Advertisement

தென்றல் – 7

 

நாட்கள் அடுத்தடுத்து வேகமாய் செல்ல, ப்ரித்விக்கும் தென்றலுக்குமான உறவு சில நேரம் வளர்பிறையாகவும் பல நேரம் தேய் பிறையாகவும் இருக்க, தென்றல் மனம் லேசாய் அவன்பால் ஆட்டம் கண்டுகொண்டு தான் இருந்தது..

ஆனாலும் அவனைப் பார்த்து தனியே பேசும் சந்தர்பம் கிடைக்கும் போதெல்லாம் ‘எனக்கு உங்களை பிடிக்கவே பிடிக்காது…’ என்று சொல்லிக்கொள்வாள்..   

ப்ரிதவிக்கோ தென்றல் தன்னை பற்றி சிந்திக்க ஆரம்பித்திருக்கிறாள் என்பதே மனதில் சிறு நிம்மதி கொடுத்தது.. என்ன அவள் அவனை பற்றி எதிர்மறை கருத்துக்களை மனதில் கொண்டு பார்ப்பது தான் வேதனை தரும் விஷயம் அவனுக்கு..

அவனது இயல்பு போல தான் இப்போதும் இருக்கிறான்.. தென்றலுக்கு அவனை பிடிக்கவில்லை என்பதற்காக எல்லாம் ப்ரித்வி அவள் மனதை மாற்ற முயற்சிக்கவில்லை.. அவனுடைய நடத்தையில் அவளே புரிந்துகொள்வாள் என்று ஆழமாய் நம்பினான்..

ஆனாலும் அவனிடமே வந்து தென்றல் இப்படி சொல்வது அவன் மனத்திலும் சிறு சிறு அதிர்வுகளை கொடுக்கத்தான் செய்தது..

‘ஹ்ம்ம் உலகத்துல நல்லவனா இருக்கிறது கூட தப்பா.. ஆனா நான் என்னிக்கும் நல்லவனா இருக்கணும் இருக்கணும்னு நினைச்சது இல்லையே.. நான் நானா இருக்கேன்.. அவ்வளோதான்.. இதையேன் அவ தப்பா நினைக்கிறா…’ என்று சிந்தனையில் அவன் வீட்டு நீச்சல் குளத்தில் கால் வைத்து ஆடியபடி அமர்ந்து யோசித்துக்கொண்டிருந்தான்..

இரவு வேளை நீண்டுகொண்டே போவது போல் இருந்தது ப்ரித்விக்கு.. எத்தனை நேரம் அப்படி அமர்ந்து அவன் தன் யோசனையில் இருந்து வெளிவர முடியாமல் தவிக்க, அவனுக்கோ எழுந்து செல்லும் எண்ணமே இல்லை..

“என்ன மாப்ள.. அப்படி என்ன யோசனை…??” என்றபடி சுகேஷ் வர,

“ஹாய் மாம்ஸ்.. என்ன தூங்கலையா???” என்று ப்ரித்வி விசாரிக்க,

“எங்க தூங்க… நீதான் இப்படி தனிமையிலே இனிமை காண முடியுமான்னு இருக்கும்போது உங்க அக்கா என்னை தூங்க விடுவாளா…” என்று சொல்லி சிரித்துக்கொண்டு அவனிடம் அமர்ந்தான்.

“ஹா ஹா துரத்திவிட்டாளா..???”

“நல்லா சிரிடா.. ஆமா ஏன் இப்படி உட்காந்திருக்க…”

“சும்மா தான் மாம்ஸ்… ஜஸ்ட் திங்கிங்…” என்றவன் அப்படியே மேலே வானத்தில் மேகங்களுக்கிடையே ஒளிந்து மறைந்து தலை காட்டும் நிலவை பார்க்க,

“தென்றலா…???!!!!”

