Advertisement

14

மேற்கொண்டு பேச்சை வளர்த்தாது அவள் உடமைகளை எடுத்துக்கொள்ள போக அதற்குமுன் இந்தர் அவள் உடமைகளை கையில் எடுத்திருந்தான்.

 

“கொடுங்க நான் எடுத்திட்டு வர்றேன்”

 

“இட்ஸ் ஓகே” என்றவன் முன்னே செல்ல “கேட் பூட்ட வேண்டாமா திறந்தே இருக்கே”

 

“பாரு உன்கிட்ட பேசிட்டு வந்ததுல அதை மறந்திட்டேன்” என்றவன் வீட்டின் காரிடரின் முன்பு அவர்களின் உடைமைகளை வைத்துவிட்டு வெளியே வந்து கேட்டை பூட்டினான்.

 

“உள்ள வா” என்று அவளிடம் சொல்லி முன்னேச் சென்றவன் வீட்டை திறந்து மின் விளக்கை உமிழவிட்டான்.

 

குழலி சுற்றுமுற்றும் பார்த்தவாறே உள்ளே நுழைந்தாள். அவன் முதலில் இருந்தது அபார்ட்மெண்ட் வீடு. இப்போது இருப்பது தனி வீடு போல இருந்தது. எதற்கு இந்த மாற்றம் தான் என்று அவளுக்கு புரியவில்லை.

 

அக்கம் பக்கம் வீடுகள் நிறையவே இருந்தது. வரும் வழியை பார்த்துக் கொண்டு வந்தாள் தானே, நல்ல இடமாகத் தான் தோன்றியது. இருந்தாலும் ஏதோவொரு நெருடல் அவளுக்குள்.

 

“லாங் டிரைவ் பண்ணதுல நான் ரொம்பவே டயர்ட், ஒரு குளியல் போட்டு வந்திடறேன்”

 

“தண்ணி சுட வைக்கணுமா??”

 

“வேண்டாம் வந்ததும் கீசர் ஆன் பண்ணிட்டேன் ஐஞ்சு நிமிசத்துல தண்ணி சூடாகிடும். நீயும் குளிச்சுட்டு வா சேர்ந்தே சாப்பிடுவோம்”

 

“நானுமா எப்படி??”

 

அவள் முகத்தை எப்படியோ வைத்துக்கொண்டு கேட்டவிதம் அவனுக்கு சிரிப்பை வரவழைக்க அவளை சீண்டினான். “சேர்ந்து தான் குளிக்கணும்” என்றான் சாவதானமாய்.

 

“என்னது சேர்ந்தா??” என்றாள் இம்முறை அதிர்ந்து.

 

“சரி வா போவோம்” என்று அவள் கைப்பிடிக்க “நான் வரலை எனக்கு குளிக்கவே வேணாம்” என்றவளைப் பார்த்து சத்தமாகவே சிரித்தான் இந்தர்.

 

“இப்போ எனக்கு சேர்ந்து குளிக்கற ஐடியா எல்லாம் இல்லை, பயப்படாதே. இங்க இன்னொரு ரூம் இருக்கு அந்த ரூம் நீ யூஸ் பண்ணிக்கோ” என்று அவன் சொல்லவும் தான் சற்று ஆசுவாசம் அவளுக்கு.

 

“என்ன விளையாட்டு இது??”

 

“இது போல விளையாட்டை நான் விளையாடலைன்னு தானே உன் கோபம்”

 

“நான் எப்போ அப்படிச் சொன்னேன்”

 

“கொஞ்சம் முன்னாடி கார்ல வரும் போது சொன்னியே. உனக்கான நேரத்தை நான் செலவழிக்கலைன்னு”

 

“ஆமா சொன்னேன் அதுக்கும் இதுக்கும் என்ன சம்மந்தம்”

 

“கணவன் மனைவிக்குள்ள எல்லாமே தானே அடங்கும். காதலும் காமமும் ஊடலும் கூடலும் கூட அதுக்கு விதிவிலக்கு இல்லை தானே” என்றவனின் பார்வை முதன் முறையாய் குழலியை உரிமையுடன் பார்த்து ரசித்தது.

 

தன் பேச்சை வைத்தே தன்னிடம் அவன் விளையாடியது அவளுக்கு பிடித்தமில்லை தான். ஆனால் அதற்கு அவன் கொடுத்த விளக்கம் அப்பப்பா ‘இது எனக்கு தேவை தான்’ என்று எண்ண வைத்தது அவளை.

 

“வா உனக்கு ரூம் எல்லாம் சுத்தி காட்டுறேன்” என்று அவன் அழைக்க இங்க இருக்கறது நாலு ரூம் தானே நானே பார்த்துக்கறேன்” என்று மறுத்தாள் அவன் பார்வை தன்னை புதிதாய் பார்ப்பதை தள்ளி நிறுத்தும் நோக்குடன்.

