Advertisement

தென்றல் – 6

அன்றைய தினம் தென்றலும் பிரதீபாவும் உள்ளே நுழையும் போதே அலுவலகத்தின் வெளியே வந்திருந்தவர்கள் கூட்டமாய் நின்று எதையோ ஆச்சர்யமாய் பார்த்து பேசிக்கொண்டிருக்க,

“என்னடி உன் பாசமலர் வித்தை எதுவும் காட்றானா?? எல்லாம் சுத்தி நின்னு வேடிக்கை பார்க்கிறாங்க…” என்று தென்றல் சொல்ல,

“உனக்கு ப்ரித்வி அண்ணாவ சொல்லாட்டி தூகம் வராதே…” என்றபடி பிரதீபாவும், கூட்டமாய் இருந்தவர்களின் அருகே சென்று பார்க்க, இவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை..

“கொஞ்சம் வழி விடுங்க.. நாங்களும் பார்ப்போமே…” என்று தென்றல் எம்பி எம்பி பார்க்க,

“வழி விடுங்கப்பா, குட்டி பொண்ணுங்களுக்கு தெரியலை…” என்று கூட்டத்தில் யாரோ சொல்ல,

“தோடா… தாத்தா சொல்லிட்டார் வழி விடுங்க…” என்றபடி தென்றல் உள்ளே நுழைய வழிக்கிடைக்கவும் என்னவென்று பார்க்க, “அட…” என்று ஆச்சர்யத்தில் வாய் பிளந்தாள்.. பிரதீபாவிற்கும் அப்படியே..

“வாவ்… சூப்பர்ல டி…” என்று பிரதீபா சொல்லவும்,

“ம்ம் ஆமாடி அழகா இருக்கு…” என்று தென்றலும் சொல்ல, அப்படியே அங்கேயே நேரம் அடுத்து கழிந்தது.

வேறொன்றும் இல்லை.. அலுவலக வீட்டின் முன் வராண்டாவில் அழகாய் ஒரு வெண்கல விநாயகர் சிலை..  அதுவும் எப்படி விநாயகர் அழகாய் ஒரு திவானில் சாய்ந்திருப்பது போலவும், அவர் மடியில் மடிக்கணினி இருப்பது போலவும் அருகே குட்டியாய் மவுஸ் இருப்பது போலவும் ஒரே சிலையாய் வடிவமைக்கப்பட்டு இருந்தது..

பார்க்கவே அத்தனை அழகாய் மாடர்ன் விநாயகர் காட்சியளிக்க, அவருக்கு எதிரே இன்னொரு வெண்கல அலங்கார பாத்திரத்தில் நீர் விட்டு அழகாய் வெள்ளையும் சிவப்புமாய் ரோஜா மிதந்துக்கொண்டிருந்தது..

தென்றலுக்கு இதுபோல விஷயங்கள், என்றால் மிகவும் பிடிக்கும்.. அதுவுமில்லாமல் அவளுக்கு வித விதமாய் விநாயகர் சிலைகள் வாங்கி வைப்பதும் பிடிக்கும்.. ஆக இது அவளுக்கு லேசாய் ஒரு இன்ப அதிர்ச்சியாகத் தான் இருந்தது..

“செமையா இருக்குல்லடி…” என்று கூறியவள் ஒருமுறை அந்த விநாயகர் சிலையை வருடிப்பார்க்க, அதே நேரம் ப்ரித்வி வந்தான்..

“ஹே கைஸ்… என்ன என்ன விசயம்…??” என்று அவனது பாணியில் புன்னகை மாறாது, ஜீன்ஸ் பக்கெட்டினுள், கட்டை விரலை மட்டும் விட்டு கேசுவலாய் நடந்து வந்தவனை பார்த்து,

“சீனியர்.. செம… இது உங்க ஐடியாவா…??”

