Advertisement

 

11

இந்தர் அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தவன் மெல்ல திரும்பிப்படுத்தான். அருகே வாகாய் பற்றிக்கொள்ள ஏதுவாய் எதுவோ தட்டுப்பட தலையணை போலும் என்றெண்ணி இழுக்க அவன் கையை யாரோ தள்ளிவிடவும் மூடியிருந்த இமைகள் சட்டென்று பிரிந்தது.

 

திரும்பி அருகே பார்க்க குழலி நல்ல உறக்கத்தில் அவனருகே படுத்திருந்தாள். உடனே எழுந்து அமர்ந்தவன் ‘இவ எப்போ இங்க வந்து படுத்தா’ என்று தான் பார்த்திருந்தான்.

 

அறையில் வெளிச்சம் பரவியிருக்க விடிந்துவிட்டது என்று புரியவும் அவளை தொந்திரவு செய்யாது எழுந்து தன் வேலைகளை முடித்தவன் குளித்து வேறு உடைக்கு மாறி அறையில் இருந்து வெளியேறினான்.

 

அப்போது தான் பார்க்க கட்டிலின் அருகில் அவளின் பை இருந்தது. கதவை மெதுவாய் சாற்றிவிட்டு கீழே இறங்கினான். தரங்கிணி சமையலறையில் இருந்தார் போலும்.

 

நேரே அங்கே செல்ல அங்கு அவன் சித்தியும் நின்றிருப்பதை பார்த்து வந்த வழியே திரும்பினான். அவன் சித்தி அதைப் பார்த்துவிட்டு “அக்கா உங்க புள்ளை உங்களைத் தான் தேடி வந்துட்டு போகுது. என்னைய பாக்கவும் அப்படியே கிளம்பிருச்சு, போய் பாருங்க” என்று சொல்ல தரங்கிணி மகனைத் தேடிச் சென்றார்.

“சொல்லு இந்தர் என்னைத் தேடி வந்தியா?? காபி வேணுமா??”

 

“ஹ்ம்ம் வேணும்மா” என்றவன் யோசனையாகவே இருப்பது போல தோன்றியது அவருக்கு.

 

“என்ன இந்தர்??”

 

“இல்லைம்மா வந்து…”

 

“குழலியை பார்த்துட்டு வந்தியா??”

 

“அவ வந்தது உங்களுக்கு…”

 

“தெரியும் காலையில நான் எழுந்து கோலம் போட்டுட்டு இருக்கும் போதே வாசல்ல வந்து நின்னுட்டா…”

 

“எதுவும் சொன்னாளாம்மா??”

 

“நான் எதுவும் கேட்டுக்கலை, வாம்மான்னு சொன்னேன்… உள்ள போய் ரெஸ்ட் எடுன்னு சொன்னேன் அவ்வளவு தான்” என்றார்.

 

“என்ன பண்ணிட்டு இருக்கா?? உன்கிட்ட எதுவும் பேசினாளா??”

 

“எனக்கு அவ வந்ததே தெரியாதும்மா. பக்கத்துல வந்து படுத்து தூங்கிட்டு இருந்திருக்கா, நான் அடிச்சு பிடிச்சு எழுந்து பார்த்தா இவ… சரி தூங்கட்டும்ன்னு இறங்கி வந்திட்டேன்”

“எதுவும் கேட்டுக்காதே, பழசைப் பத்தி எல்லாம் பேச வேண்டாம். போனது எல்லாம் போகட்டும் திருஷ்டி கழிஞ்சதா நினைச்சுக்குவோம். இன்னைக்கு தான் உங்க வாழ்க்கையை ஆரம்பிக்கறதா நினைச்சுக்கோங்க” என்றார் அவர்.

 

“யாரு வாழ்க்கையை ஆரம்பிக்கணும்” என்றவாறே அங்கு வந்தார் ஸ்ரீனிவாசன்.

 

“குழலி வந்திருக்கா…”

 

“ஓ!! எப்போ வந்தா??”

