Advertisement

தென்றல் – 1  

“நறுமுகையே நறுமுகையே நீயொரு நாழிகை நில்லாய்

செங்கனி ஊறிய வாய் திறந்து நீயொரு திருமொழி சொல்லாய்

அற்றைத் திங்கள் அன்னிலவில் நெற்றித்தரள நீர்வழிய கொற்றப்பொய் ஆடிவள் நீயா….”

“தென்றல்…… அடி தென்றல் எந்திரிடி… உன் போன் அடிக்குது… ஐயோ இப்படி சொன்னா அதுக்கும் எதாவது சொல்வாளே.. ச்சே உன் போன் பாடுது… தென்றல்….” என்று தென்றலை எழுப்புவதற்குள் அவளது ஆருயிர் தோழி என்று அவளே சொல்லிக்கொள்ளும் பிரதீபாவிற்கு மூச்சு வாங்கியது..

‘பகலெல்லாம் கைல வச்சிருக்க வேண்டியது.. நைட்டு தூங்கும்போது மட்டும் என் காதுக்கிட்ட வைக்க வேண்டியது…’ என்று முனங்கிக்கொண்டே மீண்டும் அவளை எழுப்பத் தொடங்க,

மீன்றும் ‘நறுமுகையே நறுமுகையே…’ என்று தென்றலின் அலைபேசி பாடத் தொடங்க,

“ஹா… என்ன பிரதீப்…. கொஞ்ச நேரம்….” என்று தென்றல் திரும்பிப்படுத்தாள்..

“பிரதீப்பா அடிங்க… எந்திரிடி.. அப்போ இருந்து உன் போன் பாடுது.. நியு நம்பர் வேற… கெட்டப் தென்றல்…” என,

“நீயே பேசுடி.. எப்பவும் நீதானே என் போன்ஸ் எல்லாம் அட்டென்ட் பண்ணுவ…” என்றவள் கண்கள் திறக்கக் கூட தயாராய் இல்லை..

“அதுசரி… இதுக்கு நான் கால் சென்டர்ல வேலை பார்க்கலாம்டி… எனக்கு தெரியாது நீ பேசினா பேசு இல்லாட்டி போ..” என்று பிரதீபா வழக்கத்திற்கு மாறாய் கடிய. 

“ம்ம்ம்ம்… சரி சரி… நியு நம்பரா… யாரு…” என்று கண்களை மூடியபடி தென்றல் அலைபேசிக்காக கைகளை நீட்ட,

“நீயே கண்ண திறந்து பார்த்து எடுத்து பேசு.. நான் குளிக்க போறேன்.. மார்னிங் பர்ஸ்ட் ஹவர் லேப்டி… சீக்கிரம்…” என்று அவளை ஒரு தட்டு தட்டி பிரதீபா குளிக்கச் செல்ல,

“ம்ம்ம்…” என்று சோம்பல் முறித்து எழுந்த தென்றல் தன் அலைபேசியை எடுத்துப்பார்க்க, அதில் ‘டூ மிஸ்ட் கால்ஸ்…’ என்று வந்திருந்த புதிய எண்ணை கொஞ்ச நேரம் அப்படியே பார்த்திருந்தாள்..

“யாரது…?? அதுவும் இத்தனை காலைல… வீட்ல இருந்துக்கூட இவ்வளோ சீக்கிரம் கூப்பிட மாட்டாங்களே…” என்று யோசித்தபடி,

“திரும்ப கூப்பிடனுமா??? இல்லை அவங்களே கூப்பிடுவாங்களா…” என்று அமர்ந்திருக்க, மீண்டும் நறுமுகையே கேட்கத் தொடங்கியது..

அதே எண்.. அடுத்த வரி பாடுவதற்கு முன்னேயே அழைப்பை ஏற்று “ஹலோ…” என,

“ஹலோ… தென்றல்.. குட் மார்னிங்…” என்ற குரலில் நெற்றியை சுருக்கி,

“யாரு…???” என்றாள்..

