவழியில்லாது திரும்பிக் கொள்ள வேண்டியிருந்தது.

 

“அம்மா நீங்களே சொல்லுங்க” என்ற இந்தர் சலிப்பாய் அங்கிருந்து நகர்ந்திருந்தான்.

 

“ஏன் குழலி இப்படி பண்ணுறே?? நாங்க எல்லாரும் இவ்வளவு சொல்றோம் நீ பிடிவாதம் பிடிக்கறே. உனக்கு தான் தெரியுமே ராகினியைப் பத்தி ஏதாச்சும் ஒண்ணு வெடுக்குன்னு பேசுவா. நீயும் பதிலுக்கு பேச வேண்டி வரும்”

 

“நான் சின்னத்தைகிட்ட எதுவுவே பேச மாட்டேன் போதுமா. அவங்க எதுவும் பேசினா கூட நான் பொறுத்துட்டு போய்டறேன் அப்போ ஓகே தானே உங்களுக்கு”

 

“அவ பேசினா பொறுத்து போவே, பெத்த அம்மா பேசினதை மனசிலவே வைச்சுட்டு இருப்பியா குழலி. மதினி பாவம் தானே” என்றார் அவர்.

 

“சரி விடுங்க நான் எங்கயும் போகலை இங்கவே இருக்கேன்” என்று அவள் சொல்ல இந்திரஜித் வந்து சத்தம் போட்டான்.

 

“ம்மா அவ எப்படியோ போகட்டும் விடுங்க. அவளுக்கு திமிரு கொழுப்பு எல்லாம் ரொம்பவே கூடிப்போச்சு. யாரையும் ஒரு துரும்புக்கு கூட மதிக்க மாட்டேங்குறா” என்று கத்தியவன் “இப்போ என்ன வேணும் உனக்கு. நீ ஆத்தா வீட்டில தங்கணும் அதானே”

 

“போ… போய் அங்கவே இரு… அங்க இருந்து பரிட்சை எழுதப் போவியோ போக மாட்டியோ அதுவும் கூட உன்னோட இஷ்டம். உனக்கு அங்க இருந்து எப்போ வரணும்ன்னு தோணுதோ வா. யாரும் உன்னை தொந்திரவு பண்ண மாட்டோம்”

 

“அம்மா நீங்க அவளை ஊர்ல கொண்டு போய் விட்டு ஹால் டிக்கெட் எல்லாம் வாங்குற வரை கூடவே இருங்க. அதுக்கு அப்புறம் அவ என்ன சொல்றான்னு பார்த்துட்டு நீங்க அங்கவே அவ கூட இருக்கறதா இல்லை அம்மிணி வேணாம்ன்னு சொன்னா நீங்க கிளம்பறதான்னு பார்த்துக்கோங்க”

 

“இங்க நீ திரும்பி வர்றதுன்னா நீ தான் வரணும். நானெல்லாம் வந்து கூட்டிட்டு போவேன்னு கனவுல கூட நினைக்காத. முதல்ல நடந்ததுல என் தப்பு இருந்துச்சு அதனால நான் பொருத்து போனேன். இப்பவும் அப்படியே இருப்பேன்னு நினைக்காத” என்று அவளிடம் தனியே வந்து சொல்லிவிட்டு கிளம்பி வெளியே சென்றுவிட்டான்.

தரங்கிணியும் ஸ்ரீனிவாசனும் பெங்களூர் வந்ததிற்கு முக்கிய காரணமே குழலியை ஊருக்கு அழைத்துச் செல்லத்தான். அவள் கடைசி வருடப்படிப்பை நிறைவு செய்வதற்கு இறுதி தேர்வு எழுத வேண்டுமே.

 

அதற்கு முன்பு தான் அவள் பெங்களூர் வந்துவிட்டிருந்தாள். கயல்விழி தான் தரங்கிணிக்கு போன் செய்து சொல்லியிருந்தார் குழலியின் இறுதித் தேர்வு பற்றி.

 

குழலியின் தோழி ஒருத்தி கயல்விழியிடம் வந்து குழலியை ஹால் டிக்கெட் பெற்றுக் கொள்ள சொல்லி கல்லூரியில் அழைத்தார்கள் என்று சொல்லியிருக்க அதைத்தான் தரங்கிணியிடம் கூறியிருந்தார் அவர்.

 

தரங்கிணி இந்தருக்கு அழைத்து விஷயத்தை சொல்ல நினைக்க அதற்குள் ஆத்விக் வரவும், அவனுடன் அவர்களும் பெங்களூர் வந்திருந்தனர்.

 

“குழலி” என்ற அழைப்பில் அவளின் நினைவுகள் அறுந்து போக மடியில் இருந்த புத்தகத்தை எடுத்து ஒரு ஓரமாய் வைத்துவிட்டு கீழே சென்றாள் அவள்.

