Advertisement

  தென்றல் – 4

தென்றலுக்கு இன்னுமே தான் காண்பதை நம்ப முடியவில்லை… பிரதீபா சாதாரணமாகத் தான் இருந்தாள். கண்கள் இமைக்க மறந்து தான் பார்த்துகொண்டு இருந்தாள் தென்றல்…

அந்தா இந்தா என்று ஒருவழியாய் ப்ரித்வியின் வீட்டிற்கு வந்திருக்க, வந்து பார்த்தவளுக்கோ பேரதிர்ச்சி..

இருக்காதா பின்னே மத்திய அமைச்சர் அருள்மொழியின் வீட்டிற்கல்லவா வந்திருக்கிறாள்.. ப்ரித்வி அழைத்து பேசியதை வைத்து தான் அவனைப் பற்றி பிரதீபாவிடம் விசாரித்தாள். அவளும் தனக்கு தெரிந்ததை சொன்னாள். அதை தவிர அவன் இன்னார் மகன் என்றெல்லாம் அவள் கேட்டிருக்கவில்லை.. ஒருவேளை கவனிக்கவில்லையோ என்னவோ..

“உனக்கு மட்டும் எப்படி இதெல்லாம் தெரியுது…” என்றவளை முறைத்த பிரதீபா,

“நம்ம டிபார்ட்மெண்ட்ல நிறைய பேருக்கு தெரியும்.. நீ எந்த உலகத்துல தான் இருக்கியோ….” என்று சொல்ல,

“ஹ்ம்ம்.. நான் பாரேன் இப்படி பச்சை புள்ளையாவே இருந்திருக்கேன்டி.. யார் இருக்கா யார் படிச்சான்னு கூட தெரியாம…” என்று தென்றல் பாவமாய் முகத்தை வைத்தவள் இன்று ப்ரித்வியின் வீட்டிற்கு வந்து அசந்து தான் போனாள்..

மத்திய அமைச்சர் ஒருவரின் வீட்டில் இத்தனை அமைதியா. அரசியல் பிரமுகர் என்பதற்கான எவ்வித அடையாளமும் இல்லாமல், சாதாரண ஒருவரின் வீட்டிற்கு சென்றால் எப்படியிருக்குமோ அப்படி இருந்தது.. ஆனாலும் தென்றலுக்கு இன்னும் ஆச்சர்யமாய் தான் இருந்தது.. 

அருள்மொழிக்கென்று ஒரு நற்பெயர் இருக்கிறதுதான்.. எளிமையானவர், நேர்மையானவர் பண்பானவர் என்று. பதவியை தேடி அவர் போனதில்லை. அவரை தேடித்தான் பதவி எப்போதுமே வரும்.. அவரது நற்குணங்கள் தான் தொடர்ந்து அவரை நான்குமுறை சட்டமன்ற உறுப்பினராகவும், இரண்டு முறை மத்திய அமைச்சராகவும் அமரச் செய்து இருக்கிறது..    

 “டி பிரதீப்… இதெல்லாம் உனக்கு முன்னாடியே தெரியுமாடி…” என்று அருகில் இருந்தவளின் கையை சுரண்ட,

“ஏன் உனக்கு தெரியாதா..???” என்றாள் பிரதீபா..

“ம்ம்ஹும்…”

“அதுசரி.. நான் சொல்லும் போதெல்லாம் நீ எங்க காதை வச்சிருந்த..” என்று பிரதீபா அவளை கடியும் போதே,

“வெல்கம் ஹோம்…” என்றபடி வந்தான் ப்ரித்வி… 

இருவருமே எழுந்து நிற்க, “ஹே… உட்காருங்க… சாரி ஒரு போன் கால்..” என,

“இட்ஸ் ஓகேண்ணா…” என்று சட்டென்று ஒட்டிவிட்டாள் பிரதீபா..

ஆனால் தென்றலுக்கு அப்படியெல்லாம் சட்டென்று ஒன்றும் பேசிட முடியவில்லை.. அவளது கண்கள் ப்ரித்வியை தான் பார்த்திருந்தது.. ஆலிவ் பச்சை நிற புல் ஆர்ம் டி ஷர்டில் இருந்தவனை காண அவளுக்கு அப்போது தான் கல்லூரியில் இவனை பார்த்திருக்கிறோம் என்ற அடையாளம் தெரிந்தது.

