அனைவரிடமும் சாதாரணமாக பேசிக் கொண்டிருந்தாலும், கிளம்பும் நாள் நெருங்க நெருங்க அவளுக்குள் ஒரு பயம் இருக்கத்தான் செய்தது.
பைலில் சேகரித்த முக்கிய பேப்பர்களை எல்லாம் ஸ்கேன் செய்து லண்டனில் இருக்கும் நண்பர் குழுவுக்கு அனுப்பி இருந்தாள்,
அவர்களும் இவள் அனுப்பிய பேப்பர் எல்லாம் காட்டி எம்பஸியில் கேட்டு வைத்திருந்தனர்.
இவள் அங்கு சென்று எழுதி கொடுத்து வந்த பிறகு தான் இங்கு தன்னுடைய சிட்டிசன்ஷிப்பை மாற்ற எழுதிக் கொடுக்க வேண்டும். அதன் பிறகு தான் அவளுக்கு லண்டன் சிட்டிசன்ஷிப் கேன்சல் ஆகி, இந்தியன் சிட்டிசன்ஷிப் கிடைக்கும்., என்று விளாவரியாக எடுத்து சொல்லி இருந்தனர்.
இவளும் அந்த பிராசஸ் முழுமையாக செய்வதற்காக தான் லண்டனுக்கு கிளம்பி கொண்டிருந்தாள்,
இந்த 15 நாட்களில் அனைவரிடமும் நன்றாக பேசிக் கொண்டாலும்., இப்போது வரை கிருஷ்ணாவும் அவளும் போனில் பேசுவது கிடையாது., கிருஷ்ணாவின் போன் நம்பர் இருந்தாலும் அவளிடம் இல்லாதது போலவே காட்டிக் கொண்டாள்.
அவள் கிளம்ப வேண்டிய நாளன்று காலை அனைத்தையும் எடுத்து வைத்துவிட்டு ஒரு படபடப்புடனே அமர்ந்திருந்தாள்.
இப்போது அவளுக்கான மற்ற உடைகள் எல்லாம் இங்கேயே இருந்தது., அவள் கிளம்பும் போது போடுவதற்கு என்று உடையை எடுத்து வைத்துவிட்டு., எல்லோரிடம் சாதாரணமாக பேசிக் கொண்டிருந்தவள்,
அனைவரிடமும் தனித்தனியாக விடை பெற்றுக் கொண்டாள்., அதில் அகிலாவின் கணவரிடம் பேசும் போது தான், “அண்ணா இப்ப வரைக்கும் எதுவும் தெரியாது., தெரியும் போது பாத்துக்கலாம்”, என்று சொன்னாள்.
“பாட்டி தாத்தாக்கு மட்டும் தானேமா தெரியும்., அத்தை மாமா கிட்ட எதுவும் சொல்லனுமா”, என்று கேட்டான்.
“இல்லை இல்லை, சொல்ல வேண்டாம்”, என்று சொல்லிவிட்டு அவளுடைய அப்பா பாட்டி தாத்தாவும் வந்திருக்க அனைவரிடமும் பேசிக் கொண்டிருந்தாள்.
மதிய உணவு அவர்களோடு உண்டு விட்டு மாலை நேரம் வரை கதை பேசிக் கொண்டு இருந்தாள்.
இன்னும் சற்று நேரத்தில் அவள் ஏர்போர்ட்டுக்கு செல்ல வேண்டும்., இரவு அங்கிருந்து துபாய்க்கு பிளைட், துபாயில் இருந்து லண்டனுக்கு பிளைட், என்று இருக்க இவளுக்கு அதிகம் லக்கேஜ் இல்லை என்பதால் பெரிதாக யோசிக்கவில்லை.
வீட்டில் உள்ளவர்கள் தான் பத்திரமாக போய் சேர வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்தனர்.
அதெல்லாம் சரியாக போய்விடுவேன் என்று சொல்லிக் கொண்டிருந்தாள்.
