Advertisement

10

தலையணையில் முகம் புதைத்து அப்படியே படுத்திருந்தாள். வெளியே சென்றிருந்த அவளின் தாய் வீட்டிற்கு வந்திருந்தாள். ஆனால் பெரிதாய் இவளை அவர் கண்டுக்கொள்ளவே இல்லை.

 

‘என்னைப்பத்தி யாருக்குமே அக்கறை இல்லை. என் மனசை யாருமே புரிஞ்சுக்கலை’ என்று அதற்கும் ஒரு அழுகை வந்தது அவளுக்கு.

 

வாயிலில் “மதினி” என்ற குரல் கேட்க அவள் அறையை கடந்து கயல்விழி வேகமாய் வெளியே செல்வதை பார்த்துக் கொண்டிருந்தும் படுக்கையைவிட்டு எழவேயில்லை அவள்.

 

கயல்விழி இவள் இருந்த அறை வாசலில் வந்து நின்றவர் “மதினி வந்திருக்காங்க உன்னைய பார்க்கணுமாம், எழுந்து வா” என்றார்.

 

“எந்த மதினி?? யாரு?? எனக்கு இப்போ யாரையும் பார்க்கற மூடில்லை”

 

“எடு அந்த விளக்குமாற போனா போகுதுன்னு இருந்தா உனக்கு கொழுப்பு ரொம்பத்தான் கூடிப்போச்சு. பெரியவங்கன்னு மட்டு மரியாதையில்லை உனக்கு. உன்னை நல்லா வளரக்கணும்ன்னு நினைச்சேன், நீ இப்படி வளர்ந்திருக்கேன்னு நினைக்கும் போது நான் உன்னை சரியா வளர்க்கலைன்னு நினைச்சு வெட்கப்படுறேன்”

 

“மதினி எதுக்கு பெரிய வார்த்தை எல்லாம் பேசிட்டு இருக்கீங்க. உங்க வளர்ப்பை யாரும் குறை சொல்ல முடியாது. அவகிட்ட யார் வந்திருக்கான்னு நீங்க தெளிவா சொல்லலை. சொல்லியிருந்தா அவ கண்டிப்பா வந்திருப்பா”

 

“இது யார் வீடோவா என்ன, உங்க வீட்டு தானே. நானே உள்ள வந்து என் மருமககிட்ட பேசிட்டு போறேன் அதுல என்ன இருக்கு” என்றவாறே தரங்கிணி அந்த அறைக்குள் நுழைந்திருந்தார்.

 

அவரை கண்டதுமே எழுந்து நின்றிருந்தாள் குழலி. அன்னை சொன்னதும் யாரோ உறவினர் அறிவுரை கூற வந்துவிட்டார் என்ற எரிச்சலில் தான் அவள் அப்படி பேசியது. தரங்கிணி என்று அவள் அறியாள்.

“மதினி நீங்க போய் வேலையை பாருங்க. நான் பேசிட்டு கிளம்பிடுவேன்” என்றார் அவர்.

 

“காபி போடுறேன் மதினி”

 

“வேணாம் எதுவும் எனக்காக செய்ய வேணாம்” என்று மறுத்தார் அவர்.

 

“சரி நீங்க பேசிட்டு இருங்க” என்றுவிட்டு கயல்விழி அகன்றிருந்தார்.

 

“உட்காருங்க அத்தை” என்று கட்டிலை சுட்டிக்காட்டினாள் குழலி.

 

மறுக்காது அதில் சென்று அமர்ந்தார் தரங்கிணி. “நீயும் உட்காரு குழலி” என்றார்.

 

“இருக்கட்டும் அத்தை”

 

“உட்காரு” என்றார் இம்முறை சற்று உரக்கவே. அந்த குரலில் அவளும் சற்று தள்ளி அமர்ந்தாள்.

 

“உனக்கு என் மேலே வருத்தம் இருக்குன்னு எனக்கு இப்போ தான் தெரிஞ்சுது. உன் வருத்தத்தை நீ அப்போவே என்கிட்ட பேசி தெளிவு படுத்தியிருந்தா நான் அதுக்கு விளக்கம் கொடுத்திருப்பேன்”

 

“உங்க பிரச்சனை இந்தளவுக்கு வந்திருக்காது. அதுக்காக உன் வாழ்க்கையை நீயே கெடுத்திட்டும் இருந்திருக்க வேணாம்” என்று நேரடியாகவே பேச்சை ஆரம்பித்திருந்தார்.