 

இதுவரை இந்தரின் பார்வை அவள் கண்ணைவிட்டு கீழே இறங்கியதேயில்லை. சற்று முன் அதை தகர்த்தெறிந்தான் அவள் கணவன்.

 

தங்களுக்குள் எதுவும் சரியாகாது இருக்கும் இந்நிலையில் அவளால் அவன் பார்வையை ரசிக்கவும் ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை.

 

தனக்கு தேவையானதை எடுத்துக்கொண்டு அவள் ஒரு அறைக்குள் நுழைய நல்ல வேளையாக அது படுக்கையறை தான். அதனுடன் ஒட்டியிருந்த குளியலறைக்குள் நுழைந்திருந்தாள் அவள்.

 

அடுத்த அரைமணியில் இருவருமே உணவு மேஜையில் இருந்தனர். பேச்சில்லாமலே அவர்களின் இரவு உணவு முடிந்திருந்தது.

 

இந்தர் வலது புறத்தில் இருந்த படுக்கையறைக்குள் சென்றுவிட்டிருக்க இவள் உணவு மேஜையை ஒதுங்க வைத்து சாப்பிட்ட தட்டை கழுவி வரவும் மீண்டும் அங்கு வந்தான் அவன்.

 

“என்ன பண்ணிட்டு இருக்கே??”

 

“பிளேட்ஸ் கழுவிட்டு இருக்கேன்”

 

“மறந்து போயிட்டேன் அதை வாஷ் பண்ணத்தான் ஓடி வந்தேன்”

 

“நான் வாஷ் பண்ண மாட்டேனா??” என்றாள் முறைப்பாய்.

 

“நீ இல்லாதப்போ நான் தானே என் வேலையை செஞ்சுக்கிட்டேன்”

 

“அதான் வந்துட்டேன்ல”

 

“திரும்ப போக மாட்டேன்னு என்ன உறுதி”

 

“அதுக்கு என்னால பதில் சொல்ல முடியாது”

 

“நீ பதில் சொல்லித்தான் ஆகணும்” என்றவன் அவளை நகரவிடாது இருப்பக்கமும் அணைக்கட்டியிருக்க சங்கடமாய் நெளிந்தாள் அவள்.

 

“என்ன வேணும் உங்களுக்கு??”

 

“பதில்”

 

“போக மாட்டேன்”

 

“உண்மையா”

 

“உறுதியா சொல்றேன் நான் போறதா இருந்தா பிணமா தான்…” என்று அவள் சொல்ல வர அவள் வாயை பொத்தினான் அவன்.

 

“லூசு மாதிரி என்ன பேச்சு இது. நீ திரும்ப போகக்கூடாது அப்படிங்கறதுக்காக தான் உன்கிட்ட அதைப்பத்தி கேட்டேன். தேவையில்லாதது எல்லாம் பேசிட்டு”

 

“போறதுக்கு எனக்கு எந்த வீடும் இல்லை எனக்குன்னு வேற சொந்தமும் யாருமில்லை இந்த வீடு தான் கெதி இனி எனக்கு” என்று சொல்லும் போது தொண்டையடைத்து அவள் கண்கள் கலங்கியது.

 

“குழலி” என்றான் அவள் முகவாய் தொட்டு.

 

“வா…” என்று அவள் தோளணைத்து அந்த அறையின் விளக்கணைத்து படுக்கையறைக்கு அழைத்துச் சென்றான்.

 

“கண்டதும் யோசிச்சு குழம்பாத. உனக்கு என் மேல எந்த கோபமோ வருத்தமோ இருந்தாலும் பரவாயில்லை, அதைப்பத்தி எனக்கு கவலையுமில்லை”

 

“இந்த நிமிஷத்துல இருந்து நம்ம வாழ்க்கை புதுசா தொடங்குதுன்னு நினைச்சுக்கோ. போனதைப்பத்தி நமக்குள்ள பேசித் தீர்க்க வேண்டியதை அப்புறம் பார்த்துக்கலாம்”

 

“இப்போ நீ நிம்மதியா தூங்கு. ஊருக்கு நாளைக்கு பேசிக்கலாம். அம்மாவுக்கு மெசேஜ் பண்ணிட்டேன் நாம இங்க வந்திட்டோம்ன்னு”

 

அவள் மெல்ல தலையாட்ட “சியர் அப் குழலி” என்றவன் விடி விளக்கை ஒளிரவிட்டு தானும் அப்படுக்கையில் படுத்தான்.

