Advertisement

தென்றல் – 3

ப்ரித்வி இறுதியாண்டில் இருக்க, கல்லூரியில் வழக்கமாக நடக்கும் சீனியர்களுக்கான வழியனுப்பு விழா நடந்தது.. ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என்று கலைகட்ட, பிரிந்து போகிறோம் என்ற வலியும் வருத்தமும்  இல்லாமலும் இல்லை..

தென்றலும், மூன்றாமாண்டு மாணவன் ஒருவனும் விழாவை தொகுத்து வழங்க, நான்காம் ஆண்டு மாணவர்கள் ஒவ்வொருவராய் மேடையேறி பேசிக்கொண்டு இருந்தனர்.. ப்ரித்வியும் தன் முறைக்காக காத்திருந்தான்.

சேலையில் அழகாய், பாந்தமாய் தனக்கு கொடுக்கபட்ட வேலையை எவ்வித பந்தா பாசாங்கு எல்லாம் இல்லாமல், அவளது இயல்பு போல தென்றல் மைக் பிடித்து பேசுவதும், சமயத்திற்கு ஏற்றபடி சமயோசிதமாய் பேசுவதும் கூட ப்ரிதவிக்கு அந்த நேரத்தில் மனதில் பதியாமல் இல்லை..

‘விளையாட்டு பொண்ணா இருந்தாலும் அப்படியில்ல போல..’ என்று நினைக்க, தன் பெயரை அவள் உச்சரித்து மேடைக்கு அழைக்கும் அந்த நொடிக்காக காத்திருந்தான்.

ஆனால் ப்ரித்வியின் நேரமோ என்னவோ, இவனது முறைக்கு முன்னேயே தென்றல் கீழிறங்கிவிட, இப்போது வேறொரு மாணவி தொகுத்து வழங்க ஆரம்பிக்க, தென்றல் வேறு வேலையாக அரங்கின் பின்புறம் சென்றுவிட்டாள்..

‘ச்சே…’ என்று முகத்தை சுளித்தவன், தன் பெயர் அழைக்கப்படவும் வேண்டா வெறுப்பாக போய் வழமையான நன்றிகளும் சிலபல சாரிகளும் சொல்லி பேசிவிட்டு வந்தான்… ஏனோ அந்த நொடி அவள் இறங்கி போனது என்னவோ  அவனை விட்டே போனது போன்றதொரு உணர்வு..

‘பேசாம போய் பேசிடுவோமா…??’ என்று கூட தோன்ற,

“என்ன பேச போற..??” என்று அவன் மனம் கேட்ட கேள்விக்கு அவனிடம் பதில் இல்லை..

‘என்ன பேச…?? என்ன பேசணும்…’ என்று அவனே யோசிக்க,

“ஏன் உன்னோட லவ்வ சொல்லேன்…” என்று பதிலுக்கு அவன் மனம் எடுத்துக்கொடுக்க,

‘லவ்வா…’ என்று அதிர்ந்து தான் போனான்..

காதல் என்ற கோணத்தில் எல்லாம் அவன் இன்றளவும் சிந்திக்கவில்லை.. அவளது பேச்சு, சிரிப்பு, அவள் செய்யும் கலாட்டாக்கள் எல்லாம் பார்க்க பிடிக்கும். அவளை ரசிக்க பிடிக்கும். அவனை பொறுத்தவரை தென்றலை பார்ப்பது என்பது அவனை அவனே உற்சாகப்படுத்திக்கொள்ளும் நேரம். ஆனால் அதனை தாண்டியதொரு பார்வையை அவள் மீது செலுத்தியது இல்லை..

இன்றோ அவன் மனமே அவளிடம் உனக்கு காதல் என்று சொல்ல, முதலில் இதெல்லாம் நிஜம் தானா என்று தான் தோன்றியது..  

“நிஜம் தான்… நிஜம் தான்…” என்று அவன் மனம் அடித்துக் கூற, இத்தனை நேரம் போய் பேசலாமா என்று தோன்றிய எண்ணம் அப்படியே பின்னடைந்து, மனதினுள் ஓர் தயக்கம்..

அவனாக தலையை ஆட்டிக்கொண்டு யோசனையில் இருக்க, “டேய் ப்ரித்வி… டேய்.. என்ன இப்படி நீயா தலையை உருட்டிட்டு இருக்க….” என்றபடி தீபக் வந்தான்.