“அவளன்றி வேறேது மாமா….???” என்று பாகுபலி நாயகன் பாணியில் ப்ரித்வி கேட்க,

சுகேஷோ “டேய் இதெல்லாம் ஓவராயில்லையா..” என,

“ஹா ஹா மாம்ஸ் டைலாக் கூட சொல்லக்கூடாதா.. இதென்னடா ப்ரிதவிக்கு வந்த சோதனை…” என்று சொல்ல, அவன் முகத்தையே சில நொடிகள் பார்த்த சுகேஷ்,

“என்னடா பிரச்சனை… நீ இப்படி வந்து உட்கார மாட்டியே…” என,

தென்றல் இப்படி என்னை நினைக்கிறாள் என்பதை அவனாலேயே முதலில் நினைக்க முடியவில்லை, இதிலெப்படி பிறரிடம் வேறு சொல்வது.. பதிலே பேசாமல் அமைதியாய் ப்ரித்வி இருக்க,

“ப்ரித்வி.. நான் உனக்கு அண்ணாவா பிரண்ட்டாவும் இருந்திருக்கேன்.. உன் மனசை போட்டு படுத்துற விஷயத்தை என்கிட்டே சொன்னாதானே என்னால என்ன செய்ய முடியும்னு பார்க்க முடியும்.. நீ இப்படி வந்து உட்காந்து இருக்கிறது சங்கடமா இருக்குடா…” என்று சுகேஷ் சொல்லவும்,

“மாம்ஸ்…” என்று அவன் கைகளை பற்றிகொண்டான் ப்ரித்வி..

“அது…” என்று தயங்கியவன் பின் தென்றலின் மனத்தில் தனது பிம்பத்தின் வர்ணத்தை சொல்ல, பொறுமையாய் கேட்ட சுகேஷிற்கு சிரிப்பு தான் வந்தது..

“என்ன மாம்ஸ் சிரிக்கிறீங்க…???”

“பின்ன.. இதுக்கு தான் ஆரம்பத்துல இருந்தே ரொம்ப நல்லவனா இருக்காதடான்னு எத்தனையோ தடவ சொன்னேன்… கேட்டியா…??”

“நீங்களுமா.. நான் சின்ன வயசுல இருந்தே இப்படிதானே மாம்ஸ் இருக்கேன்.. இது என்னோட குணம் அவ்வளோதான்.. நான் என்ன செய்யமுடியும்..”

“ஹ்ம்ம் அதொண்ணுமில்லடா.. சினிமால டீவில எல்லாம் பணக்கார வீட்டு பசங்கன்னா இப்படிதான் இருப்பாங்கன்னு ஒரு இமேஜ் காட்டிட்டாங்க… அதான் அந்த பொண்ணு அதெல்லாம் பார்த்துட்டு உன்னை பார்க்கும் போது நம்ப முடியலை…”

“அதுக்கு நான் என்ன மாமா செய்ய முடியும்…???”

“ஒன்னும் பண்ணாத.. புத்தனா இருந்தது போதும்டா கொஞ்சம் மன்மதனாவும் மாறித்தான் பாரேன்…”

“மாம்ஸ்.. நான் புத்தனா இருந்தா ஏன் லவ் பண்ணிருக்க போறேன்…” என்று இருவரும் பேசியபடி இருக்க, மாதுரி வந்தாள்.

“என்ன மாமனும் மச்சானும் பேசி முடிச்சாச்சா???”

“ம்ம்ஹும்… நீ வந்துட்டியே இனி நாங்க எங்க பேச…” என்று சுகேஷ் சொல்ல,

அவனை முறைத்தவள், “ப்ரித்வி அம்மா கால் பண்ணாங்கடா.. நான் எல்லாத்தையும் சொல்லிட்டேன்…” என,

“அக்கா….!!!!” என்று அதிர்ந்து போய் பார்த்தான்..

“ஏன் க்கா.. ஏன் இப்படி பண்ண.. நான் தான் நானே சொல்லிக்கிறேன்னு சொன்னேன்ல.. ஏன் க்கா…” என்று வேகமாய் கேட்டவன் முகத்தில் லேசாய் கோவம் கூட எட்டிப்பார்த்தது..