“தென்றல்….”

“நான் தென்றல் தான்… நீங்க யாரு… அதை சொல்லாம தென்றல் தென்றல்னு சொன்னா என்ன அர்த்தம்…”

“ஹா ஹா.. பரவாயில்ல… தெளிவா தான் இறுக்க.. பை தா வே… இட்ஸ் மீ ப்ரித்வி…” என,

“ப்ரித்வி..????!!!!!” என்று பெயரை கேள்வியாகவும் ஆச்சர்யமாகவும் உச்சரித்துப் பார்க்க, அந்தப் பெயரை எங்கோ கேட்டது போலும் இருந்ததும் இல்லாதது போலும் இருந்தது..

“யா… ப்ரித்வி தான்… சிலர் பிரித்திவின்னு என் பேரை பிரிச்சு சொதப்புவாங்க.. பட் யு ப்ரோனவுன்ஸ்ட் வெல்…” என்று ப்ரித்வி பாராட்ட,

“ஷ்…….” என்று மூச்சுவிட்டு தன் கடுப்பை அடக்கியவள்,

“யார் நீங்க..???” என்றாள் குரலில் கடுமையைத் தேக்கி…

“அதான் சொன்னேனே ப்ரித்வின்னு…”

“ஹலோ… நீங்க யாரா வேணா இருங்க.. ப்ரித்வியா இருங்க இல்லை பருத்திவீரனா கூட இருங்க.. பட் இந்த நேரத்துல எனக்கு ஏன் கால் பண்ணீங்க…??” என்று இவள் குரலை உயர்த்த,

“அதானே பார்த்தேன்.. சூறாவளி சுந்தரி… என்னடா இன்னும் வாய் திறக்கலைன்னு…” என்று அவன் என்னவோ இவளை நன்றாகத் தெரிந்தவன் போல் உரிமையாக பேச.. ‘சூறாவளி சுந்தரியா…’ என்று திடுக்கிட்ட மனதை அடக்கி ‘யாருடா நீ…’ என்று  யோசிக்க, அவள் மண்டை காய்ந்தது தென்றலுக்கு..

மீண்டும் அவன் “தென்றல்…” என்றழைக்க,

“டேய்… யார்டா நீ.. என்ன வேணும் உனக்கு…” என்று சுத்தமாய் தன் பொறுமையை விட்டு தென்றல் பேச, அந்தப்பக்கம் இருந்தவனோ,

“ஹா ஹா… மாறவே இல்ல தென்றல் நீ.. அப்படியே இருக்க… நான் உன்னை பார்த்து ரெண்டு வருஷம் மேல ஆச்சா.. சோ எப்படி இருப்பியோன்னு நினைச்சேன்.. ஆனா நீ..????” என்று சொல்லி நிறுத்த,

தென்றல் அவனை இப்போது முறைக்க முடியாது அல்லவா.. ஆக, தன் அலைபேசியையே  முறைத்துவிட்டு அழைப்பை துண்டித்துவிட்டாள்..    

“இடியட்… எவனோ என் நம்பர்னு தெரிஞ்சே விளையாடுறான்… அதுவும் என்கிட்ட… தென்றல் கிட்ட….” என்று தனக்குத் தானே சொல்லிக்கொண்டவள், மீண்டும் அவள் அலைபேசி தான் இருப்பதை காட்டத் துவங்க, வேகமாய் கண்களை அகல விரித்து அதனைப் பார்க்க, அழைத்தது அவள் அம்மா..

“ஹலோ ம்மா…” என,

“என்னடி… இவ்வளோ சீக்கிரம் முழிச்சிட்ட… வழக்கமா பிரதீபா தானே போன் எடுப்பா…” என்று தென்றலின் அம்மா கமலி சொல்ல,

“ஹா… அப்போ அவளையே பேசச் சொல்றேன்…” என்று அவரது அழைப்பையும் துண்டித்துவிட்டாள்..