“இல்லடா… எல்லாம் ஒண்ணாவே இருந்துட்டோமா.. திடீர்னு இப்படி போறது…”

“டேய் டேய்.. ரொம்ப நெஞ்ச நக்காத… நீ இப்படி எல்லாம் பீல் பண்ண மாட்டன்னு எனக்கு தெரியும்.. உண்மையச் சொல்லு…”

“நம்புடா…” என்று ப்ரித்வி சொல்ல,

“டேய் மத்தவங்கவேணா நீ சொல்றத அப்படியே நம்பலாம்.. ஆனா எனக்கு உன்னை பத்தி தெரியாதா.. நானும் கொஞ்ச நாளா பார்த்திட்டு தான் இருக்கேன்.. நீ அந்த தென்றல் பொண்ண சைட் அடிக்கிறத..” என்று சற்றே சத்தமாக பேச,

“டேய் ஏன்டா கத்துற.. மெல்ல பேசு…” என்று அவனை அடக்கியவன்,

“ம்ம் ஆமா பாக்குறேன்.. ஆனா அது என்னன்னு இப்போ வரைக்கும் சொல்ல தெரியலைடா…” என,

“ஷ்…. சத்தியமா நீ இவ்வாளோ நல்லவனா இருக்கக் கூடாதுடா… பிடிச்சா போய் பேசு.. இல்லையா பேசாம இரு.. அதைவிட்டு இப்படி தலையை உருட்டுனா என்ன அர்த்தம்…” என்று தீபக் கடிய,

“ஹ்ம்ம் பேசணும் தோணுது ஆனா என்ன பேச…” என்றவனை பார்த்து கோவம் தான் வந்தது அவனுக்கு..

“லவ் பண்றியா..???”

“அப்படிதான் நினைக்கிறேன்…”

“நினைக்கிறியா… நல்லா போச்சு…”

“நல்லா போகணும்னு தான்டா தோணுது…”

“அடேய்… நீயெல்லாம்.. இத்தனை நாள் விட்டிட்டு இன்னிக்கு வந்து வையலின் வாசிக்கிற.. சரி வா போய் பேசலாம்…” என்று தீபக் எழ,

“ஏய் ஏய் இருடா.. இப்போ வேணாம்…” என்று அவனை மீண்டும் அமர வைத்தான்..

“ஏன் ஏன் வேணாம்.. அப்போ எப்போ பேச போற.. மச்சி லவ் எல்லாம் பீல் பண்ண உடனே சொல்லிடனும்.. இல்லாட்டினா அல்சர் வந்த மாதிரி ஆகிடும்.. சாப்பிட்டாலும் பிரச்சனை, சாப்பிடலைன்னாலும் பிரச்சனை.. அதுபோல தான் இதுவும்…” என,

“ஹா ஹா பீல் தானே… அது நிறைய இருக்கு.. ஆனா என்னன்னு சொல்லி அறிமுகம் செஞ்சுக்கிறது… ஜஸ்ட் உன்னோட சீனியர் ப்ரித்வி அப்படின்னு மட்டும் சொல்லிக்க முடியுமா..??” என்று தயங்க, தீபக்கோ அவனை ஆச்சர்யமாய் பார்த்தான்..

“ஏன்டா நீ யார் என்னன்னு முழுசா சொல்ல வேண்டியது தானே.. இதைவிட வேறென்ன வேணும்…”

“நீ சொல்றது சரிதான் மச்சி.. ஆனா அது எதுவுமே என்னோட அடையாளம் இல்லையே..”

“இப்போ என்னதான்டா நீ செய்யணும் சொல்ற.. தென்றலை லவ் பண்ணா அவக்கிட்ட சொல்ல வேண்டியது தானே.. நம்ம இன்னும் ரெண்டு நாள் தான் காலேஜ் வருவோம்…” என்று தீபக் சொல்லவும்,

“ம்ம்…” என்று கண்களை மூடி சிறிது நேரம் ப்ரித்வி யோசித்தான்..

