Advertisement

தென்றல் – 5

இரண்டு மாதங்கள் கண் மூடி திறப்பதற்குள் நகர்ந்தது போல் இருந்தது தென்றலுக்கு.. நான்காம் ஆண்டின் முதல் செமெஸ்டர் முடிந்து அடுத்து ப்ராஜெக்ட்டிற்கான வேலைகள் தொடங்க, அவளுக்கு என்னவோ ப்ரித்வியின் அலுவகலம் போக எண்ணமில்லை.

ஏன் இன்னும் இரண்டொரு இடத்தில் கேட்டுப் பார்ப்பது  என்று இருக்க, அவளும் பிரதீபாவும் அங்கே சென்று வந்த பின் அவனும் அதை பற்றி கேட்கவில்லை..

எங்கே தான் எதாவது கேட்கப்போய் அது செயற்கையாக தோன்றுமோ ப்ரித்வியும் அமைதியாய் இருந்தான்.. ஆனால் முன்போல தென்றல் இருக்கும் பக்கம் வராமலோ பேசாமலோ எல்லாம் இல்லை..

அடிக்கடி தென்றலின் வாழ்வில் ப்ரித்வியின் பெயரோ இல்லை ப்ரித்வியின் வருகையோ இடம்பெற்றுக்கொண்டே இருந்தது.

ஒருநாள் திடீரென்று பிரதீபா “தென்றல் நம்ம போன் பண்ணி ப்ரித்வி அண்ணாட்டா சரின்னு சொல்லிடலாம்டி…” என்று சொல்ல,

இவளோ, “ஏன் அதான் அபிசியல் கால் பார் வந்திருக்கு தானே.. நம்ம அபிசியலாவே போவோம்…” என,

“ஏன்டி இப்படி பண்ற.. ப்ரித்வியண்ணா எவ்வளோ டீசென்ட்டா நம்மை இன்வைட் பண்ணார்…” என்று அவளும் பதிலுக்கு கடிய, தென்றல் வாயை இறுக மூடிக்கொண்டாள்..      

ஆனால் ஒருசில நாட்கள் சென்றதும் பிரதீபா வந்து ஒரேதாய் “நான் ப்ரித்வி அண்ணா ஆபிஸ் தான்டி போகப்போறேன்…” என்று சொல்லிட தென்றல் இரண்டு நாட்கள் முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு இருந்தாள்..

“இப்போ ஏன்டி நீ அங்க வேணாம்னு சொல்ற.. எப்படியும் எவன் எவன் கிட்டயோ நம்ம அலையணும். அதுவுமில்லாம அங்க அட்மாஸ்பியர் எப்படி இருக்கு பாரேன்.. நமக்கு அங்க நிறைய பெனிபிட்ஸ் இருக்குடி…” என்று பிரதீபா இவளை சமாதானம் செய்ய,

“நீ சொல்ற எல்லாமே சரிதான்டி.. ஆனா என்னால தான் அவங்க யாரையும் நம்ப முடியல… அதெப்படிடி ஒருத்தன் இவ்வளோ நல்லவனா இருக்க முடியும்???” என,

“அது அவங்க இயல்பு அப்படியா இருக்கலாம்டி.. அவங்க வீட்ல எல்லாருமே அப்படிதானே இருக்காங்க…” என்று பதிலுக்கு அவளும் சொல்ல,

“அதான்டி நானும் சொல்றேன்.. எப்படி எல்லாரும் இப்படி ஒண்ணுபோல இருக்க முடியுதுன்னு.. நீயே பார் அவங்க எவ்வளோ பெரிய ஆளுங்க.. ஆனா அதெல்லாம் துளிக்கூட காட்டாம எப்படி இவ்வளோ கேசுவலா இருக்காங்க…” என்றாள் சந்தேகமாய்..