‘எனக்குன்னு எல்லாம் வந்து சேர்றாங்கலே…’ என்று முணுமுணுத்துக்கொண்டே. அலைபேசியை ஆப் செய்து, சார்ஜில் போட்டவள், அவளும் தன் உடைமைகளை எடுத்துக்கொண்டு குளிக்கச் சென்றாள்..

தென்றல்.. பொறியியல் கல்லூரியில் இறுதியாண்டு மாணவி.. பிறந்தது வளர்ந்தது எல்லாம் சென்னை தான் என்றாலும், கல்லூரியும் சென்னை தான் என்றாலும் அடம் பிடித்து விடுதி வாசம் வந்தவள்..

‘நானும் எப்போதான் ஊர் உலத்த தெரிஞ்சுக்கிறது…’ என்று வீட்டில் ஒவ்வொருவருக்கு ஏற்ப ஒன்றை சொல்லி, வீட்டிலிருந்து பல கிலோமீட்டர் தூரத்தில் இருந்த கல்லூரியில் சேர்ந்து,  பிடிவாதமாய் விடுதிக்கு வந்தாள்.. இதோ அவள் வந்தும் மூன்று ஆண்டுகள் கடகடவென்று ஓடிவிட, அடுத்து நான்காம் ஆண்டின் முதல் செமஸ்டரை நெருங்கிக்கொண்டு இருந்தாள்..

தனக்கு வந்த அழைப்புகளை எல்லாம் என்னவோ துச்சமாய் எண்ணி அணைத்துவிட்டு வந்துவிட்டாள் தான்… கமலிக்கு அவளை பற்றி தெரியும், இவளும் வகுப்பிற்கு போகும்முன்னே அழைத்துப்பேசி விடுவாள் தான்.. ஆனால் அந்த புதிய எண்…??

அவன் யார்..??

‘என்னை நல்லா தெரிஞ்சவன் போல பேசினானே… யாரா இருக்கும்…’ என்று யோசித்தபடி வாஸ் பேசின் முன் நின்று முகத்தை அப்படி இப்படி திருப்பிப் பார்த்துக்கொண்டு இருக்க, அவள் முதுகில் பிரதீபா பட்டென்று ஒரு அடி வைத்தாள்..

“ஹே என்ன டி…??? எருமை…”

“ஆமாமா… ஆடி அசஞ்சு வந்த நீ பதுமை.. நான் எருமையா… போ போய் சீக்கிரம் குளிச்சிட்டு வா.. அப்புறம் அவ உள்ள போயிட்டா.. இவ சதி பண்ணிட்டான்னு எல்லாரையும் போட்டு பாடா படுத்துவ…” என்று பிரதீபா மிரட்டிவிட்டு செல்ல,

“ச்சே.. நம்ம ரொம்ப படுத்துறோமோ…” என்று நினைத்த தென்றல்,

“ஹா…” என்று தன் தோள்களை குளிக்கிவிட்டு குளிக்கச் சென்றுவிட்டாள்.. அடுத்து வழக்கம் போல் பிரதீபாவை கடுப்பேற்றிக்கொண்டே தயாராகி மெஸ்ஸிற்கு சென்று பெயருக்கு எதையோ உண்டு,

“நல்லாவேயில்ல.. வா கேண்டீன் போவோம்…” என்று நன்றாய் சாப்பிட்டுக்கொண்டு இருந்தவளையும் இழுத்துக்கொண்டு சென்றாள்..

“ஏன்டி என் உயிரை வாங்குற…” என்று நொந்துக் கொண்டே பிரதீபா சென்றாலும் என்றுமே இவர்கள் இப்படிதான் என்பது அங்கே அனைவருக்கும் தெரியும்..

