இன்னமும் இருள் அகலாத காலைப்பொழுது தாயும் மகளும் அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தனர். அவர்களின் நித்திரையை கலைக்கவென்றே அதிகாலையில் அலைப்பேசி ஒலியெழுப்பியது.
சத்தம் கேட்டு சட்டென்று கண் விழித்தார் கயல்விழி. நெஞ்சம் படபடவென்று அடித்துக்கொண்டு, அலைப்பேசியை எடுக்கவே யோசனை அவருக்கு. அதற்குள் அது அடித்து ஓய்ந்திருந்தது.
இந்த நேரத்தில் போன் என்றால் ஏதோ கெட்ட சேதி என்றே அவரின் உள்மனம் அடித்துச் சொன்னது. அதற்கு காரணமும் உண்டு, அவரின் பெரியாத்தா அதாவது கயலின் அம்மாவுடன் பிறந்த தமக்கை லலிதாம்பிகாவிற்கு ஓரிரு மாதங்களாய் உடல் நலம் குன்றியிருந்தது.
மருத்துவர் அவரின் உயிர் நாட்கணக்கில் மட்டுமே என்றிருக்க பெரியாத்தாவின் நெருங்கிய உறவுகள் அத்தனை பேரும் வருவதும் போவதுமாய் இருந்தனர். கயல்விழியின் திருமணம் முடிந்த சில மாதத்திலேயே அவரின் தாயாருக்கு மூளைக்காய்ச்சல் வந்து இறந்துவிட்டிருந்தார்.
கயல்விழியின் வயிற்றில் அவரின் மகள் கார்குழலி ஐம்பது நாட்கள் கருவாகியிருந்தாள். அவளுக்கு பேறுகாலம் முழுதும் கவனித்தது அவரின் பெரியாத்தாவாகிய லலிதாம்பிகா தான்.
கயல்விழிக்கு வாய் கொஞ்சம் அதிகமே. ஊரில் அவர் சண்டை போடாத ஒருவரைக் கூட கைக்காட்டிவிட முடியாது. போஸ்ட்மேன், மளிகைக்கடைக்காரன், வயர்மேன், பக்கத்துவீடு, எதிர்வீடு என்று ஒருவரையும் விட்டு வைக்காது தேடித்தேடி போய் சண்டை போடுவார்.
அவர் ஒருவருக்கு அடங்கிப் போகிறார் என்றால் அது பெரியாத்தாவிடம் மட்டுமே. முதல் நாள் கூட ஏழு மணி வரை அங்கு தானிருந்தார். “ஏன் மதினி இங்க இருந்து என்ன செய்ய போறீங்க, வீட்டுக்கு போயிட்டு காலம்பர வாங்க. குழலி தனியா இருப்பால்ல” என்று கயல்விழியின் அண்ணன் மனைவி தரங்கிணி சொல்ல மனதில்லாமலே அங்கிருந்து வந்திருந்தார்.
அலைப்பேசி மீண்டும் ஒலியெழுப்ப இம்முறை வேகமாய் எழுந்து எடுத்திருந்தாள் கார்குழலி. எடுத்தவளோ எந்தவித உணர்வுகளையும் காட்டாது பேசி முடித்து போனை வைத்திருக்க எதிர்முனை என்ன சொன்னதோ என்று மகளைப் பார்த்திருந்தார் அத்தாய்.
பதில் பேசாது அவிழ்ந்திருந்த கூந்தலை அள்ளி கொண்டையிட்ட கார்குழலியை கோபமாய் முறைத்தார் கயல்விழி.
“யாருடி போன்ல பதிலே பேசாம நீ பாட்டுக்கு இருக்க, என்ன ஏதுன்னு தகவல் சொல்ல மாட்டியா??”
“என்ன தகவல் வரணுமோ அதான் வந்திருக்கு?? நீ எழுந்து பல்லை விளக்கிட்டு கிளம்பும்மா”
“எங்கடி??” என்று பதைப்புடன் கேட்டார் அவர்.
“உங்க பெரியாத்தாவை வழியனுப்பி வைக்கத்தான்”
“என்னடி சொல்றே?? எனக்கு பயமா இருக்கு”
“ம்மா பெரியாத்தா உசுரு இப்போத்தான் பிரிஞ்சுதாம். மாமா தான் போன் பண்ணாங்க” என்றாள் அவள் நிதானமாய்.
“உனக்கு கொஞ்சம் கூட பதைப்பே இல்லையா. நான் தவிச்சுக்கிட்டு கிடக்கேன் என்னாகுமோ ஏதாகுமோன்னு நிதானாமா சொல்லிக்கிட்டு கிடக்க” என்று மகளை திட்டிய கயல்விழி தன் ஒப்பாரியை அங்கேயே தொடங்கி விட்டிருந்தார்.
“ம்மா இப்போவே ஆரம்பிக்காத” என்று சலித்துக்கொண்டே படுக்கையில் இருந்து எழுந்தவள் விரிப்பை மடித்து வைத்துவிட்டு குளியலறை நோக்கிச் சென்றாள்.