“ஹ்ம்ம் நீ சினிமா பார்த்து ரொம்ப கேட்டு போயிட்ட தென்றல்.. அதான் இப்படியெல்லாம் யோசிக்கிற.. நான் தெளிவா இருக்கேன்.. ப்ரித்வி அண்ணா நல்ல டைப் தான்.. சோ நான் அங்க தான் போக போறேன்…”

“ஹ்ம்ம் சரி நீ சொல்றது போல அவங்க வீட்ல எல்லாரும் இப்படியான டைப்பாவே இருக்கட்டும்.. ஆனா இந்த ப்ரித்வி??? ஆயிரம் ரூபாய் கைல இருந்தாலே இப்போயெல்லாம் எல்லாருக்கும் ஆகாயத்துல பறக்குற நினைப்பு தான்.. ஆனா இவன்..?? எத்தனை சினிமால பார்த்திருக்கோம்.. அவ்வளோ ஏன் நம்ம கிளாஸ் தீனா… அவங்கப்பா ஒரு கார் வாங்கி கொடுத்ததுக்கே எவ்வளோ சீன் போட்டான்…” என,

“எல்லாரும் ஒரேமாதிரியா இருப்பாங்க.. பணக்காரங்க பதவில இருக்கவங்கன்னா இப்படித்தான் இருப்பாங்கன்னு நமக்கு ஒரு மைன்ட் செட் டி.. அதான் கண் முன்னாடி உண்மை இருந்தாக்கூட நம்ப முடியலை…” என்று பிரதீபாவும் விடாமல் பேசினாள்,..

“நீ என்னவேனா சொல்லுடி.. ஆனா என்னால இப்பவும் ப்ரித்வி நல்லவன்னு சொல்ல முடியாது…”

“சரி சொல்லாத.. ஆனா எனக்கு ப்ரித்வியண்ணா நல்லவங்க தான்…”

“உன் அளவுக்கெல்லாம் நான் இம்ப்ரெஸ் ஆகல..”

“ஏம்மா நம்ம போறது ப்ராஜெக்ட்க்கு.. நீ இம்ப்ரெஸ் ஆகணும்னு எல்லாம் அவசியம் இல்லை…”  என்று பிரதீபா சொன்ன பிறகு தான் தென்றலுக்கு தான் சொன்னதன் அர்த்தம் புரிந்து தலையில் தானே குட்டிக்கொண்டாள்..

“ஒழுங்கா அங்க ஜாயின் பண்ணலாம்…”

“எனக்கென்னவோ இன்னும் நம்ப முடியலடி… ப்ரித்வி ரொம்ப நடிக்கிறது மாதிரியே இருக்கு…” என்று மீண்டும் ஆரம்பிக்க,

“சரி அப்போ ஒன்னு செய்யலாம்.. உனக்கு சந்தேகம்னு வந்திடுச்சு இல்லையா அதை எப்படி கிளியர் செய்றதுன்னு பாப்போம்…” என,

“அது எப்படிடி…??” என்று அவளும் கேட்க,

“அங்க போய் பார்த்தா உனக்கே தெரியும் தானே அவங்க நல்லவங்களா என்னான்னு.. ப்ரஜெக்ட்காகன்னு இல்லை.. ஜஸ்ட் உன்னோட ஒரு சந்தேகம் போறதுக்காக..” என்று தென்றலுக்கு ஏற்ற விதமாக பிரதீபா பேச, வெகு நேரம் யோசித்தவள்,

“ஹ்ம்ம் சரி.. ஆனா ஒன்னு.. கண்டிப்பா அவன் நல்லவன் இல்லை…” என்றாள் தீர்மானமாக..

“சரி அதை அங்க போய் தான் பார்ப்போமே…” என்று பிரதீபாவும் சொல்ல,

“பாப்போம்…” என்று சவால் போல் சொன்னாள் தென்றல்.

நம் பார்வைகள் தான் நம் எண்ணங்கள்.. எண்ணங்கள் தான் செயல்கள் ஆகின்றன.. எதையுமே சரியான கோணத்தில் பார்த்தால் அனைத்தும் சரியே.. நான் இப்படித்தான் என்று கோணலாய் பார்த்தால் அது அனைத்தும் கோணலாய் தான் முடியும்.

