Advertisement

 

15

“க்கா நீ எப்போக்கா இந்த ஏரியாக்கு வந்தே??” என்ற குதூகல குரலில் தெருவில் செல்லும் காய்கறி கடைக்காரன் இவளை பார்த்து குரல் கொடுத்திருந்தான்.

 

அவளுமே காய்கறி வண்டிக்காரன் குரல் கொடுத்த சத்தம் கேட்டுத்தான் வெளியில் வந்திருந்தாள். அவனைப் பார்த்ததும் அவன் குதூகலம் அவளையும் தொற்றிக்கொண்டது.

 

பின்னே அருகே எவரையுமே தெரியாது. அவள் அந்த ஏரியாவிற்கு வந்தே ஒரு வாரம் தான் ஓடியிருந்தது. தெரிந்த முகமென்று யாருமேயில்லை.

 

இதற்கு முன்பு இருந்த அபார்ட்மென்ட்டாவது யாராவது ஏறுவதும் இறங்குவதும் வெளியில் பால்கனியில் நின்று பார்த்தால் பார்க்கில் குழந்தைகள் விளையாடுவதும் கண்ணில்ப்படும்.

 

அதில் சில பரிட்சய முகங்களும் உண்டு. அவளைக்கண்டு சிரிப்பவரும் உண்டு, முகம் திருப்பிச் செல்பவரும் உண்டு. தெரிந்த முகங்கள் என்று சொல்வதை விட தினமும் பார்த்து பழகிப் போன முகங்கள் நிறைய பேர்.

 

இங்கோ அவள் வீட்டிலேயே அடைந்து கிடக்கிறாள். இப்படி கடைக்கு எங்கேனும் சென்றால் தான் உண்டு. அதனாலேயே தான் காய்கறி வண்டிக்காரனை பார்க்கவும் அவளுக்கு அப்படியொரு உவகை.

“ஆமா நீங்க என்னை எப்படி கூப்பிட்டீங்க??” என்றாள் இவள்.

 

“அக்கான்னு பாசாமா கூப்பிட்டேன்க்கா” என்றவருக்கு இவளைவிட குறைந்தது பத்து வயதாவது கூட இருக்கும்.

 

“ஏன் ண்ணே உனக்கு தங்கச்சி வயசு எனக்கு. என்னைய போய் அக்கான்னு சொல்லி உன் வயசை குறைச்சுக்க பார்க்கறியா”

 

“சரி விடு தங்கச்சி எனக்கு எல்லாரையும் அப்படி கூப்பிட்டு பழக்கமாகிடுச்சு அதான் உன்னையும் அப்படி கூப்பிட்டேன். ஆமா எங்க தங்கச்சி ரொம்ப நாளா உங்களை ஆளே காணோம்”

 

“நான் கூட நீ ஏரியா மாறிட்டேன்னு நினைச்சேன். நடுவுல ஒரு நாள் சாரை பார்த்தேன், அவராண்ட கூட விசாரிச்சேன் உங்களை எங்கேன்னு. சார் தான் நீ ஊருக்கு போயிட்டன்னு சொன்னாரு”

 

“ஆமாண்ணே நான் காலேஜ் படிப்பு முடிக்காம இருந்தேன். அதான் அதை முடிச்சுட்டு வரலாம்ன்னு ஊருக்கு போயிட்டேன்”

 

“அப்போ படிச்சுன்னு இருக்க சொல்லோ கல்யாணம் ஆகிடுச்சுன்னு சொல்லு” என்றான் அவன்.

