Advertisement

13

“வண்டியை நிறுத்திட்டு என்னைப் பார்க்கிற அளவுக்கு இதுல என்ன இருக்கு. நிஜமாவே உங்க வேலைப்பத்தி எனக்கு முழுசா தெரியாது. நீங்க எதையுமே என்கிட்ட ஷேர் பண்ணிக்கிட்டதில்லையே” என்று அவள் சொல்லும் போது தான் அவனுமே உணர்ந்தான் அதை.

 

‘ஆமா எதுவும் சொன்னதில்லை’ என்று ‘ஆபீஸ்ல இருந்து வர லேட் ஆகும், சீக்கிரம் போகணும், இந்த சண்டே எனக்கு வேலை இருக்கு’ இப்படித்தான் அதிகம் சொல்லியிருக்கிறான்.

 

ஒரு நாள் கூட அவளிடம் உட்கார்ந்து பேச அவனுக்கு நேரமில்லாது போனதை நினைத்து வெட்கினான்.

 

“உங்களை சொல்லி தப்பில்லை. ஏன்னா உங்க மனசுல நான் அந்த இடத்துல தான் உட்கார்ந்திருக்கேன்”

 

“என்னைப் பார்த்தா அப்போ உங்களுக்கு சண்டைக்காரியா மட்டும் தான் தெரிஞ்சது சரி தானே” என்ற அவளின் கேள்விக்கும் அவனின் பதில் ஆம் என்பது தான். வாய்விட்டு பதில் சொல்லாது போனாலும் அவன் பார்வை அந்த பதிலை கொடுத்தது அவளுக்கு.

 

“இவ என்னடா ஒருத்தர் விடாம சண்டை போடுறா இவளை போய் கட்டி கூட்டிட்டு வந்திட்டோமே, இவ கூட எப்படி குடும்பம் நடந்தப் போறோம்ன்னு கூட உங்களுக்கு தோணியிருக்கும்” என்று அவள் சொல்ல அவன் தலை மறுப்பாய் ஆடியது.

“நான் ஒரு நாளும் அப்படி நினைச்சதில்லை. நீ சண்டை போடுறது எனக்கு பிடிக்கலை தான், ஏன்னா அந்த அபார்ட்மெண்ட்ல என்னை யாருக்குமே தெரியாது. நான் இருக்க இடம் தெரியாம தான் இருந்திருக்கேன்”

 

“போறதும் தெரியாம வர்றதும் தெரியாம தான் இருக்கும் என்னோட இருப்பு. எனக்கு சத்தம் போட்டு பேசுறது பிடிக்கிறதில்லை, சண்டை போடுறதும் அப்படித்தான்”

 

“எனக்கு பிடிக்கலைன்னா அந்த இடத்துல நான் இருக்க மாட்டேன். என் கோபத்தை கூட சத்தம் போட்டு வெளிப்படுத்தினதில்லை. அந்த மாதிரியே நான் வளர்ந்திட்டேன்”

 

“அப்படியிருந்த எனக்கு நீ சத்தம் போட்டு பேசுனதும் சண்டை போட்டதும் ஒரு சதவீதம் கூட பிடித்தமில்லாம தான் இருந்துச்சு. ஆனா அதுக்காகவெல்லாம் உன்னைவிட்டு போகணும்ன்னோ உன் கூட வாழவே கூடாதுன்னோ நான் என்னைக்குமே நினைச்சதில்லை”

 

“மூணு வருஷமாவே வீட்டில என்னை கல்யாணம் பண்ணிக்கச் சொல்லிட்டு இருந்தாங்க. எனக்கு என் வேலையில பெரிசா எதையும் சாதிக்காம கல்யாணமே பண்ணிக்கூடாதுன்னு தோணிச்சு”

 

“அதனால தான் நான் டிலே பண்ணிட்டு இருந்தேன். அந்த நேரத்துல தான் வீட்டில உன்னை கல்யாணம் பண்ணிக்கச் சொல்லி கேட்டாங்க. ஆரம்பத்துல வேணாம்ன்னு தான் சொன்னேன், ஆத்தா பேசினாங்க. பெரிசா மறுக்கத் தோணலை சரின்னு சொல்லிட்டேன்”

“அன்னைக்கு நீ எனக்கு சண்டைக்காரி தான் தெரிஞ்சே. ஆனா இப்போ அப்படியில்லை” என்று சொல்லும் போது அவன் முகத்தில் ஒரு இளக்கம் தெரிந்தது.

 

‘என்ன அதிசயம் நடந்திருக்கும்’ என்று தான் அவனைப் பார்த்திருந்தாள் அவள், உடன் நம்பாத பார்வையும் தான்.

