Advertisement

       பாட்டியை திரும்பி பார்த்தவள், “இதே கடைசியா இருக்கட்டும்”, என்று சொன்னவள், இங்க அத்தைங்க சமையல் நல்லா இருக்கும், எனக்கும் என் பிள்ளைக்கும் அதுவே போதும், உங்க மருமக செய்யுற டேஸ்ட் தேவையில்ல”, என்றாள்.

    “சரிமா, இந்த முறை சாப்பிடுமா, பாட்டி தானே குழம்பு வைத்து கொண்டு வந்தேன்”, என்று சொன்னார்.

       அவள் சாப்பிடும் போதே அவளுக்கு அதன் ருசி எவ்வளவு பிடிக்கும் என்பது வீட்டிற்கு தெரிந்தது.

பின்பு “அவட்ட சொல்லாதீங்க” சித்தி  சொல்லாம செய்து கொடுப்போமா”,என்றார்.

     “எப்படி செய்ய, அந்த டேஸ்ட்ல தான் கண்டு பிடிக்குறாளே”, என்றார்.

    “அது என்னவோ உண்மை தான்”, என்று பேசிக் கொண்டிருந்தனர்.

     இப்போது ‘இவளுடைய வளைகாப்பு போட்டோவும் அவள் வீட்டிற்கு போய் இருக்கும்’ என்பது அனைவருக்கும் தெரிந்தது.

      ஆனால் அவளின் அப்பா மட்டும் எதற்கு ஒத்து வராமல் இருக்கவே, துளசியின் அம்மா தான் பரிதவித்து போனார்.

     லண்டனில் அவள் அப்பாவிடம் அவ்வப்போது சண்டை போட்டுக் கொண்டே இருந்தார் லதா.,

    “உங்களால தான் என் புள்ள பக்கத்தில் இருந்து பார்க்க முடியல., உங்களால தான் எல்லாம், உங்களால தான் எல்லாம்”, என்று சொல்லி சொல்லி அவரிடம் சண்டை போட்டு அவரிடம் பேசுவதை குறைத்துக் கொண்டார்.

    இப்போது அவருக்கு தான் தனிமையானது போல ஒரு உணர்வு வந்து கொண்டிருந்தது.,

    அது புரிந்தாலும், துளசியின் அம்மா, ‘இந்த மனுஷன் இப்பவாது திருந்து தான்னு பார்ப்போம்’ என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டாள்.

    அந்த கோபத்தை அப்படியே கட்டி காப்பாற்றிக் கொண்டிருந்தார்.

   டாக்டர் கொடுத்திருந்த தேதிக்கு ஒரு வாரம் முன்பாகவே,  துளசி கிருஷ்ணாவின் மகள் பிறந்திருந்தாள்.

     அதன் பிறகு வீட்டில் ஆளாளுக்கு, குழந்தையை கவனிப்பதையும், இவளை கவனிப்பதும் பெரும் வேலையாக இருந்தது.

     மருந்து குழம்பு, மருந்து உணவு என பார்த்து பார்த்து கவனித்துக் கொண்டனர்.

    அதிலிருந்து அவள் ஆரோக்கியம்  நன்றாக தேறி வந்த பிறகு, அவள் வேலை மற்ற விஷயங்கள் என்று அலைந்தாலும் வீட்டினர் குழந்தையை நல்லபடியாக பார்த்துக் கொண்டனர்.

    குழந்தையின் போட்டோவும் அவள் அம்மாவுக்கு அனுப்பப்படுவது வீட்டினருக்கு தெரியும்.

     இவள் தான் அவ்வப்போது, பாட்டியிடம் “தேவையில்லாத வேலை பாக்காதீங்க”, என்று சத்தம் போடுவாள்.

     அந்த முறை பாட்டி தாத்தா ஊருக்கு கோயில் விசேஷத்திற்காக சென்றிருந்தனர்.,

    வீட்டில் அனைவரும் இருக்க அந்த சமயம் தான் அகிலாவிற்கு இரண்டாவது குழந்தை பிறந்திருந்தது.,

    அனைவரும் வீட்டில் இருக்க கிருஷ்ணா தான் மெதுவாக துளசியிடம் வந்து, “வாயேன் தோட்டத்துக்கு போயிட்டு வரலாம்” என்று அழைத்தான்.

