Advertisement

தென்றல் – 8

“பிரதீபா… தென்றல் எங்க…?? நேத்தும் வரலையே…???” என்று ப்ரித்வி கேட்கும் போதே அவன் குரலும் முகமும் ஒருமாதிரி இருந்தது. உயிர்ப்பே இல்லாதது போல்.

“இல்லண்ணா.. கால் பண்ணேன்.. எடுக்கவேயில்லை.. ஏன் இப்படி பண்றா தெரியலை….” என,

“ஹ்ம்ம்… ஹெல்த்துக்கு எதுவுமா???”

“தெரியலைண்ணா.. அப்படி ஏதாவதுன்னா அவளே சொல்லிடுவா…”

“ம்ம் ஓகேம்மா.. யு கேரி ஆன்..” என்று நகர்ந்து சென்ற ப்ரித்விக்கு மனதில் ஆயிரம் எண்ணங்கள்.. அனைத்திலும் தென்றல் தென்றல் தென்றல் மட்டுமே..

‘ஏன் இப்படி பண்றா??? என்னாச்சு இவளுக்கு…?? நேத்தும் வரல.. இன்னிக்கும் வரல…’ என்றெண்ணியவன், மீண்டும் அவளுக்கு அழைத்துப்பார்க்க, முதல் முறை இணைப்பு கிடைத்தது, மறுமுறை அலைபேசி அணைத்து வைத்திருப்பதாய் பதிவு செய்த குரல் சொல்ல, ஆக இவள் வேண்டுமென்றே தான் செய்கிறாள் என்று புரிந்தது..

“ம்ம்ச்.. நல்லாத்தானே இருந்தா இப்போ என்ன???” என்று யோசிக்க, தென்றல் ஏன் இப்படி செய்கிறாள் என்று புரியவேயில்லை..

‘ஷ் தென்றல்…. என்னை டென்சன் பண்ற….’ என்று மேஜையில் ஓங்கி குத்தியவனுக்கு, தன் அலைபேசி சிணுங்கும் போதெல்லாம் அவள் தானோ என்று பார்ப்பதும் பின் எமாறுவதுமாக, அன்றைய நாள் எல்லாம் அப்படியே தான் கழிந்தது.

மாலை வீடு கிளம்பும் நேரம் பிரதீபா வந்தவள்,  “நாளைக்கு லீவ் தானே ண்ணா நான் போய் அவளை பார்த்திட்டு வரேன்…” என,

“ஹ்ம்ம் அதெல்லாம் வேணாம்மா.. அவளுக்கு ஏதாவது வொர்க் இருக்குமா இருக்கும்…” என்று ப்ரித்வி சாதாரணமாய் சொல்லி சமாளிப்பது போல் சமாளித்தான்..

“அண்ணா.. எனக்கு எல்லாம் தெரியும்…” என்று பிரதீபா சொல்ல, சட்டென்று அவளை திடுக்கிட்டு பார்த்தவன்,

“வாட்??? என்ன பிரதீபா..??” என,

“ஹ்ம்ம் எனக்கு எல்லாமே தெரியும் ண்ணா… நீங்க எதுவும் டென்சன் ஆகவேணாம்.. நான் அவளை பார்த்து பேசுறேன்…” என்று சொல்ல, ப்ரித்வி லேசாய் சிரித்துக்கொண்டான்..           

‘டேய் ப்ரித்வி… ரொம்ப சொதப்புறியோ…..’ என்றெண்ணியவன்,

“வேணாம் பிரதீபா… நானே பேசிக்கிறேன்..” என்று அவளை சமாதானம் சொல்லி அனுப்பியவன் உள்ளம் மட்டும் சமனாகவே இல்லை..

மீண்டும் மீண்டும் அவளுக்கு அழைத்துப் பார்த்து ஏமாந்து போனது தான் மிச்சம்.. நேரம் இப்படியே செல்ல செல்ல, அவனுக்கு உடனே தென்றலை காணவேண்டும் போல வேகம் கூடிக்கொண்டே போனதே தவிர குறைந்தபாடில்லை..