‘சென்ட்ரல் மினிஸ்டர் பையனா…. ஆனா அப்படி எந்த ஒரு சீனுமே இல்லாம இருக்கனே… நிஜமாவே இவன் இப்படித்தானா இல்லை நடிப்பா…’ என்று அவனை ஆராய்ச்சியாய் பார்க்க,

‘பாரு பாரு நல்லா பாரு…’ என்று ப்ரித்வியும் மனதில் எண்ணிக்கொண்டு ப்ரதீபாவிடம் பேசிக்கொண்டு இருந்தான்.. 

என்னவோ தென்றல் இங்கே வந்துவிட்டாளே தவிர, அவனோடு இயல்பாய் பேசும் எண்ணம் இன்னமும் வரவில்லை.. ஒருவேளை கல்லூரியில் அவனை பற்றி தெரிந்திருந்தால் அந்த வகையில் அவளுக்கும் பேசும் எண்ணம் வந்திருக்குமோ என்னவோ.

ஆனால் இப்போது நேரமெல்லாம் தென்றலுக்கு ப்ரித்வியை எடை போடுவதில் தான் போனது..

‘இவனை பார்த்த மாதிரியும் இருக்கு.. பார்க்காத மாதிரியும் இருக்கு.. அப்போ கண்ணாடி போட்ருக்க மாட்டானோ…. ஹ்ம்ம் ஆனா இவன் வாய்ஸ் அடிக்கடி கேட்டிருக்கோம்…’ என்று நினைத்துக்கொண்டு இருக்க,

‘இன்னுமா இவ ஆராய்ச்சி முடியலை…’ என்று ப்ரிதவிக்கு தோன்றியது..  

பத்து நிமிடத்திற்கு மேல் அங்கே தென்றலால் அமைதியாய் இருக்க முடியவில்லை.. அவன் இவளை கவனிக்காது பிரதீபாவிடம் பேசியபடி இருக்கவும், 

‘எனக்கு தானே போன் பண்ணி கூப்பிட்டான்.. இப்போ இவக்கிட்ட பேசிட்டு இருக்கான்…’ என்ற எரிச்சல் வர, உள்ளே வந்ததும் தனக்கு தோன்றிய பிரமிப்பு எல்லாம் இப்போது ப்ரித்வி தன்னை கவனிக்கவில்லை என்ற எரிச்சலில் மறைய,

“அப்போ கிளம்புறேன்….” என்று எழுந்து நின்றாள்..

“ஹே என்னடி…” என்று பிரதீபா எழ,

“தென்றல்…” என்று ப்ரித்வியும் எழ, இருவரையுமே ஒருசேர பார்த்தவள்,

“பின்ன இங்க வந்து நான் சும்மா உட்காரவா.. பிரதீப் நீ பேசிட்டு வா.. நான் கிளம்புறேன்…” என,

‘ஐயோ… ஆரம்பிச்சுட்டா…’ என்று பிரதீபா நினைக்க, ப்ரிதவிக்கு சிரிப்பு வந்தது..

“உட்காருங்க தென்றல்…” என,

“ம்ம்ச் நான் இங்க சும்மா உட்கார்ந்திட்டு போக வரலை…” என்று முகத்தை திருப்ப,

“ஹா ஹா… சரி காம் டவுன்…” என்று ப்ரித்வி கைகளை உயர்த்த, பிரதீபா இருவரையும் வேடிக்கை பார்ப்பது போல் தான் பார்த்தாள்..

“Mr.ப்ரித்வி, நீங்க இன்வைட் பண்ணதுனால தான் வந்தோம்.. இல்லாட்டி வந்திருக்கவே மாட்டோம்…” என்று அப்போதும் தென்றல் அமராமல் நின்றபடியே பேச,

“டி ஏன்டி இப்படி பண்ற…” என்று பிரதீபா அவளை பிடித்து இழுக்க,

“ம்ம்ச் சும்மா விடுடி.. போன் பண்ணி வரச் சொன்னது என்னை.. ஆனா வந்ததுல இருந்து உங்கிட்டவே பேசிட்டு இருந்தா எப்படி.. இதுக்கேன் எனக்கு பேசணும்…” என,