அடுப்பில் பாலை வைத்து அவள் காபியை போட “உன்னால எப்படிடி நிதானமா எல்லாம் செய்ய முடியுது” என்றார் கயல்விழி.
“அவசரப்பட்டு என்னாகப் போகுது”
“பெரியாத்தா செத்துப் போச்சு உனக்கு கொஞ்சமும் கவலையில்லையா. தினம் அதுக்கூடத் தானே உன் பொழுதே போகும், இன்னைக்கு ஆத்தா இல்லைன்னு உனக்கு வருத்தமே இல்லையா”
“இல்லை” என்றுவிட்டு காபியை கலந்து ஒன்றை தாய்க்கு கொடுத்தவள் மற்றொன்றை தான் அருந்த ஆரம்பித்தாள். கயல்விழி மகளை வெறித்து பார்த்தார் ‘எப்படி இவளால் இப்படி இருக்க முடிகிறது’ என்று.
“எதுக்கு என் மூஞ்சியே பார்த்திட்டு இருக்கே, காபியை குடி. இன்னைக்கு முழுசுக்கும் இது மட்டும் தான் சாப்பாடு. உனக்கு தான் எல்லா வியாதியும் இருக்கே, தெம்பு வேணாமா அழுகறதுக்கு. குடிம்மா என்னையவே நோட்டம் விட்டுக்கிட்டு” என்றவள் குடித்து முடித்த காபி தம்ளரை எடுத்துச் சென்று கழுவி வைத்துவிட்டு வந்தாள்.
பொழுது மெல்ல இருளைவிட்டு வெளிச்சப் போர்வையை போர்த்துக் கொள்ளவாரம்பித்தது. கயல்விழி கிளம்பி வெளியே வர மகள் அசையாது அங்கிருந்த திண்ணையில் அமர்ந்திருப்பதை கண்டதும் அப்படியொரு கோபம் எழுந்தது கயல்விழிக்கு.
“ஏன்டி உன் மனசுல என்ன தான்டி நினைச்சுட்டு இருக்கே. நானும் பார்த்திட்டு இருக்கேன். நமக்குன்னு இருந்த உறவு எங்க பெரியாத்தா அது செத்ததுக்கு கூட உனக்கு கண்ணீர் வரமாட்டேங்கு, இப்போ கிளம்பாம திண்ணையில குத்த வைச்சு உட்கார்ந்தா என்னடி அர்த்தம்”
“அங்க வர இஷ்டமில்லைன்னு அர்த்தம்” என்றாள் அவள் அசட்டையாக.
“பல்லை உடைச்சிருவேன் ஒழுங்கா மரியாதையா எழுந்து வா. நீ வரலைன்னா ஊரெல்லாம் தப்பா பேசுவாங்க. மதினி ஏற்கனவே ரொம்ப பேசும், இப்போ அவ்வளவு தான்” என்று மகளை அதட்டி உருட்டி என்று கிளப்பி விட்டிருந்தார் அவர்.
அதற்குள் சேதி தெரிந்து அக்கம் பக்கமும் துக்க வீட்டிற்கு கிளம்பியிருக்க கயல்விழி அவர்களுடன் சேர்ந்துக் கொண்டார். தெருமுனையிலேயே அவர்கள் ஒப்பாரியை ஆரம்பித்திருக்க இதோ வாசலில் கண்ணாடி பெட்டிக்குள் வைக்கப்பட்டிருந்த பெரியாத்தாவின் முன் நின்றிருந்தனர் அவர்கள்.
பெண்கள் அனைவரும் புதிதாய் வரும் உள்ளே வரும் பெண்களை கட்டிப் பிடித்துக்கொண்டு ஒருவர் தோளில் மற்றவர் கைப்போட்டுக் கொண்டு ஓவென்று ஓலமிட்டுக் கொண்டிருந்தனர்..
கார்குழலி இது எதிலும் கலந்துக் கொள்ளாது தனியே நின்றிருந்தாள். அவள் வயது பெண்கள் ஓரிருவர் அவளருகே வந்தனர்.
“என்னடி குழலி உங்காத்தாவை பார்க்க இப்போ தான் வந்திருக்கே. ஏன்டி உனக்கு அழுகையே வரலையாடி, எங்களுக்கே அழுகையா வருது ஆத்தாவை நினைச்சு. எம்புட்டு அழகு ஆத்தா, யாரையும் ஒரு சொல் சொல்லாது, எல்லாரும் சேர்த்துக்கும் நம்ம மனுசங்களா பாக்கும். பாவம் கடைசி காலத்துல படுக்கையில படுத்து கஷ்டப்படணும்ன்னு ஆகிப்போச்சு அதுக்கு” என்று அவர்கள் பேசிக் கொண்டிருக்க யாரிடமோ பேசுகிறார்கள் என்பது போல நின்றிருந்தாள் அவள்.