இரண்டு நாட்களாய் வரவுமில்லை… அழைப்பையும் ஏற்கவில்லை எனில் அவன் என்ன தான் செய்வான் பாவம்.. அதுவும் அவனது காதலை அவளிடம் சொல்லிடவேண்டும், இனியும் தான் இப்படி இருப்பது சரியல்ல என்று முடிவெடுத்து, தென்றல் தன்னிடம் எப்படி நடந்தாலும் பரவாயில்லை தன் மனதில் இருப்பதை மறைக்காமல் அவளிடம் கொட்டித் தீர்த்து விடவேண்டும்   என்றிருக்கும்  போது தென்றல் இப்படி அவன் கண்ணிலேயே படாமல் இருந்தால்  அவனுள்ளம் தவிக்காதா??

ப்ரித்வி இப்படி தவித்துக்கொண்டிருக்க, தென்றலோ அவளது அறையில், கட்டிலில் குப்புறப் படுத்துக் கிடத்தாள்..

“தென்றல் ஒழுங்கா வந்து இப்போ சாப்பிடுறியா இல்லையா..???” என்ற கமலியின் அழைப்புக்கும் அவள் பதில் சொன்னாளில்லை.

“தென்றல்….” என்றுவந்து அவள் முதுகை தட்ட,

“எனக்கு ஒன்னும் வேணாம்மா….” என்றாள் திரும்பாமல்.

“இதென்ன பழக்கம்டி.. திரும்பி நேரா படு முதல்ல… நேத்திருந்து நீ சரியில்ல….” என்று கமலி அரட்ட, அவள் மௌனமாய் இருந்தாள்.

“தென்றல் அடி வாங்க போற நீ….”

“ம்ம்ச் என்னம்மா என்னை கொஞ்சம் நிம்மதியா இருக்க விடேன்…” என்றவள் வேகமாய் திரும்பிப் படுத்தாள். முகமெல்லாம் சிவந்து கண்கள் வீங்கிப் போய் இருக்க,

“ஏய்… தென்றல் என்னாச்சு….” என்று கமலி வேகமாய் அவள் நெற்றியை தொட்டுப் பார்க்க, காய்ச்சல் ஒன்றுமில்லை..

“என்னடி ஏன் இப்படி இருக்க.. காய்ச்சலும் இல்லையே….” என்று ஒரு அன்னையாய் பதற,

“ம்ம்ச் ஒண்ணுமில்ல விடும்மா…” என்றாள் சலிப்பாய்..

எப்போதுமே உற்சாகமாய் சுற்றி திரியும் தென்றல் இப்போது அறைக்குள்ளே முடங்கிக் கிடப்பது கமலிக்கு சங்கடமாய் இருக்க, அவளது தோற்றம் வேறு எப்படியோ இருக்க, மேலும் மேலும்  என்னவென்று கேட்டார்.. பெற்ற அன்னையல்லவா சும்மா இருக்க முடியுமா??

“ம்மா எனக்கு ஒண்ணுமில்ல… ப்ளீஸ் என்னை கொஞ்சம் தனியா விடு…” என்று அவளும் விடாமல் சொல்ல,

“இதெல்லாம் கொஞ்சம் கூட சரியேயில்ல தென்றல்… இப்படி முகமெல்லாம் ஒருமாதிரி இருக்கு.. ஆனா தனியா விடுன்னா என்ன அர்த்தம்..” என்று அவர் அவளுக்கும் மேலாய் சத்தமிட, முகத்தை உம்மென்று வைத்துக்கொண்டு அமர்ந்திருந்தாள்.

மெல்ல மகளின் தலை முடியை வருடியவர், “என்ன தென்றல் என்னாச்சும்மா.. எதுவாயிருந்தாலும் என்கிட்டே சொல்லேன்…” என,

“ம்ம் அம்மா….” என்றாள் தயக்கமாய்.

“சொல்லுடா…” என,

“ம்மா…” என்றவள், அடுத்து அவர் மடியில் படுத்துக்கொண்டாள்..

எப்போதும் தென்றல் இப்படியெல்லாம் செய்பவள் இல்லை.. படபடவென்று பேசுவாள்.. கோவமோ சந்தோசமோ என்னவாக இருந்தாலும் வீட்டில் அவள் சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கும்.. ஆனால் இரண்டு நாட்களாய் அவள் இருக்குமிடமே தெரியாமல் எங்கும் செல்லாமல், யாரோடும் பேசாமல் வீட்டிலிருக்கவும் கமலிக்கு என்னவோ போல் ஆனது..