மாலை காபிக்கு பிறகு கிளம்பலாம் என்று சொல்லும் போது, காபி குடித்து விட்டு ஏற்கனவே கிருஷ்ணா மாடிக்கு சென்றிருந்தான்.
இவளோ உடைமாற்றி வந்திருந்தாள், இதுவரை சுடிதார் சாரி என்று உடை அணிந்து இருந்தவள், முதன்முதலாக ஜீன்ஸ் குர்தியில் இருந்தாள்.
அங்கு அப்போது குளிர் நேரம் என்பதால், அவளுக்கு தேவையான குளிர் தடுக்கும் உடைகளும் கையில் தனியாக வைத்திருந்தாள்.
ஏனென்றால் துபாய் சென்று அங்கிருந்து ஃபிளைட் ஏறிய உடனே இந்த டிரஸ் எல்லாம் அவளுக்கு தேவைப்படும் என்பதால்.
நவீன் “சரி லண்டன் பார்ட்டி லண்டன் பார்ட்டி மாதிரியே கிளம்பிருச்சு”, என்று அகிலாவிடம் சொல்லிக் கொண்டிருந்தான்.
“அவ்வளவு தான் கிளம்பிருச்சு, இனிமேல் மாறாது, ஏற்கனவே அண்ணனும் இவ கிட்ட ஒழுங்கா பேச மாட்டேங்கிறான்., இவளும் இப்போ ஒழுங்கா பேச மாட்டேங்கிறா, சரி போ, எவ்வளவோ முயற்சி பண்ணியும், அண்ணன் பிடி கொடுக்கல சரி விடு, அவ்வளவு தான் லண்டன் போயிட்டு திரும்பி வருவது டவுட் .,ஆனா வந்துருவேன் ன்னு சொல்லிட்டு போகுது பாப்போம்”, என்று சொன்னான்.
அகிலாவோ, “எனக்கு என்னமோ இவங்க ஏதோ பண்ணி இருக்காங்கன்னு தோணுச்சு டா., ஆனா இப்ப என்னவோ ஒரு பதட்டம் இருக்கு., பயமும் வருது, போயிட்டு வந்துருவாங்க இல்ல”, என்று கேட்டாள்.
“அப்படித்தான் சொன்னாங்க., பார்ப்போம்”, என்றான்.
இவள் கொண்டு போக வேண்டிய பொருட்களை ஹாலில் எடுத்து வைத்தவள், அனைவரிடமும் ஆசீர்வாதம் வாங்கிக்கொண்டாள்., வயதில் மூத்தவர்கள் திருநீறு வைத்து விட, “போயிட்டு வந்துருவேன் பாட்டி”, என்று இரண்டு பாட்டியையும் கட்டிக்கொண்டு சொன்னாள்.
கலையிடமும் “கண்டிப்பாக வந்து விடுவேன், பயப்படாதீங்க”, என்று சொன்னாள்.
பின்பு கிருஷ்ணாவின் அம்மாவிடம், “உங்க பையனுக்கு சாமியாரா போக தான் ஆசை இருக்காம், அது என்ன ன்னு மட்டும் விசாரிச்சு வையுங்க., நான் வந்துடறேன்”, என்று சொன்னாள்.
அவரோ இவள் சொன்னதை கேட்டு சிரித்துக்கொண்டிருந்தார்.
பாட்டியோ, “இருந்தாலும் உனக்கு சேட்டை அதிகம் டி அவன் அம்மாகிட்டயே போய் சொல்லிட்டு இருக்க, அவன் சாமியாரா போக போறான்னு”,என்றார்.
“உண்மைய தான பாட்டி சொன்னேன்”, என்று சொன்னவள்,
” எங்க அவங்க”, என்றாள்.
“மாடியில்” என்று சொன்னார்,
“சரி நான் போய் பாத்துட்டு வர்றேன்”, என்றாள்.
“அவனை கீழே கூப்பிடட்டுமா”, என்று கலை கேட்டார்.