“தோஸ்த்… எப்படி திடீர்னு இப்படி ஒரு எண்ணம்…” என்று அனைவருக்கும் புன்னகைத்தவன்,

“எப்படி இருக்கு…???” என்று மட்டும் வினவ,

“சூப்பர்…” என்று அனைவரும் கைத் தட்டினர்…

இத்தனை நேரம் ஆனந்த அதிர்ச்சியில் நின்றிருந்த தென்றலோ, ‘அதானே பார்த்தேன்.. ஆக இதுக்குதானா எல்லாம்.. எல்லாரும் இவனை புகழ்ந்து தள்ளனும்..’ என்று எண்ணியவள் அலட்சியமாய் அவனை பார்க்க, ப்ரித்வியும் கூட அவளைத்தான் பார்த்தான்..

இன்னும் இதழில் புன்னகை கூடியது..

“போதும் போதும்.. உங்க எல்லார் பாராட்டும் எனக்கு மட்டுமே சேராது…” என்று சற்றே சத்தமாய் சொன்னவனின் பார்வை தென்றலை வருடி மீள,

‘என்ன சொல்ல போறான்…’ என்பது போல பார்த்தாள்..

இப்போதெல்லாம் அவனது பார்வையில் ஓர் வித்தியாசம் தெரிவது அவளுக்கு நன்றாகவே தெரிந்து தான் இருந்தது.. ஆனால் அது ஏன் என்று அவளுக்கு புரியவில்லை.. இப்போதும் அப்படியே பார்க்க, கண்களை சுருக்கி என்ன சொல்வானோ என்று தென்றல் ப்ரித்வியை காண,

அவனோ “இது முழுக்க முழுக்க என்னோட ஐடியா இல்லை…” என்றான் தோளை குலுக்கி…

“அப்போ யாரு…???!!!!” என்று அனைவரும் கோரஸ் பாட,

“சொல்றேன் சொல்றேன்.. நம்மில் ஒருவர் தான்.. இங்க எல்லாமே இருக்கு ஆனா பூஜை ரூம் மட்டும் இல்லையேன்னு சொன்னங்க…” என்றவன் தென்றலை ‘எப்படி…’ என்பது போல் பார்த்து சிரிக்க,

‘அடப்பாவி.. லாஸ்ட்ல என்னைய சொல்றானே.. நான் என்ன சொன்னேன்.. இவன் என்ன சொல்றான்…’ என்று கண்களை அகல விரித்துப் லேசான ஓர் அதிர்ச்சி பாவம் காட்டி அவனை பார்க்க,

“சீனியர் இதெல்லாம் டூ மச்.. இப்படியா எங்களை வெய்ட் பண்ண வைக்கிறது.. யாரதுன்னு சொல்லுங்க…” என்று சத்தம் வரவும்,

“யா சொல்றேன் சொல்றேன்.. பட் இங்க பூஜை ரூம் வைக்கிறது செட் ஆகுமான்னு தெரியலை.. ஷாப்பிங் போனப்போ இந்த ஸ்டேச்சு பார்த்தேன்.. பார்த்ததும் நம்ம இங்க வச்சா எப்படியிருக்கும்னு தோணிச்சு.. அதான் உங்க எல்லாருக்கும் ஒரு சின்ன சர்ப்ரைஸ்..” என்று அப்போதும் யார் சொன்னது என்று சொல்லாமல் ப்ரித்வி பீடிகை போட, இன்னும் அங்கே சத்தம் கூடியது..

‘சொல்லாதே…’ என்று கண்களை உருட்டி மிரட்டலாய் அவனைப் பார்க்க, அவனோ தென்றல் பார்வையின் பாசை புரிந்தாலும், அதனை கண்டுகொள்ளாமல் நின்றிருந்தான்.. 

தென்றலுக்கு அவன் தன் பெயரை சொல்லுமுன்னே அப்படியே ஓடிவிடலாம என்று தோன்றியது..

’கடவுளே இவன் என்ன இப்படி சொல்றான்…. இவனுங்களும் விடாம கேட்கிறானுங்களே… டேய் ஒரு பிள்ளையார் சிலைக்கு ஏன்டா எல்லாம் இப்படி ரியாக்ட் பண்றீங்க..’ என்று முணுமுணுத்தபடி நிற்க,

“தென்றல்……” என்ற அவனது குரல் அத்தனை சத்தத்திலும் ஸ்பஷ்டமாய் அவள் காதில் விழுந்தது..    