 

அவர் பேச வரும் விஷயம் புரியவும் குழலியின் முகம் இறுகியது. அவர் என்ன தான் சமாதானம் சொன்னாலும் அந்த வார்த்தை அவள் நெஞ்சை விட்டு எப்போதும் அகலப்போவதில்லை. அது இன்னும் அதிகமாய் அவளை வாட்டியது.

 

அவர் என்ன வேண்டுமானாலும் பேசிவிட்டு போகட்டும் என்ற முடிவுக்கு வந்தவள் அமைதியாகவே அமர்ந்திருந்தாள்.

 

“நீ பேச மாட்டேன்னு தெரியும், நான் பேச வேண்டியதை பேசிட்டு போய்டறேன். ஆமா நான் தான் சொன்னேன் அவனுக்கு நீ செட்டாக மாட்டேன்னு” என்றவர் இடைவெளிவிட்டார்.

 

தரங்கிணியின் நேரடி வாக்குமூலமாய் மீண்டும் அவ்வார்த்தையை கேட்டவளுக்கு யாரோ ஈட்டியால் அவளை குத்துவது போல இருந்தது.

 

“நீ என்னைப்பத்தி தப்பா நினைச்சுக்கிட்டேன்னு உனக்கு விளக்கம் சொல்ல வரலை. நான் சொன்ன ஒரு வார்த்தையை சரியா புரிஞ்சுக்காம உன் வாழ்க்கையை நீ கெடுத்து வைச்சிருக்கியேன்னு தான் விளக்கம் சொல்ல வந்தேன்”

 

“எனக்கு இந்தர் எப்படியோ அப்படித்தான் நீயும். அவன் குணம் எனக்கு தெரியும், அதே போல நான் தூக்கி வளர்த்த பொண்ணு நீ, உன்னோட குணமும் எனக்கு தெரியும்”

 

“அதனால தான் அப்படியொரு வார்த்தையை நான் சொன்னேன். கல்யாணத்துக்கு முன்னாடியே யோசிக்க சொன்னேன் அவனை. எல்லாம் சரின்னு தலையாட்டிட்டு இப்போ இப்படி வந்து நிக்குது”

 

அவர் சொல்வதை கேட்க பிரியப்படாதவளாய் “அத்தை ப்ளீஸ் எனக்கு எதையும் தெரிஞ்சுக்க வேணாம் போதும் விட்டிருங்க” என்றவள் கட்டிலில் இருந்து எழுந்திருந்தாள்.

 

“உட்காரு முதல்ல, அவசரம் அவசரம் எல்லாத்துலயும் அவசரம். பேசுறதை கேட்டுக்க முடியாத அளவுக்கு உன் பொறுமை எங்க போச்சு” என்று அதட்டினார் அவர்.

 

“என் பையனாவே இருந்தாலும் அவனோட குறை என்னன்னு எனக்கு தெரியும். நான் குறைன்னு சொன்னதும் வேற எதையும் யோசிக்காத. அவன் வேலை வேலைன்னு சுத்துவான் எப்போதும்”

 

“வேலை நேரத்துல இடியே விழுந்தாலும் அதைப்பத்தி அவனுக்கு கவலையே இருக்காது. அவனோட வாழ்க்கை முறையே வேற, அமைதியா பேசணும், அப்படி இப்படின்னு ஒவ்வொண்ணும் அவனுக்கு அவன் நினைச்ச மாதிரி இருக்கணும். உனக்கு அப்படியொருத்தன் கணவனா வரணுமான்னு தான் எனக்கு தோணுச்சு”

 

“ஒரு அம்மாவா அவனோட குணத்துக்கு ஏத்த மாதிரி அவனுக்கு பொண்ணு அமையணும்ன்னு நினைச்சேன். அதுல என்ன தப்பிருக்கு சொல்லு. அதே மாதிரி தான் அப்பா இல்லாத உனக்கு கணவனா மட்டுமில்லாம அப்பாவாவும் இருக்கக்கூடிய ஒருத்தன் உனக்கு கணவனா கிடைக்கணும்ன்னு நினைச்சு தான் இந்த கல்யாணத்தை யோசிச்சு முடிவு பண்ணுங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன்”

 

“என் பேச்சை யாரு கேட்டா, அத்தைகிட்ட கூட அவ்வளவு சொன்னேன் இந்த கல்யாண பேச்சைப் பத்தி. உன்கிட்ட அத்தை என்னை பேசவே விடலை. இல்லைன்னா உனக்கும் அன்னைக்கு அதைத்தான் சொல்லியிருப்பேன்”