 

“சொல்லுங்கத்தை”

 

“இந்த குழம்பை கொஞ்சம் கூட்டி வைச்சுடேன். அப்படியே அந்த துவரையை கூட்டு வைச்சுடு, நாலு அப்பளம் பொரிச்சு வைச்சுடுமா, அப்போ தான் உங்க மாமாவுக்கு சோறே இறங்கும். சின்னதுங்க ரெண்டும் கூட அதை விரும்பி சாப்பிடுங்க”

“கொஞ்சம் அந்த வேலையை முடிச்சிடும்மா. எனக்கு ஒரு முக்கியமான ஜோலி கிடக்கு. இந்த வேலாயி வீட்டு வரைக்கும் போக வேண்டி இருக்கு. நான் முடிச்சுட்டு வந்திடறேன்” என்று நகர்ந்தவரை என்ன செய்ய என்று பார்த்தாள் குழலி.

 

உடன் இருக்கிறேன் என்று சொன்ன தரங்கிணியையும் அவள் தான் ஊருக்கு செல்லுமாறு அனுப்பி வைத்திருந்தாள். ஆத்விக்கும் அவளின் மாமாவும் சென்னையில் தனியே இருப்பார்களே என்று தான் அனுப்பியிருந்தாள்.

 

தரங்கிணி சொன்னது போல ராகினி வேறு ரகமாகத் தான் இருந்தார். அவளுக்கு கோபம் வந்தது, இவள் எதுவாவது பேசிவிட்டால் அதற்கு தரங்கிணி தான் பழியாவார் என்பதால் பேசாமல் பொறுத்துக் கொண்டாள்.

 

அவளே படிக்கவும் பரிட்சை எழுதவும் வந்திருக்கிறாளே அவளைப் போய் வேலை வாங்கலாமா என்றில்லாமல் வேலை கொடுத்து வெளியே சென்றுவிட்டிருந்தார் அவர்.

 

நேற்றும் இப்படித்தான் அவர் செய்தார். இன்று அவள் முடிவு செய்துவிட்டாள் என்ன செய்ய வேண்டும் என்று. ராகினிக்கு ஒரு பாடம் புகட்ட வேண்டும் என்று எண்ணியவள் வேலை ஒன்றும் செய்யாது மேலே சென்றுவிட்டாள்.

 

“இன்னைக்கு வந்து மாமாக்கிட்ட நல்லா திட்டு வாங்கட்டும்” என்று கருவிக்கொண்டு தன் புத்தகத்தை எடுத்தாள் படிக்க.

 

குழலியின் சின்ன மாமா வெங்கடேசன் உள்ளே நுழையவும் பின்னாலேயே வந்து சேர்ந்தார் ராகினி. மனைவியை ஏற இறங்க பார்த்த அவர் “என்ன ராகினி எங்கே போயிட்டு வர்றே”

 

“கடைக்குங்க” என்றார் அவர்.

 

“கடைக்குன்னு சொல்றே கையில எதுவுமில்லையே”

 

“சோப்பு வாங்க போனேங்க. நாம வாங்குற சோப்பு அவன்கிட்ட இப்போ இல்லையாம் அதான் திரும்பி வந்திட்டு இருக்கேன்” என்று சமாளித்தார் அவர்.

 

“என்ன சோப்புன்னு சொல்லு நான் மதுரைக்கு தான் போறேன் வரும் போது வாங்கிட்டு வர்றேன்”

 

“ஹ்ம்ம் சரிங்க” என்றவர் “குழலி அம்மாடி குழலி” என்று ராகமாய் அவளை அழைக்க “இதோ வர்றேன் அத்தை” என்று மேலிருந்து பதில் குரல் கொடுத்தவள் மெல்ல கீழிறங்கி வந்தாள்.

“சாப்பிட வாம்மா” என்றவர் சமையலறைக்கு செல்ல அங்கு எதுவுமே செய்யப்படாமல் அப்படியே இருக்கவும் பக்கென்றிருந்தது அவருக்கு.

 

“குழலி” என்று மெல்லிய குரலில் உல்லிருந்துஅ அவர் அழைக்க அவளோ அதை கேட்காதது போல தன் மாமனிடம் ஏதோ பேசிக் கொண்டிருந்தாள்.

 

ராகினி இரண்டு மூன்று முறை அழைத்திருக்க “என்ன ராகினி எதுக்கு அவளை கூப்பிடுறே. நாங்க பேசிக்கிட்டு இருக்கோம்ல” என்றவாறே அவர் சமையலறை பக்கம் செல்ல “அண்ணே” என்று வாசலில் சத்தம் கேட்டது.

 

“வா கயலு வா” என்ற வெங்கடேசனை வாசலில் நின்றிருந்த கயல்விழி உள்ளே அழைத்தார்.

 

அன்னைப் பார்த்தும் பார்க்காதது போல திரும்பிக் கொண்டாள் குழலி.

 

“என்னம்மா மகளை பார்க்க இன்னைக்கு தான் உனக்கு நேரம் கிடைச்சிருக்கு போல” என்றார் அவர்.

 

“அவளை பார்க்க என்ன இருக்குண்ணே. நான் உங்களைத் தான் பார்க்க வந்தேன்” என்ற கயல்விழி மகளுக்கு சற்றும் குறையாதவராக இருந்தார்.