 

“நீ நம்பலைன்னு தெரியும், ஆனா நான் சொன்னது உண்மை தான். அதை உனக்கு அப்புறம் சொல்றேன், இல்லைன்னா நம்ம வீட்டுக்கு போகவுமே உனக்கு புரியும்” என்றான் பீடிகையாய்.

 

“என்னனு சொல்லுங்க??”

 

“அதான் புரியும்ன்னு சொல்லிட்டேன்ல. நீ மேலே சொல்லு”

 

“என்னைப்பத்தி உங்க அபிப்பிராயம் அப்போ சண்டைக்காரி, வாயாடி, பிடிவாதக்காரி அப்படித்தானே இருந்துச்சு”

 

அதை அவன் மறுப்பதற்கில்லை “ஹ்ம்ம் சரி தான்” என்று தயங்காது ஒப்புக்கொண்டான் அவன்.

 

“நீங்களும் நானும் ஒண்ணா ஒரே வீட்டில தான் இருந்தோம். ஆனா எனக்கு என்ன பிடிக்கும் பிடிக்காதுன்னு உங்களுக்கு தெரியுமா”

 

“இதுக்கும் நான் கேட்டதுக்கும் என்ன சம்மந்தம்”

 

“பதில் சொல்லுங்க”

 

“தெரியாது அது ஏன்னு தான் உனக்கே தெரியுமே”

 

“உங்க வேலை அப்படி அதானே. நம்ம பர்ஸ்ட் நைட்ல நீங்க என்ன சொன்னீங்கன்னு ஞாபகம் இருக்கா??”

 

“என்ன சொன்னேன்??”

 

“நாம அதிகம் பேசிக்கிட்டதில்லை. ஒருத்தரை ஒருத்தர் நாம புரிஞ்சுக்க அவகாசம் வேணும் அதுக்கு பிறகு மத்ததெல்லாம் யோசிக்கலாம்ன்னு சொன்னீங்க தானே”

 

“அதுக்கென்ன இப்போ”

 

“அதுக்கு எந்த முயற்சியாச்சும் எடுத்தீங்களா??”

 

“என் வேலை…” என்று ஆரம்பித்து நிறுத்திவிட்டான் அவன்.

 

“ஓகே லீவ் இட் அது என்னோட தப்பு தான். அது ஒரு முக்கியமான ப்ராஜெக்ட் அதுல நான் இடம் பிடிக்கணும்ன்னு தான் அவ்வளவு போராட்டம். அந்த நேரத்துல தான் நம்ம மேரேஜ் நடந்துச்சு”

 

“அந்த ப்ரஷர் எனக்கு ரொம்பவே இருந்துச்சு. என்னால வேற எதுலயும் கவனம் செலுத்தவே முடியலை. அது மட்டும் தான் நான் அப்படியிருக்க காரணம். நான் சொல்றது உனக்கு புரியுது தானே”

 

“ஹ்ம்ம்”

 

“நீங்க யூஎஸ் போறேன்னு சொல்லி என்னை ஏன் எங்க வீட்டுக்கு அனுப்பினீங்க??”

 

“நானும் இல்லை நீ தனியா பெங்களூர்ல என்ன பண்ணியிருக்க முடியும். அதனால தான் உன்னை எங்க வீட்டுக்கு போகச் சொன்னேன். நீ தான் முடியாதுன்னு உங்க வீட்டுக்கு போய்ட்ட, சரி அதுவும் நல்லது தான்னு நான் சரின்னு சொன்னேன்”

 

“என்னை கூட்டிட்டு போய் விடணும்ன்னு உங்களுக்கு ஏன் தோணலை??”

 

“ஹேய் இது ரொம்ப சில்லியா இருக்கு. உன்கூட எல்லாத்துக்கும் நான் வந்திட்டு இருக்க முடியுமா சொல்லு. தவிர அம்மாவும் அப்பாவும் உன்னை கூட்டிட்டு போய் விட வந்தாங்க தானே”

 

“நீங்க ஏன் வரலை??”

 

“நான் தான் ஊருக்கு கிளம்பற அவசரத்துல இருந்தேன் தானே”

 

“சரி ஊருக்கு போற அவசரத்துல இருந்தீங்க. திரும்பி வந்த பிறகு என்ன அவசரம்??”

 

“புரியலை எனக்கு??” என்று சாலையில் ஒரு பார்வை வைத்து பின் இவளையும் பார்த்தான்.

 

“திரும்பி வந்த பிறகும் கூட நீங்களா வந்து என்னை கூப்பிடவே இல்லை அது ஏன்??”