தென்றல் இது அவளின் குணமல்ல.. என்னவோ ப்ரித்வியின் விசயத்தில் அவளை நேர்மாறாகத் தான் நடக்க செய்தது.. தென்றல் ஒன்றும் குறுகல் மனம் கொண்டவள் அல்ல.. ஆனால் ப்ரித்வி அவளிடம் முதல்நாள் பேசிய விதத்தை அவள் இன்னும் மறக்கவேயில்லை..

அந்த குரலில் இருந்த நெருக்கம்.. அதன் பிறகு இல்லை.. அது ஏன் என்ற கேள்வி அப்படியே இருந்தது. அதன் பிறகும் சரி என்னவோ அவன் மிகவும் அடக்கி வாசிப்பது போலவே இருக்க, பிரதீபா போல் தென்றலுக்கு சட்டென்று ப்ரித்வியை நல்லவன் என்று நம்பிட முடியவில்லை..

அடுத்து வந்த நாட்களும் வேகமாய் முடிந்து இதோ இவர்கள் இருவரும் ப்ரிதிவியின் கம்பனியில் சேர்ந்து ஒருவாரம் ஆகிவிட்டது.. இவர்களை போல் இன்னும் நால்வர் வந்திருந்தனர்..

பிரதீபா அனைவரோடும் எளிதில் ஒட்டிவிட்டாள். ஆனால் தென்றல் தான் அங்கே என்ன குறை இருக்கிறது, இல்லை ப்ரிதிவியிடம் என்ன குறை இருக்கிறது என்று கண்டறிய தானே வந்தாள், ஆக எப்போதுமே ஓர் ஆராய்ச்சிப் பார்வை தான் அவளுக்கு..

ப்ரித்வியின் அலுவலகத்தை பொறுத்தவரை, இப்படி அமர்ந்து தான் வேலை செய்ய வேண்டும் என்ற கட்டுப்பாடு எல்லாம் இல்லை.. யாருக்கு எங்கமர்ந்து வேலை செய்ய பிடிக்குமோ அப்படியிருக்கலாம்.. ஒரே ஒரு கண்டிசன் மட்டும் உண்டு, வேலை ஒழுங்காய் நடக்க வேண்டும், யாரும் தங்களுக்கு கொடுத்திருக்கும் சுதந்திரத்தை மீறியோ வரம்பு மீறியோ நடந்திடக் கூடாது..

ஆக அன்று தென்றலும் இன்னும் ஒரு சிலரும் தோட்டத்தில் இருந்த வட்ட மேஜையில் தங்களது மடி கணினி வைத்து வேலை செய்து கொண்டிருக்க, இரண்டு நாட்களாய் ப்ரித்வி வெளியூர் சென்றிருந்தவன் அன்று தான் வந்தான்..

அவனை கண்டதும் “ஹாய் சீனியர்…” என்று அனைவரும் கை ஆட்ட,

பிரதீபா “ஹாய் ண்ணா..” என,

‘இப்போ நான் என்ன சொல்றது…’ என்று தென்றல் முழித்தவள் “ஹாய்…” என்று மட்டும் சொல்ல, ப்ரித்வியின் பார்வை ஒருநொடி தென்றலில் நிலைத்து பின் மீண்டது..

“தென்றல்..” என்றழைத்தவன், முன்னே நடக்க,

‘ஓ இப்படி கூப்பிட்டா இவன் பின்னாடி போகனுமா..??’ என்று யோசித்த தென்றல், எழுந்துச் சென்றாள்..

உள்ளே ஸ்டடி ரூமில் சிறு மேஜைக்கு அருகே அமர்ந்தவன், தென்றலையும் அமரும்படி கை காட்ட, அவனை ஒரு பார்வை பார்த்தவள் சற்று தள்ளி இருந்த இருக்கையை ‘டர்’ என்று இழுத்து வந்து மேஜைக்கு அருகே போட்டு பொத்தென்று அமர்ந்தாள்..

என்னவோ அவனை காணும் போதெல்லாம் காரணமேயில்லாத கடுப்பு வந்தது அவளுக்கு..