“ஹ்ம்ம் அம்மாக்கிட்ட உன் கல்யாணம் பத்தி யாரோ பேசிருக்காங்க ப்ரித்வி.. பேச்சுவாக்குல அம்மா சொன்னாங்க… நான் தான் இனியும் லேட் பண்ணக்கூடாதுன்னு சொல்லிட்டேன்… இங்கப்பாரு உன்னோட வேல்யு என்னன்னு உனக்கே தெரியும்.. டிலே பண்ணிட்டே போனா பிரச்சனைடா…” என,

அவள் சொன்னதின் அர்த்தம் அவனுக்கும் புரியாமல் இல்லை.. ஆனாலும் அருள்மொழியை பற்றி அவனுக்கு நன்றாகவே தெரியும்.. எந்த ஒன்றையும் உடனுக்குடனே முடிக்கவேண்டும் என்று எண்ணுபவர்.. அதை செய்தும் காட்டும் வல்லமையுண்டு..

“நீ சொல்றதெல்லாம் சரிக்கா.. ஆனா.. ம்ம்ச் விடு.. அம்மாக்கிட்ட நான் பேசிக்கிறேன்…” என்று ப்ரித்வி சென்றுவிட்டான்..

“என்னங்க இவ்வளோ டல்லா இருக்கான்..??” என, சுகேஷ் ப்ரித்வி சொன்னதை மீண்டும் மாதுரியிடம் சொன்னான்..

அனைத்தையும் கேட்டவளோ  “அட லூசுங்களா…” என்பது போல் பார்க்க,

“ஓய் என்ன இப்படி பார்க்கிற…” என்று கேட்ட கணவனை முறைத்தவள்,

“நீங்கெல்லாம் என்ன லச்சணத்துல என்னை லவ் பண்ணி கல்யாணம் பண்ணீங்க..?? கொஞ்ச நாள் விட்டா தென்றலே ப்ரித்விய லவ் பண்ண ஆரம்பிச்சிடுவா…” என்று உறுதியாய் சொல்ல,

“அதெப்படி..?? பிடிக்கலைன்னு சொல்றாளே…” என்றான் சுகேஷ் புரியாமல்..

“ஆனா அவனை பத்தி அவ மனசுல எந்த எண்ணமும் இல்லாமையா அவ இதெல்லாம் யோசிப்பா.. ஒன்னு புரிஞ்சுக்கோங்க தென்றல் மனசுல ப்ரித்வி எப்பவோ நுழைஞ்சிட்டான்.. என்ன அதை அவ உணரனும்.. அவ்வளோ தான்…”

“அதெப்படி இவ்வளோ உறுதியா சொல்ற…??”

“சிம்பிள்.. ஒரு பொண்ணோட மனசு ஒரு பொண்ணுக்கு தான் தெரியும்…”

“என்னவோம்மா எங்களுக்கு தெரிஞ்சதெல்லாம் பொண்ணுங்க மனசு கடலைவிட ஆழம்னு..” என்று சுகேஷும் விடாது சொல்ல,

“சரி சரி நீங்க உடனே வசனம் பேச ஆரம்பிச்சிடுவீங்க..” என்று தன் கணவனையும் உள்ளே அழைத்துக்கொண்டு போனாள்.

ப்ரித்வி ஒருவழியாய் அருள்மொழியிடம் பேசி அவரை சமாதானம் செய்திருந்தான்..

ஆனால் அங்கே ஒருத்தி தன் மனதை தானே சமாதானம் செய்துகொள்ள முடியாமல் மெத்தையில் புரண்டுக்கொண்டு இருந்தாள்.

தென்றல்… அவள் மனதில் புயலடித்துக்கொண்டு இருந்தது..