எப்போதுமே அவன் இப்படித்தான்.. ஏதாவதொரு முடிவிற்கு வரவேண்டும் என்றால் சிறிது நேரம் கண்களை மூடி யோசிப்பான்.. மனதை சடுதியில் ஒருநிலைப் படுத்தி அவன் சிந்திக்கும் அந்த நொடி எப்போதுமே அவனுக்கு சரியான வழியை தான் காட்டியதுண்டு.. அதுபோலவே இப்போதும் செய்ய,

கண்களை மூடினால் தென்றலின் முகம் தான் வந்து சிரித்தது… தென்றல்… அவன் உதடுகள் உச்சரிக்கும் முன்னே அவன் மனம் உச்சரித்து ஆர்ப்பரிக்க, அவ்வளவு தான் அதற்குமேல் ப்ரித்வி யோசிக்க விரும்பவில்லை… கண்களை திறந்தவன்,  

“எஸ்.. ஐம் இன் லவ்.. ஆனா இப்போ சொல்ல மாட்டேன்.. நான் கொஞ்சம் ஸ்டேபிள் ஆகணும்டா.. சோ கொஞ்ச நாள் போகட்டும்..” என்று ப்ரித்வி தீர்க்கமாய் சொன்னான்..

“கொஞ்ச நாள்னா எத்தனை நாள்…???”

“ஹ்ம்ம் அது தெரியாது.. தென்றலை பார்க்காம பேசாம இருக்க முடியாதுன்னு, அவ இல்லாம நான் இல்லைன்னு ஒரு ஆட்டம் என் மனசுல வரட்டும்.. அதுக்குள்ளே அவளும் படிச்சு முடிக்கட்டும், நானும் ஒரு நிலைக்கு வந்திடுவேன்…” என,

அவன் சொல்வது எல்லாம் நடக்குமா நடக்காதா என்று இருந்தாலும், என்னவோ ப்ரித்வி சொல்லியது கண்டு கடுப்பாக இருந்தாலும் கொஞ்சம் அவனைக் கண்டு பெருமையாகவும் இருந்தது தீபக்கிற்கு..    

“அதெல்லாம் சரிடா.. ஆனா…”

“நோ இழுவை.. பேசாம வா…” என்று தீபக்கை இழுத்துச் சென்றுவிட்டான் ப்ரித்வி..

அதன் பிறகு வாழ்கை அவரவருக்கு என்ன வைத்திருக்கிறதோ அதன்படி செல்ல, தென்றல் இறுதியாண்டில் கால் வைத்துவிட, ப்ரித்வி MBA முடித்து சொந்தமாக சிறு மென்பொறியியல் நிறுவனம் ஒன்றையும் தொடங்கிவிட்டான்..

அவன் நினைத்திருந்தால் மிக பெரியதாகவே ஒரு தொழில் தொடங்கி இருக்க முடியும்.. ஆனால் எடுத்த உடனே உச்சாணிக் கொம்பில் அமர அவனுக்கு விருப்பமில்லை..

ஆக அவனுக்கு எப்படித் தோன்றியதோ அது போலவே ஆரம்பித்து இதோ ஓரளவு நல்லபடியாய் வெற்றிகரமாகவே நடந்திக்கொண்டும் இருக்கிறான்.. அவன் நினைத்தபடி தொழிலை அமைத்தாகி விட்டது. அடுத்து வாழ்வு தானே..

“என்ன ப்ரித்வி… லைப் பத்தி என்ன திங்க் பண்ணிருக்க…” என்று அவன் அம்மா கேட்டதும், சட்டென்று மனதில் வந்தது தென்றலின் முகம்..

“நான் கொஞ்ச நாள்ல சொல்றேன் ம்மா..” என்றவன் தான் அதன்பின்னே சும்மா இருக்கக்கூடாது என்று எப்படியோ அவளது அலைபேசி எண்ணை கண்டறிந்து பேச நினைத்திருக்க, சரியாய் அந்த நேரத்தில் தான் அவன் ஜூனியர் நீட்டா தென்றலை பற்றிக் கூறியது..

“ப்ரித்வி உனக்கு நேரம் நல்லா இருக்கு போலடா…” என்று அவனுக்கு அவனே சொல்லியவன் அடுத்து தென்றலிடம் பேச யோசிக்கவேயில்லை.. 

ஆனால் இப்போதோ அவள் என்ன முடிவு சொல்வாள் என்று அவளை பற்றியே யோசித்துக்கொண்டு இருக்கிறான்..