 

“ஆமாண்ணே, அன்னைக்கு உன்கிட்ட சண்டை போட்டதுக்கு அப்புறம் என்கிட்ட பேசவே மாட்டேன்னு நினைச்சேன்”

“என்னைய பார்க்கவும் பாசமா கூப்பிட்டியே”

 

“என்ன தங்கச்சி இப்படி சொல்லிட்ட, நம்ம ஊரு ஆளுங்கன்னு தெரியாம அன்னைக்கு உன்கிட்ட எல்லாம் அதிகமா சொல்லிட்டேன். அதான் அன்னைக்கு வைச்சு விளாசிட்டியே”

 

“அதுல இருந்து யாருக்கும் அதிகமாலாம் வைக்கிறதே இல்லை தெரியுமா”

 

“கேக்கவே சந்தோசமா இருக்குண்ணா”

 

“வேணுங்கற காய் எடுத்துக்கோ தங்கச்சி. ஆமா ஏன் இந்த பக்கம் வீடு மாறின்னு வந்துட்டே”

 

“நான் ஊர்ல இருக்கும் போது அவங்க இங்க மாறிட்டாங்க”

 

“அந்த அபார்ட்மென்ட்ல ரொம்ப பிரச்சனை ஆகிடுச்சு தெரியுமா. அதான் நீங்க மாறிட்டீங்களோன்னு கேட்டேன்”

 

“என்னாச்சுண்ணா??”

 

“உங்க வீட்டுக்கு பக்கத்து வீட்டுல ஒருத்தன் இருப்பானே. மூஞ்சியை உம்முன்னு வைச்சுக்கிட்டு, அந்த ஹிந்திக்காரன் அவனால தான் பிரச்சனையே”

 

“அவனா??” என்றாள் இவள் கேள்வியாக.

 

“ஆமா சிஸ்டர் அவன் ஏதோவொரு பொண்ணுக்கிட்ட சில்மிஷம் பண்ணிக்கிறான். அவங்க போலீஸ் வரைக்கும் போய்ட்டாங்க, பெரிய பிரச்சனை ஆகி அவனை அரெஸ்ட் பண்ணிட்டு போய்ட்டாங்க” என்று அவன் கதை சொல்லவும் குழலிக்கு புரிந்து போனது இந்தர் ஏன் வீட்டை மாற்றியிருப்பான் என்று.

 

தான் சொல்லும் போது அவனுக்கு புரியாதது இப்போதாவது புரிந்ததே என்று எண்ணிக்கொண்டாள்.

 

“காய் இவ்வளோ போதுமா, கீரை கேப்பியே வாங்கலையா??” என்றான் அவன்.

 

“நாளைக்கு மணத்தக்காளி கீரை எடுத்துட்டு வாங்க. இது வேணாம்” என்றாள் அவள்.

 

“நாளைக்கு எடுத்ததுன்னு வர்றேன். அந்த கீரையில ரெண்டு மூணு தண்டை எடுத்து தொட்டியில நட்டு வை. அது நல்லா வளரும். வீட்டிலவே ஈசியா கிடைக்கும் அதை இனிமேலாம் காசு கொடுத்து வாங்காத”

 

“பார்றா அண்ணன் ரொம்பவே மாறிடுச்சு. அப்போ எல்லாமே நான் வீட்டிலவே வளர்க்க ஆரம்பிச்சுட்டா உனக்கு வியாபாரம் எப்படியாவும்”

 

“நான் சொல்லி நீ வைச்சா எனக்கு சந்தோசம் தான் தங்கச்சி. எல்லாருக்கும் தான் சொல்றேன் அதை யாரு பாக்குறது அதெல்லாம் கஷ்டம்ன்னு சலிச்சுக்குவாங்க சிலர். அவங்களுக்கு நல்லதை கொண்டு சேர்க்கறது என் கடமை தானே”

“மக்கள் எல்லாரும் ரொம்பவே சோம்பேறி ஆகிட்டாங்க. எல்லாமே இன்ஸ்டன்ட்டாவே கிடைக்கணும்ன்னு எதிர்பார்க்கறாங்க. விஷத்தையும் நல்லதுன்னு நினைச்சு வாங்கி சாப்பிடுறாங்க”

 

“இதே காயை சூப்பர் மார்கெட்ல அவன் சொல்ற விலைக்கு வாங்கிட்டு போறவங்க. நம்மகிட்ட தான் பேரம் பேசி குறைச்சு வாங்கிட்டு போவாங்க. ஒண்ணுமே சொல்றதுக்கு இல்லை தங்கச்சி”

 

“எவ்வளவு ஆச்சு??”

