Advertisement

16

இந்தர் வேண்டுமென்றெல்லாம் பார்க்க நினைக்கவில்லை. அவன் வந்து படுத்ததும் உறக்கம் மெல்ல தழுவிய போதும் முழுதாய் அவனை ஆக்கிரமித்திருக்கவில்லை.

 

திடுக்கென்று கண் விழித்தவன் பார்த்த போது தான் அவன் மனைவி வாரி சுருட்டிய புடவையுடன் உள்ளே வந்திருந்தாள்.

 

‘என்ன இவ இப்படி வர்றா’ என்று அவன் பார்த்திருக்கும் போதே அவள் உடையை சரியாய் கட்டிக் கொண்டிருந்ததை கண்டுவிட்டு தான் அப்படி பார்த்திருந்தான்.

 

குழலி ஏதோ தோன்ற திரும்பிப் பார்த்த தருணம் தான் அவன் போர்வைக்குள் நத்தையாய் சுருண்டது. ‘ச்சே எதுக்கு இப்படி குற்றம் பண்ண மாதிரி முகத்தை மூடிக்கிட்டோம்’

 

‘எனக்கு எல்லா உரிமையுமே இருக்கே அவக்கிட்ட, பார்த்தா தான் என்ன தப்பு’ என்று தன்னையே திட்டிக்கொண்டான்.

 

மெல்ல போர்வை விலக்கியவன் “என்ன பண்ணிட்டு இருக்கே??” என்று கேட்கவும் அதிர்வது அவளின் முறையானது.

 

“இல்… இல்லை புடவை” என்று தடுமாறினாள்.

“தூங்க வேண்டியது தானே”

 

“மணி ஆறாச்சு இதுக்கு மேலே படுத்து என்ன செய்யப் போறேன். அதான் குளிச்சுட்டு சமைக்கலாம்ன்னு”

“சரி போ”

 

“நீங்க??”

 

“காபி வேணும்” என்றவன் போர்வையை மொத்தமாய் விலக்கி எழுந்து அமர்ந்திருந்தான்.

 

‘இவரு எப்போ எழுந்தாரு, நம்மளை அரைகுறையா பார்த்திருப்பாரோ. ச்சே அவர் முன்னாடி போய் எப்படி நின்னிருக்கேன்’ என்று தலையில் தட்டிக்கொண்டாள்.

 

கை தன் பாட்டில் வேலை பார்க்க யோசனை முழுதும் இந்தர் பார்த்திருப்பானா என்றே இருந்தது அவளுக்கு. ‘இப்போ என்ன அவர் பார்த்தா என்ன தப்பு. பார்த்தா பார்த்திட்டு போறாரு அதுக்கு என்ன பண்ணுறது. சும்மா நீ என் வேலையை கெடுக்காம வேற ஏதாச்சும் போய் உருப்படியா யோசி’ என்று மனசாட்சி பதில் கொடுக்க அவளின் யோசனை தடைப்பட்டது.

 

இந்தரும் ஆத்விக்கும் அவ்வப்போது ஏதோ வேளையாக வெளியே போவதும் வருவதுமாக இருந்தனர். தரங்கிணி மருமகளிடம் மெல்ல பேச்சக் கொடுத்தார்.

 

“இந்த வருஷம் உங்க மாமாக்கு ரிடையர்மென்ட், இந்த ஆத்விக்கும் ஒரு பொண்ணை பார்த்து கல்யாணம் முடிச்சிடலாம்ன்னு இருக்கும் குழலி. நீ என்ன சொல்றே??” என்றார் மருமகளிடம்.

 

“நான் இதுல சொல்ல என்ன இருக்கு அத்தை. காலம் நேரம் கூடி வந்தா எல்லாம் தன்னால நடக்கும்”

“அதுக்காக நாம முயற்சி எடுக்க வேண்டாம்ன்னு சொல்றியா??”

 

“நான் அப்படிச் சொல்லலை அத்தை. நாம கண்டிப்பா முயற்சி எடுக்கணும், அப்போ தானே அவருக்கு மனசுக்கு பிடிச்ச பொண்ணா அமையும். நீங்க மாமாவோட ரிடையர்மென்ட்டுக்கும் அதுக்கும் முடிச்சி போடாதீங்கன்னு சொல்ல வர்றேன்”

 

“ஹ்ம்ம் அதுவும் சரி தான்” என்றவர் ஏதோ கேட்க வருவதும் பின் தயங்குவதுமாய் இருந்தார்.

 

அவரை பார்த்திருந்தவள் எதுவாய் இருந்தாலும் அவரே பேசட்டும் என்று சமையலை கவனிக்க ஆரம்பித்தாள்.

 

“குழலி” என்று மீண்டும் அழைத்தார்.

 

“சொல்லுங்க அத்தை”

 

“இல்லை வந்து எல்லாரும் உங்களுக்கு எப்போ குழந்தை பிறக்கும்ன்னு கேட்கறாங்க. எனக்கு… எனக்கு என்ன பதில் சொல்லன்னே தெரியலை” என்றுவிட்டு மருமகளை பார்த்தார்.