‘சொல்லிட்டானே சொல்லிட்டனே…’ என்று மனம் படபடக்க, மெல்ல தலையை நிமிர்த்த, அனைவரும் அவளை தான் பார்த்தனர்..

ப்ரித்வியோ அப்படியே உள்ளதை ஊடுருவும் ஒரு பார்வை பார்த்தான்.. தனக்கு நேராக நின்று பார்க்கும் அவனது நேர் பார்வையை தனியே இருந்திருந்தால் எதிர்கொண்டு இருப்பாளோ என்னவோ, இப்போது சுத்தமாய் முடியவில்லை..

‘கடவுளே பிள்ளையாரப்பா.. நீ வந்து உட்கார என்னை வச்சு செய்றியே…’ என்றெண்ணியபடி அனைவரையும் ஒருமுறை பார்க்க,

“ஆள் க்ரெடிட்ஸ் கோஸ் டு தென்றல்.. அவங்கத்தான் இந்த ஐடியாக்கு பிள்ளையார் சுழி போட்டாங்க..” என்று ப்ரித்வி கூறி முடிக்கவும், அங்கே மீண்டும் ஒரு கை தட்டல் படலம்..

“வாவ்…”

“சூப்பர் தென்றல்…”

“செம தென்றல்…” என்று ஆளாளுக்கு ஒன்றொன்று சொல்லி அவளிடம் கரம் குலுக்க, சற்று தள்ளி நின்று ப்ரித்வி இன்னும் மலர்ந்து சிரித்தான்.. அவனது பார்வை அவளை விட்டு நகலவேயில்லை…

என்னவோ அவன் பார்த்துக்கொண்டே இருக்க, இவளுள் படபடவென்று இதயம் அடித்துக்கொண்டது, தன்னிடம் கரம் கொடுப்பவரிடம் சிரித்தபடி பதில் சொல்லிக்கொண்டு இருந்தாலும், அவளது இமைகள் நொடிக்கொருதரம் கண்களை மூடி மூடி திறந்தது..

‘என்னடா இது நம்ம இவனை நக்கல் பண்ணா.. இவன் அதையே எனக்கு பாராட்டா திருப்பிட்டானே…’ என்று எண்ணியவள், ப்ரித்வியை பார்க்க, அவன் அங்கே இல்லை.

‘எங்க போனான்….’ என்று பார்வையால் அலச, மற்றவர்களுடன் பேசியபடி உள்ளே சென்றவன், என்ன நினைத்தானோ, சட்டென்று திரும்பிப் பார்த்து கண் சிமிட்டிவிட்டு சென்றான்..

தென்றலோ அப்படியே தான் நின்றிருந்தாள்..

‘என்ன செய்றான் இவன்.. ஏன் இப்படி பண்ணான்.. அப்போ நான் பேசினதை இவன் தப்பாவே எடுக்கலையா.. ஒருவேளை எல்லாரும் சொல்றது போல இவன் நல்லவன் தானோ…’ என்று தென்றலின் மனம் புதுக்கோலம் போட,

இனிய கனவுகளுடன் நல்லுறக்கத்தில் இருக்கையில் முகத்தில் சட்டென்று குளிர் நீர் அடித்து எழுப்பினால் எப்படி இருக்கும் அதுபோல் சட்டென்று மனதில் ஓர் மின்னல்..

‘ஹே.. தென்றல்.. என்ன ஒரு சின்ன விசயத்துக்கு இப்படி அவனை ஒரேதா நல்லவன்னு நினைக்க ஆரம்பிச்சிட்ட.. நோ நோ.. அவன் என்னவோ செய்றான்… இப்படி இப்படியெல்லாம் ஏதாவது செஞ்சு தான் நல்லவன் வேஷம் போடுறான்…’ என்று தனக்கு தானே அறிவுரை சொல்லி நின்றவளை வித்தியாசமாய் பார்த்தாள் பிரதீபா..

“ஏய் என்னடி அப்படி பாக்குற…???”

“என்ன நடக்குது இங்க..???”

“என்ன நடந்திச்சு..??”