“ப்ரித்வி உன் காதல் தேவதை என்ன சொன்னா..??” என்றபடி வந்த மாதுரியை கண்டவன்,

“ஹ்ம்ம் உங்களுக்கு எல்லாம் கிண்டலா இருக்குபோல…” என,

“கிண்டல் பண்ணாம.. வேறென்னடா பண்ண சொல்ற.. காலேஜ்ல இருக்கும் போதே ப்ரொபோஸ் பண்ணிருந்தா இந்நேரம் அம்மா கல்யாணமே பண்ணி வச்சிருப்பாங்க..” என்ற மாதுரியை முறைத்தவன்,

“எதை வச்சு அப்படி சொல்றக்கா.. நம்ம பக்கம் மட்டுமே நம்ம பார்க்க கூடாது.. நமக்கு எல்லாம் இருக்கு அதுனால பெரிய ஆளுங்க அப்படின்னு நினைச்சு எல்லாம் சட்டுன்னு நடந்திடும்னு நினைக்கிறது சரியா… அவங்க பக்கத்தையும் பார்க்கனும்..

நான் லவ் பண்ணிட்டா மட்டும் போதுமா.. அவளுக்கு என்னை பிடிக்கவேணாமா??” என்று கேள்வி எழுப்பினான்..

“ஏன்டா.. உனக்கென்ன குறை.. உன்னை போய் யாராவது பிடிக்கலை சொல்ல முடியுமா..???”

“ஹ்ம்ம் இதுதான் க்கா தப்பு.. என்னை எல்லாருக்கும் பிடிக்கணும்னு நினைக்கிறதும் தப்பு.. பிடிக்கும்னு நினைச்சுக்கிறதும் தப்பு…”

“ஷப்பா… சாமி… எனக்கு உன்னை போல எல்லாம் யோசிக்க முடியாது.. சரி நீ இவ்வளோ யோசனையா நடக்குறியே அப்படின்னு தான் நான் சொன்னேன்.. மத்தபடி இது முழுக்க முழுக்க உன்னோட விருப்பம்..” என்றவள்,

“நான் ஒன்னு கேட்கவா..???” என்றாள்

“ம்ம் நீ என்ன கேட்க வர்றன்னு எனக்கும் தெரியும்.. சப்போஸ் தென்றலுக்கு என்னை பிடிக்கலைனா என்ன செய்றதுன்னு தானே…” என, மாதுரி தயக்கமாய் ஆமாம் என்று தலையாட்டினாள்.

“நான் லவ் பண்றதுனாலயே என்னை தென்றலுக்கு பிடிக்கணும்னு அவசியம் இல்லைக்கா.. ஆனா என்னாலான எல்லா முயற்சியும் பண்ணுவேன்.. அதுக்கும் மேல அவளுக்கு என்னை லைப் பார்ட்னரா செலெக்ட் பண்ற அளவுக்கு பிடிக்கலேன்னா கண்டிப்பா நான் அவளை போர்ஸ் பண்ண போறதில்ல…” என்று ப்ரித்வி சொன்னாலும், அவன் முகத்தில் இப்படியெல்லாம் நடந்திட கூடாதே என்ற கலக்கமும் இருந்தது..

அவனுக்கு எடுத்தோம் கவிழ்த்தோம் என்று எதையும் செய்யும் பழக்கமில்லை.. திட்டமிட்டே அனைத்தையும் செய்வான்.. வெற்றியும் காண்பான்.. அனால் தென்றலை இன்றளவும் இவள் இப்படித்தான் என்று அவனால் கணிக்க முடியவில்லை.. 

பார்த்தான்.. ரசித்தான்… பிடித்திருந்தது.. பின் காதலாகியது..

இதனை தாண்டி அவனுக்கு அவளை பற்றி முழுதாய் தெரியுமா என்றெல்லாம் தெரியாது.. அவளை தெரிந்துகொள்ள வேண்டும் என்று தான் இப்போது இப்படி ஒரு ஏற்பாடு இவன் செய்திருப்பதே..

“ஹ்ம்ம் சரிடா… நீ எதுவும் நினைக்காத.. என் தம்பி மனசுக்கு எல்லாமே அவன் நினைச்சது நடக்கும்..” என்று மாதுரி வாழ்த்திச் செல்ல, அடுத்து அவனது அலைபேசி ஒலிக்கவும் சரியாய் இருந்தது..

‘சூறாவளி சுந்தரி….’ அவள் பெயர் திரையில் மிளிர, அடுத்த நொடி அவனது உதட்டில் புன்னகை மிளிர்ந்தது..

“ப்ரித்வி ஹியர்….” என்ற அவனது தொனிக்கும், முகத்தில் தெறிக்கும் உணர்வுகளுக்கும் சம்பந்தமே இல்லை..