கேண்டினில் சென்றமர்ந்ததும், “தென்றல் அம்மா பேசிட்டு இருக்கும் போதே ஏன் கட் பண்ண.. எனக்கு கூப்பிட்டு பேசினாங்க..” என்று பிரதீபா கடிய,

“அவங்க உன்னைத் தான் கேட்டாங்க.. சோ நான் ஏன் பேசணும்..” என்று அலட்சியமாய் இதழ்களை வளைத்த தென்றலை முறைத்தாள் பிரதீபா..

“அப்படி பார்க்காத பிரதீப்.. எனக்கு ஒருமாதிரி இருக்கு…” என்று வேண்டுமென்று தென்றல் சிணுங்க..

“அம்மா தாயி இன்னிக்கு இவ்வளோ போதும்.. அம்மாக்கிட்ட பேசு.. நான் போய் ஆர்டர் பண்ணிட்டு வர்றேன்…” என்று பிரதீபா எழுந்து சென்றுவிட, அவளும் தன் அன்னைக்கு அழைத்துப் பேசினாள்..

அடுத்து அப்படியே மனதில் அவனது அழைப்பு வந்து ஒட்டிக்கொண்டது..

‘தென்றல்….’ இப்படியான ஒரு குரல்… தன் பெயரை அழைப்பதை எங்கோ எப்போதோ கேட்டது போலவும் இருந்தது.. ஆனால் அதெல்லாம் கற்பனை போலவும் இருந்தது..

‘யாரிவன்..???’ என்ற கேள்விக்கு பதில் தெரியாமல் போக,

‘நம்மலே கூப்பிட்டு பேசுவோமா..??’ என்று தோன்ற, அடுத்த நொடி தன் எண்ணத்தை மாற்றிக்கொண்டாள்.. வேண்டுமென்றால் யாராக இருந்தாலும் அவர்களே அழைக்கட்டும் என்று நினைத்தவள், அப்படியே அதை விட்டுவிட்டாள்.

ஆனால் அவளுக்கு அழைத்துப் பேசியவனோ  சிறிதும் கூட அவள் நினைவுகளில் இருந்து தன்னை மீட்டுக்கொள்ளவில்லை, மீளவும் விரும்பவில்லை என்பது அவனது பேச்சிலேயே தெரிந்தது..

“டேய் ப்ரித்வி… இதுக்கு நீ நேராவே போய் பேசியிருக்கலாம்…..” என்ற தன் அக்கா மாதுரியிடம்,

“எதுக்குக்கா… உனக்கு அவளை பத்தி தெரியாது… போன்ல பேசினதுக்கே மதிக்கலை.. நேர்ல போனா கண்டுக்க கூட மாட்டா…” என்று சிரித்தபடி ப்ரித்வி சொல்ல,

“ஆனாலும் இந்த லவ் பண்றவனுங்களே ஒரு தினுசா தான் அலையுறீங்கடா… அம்மாக்கிட்ட சொன்ன ஈசியா வேலை முடிஞ்சிடும்.. இல்லை உங்க மாமாக்கிட்ட சொன்னா அவரே நேர்ல போய் அவங்க வீட்ல பேசிட்டு வருவார்..” என்று மாதுரி தன் தம்பியின் காதலுக்கு தானொரு அணிலாக இருந்தாவது உதவி செய்யவேண்டும் என்று முயற்சிக்க,

“அதெல்லாம் வேணாம்க்கா..” என்று அழகாய் மறுத்துவிட்டான்..

“ஏன்டா… ஏன் வேணாம் சொல்ற..???” என்றபடி அவன் பின்னோடு மாதுரி வர,

“முதல்ல அவளுக்கு என்னை ப்ரித்வியா பிடிக்கட்டும்… அதுக்கப்புறம் பேசிக்கலாம்…” என்று அவனது ட்ரேட் மார்க் புன்னகையோடு சொல்ல,

“நீ திருந்தவே மாட்டடா… அவனவன் என்னென்னவோ செய்றான்.. ஆனா நீ.. உன்னை வெளிப்படுத்திக்கவே இத்தனை வருஷம்…” என்று சலித்தபடி மாதுரி செல்ல, ப்ரித்விக்கு  தென்றலை முதன் முதலில் கண்ட நாள் நினைவு வந்தது..