 

“நூத்திப்பத்தாச்சு”

 

“மறுபடியும் அதிக விலைக்கு சொல்ற மாதிரி இருக்கு”

 

“இப்போ விலை நிசமாவே ஏறிப்போச்சும்மா. நீயே டிவியில பார்த்திருப்பியே” என்றான் அவன்.

 

அலுவலகம் செல்ல கிளம்பி தயாராய் இருந்த இந்தர் வாயிலில் இருந்து அவர்கள் இருவரையும் தான் பார்த்திருந்தான். குழலி வந்தால் சொல்லிக்கொண்டு கிளம்பலாம் என்று நின்றிருந்தவன் அவள் வருவதாக காணோம் என்பதை உணர்ந்து கிளம்பி வெளியில் வந்தான்.

 

“குழலி” என்று அவன் குரல் கொடுக்க “இதோ வந்திர்றேன்” என்றவள் திரும்பவும் அவன் அருகே நின்றிருந்தான்.

 

“கிளம்பிட்டீங்களா??”

 

“ஹ்ம்ம்”

 

“சாரி சார் அம்மா பார்க்கவும் நான் பேசி டைம் வேஸ்ட் பண்ணிட்டேன். அம்மா நீ நாளைக்கு காசு கொடு இந்த ஏரியாக்கு நான் தினமும் வந்து போவேன்”

 

“இட்ஸ் ஓகே” என்று அவனிடம் சொல்லியவன் குழலியிடம் திரும்பி “நான் கிளம்பறேன்” என்றுவிட்டு வண்டியை எடுத்துக்கொண்டு சென்றுவிட்டிருந்தான்.

 

‘அச்சச்சோ என்ன நினைச்சாரோ தெரியலையே. ஒண்ணு சண்டை போடுறா இல்லை, கதை பேசுறான்னு நினைச்சிருப்பாரோ’ என்று யோசித்துக் கொண்டே உள்ளே சென்றாள்.

 

“அண்ணா போய்டாதீங்க நில்லுங்க, மிச்சக்காசு எடுத்திட்டு வந்திடறேன்”

 

“ஓகேம்மா”

 

மறுநாள் காலையில் சொல்லாமல் கொள்ளாமல் வந்திறங்கி இருந்தனர். அவளின் மாமனார், மாமியார் மற்றும் அவர்களின் இளையமகன் ஆத்விக்.

 

ஐந்தரை மணிக்கே அழைப்பு மணி ஒலிக்க மூடிய இமைகளை பிரிக்க முடியாமல் பிரித்தாள் குழலி. அருகில் இருந்த மொபைலை எட்டி எடுத்தவள் நேரம் பார்க்க ஐந்தரையாகி இருந்தது.

‘இந்த நேரத்துல யாரு கதவைத்தட்டுறா’ என்று எண்ணிக்கொண்டே அவள் எழுந்து அமரவும் இந்தரின் அலைபேசி ஒலியெழுப்பவும் சரியாக இருந்தது.

 

அவன் உறக்கம் கலைந்து யாரென்று பார்க்காமலே போனை எடுத்து காதில் வைத்தவன் சட்டென்று எழுந்து அமர்ந்திருந்தான்.

 

அதற்குள் குழலி வெளியே சென்றிருந்தாள் கதவை திறப்பதற்கு. பின்னோடே இந்தர் வரவும் திரும்பி அவனைப் பார்க்க “அம்மா அப்பா தான் கதவைத் திற” என்றான்.

 

“வர்றேன்னு சொல்லவே இல்லை”

 

“சர்பிரைஸ் விசிட்டாம்” என்றான் வெறும் வாயசைப்பாய். அதைப் பார்த்தவாறே அவள் கதவை திறந்தாள்.

 

“வாங்க அத்தை வாங்க மாமா” என்றவள் அவர்களிடமிருந்த உடமைகளை கைநீட்டி வாங்கினாள்.