“என்னடா என்னாச்சு…??” என்றார் மென்மையாக..

பெற்றவர்களுக்குத் தெரியாதா பிள்ளைகளிடமிருந்து எப்படி வார்த்தைகளை வாங்கவேண்டும் என்று.. கமலியின் வருடலிலும், மென்மையான குரலிலும் தென்றலின் உள்ளமும் இறங்கிக்கொண்டே இருந்தது..

“என்னாச்சுடா… நீயேன் இப்படி இருக்க.. அப்பா வரும் போது நீ இப்படியிருந்தா அவர் சங்கடப்பட மாட்டாரா..???”   

“ம்ம்….” என்றவளின் கண்களில் கண்ணீர்…

“ஏ தென்றல் என்னாச்சுன்னு கேட்கிறேன்ல…”

“ம்ம் அம்மா….” என்றவள் பின் தயங்கி, “எனக்கு இப்போ கல்யாணமெல்லாம் வேணாம்மா…” என்றாள் அழாத குறையாய்..

“கல்யாணமா????!!!!!”

“ம்ம்…. நீயும் அப்பாவும் அன்னிக்கு பேசினீங்க.. நான் கேட்டேன்…” என்றவள் இன்னும் கமலி மடியில் முகம் புதைத்துக்கொள்ள,

“அட லூசு… எந்திரி.. எந்திரிச்சு உட்காரு…” என்று மகளை எழுப்பி அமர வைத்தவர், “என்ன தென்றல்…” என,

“ஹ்ம்ம் என்ன தென்றல்.. நீயும் அப்பாவும் அன்னிக்கு டைனிங் ஹால்லா உட்கார்ந்து பேசினீங்க தானே… தென்றலுக்கு வரன் பார்க்கணும் அப்படின்னு…” என்றாள் இன்னும் முகத்தை உம்மென்று வைத்து..

“சரி.. அதுக்கும் நீ இப்படி இருக்கிறதுக்கும் என்ன இருக்கு…??”

“ஏன்னா இப்போ எனக்கு கல்யாணம் வேணாம்…”

“ஹா ஹா அசடு.. உனக்கென்ன நாளைக்கே கல்யாணமா?? சும்மா நானும் அப்பாவும் பேசினோம்டா… கல்யாணம்னு சொன்னா உடனேவா நடந்திடும்… அதுக்கு இன்னும் எவ்வளோ வேலைகள் இருக்கு…”

“ம்ம்ம்….” என்றவள் முகமோ இன்னும் தெளியவில்லை..

அவளது கவலையெல்லாம் இப்போது திருமணத்தை பற்றியல்ல தன் மனதை பற்றி. தென்றலின் திருமணம் பற்றி பேசும் பொழுது, அவள் எதார்ச்சையாக தான் கேட்க நேர்ந்தது…

‘எனக்கு கல்யாணமா???’ என்று அதிர்ந்தவள், அடுத்து அறைக்குள் நுழைந்தவளுக்கு, என்னவோ அடுத்தடுத்து ப்ரித்வியை பற்றிய எண்ணங்கள் மேலெழும்பி வர, அவளால் அவள் மனத்தின் பாரத்தை தாங்கவே முடியவில்லை..

பிடிக்காது பிடிக்காது என்று தான் நொடிக்கொருதரம் நினைக்கும் ஒருவனை… நடிக்கிறான் நடிக்கிறான் என்று எப்பொழுதுமே தான் அர்ச்சிக்கும் ஒருவனை அவள் மனம் ஓயாது நினைத்துக்கொண்டு இருந்தால் அவளும் என்னதான் செய்வாள்..???

இரண்டு நாட்களாய் அவளுக்கு எங்கும் செல்ல பிடிக்கவில்லை, யாரோடும் பேசவும் பிடிக்கவில்லை.. யாரையும் பார்க்கவும் பிடிக்கவில்லை.. அலைபேசியை அமர்த்தியவள் அதன் பின் அதை தொட்டுக் கூட பார்க்கவில்லை.. என்னதான் தன்னை தானே ஒரு கூட்டுக்குள் அடித்துக்கொள்ள முயன்றாலும், அவளால் ப்ரித்வியின் எண்ணத்தில் இருந்து தன்னை விடுவித்துக்கொள்ள முடியவே இல்லை..