“அதுசரி அப்போ இவ்வளோ நேரம் என்ன நடந்திச்சுன்னு உனக்கு தெரியலையா..???”

“ம்ம்ச் லூசு.. சொல்ல வர்றத தெளிவா சொல்லேன்…”

“நானும் உன் கூடவே தானேடி இருக்கேன்.. ஆனா எனக்கே தெரியாம எப்படி ப்ரித்வி அண்ணாக்கிட்ட இப்படி ஒரு ஐடியா கொடுத்த…” என,

அதன் பிறகு தான் தென்றலுக்கு புரிந்தது பிரதீபா என்ன சொல்ல வருகிறாள் என்று..

‘ச்சே எப்பவும் நான் தான் கேள்வி கேட்பேன்.. ஆனா இப்போ என்னை பதில் சொல்ல வச்சிட்டானே…’ என்று ப்ரித்வியை கடிந்தவள்,

“நான் ஒன்னும் இப்படி வந்து சிலை வாங்கி வைங்கன்னு சொல்லலை…” என்றாள் முகத்தை சுருக்கி..

“ஹ்ம்ம் என்னவோ போ.. ஆனா ஒன்னும் சரியா படலை..” என்றபடி பிரதீபா நடக்கத் துவங்க,

“என்ன.. என்ன சரியா படலை…” என்றபடி வேகமாய் அவள் பின்னே போனாள் தென்றல்…

“வேணாம்பா நான் சொன்னா நீ சண்டைக்கு வருவ…”

“சொல்லாட்டியும் சண்டை வரும்…”

“ஹ்ம்ம் நீ இப்படி முறைக்கிறதும் ப்ரித்வி அண்ணா சிரிக்கிறதும்.. எனக்கு என்னவோ வேற கணக்கு தான் தோணுது…” என்று தென்றலை கிண்டல் பிரதீபா கிண்டல் செய்ய, தென்றலுக்கு அடுத்து புசுபுசுவென்று கோவம் வந்து விட்டது..

“ஹேய் நிறுத்துடி.. அறிவில்ல உனக்கு.. இப்படிதான் சொல்வியா.. நானே நீ இங்க வந்ததுனால தான் வந்தேன்.. அவனை எனக்கு பிடிக்காதுன்னு சொன்னேன்ல.. பின்ன எப்படி நீ இப்படி நினைக்கலாம்..” என்று ஆரம்பிக்க,

“அம்மா தாயி இதுக்குதான் நான் சொல்ல மாட்டேன் சொன்னேன்.. எனக்கு தோணிச்சுடி அவ்வளோதான்.. ஒண்ணுமில்லைன்னா விடு…” என்று பிரதீபாவும் அவளை அடக்க,

“அதெப்படி… சும்மா எப்படி டி நீ இப்படி நினைக்கலாம்.. ஒருவேளை உன் பாசமலர் இப்படி ஒரு சீன கிரியேட் பண்ணி வச்சிருக்கானா?? சொல்லுடி…” அன்றைய நாள் மதியம் வரைக்கும் தென்றல் இந்த பேச்சை விடவேயில்லை..

பிரதீபாவிற்கு யார் காதிலாவது இதெல்லாம் விழுந்துவிட போகிறது என்ற பார்த்து பார்த்து பேச, தென்றலோ யார் கேட்டா எனக்கென்ன என்ற ரீதியில் வாய் மூடாமல் இருந்தாள்..

என்னவோ அவளால் இயல்பாய் இருக்க முடியவில்லை.. அடிக்கடி ப்ரித்வியின் பார்வைகளும், அவன் கண் சிமிட்டி சென்றதும் வந்து போக, பிரதீபா சொல்வது போல் இதில் வேறெதுவும் இருக்கிறது தானோ என்று அவள் மனம் சிந்திக்கத் தொடங்கிவிட்டது..

மதிய உணவு வேலையில், “நான் நிஜமாவே அப்படியில்லை பிரதீப்..” என்று முகத்தை சோகமாய் வைத்து சொன்னவளை பார்த்து பிரதீபா சிரித்துவிட்டாள்..