“ஷ்…” என்று கண்களை மூடித் திறந்தான் அவள் இழுத்து வந்த சத்தத்தில்..

‘என்னடா இது இப்படி பண்றா…’ என்று யோசனையாய் அவளை காண, அவளோ நேருக்கு நேராக இவனை பார்க்க, ப்ரித்வி தான் சட்டென்று தலையை திருப்ப வேண்டி வந்தது..

“தென் தென்றல் இங்க செட் ஆகிடுச்சா..???” என,

“ஹ்ம்ம் சம்வாட்…” என்றாள் பார்வையை அகற்றாமல்..

“குட்.. போக போக பிடிச்சிடும்…”

“ஓவர் கான்பிடன்ட்…” என்று உதடு வளைத்தாள்..

‘இவ தெரிந்து தான் இப்படி பண்றாளா…’ என்று சில நொடிகள் ப்ரித்வி தன் பார்வையை அவள் முகத்தில் நிலைக்கவிட, அப்போதும் தென்றல் சளைக்காமல் தான் பார்த்தாள்..

‘இவன் எத்தனை நேரம் இப்படி பார்ப்பான் நானும் பாக்குறேன்…’ என்று பார்வையில் ஒரு அலட்சியம் கொடுக்க, அவளது இதழும் அலட்சியமாய் தான் வளைந்தது..

ஆனால் ப்ரித்வியும் ஒன்றும் இவளுக்கு சளைத்தவன் இல்லையே.. அவனும் தான் விடாமல் தான் பார்த்தான்.. ‘ரொம்ப பண்றாளே.. எவ்வளோ நேரம் இப்படி பார்க்கிறான்னு பாப்போம்…’ என்று அவனும் அமர்ந்திருக்க,

ஒரு நேரத்தில் தென்றல் தான் எரிச்சலாய் கேட்டாள், “ம்ம்ச் இப்போ எதுக்கு என்னை கூப்பிட்டீங்க…” என..      

“நீ ஏன் இங்க வந்த???” என்றான் பொதுவாய்..

“ஹா… என்ன எனக்கு உங்க கேள்வியே புரியலை…” என்று தென்றல் முகத்தை சுருக்க,

“இல்ல.. நானும் நீ வந்ததுல இருந்து பார்த்திட்டு தான் இருக்கேன்.. என்னவோ ஒரு கடுப்போடவே சுத்துற மாதிரி இருக்கு.. ஏன் அப்படி.. இல்லை இங்க எதுவும் உனக்கு பிடிக்காதது மாதிரி நடந்ததா???” என,

“அதெல்லாம் எதுவும் இல்லையே.. இது என்னோட நேச்சர்..” என்றாள்.

“ஓ… பட் உன்னோட நேச்சர் இதில்லையே…”

“என்ன?? எப்படி சொல்றீங்க?? இல்லை என்னைப்பத்தி உங்களுக்கு என்ன தெரியும்???” என்று குரலை உயர்த்த, அந்தப்பக்கம் சென்றவர்கள் கூட திரும்பிப் பார்த்துவிட்டு செல்ல,

“ஷ் … தென்றல்.. இங்க நம்ம ப்ரீயா இருக்கலாம்தான்.. ஆனா இப்படி பீகேவ் பண்ணக்கூடாது.. அதுவும் காரணமே இல்லாம ஏன் இப்படி இருக்க..???” என்றான்.

அவனுக்கும் தென்றலிடம் இப்படியொரு விசாரணை போடவேண்டும் என்ற எண்ணமெல்லாம் இல்லை. எத்தனை அவளிடம் இனிமையாய் பழகிட வேண்டும் என்று நினைத்தானோ அதற்கு நேர்மாறாய் தான் அவளை பற்றிய தகவல்கள் வந்தன.

