Advertisement

கைநீட்டினேன் என்னை கரைசேர்க்க வா 14

                              தமிழ்மாறன்- ஆதிரையின் திருமண ஏற்பாடுகள் மாறன் நினைத்தது போல் வெகு எளிமையாகவே ஏற்பாடாகி இருக்க, வரதனுக்கு துளிகூட இதில் விருப்பமில்லை. “என் வீட்டின் கடைசி கல்யாணம்… என் செல்ல மகளின் கல்யாணம்… நான் முன்னின்று அனைத்தையும் பார்த்திருக்க வேண்டாமா… ஊரையே வளைத்து இருக்க வேண்டாமா??” என்று மனம் அரற்றிக் கொண்டே இருந்தது.

                             ஆனால், என்றோ அவர் செய்துவிட்ட ஒரு தவறுக்காக கட்டிய மனைவியும், பெற்ற மகளுமே அவரை விலக்கி வைத்து விட, பெரிதாக எதிலும் ஒட்ட முடியாமல் தனித்தே நின்றார் அவர். உமாதேவிக்கு அவரின் முகவாட்டம் புரிந்தே இருந்தாலும், அவரால் என்ன செய்ய முடியும்???

                              அவருக்கு மட்டும் ஆசை இல்லையா?? ஆனால், மகளே திருமணத்தை இப்படித்தான் நடத்த வேண்டும் என்றுவிட்ட பிறகு, அதுவும் கோவில், வேண்டுதல் என்று அவள் கூறிய காரணங்களை வைத்தே இது மாறனின் விருப்பம் என்பதும் புரிந்து போனது அந்த தாய்க்கு.

                           கணவரின் மீதான வருத்தம் இன்னும் அதிகமாகி போக, எப்படி நடந்திருக்க வேண்டிய நிகழ்வு என்று மருகிக் கொண்டு தான் இருந்தார் அவரும்.. ஆனால், வெளிகாட்டிக் கொள்ள முடியாதே…

                        அவரின் வேதனையை விட, சத்யவதியும், மாறனும், எழிலும் அனுபவித்துக் கொண்டிருக்கும் வேதனை அதிகம் அல்லவா.. அதிலும் இரண்டு மகள்களை பெற்றவராக அவரால் மாறனின் உணர்வுகளை ஓரளவுக்கு படிக்க முடிந்தது. அவன் சேதுமாதவனோடு எந்த அளவிற்கு நெருக்கம் என்பதும் தெரியுமே உமாதேவிக்கு..

                         அவன் வாழ்வில் முக்கியமான இந்த நொடியில் அவன் தந்தையை எந்த அளவிற்கு தேடுவான் என்று நினைக்க நினைக்க மனம் ஆறவே இல்லை. மணப்பந்தலின் அருகில் கூட வர முடியாமல் சக்கர நாற்காலியில் கீழே அமர்த்தப்பட்டிருந்த சத்யவதியின் முகத்தில் மகனின் திருமணத்திற்கான மகிழ்வு முழுதாக வெளிப்பட்டாலும், ஏதோ ஒரு மூலையில் புள்ளியாக ஒரு வருத்தம் இழையோடுகிறதே…

                          இது அத்தனைக்கும் சூத்திரதாரியாக இருந்துவிட்டு இன்று மகளின் திருமணம் என்று வரும்போது மட்டும் அவர்களும் சேர்ந்து தன்னோடு ஆட வேண்டும் என்று நினைப்பதா???… மாறனின் நிலையில் இருந்து பார்த்தால் அவன் பெண்ணெடுக்க ஒப்புக் கொண்டதே பெரிய விஷயம்.. அதிலும் சத்யவதி அதை முழுமனதாக ஏற்றுக் கொண்டது எல்லாம் என் மகள் என்றோ செய்திருந்த புண்ணியம் தான்.