“உங்க பையன கடிச்சு எல்லாம் முழுங்கிட மாட்டேன்., பத்திரமா இருப்பாப்ல, போய் பாத்துட்டு வந்துருவேன்”, என்று சொல்லிவிட்டு மாடிக்கு சென்றாள்.
கதவை தட்டாமலேயே திறந்து கொண்டு உள்ளே சென்றாள்.
அவனும் ஜன்னல் வழி வெளியே பார்த்தபடி நின்றான்.
அவன் திரும்பிப் பார்க்கவில்லை இவள் கதவை சாத்திவிட்டு மெதுவாக நடந்து சென்றாள்.
அவளுடைய கொலுசொளியை கேட்ட படி அப்படியே நின்றவன் திரும்ப கூட இல்லை.
ஆனால் அருகில் சென்றவளோ, இருவருக்கும் சிறு இடைவெளி விட்டு , தலையை மட்டும் அவன் முதுகில் சாய்த்துக் கொண்டவள். அவன் சட்டையின் பக்கவாட்டு பகுதியை இழுத்துப் பிடித்தாள்.,
சற்று நேரம் அப்படியே அமைதியாக இருந்தாள். அவனும் பேசவே இல்லை, கிணற்றில் விழுந்து எழுந்து வந்த பிறகு இருவரும் அதிகமாக பேசிக்கொள்வதில்லை,
ஏற்கனவே அவன் பேசுவதில்லை., இவளோ அதற்கு பிறகு பேச்சை குறைத்து இருந்தாள்.
ஆனால் ‘அவ்வப்போது அவனிடம் ஏதாவது சொல்லி செல்வது உண்டு., அது போல தான் இன்றும் ஏதோ சொல்ல வருகிறாள்’,என்று அவன் நினைத்திருந்தான்.
சட்டையை பிடித்தபடி அவன் முதுகில் தலையை மட்டும் சாய்த்து இருவருக்கும் இடைவெளியோடு நிற்க அதை உணர்ந்தவன் அமைதியாகவே நின்றான்.
சற்று நேரம் அவளும் அமைதியாகவே இருந்தாள்.
அவனிடமிருந்து ஒரு பெருமூச்சு வரவும், முகத்தை நன்றாக அவன் முதுகில் அழுத்திக் கொண்டவள்.,
“பாவா நான் வந்துருவேன், துளசினு பேர்ல யாரையாவது பார்க்கிறேன், இல்லை யாரையாவது பார்த்து பேர் மாத்துறேன்னு சொன்னீங்கன்னு வையுங்க, நீங்க கம்பி என்ன வேண்டியது வரும்.,
அதனால அந்த பொண்ணு பாக்குற படலத்தை எல்லாம் விட்டுட்டு, துளசியை தேடுற படலத்தை விட்டுட்டு, எனக்காக வெயிட் பண்ணுங்க, மேக்ஸிமம் போனா 20 டேஸ் ல வந்துருவேன்., சரியா”, என்று அவனிடம் சொன்னாள்.
ஜன்னல் பகுதியில் முகம் பார்த்து நின்றவனுக்கு, சிரிப்பு வந்தாலும் இவள் முன் எதையும் காட்டிக் கொள்ளக் கூடாது ,என்று அமைதியாக இருந்தான்.
தன்னை நிதானப்படுத்திக் கொண்டவன், “நீ கிளம்புமா உங்க அப்பா உனக்காக அங்க வெயிட் பண்ணுவாரு”, என்று சொன்னான்.
“அப்பா வெயிட் பண்றது இருக்கட்டும் பாவா., நீங்க என்ன சொல்றீங்க, அதை சொல்லுங்க, நான் போயிட்டு வந்த உடனே கல்யாணம் பண்ணிப்பீங்க இல்ல”, என்று கேட்டாள்.
அவனும் சிரித்துக்கொண்டான், ஆனால் சிரித்தது அவளுக்கு தெரியாத வண்ணம் மறைத்துக் கொண்டான்.,
சிரிப்பை அடக்க பெரும்பாடு பட்டவன்., ‘இந்த பேக்கு குட்டி பண்றது எல்லாம் பண்ணிட்டு., என்னென்னலாம் பேசுது’, என்று நினைத்துக் கொண்டவன்.