இத்தனை நாள் இல்லாத ஓர் குழப்பம்… ப்ரித்வி.. அவனை பற்றி நினைக்கவே கூடாது என்று நினைத்தாலும், அவளால் அது நினைக்காமல் இருக்க முடியவில்லை.. கண்களை மூடி படுத்தால் அடுத்த நொடி அவன் வந்துவிடுகிறான்..

‘தென்றல்…’ அவன் அழைப்பது போலவே அவளுக்கு இப்போது செவிப்பறையில் கேட்கிறது..

அவன் நல்லவனா கெட்டவனா என்று ஆராய்ச்சியில் தொடங்கி.. அவனை பற்றி தான் ஏன் சிந்திக்க வேண்டும் என்று தனக்கு தானே தடை போட்டு, இது எதுவுமே முடியாமல், அவனும் அவன் சிரிப்பும், அவனது கண் சிமிட்டல்களும், தென்றல் என்ற அவனது அழைப்பும் மேலும் மேலும் அலையாய் எழும்பி அவளை தடுமாறச் செய்தது..

‘ஹா….. இடியட்…. என்னை இப்படி படுத்துறானே…..’ என்று தலையை பிடித்துக்கொண்டு எழுந்தமர்ந்தாள்..

“ச்சே இவன் எப்படிவேனா இருந்திட்டு போகட்டும்.. எனக்கேன் இந்த தலைவலி.. போனோமா ப்ராஜெக்ட் பண்ணோமா.. வந்தோமான்னு இருக்கணும்…” என்று விரலை தனக்கு நேராக நீட்டி தானே சொல்லியவள்,

“ம்ம் எஸ்.. இனிமே ப்ரித்வி பத்தி கொஞ்சம் கூட யோசிக்கவே கூடாது..” என்று தீர்மானமாய் முடிவெடுத்தவள், மனதில் ஒரு தெளிவு பிறக்க, கொஞ்சம் நிம்மதியாய் தூங்கினாள்..

முடிவுகள் எடுப்பது நம்முரிமை.. ஆனால் நாம் எடுக்கும் முடிவுகள் படிதான் நம் வாழ்வில் அனைத்தும் நடக்கிறது என்றால் எதுவுமே இல்லை.. நாம் எதிர்பார்க்கும் ஒன்று எதிர்பாராத நேரத்தில் நடக்கும்.. எதிர்பார்த்து காத்திருந்த ஒன்று ஏமாற்றம் கொடுத்து சென்றுவிடும்.. இல்லையா கனவிலும் எதிர்பாராத ஒன்று அழகாய் அலங்காரம் செய்து நம் வாழ்வில் அரங்கேறிவிடும்..

ப்ரித்வி பற்றி நினைக்கவே கூடாது என்ற முடிவோடும், அவன் எப்படி இருந்தால் என்ன என்ற தீர்மானத்தோடும் தென்றல் மறுநாள் கிளம்பிச் செல்ல, அங்கே புதியதாய் ஒருத்தி வந்திருந்தாள்..

‘நேகா….’

பார்க்கவே மாடல் போல் இருந்தாள்.. ஆனால் அவளிடமும் எவ்வித பந்தாவோ பாசாங்கோ இல்லாமல் அனைவரிடமும் அமைதியாய் சாதாரணமாய் பழக, அனைவரும் அவளிடமே சென்று நின்று பேச என்னவோ தென்றலுக்கு நேகாவை காண காண கடுப்பாய் வந்தது..

“யார்டி இவ..??”

“ப்ரித்வி அண்ணா கூட MBA படிச்சவங்க…”

“உனக்கெப்படி தெரியும்..??”

“இப்போதானே ஜான்சி சொன்னா…”

“ஆமா.. அவ ஒரு ஆளுன்னு நீ அவக்கூட வேற பேசுற.. அன்னிக்கே என்கிட்ட செமத்தியா வாங்கிருப்பா…” என்று அப்போதும் தென்றல் பல்லைக் கடிக்க,

“ஹே விடுடி…” என்று பிரதீபா சமாதானம் செய்தாள். 

“சரி.. இவ ஏன்டி இங்க வந்திருக்கா..????”