“அப்படி யோசிச்சு செஞ்சிருந்தா இன்னைக்கு உங்க வாழ்க்கை இப்படியாகி இருக்காது. உனக்காக அவன் மாறுவானோ அவனுக்காக நீ மாறுவியோ இனி அது உங்க பாடு. என் மனசுல உள்ளதை சொல்லணும்ன்னு தான் வந்தேன், சொல்லிட்டேன்”


“நான் சொன்னதை நம்புறதும் நம்பாததும் உன் விருப்பம். அவனோட சேர்ந்து வாழறதும் வாழாம இருக்கறதும் உன் உரிமை, அதுலயும் இனி நாங்க தலையிட மாட்டோம். நான் கிளம்பறேன்” என்றவர் அவளின் பதிலுக்காக கூட காத்திராமல் கிளம்பியிருந்தார்.

 

காலையில் பிள்ளை இப்போது அம்மா என்று மாறி மாறி அவளை காய்ச்சி எடுத்து சென்றிருக்க நடந்த அத்தனைக்கும் நான் மட்டும் தான் காரணமா?? எல்லா பழியும் எனக்கு தானா?? என்ற ஆதங்கம் அவளுக்கு எழவே செய்தது.

கயல்விழி அவளை தொந்திரவு செய்யவில்லை. அவள் யோசிக்கட்டும் என்று அவளை அப்படியே விட்டுவிட்டார். அறைக்குள் அடைந்தே கிடந்தாள் குழலி. சாப்பிட கூட வரவில்லை.

 

இரவு உணவை அறைக்கே சென்று கொடுத்தார் கயல்விழி. பெயருக்கு சாப்பிட்டு எழுந்துவிட்டாள் மகள். அதை பார்த்து கவலையாக இருந்தாலும் அதைவிட பெருங்கவலையாய் அவளின் வாழ்க்கை அவர் முன்னே நின்றது. படுக்கச் செல்லும் நேரம் மகளை அழைத்தார் அவர்.

 

“குழலி”

 

“என்னம்மா??”

 

“என்ன முடிவெடுத்திருக்க??”

 

“எதைப்பத்திம்மா??”

 

“மருமகனோட ஊருக்கு போறதைப்பத்தி”

 

“அதுல முடிவெடுக்க என்னம்மா இருக்கு”

 

“அப்போ நீ ஊருக்கு போகப் போறதில்லை அப்படித்தானே” என்றவரின் குரலில் உஷ்ணமேறியது.

 

“ஆமா”

 

“எதுக்காகன்னு நான் தெரிஞ்சுக்கலாமா”

“அவருக்கு நான் பொருத்தமில்லாதவ”

 

“போதும் நிறுத்து இதைக்கேட்டு கேட்டு எனக்கு புளிச்சுப்போச்சு. சரி பொருத்தமில்லாதவளாவே இருந்துட்டு போ, அவர் வந்து கூப்பிடுறார்ல போக வேண்டியது தானே”

 

“எப்படிம்மா என்னை அவர்கூட போகச் சொல்றே”

 

“பொருத்தமில்லைன்னு அவர் சொன்னாரா, இல்லை நீ நினைக்கிறியா”

“நான் ஒண்ணும் அப்படி நினைக்கலை”

 

“அப்போ அவர் சொன்னாரா??”

 

“இல்லை”

 

“அப்போ”

 

“உனக்கு என்னம்மா வேணும் இப்போ??”

 

“எனக்கு சரியான காரணம் வேணும். நீ யாரையும் விரும்பறியா??”

 

“அம்மா” என்று கத்தினாள் அவள்.

 

“அப்போ அவரு யாரையும் விரும்பறாரா??”

 

“தெரியலை”

 

“குடிக்கறாரா இல்லை நீ பக்கத்துல இருக்கும் போதே வேற பொண்ணை வைச்சிருக்காரா”

 

“அம்மா!!” என்றவள் “அவர் அப்படியெல்லாம் இல்லை. அவர் என்னையவே பார்க்க மாட்டாரு, இதுல வேற பொண்ணை எங்க பார்க்கப் போறாரு”

 

“அவரை உன்னைப் பார்க்க வைக்க உனக்கு தெரியலை”

 

“அம்மா”

 

“இதெல்லாம் நான் சொல்லியா தர முடியும். படிப்பறிவு இல்லாத எனக்கே எங்க எப்படின்னு நடந்துக்கணும்ன்னு தெரியும். படிச்சிருக்கேல்ல அறிவை கொஞ்சம் கூட உபயோகப்படுத்த மாட்டியா நீ”

 

“என்னையவே ஏன் குறை சொல்றீங்க??”