‘ஓ.. மேடம்க்கு அவக்கிட்ட பேசலைன்னு கோவமா… பரவயில்லையே… ’ என்று நினைத்த ப்ரித்வி,

“தென்றல் நீங்க நினைக்கிற மாதிரியெல்லாம் இல்லை.. ஜஸ்ட் நாங்க பொதுவா தான் பேசினோம்.. ப்ளீஸ் உட்காருங்க…” என்று தன்மையாகவே சொல்ல,

“ம்ம்.. அதென்ன பிரதீபா மட்டும் வா போ… நான் மட்டும் ங்க… நான் ஒன்னும் உங்களை விட சின்ன பொண்ணு…” என்று அதற்கும் தென்றல் பொங்க,

‘யப்பா… சூறாவளி சுத்தி அடிக்குதே….’ என்று தான் தோன்றியது ப்ரிதவிக்கு..

“சரி சரி.. நீயும் உட்காரும்மா… ஏன் இவ்வளோ கோவம் வருது உனக்கு..” என்றவன் இண்டர்காமில் ஒருவரை அழைத்து மூன்று பழச்சாறுகள் கொண்டு வர சொன்னான்..

‘எதையுமே தட்டிக்கேட்டா தான் இந்த காலத்துல எல்லாம் சரி வரும்போல…’ என்று தனக்கு தானே நியாயம் சொல்லிக்கொண்டவள்,

“ம்ம்.. நான் தேவையில்லாம எல்லாம் கோவப்படமாட்டேன்…” என்றபடி பொத்தென்று அமர, பிரதீபா பரிதபமாய் ப்ரித்வியை பார்த்தாள்..

ப்ரித்விக்கு உள்ளுக்குள்ளே ஆனந்தமாய் தான் இருந்தது.. முதலில் வருவாளா என்று நினைத்தான், வந்த பிறகோ எப்படி பழகுவாளோ என்று நினைத்தான், ஆனால் அவளோ தன் குணத்தில் இருந்து சிறிதும் மாறது அப்படியே பேச, அவனுக்கு கொஞ்சம் சந்தோசம் கூடுதலாகவே இருந்தது..

அடுத்த ஐந்து நிமிடத்தில், ஒருவர் வந்து பழச்சாறு கொடுக்க, “எடுத்துக்கோங்க…” என்று ப்ரித்வி தான் அதனை வாங்கி இருவருக்கும் கொடுத்தான்..

‘ம்ம் ரொம்பத்தான் பவ்யம்… எல்லாம் நடிப்பு போலவே இருக்கு…’ என்றபடி தான் தென்றல் பழச்சாறை விழுங்கினாள்..

என்னவோ வந்ததில் இருந்தே அவளுக்கு ப்ரித்வி நடிப்பதாகவே தான் தோன்றியது.. இத்தனை வசதி, பின்புலம், ஆளுமை எல்லாம் இருக்கும் ஒருவன் எப்படி இத்தனை தன்மையாய் பேசிட பழகிட முடியும்.. அதுவும் கல்லூரியில் இருக்குமிடம் கூட தெரியாமல் எப்படி ஒருவன் இருக்க முடியும்..

‘சோ எல்லாமே நடிப்பு…’ என்று அவனை நினைக்க,

‘இவ பார்க்கிறதே சரியில்லையே… என்ன நினைக்கிறாளோ…’ என்று நினைத்தான் ப்ரித்வி..

“ஆபிஸ் எங்கிருக்கு…” என்று தென்றல் கறாராகவே கேட்க,

“இங்க தான்.. ஜஸ்ட் ஒரு பைவ் மின் வாக்…” என,

“ஓ.. அப்போ போகலாம் தானே…” என்று அதற்கும் தென்றல் எழ,

‘இவக்கூட நம்ம வந்தே இருக்க கூடாதோ…’ என்றுதான் பிரதீபா நினைத்தாள்..

“யா போகலாம்… பட் டூ மினிட்ஸ்.. அம்மா உள்ள ஒரு மீட்டிங்ல இருக்காங்க.. வரவும் பார்த்திட்டு போகலாம்…” என,

‘என்னது உள்ளதான் இவன் அம்மா இருக்காங்களா.. ஐயோ அது தெரியாம ரொம்ப சவுன்ட் விட்டேனே…’ என்று தென்றல் கைகளை பிசைய, சரியாய் அப்போது தான் வெளியே சென்றிருந்த மாதுரியும் சுகேஷும் உள்ளே வந்தனர்..