 

குழலி படுக்காது அப்படியே அமர்ந்திருக்க “படும்மா” என்றான் அவன் அழுத்தி.

 

“ஹ்ம்ம்” என்றவள் மறுபுறம் படுத்தாள். அவ்விரவினில் இருவரையுமே நல்ல உறக்கம் ஆட்கொண்டது.

 

ஒரு வாரம் பெரிதாய் எந்த மாற்றமுமின்றி நகர்ந்தது. காரில் வரும் போது அவளிடம் கேட்ட கேள்வி எதையும் இந்தர் மீண்டும் அவளிடத்தில் கேட்கவில்லை.

 

அவளாகவே பேசட்டும் என்றுவிட்டுவிட்டான். முன்பு போல அல்லாது அவன் நேரமாய் வீட்டிற்கு வந்துவிடுவதால் வீட்டில் இருக்கும் நேரம் குழலியுடன் செலவழித்தான்.

 

“எப்போமே நிறைய வேலை இருக்குமே உங்களுக்கு”

 

“அப்பப்போ வீட்டு வேலையும் பார்க்கணும்ல”

 

“புரியலை”

 

“ஆபீஸ் வேலை மட்டுமே செஞ்சா எப்படி. என் மனைவிக்கு பிடிச்ச மாதிரி வீட்டையும் பார்க்கணும்ன்னு எப்பவோ முடிவு பண்ணிட்டேன். அதைத்தான் நிறைவேத்திட்டு இருக்கேன்”

 

“இதை கொஞ்சம் முன்னாடியே செஞ்சிருக்கலாம்” என்று மெல்லிய குரலில் அவனுக்கு கேட்கக்கூடாது என்று எண்ணி அவள் சொல்லியிருந்தாலும் அது அவன் காதில் விழுந்து தானிருந்தது.

 

“சிலருக்கு பட்டாத்தான் தெரியும்ன்னு சொல்வாங்கல. நான் அந்த ரகம் தான்” என்றவனை ஆச்சரியமாகவே பார்த்தாள்.

 

பெரும்பாலும் ஆண்கள் தாங்கள் செய்யும் தவறுகளை ஒத்துக்கொள்ளவே மாட்டர். அதை பூசி மெழுகவோ நடந்ததை மறைக்கவோ இல்லையென்று சாதிக்கவோ தான் முயலுவர்.

 

இந்தரோ அதிலிருந்து வேறுபட்டு அவன் தவறை ஒப்புக்கொண்டது தான் அவளின் ஆச்சரியத்திற்கு காரணமே.

 

“நான் சீக்கிரம் வந்தது உனக்கு பிடிக்கலையா??”

 

“நான் அப்படி சொல்லலை, நம்ம வீட்டில இதுக்கு முன்னாடி நடந்ததை தானே சொன்னேன். புதுசா எதுவும் சொல்லலையே. இனி நீங்க சீக்கிரம் வந்தா எனக்கு சந்தோசம் தானே” என்று அவள் சொல்லவும் அவன் முகத்தில் ஒரு மென்மையான உணர்வு தோன்றியது.

 

“அப்போ நான் சீக்கிரம் வர்றது உனக்கு சந்தோசத்தை கொடுக்குதுன்னு சொல்றே” என்றவன் சொல்லவும் ஆமென்று அவள் தலையாட்டிவிட இந்திரஜித்தின் பார்வை அவளை கூர்மையாக பார்த்தது.

 

‘இதென்ன இப்படி பார்க்குறாரு. நான் என்னத்தை இப்போ தப்பா சொல்லிட்டேன். இதுக்கு ஏதாச்சும் வேற மீனிங் இருக்குமோ’ என்ற ரீதியில் அவள் யோசனை செல்ல இந்தர் அவளின் முகம் பார்த்து வாய்விட்டு சிரித்துவிட்டான்.

 

“எதுக்கு சிரிப்பு??”

 

“நாம இப்போ என்ன தப்பா சொல்லிட்டோம் இவன் இப்படி பார்க்குறானேன்னு தான் யோசிச்ச”

 

“ஹ்ம்ம்”

 

“இதுவரைக்கும் நீ சந்தோசமா சிரிச்சு பேசி நான் பார்த்ததில்லை. என்னோட வரவு உனக்கு சந்தோசம் தரும்ன்னா நான் உன்னை பாதிக்கறேன் தானே. அதை நினைக்கவும் உள்ளுக்குள்ள ஜில்லுன்னு இருந்துச்சு”

 

‘இவரு இதுவே இப்போ தான் கண்டுப்பிடிக்கிறாரா. போய்யா உன்னைக் கட்டிக்கிட்டு நான் படுற பாடு இருக்கே’ என்று பெருமூச்சை வெளியேற்றினாள் குழலி.

Advertisement