‘தென்றல் எப்பவும் எரிச்சலாவே பேசுறாங்க…’

‘தென்றல் யாரையும் மதிக்கிறது இல்லை…’

‘தென்றல் அவங்க இஷ்டத்துக்கு தான் இருக்காங்க…’

வந்த ஒருவாரத்தில் இதெல்லாம் ப்ரித்வி கேட்டால் அவனும் தான் என்ன செய்வான்.. அதுவும் அவளை அவன் இங்கே கொணர்ந்த காரணமே வேறாக இருக்கும்போது.. மனம் ஒருமாதிரி வலிக்கத்தான் செய்தது..

“ஏன் இப்படி பண்றா…??” என்று யோசித்தவன், இனியும் தான் இப்படி சும்மா இருக்கக்கூடாது என்று தான் இப்போது அவளை அழைத்து பேசினான்..

“இப்போ நான் என்ன பண்ணிட்டேன்னு என்னை கூப்பிட்டு இப்படி ஒரு என்கொய்ரி…???” என்றாள் இருக்கையில் நன்றாய் சாய்ந்து.

“நான் என்ன போலீசா??? உன்னை என்கொய்ரி பண்ண..???”

“நீங்க அப்படித்தான் செய்றீங்க..??”

“தென்றல்.. ஏன் இப்படி பீகேவ் பண்றம்மா.. சரி உனக்கு இங்க என்ன பிடிக்கல சொல்லு.. மாத்திக்கலாம்…” என்று பொறுமையாகவே பேச,

“எனக்கா….” என்று வேண்டுமென்றே பார்வையை சுற்றி ஓடவிட்டவள்,

“இங்க எல்லாமே இருக்கு ஆனா.. பூஜை ரூம் ஏன் இல்லை…” என்றாள் சம்பந்தமே இல்லாமல்..

ப்ரித்விக்கோ, இவள் என்ன பேசினாலும் சரி, இவளிடம் இருந்து உண்மையை வரவைக்காமல் போகக்கூடாது என்று திண்ணமாய் இருந்தான்.. தென்றலை பற்றி இப்படியெல்லாம் பேச்சு வரவும் அவனே பிரதீபாவிடம் முதலில் கேட்டான். ஒருவேளை தனக்கு தெரியாமல் அங்கே எதுவும் நடக்கிறதா என்று..

“அண்ணா அவளுக்கு இங்க ஜாயின் பண்ணவே பிடிக்கலை.. நான் வர்றேன்னு தான் வர்றா..” என்று இதை மட்டும் கூற, தென்றலுக்கு இங்கே அனைத்தையும் எப்படியாவது பிடிக்கச் செய்ய வேண்டுமே என்ற வேகம் பிறந்தது..

ஆனால் அதற்கு அவளும் ஒத்துழைக்க வேண்டுமே..

தான் ஒன்று கேட்டால் அவள் ஒன்று சொல்வது என்று இடக்காய் பேச்சு போக, அதுவும் அவள் கடைசியாய் சொன்னதோ அவனுக்கு சிரிப்பை கொடுத்தது..

‘எப்படி எப்படி சமாளிக்கிறா…’ என்றெண்ணியவன் “செய்யும் தொழிலே தெய்வம்…” என்று கண்களிலும் சிரிப்பை காட்டி..

இதற்குமேல் அவளென்ன பதில் சொல்ல முடியும்??

“ம்ம்…” என்று கைகளை கோர்த்து அமர்ந்திருக்க,

“சரி நீ போ.. போய் உன் வொர்க் பாரு…” என,

“இதுக்கு தான் கூப்பிட்டீங்களா..??” என்றபடி எழுந்தாள்..

“ஏன் வேற எதுக்குன்னு நீ நினைச்ச??” என்றவனின் குரல் அப்படியே மாறியிருந்தது..

முதல் நாள் பேசினானே.. உன்னை எனக்கு நன்றாய் தெரியும் என்ற விதத்தில், மனதிற்கு நெருக்கமான குரலில் பேசினானே அப்படி ஒரு பாவத்திற்கு சென்றிருந்தான்.. இனியும் இவளிடம் இப்படி பொறுமையை கையாண்டால் வேலைக்கு ஆகாது என்று தோன்றியது..