                         என் மகள் காலமெல்லாம் தனியாக கிடந்து தவிப்பதற்கு அவள் விரும்பியவனோடு வாழட்டும்… எப்படி நடந்தால் என்ன?? திருமணம் திருமணம் தானே.. என்று தன்னை தேற்றி கொண்டார் உமா.. சற்று தள்ளி நின்றிருந்த தன் அண்ணனிடம் கணவரை கைகாட்ட, ஜெகன் எதுவும் பேசாமல் வரதனுடன் சென்று நின்று கொண்டார்.

                சென்னையின் பழமையான வரலாறு கொண்ட கோவில்களில் ஒன்றான திருமயிலை கபாலீஸ்வரர் கோவிலில்  திருமணத்திற்கான மந்திரங்கள் முழங்கி கொண்டிருக்க, தமிழ்மாறன் அமைதியான முகத்துடன் அமர்ந்திருந்தான். அவனுக்கு முன்னால் அக்கினி ஜுவாலை கொழுந்துவிட்டு எரிய, வரதனை காணும் நேரமெல்லாம் உள்ளுக்குள்ளும் எரிந்து கொண்டு தான் இருந்தது.

                       எதையும் முகத்தில் காட்டிக் கொள்ளாமல் ஐயர் கூறும் மந்திரங்களை வார்த்தை மாறாமல் சொல்லிக் கொண்டு அவன் அமர்ந்திருந்த நேரத்தில் தான், அழகு பதுமை போல் நடந்து வந்தாள் அவன் காதலி.. மானசீகமாக என்றோ மனைவியாக நினைத்து விட்டாலும், இன்று முதல் அவனுக்கு மட்டுமே உரிமையாக போகிறவள்…

                     பச்சைநிற பட்டுடுத்தி, அதற்கேற்ப மரகத கற்கள் பதித்த நகைகள், விசேஷமான தலையலங்காரம், அளவான ஒப்பனை என்று அம்சமாக இருந்தாள் பெண். அவள் மீது இருந்து பார்வையை எடுப்பதே கடினமாக இருந்தது தமிழுக்கு.. ஐயர் அவன் கையின் மீது தட்டவும், அசடு வழிய திரும்பியவன் கையில் இருந்ததை நெருப்பில் போட, மீண்டும் கவனம் ஐயரிடம் சென்றது..

                   அவன் மந்திரங்களை உச்சரிக்கும் போதே, யாழி அவன் அருகில் அமர்த்தப்பட, அவனை நிமிர்ந்தும் பார்க்கவில்லை அவள். குனிந்த தலையோடு அத்தனை அடக்கமாக அவள் இருக்க, சிரிப்பாக இருந்தது தமிழுக்கு. மெல்லிய குரலில் அதை கேட்கவும் செய்தான் அவளிடம்..

                    “என்ன லாயர் மேடம்.. ரொம்ப சைலன்டா இருக்கீங்க… அடக்க ஒடுக்கமா..” என்று அவள் காதருகில் கேட்டு வைக்க, அவனை லேசான முறைப்போடு அவள் திரும்பி பார்க்கவும், அழகாக கண்ணடித்தான் மாறன்.. அதற்குமேல் எங்கே முறைப்பது… பதட்டத்தோடு மீண்டும் தலையை குனிந்து கொண்டாள் அவள்..

                   மாறன் அதற்கும் சற்றே சத்தமாக சிரிக்க, அபர்ணா தங்கையின் பின்னால் நின்றிருந்தவள் சற்றே குனிந்து “அவளை டென்சன் பண்ணாம இருக்கவே முடியாதா உன்னால… எல்லார் கண்ணும் உங்கமேல தான் இருக்கும்..  ஒழுங்கா உட்காரு தமிழ்…” என்று அதட்டி வைக்க, அதற்கும் சிரிப்புதான் அவனிடம்.