 

“அப்போ ஏன் அவர் கூப்பிட்டா போக மாட்டேங்குறே. ஏதோ வார்த்தையை பிடிச்சுட்டு தொங்குறே. அந்த பெரிய மனுஷி நேரா வந்து விளக்கம் கொடுத்திட்டு போறாங்க, அவங்ககிட்ட பதிலே பேசாம நிக்கறே”

 

“என்ன மனுஷிடி நீயெல்லாம்!! எனக்கு மதினியை நல்லா தெரியும், அவங்க தான் அந்த வார்த்தை சொல்லியிருப்பாங்கன்னு என்கிட்டயும் முன்னாடியே பேசியிருக்காங்க அதைப்பத்தி”

 

“அவங்க எதை நினைச்சு பேசினாங்கன்னு எனக்கு நல்லாவே தெரியும். நான் தான் அவங்க பேச்சை கேட்காம தப்பு பண்ணிட்டேன்னு எனக்கு தோணுது”

 

“இந்த கல்யாணத்துக்கு நீ யார் சொல்லி சம்மதிச்சே??” என்ற கயல்விழியின் கேள்விக்கு அவள் பதில் பேசாது அமைதியாய் இருந்தாள்.

 

“சொல்லுடி”

 

“பெரியாத்தா” என்றாள் மெல்லமாய்.

 

“எங்க ஆத்தா சொல்லித்தான் நீ சம்மதிச்சே சரியா. யார் சொல்லி அதை நீ பாதியிலேயே விட்டுட்டு வந்தே சொல்லுடி யார் சொல்லி வந்தே”

 

“அம்மா சும்மா என்னையவே குறை சொல்றே. என்னைப்பத்தி உங்களுக்கு யாருக்குமே புரியலை. என்னை ஊருக்கு போகச் சொன்னாரே அந்த மனுஷன் அவர் ஒரு தரமாச்சும் என்னை நேரா வந்து கூட்டிட்டு போகணும்ன்னு நினைச்சாரா சொல்லு”

 

“அவருக்கு அவ்வளவு சப்போர்ட் பண்ணுறியே நீ. என்னை நீ ஊருக்கு போன்னு சொல்லி அவர் பாட்டுக்கு அனுப்பிவிட்டுட்டார்”

 

“உன்னை தனியாவா அனுப்பினாரு. எங்க அண்ணனும் மதினியும் உன்னை கூட்டிட்டு வந்து விட்டுட்டு போனாங்க. மருமகன் வந்ததும் வந்து கூட்டிட்டு போறேன்னு சொல்லித்தான் விட்டுட்டு போனாங்க”

“அவங்க சொன்ன மாதிரி திரும்பவும் வந்து உன்னை கூப்பிட்டாங்க. உன் வீணா போன பிடிவாதத்துனால நீ அவங்க கூட போகலை. தப்பு முழுக்க உன் மேலே வைச்சுட்டு உனக்காக யோசிக்க வேற சொல்வியா நீ”

 

“உனக்காக நாங்க எல்லாம் யோசிக்க போய் தான் இவ்வளவு சொல்லிட்டு இருக்கோம் உனக்காக. அது ஏன் உனக்கு புரியலை. உன் வாழ்க்கையை நீயே கெடுத்துக்கற குழலி. நல்லதில்லை அவ்வளவு தான் சொல்லிட்டேன்”

 

“ஒழுங்கா நாளைக்கு அவரோட ஊருக்கு போற வழியை பாரு. போக மாட்டேன்னு நீ சொன்னா உனக்காக நான் வாழ்ந்த வாழ்க்கைக்கு அர்த்தமில்லாம போய்டும், உங்கப்பா போன இடத்துக்கு நானே போய் சேர்ந்திடுவேன்”

 

“என்னை துரத்தணும் அது தானே வேணும் உனக்கு”

 

“ஆமாடி துரத்தத்தான் செய்யறேன். போ இங்க வராதே போ உனக்கு அம்மான்னு ஒருத்தி இல்லவே இல்லை செத்துட்டான்னு நினைச்சு போயிடு. பிள்ளை பெத்துக்கணும் அம்மா வீட்டுக்கு போகணும்ன்னு நினைச்சு கூட இந்த பக்கம் வந்திடாதே” என்று அவர் கத்த குழலியின் கண்களில் கரகரவென்று கண்ணீர் இறங்கியது கன்னத்தில்.

 

அதன் பின் இருவருக்குள்ளும் எந்த பேச்சு வார்த்தையும் இல்லை. காலையில் அவர் எழும் போது குழலி அங்கில்லை.

Advertisement