Advertisement

 

12

வண்டியில் ஏறி சிறிது நேரம் தான் விழித்திருந்தாள். வண்டி பைபாஸில் செல்ல ஆரம்பித்ததுமே அவளை அப்படியொரு உறக்கம் ஆட்க்கொண்டிருந்தது.

 

சீட்டில் இரு காலையும் குறுக்கிக்கொண்டு இருகைகளாலும் காலைக் கட்டிக்கொண்டு தலைசாய்த்து படுத்திருந்தவளின் தோற்றம் எதுவோ செய்ய வண்டியை ஒரு ஓரமாய் நிறுத்தினான்.

 

சீட்டை பின்னால் சாய்த்து அவள் கைகளை தளர்த்தி காலுக்கு விடுதலை கொடுக்க உறக்கத்திலேயே அவளும் திரும்பி படுத்தாள். அவளுக்கு சீட் பெல்ட் மாட்டிவிட்டு நன்றாக அவளைப் படுக்க வைத்துவிட்டு பின் வந்து வண்டியை எடுத்தான் இந்திரஜித்.

 

காரின் வேகம் ஒரே சீராக இருக்க மணி ஒன்றரையை நெருங்கியிருந்த வேளையில் ஒரு ஹோட்டலுக்கு முன் காரை நிறுத்தினான். அவன் காரைவிட்டு இறங்கி இவள் புறம் வரவும் அவள் சரியாக கண் திறந்தாள்.

 

“என்னாச்சு??” என்று அலங்க மலங்க விழித்தாள்.

 

“ஒண்ணும்மில்லை மதிய நேரமாச்சு. சாப்பிட வேணாமா அதான்”

 

“ஓ!! ஆனா எனக்கு பசிக்கலையே!!”

 

“எனக்கு பசிக்குது”

“சரி சாப்பிட்டு வாங்க நான் இங்கவே இருக்கேன்” என்றவளை அவன் முறைக்கவும் என்ன தோன்றியதோ கதவை திறந்துக் கொண்டு தானும் இறங்கினாள்.

 

அவன் வண்டியில் இருந்து அவன் பையை எடுத்துக் கொண்டு உள்ளே செல்ல “சாப்பிட தானே போறோம் எதுக்கு பை??” என்ற அவளின் கேள்விக்கு அவன் பதிலே சொல்லவில்லை.

 

உள்ளே சென்றவன் லிப்ட்டுக்குள் நுழைய “சாப்பிட போறதுக்கு எதுக்கு இம்புட்டு அலப்பறை. கீழே இருக்கற ஹோட்டல்க்கு போனா ஆகாதா” என்று வெளிப்படையாகவே அவள் முணுமுணுத்தாள்.

 

லிப்ட் இரண்டாம் தளத்தில் நிற்க இந்தர் பையுடன் முன்னே சென்றான். “இங்க எதுக்கு கூட்டிட்டு வர்றாரு. சாப்பிட தானே போகணும்ன்னு சொன்னாரு” என்று தனக்குள் பேசிக்கொண்டே அவன் பின்னேயே அவளும் ஓட அவன் ஒரு அறைக் கதவை திறந்துக் கொண்டு உள்ளேச் சென்றான்.

 

“இங்க எதுக்கு வந்திருக்கோம்” என்ற அவளின் கேள்விக்கு பதில் சொல்லும் முன் கதவை சாற்றிவிட்டு வந்து ஏசியை ஆன் செய்துவிட்டு கட்டிலில் சாய்ந்து கால்களை நீட்டி உட்கார்ந்தான்.

 

“உங்களைத் தான் கேட்டேன் இங்க எதுக்கு வந்தோம்”

 

“பர்ஸ்ட் பண்ணுறதுக்கு” என்றான் அவன் கிண்டலாய்.

 

“என்னது??” என்று அதிர்ந்த பார்வை பார்த்தாள் அவள்.

 

அதில் அவனுக்கு சிரிப்பு வர அவளை இன்னும் கலவரப்படுத்த ஆசை வந்தது அவளின் கணவனுக்கு.

 

“ஆமா போற வழியிலவே எல்லாம் முடிச்சிடலாம்ன்னு முடிவு பண்ணிட்டேன். இந்த ஹோட்டல்ல தான் இன்னும் ஒரு வாரத்துக்கு இருக்க போறோம். நைட் ரூம் டெகரேட் பண்ணச் சொல்லியிருக்கேன்” என்றான் வெகு சீரியசான குரலில்.

 

“யாரைக் கேட்டு இதெல்லாம் செஞ்சீங்க??”

 

“யாரை கேட்கணும்??”

 

“என்னை கேட்கணும்?? என் விருப்பத்தை கேட்காம நீங்களா முடிவு செய்வீங்களா??”

 

“சரி சொல்லு உன் விருப்பம் என்ன??”

 

“இது இதெல்லாம் வேணாம்”

 

“ஏன்??”

 

“வேணாம்”

 

“அதான் ஏன்??”