 

“என்னைய வரவேற்க மாட்டீங்களா??” என்ற பழக்கமில்லாத குரல் கேட்கவும் இவள் அவர்கள் இருவருக்கும் பின்னால் பார்க்க ஆத்விக் நின்றிருந்தான் அங்கு.

 

இந்தர் எப்படியோ அப்படித்தான் ஆத்விக்கும் அவனை பார்த்திருக்கிறாளே தவிர பேசியதாக அவளுக்கு நினைவிலேயே இல்லை.

 

அவனாக பேசவும் என்ன பேச என்று ஒரு நொடி விழித்தவள் “சாரி நான் உங்களை எதிர்பார்க்கலை, உள்ள வாங்க. நல்லாயிருக்கீங்களா??” என்றாள்.

 

“ரொம்ப நல்லாயிருக்கேன்” என்றவன் “அண்ணா” என்று கத்திக்கொண்டு அவன் அண்ணனை ஓடிச்சென்று அணைத்துக் கொண்டான்.

 

“இப்போ தான் உனக்கு இந்தியா வர்றதுக்கு வழி தெரிஞ்சுதா” என்றான் தம்பியின் காதோடு.

 

“இங்க வந்தா அம்மா திரும்ப அனுப்பமாட்டாங்கன்னு தெரியும் அதான் இருந்து ஒரு அடிஷனல் கோர்ஸ் ஒண்ணும் முடிச்சுட்டு வந்தேன்”

 

“வேலை??”

 

“அதெல்லாம் பார்த்துக்கலாம் இனி…”

 

பின் அவன் அன்னை தந்தையும் வரவேற்றான் அவன். குழலி அவர்களுக்கு காப்பி போடச் செல்ல “கொஞ்சம் படுத்து தூங்கறோமே. எங்க எல்லார்க்குமே தூக்கம் வருது. எழுந்த பிறகு குடிக்கறோம்” என்றான் ஆத்விக்.

 

“அத்தை உங்களுக்கும் மாமாக்கும் காபி”

 

“எனக்கு வேணாம் குழலி உங்க மாமா எத்தனை காபி கொடுத்தாலும் குடிப்பார். அவருக்கு மட்டும் போட்டுக்கொடு, எனக்கும் அசதியா தான் இருக்கு, நான் போய் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுக்கறேன்” என்றார்.

“குழலி அந்த ரூமை கொஞ்சம் ஒதுங்க வைச்சு கொடு” என்றான் இந்தர்.

 

“கிளீனா தாங்க இருக்கு” என்றவள் அந்த அறைக்குச் சென்று மின்விசிறி, மின் விளக்கு இரண்டையும் போட்டுவிட்டு வந்தாள்.

 

மூவருமே சிறிது நேரத்தில் உறங்கியிருக்க இந்தரும் உறக்கத்தை தொடரச் சென்றுவிட்டான். ‘இதுக்கு மேல தூங்கி எப்போ எழுந்திருக்க’ என்றெண்ணிய குழலி குளியலறைக்குள் புகுந்திருந்தாள் குளிப்பதற்காய்.

 

அந்த வீட்டிற்கு வந்ததில் இருந்து அவள் மற்றொரு அறையில் குளித்து அங்கேயே உடைமாற்றி பின் தான் வேறு வேலைகளை பார்க்கச் செல்லுவாள். இன்று வேறு வழியில்லாது அவர்களின் அறையிலேயே அவள் தயாராக வேண்டி இருந்தது.

 

குளித்துவிட்டு எப்போதும் போல புடவையை சும்மா உடம்பில் சுற்றிக்கொண்டு உள்ளறைக்கு வந்திருந்தவள் இந்தர் உறங்குவதை உறுதிப்படுத்திக் கொண்டு புடவையை கட்டிக்கொண்டிருக்க கணவன் அவன் கள்வனாகி அவளை ரசித்துக் கொண்டிருந்தான் போர்வைக்குள்ளிருந்து வெளியே எட்டிப் பார்த்தவாறே.

Advertisement