‘இது என்ன மாதிரியான உணர்வு????’

‘எனக்கேன் இப்படியெல்லாம்…??’

‘எனக்கு என்னவோ ஆச்சு??’

‘ஒருவேளை இதான் லவ்வா..???’

இப்படியான கேள்விகள் அவள் மனத்தில் தோன்றியதும் அடுத்த நொடி அவளுக்கு விதிர் விதிர்த்து விட்டது..

காதலா???? எனக்கா ??? அதுவும் ப்ரித்வி மீதா??? இல்லவே இல்லை என்று கத்த வேண்டும் போல் இருந்தது.. ஆனால் முடியவில்லை.. கண்களில் கண்ணீர் வழிய நின்றிருந்தாள்..

காதல் தான் என்றவள் மனம் ஒத்துக்கொள்ள அதை ஏற்றுகொள்ள முடியவில்லை அவளால்..

அவனை காண வேண்டும் போலும், அவனிடம் பேச வேண்டும் போலும், தன் மனக்குமுறலை எல்லாம் அவனிடம் சொல்லி அவன் நெஞ்சில் சாய்ந்து அழ வேண்டும் போலும் அவள் மனம் பேயாட்டம் போட தென்றலுக்கு பயமாகி போனது..

எங்கே ப்ரித்வியின் அலுவலகம் சென்றால், தன்னையும் மீறி தன் எண்ணங்கள் வெளிப்பட்டு விடுமோ என்ற பயத்தில் தான் இப்போது வீட்டிலிருந்தார். ஆனால் கமலி சும்மா இருப்பாரா.. இதோ விசாரணை ஆரம்பித்தாகி விட்டது.. 

தென்றலின் முகத்தை பார்த்தே கமலி என்னவோ இருக்கிறது என்று யூகித்துவிட்டார்.. ஏனெனில் அவளுக்கு உடன்பாடில்லாத ஒன்று வீட்டில் நடக்கிறதென்றால் அவள் இப்படியிருக்கமாட்டாளே.. ஒன்றில் ரெண்டு பார்க்காமல் தென்றல் ஓய்ந்து போகும் ரகமல்ல..

ஆனால் இப்படி அழுது வடிந்து அமர்ந்திருப்பவளை காணவும், “தென்றல்… இங்க அம்மாவ பாரு…” என்று கமலி சொல்ல,

“ம்ம்…” என்று திரும்பிப் பார்த்தாள்.

“என்ன பிரச்சனை தென்றல்..?? நீ இப்படியிருக்க மாட்டியே..??”

“நத்திங்மா…” என்று மீண்டும் தலை குனிந்தாள்..

“ம்ம்ச் இங்க என் முகத்தை பார்த்து பேசுடி…” என்று அவள் முகத்தை நிமிர்த்தியவர், தன் மகளின் கலங்கிய கண்களை பார்த்து,

“என்ன தென்றல் லவ் பண்றியா…??” என, அடுத்த நொடி தென்றலின் கண்களில் அப்பட்டமாய் அதிர்ச்சி தெரிந்து, அதற்கு அடுத்த நொடியே “அம்மா……..” என்று அவரை கட்டிக்கொண்டு அழுதாள்..

மகளின் இந்த செய்கையில் மேலும் அதிர்ந்தவர், “தென்றல்.. என்னடா… அம்மா எதுவும் தப்பா கேட்டேனா..?? இப்போ ஏன் இப்படி அழற..” என்று அவள் முதுகை ஆதுரமாய் தடவ, இன்னும் இன்னும் அவள் அழுகை கூடியது..

சரி கொஞ்ச நேரம் அவளாகவே சரி ஆகட்டும் என்று கமலி சும்மா இருக்க, சற்று நேரத்தில் அவள் அழுகை மட்டுப்பட்டது..

“சாரிடா அம்மா தப்பா கேட்டேனா???”

“ம்ம்ஹும்….”

“அப்.. அப்போ.. லவ் பண்றியா…???”

“ம்ம்….” என்றவளுக்கு குரலே எழும்பவில்லை..