                   எழில் அண்ணனின் அருகிலேயே இருக்க, அண்ணனின் இந்த சிரிப்பில் தான் சற்று நிம்மதியானான் அவன். பின்னே காலையில் இருந்து புன்னகையோடு இருந்தாலும், அவனிடம் ஒரு இறுக்கம் இருந்து கொண்டே இருந்ததை கவனித்திருந்தானே… வரதனோடு எந்த நிமிடம் தமிழ் முட்டிக் கொள்வானோ என்று ஒரு விட பயத்தோடு தான் நேரத்தை ஓட்டிக் கொண்டிருந்தான் எழில்.

                   ஆனால், அவன்  பயந்தது போல் அல்லாமல் நிறைவாகவே நடந்து முடிந்தது திருமணம்… பாதபூஜை, தாரை வார்த்து கொடுத்தல் என்று முக்கிய நிகழ்வுகளை உமாதேவி அவராகவே தவிர்த்துவிட்டிருந்தார். சத்யவதியை இப்படி நாற்காலியில் அமர்த்திவிட்டு தான் மட்டும் கணவரோடு சேர்ந்து நிற்க அவருக்கே மனம் வரவில்லை.

                   ஆனால், அந்த குறையே தெரியாத வண்ணம் ஜெகன்னாதன் தானாகவே பொறுப்பேற்று முன் நின்று நடத்திக் கொடுத்தார். நெருக்கி நெருக்கி அழைத்தும் கூட உறவுக்கூட்டம் ஐநூறு பேருக்கு மேல் ஆகி விட்டிருக்க, அவர்கள் மெல்லியதாக சலசலத்தபோதும் எதையும் காதில் வாங்காமல் இருக்க பழகி கொண்டார் உமா.

                  சத்யவதிக்கு உமாவின் இந்த செயல்களில் துளியளவு கூட விருப்பமே இல்லை. ஆனால், ஹோமகுண்டத்தின் புகை அவருக்கு மூச்சுத்திணறலை கொடுக்கும் என, கீழே அமர்ந்து விட்டவரால் சட்டென தடுக்கவும் முடியாமல் போனது. கண்களில் கண்ணீரோடு அவர் உமாவை பார்க்க, உமா சத்யாவை நிறைவாக பார்த்து சிரித்தார் அந்த நேரம்.

                   ஆதிரைக்கும் தாயின் இந்த செயலில் அதிர்ச்சிதான். ஏன் அம்மா இப்படி செய்தார்… எனக்காகவா??? இன்னும் எதையெல்லாம் இவர்கள் இழந்து நிற்பார்கள்??? காலத்திற்கும் இதே நிலை நீடித்தால், தன் அன்னை எப்போதும் இப்படி ஒதுங்கியே நின்றுவிட்டால்… என்ற எண்ணங்களில் அவள் பதறிக் கொண்டிருக்க, திருமணம் குறித்த மகிழ்ச்சி முற்றாக வடிந்து போனது.

                      அவள் கண்ணீருடன் அன்னையை பார்த்திருக்கும்போதே, மாறனும் உமாவை மறுப்பாக பார்க்க இருவருக்குமே புன்னகையை பதிலாக கொடுத்தவர் அருகில் வந்து நின்று கொண்டதோடு சரி.. வேறெந்த சடங்கில் அவரும் முன்னே நிற்கவில்லை…

                    தாலி ஏறும் நேரம் கூட, ஆதிரையின் மனம் இந்த நிகழ்வுகளில் உழன்று கொண்டே இருக்க, லேசான கண்ணீரோடும், நிறைந்த குழப்பத்தோடும் தான் திருமணம் நடந்தேறியது அவளை பொறுத்தவரை. கழுத்தில் ஏதோ உரசவும் தான் அவள் மாறனை திரும்பி பார்த்ததே…

                    ஆனால், அதற்குள் தாலியை கட்டி முடித்திருந்தான் அவன். அடுத்தடுத்த சடங்குகள் வரிசை கட்டி நிற்க, எங்குமே அவளுக்கு ஆற அமர அசைபோட நேரம் கிட்டவே இல்லை. அக்கினியை வலம் வந்து, அம்மி மிதித்து, அருந்ததி பார்த்து முடித்து பெரியவர்களிடம் ஆசி வாங்க கீழே இறங்க சத்யவதி நிறைவாக இருவரையும் ஆசிர்வதித்தவர் ஆதிரையை லேசாக அருகில் இழுத்து அவள் கண்களை துடைத்து அணைத்து விடுவித்தார்.