 

“நமக்குள்ள எதுவும் சரியாகலை”

 

“சரியாகணும்ன்னு தான் நானும் இப்படி ஒரு முடிவெடுத்தேன்” என்று அவன் சொல்லி முடிக்கும் போது அவள் கண்கள் கலங்க ஆரம்பித்தது.

 

“இல்லை வேணாம்… இல்லை வேணாம்…” என்று சொன்னதையே அவள் திருப்பி சொல்லிக் கொண்டிருந்ததை பார்த்தவனுக்கு பாவமா இருந்தது அவளைக் கண்டு.

 

“குழலி” என்று அவன் அழைக்க அவளோ “இல்லை வேணாம்” என்றாள் மீண்டும்.

 

“குழலி என்னைப் பாரு”

 

“பார்க்க மாட்டேன் வேணாம்”

 

“சும்மா தான் சொன்னேன். அப்படியெல்லாம் எதுவும் இங்க நடக்கப் போறதில்லை. ஐ நீட் சம் ரெஸ்ட், நைட் சரியா தூங்கலை நானும். ரொம்ப நேரமா வண்டி ஓட்டிட்டு இருக்கேன். தூக்கம் வர்ற மாதிரி இருந்துச்சு”

 

“அதான் ஹோட்டல்ல வண்டியை நிறுத்தினேன். ரூம் போட்டு கொஞ்ச நேரம் தூங்கலாம்ன்னு”

 

“அப்போ சாப்பிடுறதுக்குன்னு சொன்னது. பா… பா…” என்று இழுத்து நிறுத்திவிட்டாள்.

 

“அதெல்லாம் விளையாட்டா சொன்னது. சாப்பிடுறதுக்குன்னு சொன்னது மட்டும் தான் நிஜம், மீல்ஸ் சொல்லியிருக்கேன் இப்போ கொண்டு வருவாங்க. சாப்பிட்டு கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுப்போம். ஒரு நாலு மணி போல கிளம்பலாம்”

 

“இதுக்கு பேசாம ஊர்லவே ரெஸ்ட் எடுத்துட்டு கிளம்பியிருக்கலாம்” என்றாள்.

 

“அங்க நான் ரெஸ்ட் எடுத்திருந்தா நீ என் கூட கிளம்பி வந்திருப்பியோ மாட்டியோ”

 

“கண்டிப்பா வந்திருப்பேன்” என்றாள் விறைப்பாய்.

 

“அதெப்படி அவ்வளவு உறுதியா சொல்றே. எனக்கு நம்பிக்கையில்லை”

 

“எனக்கு இனிமே அங்க யாரு இருக்கா அங்க போக” என்றாள் விட்டேத்தியான குரலில்.

 

பேச்சு எங்கோ திசை மாறி செல்வதை உணர்ந்தவன் அதை மாற்றும் பொருட்டு வேறு பேச வாயை திறக்கும் முன் அழைப்பு மணி ஒலித்தது.

 

அவன் எழுந்து வெளியே சென்றவன் திரும்பி வரும் போது இருவருக்குமான உணவுடன் வந்தான். அவளிடம் ஒன்றை கொடுத்து “சாப்பிடு” என்றான்.

 

“நான் தான் பசிக்கலைன்னு சொன்னேன்ல”

 

“கம்பெனி கொடுக்கவாச்சும் சாப்பிடு”

 

“வேணாம்”

“ப்ளீஸ்” என்று அவன் சொல்லவும் தட்டை வாங்கிக் கொண்டாள்.

 

இருவருமாக உண்டு முடிக்கவும் பத்து நிமிடம் அறைக்குள்ளேயே நடந்தான். சிறிது நேரத்தில் கட்டிலில் படுத்தவன் அவளை நோக்கி “நான் தூங்கப் போறேன். நீயும் ரெஸ்ட் தூங்கு. கிளம்பும் போது நான் எழுப்பறேன்”

 

“எனக்கு தூக்கம் வரலை. இவ்வளவு நேரம் தூங்கிட்டு தானே வந்தேன். நீங்க படுங்க” என்று சொல்லிவிட “டிவி வேணா போட்டுப் பாரு” என்று ரிமோட்டை அவள் புறம் கொடுத்துவிட்டு ஓரிரு நிமிடங்களிலேயே கண்ணயர்ந்துவிட்டான் அவன்.

 

“தூங்குறாரு டிவி பார்த்தா டிஸ்டர்ப் ஆவாது” என்றுவிட்டு அவனை திரும்பி பார்க்க அவனோ ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றுவிட்டிருந்தான்.

 

யார்கிட்டயாச்சும் பேசுவோம் பொழுது போகும் என்று யோசித்தவள் போனை எடுத்து நோண்டிக் கொண்டிருந்தாள். எப்படி நெட்டித் தள்ளிய போதும் பொழுது கொஞ்சம் தான் கடந்திருந்தது.

 

முன்பே யோசித்தது போல யாரிடமாவது பேசுவோம் என்றவளின் விரல்கள் காண்டக்ஸ் லிஸ்ட்டில் மேலும் கீழும் நகர்த்தி தன்னையுமறியாமல் கயல்விழியின் எண்ணையே தேர்ந்தெடுத்திருந்தது.