     “இன்னும் குளிக்கல, ஒன்னும் செய்யல, காலங்காத்தால கூப்பிடுறீங்க”,  என்று சொன்னவள். “பாப்பா இன்னும் எழுந்து தேடுவா”, என்றாள்.

       “குழந்தை எல்லாம் அம்மா பாத்துக்குவாங்க, நீ கிளம்பு போலாம்”, என்று சொன்னான்.

       “காலையிலேயே ஏன்”, என்றாள்.

     அப்போது துளசியின் மகளுக்கு ஒரு வயதாகி இருந்தது, “அம்மா பார்த்துக்குவாங்க, நீ வா நான் உனக்கு ஸ்வீமிங் சொல்லி தரேன்”, என்று சொன்னான்.

       அவளோ நிமிர்ந்து அவன் முகத்தை பார்க்க., அவன் கண்களிலோ குறும்பு கூத்தாடியது.

   ” தெரியும் தெரியும் எப்படி சொல்லிக் கொடுப்பீங்கன்னு எனக்கு தெரியும்., இதுவரைக்கும் எத்தனை தடவை கிணத்துக்கு கூட்டிட்டு போயிருக்கீங்க.,  எப்படி சொல்லி கொடுத்திருக்கீங்கன்னு பாருங்க.,  இப்ப வரைக்கும் ஸ்விம்மிங் தெரியாது., அந்த அழகில் நீங்க ஸ்விம்மிங் சொல்லி குடுக்குறீங்க., உங்களை நம்பி அங்க வர சொல்றீங்களா”, என்று  மெதுவாக பேசிக் கொண்டிருந்தனர்.

    இருவரும் ஏதோ பேசுவது தெரிந்து,  நவீனோ, “இரண்டும் பெட்டிய கட்டிட்டு தோட்டத்துக்கு போக போகுது., அதுதான் இப்ப பண்ண போகுது”, என்று அகிலாவிடம் கிண்டல் செய்து கொண்டிருந்தான்.

     அவளோ “சும்மா இரேன்டா”, என்று சொன்னாள்.

     “நீ வேணா பாரேன், இப்ப நம்ம அண்ணன் துளசியை தள்ளிட்டு தோட்டத்துக்கு போகலையாக்கும், என் பேர மாத்திக்கோ”, என்று சொன்னான்.

      “அது தெரிந்தது தானே டா, அவளை விட்டுட்டு அவனால கொஞ்ச நேரம் கூட இருக்க முடியாது,  நம்ம அண்ணியும் தான் அவன் வெள்ளை காக்கா பறக்குது குட்டி ன்னு சொன்னா, இவளும் ஆமா பாவா ன்னு சொல்லுறா., பேசாம இரு, அவங்க ரெண்டு பேரும் காதல் பறவைகள் அப்படி தான் சேர்ந்து சுத்தும்”, என்று அகிலா அவனிடம் சொல்லிக் கொண்டிருந்தாள்.

    அவர்கள் கணக்கு தப்பாது இருவரும் சற்று நேரத்தில் தோட்டத்துக்கு கிளம்பி சென்றனர்.

    நவீன் தான், “நான் சொல்லல”, என்றான்.

      “போடா” என்று கலை விரட்டி விட்டார்.

அவனும் கடைசில “என்னை பிள்ளை மேய்க்க விட்டுட்டீங்க”, என்றான்.

    “உனக்கு இன்னும் வயசு இருக்கு டா., உனக்கும் கல்யாணம் பண்ணி வைப்போம்., அதுக்கப்புறம் நீயும் உன் பொண்டாட்டிய தோட்டத்துக்கு கூட்டிட்டு போலாம்”, என்று சொல்லி கிண்டல் செய்து கொண்டிருந்தனர்.

    அகிலாவின் கணவரிடம் தான் இப்போதும் எந்த உதவி என்றாலும் போய் நிற்பாள்.

   அண்ணா என்ற அழைப்போடு,  அகிலாவிற்கு இரண்டாவது மகன் பிறந்திருக்க.,

     அகிலாவோ இரண்டாவது டெலிவரியிலேயே ‘ஐயோ போதும் அம்மா’ என்று வருத்தத்தில் இருந்தாள்.

இவ்வளோ அவளிடம் “இதுக்கெல்லாம் வருத்தப்படக்கூடாது, நீங்க வேணும் னா பாருங்க.,  நானெல்லாம் 6 பேபி வேணும் என்று நினைக்கிறேன் “, என்று எல்லோர் இருக்கும் போது சொல்லிக் கொண்டிருந்தாள்.