                   அடுத்து வரதனையும், உமாவையும் மணமக்கள் நெருங்க, வரதன் எதுவுமே பேசாமல் விடுவிடுவென நடந்து விட்டார். மாறன் எந்த உணர்வையும் வெளிக்காட்டாமல் அவரை பார்த்து நிற்க, ஆதிரை அவரின் புறக்கணிப்பில் குலுங்கி அழுதாள்.

                                 உமா ஆதரவாக அவளை அணைத்து கொண்டவர் “இன்னிக்கு முக்கியமான நாள் ஆதிம்மா.. இந்த நாளோட சந்தோஷத்தை எதுக்காகவும் இழந்திட கூடாது.. உன் அப்பா அவராகவே தெளிஞ்சு வந்தாதான் உண்டு.. அவரை நினைச்சு நீ கவலைப்படாத.. ” என்று அவளை மெல்ல மீட்டெடுத்தார்.

                          மாறன் அவள் அருகில் நின்றவன் ஆறுதலாக அவளை தோளோடு அணைக்க, கண்ணீருடன் அவன்மீது சாய்ந்து கொண்டாள் ஆதிரை. அவள் அழுகையை நிறுத்தவே வெகுநேரம் ஆக, ஒருவழியாக அவளை சமாளித்து நேராக தமிழ்மாறனின் வீட்டிற்கே அழைத்து வரப்பட்டனர் மணமக்கள். மறுவீடு சடங்கை எல்லாம் பின்னர் பார்த்துக் கொள்ளலாம் என்று முடிவெடுத்து, அன்று மாலை வரை மகளுடன் இருந்து அதன்பிறகே வீட்டிற்கு கிளம்பினார் உமாதேவி.

                            அவர் கிளம்பும் நேரம் ஆதிரை என்ன முயன்றும் முடியாமல் அழுதுவிட “இப்படி அழுத முகத்தோட என்னை அனுப்பி வைக்காத ஆதி.. உன் முகத்தை இப்படி பார்த்துட்டு போனா, நீ அழுததே அம்மாக்கு நியாபகம் இருக்கும்..என்னை சிரிச்ச முகத்தோட அனுப்பி வை..” என்று கண்டிப்புடன் சொன்னாலும், அவர் குரலில் இறைஞ்சுதல் தான் அதிகம் இருந்தது.

                  மாறனிடம் “உனக்கு நான் சொல்ல வேண்டியது எதுவும் இல்ல மாறா… இந்த நிமிஷம் இவ உன்னோட சொந்தம்.. இவளோட நல்லது கெட்டது அத்தனையிலும் உனக்கும் பங்கு இருக்கு… ரெண்டு பேரும் உங்களை பத்தி மட்டும் யோசிங்க.. கடந்து போன விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து கையில இருக்க வாழ்க்கையை உதாசீன படுத்தக்கூடாது…நல்லா இருக்கணும் ரெண்டு பேரும்..” என்று இருவரையும் தாடை வழித்து கொஞ்சி அங்கிருந்து கிளம்பினார் அவர்.

                  சத்யவதிக்கு காலையில் இருந்து ஏற்பட்டிருந்த அலைச்சலில் உடல் வலியெடுத்திருக்க, வலி நிவாரணியின் உதவியுடன் உறங்கி கொண்டிருந்தார். எழில் வீட்டில் இருந்த ஒன்றிரண்டு சொந்தங்களை கவனித்து கொண்டிருக்க, யாழியும், மாறனும் வீட்டின் வாசலில் நின்றிருந்தனர்.