சட்டென்று அவளை தன் மீதிருந்து நிமிர்த்திய கமலி, மகளின் முகத்தை கேள்வியாய் பார்க்க, அவளோ அவர் பார்வையை தவிர்த்தாள்.

“தென்றல்.. இங்க பாருடி.. நான் ஒன்னும் உன்னை அடிக்கபோறதோ இல்லை திட்ட போறதோயில்லை.. முதல்ல இப்படி முகத்தை வைக்காத.. அதான் கஷ்டமாயிருக்கு..” என்று மகளின் முகத்தை வருடியவர்,

“சரி சொல்லு யாரந்த பையன்…??” என,

“ம்மா…” என்றவளுக்கு இதழ்கள் துடித்தது..

“ம்ம்ச்… நீ இப்படி அழாம இரு..” என்று கடிந்தவர், “என்னாச்சு சொல்லு.. லவ் பண்ற சரி.. அதுக்கேன் இப்படி அழற… நான் லவ் பண்றேன்னு தைரியாமா சொல்ல வேண்டியது தானே… லவ் பண்ண தைரியம் இருக்கு.. அதை பேரன்ட்ஸ் கிட்ட சொல்ல தைரியம் வேணாமா???” என்று தென்றலை பேச வைத்தார்.

கமலி பேசியது தென்றலுக்கு கொஞ்சம் தைரியம் கொடுத்ததுவோ என்னவோ, கண்களை இறுக மூடித் திறந்தவள், பின் முழு மூச்சாய் ப்ரித்வி பற்றிய தன் மனக் குழப்பங்களை ஒன்றுவிடாமல் சொல்லிவிட்டாள்..

அனைத்தையும் பொறுமையாய் கேட்ட கமலிக்கோ தன் மகளின் அறியாமையை எண்ணி வருந்துவதா இல்லை அவள் சரியான ஒருவனை தான் விரும்பியிருக்கிறாள் என்று மகிழ்வதா என்று தெரியவில்லை..

“என்னம்மா இப்படி பார்க்கிற…??”

“பின்ன.. நீயா ஏன் தென்றல் இப்படி குழப்பிக்கிற.. அப்போ அந்த தம்பி உன்னை லவ் பண்ணலையா??”

“ஹ்ம்ம் தெரியலை…”

“தெரியலையா??? ஹ்ம்ம் அந்த பையன் கிட்ட நீ பேசினியா???”

“எனக்கு அவனை பார்க்கவே பிடிக்கலம்மா….” என்றாள் சிறுகுழந்தை போல.

“அட லூசு.. என்ன பேச்சு இது.. லவ் பண்றன்னு சொல்ற.. அப்புறம் பிடிக்கலைன்னு சொல்ற…” என,

“அவன் நடிக்கிறது போலவே இருக்கும்மா…” என்றாள்,,

“ஏன் அப்படி நினைக்கிற… எனக்கும் அவங்க பேமிலி பத்தி தெரியும்.. எல்லாரும் நல்ல மனுசங்கதான்.. நீயாதான் உன்னை குழப்பிக்கிற…” என்ற கமலி, தென்றலின் கரத்தினை பிடித்து,

“ஹ்ம்ம் நீ ரொம்ப படம் பார்த்துக் கேட்டு போயிட்ட தென்றல், இப்போ சினிமால எல்லாம் ஹீரோ கரடு மொரடா இருக்கான்.. வில்லன் பணக்காரனா அழகானவனா இருக்கான்.. அதான் உனக்கும் இந்த தம்பிய பார்க்கவும் வில்லனா தெரிஞ்சிடுச்சு.

சரி நீ எதை வச்சு சொல்ற பணக்காரங்கனா இப்படிதான் இருப்பாங்கன்னு… உங்க பெரிப்பா வீட்ல, நம்ம வீட்ல இல்லாத வசதியா?? அங்க உங்க அண்ணன் எப்படி இருக்கான்… நம்ம வீட்ல நல்ல பசங்க இருந்தா பெருமை.. அடுத்த வீட்ல நல்ல பசங்க இருந்தா நடிப்பா தென்றல்…” என, ப்ரித்வியை வில்லன் அளவிற்கெல்லாம் அவளால் நினைக்கத் தோன்றவில்லை அவளால்.   

“சரி இப்போ என்ன செய்யலாம்னு இருக்க???”