“லூசு.. ஜஸ்ட் தோணிச்சு அப்படி சொன்னேன்.. அதையே நினைச்சியா..” என,

“ம்ம்… ஹ்ம்ம் நான் அப்படி இல்லை.. ஆனா உன் அண்ணா எப்படின்னு தெரியலை…” என்றாள் தென்றல் அடுத்து..

‘உன் அண்ணா….’ இத்தனை நாட்களில் முதல் முறையாக ப்ரித்வியை ஒரு மரியாதை நிமித்தமாக தென்றல் சொல்லியிருக்கிறாள்..

எப்போதும் அவன் இவன் தான் இல்லை இவள் தான் பெயர் வைத்தது போல் ப்ரித்வி என்பாள்.. அதுவுமில்லையா உன் பாசமலர் என்று கிண்டல் மொழி தான்..

ஆனால் இன்று…??

பிரதீபா சிறிது நேரம் தென்றலை ஆராய்ச்சியாய் ஒரு பார்வை பார்க்க, தென்றலோ அவள் என்ன சொன்னாள் என்று கூட உணராது கைக்கும் வாய்க்கும் வேலை கொடுத்துக்கொண்டு இருந்தாள்.

ஆனால் விதி வழியதே…

இவர்களை போல ப்ராஜெக்ட்டிற்கு வந்தவள் ஒருத்தி சும்மா இராமல்,

“தென்றல், சீனியருக்கே ஐடியா கொடுக்க ஆரம்பிச்சுட்ட…” என, மடிக்கணினியில் கண் வைத்திருந்தவள், லேசாய் திரும்பி என்னவென்று பார்க்க,

“ஹ்ம்ம் ஸ்டெப் பை ஸ்டெப் டெவலப்மெண்ட்…” என்றாள் அவள்..

“என்ன சொல்ற.???”

“முதல்ல எல்லாரையும் அலட்சியமா பேசின.. அடுத்து எல்லார்கிட்டையும் நல்ல பேர் வாங்கின மாதிரி நடந்த,. அவ்வளோ ஏன் சீனியரோட அக்காவே தேடி வந்து பேசிட்டு போறாங்க.. இப்போ சீனியருக்கு ஐடியா கொடுத்திருக்க, உன் அடுத்த பிளான் என்னம்மா…???” என்று வினவ,

“ஏய் சும்மா இருக்க மாட்டியா வேலை பாரு…” என்று பிரதீபா அவளை அரட்ட,

“விடு பிரதீப்…” என்றவள்,

“ஹ்ம்ம் மேல சொல்லு…” என்றாள் தென்றல் அவளை நோக்கி.

“மேல என்ன சொல்ல… நீ தான் நல்லா சீன் கிரியேட் செய்றியே…” என்று சொன்னவள், அடுத்து அங்கே நிற்கவில்லை…  தென்றல் பார்த்த பார்வையில் அப்படியே நகர்ந்து சென்றுவிட்டாள்..

ஆனால் தென்றலோ அப்படியே உறைந்து போய் நின்றிருந்தாள்..

‘நான்… நான் சீன் கிரியேட் செய்றேனா..?? நானா…??? ச்சே… என்னமாதிரி பேசுறா…??? நானா…???’ என்று எண்ணம் போக, சட்டென்று ப்ரித்வி மீது கோவம் பொத்துக்கொண்டு வந்தது..

‘எல்லாம் இவனால…’ என்று நினைத்தவள், அடுத்து யோசிக்கவெல்லாம் இல்லை.. வேகமாய் ப்ரித்வியை தேடிச் சென்றாள்..

கிட்சன் ஏரியாவில் இருந்தவன், தனக்கு காபி கலக்கிக் கொண்டிருக்க,

“கொஞ்சம் பேசணும்…” என்றபடி வந்து நின்றவளை வித்தியாசமாய் பார்த்தான்..

“சொல்லு தென்றல்…” என,

“இங்க வேணாம்… உள்ள போய் பேசலாம்…” என்றவள் பார்வையை சுற்றி உருட்ட, அங்கங்கே கொஞ்சம் பேர் அமர்ந்து வேலை செய்து கொண்டிருப்பது ப்ரித்வியின் கண்ணில் பட,

“ஹ்ம்ம் ஓகே.. வா..” என்றபடி நடந்தவன் உள்ளே மியுசிக் ரூம் சென்றான்.. இந்நேரத்தில் யாரும் இங்கே வரமாட்டார்கள் என்று தெரியும் அவனுக்கு..