                   உமாவின் கார் கிளம்பவும் ஆதிரை மீண்டும் அழ, “யாழி… போதும்மா..அழுதுட்டே இருக்காத…” என்று தன் பிடியில் இருந்த அவள் கைகளை மெல்ல தட்டிக் கொடுத்தான் மாறன். யாழி கண்களை துடைத்து கூட, அவள் கண்கள் கலங்கி கொண்டே இருக்க, வீட்டின் பக்கவாட்டில் இருந்த தோட்டத்திற்கு அவளை அழைத்து சென்றான் மாறன்.

                    அங்கே இருந்த கூடை நாற்காலியில் அவளை அமர்த்தியவன் அவளுக்கு எதிரில் இருந்த நாற்காலியில் அமர்ந்து கொண்டான். யாழி கலங்கிய கண்களை துடைத்துக் கொண்டே இருந்ததில் அவள் கண்ணின் மை கரைந்து வழிய, கன்னத்தில் எல்லாம் கரையாகி போனது.

                    “என்னடி பண்ற நீ..” என்று கடிந்து கொண்டவன் தன் சட்டையில் இருந்த கைக்குட்டையை கொண்டு அவளின் கண்ணில் வழிந்த மையை துடைத்துக் கொண்டே  “என்னை கல்யாணம் பண்ணனும்ன்னு முடிவு செஞ்சபோதே நீ இதையெல்லாம் எதிர்பார்த்து இருக்கணும்.. சும்மா இப்படி அழுதுட்டே இருந்தே ஆச்சா…” என்றுவிட

                       அவனை முறைத்தவள் அமைதியாகவே இருக்க, “இங்கே இவ்ளோ அழறதுக்கு, உன் அப்பா போகும்போதே கூப்பிட வேண்டியது தானே.. நீ கூப்பிட்டா நிற்காம போய்டுவாரா அவரு..” என்று மீண்டும் கேட்டான் மாறன்..

                     அவனை அதிசயமாக தான் பார்த்தாள் ஆதி… மாறன் “என்ன..” எனவும்,

                      “நான் உங்களுக்கு கோபம் வருமோ ன்னு பயந்துட்டேன்ப்பா.. எனக்கு அப்போ என்ன செய்யுறது தெரியல..” என்றவளுக்கு ‘கூப்பிட்டு இருக்க வேண்டுமோ’ என்று இப்போது தோன்றியது.

                      மாறன் அவள் கையை பிடித்துக் கொண்டவன் “எனக்கு கோபம் வருமா, பிடிக்காதா.. இதைப்பத்தி எல்லாம் நீ எப்பவுமே கவலைப்படாத.. உன் அப்பா விஷயத்துல நான் கண்டிப்பா கோபப்படுவேன் தான்… ஆனா, அதுக்காக நீ உன் அப்பாவோட பேசாமலே இருக்க முடியுமா??” என்று கேள்வியாக அவன் நிறுத்த, சட்டென தலையை மறுப்பாக அசைத்தாள் ஆதி.

                     “அதுதான் விஷயம்… உனக்கும் எனக்கும் சண்டை வர்றதெல்லாம் வேற… நான் கோபப்பட்டு சண்டை பிடிச்சா, அப்படித்தான் செய்வேன்டா ன்னு சொல்லு.. நீ இப்படி பயந்து நின்னா, நான் உன்னை ரூல் பண்ண ஆரம்பிச்சிடுவேன் யாழி…”

                   “அது வேண்டாம்… நீ உன் அப்பாவோட பேச என்னோட அனுமதி எப்பவும் உனக்கு தேவையில்ல… நான் என்ன நினைப்பேனோ ன்னு எப்பவும் என் முகம் பார்க்காத… உனக்கு என்ன தோணுதோ செய்.. இதெல்லாம் தெரிஞ்சு தானே கல்யாணம் நடந்தது.. அப்புறம் பேச என்ன இருக்கு..”