“ஹே… ஹாய்… எப்போ வந்தீங்க…” என்று மாதுரி இயல்பாய் கேட்டபடி அவர்களை நோக்கி வர, சுகேஷும் இருவரையும் வரவேற்கும் விதமாய் புன்னகை சிந்தி வர,

‘இது யாரு புது கேரக்டர்ஸ்…’ என்று பார்த்தாள் தென்றல்..

“என் அக்கா மாதுரி.. என் மாமா சுகேஷ்…” என்று முறைப்படி ப்ரித்வி அவர்களை அறிமுகம் செய்ய,

“நீ தென்றல்… நீ பிரதீபா…” என்று மாதுரி இருவரையும் சரியாய் சொல்லிட,

‘எப்படி…??!!!’ என்பது போல் இருவரும் பார்க்க,

“எல்லாம் ஒரு யூகம் தான்… ப்ரித்வி சொன்னதை வச்சு தென்றல் நீதான்னு கண்டுபிடிச்சேன்.. தென் கூட பிரதீபாவும் வருவான்னு சொல்லிருந்தானா.. சோ அது நீ தான்னு கண்டுபிடிச்சேன்…” என்று மாதுரி இலகுவாய் பேச,

‘என்னை பத்தி என்ன சொன்னான்…’ என்று அடுத்த ஆராய்ச்சிக்கு போனாள் தென்றல்..

சுகேஷும் இரண்டொரு வார்த்தைகள் பேசிவிட்டு சென்றுவிட, மாதுரி தான் இருவரிடமும் பேசியபடி இருந்தாள்..

‘வந்து ரொம்ப நேரமாச்சா…??’

‘குடிக்க எதுவும் கொடுத்தியா..??’

‘அம்மா எங்கடா…??’ என்று மாதுரி கேள்வியாய் கேட்க,

“உள்ள ஒரு மீட்டிங் க்கா.. அதான் வெய்ட் பண்ணிட்டு இருக்கோம்…” என்ற ப்ரித்வியை பார்த்து தென்றலுக்கு ஆச்சர்யமாய் தான் இருந்தது..

‘அக்காவா.. இவனென்ன ரொம்ப மரியாதையா இருக்கான்.. நான்லா ஒருநாளாவது என் அக்காவ அக்கான்னு சொல்லிருப்பேனா..’ என்று ப்ரித்வியை பற்றிய அடுத்த ஆராய்ச்சிக்கு போவதற்குள் அருள்மொழி வந்துவிட, அடுத்த அதிர்ச்சி அவளுக்கு காத்திருந்தது..

சாதாரண பருத்தி சல்வாரில், பாந்தமாய் ஒரு புன்னகையோடு வந்தவரை பார்த்து தானாகவே தென்றலும் பிரதீபாவும் எழுந்து நின்றாலும், கண்கள் இமைக்கத் தான் மறந்து போனது தென்றலுக்கு..

“ரொம்ப நேரம் வெய்ட் பண்ண வச்சிட்டேனா…” என்றபடி அமர்ந்தவரை பார்த்து பிரதீபா ஆச்சர்யம் போகாமல் இல்லையென்று தலையசைக்க, தென்றலோ அப்படியே பார்த்து நின்றிருந்தாள்..

‘இவ நம்மளைதான் இப்படி பாக்குறான்னு நினைச்சா அம்மாவையும் இப்படி பாக்குறா…’ என்றெண்ணிய ப்ரித்வி,

“மாம்.. ஷி இஸ் தென்றல்.. அண்ட் ஷி பிரதீபா…” என்று அறிமுகம் செய்ய, இருவருக்கும் பொதுவாய் புன்னகை செய்தவர்,

“உட்காருங்கம்மா ஏன் நின்னுட்டே இருக்கீங்க.. பீ கூல்…” என்று சொல்லி ஒரு புன்னகைச் சிந்த, அந்த புன்னகையின் சாயல் அப்படியே ப்ரித்வியிடம் இருப்பது புரிந்தது தென்றலுக்கு..