அவன் அம்மாவும் அக்காவும் இவனை கெஞ்சி கொஞ்சி ஒரு திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு அனுப்பியிருந்தனர்.. இது அடிக்கடி நடக்கும் ஒன்று தான்.. ப்ரித்வியின் அம்மா அருள்மொழிக்கு வீட்டில் இருக்கவே நேரமிருக்காது.. ஆனாலும் நெருங்கிய உறவுகள், நட்புக்கள் என்று யார் வீட்டு விசேசம் என்றாலும் கொஞ்சமாவது நேரம் ஒதுக்கி செல்வார்..

தன்னால் போக முடியாத பட்சத்தில் மகள் மருமகனையோ இல்லை மகனை மட்டுமேயோ அனுப்பிவிடுவார்.. அன்றும் அப்படித்தான் ஆனது.. மாதுரி அவள் கணவன் வீட்டுப் பக்கம் ஒரு விசேசம் என்று சென்றிட, அருள்மொழி ப்ரித்வியை போகச் சொன்னார்..   

 “லாஸ்ட்ல நான்தானா சிக்கினேன்…” என்று கடுப்படித்தபடி ப்ரித்வி அந்த வரவேற்பு நிகழ்ச்சிக்குக் கிளம்பிச் செல்ல, அவன் காரில் இருந்து இறங்கும்முன்னே, மற்றொரு கார் வந்து அங்கே நிற்க, அது நின்ற வேகத்தில் யாரடா இது என்பது போல் உள்ளிருந்தே பார்த்தான்..

அடர் ஊதா நிறத்தில் மெல்லிய ஆலிவ் நிற வேலைப்பாடுகள் செய்திருந்த லேஹாங்கா அணிந்து ஒருத்தி உள்ளே இருந்து இறங்க, அவள் வரவிற்காகவே காத்திருந்தது போல் ஒருவன் வேகமாய் மண்டபத்தினுள்ளே இருந்து வெளி வந்தான்..

ஓடிவந்தான் என்று தான் சொல்லிட வேண்டும்..

‘அட… ஆரம்ப சீனே பயங்கரமா இருக்கே…’ என்றெண்ணிய ப்ரித்வி காரின் ஜன்னலை லேசாய் திறந்துவிட்டு அவர்கள் பேசுவது கேட்கும்படி அமர்ந்திருக்க, மண்டபத்தினுள்ளே இருந்து வெளி வந்தவனோ,

“தென்றல் வா வா… எப்போடா நீ வருவன்னு வெய்ட் பண்ணிட்டு இருந்தேன்…” என்று வாயெல்லாம் பல்லாக வரவேற்க, அவன் முகத்தில் தெரிந்த உணர்வுகளுக்கு அப்படியே நேர்மாறாக தென்றலின் முகம் இருந்தது..

இதெல்லாம் வேடிக்கை பார்த்தவனுக்கோ இன்னும் ஆவல் தூண்ட அப்படியே அமர்ந்திருந்தான்.. பொதுவாய் அடுத்தவர் சங்கதிகளில் ப்ரித்வி எப்பொழுதுமே தலையிட மாட்டான். ஆனால் இன்றோ அவனையும் மீறி அங்கே இருக்க நேர, முதலில் தென்றல் என்று பல்லிளித்து பேசியவனைத் தான் எடைப்போட்டான்..

வசதி அவன் தோற்றத்தில், உடல் மொழியில் தெரிந்தாலும் ஒரு கம்பீரம் இல்லை.. தேவையற்ற ஒரு குழைவு.. இப்போதெல்லாம் பெண்கள் கூட அப்படியில்லை.. ஆனால் அவனோ அப்படி வளைந்து குழைந்து நிற்க,

‘ச்சே.. அநியாயத்துக்கு பவ்யம் காட்றானே..’ என்று அடுத்து தென்றலை பார்க்க, அவளோ தேனாவட்டின் மொத்த உருவமாக ஒரு அலட்சிய பார்வையோடு நின்றிருந்தாள்..

