Advertisement

 

17

காலை ஆறுமணிக்கே அவர்கள் வீட்டில் இருந்து கிளம்பியதால் பத்து மணிக்கே மைசூர் வந்தடைந்திருந்தனர். வரும் வழியிலேயே காலை உணவை முடித்திருக்க அறைக்கு சென்று சிறிது நேரம் இளைப்பாறினர்.

 

குழலிக்கு ஏதோவொரு குதூகலம் வந்து தொற்றிக்கொள்ள அவள் முகம் புன்னகை முகமாகவே இருந்தது. இந்தரும் அவளுடனே இருந்ததும் கூட அவளை அப்படி உணர வைத்திருக்கலாம்.

 

மதிய உணவுக்கு பின் அவர்கள் அரண்மனையை சுற்றிபார்க்க சென்றனர். இந்தரையும் குழலியையும் தனியேவிட்டு மற்றவர்கள் முன்னே சென்றுவிட்டனர்.

 

“அத்தை மாமா எல்லாம் எங்கே??”

 

“அவங்க பேசிட்டே முன்னாடி போய்ட்டாங்க”

 

“அச்சச்சோ வாங்க நாமளும் போவோம். நான் பாட்டுக்கு கதை கேட்டுட்டே அவங்களை கவனிக்காம விட்டுட்டேன்” என்று அவள் வேகநடை போட்டு முன்னே செல்ல எட்டி அவளின் கரம் பற்றினான் இந்தர்.

 

“எந்த அவசரமும் இல்லை தொலைஞ்சு போக அவங்க குழந்தைகளும் இல்லை. நாம பொறுமையா பார்த்திட்டு போவோம்”

 

“இல்லை வந்து அவங்க…”

 

“பேசாம வா” என்றவன் இயல்பாய் அவள் தோளணைக்க குழலி அவனை திரும்பிப் பார்த்தாள். அவனோ அதைக் கண்டுகொள்ளாமல் அவன் போக்கில் ஒவ்வொன்றும் விவரித்துக் கொண்டு வந்தான்.

 

குழலியிடமிருந்து சத்தமில்லாது போகவும் தான் இந்தர் அவளைப் பார்த்தான் என்னவென்பது போல. ஒன்றுமில்லை என்று அவள் பதில் பார்வை கொடுக்க “அப்போ ஏன் பேசாம வர்றே?? இவ்வளவு நேரம் பேசிட்டு தானே வந்தே??”

 

“ஹ்ம்ம்”

 

“என்ன ஹ்ம்ம்??”

 

“சரி”

 

“என்ன சரி??”

 

“இப்போ என்ன வேணும் உங்களுக்கு ஒண்ணு சொன்னா சரின்னு விடாம கேள்வியா போட்டு குடையறீங்க. ஆளைவிடுங்க” என்றவள் சட்டென்று அவன் கையை விலக்கிவிட்டு முன்னே சென்றாள்.

 

‘நான் அவ்வளவு முட்டாள் எல்லாம் இல்லை குழலி. தெரிஞ்சு தான் உன் மேல கைப்போட்டேன்’ என்றவன் புன்னகையோடே அவளின் பின் சென்றான்.

 

“இந்த இருக்கையை பாருங்களேன்” என்று பிரமித்து அவள் பார்க்க “நம்ம ஊர்ல கூட ராஜாக்கள் இது போல இருக்கைகள் தான் அமர்ந்திருப்பாங்க குழலி”

 

“எப்படியொரு கலைநயம்ல, அவங்க அப்படி இந்த இருக்கையில உட்கார்ந்து இருக்கும் போது எவ்வளவு கம்பீரமா இருந்திக்கும்ல” என்றவளின் எண்ணம் முழுதும் அக்காட்சியை கற்பனையாய் வடித்தது.

 

“ராஜ ராஜ சோழன், ராஜேந்திர சோழன் எல்லாம் இந்த இருக்கையில உட்கார்ந்து பார்த்திருந்தா எப்படியிருக்கும்ல” என்றாள் இன்னும் அதீத கற்பனையில்.