 

“காலையிலே” என்று மனைவி சொல்லவும் மகனை திரும்பி பார்த்தவர் “அவ தான் வேணுமா முடிவு பண்ணிட்டியா”

 

“என்னப்பா பேசறீங்க?? நான் எப்போ அவ வேணாம்ன்னு சொன்னேன்??”

 

“அதுக்கில்லை இந்தர் உங்கம்மா சொன்னதை நானும் அப்போ கேட்காம விட்டது என்னோட தப்பு. தங்கச்சி பொண்ணாச்சே நம்ம புள்ளைய கட்டிக்கிட்டா நல்லா இருக்கும்ன்னு நினைச்சேன்”

 

“கடைசியில உன் வாழ்க்கையை நாங்களே கெடுத்த மாதிரி ஆகிப்போச்சுல. நானும் உங்கம்மாவும் அவ்வளவு தூரம் போய் கூப்பிடுறோம் வராம அழிச்சாட்டியம் பண்ணிருச்சு அந்த புள்ளை. எனக்குமே வருத்தம் தான், இப்போ திரும்பி வந்திருக்கு. ஒழுங்கா இருந்தா சரி தான்” என்றார்.

 

“அப்பா” என்று எதையோ சொல்ல வாயெடுத்தவன் அவரின் பின்னே நின்றிருந்தவளைக் கண்டு அதிர்ந்தான். மகனின் அதிர்ந்த முகத்தை பார்த்து தரங்கிணியும் திரும்ப அவருக்குமே இதென்னடா சோதனை என்று தானிருந்தது.

 

‘இப்போ தான் எல்லாம் சரியாச்சுன்னு நினைச்சா இவர் பேசினதை கேட்டு இவ என்னப் பண்ணப் போறாளோ’ என்று மருமகளைப் பார்க்கக் அவளோ எதுவுமே நடக்காதது போல அவர்களைத் தாண்டிக் கொண்டு சென்றுவிட்டாள்.

 

“கொஞ்சம் கூட மரியாதையே தெரியலை. வந்தாலே என்ன மாமான்னு ஒரு வார்த்தை கேட்டாளா” என்றார் ஸ்ரீனிவாசன்.

 

“அப்பா ப்ளீஸ் அவளை கொஞ்சம் விடுங்க. அவ செய்யறது சரின்னு நான் சொல்ல வரலை. அம்மா சொன்ன மாதிரி தான் பழசு எதுவும் பேச வேண்டாம். அவகிட்ட எப்பவும் போல இயல்பா இருங்க. நாங்க இன்னைக்கே ஊருக்கு கிளம்பறோம்” என்றான்.

 

“அம்மா காலைல டிபன் சாப்பிட்டு கிளம்பறோம். ஆக வேண்டியதை பாருங்க” என்றுவிட்டு நகர்ந்தான்.

 

சிறிது நேரத்தில் கையில் காபியுடன் வந்தாள் குழலி. “மாமா, அத்தை காபி எடுத்துக்கோங்க” என்று சொல்ல இருவரும் இவளை எந்த கணக்கில் எடுப்பது என்று பார்த்திருந்தனர்.

 

தரங்கிணி “குழலி உன் புருஷன் மேல தான் போயிருக்கான். அவனுக்கும் கொடுத்திடறியா??” என்று சொல்ல “அவருக்கு தான் எடுத்திட்டு போறேன்” என்று நகர்ந்தாள் மருமகள்.

 

“என்ன தரங்கிணி ஒரே நாள்ல ஓவர் மாற்றமா இருக்கு” என்று மனைவியின் காதைக் கடித்தார் ஸ்ரீனிவாசன்.

 

“கொஞ்சம் பேசாம தான் இருங்களேன். நானே கடவுளை வேண்டிட்டு இருந்தேன் அவ வீட்டுக்கு வரணும்ன்னு. நாளைக்கு குலதெய்வம் கோவிலுக்கு போய் வேண்டுதலை முடிச்சுட்டு வந்திடணும்” என்று தன் போக்கில் பேசிக்கொண்டே நகர்ந்திருந்தார் அவர்.