“வா தென்றல்…” என்று அவன் கை பிடிக்கப்போக,

“ஏய்… தள்ளிப் போ…” என்று திமிராய் சொன்னவளின் தோரணை கண்டு ப்ரித்விக்கு கூட கொஞ்சம் ஆச்சர்யம் தான்..

“தென்றல்… ஏன் எப்போ பார் இப்படி எண்ணை தள்ளி வைக்கிற… என்னை உனக்கு பிடிக்கலையா…???” என்று கெஞ்சாத குறையாக பேசுபவனை துச்சமாகத் தான் பார்த்தாள் அவள்.

“லுக் நவீன்.. இங்க நடக்கிறது உன் அண்ணன் ரிசப்சன்… அண்ட் நம்ம பேமிலி பிரண்ட்ஸ் இந்த ரெண்டு ரீசனுக்காகத் தான் நான் இங்க வந்ததே… வழி விடு..” என்று முன்னேறி அவள் போக விழைய,

“தென்றல் ப்ளீஸ்… கொஞ்ச நேரம் என் கூட பேசு….” என்று அவள் கைகளை மீண்டும் அவன் பற்ற போக, விழாவிற்கு வந்தவர்கள் ஒரு சிலர் இவர்களை திரும்பிப்பார்த்துச் செல்ல, அது தென்றலுக்கு எரிச்சலை கொடுத்தது..

“ஏய்… ஒருதடவ சொன்னா உனக்கு புரியாதா நவீன்.. என்னை பத்தி உனக்கு நல்லா தெரியும்.. பங்க்சன்னு கூட பார்க்க மாட்டேன்… அப்படியே தர தரன்னு இழுத்து போய் போலீஸ்ல பிடிச்சு குடுத்திடுவேன்…” என்று சொன்னவளின் பாவனை இதை இவள் செய்வாள் என்றே தோன்றியது..   

‘போலீஸ்…’ என்றதும் நவீன் சற்றே பின்வாங்க, காரை ரிமோட் லாக் செய்துவிட்டு தென்றல் அசால்ட்டாக நடந்துச் சென்றாள்.. அவளை தொடர்ந்து சிறு இடைவெளி விட்டு நவீனும் செல்ல, ப்ரிதவிக்கு இதழில் புன்னகை விரிந்து மலர்ந்தது.. 

‘ஹ்ம்ம் தென்றல்னு பேர் வச்சதுக்கு பதிலா புயல்… சூறாவளி இப்படி எதாவது ஒன்னு வச்சிருக்கலாம்.. என்னா பேச்சு.. என்னா திமிர்… பட் அதுக்கூட அவளுக்கு அழகாத்தான் இருக்கு… திமிர் கூட இருக்கிற இடத்துல இருந்தா தான் அழகு போல…’ என்று அவனுக்கு அவனே சொல்லிக்கொண்டு அவனும் உள்ளே செல்ல, ப்ரிதவிக்கு ஏக போக மரியாதை..

அதெல்லாம் இப்போது நினைவில் வந்து செல்ல, “ஹ்ம்ம் சூறாவளி சுந்தரின்னு இவளுக்கு பேர் வச்சதில தப்பேயில்லை…” என்று தானாய் சிரிக்க,

“மாப்பிள்ள என்ன முத்திடுச்சா…” என்று அந்தப்பக்கம் போன சுகேஷ் கேட்க,

“அட போங்க மாமா.. அக்கா ஆடி ஷாப்பிங் போகணும் சொன்னா கூட்டிட்டு போங்க..” என்றவன், “அக்கா….” என்று சப்தமாய் அழைக்க,