“யாருக்கு தெரியும்டி.. நம்மக்கேன் அதெல்லாம்… தென்றல் இங்க பாரேன் இந்த கோடிங்ல எர்ரர் காட்டுதுடி..” என்ற பிரதீபாவிடம்,

“எங்க காட்டு…” என்று சொன்னாலும், தென்றலின் பார்வை எல்லாம் அந்த நேகா மீதே இருந்தது..

“ஏ லூசு என்ன செய்ற…?? இப்போ ஏன் எல்லாத்தையும் டெலிட் பண்ண..???” என்று பிரதீபா கத்தியதில் அங்கிருந்த அனைவரும் திரும்பிப் பார்க்க, தென்றலுக்கு அப்போது தான் அவள் செய்த மடத் தனம் புரிய,

“ஹி ஹி சாரிடி…” என,

“சாரியா… எருமை… டென் பேஜஸ்டி கோடிங்… இவ்வளோ நேரம் அடிச்சிருக்கேன்.. எனக்கு தெரியாது நீதான் திருப்பி அடிச்சு கொடுக்கிற…” என்று பிரதீபா மடிக்கணினியை அவள் புறம் தள்ளி வைக்க,

“ஹே.. அதெல்லாம் இருக்கும்.. சேவ் பண்ணிருப்ப தானே..”

“அது என்னவோ எனக்குத் தெரியாது.. எனக்கு இப்போ என் கோடிங் வேணும்…” என்று பிரதீபா அடம் பிடிக்க,

‘ஐயோ இப்போன்னு பார்த்து இவ கத்துறாளே…’ என்று தென்றல் முழித்துக்கொண்டு நிற்கும் போது தான்

‘ஹாய் சீனியர்…’ என்ற குரல் கேட்டு பட்டென்று திரும்பிப் பார்த்தாள்.. ப்ரித்வி கண்ணாடிக் கதவை திறந்துக்கொண்டு உள்ளே வந்துக்கொண்டிருந்தான்..

எப்போதும் ப்ரித்வி உள்ளே வரும் போது, தென்றல் பிரதீபா இன்னும் புதிதாய் பிராஜெக்டிற்கு என்று வந்திருப்பவர்கள் அங்கிருந்தால், முதலில் வந்து அவர்களிடம் பேசிவிட்டே செல்வான்..

அதுவும் இவளிருந்தாள், கண்ணில் மின்னும் ஒரு சிரிப்போடு “குட் மார்னிங் தென்றல்…” கண்டிப்பாய் அவனிடமிருந்து வரும்..

சரி தன்னை பார்ப்பான்.. தன்னிடம் வருவான் என்று பார்த்து நின்ற தென்றலுக்கு, ப்ரித்வி இவர்கள் பக்கம் திரும்பாமல், “ஹே நேகா… வாட் எ சர்ப்ரைஸ்… வீட்டுக்கு வந்திருக்கலாமே…” என்றபடி அவளை நோக்கிச் செல்ல, அவ்வளவு தான் மனதில் சட்டென்று ஒரு ஏமாற்றம் பரவியது..

கூடவே சேர்ந்து பொறாமையும் எட்டிப்பார்க்க, ‘நான் இங்க நிக்கிறேன்.. என்னை கவனிக்காம இன்னொருத்திக்கிட்ட சிரிச்சிட்டு போறான்…’ என்று மனதில் தோன்றிய அடுத்த நொடி, சத்தமாய்,

“ப்ரித்வி…” என்று அழைத்துவிட்டாள்..

பொதுவாய் அங்கே யாரும் அவனை அப்படி அழைப்பது இல்லை.. இவளோ பிறர் பார்க்க அவனிடம் நின்று பேசியது கூட இல்லை. ஆனால் இன்று யார் இருக்கிறார்கள் இல்லை என்றெல்லாம் பாராது, அவன் பெயரை உரக்கச் சொல்லி அழைக்க, அவனுக்கு மட்டுமில்லை சுற்றி இருந்த அனைவருக்குமே ஆச்சர்யம் தான்..