“நடிக்கன்டா நீ…” என்று மாதுரி அப்பக்கம் இருந்து சைகை செய்ய,

‘போ அங்குட்டு…’ என்று இவன் சைகையில் கடிந்தவன், “ஸ் டெல் மீ…” என்று பேச்சை ஆரம்பித்தான்..

“நான் தென்றல் பேசுறேன்…”

‘தெரியுது சொல்லு பேபி…’

“யா டெல் மீ…”

“ஹ்ம்ம் நீங்க சொன்னீங்க இல்லையா… நான் நேர்ல வந்து பார்த்திட்டு தென் டிசைட் பண்ணட்டுமா…??”

‘இதை இதை இதைத்தானே எதிர்பார்த்தேன்..’

“யா சியூர்… அப்போதான் உங்களுக்கும் ஒரு ஐடியா கிடைக்கும்…”

“எஸ்.. அப்போ நான் எப்போ வரட்டும்…???”

‘நீ இப்போ வந்தா கூட ஓகே தான் சொப்பன இல்ல இல்ல சூறாவளி சுந்தரி…’

“உங்களுக்கு எப்போ ப்ரீயோ அப்போ வாங்க.. அர்ஜென்ட் இல்லை..” 

“தேங்க்ஸ்… நான் திஸ் வீக்கென்ட் வீட்டுக்கு போறேன்.. இப் யு டோன்ட் மைன்ட் உங்க அட்ரெஸ் மட்டும் டெக்ஸ்ட் பண்றீங்களா…”

‘என் மைன்டே நீ தானே…’ 

“யா கண்டிப்பா… தென் உங்க கூட யார் வர்றா.. ஐ மீன் பிரதீபாக்கிட்ட பேசினேன்… அவங்களும் வில்லிங்கா இருந்தா எனக்கு ஒன்னும் பிராப்ளம் இல்லை…” என்று பெரிய மனது கொண்டவன் போல் வாய்ப்புகளை வாரிவழங்க, தென்றலுக்கு மகிழ்ச்சியாய் போனது..

எங்கேடா தனக்கு மட்டும் இன்டர்ன்ஷிப் கொடுத்து பிரதீபாவிற்கு இல்லையென்றால் என்ன செய்வது என்று.. அப்படியொரு நிலை என்றாள் அவள் கண்டிப்பாக இதை தவிர்த்துவிடுவாள் என்று ப்ரித்விக்கு தெரியாதா என்ன ?? ஆக அவளுக்கு முன்னே அவனே சொல்லிவிட்டான்..

ப்ரித்வி இப்படி சொல்லவும் தென்றலுக்கு மகிழ்ச்சித் தாங்கவில்லை.. எங்கேடா இவனிடம் வேறு கேட்டுக்கொண்டு நிற்க வேண்டுமா என்று நினைத்திருந்தாள் ஆனால் அதெல்லாம் இல்லாமல் அவனே சொல்லவும் மனதில் ஓர் நிம்மதி பரவ.

“தேங்க்ஸ் எ லாட்…” என்றவளின் குரலே அவனுக்கு சொன்னது அவள் இதில் மகிழ்ந்திருக்கிறாள் என்று..

“ஓகே நான் அட்ரெஸ் அனுப்புறேன்.. நீங்க டைமிங் மட்டும் சொல்லிடுங்க…”

“பிரதீபாக்கிட்ட பேசிட்டு சொல்றேன்.. பை..” என்று வைத்துவிட்டாள்..

அவனும் அதற்குமேல் எதுவும் பேசாமல் வைத்துவிட, அவள் வரப்போகும் மகிழ்ச்சி ப்ரித்வி முகத்தில் அப்பட்டமாய் தெரிந்தது..

“என்ன தம்பி…. தென்றல் இந்தப்பக்கம் வீசப்போகுதா..???”

“நீ இன்னும் போகலையா…???”

“அடப்பாவி அக்கான்னு எதுக்காவது வருவதானே.. அப்போயிருக்கு.. ஆள் வந்ததும் அக்காவ கழட்டி விடுற டூ பேட்…” என்று மாதுரி சொல்ல

“ஹா ஹா நீ என்னவேனா சொல்லிக்கோ…” என்று சளைக்காமல் பார்த்தான் ப்ரித்வி..