“டேய் மூணு வார்த்தை தானடா உன்கிட்ட பேசினேன்.. அதுக்கேன் இப்படி ஒரு தண்டனை….” என்ற சுகேஷ், “நானே போய் பார்த்துப்பேன் என் பொண்டாட்டிய…” என்று சொல்லி வேகமாய் நகர்ந்து போக,

“பார்த்து போங்க மாம்ஸ்…” என்றவன், மீண்டும் அவளுக்கு அழைப்போமா என்று யோசனை போக,

“வேணாம்… கிளாஸ்ல இருப்பா…” என்று சொல்லிக்கொண்டவன் தன் வேலைகளை பார்க்கப்போனான்..

ப்ரித்விக்கும் சரி, தென்றலுக்கும் சரி அவரவர் வேலைகள் இருந்தாலும், ‘அழைப்போமா..’ என்று அவனும் ‘யார் அழைத்தது…’ என்று அவளும் மனதின் ஓரத்தில் சிந்திக்காமல் இல்லை..

அன்றைய தினத்தில் அடுத்தடுத்து ப்ரிதவிக்கு வேலைகள் வந்துவிட, சாவகாசமாய் அவளோடு பேசிட மனம் நினைத்தாலும் அதற்கான நேரம் மட்டும் கிடைக்கவே இல்லை..

எப்போதடா நேரம் கிடைக்கும் என்று காத்திருக்க, அவன் மறுநாள் வரைக்கும் காத்திருக்க வேண்டியாதாகத் தான் போனது..

மறுநாளும் முதல் நாள் போலவே காலை நேரத்தில் தென்றலுக்கு அழைத்தான்.. ஆனால் இம்முறை எடுத்தது தென்றல் இல்லை பிரதீபா..

“நான் தென்றல் கிட்ட பேசணுமே…”

“அவ நல்லா தூங்குறா அண்ணா…” என்ற பிரதீபாவின் பேச்சில் லேசாய் அவனுக்கு புன்னகை முளைத்தது..

இவள் யாரைப்பார்த்தாலும் அண்ணா தான்.. கல்லூரியில் முதல் நாள் பார்த்தபோதும் தன்னை அண்ணா என்று தான் சொன்னாள். இப்போதும் அப்படியே.. அனால் இந்த தென்றல்… ம்ம்ஹும் மாமனாவது மச்சானாவது என்பது போல அண்ணனாவது அந்நியனாவது என்பது போல் தான் பார்த்தாள்..

“ஹலோ அண்ணா.. லைன்ல இருக்கீங்களா..??”

“ஹா… இருக்கேன் மா… தென்றல் எந்திரிக்கவும் எனக்கு கூப்பிட சொல்றியா..??” என,

“ஹ்ம்ம்.. ஆனா என்ன ஏது எதுக்குன்னு என்னை ஆயிரம் கேள்வி கேட்பாளே…” என்று பிரதீபா அழாத குறையாய் சொல்ல,

“ஹா ஹா.. எதுவா இருந்தாலும் என் கிட்ட கேட்டுக்க சொல் பிரதீபா…” என்றவன் அடுத்து அழைப்பை வைத்துவிட,

அடுத்தநொடி “ஓய்.. யாருக்கிட்ட டி இவ்வளோ நேரம் பேசின..” என்று தென்றலின் குரலில் திரும்பியவள்,

“அப்போ நீ முழிச்சிட்டு தான் இருந்தியா பக்கி…” என்று  கோவமாய் கேட்க,

“நீ அண்ணா அண்ணான்னு பாசமலர் படம் ஓட்டும் போதே…” என்றபடி விரிந்துக் கிடந்த தன கேசத்தை அழகாய் கோதியபடி எழுந்தமர்ந்தவள்,

“யாரு டி அது…” என,

“ப்ரித்வி அண்ணா..” என்று பிரதீபா சொன்னதும்,

“ப்ரித்வியா…???!!!!” என்று அதிர்ந்து தான் பார்த்தாள் தென்றல்..  

      

 

Advertisement