அருள்மொழி பிரதீபாவிடம் இரண்டொரு வார்த்தை பேசியவர், தென்றலிடம் திரும்பி, “அப்புறம்மா வீட்ல அப்பா அம்மா எல்லாம் சௌக்கியமா…” என அவளுக்கு இன்னும் ஆச்சர்யம்..

‘டேய் கொஞ்சம் தெளிய விட்டு அடிங்களேன்டா…’ என்று அவள் மனம் கூப்பாடு போட,

“உங்க அப்பாவ எனக்கு நல்லா தெரியும்.. தென்றல் பார்னிச்சர்ஸ்னா எவ்வளோ பேமஸ்.. ரொம்ப வருசமா இருக்கே… இந்த வீடு கட்டும் போது கூட அங்கே தான் எல்லாம் வாங்கினோம்..” என,

“மாம் உங்களுக்கு முன்னாடியே தெரியுமா…” என்று ப்ரித்வி கேட்க,

“அம்மா நேத்து ப்ரித்வி சொல்லும் போது கூட சைலண்டா தானே இருந்தீங்க..” என்று மாதுரியும் கேட்க,

“பின்ன வீட்டுக்கு ஒருத்தர் வர்றாங்கன்னா அவங்களை பத்தி தெரிஞ்சுக்க வேணாமா…” என்று அருள்மொழி இலகுவாய் சொல்ல, தென்றலுக்கு தான் என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் அவர் கேட்பதற்கு எல்லாம் தலையை உருட்டினாள்..

“ஏன் இவ்வளோ தயக்கம்.. நார்மலா உங்க காலேஜ் மேட் வீட்டுக்கு போனா எப்படி இருப்பீங்களோ அப்படி இருங்க பிள்ளைகளா.. இந்த வீட்ல நான் இவங்களுக்கு அம்மா.. அதுபடி தான் வர்றவங்கக் கிட்ட நடப்பேன்..” என,

“சரிங்க மேம்…” என்ற தென்றலை பார்த்து,

“ஹா ஹா மேம்மா…. ஆன்ட்டின்னு கூட சொல்லுங்களேன்… ப்ரித்வி பிரண்ட்ஸ் எல்லாம் அப்படித்தான் சொல்வாங்க…” என்று சொன்னவரை நம்ப முடியாமல் தான் பார்த்தாள்..

அடுத்து கொஞ்ச நேரம் அப்படியே பேச்சுக்கள் அது இதென்று செல்ல,

“ஓகே கைஸ்.. யு கேரி ஆன்.. அடுத்து நேரம் கிடைக்கும் போது பார்ப்போம்…” என்று அருள்மொழி கிளம்பிட, அடுத்த சிறிது நேரத்தில்

“ஆபிஸ் போலாமா…” என்று ப்ரித்வி அழைக்க,

“லஞ்ச் ப்ரிபேர் பண்றேன் வந்து சாப்பிட்டிட்டு தான் போகணும்…” என்று மாதுரி சொல்ல,

“இல்லக்கா அது…” என்று தயங்கிய இருவரையும் பார்த்து,

“நோ நோ வீட்டுக்கு முதன் முதலா வந்திருக்கீங்க.. சாப்பிட வைக்காம அனுப்பக்கூடாது.. அப்புறம் அம்மா வந்து கேட்டு திட்டுவாங்க..” என்றிட, வேறு வழியில்லாமல் அதற்கும் தலையாட்டி கிளம்ப வேண்டியாதாக இருந்தது..

‘என்னடா இது இவங்க வீட்ல இருந்த கொஞ்ச நேரமும் தலையாட்டி பொம்மையாவே ஆகிட்டோமே…’ என்று கழுத்தை இப்படி அப்படி திருப்பிப் பார்த்துக்கொள்ள,

“டி தென்றல் என்னடி பண்ணிட்டு வர…” என்று பிரதீபா இழுக்க,

“உனக்கு ஷாக்கா இல்லையாடி…” என்றாள் தென்றல்..

“என்ன ஷாக்..??”

“இங்க நடந்த எல்லாமே ஷாக் தானேடி..”