 

மேலேறி வந்திருந்தவள் இவன் முன் கிளாசை நீட்ட யாரென்றும் பாராமல் “வேணாம்” என்றிருந்தான்.

 

“அத்தை கொடுக்கச் சொன்னாங்க” என்று அவள் சொல்லவும் தான் நிமிர்ந்தான்.

 

அவளிடமிருந்து கிளாசை வாங்கிக்கொண்டவன் அவளை பார்த்தவாறே அருந்தி முடித்தான். அவன் குடித்து முடிக்கும் வரை அவளும் அங்கேயே நின்றிருந்தாள்.

 

“நாம டிபன் சாப்பிட்டு ஊருக்கு கிளம்பறோம் ரெடியாகிடு” என்றான்.

“ஹ்ம்ம்” என்றவள் அவன் குடித்து முடித்த காலி கோப்பையுடன் அங்கிருந்து நகர்ந்தாள்.

 

‘இவ்வளவு அமைதியா இருக்கா. ஒரு வேளை அடங்கிப் போயிட்டாளா, நாம பேசின பேச்சில. அப்படியெல்லாம் நடக்க வாய்ப்பில்லையே’ என்று யோசித்தவன் தன் துணிமணிகளை பெட்டியில் எடுத்து அடுக்க ஆரம்பித்தான்.

 

ஒன்பது மணி போல மேலே வந்தவள் “சாப்பிட வாங்க” என்றாள் பவ்வியமாய்.

 

இவ்வளவு அமைதியாய் அவளை அவன் பார்த்ததில்லை. பெங்களூரில் இருவரும் தனியே இருந்த போது கூட அவள் படபட ரகமாகத் தான் இருப்பாள். எல்லாவற்றிலும் அதிகாரம் சற்று தூக்கலாகவே இருக்கும் அவளிடத்தில்.

 

“சாப்பிட வாங்க” என்று சற்று முன் பவ்வியமாய் சொன்னதை அதிகாரமாய் தான் சொல்வாள்.

 

அவள் குரலே அப்படித்தான் என்று எண்ணிக் கொள்வான் இந்தர் அப்போது. அவனுக்கு அதெல்லாம் கவனித்து அவளுக்கு பதில் சொல்ல பெரிதாய் நேரமிருக்காது என்பதாலும் எதையும் கண்டுக்கொள்ளாது இருந்தான்.

 

இப்போது அவளின் ஒவ்வொரு அசைவும் அவளை கவனிக்கச் செய்தது. பிரிவு அவர்களின் உறவை வளர்த்ததுவோ!! அருகிருக்கும் போது புரியாத நேசமும் பாசமும் தொலைவில் அவளிருக்கும் போது வந்திருக்குமோ!!

 

“நீ சாப்பிட்டியா??” என்றான் கீழே செல்லப் போனவளை நிறுத்தி.

 

“இல்லை இனிமே தான்” என்றுவிட்டு இறங்கிச் சென்றிருந்தாள்.

 

காலை உணவை மாமியாரும் மருமகளுமாக அனைவருக்கும் பரிமாற இந்தரின் சித்தி கமலா தான் அவர்களைப் பார்த்து இடித்துக் கொண்டார். ‘நேத்து வரைக்கும் இவ அங்க இருப்பாளாம் என்னன்னு நாம கேட்கக் கூடாதாம்’

 

‘இப்போ வந்து அத்தை மாமான்னு சொந்தம் கொண்டாடுவாளாம் இப்போவும் அவளை நாம எதுவும் கேட்கக் கூடாதாம். ரொம்ப ஓவரா தான் பண்ணிட்டு இருக்காங்க. எவ்வளவு நாளைக்குன்னு பார்ப்போம்’ என்று கருவியவாறே நின்றிருந்தார்.

 

“குழலி நீயும் அவன் கூடவே உட்கார்ந்து சாப்பிடு” என்றார் தரங்கிணி.