ஆனால் தென்றலுக்கோ அவனை தவிர வேறு யாரும் கண்ணில் படவேயில்லை.. அவனோ என்னவென்பது போல் பார்க்க,

“ப்ரித்வி இங்க வாங்களேன்…” என்ற குரலில் இப்போ நீ இங்க வந்து தான் அகனும் என்ற பாவனை இருக்க,

‘என்னடா இவ.. எப்பவும் இல்லாம இப்படி பீகேவ் பண்றா…??’ என்ற யோசனையுடன்,

“ஒரு டூ மினிட்ஸ் தென்றல்..” என்று நேகாவை கண் காட்ட,  அது புரிந்தும் புரியாத மாதிரி காட்டிய தென்றல்,

“நீங்க வாங்க இங்க….” என்று மீண்டும் பிடிவாதமாய் நின்றாள்..

‘என்னாச்சு இவளுக்கு.. நானே போய் பேசினா கூட தள்ளிப் போவா.. இப்போ என்ன…’ என்று அவளை தன் விழிகளால் அளந்தபடி வர, அவளோ நேர்கொண்ட பார்வையாய் அவனைத்தான் பார்த்தாள்..

நேற்று அவள் எடுத்த முடிவிற்கும் இப்போது அவனிடம் அவள் நடந்துகொள்வதற்கும் சம்பந்தமேயில்லை..

“என்ன தென்றல் என்னாச்சு…??” என,

“இங்க உட்காருங்க…” என்று ஒரு இருக்கையை அவன் பக்கம் திருப்பியவள்,

“இங்க பாருங்க ப்ரித்வி, நான் இதை தெரியாம டெலிட் பண்ணிட்டேன்.. ரெக்கவர் பண்ண முடியலை.. ப்ளீஸ் நீங்க என்னனு பாருங்களேன்..” என,

அவனுக்கோ இது அடுத்த அதிர்ச்சி..

தென்றலா இது ???!!!!! என்று அதிசயித்துப் பார்க்க, அவளோ, “அட என்ன ப்ரித்வி நீங்க.. என்னை அப்புறம் பார்க்கலாம்.. முதல்ல கோடிங் பாருங்க…” என்று அவன் முகத்தை கணினிப் பக்கம் திருப்ப,

அவர்கள் அருகே இருந்த பிரதீபா மட்டுமில்லை அங்கிருந்த அனைவருமே ஏன் நேகா உட்பட  ‘என்னடா நடக்குது இங்க…’ என்பது போல் பார்க்க, சுற்றி இருக்கும் சூழல் உணர்ந்து ப்ரித்வி,

“ஷ் தென்றல்.. ஒரு டூ மினிட்ஸ்டா.. கெஸ்ட் வந்திருக்காங்க.. நான் பேசிட்டு வந்திடுறேன்.. இல்ல  அசோக்க வந்து பார்க்க சொல்றேன்… சரியா..” என்று எழப்போக,

“அப்போ நான் கேட்டா செய்ய மாட்டீங்களா…” என்று கேட்டவளை வித்தியாசமாய் தான் பார்த்தான் ப்ரித்வி..

இப்போது பேசும் தென்றல், கண்களிலும், அவள் பேசும் வார்த்தைகளிலும், அவளது உடல் மொழியிலும் முழுக்க முழுக்க அவன் மீதான உரிமை வெளிப்பட்டுக்கொண்டே இருக்க, அது அவனுக்கு புரியாதா என்ன..??

அவளது இந்த மாற்றத்தின் காரணம் புரிந்துவிட, ப்ரித்வியின் கண்களில் மின்னல் வெட்டி மறைந்தது..

