உடைகளை அலசி விட்டு பம்பு செட் தீண்டிலேயே அமர்ந்து தலையை உதறி காய போட்டுக் கொண்டிருக்கும் போது தான் உள்ளிருந்து குளித்துவிட்டு கிருஷ்ணா வந்தான்.

இவளுக்கு கண்ணெல்லாம் சிவந்து போய், முகமும் சிவந்து போய் இருப்பதை பார்த்தவுடன் எதுவும் சொல்லாமல் அவளை கடந்து போனவன்.,  “போ” என்றான் இவள் எதுவும் சொல்லாமல் அப்படியே அமர்ந்திருந்தாள்.

அவன் உடைமாற்றிக் கொண்டு அவனது உடையும் அலசி எடுக்க,  ஈர உடையும்  அத்தனையும் எடுத்து அவர்கள் துணி கொண்டு வந்த பையில் ஏற்கனவே அகிலா மற்றவர்களின் உடைய வைத்திருக்க., அதற்கு மேலேயே இவனது உடையும், இவளது உடையும் எடுத்து வைத்து விட்டு அந்தக் பையை தூக்க முயற்சி செய்யும் போது., அவன் தான் அவள் கையில் இருந்து வாங்கிக் கொண்டு நடக்க துவங்கினான்.

    அவன் பின்னே நடந்தவள், “பாவா” என அழைக்கவும், எதுவும் சொல்லாமல் நடக்கத் தொடங்கியவனிடம் “பாவா ஒரே ஒரு நிமிஷம் நான் சொல்றதை கேளுங்க”, என்றாள்.

      இவன் திரும்பிப் பார்த்து “என்ன” என்றான்.

    “சீரியஸா சொல்லுறேன் பாவா, நீங்க எதுக்கும் சரி பட்டு வரமாட்டீங்க , நீங்க சரிப்பட்டு வரவே மாட்டீங்க, நீங்க என்ன பண்ணுங்க, நல்ல ஒரு காவி வேஷ்டி வாங்கிட்டு, ருத்ராட்சம் வாங்கிட்டு, அப்படியே சன்னியாசியா போயிருங்க.,

    உங்க தம்பி முதல் தடவை என்கிட்ட சொல்லும் போதோ எப்பவோ சொன்ன ஞாபகம்., முதல் தடவ சொன்னானா இல்ல அதுக்கு அப்புறம் சொன்னான்னு தெரியல,  நீங்க சந்நியாசம் வாங்குவதற்க்கு தான் லாய்க்கு, அப்படியே போயிருங்க”, என்று கோபமாக சொன்னாள்.

    அவளை பார்த்தவனுக்கு ஒருபுறம் சிரிப்பை அடக்க முடியாமல் இருந்தாலும்., “ஒன்றும் சொல்லாமல், நீ எங்க போக போற ,லண்டன் கிளம்பிருவியா” என்று கேட்டான்.

    “அது ஏன் இஷ்டம், அதை பத்தி நீங்க சொல்லக்கூடாது, நான் என்ன பண்ணனுமோ நான் பண்ணிக்கிறேன்”, என்று சொல்லிவிட்டு அவனை இடிப்பது போல தள்ளிவிட்டு வேகமாக அகிலாவை நோக்கி சென்றாள்.

அகிலாவோ  “ஏய் என்ன எங்க அண்ணன பைய தூக்க விட்டுட்ட”, என்று கேட்டாள்.

  “உங்க அண்ணன் அதையாவது செய்யட்டு மா”, என்று சொல்லிவிட்டு போனாள்.

     வீட்டிற்கு வந்தவுடன் வீட்டினருக்கு தெரிந்தாலும் “ஏன் இது” என்று தான் கேட்டனர்.

   “எதுவுமே சொல்லாமல், உங்க பையன் என்னை அப்படியே விட்டு இருந்து இருக்கலாம்.,  நான் லண்டன் போவதற்கு பதிலாக அப்படியே போயிருந்திருக்கலாம்”, என்று சொல்லிக் கொண்டிருந்தாள்.

பாட்டி தான் சத்தம் போட்டார்., “இது என்ன பேச்சு” என்றார்.

“தமிழ் தான் பாட்டி” என்று சொல்லிவிட்டு தன் அறைக்குள் சென்று அடைந்து கொண்டாள்.

    வேலை இருப்பதாக சொல்லி கிருஷ்ணா கிளம்பி விட அவனோடு நவீனும் கிளம்பினான்.

ஓரளவிற்கு அகிலாவிற்கு விஷயம் தெரியும் என்பதால் பெண்களிடம் இந்த பேச்சு தான் ஓடிக்கொண்டிருந்தது.

     அறைக்கு சென்றவளோ., தலையை காய விட்டு விட்டு அப்படியே படுத்து விட்டாள்.

‘இதற்கு மேல் என்ன செய்யலாம்’,என்று யோசித்துக் கொண்டிருந்தாள் .