 

“திரும்பவும் வேலையை காரணம் சொல்லாதீங்க”

 

“அது மட்டும் தானே உண்மை முக்கியமான மிஷன் அது அதுக்கான பிளானிங் எக்ஸ்கியூட்டிங்ன்னு ஒவ்வொரு டீம் கூடவும் டிஸ்கஷன் போயிட்டு இருந்துச்சு”

 

“எனக்கு உங்க வேலையை பத்தி தெரிய வேணாம். அதுக்கான நேரத்தை எனக்காக செலவு பண்ணுங்கன்னு சொல்லி நான் உங்களை கேட்கலை. எனக்கான நேரத்தை ஏன் எனக்காக செலவு பண்ணலைன்னு தான் கேட்கறேன்” என்றாள் மிகத் தெளிவாக.

 

அவளின் கேள்வியிலும் எண்ணத்திலும் அவன் அசந்து தான் போனான். “நான் என்ன பண்ணியிருக்கணும்??” என்றான் அவளையே பார்த்தவாறு.

 

“நாம இந்த பேச்சை இப்போவே ஆரம்பிச்சிருக்கத் தேவையில்லை” என்றாள்.

 

“ஏன்??”

 

“டிரைவிங்ல இருக்கீங்க என்னோட பேச்சு உங்களை டிஸ்டர்ப் பண்ணலாம்”

 

“டிஸ்டர்பன்ஸ் இல்லை உன்னை நேருக்கு நேர் பார்த்து பதில் சொல்ல முடியலையே தவிர எனக்கு எந்த கஷ்டமும் இல்லை”

“எனக்கிருக்கு??”

 

“என்னது??”

 

“உங்களை நேருக்கு நேர் பார்த்து பேச முடியலைன்னு எனக்கு கஷ்டமா இருக்கு??”

 

“உன் பக்கத்துல தானே நானிருக்கேன்”

 

“பக்கத்துல தான் இருக்கீங்க ஆனா பக்கவாட்டுல இருக்கீங்க”

 

“உன்னை நான் ரொம்பவே சாதாரணமா நினைச்சுட்டேன்”

 

“எல்லா கணவர்களுக்கும் பொண்டாட்டின்னா ரொம்பவே சாதாரணம் தான்”

 

“நான் அப்படியில்லை”

 

“இப்போ தானே கொஞ்சம் முன்னாடி நீங்க சொன்னீங்க, என்னை சாதாரணமா நினைச்சுட்டதா”

 

“அது… அது வேற ஒரு விஷயத்துக்காக சொன்னது”

 

“நீங்க எதை நினைச்சு அதை சொல்லியிருந்தாலும் அதுக்கான அர்த்தம் ஒண்ணு தான்”

 

“நீ அதை விடு, நாம பேசிட்டு இருந்த விஷயத்துக்கு வருவோம்”

 

“வீட்டுக்கு போய் பேசிக்கலாம்” என்று அவள் பிடித்த பிடியிலேயே நிற்க அதன் பிறகு மௌன மொழி மட்டுமே அங்கு ஆட்சி செய்தது.

 

அவன் அவளைப் பற்றியும் அவள் அவனைப் பற்றிய எண்ணத்திலும் முழுகினர். அவர்கள் பெங்களூர் வந்தடைய இரவாகியிருந்தது. வரும் வழியிலேயே இருவருக்கும் உணவை வாங்கிவிட்டிருந்தான் இந்தரஜித்.

 

“வீட்டில போய் செஞ்சுக்கலாம்ல” என்று மறுத்தாள் குழலி.

 

“வீட்டில ப்ரொவிஷன்ஸ் எதுவுமில்லை. நாளைக்கு உன்னை கூட்டிட்டு போய் வாங்கி தர்றேன். இன்னைக்கு கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ”

 

“நான் ஒண்ணும் எனக்காக சொல்லலை” என்றாள் ரோஷமாய்.

 

“சரி இருக்கட்டும் விடு” என்றிருந்தவன் வீட்டிற்கு செல்ல “இது நாம போற ரூட் தானா??” என்றாள் அவனிடம் கேள்வியாய்.

 

“ஹ்ம்ம்”

 

“நம்ம வீட்டுக்கு இந்த ரோடு வழியாவா போகணும்”

 

“ஆமாம்ன்னு தான் முன்னவே சொல்லிட்டனே”

 

“இல்லை இது…” என்று அவள் குழப்பமாய் அவனைப் பார்த்துக் கொண்டிருக்கும் போதே வண்டி ஒரு வீட்டின் முன் நின்றது. இந்தரே இறங்கிச் சென்று பூட்டியிருந்த கேட்டை திறந்துவிட்டு பின் வண்டியை உள்ளே சென்று நிறுத்தினான்.

 

“இது யாரு வீடு??” என்றாள் அவன் மனைவி கிசுகிசுப்பாய்.

 

“இது தான் நம்ம வீடு இனி, உள்ள வா” என்றவனை யோசனையுடன் ஏறிட்டாள் குழலி.

 

Advertisement