“கண்டிப்பா நீ கேட்டா எதுவேணாலும் செய்வேன்.. ஆனா ஒரு டூ மினிட்ஸ்.. ஹ்ம்ம் நீயே புரிஞ்சுக்காட்டி எப்படி… தென்றல்…” என்று மெல்ல அவளுக்கு மட்டும் கேட்கும் படி கூறியவனை, கண்கள் விரித்துப் பார்த்தவள்,

“சரி குட் மார்னிங் சொல்லிட்டு போங்க…” என்றாள் பெரிய மனது செய்து..

“என்.. என்ன???!!!” என்று ப்ரித்வி புரியாமல் பார்க்க,

“எப்பவும் நீங்க வரும்போது நான் இங்க இருந்தா குட் மார்னிங் சொல்லிட்டுத் தானே போவீங்க… இப்போ மட்டும் ஏன் சொல்லல.. எப்பவும் ஒரேமாதிரி இருக்கணும்.. புரிஞ்சதா..” என்று கையில் இருக்கும் பேனாவை கத்திப்போல் காட்டி மிரட்ட,

அவள் மிரட்டிய விதத்தில் பயந்தவன் போல் பாவனை செய்தவன்,

“வர வர ரொம்ப மிரட்டுற பேபி.. குட் மார்னிங்…” என்றவன் எழுந்து போகும்போது அவளது தலையை ஒரு ஆட்டு ஆட்டிவிட்டு சென்றான்..

பிரதீபாவோ இமைக்காமல் தென்றலைப் பார்க்க, தென்றலோ இத்தனை நேரம் இங்கே ஒன்றுமே நடக்காதது போல்

“என்னடி இரு உங்கண்ணா வந்து பார்க்கிறேன்னு சொல்லிருக்கார்…” என்று சாதரணமாய் சொல்ல,

“ஏன்டி தென்றல் இப்போ நீ என்ன பண்ண???” என்று பிரதீபா கேட்க,

“என்ன பண்ணேன், ஜஸ்ட் ப்ரித்விய கூப்பிட்டு இதை பார்க்க சொன்னேன்..”  என்றாள் தோளை குலுக்கி..

தென்றல் எப்போதுமே ப்ரித்வி என்றோ இல்லை அவன் இவன் என்றோ தான் சொல்வாள்.. அது அவன் மீதிருக்கும் எண்ணத்தின் பிரதிபளிப்பு என்று பிரதீபா நினைத்திருக்க, அது அப்படியில்லை இது என் உரிமை என்று சொல்வது போல் இருந்த தென்றலின் செயல்கள் அவளுக்கு ஆச்சர்யமாய் இருந்தது..

‘இவ புரிஞ்சு பண்றாளா?? இல்லை புரியாம பண்றாளா??’ என்று யோசிக்க,

“ஏ லூசு என்ன அப்படியே இருக்க…” என்று தென்றல் அவள் கரத்தினை தட்ட,

“ஹா ஒண்ணும்மில்ல… நீ வேலையைப் பாருடி…” என்றவள் அடுத்து இதை பற்றி அவளிடம் ஒன்றும் பேசவில்லை..

ஆனால் தென்றலுக்கு புரியாத விஷயம் ப்ரித்விக்கும் சரி, பிரதீபவிற்கும் சரி மிக மிக நன்றாகவே புரிந்தது..

தென்றல் ப்ரித்வியை காதலிக்கிறாள்..

அவன் நல்லவனா ?? கெட்டவனா ?? தெரியாது..

நடிக்கிறானா?? இல்லையா ?? அதுவும் தெரியாது..

எது எப்படி இருந்தாலும் ப்ரித்வியை அவளுக்கு பிடித்திருக்கிறது.. அவனை பற்றிய சிந்தனைகளே பழக்கமாகி, அந்த பழக்கமே இப்பொழுது அவளுக்கு பிடிதமாகியிருந்தது..

ஆனால் இதெல்லாம் அவள் புரியும் நாள் எப்போது என்று தான் தெரியவில்லை.. இல்லை ப்ரித்வி புரியவைப்பானா என்றும் தெரியவில்லை..                          

           

 

              

  

    

                     

 

Advertisement