 

“அவங்களை மட்டும் தான் உனக்கு தெரியுமா. இன்னும் எவ்வளவோ அரசர்கள் இருக்காங்க. சோழர்கள் மட்டுமில்லை, பாண்டியர்கள், பல்லவர்கள்ன்னு நிறைய அரசர்கள் இருந்தாங்க. ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு ஆளுமையும் திறமையும் இருந்தது அப்போ”

 

“ஹ்ம்ம் உண்மை தான்” என்றாள் அவளும் சிலாகித்து.

 

“இன்னும் எவ்வளவு தூரம் போகணும்” என்றாள் மேலும் சில அடிகள் வைத்த பின்.

 

“என்னாச்சு??”

 

“கால் வலிக்குது”

 

“அவ்வளவு தானா, கொஞ்சம் உட்காரு” என்றவன் அவளுடன் அமர்ந்துக்கொள்ள “நீங்க ஏன்??”

 

“நான் ஏன்??”

 

“இல்லை இங்க நீங்க ஏன்??”

 

“என் பொண்டாட்டி பக்கத்துல தானே உட்கார்றேன். அதுல என்ன தப்பு”

 

ஒரு வழியாய் அரண்மனை சுற்றிப்பார்த்துவிட்டு களைத்து போய் அறைக்கு வந்தனர். இரவு உணவை முடித்து உறங்கினார்கள்.

 

மறுநாள் அவர்களை சிக்மங்களூருக்கு அழைத்துச் சென்றான் இந்திரஜித். முதல் நாள் அவ்வளவு அலுப்பு இருந்த போதிலும் அனைவரையும் ஒரு உற்சாகம் தொற்றிக் கொண்டிருந்தது அந்த பயணத்தில்.

 

பின்னே காணும் இடமெல்லாம் பச்சைப்பசேல் என்று பசுமை போர்வை போர்த்திக் கொண்டு மலையழகியை அவ்வப்போது அணைத்துவிட்டு செல்லும் மேகக்கூட்டத்தையும் பார்க்க பார்க்க மனமும் உள்ளமும் ஒருங்கே குளிர்ந்தது அனைவருக்கும்.

 

ஆத்விக்கும் இந்தரும் மாற்றி மாற்றி வண்டி ஓட்டியதால் விரைவாகவே அவர்கள் சிக்மங்களூர் வந்து சேர்ந்திருந்தனர். அந்த ரிசார்ட்டே பார்க்க அவ்வளவு அழகாக இருந்தது.

 

‘இங்க தான் தங்கப் போறோமா’ என்று அவள் அதன் வரவேற்ப்பில் நின்று கொண்டு பார்க்க தேவையான ஆவணங்களை கொடுத்துவிட்டு இந்தர் அவர்களருகே வந்தான்.

 

“ஹ்ம்ம் போகலாம்”

 

“இந்தர் இந்த ரிசார்ட் பார்த்தா ரொம்ப காஸ்ட்லியா தெரியுதே”

 

“அப்படியெல்லாம் இல்லைம்மா, எல்லாம் நியாயமான ரேட் தான்”

 

“நிஜமாவே கம்மின்னு சொல்றீங்களா??” என்று அன்னை கேட்ட கேள்வியை அவள் வேறு மாதிரி கேட்டாள் அவனுக்கு மட்டும் கேட்கும் குரலில்.

 

திரும்பி அவளைப் பார்த்தவன் “நான் அதிகம்ன்னு சொல்லலை, கம்மின்னும் சொல்லலை. அதைப்பத்தி யோசிக்காம வர முடியாதா உங்களால”

 

“இல்லை…” என்று மீண்டும் தொடங்கியவளின் தோளணைத்து “பேசாம வா” என்றான்.

 

ரூம் பாய் அவர்களுக்கு முன்னே செல்ல இவர்கள் அவனை பின் தொடர்ந்தனர். “ஏங்க ரூம் எங்க இருக்கு, இன்னும் எவ்வளவு தூரம் நடக்கணும்??”