“ஆனாலும் நீ ரொம்ப நல்லவன்டா.. ரியலி சொல்றேன் ப்ரித்வி என் தம்பி அப்படிங்கிறதுக்காக இல்லை.. நிஜமா இவ்வளோ வசதி பின்புலம் எல்லாம் இருந்தா, எத்தனை பேர் எப்படியெல்லாம் ஆடுறாங்க.. ஆனா நீ எப்பவுமே அப்படியில்லடா…” என்று மாதுரி தன் தம்பியை பார்த்து பெருமையாய் சொல்ல,

“ஹ்ம்ம் ஏன் க்கா.. நீ அப்படியா இருந்த??? இல்லையே.. உன்னைப்போல தானே அம்மா என்னையும் வளர்த்தாங்க… அப்போ நான் மட்டும் எப்படி இருப்பேனாம்.. அன்ட் இன்னொன்னு.. எல்லாமே இருக்குன்னு ஆடணுமா என்ன.. ஜஸ்ட் நம்ம நம்மலா இருக்கிறதுல தானேக்கா வாழ்க்கையே இருக்கு.. நமக்கு கிடைக்கிற மரியாதை நம்ம கேரக்டர் பார்த்து வரணும்..” என,

“ஹ்ம்ம் நிஜமா தென்றல் சோ லக்கிடா…” என்று மாதுரியும் சொல்ல,

“நோ நோ… அவளுக்காக நானும் தான் லக்கி.. எப்பவுமே நம்மதான் பெருசு அப்படின்னு மட்டும் நம்ம நினைச்சிடக் கூடாதுக்கா…” என்றவன், அடுத்து வேலையிருக்கிறது என்று கிளம்பிவிட்டான்..  

வீடும், அலுவகலமும் ஒரே காம்பவுண்டினுள் இருப்பதால் நடந்தே தான் செல்வான்.. அலுவலக ஊழியர்கள் வருவதற்கும் போவதற்கும் வேறொரு நுழைவு வாயில் இருப்பதால், அவர்களுக்கும் வேறு எவ்வித பிரச்னையும் இருப்பதாய் தெரியவில்லை.

ப்ரித்வியின் அலுவலகம் என்பதும் ஒரு வீடு போல் தான் இருக்கும்.. உள்ளேயே லிவிங் ரூம், ஸ்டடி ரூம், ஜிம், ஸ்விம்மிங் பூல், கார்டன், சமையலறை  என்று அதனை பார்ப்பவர் யாரும் அலுவலகம் என்றே சொல்லிட முடியாது..

அவனை பொருத்தமட்டில் தன்னிடம் வேலை பார்க்கிறார்கள் என்பதற்காக தான் முதலாளி என்று அர்த்தமில்லை.. வேலை செய்யுமிடமும் சௌகர்யமாய் இருந்தால் தான் மனம் அதில் ஓட்டும் இல்லையேல் கடமையே என்று தான் செய்வர்..

ஆக முதலிலேயே ப்ரிதவிக்கு தன் அலுவலகம் இப்படித்தான் இருக்கவேண்டும் என்ற எண்ணம் இருந்தது.. உள்ளே வருபவர்களுக்கு கிளம்பிச் செல்லும் மனம் இருக்க கூடாது.. அதே போல் வேலையின் மீது ஆர்வமும், விடா முயற்சியும் இருக்கவேண்டுமே தவிர ஒரு சலிப்பு வந்திட கூடாது..

ஆக எப்படி இருந்தால் இங்கே புத்துணர்வாய் இருக்கும் என்று பார்த்து பார்த்து தான் ஒவ்வொன்றும் செய்திருந்தான்..

அவனது அலுவலகத்தில் சிலர் சீனியர் என்றும், சிலர் தோஸ்த் என்றும், ஒருசிலர் அண்ணா என்றுமே அழைப்பர்.. யாரையும் சார் என்று சொல்லும்படி அவனும் சொன்னதில்லை.. எத்தனைக்கு எத்தனை அங்கே இயல்பு சூழல் இருக்க வேண்டுமோ அத்தனைக்கு அத்தனை இருந்தது..       

இதழில் மாறா புன்னகையோடு, கண்களில் சிறு ஆவலும் ஆசையும் எட்டிப்பார்க்க, நடந்து வந்தவனை சற்று வித்தியாசமாய் தான் பார்த்தனர் அங்கே..

“சீனியர்.. என்ன மிதந்து வர்றீங்க….” என்று கேட்ட ஒருவனை,

“நானா… ஹா ஹா வேலைய பாருங்கடா…” என்று தோளில் தட்டிச் சென்றவன் நிஜமாகவே ஒரு மிதப்பில் தான் சென்றான்..

                         

 

Advertisement