அகிலா கணவன் குளித்துவிட்டு வந்து உணவு உண்டு படுத்தவன், ஒரு சிறு தூக்கம் தூங்கி எந்திரிக்க., மதிய உணவு நேரத்திற்கு அனைவரும் வீடு வந்து சேர்ந்தனர்.

     எல்லோரும் சாப்பிடலாம் என்று நினைக்கும் போது, “இவ காலையிலேயே ஒழுங்கா சாப்பிடல அகி, அவளை எழுப்பிட்டு வா”, என்று கலை சொன்னார்.

     இவளும் அறைக்குள் செல்ல,  அங்கு சுருண்டு படுத்திருந்தவளைப் பார்க்கும் போது பாவமாக தான் இருந்தது.

‘எதுவுமே தெரியாமல் இந்தியாவிற்கு வந்தவளுக்கு இங்கே தனக்கு இப்படி ஒரு சொந்தம் இருப்பதும், இப்படி உறவுகள் இருப்பதும் தெரியாமல், இப்போது தெரிந்து அது வேண்டும் என்று நினைக்கும் போது, அவளுக்கு கைநழுவி போய்விடுமோ என்ற எண்ணமே ஒருபுறம் அழுத்துகிறது’, என்பதை உணர்ந்து கொண்டவள் அவளை போய் எழுப்ப கை வைக்கும் போது தான் அவளது உடம்பு சூட்டினை உணர்ந்தாள்.

   ‘இந்த பொண்ணுக்கு காய்ச்சலடிக்குதே’ என்று மீண்டும் தொட்டுப் பார்த்து , அவளை எழுப்ப முயற்சிக்க.,

    அவளோ கண்ணை திறக்க முடியாமல் திறந்து, “கொஞ்ச நேரம் தூங்குறேனே, தல எல்லாம் வலிக்குது”, என்று குரல் மங்கி பேசினாள்.

     ‘அச்சச்சோ தண்ணி ஒத்துக்கல போலயே’, என்று நினைத்தாள்.

     ‘தண்ணி ஒத்துக்கலையா, இல்ல கிணத்துக்குள்ள விழுந்ததுல, தண்ணி எதுவும் குடிச்சிட்டாளா தெரியலையே’, என்று யோசித்துக் கொண்டே வேகமாக வெளியே வந்தவள்.,

அனைவரும் சாப்பிட அமர்ந்து பரிமாறிக் கொண்டிருப்பதை பார்த்தவள் எதுவும் சொல்லாமல் அமைதியாக வந்து நின்றாள்.

     “நீ சாப்பிடு அகி” என்று சொல்ல,

    “முதல்ல இவங்கல்லாம் சாப்பிட்டு முடிக்கட்டும்”, என்று சொன்னவள் ‘அம்மா பரிமாறிக் கொண்டிருக்கிறார்,

சித்தி கிச்சனுக்கும் டைனிங் ஹாலுக்கும்மாக அனைத்தையும் எடுத்து வைப்பதும், வேண்டும் என்பதை அலமேலுவிடம் சொல்லி வாங்கிக் கொண்டிருப்பதையும் பார்த்தவள்’.,  மெதுவாக கிச்சனுக்கு சென்று  சித்தி என்றாள் மெதுவான குரலில்.

அவரும் “என்ன அகி” என்று கேட்டார்.

“துளசிக்கு நல்ல ஃபீவர், இப்ப சொன்னா எல்லாரும் சாப்பிட்டுட்டு இருக்காங்கன்னு தான் சொல்லல, அப்பா சித்தப்பா அண்ணா எல்லாரும் சாப்பிடுறாங்களா, அதனால தான் சொல்லல., அதுக்கு தான் மெதுவா  இங்கே வந்தேன்”, என்று சொன்னாள்.

  அலமேலு தான், “தண்ணி ஒத்துக்கில்லையோ என்னவோ”, என்று சொன்னார்.

   வீட்டினருக்கு மட்டும் அவளுக்கு கிணற்றில் குதித்தது தெரியும் என்பதால் கலையும் அகிலாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு, “அப்படி இருக்காது,

    இவ கிணத்துக்குள்ள இறங்குறேன்னு ட்ரை பண்ணி இருக்கா, அதுல இன்னும் தண்ணிய குடிச்சிட்டாலோ என்னவோ”, என்று கலை அதை பூசி மெழுகி சொன்னார்.

    “கிணதுக்குள்ள எதுக்குமா பாப்பா இறங்குச்சு., மூக்குக்குள்ள தண்ணி போயிருக்கும், தண்ணீர் குடித்து இருக்கும், நீச்சல் தெரியுமா தெரியாதா”, என்றார்.

   “இல்லை நீச்சல் தெரியாது., அகிலா கூட்டிட்டு வந்துட்டா”, என்று சொன்னார்.

    “ஓ அப்படியா அதனால  தலை பாரமா இருக்கிற மாதிரி இருக்கும்., நான்  கசாயம் வைக்கட்டா”, என்றார் .

    “சரி சரி சத்தமே இல்லாம கசாயம் வைங்க, அதுக்குள்ள இவங்களாம் சாப்பிடட்டும், நான் மாத்திரை எதுவும் இருக்கா இல்லையான்னு பார்க்கிறேன்”, என்று சொன்னார்.