 

அவளோ பதிலே பேசாது அமைதியாக இருந்தாள். சிறிது நேரம் பொறுத்து பார்த்தவர் அவளிடமிருந்து பதில் வராது போகவும் தான் பேசியது அவள் காதில் சரியாக விழவில்லையோ என்று எண்ணி “குழலி நான் உன்கிட்ட தான் கேட்டேன், நான் என்ன கேட்டேன்னு…”

 

“புரிஞ்சுது அத்தை”

 

“நீ எதுவுமே சொல்லலையே??”

 

“இதுல நான் சொல்ல என்ன இருக்கு அத்தை. நீங்க தகவல் கொடுத்தீங்க நான் கேட்டுகிட்டேன் அவ்வளவு தானே”

 

“குழலி நான் என்ன சொல்ல வந்தேன்னு புரியலைன்னு நீ சொல்றியா. என்னை கேள்வி கேட்கறவங்களுக்கு நான் என்ன பதில் சொல்லட்டும் சொல்லு”

 

“இல்லை எனக்கு புரியலை அத்தை இதுக்கு நான் மட்டும் எப்படி பதில் சொல்ல முடியும். இந்த விஷயத்துல சம்மந்தப்பட்டவங்க ரெண்டு பேரு இருக்கோம். நீங்க கேள்வியை என்கிட்ட மட்டும் கேட்கறீங்க. அதுவே முதல் தப்பு”

 

“நாங்க ரெண்டு பேரும் ரொம்ப நாள் கழிச்சு இப்போ தான் சேர்ந்து இருக்கோம். அதுக்குள்ள நல்ல சேதி சொல்லிடணும்ன்னு எப்படி எதிர்பார்க்கறீங்க??”

 

“ஒரு வேலை மத்தவங்க கேட்கறாங்கன்னு சொல்லி நீங்க தெரிஞ்சுக்க விரும்பறது நாங்க சந்தோசமா இருக்கோமா?? இல்லையான்னா அப்படியிருந்தா எங்க அந்தரங்கத்துக்குள்ள நீங்க என்ன தெரிஞ்சுக்க விரும்பறீங்க அத்தை” என்று அவள் கேட்கவும் ‘அம்மாடி என்ன வார்த்தை சொல்லிட்டா’ என்று தான் பார்த்தார்.

 

அவர் இல்லையென்றாலும் அவர் சுற்றி வளைத்து தெரிந்துக்கொள்ள விரும்பியது அதைத்தான். ஆனாலும் குழலி இப்படி பொட்டென்று அடித்து உடைத்துவிடுவாள் என்று அவர் எதிர்பார்க்கவில்லை.

 

இந்தரும் வேண்டுமென்பதை யோசிக்காது கேட்கும் ரகம் தான். மற்ற விஷயத்தில் எப்படியோ இந்த விஷயத்தில் இருவருமே ஒன்று போலத்தான் என்று எண்ணிக்கொண்டார்.

 

“குழலி எனக்கு உங்க அந்தரங்கம் தெரிய வேண்டியது இல்லை. அதே சமயம் ஒரு விஷயத்தை நான் உனக்கு தெளிவுப்படுத்தணும்.பெத்தவங்க பிள்ளைங்களுக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறது அவங்களோட சந்தோசத்துக்காக மட்டுமில்லை. வாழப் போற, வாழற ரெண்டு ஜீவனும் ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சு ஒண்ணா வாழ்றதை பார்க்கவும் தான்”

 

“நீ சொல்ற மாதிரி நான் கேட்காலும் கூட தப்பேயில்லை. ஏன்னா நீங்க ரெண்டு பேரும் அந்த சந்தோசத்தை அந்த நிம்மதியை எங்களுக்கு இந்த நிமிஷம் வரை கொடுக்கலை” என்றவர் சொல்லவும் குழலி அதற்குமேல் எதுவும் பேசவில்லை.

 

அவர் சொல்வதிலும் உண்மை இருக்கத்தானே செய்கிறது. தரங்கிணி அப்பேச்சை ஆரம்பித்த போது லேசாய் எழுந்த கோபம் கூட அவர் இறுதியாய் சொல்லியதில் மொத்தமாய் அடங்கியிருந்தது.

 

தவறு அவர்களின் மீதும் இருக்கிறது தானே. பிடித்தமோ பிடித்தமில்லையோ இருவரும் அப்பந்ததில் இணைந்தாயிற்று. இருவருக்குமான இடைவெளி அதிகமிருந்த போதும் அவர்கள் வேறு வாழ்வை நினைத்திருக்கவும் இல்லை.

 

ஒருவரை ஒருவர் புரிந்துக்கொள்ளவும் அனுசரணையாக நடந்துகொள்ளவும் அவர்கள் முயற்சி எடுக்க வேண்டும் தானே. தொட்டதிற்கும் கோவித்து கொண்டது அவளது தவறும் தானே.