 

“உனக்கு நடக்க முடியலைன்னா சொல்லு வேணும்ன்னா தூக்கிட்டு போறேன்”

 

“நான் என்ன கேட்டேன் நீங்க என்ன சொல்றீங்க. அத்தை மாமாலாம் பாவம்ல” என்று அவர்களை இழுத்துவிட்டாள்.

 

இந்தர் பின்னால் திரும்பி “அம்மா, அப்பா கால் வலிக்குதா”

 

“இல்லையே” என்றனர் இருவரும் ஒரு சேர. அவர்கள் பதிலை கேட்டு பின் தன் மனைவியை பார்த்தான் ‘இப்போ என்ன சொல்லப் போறே’ என்ற ரீதியில்.

 

ஒருவழியாய் அவர்கள் தங்கப் போகும் அறை வந்துவிட “ஆத்விக், நீ, அம்மா, அப்பா எல்லாம் இந்த ஹட்ல தங்கிக்கோங்க”

 

“நீ எங்கேண்ணா போட்டிருக்கா??”

 

“அங்கே மேலே தெரியுதுல அதுல தான்” என்றான் உடன் பிறந்தவனுக்கு.

 

“ஓகே யூ என்ஜாய், எத்தனை மணிக்கு வெளிய கிளம்பலாம்ன்னு சொல்லு, நாங்க ரெடியா இருக்கோம்”

 

“டேய் போறதுனா நாம தனியா போய்க்கலாம், அவங்களை வேற எதுக்கு தொல்லை பண்ணுறே” என்று தரங்கிணி தன் இளைய மகனின் காதில் சொல்ல அதை புரிந்து கொண்டான் அவன்.

 

“அண்ணா நீ முதல்ல ரூம்க்கு போ அப்புறம் பேசிக்கலாம்” என்று இந்தர் பதில் சொல்லுமுன் அவனே அப்பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்திருந்தான். ரூம் பாய் கன்னடத்தில் அவனிடம் மேலே செல்லலாமா என்று கேட்க அவனும் சரியென்றான்.

 

“நீ என்ன அவங்களையே பார்க்கறே, வா…” என்றவன் கைப்பிடித்துக்கொள்ள அவளுக்கு ஏதோவொரு திகில் பரவியது. அந்த குளிரில் கூட அவளுக்கு வியர்த்தது.

 

“என்னாச்சு உனக்கு கையெல்லாம் ஈரமா இருக்கு. ஸ்வெட் ஆகுது ஏன்??” என்றவன் அவள் கழுத்தில் நெற்றியில் என்று கை வைத்து பார்த்தான் நடந்துக்கொண்டே!!

 

“ஒண்ணு… ஒண்ணுமில்லை” என்று சொல்லும் போதே அவளுக்கு தந்தியடித்தது.

 

குழலியின் யோசனை முழுதும் இந்தரை சுற்றியே வந்தது. இதற்கு முன் அவள் பார்த்த இந்திரஜித் இல்லை அவன். புதிதாய் பல மாற்றங்கள் அவனிடத்தில். அதை அவளால் தான் சட்டென்று ஏற்றுக்கொள்ள முடியாது போனது.

 

அவர்கள் அறை வாயிலுக்கு வந்த ரூம் பாய் அவர்களிடம் சாவியை கொடுத்தான். அவன் இந்தரிடத்தில் ஏதோ பேச பதிலுக்கு இந்தரும் எதுவோ சொல்ல அவன் அங்கிருந்து நகர்ந்தான்.

 

“என்ன சொன்னான்??”

 

“இந்த திங்க்ஸ் எல்லாம் உள்ள கொண்டு வைக்கட்டுமான்னு கேட்டான். நான் வேண்டாம்ன்னு சொன்னேன்”

 

“ஏன்??”

 

“எதுக்கு அவன் நமக்கு டிஸ்டர்பன்ஸ் தானே” என்றவன் உல்லாசமாக பாடலை ஒன்றை சீட்டியடித்துக் கொண்டே கதவை திறந்தவன் அறையின் விளக்கை ஒளிரவிட்டான்.