      “மாத்திரை எல்லாம் இருக்கும் , அம்மாவோட மருந்து பாக்ஸ் ல பாருங்க., காய்ச்சல் மாத்திரை தனியா இருக்கும்”, என்று அலமேலு சொன்னார்.

இவரும் சரி என்று சொல்லிவிட்டு, “அகி  நீ போய் பரிமாறு,  நான் அவளை பாத்துக்குறேன்”, என்று சொல்லிவிட்டு சென்றார்.

வேகமாக மாமியாரின் அறைக்குள் சென்றவள். மாத்திரை டப்பாவை எடுத்து அதில் காய்ச்சல் மாத்திரையை தேடி எடுத்தாள். ‘அதிகம் சளிக்கு மாத்திரை இருக்கா, இல்லையான்னு தெரியலையே ‘, என்று தேடியவள்,

      தைலம் இருப்பதை பார்த்தவள் இரண்டையும் எடுத்துக்கொண்டு துளசியின் அறைக்குள் நுழைந்தார்.

அதை பார்த்துக் கொண்டிருந்த பாட்டி தான்.,  ‘இவ எதுக்கு ரூம்குள்ள போனா, திருப்பி அங்கிருந்து வந்தா, மறுபடியும் ரூமுக்குள்ள போய்ட்டா’ என்று யோசனையோடு சாப்பாட்டை சாப்பிட்டு கொண்டே அகிலாவை பார்த்தார் .

அகிலாவோ ஒன்றுமில்லை என்னும் படியாக தலையாட்டினாள்.

அனைவரும் உணவு உண்டு முடிக்க., துளசியின் காய்ச்சல் விஷயம் வெளியே தெரிந்தது.

அலமேலு அதற்குள் கசாயம் செய்து எடுத்துக் கொண்டு வர அவளுக்கு தைலம் தேய்த்துக் கொண்டிருக்க.,  அவளோ கலையின் மடியில் தலை வைத்து கலையின் இடுப்பை கட்டிக்கொண்டு சுருண்டு படுத்திருந்தாள்.

   அறைக்குள் எட்டிப் பார்த்த நவின் ‘இவ எதுக்கு தன்னைத்தானே இவ்வளவு வருத்திக்கிறா ன்னு தெரியலையே.,  ஒன்னு லண்டன் போக சொல்லணும்.,  இல்லாட்டி எங்க அண்ணன் மனசு மாறனும்,  இரண்டுல எது நடக்க போகுதுன்னு தெரியலையே., கடவுளுக்கு தான் வெளிச்சம்’,  என்றும் மனதிற்குள் நினைத்துக் கொண்டான்.

அகிலாவின் மனமும் கிட்டத்தட்ட அது போல ஒரு எண்ணத்தில் இருக்க., வீட்டின் பெரியவர்கள் தான் “தண்ணி ஒத்துக்கலையோ” என்று சொன்னார்கள்.

அவள் கிணற்றில் குதித்து குதித்தது ஓரளவிற்கு தெரியும் என்பதால், நீச்சல் பழக குதித்ததாக மற்றவர்கள் நினைத்துக்கொள்ள.,  விஷயம் தெரிந்தவர்கள் மட்டுமே அவள் எதற்கு குதித்தால் என்பது அறிந்தனர்.

   அவள் அறையின் வாசலில் நின்று அவள் கலையின் மடியில் சுருண்டு படுத்திருப்பதை பார்த்தவனோ,  ‘இவளை என்னதான் செய்ய’, என்று யோசித்தவன்.

     நவீன் அவனை பார்ப்பதை பார்த்து, “சீக்கிரம் லண்டனுக்கு பேக் பண்ணுங்கடா., இங்க வச்சி சமாளிக்க முடியாது, சரியான லூசா இருக்கும் போல”, என்று சொல்லிவிட்டு சென்றான்.

      ‘அவ அங்கிருந்து நல்ல மைண்ட்ல தான் வந்துருப்பா., இங்க உள்ள கதை தெரிஞ்சவ தான் மாறிட்டா’, என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டான் நவீன்

      துளசி வேறு ஏதோ பிளான் செய்ய போக.,  அது அவளுக்கே காய்ச்சலாக கொண்டு வந்து நிறுத்தியது.,

    அந்த அரை தூக்கத்திலுமே,   ‘இனிமேல் பிளான் செய்றத கரெக்ட்டா பிளான் செய்யனும், நமக்கே நாம பிரச்சினையை உருவாக்க கூடாது’ என்று நினைத்துக் கொண்டே.,

     கலையிடம் “அத்த தலைவலி தாங்கல”, என்று சொல்லிக் கொண்டிருந்தாள்.

அவளுக்கான ஒவ்வொரு வைத்தியமாக அங்கு நடந்தேறிக் கொண்டிருந்தது.

இத்தனை காய்ச்சலிலும் அடுத்த பிளானை தயார் செய்து வைத்திருந்தாள் துளசி.