 

அழைப்பு மணியை அழுத்த விரல்கள் நகரவும் சுதாரித்து அலைபேசியை தூக்கி வீசினாள் கட்டிலின் மீது. இரவு அவளுக்கும் கயல்விழிக்குமான பேச்சு வார்த்தையே அவன் எண்ணத்தை ஆக்கிரமித்தது. கட்டுப்படுத்த முடியாது அழுகை வந்தது.

 

காலையில் கயல்விழியை திரும்பிக் கூட பார்க்காது வந்த தன் மடத்தனத்தை எண்ணி இன்னமும் அழுகை கூடியது. ஒருவாறு தன்னையே அவள் சமாதானம் செய்து குளியலறைக்குள் சென்று முகத்தை நன்றாக கழுவிக்கொண்டு வந்து அமர இந்தரின் அலைபேசியில் அலாரம் அடித்தது.

 

திடிரென்று கேட்ட சத்தத்தில் அவள் திடுக்கிட்டு பார்க்க இந்தர் கண் விழித்தான். ‘ச்சே அலாரமா என்னவோ ஏதோன்னு பயந்துட்டேன். தூங்கி எழுந்துகறதுக்கெல்லாமா அலாரம் வைப்பாங்க. என்கிட்ட சொல்லியிருந்தா எழுப்பி இருக்க மாட்டேனே’ என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டாள்.

 

“என்ன யோசனை??” என்றான் இவளின் முகம் பார்த்து.

 

“அலாரம் எதுக்கு??”

 

“எழுந்துக்கறதுக்கு தான்”

 

“ஏன் நாங்க எழுப்ப மாட்டோமா??”

 

“இந்த இரண்டு வருஷமா நீ தான் எழுப்பினியா??” என்ற அவன் கேள்வி அவள் வாயை மூட வைக்க அதற்கு மேல் ஒன்றும் சொல்லவில்லை அவள். இருவருக்குமாக காபியை வரவழைத்தான்.

காபி அருந்தி முடித்ததும் அறையை காலி செய்துவிட்டு அவர்கள் கீழே வர குழலியை காருக்கருகில் காத்திருக்கச் சொல்லிவிட்டு அவன் செட்டில் செய்து வந்தான்.

 

மீண்டும் அவர்களின் பயணம் அந்த நெடுஞ்சாலையில் ஆரம்பித்தது. ‘இப்படித்தான் எங்க வாழ்க்கையும் நீண்டு இருக்கில்ல’ என்று அவளின் மனம் எடுத்துக் கொடுக்க அருகிருந்தவனை சத்தமேயில்லாமல் மெல்ல திரும்பிப் பார்த்தாள்.

 

“என்ன என்னைய பார்த்திட்டு இருக்க தூக்கம் வரலையா??” என்றான் இந்தர் அவளை திரும்பி பார்க்காமலே.

 

“கழுகு கண்ணு” என்றாள் வாய்விட்டு.

 

அவள் சொன்னதைக் கேட்டு அவனும் வாய்விட்டு சிரித்தான்.

 

“எதுக்கு சிரிப்பு??”

 

“என் கண்ணை கழுகு கண்ணுன்னு சொன்னியே அதைக்கேட்டு தான்”

 

“அது ஒண்ணும் பெரிய காமெடி இல்லை”

 

“அச்சச்சோ எனக்கு அது தெரியாம போச்சே. அப்போ நான் எப்படி ரியாக்ட் பண்ணணும்??” என்றான்.

 

“போதும்” என்றவள் திரும்பிக் கொண்டாள். சிறிது நேரம் எதையோ யோசித்த இந்தர் மெதுவாய் அவள் புறம் திரும்பி “உன்கிட்ட ஒண்ணு கேட்கணும்” என்றான்.

 

“என்ன??”

 

“அமைதியா நான் கேட்கறதுக்கு பதில் சொல்வியா”

 

“நான் அடங்காபிடாரியாவா இருக்கேன்”

 

“இப்படி எகனை மொகனையா பேச எனக்கு வராது”

 

“என்ன கேட்கணும்” என்றாள் சற்றே தணிந்த குரலில்.

 

“நீ எதுக்காக ஊர்லவே இருந்தே?? பெங்களூர்க்கு வரமாட்டேன்னு ஏன் பிடிவாதம்??”

 

“பிடிவாதம் எனக்கா இல்லை உங்களுக்கா??”

 

“நான் என்ன செஞ்சேன்”

 

“என்னை கூட்டிட்டு போய் தான் நீங்க விடலை. திரும்ப வந்து கூட்டிட்டு போக கூட உங்களால முடியலையா??”

 

“இது ஒரு குத்தமா என் வேலையைப் பத்தி உனக்கு தெரியாதா??”

 

“தெரியாது…” என்று அவள் சொல்லவும் வண்டியை சடன்பிரேக் போட்டு நிறுத்தியவன் அவளைத் தான் பார்த்திருந்தான்.

Advertisement