 

“இல்லைத்தை நான் உங்க கூடவே சாப்பிடுறேன்” என்று அவள் முடித்துவிட அதற்கு மேல் அவளை வற்புறுத்தவில்லை அவர்.

 

அனைவருமே சாப்பிட்டு முடித்திருக்க “அம்மா நாங்க கிளம்பறோம்” என்றான் இந்தர்.

“குழலி நம்ம திங்க்ஸ் எல்லாம் எடுத்திட்டு வந்திடலாம் வா” என்று அவன் அழைக்க அவனோடே மேலே சென்றாள்.

 

இருவருமாய் தங்கள் உடமைகளை எடுத்துக் கொண்டு கீழே வர கயல்விழி அங்கு வந்திருந்தார். மகளையும் மருமகனையும் ஒன்றாக பார்த்தவரின் கண்கள் நிறைந்து போனது அவருக்கு.

 

“குழலி” என்று அவர் ஏதோ பேசவர மகளோ அதை செவிமடுக்கவில்லை.

 

கமலா ஒரு சுவாரசியத்துடன் அதை பார்த்திருந்தார். அவருக்கு பேச புதிதாய் ஒரு சேதி கிடைத்துவிட்டதே. தரங்கிணியும் குழலி செய்ததை பார்த்தவர் ஒன்றும் சொல்ல முடியாமல் இருந்தார்.

 

சட்டென்று தன்னை சுதாரித்துக் கொண்ட கயல்விழி “உங்களைத் தான் பார்க்க வந்தேன்” என்று மருமகனின் முன் நின்றார்.

 

“சொல்லுங்கத்தை” என்று அவன் சொல்லவும் அவன் காலில் விழப் போனவரை சட்டென்று பிடித்து நிறுத்தினான் அவன்.

 

குழலியோ அதீத கோபத்தில் இருந்தாள் அவரின் அச்செயலால். பற்களால் இதழை அழுந்த பற்றியிருக்க ரத்தம் கசிந்ததையும் பொருட்படுத்தாது அப்படியே நின்றிருந்தாள்.

 

“என்னத்தை செய்யறீங்க??” என்று கடிந்தான் அவன்.

 

“நடந்த தப்பையெல்லாம் மன்னிச்சு நீங்க இவ்வளவு தூரம் இறங்கி வந்திருக்கீங்க. அதுக்கே உங்களுக்கு கோவில் கட்டி கும்பிடணும்”

 

“என்ன மதினி பேசிட்டு இருக்கீங்க. அதுக்காக கால்ல விழுவாங்களா. இங்க தப்பும் நடக்கலை முதல்ல நீங்க அதை புரிஞ்சுக்கோங்க. ஏதோ கெட்ட நேரம் அது கடந்து போச்சு அவ்வளவு தான். சும்மா கண்டதும் யோசிச்சு உடம்பை கெடுத்துக்காதீங்க”

 

“இல்லை என் பொண்ணு” என்று அவர் ஆரம்பிக்க நெருப்பின் மீது நிற்பதாய் உணர்ந்தாள் குழலி.

 

‘தன் மீதே தவறிருக்கட்டுமே அதற்காக இப்படித்தான் என்னை விட்டுக் கொடுத்து பேசுவதா’ என்று நினைக்க நினைக்க அப்படியே இங்கிருந்து ஓடிவிடலாம் என்றே தோன்றியது அவளுக்கு.

 

“டைமாச்சு கிளம்பலாமா…” என்றாள் அங்கு நடப்பதை காணசகிக்காமல்.

 

அனைவரிடமும் சொல்லிக்கொண்டு அவர்கள் காரில் ஏற மற்ற அனைவரையும் பார்த்து தலையசைத்தவள் கயல்விழியின் புறம் பார்வையை கூட செலுத்தவில்லை. பெற்றமனம் ஓவென்று கதறியழ பிள்ளைமனம் கல்லாய் சமைந்திருந்தது.

 

Advertisement