உள்ளே சென்றவன் ஜன்னல் அருகே சாய்ந்து நின்று காபியை உறுஞ்சியபடி “சொல்லு…” என்பதாய் பார்க்க,

“ஏன் இப்படி பண்றீங்க…????” என்று எரிந்து விழுந்தாள்.

“என்ன பண்ணேன்.. உனக்கும் காபி வேணும்னா நானே கலக்கி கொடுத்திருப்பேனே…” என்றான் கூலாய்..

“ம்ம்ச்… கிண்டலா…”

“இல்லம்மா கலக்கல்…”

“யூ……” என்று பல்லை கடித்தவள், ஒருநொடி கண்களை மூடித் திறந்து தன்னை கொஞ்சம் கட்டுப்படுத்தியவள்,

“மார்னிங் ஏன் அப்படி பண்ணீங்க..??” என,

“நான் என்ன பண்ணேன் தென்றல்…” என்றவனின் பார்வை மீண்டும் அவளை அதிர்வை உணர வைத்தது..

ப்ரித்வி ஒவ்வொரு முறையும் தென்றல் தென்றல் என்று சொல்லும் போதெல்லாம் என்னவோ பூக்களின் வாசங்களை சுமந்து வரும் தென்றல் காற்று அவள் மனதை வருடும் மென்மையை உணர்ந்தது..

தான் இப்படி நினைப்பது கூட தென்றலுக்கு எரிச்சல் தந்தது.. ஒவ்வொரு முறையும் அவன் முன்னே நிற்கும் போது மனத்திலிருக்கும் கோபத்தை வெளிக்காட்ட முடியாமல் தவித்தாள்..

இவன் என்னை பலவீனப் படுத்துக்கிறான் என்ற எண்ணமே தென்றலுக்கு இன்னும் இன்னும் ப்ரித்வி மீது கொவம்கொள்ளச் செய்ய,  

“ம்ம்ச் ஒன்னும் தெரியாதது போல நடிக்காதீங்க.. எல்லாமே நடிப்பு.. ஏன் இப்படி பண்றீங்க ப்ரித்வி.. நான் தான் உங்களை பிள்ளையார் சிலை வைக்கச் சொன்னேனா.. நான் தான் இதெல்லாம் செய்யச் சொன்னேனா.. இல்லைல…” எனும் போதே குரல் இறங்கியது..

அத்தனை நேரம் கோவமாய் வேகமாய் பேசிக்கொண்டு இருந்தவள், திடீரென்று குரல் இறங்க பேசவும் அவனுக்குமே ஒரு மாதிரி ஆக, வேறென்னவோ நடந்திருக்கிறது என்று எண்ணியவன்,

“என்னம்மா என்னாச்சு..??” என்று அருகே வர, அவளோ பின்னே நகர்ந்தாள்..

அவனது அருகாமை கொடுத்த சிறு அதிர்ச்சி அவள் கண்களில் தெரிய, ப்ரித்வி அப்படியே நின்றுவிட்டான்..

“உட்காரு…” என்று அங்கிருந்த இருக்கையை காட்ட,

“இல்ல வேணாம்.. நான் போறேன்…” என்று அவனை கடந்து போக தென்றல் முயற்சிக்க ,

“சொல்ல வந்ததை சொல்லிட்டு போ தென்றல்…” என்றவன் அவனை கடந்து போக முயன்றவளை கரம் பிடித்து நிறுத்த, சட்டென்று அவனை நிமிர்ந்து பார்த்தவள், கொஞ்ச நேரத்தில் கண்களில் நீரை தேக்கிவிட்டாள்..

“ஹேய் பேபி… என்னாச்சு…. ஏன் அழற.. யாரும் எதுவும் சொன்னாங்களா…??” என்று அவனும் பதற,

“பின்ன சொல்லாம இருப்பாங்களா…” என்று விசும்பியவள், அவனிடம் இருந்து நகர்ந்து செல்லவேண்டும் என்றெல்லாம் தோன்றாமல் அப்படியே நின்றிருந்தாள்.