“அது நீயா நினைச்சுக்கிட்ட.. இயல்பா எடுத்து பாரேன்.. எதுவுமே ஷாக் இல்லை..”

இவர்கள் பேசியது எல்லாம் ப்ரித்விக்கு கேட்டது தான்.. ஆனாலும் அவன் ஒன்றும் பேசாமல் நடக்க, அடுத்து சில நொடிகளில் அவனது அலுவலகம் வந்துவிட்டது..

“இதென்னடி வீடு மாதிரி இருக்கு…” என்று யோசித்தபடி தென்றல் பிரதீபாவை காண, அவளோ, “வாய மூடிட்டு உள்ள வா…” என்று முறைத்தாள்..

“கைஸ்.. வெல்கம் திஸ் யங் லேடிஸ்..” என்று வரவேற்பில் நின்று ப்ரித்வி சொல்லவும், அங்கங்கே இஷ்டம் போல் மடிக்கணினி வைத்து வேலை செய்து கொண்டிருந்தவர்கள் எல்லாம் திரும்பி பார்த்து,

“ஹே வெல்கம்….” என்று கத்த,

அங்கே இருந்தவர்களில் பாதிபேர் இவர்களின் கல்லூரி மாணவர்கள்.. கொஞ்சம் பேர் புதியவர்களாய் இருக்க, தென்றலும் பிரதீபாவும் பொதுவாய் அனைவருக்கும் புன்னகைத்தனர்..

“இவ்வளோ சீக்கிரம் வருவீங்கன்னு எக்ஸ்பெக்ட் பண்ணலை…” என்றபடி நீட்டா முன்னே வர,

‘ஓ இவளும் இங்க தானா…???’ என்றபடி பார்த்தாள் தென்றல்..

அவர்களின் கல்லூரி மாணவர்கள், அவர்கள் துறை மாணவர்கள் என்று அனைவரும் வந்து இவர்களோடு பேச, சற்று நேரம் அங்கே நின்றிருந்த ப்ரித்வி,

“நீட்டா.. சுத்தி காட்டுங்க…” என்றுவிட்டு இவர்களை பார்த்து தலையசைத்துவிட்டு சென்றுவிட்டான்..

நீட்டா ஒவ்வொரு இடமாய் காட்ட, அதை அலுவலகம் என்று யாருமே சொல்லிட மாட்டார்கள், நீச்சல் குளத்தில் இருவர் நீந்தியபடி இருக்க, ஜிம்மில் ஒருசிலர் இருந்தனர்..

“ஆபிஸ் போலவே இல்லை…” என்று தென்றல் சொல்ல,

“எஸ் கண்டிப்பா.. எங்க யாருக்குமே வேலைக்கு வர்றோம்னு இருக்காது.. ஜஸ்ட் இன்னொரு வீட்டுக்கு போறது போலத்தான் இருக்கும்.. அன்ட் ப்ரித்வி சீனியர் எப்பவுமே பாஸ் அப்படிங்கிற இமேஜ் காட்டினதே  இல்லை…” என்று நீட்டா சொல்ல,

“இப்போதான் ஸ்டார்ட் பண்ணாங்களா…” என்று பிரதீபா கேட்க,

“நோ நோ… சீனியர்  MBA பைனல் இயர்ல இருக்கும் போதே சின்னதா ஸ்டார்ட் பண்ணது.. இப்போ கொஞ்சம் டெவலப் ஆகிருக்கு.. எப்பவுமே நம்ம காலேஜ் ஸ்டூடன்ஸ்க்கு பார்ஸ்ட் ப்ரிபெரன்ஸ்…” என,

“ஓ…!!! ஏன் அப்படி.. எல்லாருக்கும் தானே வாய்ப்பு கொடுக்கணும்…” என்றாள் தென்றல்..

“கண்டிப்பா திறமை இருக்கிறவங்க யாருக்குமே இங்க வாய்ப்பு உண்டு.. தென் இதுபோல ஹோம்லி அட்மாஸ்பியர்ல வொர்க் பண்ண யாருக்கு தான் பிடிக்காது.. ஆனா என்னவோ சீனியர்க்கு நம்ம காலேஜ் பசங்களை ரெக்ரூட் பண்ண பிடிக்கும்.. நம்ம படிச்சு வளர்ந்திட்டோம், நமக்கு அடுத்து இருக்கவங்களையும் வளர்துவிடனுமே அப்படின்னு சொல்வார்…” என்று நீட்டா ப்ரித்வி புகழ் பாட,

“கிரேட்…” என்றாள் பிரதீபா..