“நீ கிளம்புமா, உங்க அப்பா திரும்பி விட்டா பாரு., உனக்கு விசா இங்க கிடைச்சா பாரு”, என்று சொன்னான்.
“நான் இப்போ ஸ்டடிஸ் காரணம் காட்டி வீசா வாங்கணும் அப்படிங்கறதுக்காக போறேன், அப்படி இல்லாட்டி இன்னும் நிறைய ரெடி பண்ணி வச்சிருக்கேன்., எவிடென்ஸோட போய் வாங்கிட்டு வந்துருவேன்., என்னோட பர்த் சர்டிபிகேட் கூட, எனக்கு அப்பாச்சி எடுத்து கொடுத்துட்டாங்க., சோ அத வச்சு நான் ஈஸியா இங்க வந்துருவேன்., அங்க போயி நான் ரீசன் சொல்லணும், லெட்டர் எழுதி கொடுக்கணும், அங்க நான் எம்பஸிக்கு ஆன்சர் பண்ணனும்., எல்லாம் பண்ணி முடிச்சிட்டு சீக்கிரமா வந்துருவேன்., அப்புறம் இங்க உள்ள எம்பஸிக்கு அலைந்து எனக்கான இந்தியன் சிட்டிசன்ஷிப்புக்கு நான் என்ன எல்லாம் வாங்கணுமோ, அதெல்லாம் ரெடி பண்ணனும் அதுக்கு நீங்கதான் ஹெல்ப் பண்ணனும்”, என்று சொன்னாள்.
‘நீ திரும்பி வந்தா பார்ப்போம் போ”, என்று அவன் சொன்னான்.
“அப்படி சொல்லாதீங்க பாவா, திருப்பி வர மாட்டேன்னு மட்டும் நினைக்காதீங்க., திரும்பி வருவேன். ஒருவேளை நான் திரும்பி வரலைன்னா., நான் இல்லன்னு நினைச்சுக்கோ”, என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே சட்டென்று திரும்பியவன் அவளைப் பிடித்து தன்னிலிருந்து பிரித்து தள்ளினான்.
“லூசா நீனு, போ எங்க இருந்தாலும் நீ நல்லா இரு, அவ்வளவுதான்”,என்று சொன்னான்.
“அடடா எங்கிருந்தாலும் வாழ்க ன்னு பாடிட்டு., இங்க வேற துளசி தேடலாம் ஐடியாவா? கொன்னுடுவேன்., நான்தான், நான் மட்டும்தான்”, என்று அவனை மிரட்டி கொண்டிருந்தாள்.
அப்போது தான் அவளது உடையை கவனித்தவன்., “லண்டன் கிளம்பின உடனே லண்டன் ஆளு மாதிரி மாறி தெரியுற”, என்றான்.
“ஹலோ நான் சேலைய கட்டிட்டு இந்த குளிரில் போக முடியாது, அது மட்டும் இல்லாம துபாயில் இருந்து பிளைட் மாறவுமே எனக்கு டிராவல் டைம் அதிகம்., அந்த டைம்லயே குளிர ஆரம்பிச்சிடும் ஓகேவா? என் ஒருத்திக்காக அங்கே டெம்பரேச்சர் எல்லாம் மாற்ற மாட்டாங்க., சீக்கிரமா வரேன் வெயிட் பண்ணுங்க மேன்”, என்று சொன்னாள்.
இருவரும் இப்போது சற்று இடைவெளி விட்டே தள்ளி நின்றனர்.
அவன் வேண்டுமென்றே முகத்தை ஒரு மாதிரி வைத்துக் கொண்டு, “முதலில் கிளம்புமா, பிளைட் உன்ன விட்டுட்டு போயிட போகுது, கிளம்பறதுக்குள்ள ஓடிரு”, என்று சொன்னான்.