ஆரம்பத்தில் இருந்தே அவனை அவளுக்கு உணர்த்திவிட வேண்டும் என்று மனதில் சட்டென்று ஒரு எண்ணம்.. இன்னும் எத்தனை நாளைக்கு இவன் கண்ணா மூச்சி ஆடிட முடியும்.. அதுவும் இப்போது வீட்டில் வேறு மாதுரிக்கும் சுகேஷுக்கும் தெரிந்த விஷயம் அடுத்து அருள்மொழிக்கு தெரிந்தால் நேராக தென்றலின் வீட்டிற்கே சென்றல்லவா பேசிடுவார்..

ஆவரை அவனால் தடுக்க முடியாது தானே..

அவன் குரலில் தோன்றிய வித்தியாசம் உணர்ந்து, “என்ன…??” என்று திரும்பி பார்த்தவள், அவன் கண்களில் இத்தனை நேரம் தள்ளி நின்ற உணர்வு போய் நானும் உன்னை பார்ப்பேன் என்ற உருகல் வந்திருந்தது..

என்னவோ கோவமாய் திரும்பியவளுக்கு அவன் பார்வையை கண்டதும் சட்டென்று ஓர் அதிர்வு மனதினுள் பரவ, வேகமாய் ஓடிவிட்டாள்..

தென்றலின் கண்களில் தெரிந்த சின்ன திகைப்பு, ப்ரிதவிக்கு திருப்தியாய் இருந்தது.. ஆனாலும் மனதில் ‘ஏன் இவ இப்படி இருக்கா???’ என்று கேள்வி மறையவேயில்லை.

“என்னடி இவ்வளோ நேரம்…??” என்ற பிரதீபாவை முறைத்தவள், பதிலே இல்லாமல் அமர்ந்திருக்க,

“தென்றல் ஏன் இப்படி பீகேவ் பண்ற.??” என்ற அவளின் அடுத்த கேள்விக்கு இன்னும் முகத்தை உர்ரென்று வைத்தாள்..

“ம்ம்ச் எல்லாரும் இங்க ஜாலியா இருக்காங்க.. ஆனா நீ மட்டும் தான் இப்படி இருக்க.. சரி அப்படி பார்க்காத.. உனக்கு ப்ரித்வி அண்ணாவ பிடிக்கலைன்னே வை.. ஆனா மத்தவங்க என்னடி செஞ்சாங்க..?? எல்லார்டையும் ஏன் இப்படி கடுப்படிக்கிற.. இப்படி இருக்கிறது உனக்கே நல்லாருக்கா..??” என்று பிரதீபா தன்மையாய் பேச,

‘நிஜமாவே நம்ம அப்படிதான் இருக்கோமா?? ஒருவேளை இதை கேட்கத்தான் ப்ரித்வி கூப்பிட்டானோ.. நான் தான் புரிஞ்சுக்கலையோ…??’ என்று தென்றல் யோசிக்க,

“டி தென்றல்..” என்று பிரதீபாவும் உசுப்ப,

“ஹா என்னடி நான் நல்லாதானே இருக்கேன்…” என்றாள் புரியாமல்..

“நீ நல்லாத்தான் இருக்கம்மா.. ஆனா அடுத்தவங்க கிட்டயும் நல்லா இருக்கணுமே.. ப்ரித்வி அண்ணாவ உனக்கு என்னவோ பிடிக்கலை. சரி ஆனா அடுத்தவங்கக்கிட்ட ஏன் இப்படி இருக்க..??”

“ம்ம்ம் தப்பு தான்.. ஆனா எனக்கே தெரியலை ஏன் இப்படின்னு.. நான் இப்படி இல்லைதானேடி…” என்றாள் தென்றலும்.

“அதான் கேட்கிறேன்.. நீ இப்படியில்லையே.. ஆனா இப்போ ஏன் இப்படி இருக்க???”

“தெரியலை…” என்று உதடு பிதுக்கினாள்..