‘ம்ம் என்ன கிரேட்டோ… எல்லாமே நடிப்பா தான் தெரியுது.. அநியாயத்துக்கு ஒருத்தன் இவ்வளோ நல்லவனா இருக்க முடியுமா… ஆனா குடும்பமே அப்படிதானே இருக்கு..’ என்று வழக்கம் போல் தன் எண்ணத்தில் மூழ்கினாள் தென்றல்.

கண்ணால் காண்பது போய், காதால் கேட்பதும் போய் தீர விசாரிப்பதே மெய் என்று அவளுக்கு அந்நேரம் தோன்ற, கண்ணெதிரே இருக்கும் எதையும் நம்பிடவும் இல்லை, காதால் கேட்பதையும் நம்ப தயாராய் இல்லை.. என்னவோ அவள் மனம் இதெல்லாம் நடிப்பு… பொய் என்று தோன்ற, அடுத்து கணம் குடும்பமே ஒன்றுபோல் இருக்குமா என்று யோசித்தது..

மேல் தட்டு வர்கத்தினர் இப்படித்தான் இருப்பர் என்று படங்களிலும், தொலைகாட்சியிலும் ஒரு சில உருவகங்களை மக்களிடம் பதித்துவிட, அப்படிதான் இருப்பார்கள் போல என்று நினைத்திருப்பவர்கள் அதற்கு நேர்மாறாய் நடப்பது எதையும் அத்தனை சீக்கிரம் ஏற்றுகொள்ள தயாராய் இல்லை..  

சற்று நேரம் சுற்றி பார்த்துவிட்டு, ஒருசிலரோடு பேசிவிட்டு வர, கார்டனில் இருந்த இருக்கையில் ப்ரித்வி இருப்பதை கண்டு அங்கே வந்தனர்..

“எப்படி இருக்கு ஆபிஸ்…” என,

“ரொம்ப பிடிச்சு இருக்குண்ணா…” என்று பிரதீபா உடனே தன் சம்மதத்தை சொல்லிவிட, தென்றலோ அமைதியாய் இருந்தாள்..

“தென்றல்…” என்றழைக்க,

“ஹா… என்ன..??” என,

“உன் ஒப்பினியன் சொல்லலை…” என்று ப்ரித்வி அவளை ஆராய்ச்சியாய் பார்க்க,

“இது உங்க ஆபிஸ் என் ஒப்பினியன் சொல்லி என்ன ஆகப் போகுது.. பை த வே வித்தியாசமா இருக்கு அவ்வளோதான்.. நிறைய பேர் தெரிஞ்சவங்களா இருக்காங்க.. தட்ஸ் இட்…” என்று தோளை குலுக்க,

“சோ இங்க ஜாயின் பண்ண உங்களுக்கு கம்பர்ட்டா இருக்கும் தானே…” என்று தன் ஆவலை மறைத்துக் கேட்க,

“யோசிச்சு சொல்றேன்…” என்றவள் அடுத்து மாதுரி கட்டாயப் படுத்தி சாப்பிட அழைக்க, உண்டுவிட்டு விட்டால் போதும் என்று கிளம்பிவிட்டனர்..

காரில் வரும்போதோ, “ஏன்டி இப்படி பிஹேவ் பண்ற..??” என்ற பிரதீபாவிடம்,

“ஏன் நான் என்ன பண்ணேன்..” என்று எரிந்து விழுந்தாள் தென்றல்.

“என்ன பண்ணலை.. யாருக்கிட்டயும் சரியா பேசலை.. அவங்க எல்லாம் இவ்வளோ ஈசியா பழகினாங்க.. நீதான் என்னவோ உர்ருன்னு இருந்த…”

“ம்ம்ச் கொஞ்சம் நிறுத்துறியா… எனக்கென்னவோ எல்லாமே நடிப்பு போல இருக்கு.. எல்லாமே பொய்..” என்றவளை புரியாமல் பார்த்தாள் பிரதீபா..

     

         

 

Advertisement