“தெரியலை…”

“ஹ்ம்ம் சரி உன்னோட இந்த குழப்பம் தீரனும்னா ஒரே விஷயம் தான் நீ அந்த தம்பிக்கிட்ட பேசு…” என,

மீண்டும் “ம்மா…” என்று அதிர்ந்தாள்..

“ஆமா தென்றல்… இதான் வழி.. நீ பேசு.. நான் சொல்றேன்ல.. நீ பேசு…” என,

“நிஜமாவா???”

“ம்ம்.. அப்பாக்கிட்ட நான் பேசிக்கிறேன்.. நீ இப்படி இருக்கிறதுல தெரியுது அந்த பையனை உனக்கு எவ்வளோ பிடிச்சிருக்குன்னு… நீ பேசிட்டு சொல்லு..” என்றவர், அவளை அடுத்து உண்ண வைத்து தான் விட்டார்..

என்னவோ தென்றலுக்கு இப்போது மனதில் ஒரு புது தைரியம்,, கமலி சொன்ன வார்த்தைகள் அவளுக்கு பெரும் நிம்மதி கொடுத்தது..

‘ப்ரித்விக் கிட்ட பேசனும்… ஆனா என்ன பேச…’  என்று யோசித்தபடி அவளது அலைபேசியை ஆன் செய்தாள். ஏகப்பட்ட குறுந்தகவல்கள், தவறவிட்ட அழைப்பிற்கான தகவல்கள் என்று குவிந்தது..

பிரதீபாவும், ப்ரித்வியும் தான் நிறைய அழைத்திருந்தார்கள்.. அதிலும் ப்ரித்வியின் எண்ணில் இருந்து எக்கசக்க அழைப்புகள் வந்திருக்க,

‘இவன் ஏன் இத்தனை டைம் கால் பண்ணிருக்கான்..??’ என்று யோசிக்கும் போதே உள்ளத்தில் சின்னதாய் ஒரு சந்தோஷ பெருக்கு. ப்ரித்வியின் எண்ணுக்கு அழைப்போமா வேண்டாமா என்று அடுத்து ஒரு அரைமணி நேரம் போக்கியவள்,

‘அவன் என்ன பெரிய இவனா.. இப்போ என்ன நான் பேசினா என்ன செஞ்சிடுவான்… ஆளும் மூஞ்சியும்.. என்னை இப்படி டென்சன் பண்ணிட்டு அவன் ஜாலியா இருப்பான்…’ என்று அப்போதும் திட்டிக்கொண்டே, ப்ரிதவிக்கு அழைத்தாள்.

முதல் அழைப்பிலேயே அவன் எடுத்துவிட, “தென்றல்….” என்றவனின் குரலில் அத்தனை ஏக்கம் அத்தனை பதற்றம்.. அதனை உணர்ந்து, மகிழ்ந்து கண்கள் மூடி ரசித்தவள், அமைதியாய் இருக்க,

“தென்றல்… பேபி…” என்றான் மீண்டும்..

“ம்ம்…”

“என்னாச்சு??? ஏன் வரல?? ஏன் போன் எடுக்கல?? என்னாச்சு பேபி…??” என்றவன் குரலை கேட்கும் போதே இவள் கண்கள் கரித்தது.. ஆனாலும் இவனிடம் தான் அழுவதா என்று தோன்ற, சட்டென்று ஒரு நிமிர்வு.

“நான்… நம்ம மீட் பண்ணலாமா???”

ப்ரித்விக்கு இந்த கேள்வி அவன் செவிகளில் எட்டவுமே அத்தனை ஆச்சர்யம்.. தென்றல்?? என்னை பார்க்கணும் சொல்றாளா??? நிஜமாவா?? என்று அவனால் நம்பவும் முடியவில்லை.

‘என்னடா நடக்குது ப்ரித்வி…. அவளே மீட் பண்ணலாம் சொல்றா…’ என்று துள்ளிய அவனுள்ளத்தை அடக்கி,

“நானே உன்னை பார்க்கணும்னு நினைச்சேன்…” என,

“நினைச்சீங்க ஆனா சொல்லலை.. பட் நான் சொல்லிட்டேன்…” என, அவள் வார்த்தைகள் அவள் மனத்தின் உள்ளுணர்வுகளை அழகாய் படம் பிடித்துக்காட்டியது அவனுக்கு..