மனதினுள்ளோ, ‘எல்லாம் அவனால.. இவன்மேல இருக்க கோவத்தை எல்லார் மேலயும் காட்றேனோ…’ என்று நினைத்தாள்.. இனி அப்படி இருக்க கூடாது என்றும் முடிவேடுத்துக்கொண்டாள்..

ஆனால் ப்ரித்வி மீதும் கோவம் வர காரணமேயில்லை என்று அவள் உணரவில்லை..

“ஹ்ம்ம் என்ன தென்றல் யோசனை முடிஞ்சதா..???”

“ஹ்ம்ம் இனி எல்லார்டையும் நான் நல்லா நடந்துப்பேன்…” என்றாள் உணர்ந்து..

“சரி சரி நீ இப்படி பவ்யமா எல்லாம் பேசி வைக்காத.. சகிக்கல..” என்றவளின் கைளில் நறுக்கென்று கிள்ளி, பழைய தென்றலாய் மாறிவிட்டாள்..

அடுத்து வந்த நாட்களில் அவளது மாற்றத்தில் அனைவருக்குமே சிறு ஆச்சர்யம் தான்.. அனைவரிடமும் புன்னகை முகம் காட்டினாள்..  யாரையும் கண்டும் காணாது போவதில்லை..  அவளை பார்த்து புன்னகைப்போரிடம் நின்று பேசாமல் போவதில்லை.. கேலி கிண்டல் சிரிப்பு என்று எதற்கும் பஞ்சமில்லை. அவளுக்கே இப்போது அங்கே வர பிடிக்க ஆரம்பித்தது.

இதெல்லாம் போதாது என்று மாதுரி ஒருநாள் இங்கே வர, அவளோடு கூட இயல்பாய் அக்கா என்று பேசினாள்.. மாதுரியை தொடர்ந்து சுகேஷ் வர,அவனோடும் கூட நன்றாய் பேசினாள். என்ன அங்கிருந்தவர்களில் ஒருசிலர் இதை ஆச்சர்யமாய் பார்த்தனர்..

மாதுரியும், சுகேஷும் கொஞ்ச நேரம் இருந்துவிட்டு சென்றுவிட, “ஏன் எல்லாம் அப்படி ஷாக்கா பார்த்தீங்க…??” என்று தென்றல் கேட்க,

“இல்ல எப்பவுமே மாதுரி சிஸ்டர் இங்க வரமாட்டாங்க.. சுகேஷ் ப்ரோ அடிக்கடி வருவார்.. அதான்…” என,

“ஓ.. எனக்கு தெரியாதே.. வந்து பேசினாங்க.. ஜஸ்ட் நானும் பேசினேன்…” என்றவள் சென்றுவிட்டாள்..   

ஆனால் இது அடிக்கடி நடந்தது.. தென்றலும் கூட இப்போது மாதுரியிடம் ஒட்டிவிட்டாள்..

ப்ரித்வி இதெல்லாம் சத்தமில்லாமல் கவனித்துக்கொண்டு தான் இருந்தான்… என்ன நான் உன்னை கவனிக்கிறேன் என்று காட்டிக்கொள்ள வில்லை. தள்ளி நின்று அனைத்தையும் கவனித்தான்.. அவனுக்கு ஒன்று மட்டும் புரிந்தது தென்றலுக்கு என்னவோ தன்மீது தான் கோவம் என்று..

அவனும் யோசித்து யோசித்து பார்த்தான் எந்த  காரணமும் தெரியவில்லை..

“ஹ்ம்ம் இப்படி சைலண்ட்டா இருந்தா தப்பாகிடுமோ…” என்றவன் மனதில் திடீரென்று ஒரு யோசனை..

“நீ என்னை பார்த்து இம்ப்ரெஸ் ஆகுவ சூறாவளி சுந்தரி…” என்று சொல்லிக் கொண்டவன் இனி சும்மா இருக்க போவதில்லை.

மறுநாள் அலுவலகம் வந்தவளுக்கோ உள்ளே நுழையும் போதே ஒரு ஆச்சர்யம் காத்திருந்தது.               

                  

Advertisement