“யார் என்ன சொன்னாங்க.. தென்றல்மா…”  என,

“பிரதீப் சொல்றா.. அவ அந்த ஜான்சி சொல்றா…” என்றவளுக்கு இன்னும் கண்ணீர்.

கோவமாய் அவனை ஒரு பிடி பிடிக்க வந்தவள், இப்போது கலங்கி போய், கண்ணீர் விட்டு நிற்பதன் காரணம் அவளுக்கே தெரியவில்லை.. ஆனால் ப்ரிதவிக்கு அவள் மனம் நன்றாக, தெள்ளத் தெளிவாக புரிந்தது..

“என்ன சொன்னாங்க தென்றல்..???” என, அவளோ எதோ ஒரு உந்துதலில் அனைத்தையும் சொல்லி முடிக்க, ப்ரித்வியும் அமைதியாய் இருந்தான்..

“எனக்கு உங்களை பிடிக்காது.. சுத்தமா பிடிக்காது… ஆனா இவங்க எல்லாம் சொல்றதை பார்த்தா… எல்லாரும் சொல்றது போல எனக்கும் உங்களை பிடிச்சிடுமோன்னு  பயமா இருக்கு.. நீங்க ஏன் இப்படி பண்றீங்க..?? நீங்க நிஜமாவே நல்லவங்க தானா???.. இப்போ கூட நான் உங்களை பிடிக்கலைன்னு சொல்லிட்டு இருக்கேன்  ஆனா நீங்க கோவப்படமா இருக்கீங்க.. அதெப்படி அப்படியிருக்க முடியும்…?? ” என்று தன் மனதில் இருக்கும் அவன் மீதான சந்தேகத்தை அவனிடமே கேட்க,

அவள் கேள்வியில் லேசாய் அதிர்ந்தவன், “என்ன தென்றல் நீ.. ஏன் இப்படியெல்லாம் நினைக்கிற..??” என்றவன் ஆதரவாய் அவள் கரம் மீது தன் கரம் பதித்து,

“நீ ஒரு விஷயம் புரிஞ்சுக்கோ பேபி.. இந்த உலகத்துல யாருமே முழுக்க நல்லவங்களும் இல்லை கெட்டவங்களும் இல்லை.. சூழ்நிலை தான் அவங்களை ரியாக்ட் பண்ண வைக்கும்.. இப்போ நீ கோவமா வந்திட்டு  அழுதிட்டு இருக்க பாரு.. அதுபோல தான் எல்லாமே… உனக்கு என்னை பிடிச்சே ஆகணும்னு எந்த கட்டாயமும் இல்லை.. ஆனா உனக்கு என்னை பிடிச்சா எனக்கு ரொம்ப சந்தோசம்.. நீயா எதுவும் குழப்பிக்காத…” என்று அவள் தலையை மெல்ல வருடியவன்,

“பீ கூல்…” என,

அவளோ திகைத்து போய் அவனைப் பார்க்க, “என்ன தென்றல்…???” என்றவனின் குரலும் முகமும் மிக மிக அருகே வர, சட்டென்று கண்களை இறுக மூடிக்கொண்டாள் தென்றல்..

“தென்றல்….”

“ம்ம்…”

“ஏன் நீ இப்படி இருக்க..???”

“தெரியலை… நான் இப்படி இருந்ததேயில்லை.. ஆனா எல்லாமே உங்கனால தான்…”

“என்னாலயா..??”

“ம்ம் நீங்க தான் என்னவோ பண்றீங்க….” என்றவள் கண்களை திறக்கவேயில்லை.. திறக்கத் தொன்றவில்லை.

அவனும் அவளிலிருந்து தள்ளி நிற்கவில்லை.. நிற்கவும் தோன்றவில்லை.. அவன் நிற்பதனால் தானோ என்னவோ இவள் கண்கள் மூடிக்கொள்ள, காதலின் புதிய மொழி ஒன்று அங்கே பேசிக்கொண்டது. 

 

Advertisement