“குழலி நாங்க பேசிட்டே இருக்கோம். நீ என்னடி எப்படியோ இருக்கே”
“ஹ்ம்ம் ஒண்ணுமில்லை” என்றுவிட்டு அங்கிருந்து நகர ஆரம்பித்தவளை நிறுத்தியது தரங்கிணியின் குரல்.
“குழலி கொஞ்சம் இங்க வாயேன்” என்று அவர் அழைக்கவும் “சொல்லுங்க அத்தை” என்றாள்.
“இப்போ தான் நம்ம ஜானகியை காப்பிப் போட்டுத் தரச்சொன்னேன். எல்லாம் அழுது அழுது தொண்டைத் தண்ணி வத்திப் போயிருக்கும், கொஞ்சம் எல்லாருக்கும் காபி கொடுத்திருத்தா” என்று அவர் கேட்க “சரியத்தை” என்றவள் அங்கிருந்த காப்பியை சின்ன சின்ன கப்பில் ஊற்ற ஆரம்பித்தாள்.
“அக்கா நானும் வர்றேன்” என்று பக்கத்துவீட்டு பெண் பத்து வயது நிரம்பிய நேத்ரா வந்து நின்றாள்.
“நான் தான் கயலு வரச்சொன்னேன். உனக்கு ஒத்தாசையா அவளும் வருவா. ரெண்டு பேரும் கொண்டு எல்லாருக்கும் கொடுங்க” என்று தரங்கிணி வேறு வேலையாய் நகர்ந்தார். குழலி அனைவருக்கும் காபியை கொடுத்துவிட்டு வந்து கீழே அமர அவளின் அத்தை மீண்டும் வந்தார்.
“குழலி இன்னொரு உதவி பண்ணுறியா??”
“சொல்லுங்கத்தை”
“ஏன் குழலி நீ டயர்டா தெரியறியே??”
“அதெல்லாம் ஒண்ணுமில்லை நீங்க சொல்லுங்கத்தை”
“இந்தா நீ முத ஒரு காபியை குடி” என்று அவள் முன் காபியை நீட்டினார் அவர்.
“வேணாம் அத்தை நான் வீட்டில குடிச்சுட்டு தான் வந்தேன்”
“தெரியும் இருந்தாலும் நீ குடி” என்று அவர் கொடுக்க மறுக்காது வாங்கிக் கொண்டாள்.
“அத்தை நீ குடிச்சியா??”
அவர் இல்லையென்பதாய் தலையாட்ட அவருக்கு ஒரு கப்பை எடுத்து நீட்டினாள் அவள்.
“எனக்கு வேணாம் குழலி”
“நீ இப்போ குடிக்கிற அத்தை” என்றாள் அவள்.
அவரும் மறுக்காது வாங்கி அருந்தி முடிக்க “இப்போ சொல்லுங்க என்ன பண்ணணும்??”
“பாரு உன்னைப் பார்த்ததும் அதை மறந்திட்டேன். மாடியில இந்தர் இருக்கான் அவனுக்கு கொஞ்சம் இதை கொடுத்திடேன், நேத்தியில இருந்து எதுவும் சாப்பிடலை அவன்” என்றவர் அவளிடம் சொல்ல சரியென்றவள் காபி கப்புடன் படியேறி மாடிக்கு சென்றாள்.
அங்கு சுவற்றின் மீது அமர்ந்துக்கொண்டு ஒரு கரத்தால் தலையை பிடித்தவாறே இருந்தவனின் தோற்றமே கண்ணில் விழுந்தது.
“காபி” என்றாள் அவன் முன் நின்று.
“வேண்டாம்” என்றான் அவன் நிமிராமலே.
அவளோ அதையெல்லாம் கண்டுக்கொள்ளாது கப்பை எடுத்து அவனருகே வைத்துவிட்டு நகர அருகே திரும்பியவன் அவளின் செய்கையில் கோபம் வர நிமிர்ந்தான்.
“வேணாம் சொன்னேன்ல”
“வேணாம்ன்னா குடிக்காதீங்க” என்றுவிட்டு அவள் செல்ல இன்னும் கோபம் வந்தது அவனுக்கு.
“ஹேய் என்ன நான் சொல்லிட்டே இருக்கேன் நீ போறே. வேஸ்ட் பண்ணாதே எனக்கு அது பிடிக்காது, வேற யாராச்சும் குடிப்பாங்க கொண்டு போ” என்றான் அவன். படியிறங்க போனவள் திரும்பி வந்தாள்.
“வேஸ்ட் பண்ண மாட்டீங்கன்னா குடிங்க”
“நீங்க எதுவும் சாப்பிடலைன்னு அத்தை வருத்தப்பட்டு கொடுத்திட்டு வரச்சொல்லுச்சு அதான் நான் வந்தேன். என் வேலை முடிஞ்சது நான் போறேன்” என்றுவிட்டு கீழே இறங்கி சென்றவளை முறைப்புடன் பார்த்திருந்தான் அவளின் முறைமாமன் இந்திரஜித்.