‘எஸ்.. எஸ்.. தென்றல் லவ்ஸ் மீ.. எஸ்… டேய் ப்ரித்வி… தென்றல் உன்னை லவ் பண்றாடா….’ என்று அவன் மனம் ஆனந்த கூத்தாட,

“கண்டிப்பா… கண்டிப்பா மீட் பண்ணலாம் பேபி..” என,

“எங்க மீட் பண்ணலாம்…” என்றாள்.

“ஹ்ம்ம் உங்க வீட்டுக்கு பின்னாடி ஒரு சைனீஸ் ஹோட்டல் இருக்கு… அங்க.??”

“எங்க வீடு தெரியுமா???!!!” ஆச்சர்யமாய் கேட்டாள்.

“உன்னையவே தெரியும்.. உன் வீடு தெரியாதா..??” மிக மிக ஆழ்ந்து, அவள் மனதிற்கு நெருக்கமாய் கேட்டது அவன் குரல்..

“ம்ம் ஆனா எனக்கு சைனீஸ் பிடிக்காதே…”

“ஹா ஹா.. சரி அப்போ நீயே சொல்லு…” என்றான்.

“ஹ்ம்ம் நாளைக்கு ஆபிஸ் வரேன்…”

“ஆபிஸா?? நாளைக்கு லீவே… யாரும் இருக்க மாட்டாங்களே..”

“அதான் வரேன் சொல்றேன்.. வரேன்..” என்றவள் அப்படியே வைத்துவிட்டாள்..

அடுத்து அவளுக்கு பயம் அவனிடம் பேச, எங்கே இப்போதே தன் மனதில் இருப்பதை உளறிடுவாளோ என்று பயம்.. ஆனால் அங்கே ப்ரித்வியோ ஆனந்த அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றிருந்தான்..

“எஸ் எஸ்… தென்றல்…. நிஜமாவே நீ சூறாவளி சுந்தரி தான்… ஹப்பா…. லாஸ்ட் வர மனசுல இருக்கிறத சொல்லாம… பட் லவ் யூ பேபி… நாளைக்கு நீ எனக்கு சொல்ற முன்னாடி நான் சொல்வேன்.. ஐ லவ் யூ பேபினு நான் சொல்வேன்..” என்று மகிழ்ந்துக் கொண்டான்..  

மனம் அத்தனை மகிழ்ச்சியாய் இருந்தது… தென்றல் ஒருவழியாய் தன் மீதிருந்த காதலை உணர்ந்து தன்னிடம் பேச வருகிறாள் என்று சரியாய் யூகித்தவன், அவள் மனம் தெளிந்திருக்கிறதா என்று யூகிக்காமல் இருந்துவிட்டான்..

அவள் சொல்வதற்கு முன் தான் சொல்லி அவளை ஆச்சர்யப் படுத்த வேண்டும் என்று முடிவெடுத்தவன்,

“அக்கா…. மாம்ஸ்….” என்று கத்திக்கொண்டு செல்ல,

“டேய் டேய் என்னடா இவ்வளோ ஹேப்பியா வர…” என்று அவனை பிடித்து அமர வைத்தனர் இருவரும்..

“நா.. நாளைக்கு தென்றல் வரா… என்கிட்ட பேசணும்னு இப்.. இப்போதான் கால் பண்ணா…” என்று ஆர்பரிக்க,

“என்னடா சொல்ற??? ரெண்டுநாளா ஆபிஸ் வரலைன்னு டல்லா இருந்த..??” என்று முகேஷ் கேட்க,

“எஸ் மாம்ஸ்.. அவளுக்கு என்னவோ குழப்பம் போல.. அதான் வரலை.. ஆனா இப்போ அவளே கால் பண்ணா மாம்ஸ்… தனியா பேசணும் நினைக்கிறா போல.. நான் சொன்னேன்ல க்கா நான் சொன்னேன்ல தென்றல் இங்க வந்து பார்த்தா, கண்டிப்பா என்னை பிடிக்கும்னு…” என்று மூச்சு விடாமல் பேசியவனை மற்ற இருவரும் மகிழ்ச்சியாய் பார்த்தனர்..                      

 

Advertisement