நவீன், “நீ ஆறு பெத்துப்ப வளக்குறது யாரு”, என்று கேட்டாள்.

     “அதான் நீ இருக்கியாடா”, என்றாள்.

   “ரொம்ப நல்லது”, என்றான்.

     “நல்லது தான் போடா”, என்று அவனிடம் கிண்டல் செய்து கொண்டிருந்தாள்.

      “நல்லவேளை உன் பிள்ளைக்கு சித்தப்பா ன்னு சொல்லிக்கொடுத்த, எங்க என்னை தம்பி தம்பின்னு கூப்பிட்ட மாதிரி., பிள்ளைக்கு மாமான்னு சொல்லி கொடுத்துடுருவீயோ ன்னு பயந்தே போயிட்டேன்”, என்று அவன் சொன்னான்.

        “சேச்சே உறவு முறை எல்லாம் சொல்லி மாத்தி சொல்லி கொடுக்க மாட்டேன்., ஆனா நீ தம்பி தாண்டா”, என்று சொன்னவள்.

     “என் பிள்ளைக்கு மாமா ன்னு தான் அண்ணன் இருக்காங்களே”, என்றாள்.

   அவள் சொன்னது போல தான், குழந்தை அகிலா கணவர் மடியில் அமர்த்தி தான், மொட்டை போட்டு காது குத்தினர்.

   எப்போதும் அந்த குடும்பம் ஒரு சந்தோஷ சூழல் நிறைந்ததாகவே இருந்தது.

  3 வருடங்களுக்கு பிறகு
—————————————-

     கிருஷ்ணா துளசியின் மகளுக்கு நான்கு வயதாகி இருக்க., இப்போதெல்லாம் அவளுக்கு தாத்தா பாட்டி உறவு, அம்மா வீட்டு பக்கமும் வந்து சேர்ந்திருந்தது.

    அவளுக்கு இரு பக்கங்களிலும் பாட்டி தாத்தாவின் செல்லம் அதிகமாக இருந்தது.,

   இவள் இன்னும் அவள் அப்பாவிடம் பேசாமல் இருந்தாலும்.,  அவர் இவளிடம் வந்து மன்னிப்பு கேட்டும் இவள் ஏற்றுக்கொள்ளவில்லை.

     சொத்துக்களை அவளுக்கு மாற்றி தர முயற்சி செய்ய, வாங்க மறுத்து விட்டாள்.

     “எனக்கு தேவை இல்லை, இந்த பணம், இதெல்லாம் வச்சு தானே அன்னைக்கு அவ்வளவு  பண்ணாங்க., எனக்கு வேண்டாம்”, என்று சொல்லி சண்டை போட்டாள்.

    பாட்டி தாத்தா தான், “சரி விடு, அவளுக்கு வேண்டாம், அவ பிள்ளைகளுக்கு எழுதி கொடுத்துக்கலாம்”, என்று சொன்னார்கள்.

    அது போலவே அவள் பிள்ளைகளுக்கு போய் சேரும்படி அவர் எழுதி வைக்க முடிவு செய்தார்.

   இப்போது முத்தரசுவும், லதாவும் இங்கே பாட்டி தாத்தாவோடு வந்து இருந்தனர், பாட்டி தாத்தா நிம்மதியாக இருந்தனர்.

    அவ்வப்போது நவீன் இடம் சொல்லி, குழந்தையை அழைத்து வர சொல்வார்.

        காலையில் கொண்டு போய் விட்டு சாயந்திரம் கூட்டி வந்து விடுவான்.,

    இல்லை என்றால் இங்கு துளசி பத்திரகாளியாக மாறிவிடுவாள்.

     அன்று பாட்டியின் ஊருக்கு  சென்றிருக்க,  குழந்தையோ கீழே கிருஷ்ணாவின் அம்மா அப்பாவோடு இருந்தாள்.

   இவன் அறைக்கு செல்ல, அவளோ “பாப்பா எங்கே” என்றாள்.,

    “எங்க அம்மா கதை சொல்லிட்டு இருக்காங்க, கேட்டுட்டு இருக்கா, அப்படியே அம்மா தூங்க வச்சுருவாங்க”, என்று சொன்னான்.

Advertisement