 

அவள் தொட்டதிற்கும் கோவித்துக்கொள்ளவில்லை தான். ஆனாலும் சற்று பொறுத்திருக்கலாம் என்று அவள் மனமே எடுத்துரைத்தது. ஆனாலும்… என்று சொல்லி உள்ளே ஒரு குரல் அவளை அதற்கு மேல் யோசிக்கவிடாது செய்தது.

 

தரங்கிணி அந்த நிகழ்வுக்கு பிறகு அவளிடம் அந்த பேச்சை திரும்ப எடுக்கவில்லை. எப்போதும் போல அவர் இயல்பாகவே இருந்தார்.

 

“நாளைக்கு எங்காச்சும் அவுட்டிங் போகலாமா?? நாங்க இங்க வந்து இத்தனை நாள்ல எங்கயும் போகலை, வேலை வேலைன்னு இருந்தாச்சு. என்னம்மா சொல்றீங்க, டேய் அண்ணா உன் ஐடியா என்ன??” என்றான்.

 

“எனக்கு…”

 

“நீங்க போயிட்டு வாங்க. அவருக்கு வேலை இருக்கும் நான் வீட்டில இருக்கேன்” என்று முடித்தாள் குழலி சற்று சலிப்பாய்.

 

எப்போதும் நடப்பது தானே வாரத்தில் ஒரு நாள் வீட்டிலிருப்பான் வெளியே அழைத்துச் செல்வான் என்று அவள் நினைத்திருப்பாள்.

 

அது போலவே தான் நடக்கவும் செய்யும், வெளியே அழைத்துச் செல்வான் ஆனால் யாராவது எதற்காவது போன் செய்து வேலையிருக்கிறது என்று சொன்னால் போதும் உடனே அவளை கொண்டு வந்து வீட்டில் விட்டு கிளம்பிச் சென்றுவிடுவான்.

 

அதனாலேயே அவள் பெரிதாய் எதற்கும் ஆசைப்படுவதில்லை. இந்தர் எப்படியும் வரமுடியாது என்று தான் சொல்வான் அதனால் தான் அவன் பதில் சொல்லும் முன்னர் அவளே சொல்லியிருந்தாள்.

 

“என்ன இந்தர் உனக்கு வேலையிருக்கா என்ன??” என்றார் தரங்கிணி அவனைப் பார்த்து.

 

“என்னை எங்கயாச்சும் கொஞ்சம் பேசவிடுறீங்களா??” என்று அம்மாவையும் மனைவியையும் ஒருசேர முறைத்தான்.

 

“அவுட்டிங் போகலாம்ன்னு அவன்கிட்ட சொன்னதே நான் தான். அந்த மடையன் எனக்கு முன்னாடி சொல்லி என்னமோ நான் வரமாட்டேங்குற ரேஞ்சுக்கு மாமியாரும் மருமகளும் ஓவரா சீனை போடுறீங்க”

“அப்போ உங்களுக்கு வேலையில்லையா??” என்றாள் குழலி.

 

“நான் உன்கிட்ட வேலையிருக்குன்னு சொன்னனா??”

 

“இல்லை உங்களுக்கு எப்பவும் வேலை இருக்குமே அதான்”

 

“நாம நாளைக்கு காலையில மைசூர் போறோம். அங்க என்னோட கிளோஸ் பிரண்ட்கிட்ட பேசிட்டேன். அங்க பேலஸ் தான் இரண்டு நாள் தங்கப் போறோம். உங்களுக்கு தேவையானதை எல்லாம் எடுத்து வைங்க போங்க” என்றான் அவன் அனைவரிடத்தும்.

 

“நீ என்ன என்னை பார்த்து இளிக்குற. மைசூர் போகலாமான்னு நான் கேட்பேன் நீ என்னையே திருப்பி கேட்பியே. அடிச்சேன்னு வை…” என்று ஆத்விக்கை நோக்கி கையை நீட்டினான் இந்தர்.

 

“அவரை எதுக்கு அடிக்க போறீங்க??”

 

‘ஹ்ம்ம் உன்னை அடிக்க முடியலை அதான்’ என்று மனசாட்சி டக்கென்று பதில் கொடுத்து தொலைத்தது.

 

“அண்ணி இதெல்லாம் எங்களுக்குள்ள சகஜம் விட்டுத்தள்ளுங்க” என்றான் அவன் பூவென்று ஊதி தள்ளுவது போல்.

 

“அவங்களுக்குள்ள போகாத குழலி. கடைசியில நம்மளை தான் பைத்தியக்காரங்க ஆக்கிடுவானுங்க ரெண்டு பேரும். இவங்க தனித்தனியா இருந்தா அமைதியோ அமைதின்னு இருப்பானுங்க. ஒண்ணா சேர்ந்திட்டா சமாளிக்கிறது கஷ்டம்” என்றார் தரங்கிணி.

 

மறுநாள் அதிகாலையிலேயே குடும்பமாக அவர்கள் மைசூர் கிளம்பியிருந்தனர்.

Advertisement