 

‘உனக்கே இவ்வளவு இருக்குண்ணா உன்னை பெத்தவ எனக்கு இருக்காதா’ என்ற பார்வையை அவர் மகளை நோக்கி வீச அதை பார்த்தும் பார்க்காதவள் போல அங்கேயே நின்றிருந்தாள் மகள்.

 

“குழலி அம்மா வந்திருக்கு என்னன்னு கேட்குறது இல்லையா. கையில ஏதோ வெயிட்டு வைச்சுட்டு இருக்கு பாரு, வாங்கு” என்று அவர் சொல்லவும் தான் அன்னையின் இரு கையிலும் இருந்த கூடையை பார்த்தாள்.

 

என்னவென்ற ஆராய்ச்சியோடே அவர் கையில் இருந்ததை வாங்கிய கீழே வைத்துவளுக்கு ஏதோ புரிந்தது போல இருந்தது.

 

“ராகினி இன்னும் நீ கிட்சன்ல என்ன பண்ணுறே?? கயல் வந்திருக்கு பாரு, எங்க எல்லாருக்கும் சாப்பாடு எடுத்து வை” என்றார் அவர்.

 

‘இவரு வேற நேரம் காலம் புரியாம கழுத்தறுக்குறாரே. இங்க ஒண்ணுமே செய்யலைன்னு தெரிஞ்சா என் கழுத்தையே அறுத்து என் கையில கொடுத்திருவாரே’ என்று புலம்பிக்கொண்டே இருந்தார் ராகினி.

 

“மதினி எனக்கு சாப்பாடெல்லாம் வேண்டாம். நீங்க இங்க வாங்க” என்று கயல்விழி அழைக்கவும் அது தான் சாக்கென்று வேகமாய் வந்தார் ராகினி.

 

“என்ன மதினி”

 

“இன்னைக்கு எங்க வீட்டு சாப்பாடு தான் உங்க எல்லாருக்கும். விடக்கோழி ஒண்ணு அடிச்சேன், சூப்பு, குழம்பு, கூட்டுன்னு வைச்சிருக்கேன். எல்லாரும் சாப்பிடுங்க” என்றார் அவர்.

 

“என்ன கயல் என்ன விசேஷம்??” என்றார் வெங்கடேசன்.

 

“அதொரு வேண்டுதல் அண்ணே”

“நம்ம சாமி எல்லாம் அசைவம் சாப்பிடாதேம்மா. உன் புருஷன் வீட்டு சாமி அசைவம் சாப்பிடுமோ?? நீ சொல்றது நம்புற மாதிரி இல்லையே. விடக்கோழியை சாமிக்கா வெட்டினே”

 

“என் பிறந்த கிறுக்கச்சிக்கு பிடிக்கும்ன்னு தான் செஞ்சு கொண்டு வந்தேன்”

 

“ஆக நீ எங்களுக்கு செய்யலை”

 

“அட என்னங்க நீங்க மதினி ஆசையா எல்லாருக்கும் செஞ்சு கொண்டு வந்திருக்கு. நீங்க பாட்டுக்கு எங்களுக்கு செய்யலை அது இதுன்னு பேசி அவுக மனசை சங்கடப்பட வைக்குறீங்க”

 

“மகளுக்கு மட்டும்ன்னா அவுக வீட்டுக்கு கூப்பிட்டு சாப்பாடு போட்டிருக்கலாம், இல்லை அவளுக்கு தனியா கொண்டு வந்திருக்கலாம். இங்க பாருங்க அவங்க செஞ்ச அவ்வளவையும் இங்க கொண்டு வந்திருக்காங்க”

 

“நமக்கும் சேர்த்து கொண்டு வந்ததை போய் குறை பேசிட்டு இருக்கீங்க” என்று கணவரை சாடினார் அவர்.

 

“ஆமாண்ணே மதினி சொன்னது தான் சரி. நான் உங்க எல்லாருக்கும் சேர்த்து தான் கொண்டு வந்தேன், இனி என் கையாள உங்களுக்கு தினம் சாப்பாடு”

 

“நீ இல்லைன்னு சொன்னாலும் உன் மகளுக்கு தான் செய்யறேன்னு எனக்கு தெரியும். நெல்லுக்கு பாயும் போது இந்த புல்லுக்கும் பாயட்டும்”

“என்னண்ணே இப்படி பேசிகிட்டு”

 

“அண்ணன் சும்மா தான் கயலு சொன்னேன். நீ செஞ்சு கொண்டு வந்ததே எங்களுக்கு சந்தோசம் தான்தா. ராகினி போய் எல்லாருக்கும் தட்டு எடுத்திட்டு வந்து பரிமாறு. கயலு நீயும் எங்க கூடவே சாப்பிடுத்தா” என்றார் அவர்.

 

மகளோ அன்னையை குற்றம் சாட்டும் பார்வை பார்த்தாள். ‘வந்த இடத்துல இதெல்லாம் உனக்கு தேவையா’ என்று பதில் பார்வை பார்த்தார் அத்தாய்.

Advertisement