 

அதைக் கண்டதும் குழலி இன்னமும் அசந்து தான் போனாள். மிக அழகான குடில் அது, கூரைகள் கொண்டு வேயாது ஓடுகள் கொண்டு கட்டப்பட்ட குடில் அது. பெரிய அழகிய படுக்கையறை, சுவற்றில் பெரிய டிவி. வலது புறத்தில் குளியலறையும் அதை ஒட்டிய உடை மாற்றும் அறையும்.

 

படுக்கையறை கடைசியில் கதவை திறந்துக் கொண்டு சென்றால் அழகு மிகுந்து பலகணி இரு மர நாற்காலியும் டீப்பாயும் போடப்பட்டு அங்கிருந்து இயற்கை அழகை ரசிக்கும் வண்ணம் அமைந்திருந்தது.

 

விடிய விடிய அங்கேயே உட்கார்ந்து ரசிக்கலாம் போலத் தோன்றியது அவளுக்கு. கொண்டு வந்த உடமைகளை அங்கே வைத்துவிட்டு அவள் முதலில் சென்றது அந்த பலகணிக்கு தான்.

 

அதில் சாய்ந்துக் கொண்டு அவள் பார்க்க தூரத்தே தெரிந்த இயற்கையின் அழகில் பசுமையில் மனத்தில் தோன்றிய சஞ்சலம் பயம் அனைத்தும் சடுதியில் அவளிடமிருந்து விடைபெற்றிருந்தது.

 

கதவை சாற்றி பூட்டிவிட்டு வந்த இந்தர் அவளை ரசித்துக்கொண்டே அவளருகில் சென்றான். அவன் இடக்கை இயல்பாய் உயர்ந்து அவளின் தோளை அணைத்துக் கொள்ள அதை உணராதவளாய் “ரொம்ப அழகா இருக்குங்க இந்த இடமெல்லாம்”

 

“இதுக்கு முன்னாடி நீங்க ஏன் என்னை இங்கெல்லாம் கூட்டிட்டு வரலை” என்றாள் அவனிடம் குறையாய்.

 

“எனக்கு அப்போ நேரமில்லைன்னு தான் உனக்கே தெரியுமே”

 

“ஹ்ம்ம்”

 

“எனக்கு இங்க ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு தெரியுமா. இப்படியே இங்கவே இருந்திடலாம் போல இருக்கு. அங்க பாருங்க அந்த மேகமெல்லாம் என்கிட்ட வந்து இப்போ தான் உனக்கு இங்க வர்றதுக்கு வழி தெரிஞ்சுதான்னு கேட்டுட்டு கோவிச்சுட்டு போற மாதிரி இருக்கு” என்று மலையின் மடியில் இளைப்பாறி கலைந்து செல்லும் மேகக்கூட்டத்தை கண்டு சொன்னாள்.

 

அப்போது லேசாய் மழைச்சாரல் விழ எட்டி கை நீட்டி அதை ரசித்தவளை பார்த்து “இந்த மழை என்ன சொல்லுது உன்கிட்ட”

 

“அது புரியலையா உங்களுக்கு நம்மளை வரவேற்குது பன்னீர் தூவி” என்றவளை ரசித்துப் பார்த்தான் அவன். எப்படியொரு இயற்கை மனது தன்னவளுக்கு என்று தான் தோன்றியது அவனுக்கு.

 

அதுநாள் வரையில் அவளை அவன் பார்த்த விதமே வேறு. இப்போதோ அவளின் குழந்தை மனது அவனுக்குள் இதத்தை பரப்பியது. சட்டென்று குனிந்து அவளை தூக்கிக் கொள்ள உள்ளே எதுவோ ஒரு உணர்வு அவளை ஆட்கொள்ள இந்தரை ஒன்றும் சொல்ல முடியாது அவளின் விழிகளுடன் உறவாடத் துடிக்கும் அவன் விழிகளை அவளும் ஏறிட்டாள்.

Advertisement