                  “எனக்கும் உன் அப்பாவுக்கும் முட்டிக்காம இருந்தா தான் அதிசயம்… நீ எப்பவும் எங்க ரெண்டு பேர்க்கு இடையில வராத.. ஒருத்தருக்காக இன்னொருத்தர்கிட்ட பேசாத.. எங்களுக்குள்ள உள்ளதை நாங்க பார்த்துக்கறோம்.. நீ நீயா இரு..” என்றவன் அவள் முகம் பார்க்க, அவளும் அவனை தான் பார்த்து இருந்தாள்.

                   மாறன் என்ன என்று புருவம் உயர்த்த, “ம்ஹும்..” என்று புன்னகைத்தவள் முகம் கொஞ்சமாக தெளிவு பெற, காலையில் தான் பயந்தது எல்லாம் இப்போது அபத்தமாக பட்டது. “எல்லாம் சீக்கிரமே சரியாகணும் தாயே..” என்று வேண்டிக் கொண்டவள் அவனோடே வீட்டிற்குள் நுழைந்தாள்.

                            இவர்கள் இருவரும் வீட்டிற்குள் வர, ஹாலில் இருந்த சோபாவில் மாறனின் அத்தை மற்றும் சித்திகள் என்று உறவுப்பெண்கள் சிலர் அமர்ந்து இருந்தனர். மாறனின் அத்தை “என்னம்மா புதுப்பொண்ணு.. உன் அம்மா கிளம்பிட்டாங்களா..” என்று ராகமாக கேட்க, அவருக்கு பதில் சொல்ல விருப்பமில்லாமல் மெல்ல தலையசைத்து  வைத்தாள் யாழி.

                  அவள் பதில் சொல்லாததில், அவரின் கவுரவம் குறைந்துவிட “என்னம்மா உன் அப்பனுக்கு மேல இருப்ப போலவே… எங்கண்ணனை மறந்துட்டு உன்னை இந்த வீட்டுக்கு மருமகளாக்கி இருக்கோம்.. அதுக்காகவாவது கொஞ்சம் மரியாதையா நடந்துக்கோ..” என்று விஷம் போல் குத்த

                “அத்தை..” என்று அவரை அதட்டிவிட்டான் மாறன்.

                அதற்குள் அவனின் சித்தி “என்ன மாறா.. என்ன அதட்டுற.. பெரியவங்க, சின்னவங்க ன்னு இல்ல்லையா… எங்களுக்கே இந்த கதி.. அதுவும் வீட்டுக்குள்ள வந்த முதல்நாளே… சத்யா அக்காவை நினைச்சா தான் கவலையா இருக்கு…இன்னும் என்னென்னலாம் பார்க்க வேண்டி இருக்கோ..” என்று அங்கலாய்த்துக் கொண்டார்.

                    மாறன் அவர் பேசி முடிக்கும் வரை காத்திருந்தவன் “முடிச்சிட்டீங்களா சித்தி… இன்னும் வேற ஏதாவது இருக்கா..” என்று அழுத்தமாக கேட்டவன்

                   “என் அப்பாவை மறந்து போனது நான் இல்ல அத்தை.. நீங்க எல்லாரும் தான்… எங்க கல்யாணம் என் அப்பா முடிவு பண்ணது, பாவம் மறந்துட்டிங்க போல… அதோட மரியாதை எல்லாம் நாம நடந்துக்கறதை பொறுத்து நமக்கு கிடைக்கிறது… புரியும்ன்னு நினைக்கிறேன்..” என்றவன்

                    “இல்ல.. இன்னும் தெளிவான விளக்கம் வேணும்ம்ன்னா சொல்லுங்க.. சித்தப்பாகிட்ட சொல்லி புரிய வைக்க சொல்றேன்…” என்று அழுத்தமாக கூற, அதோடு அத்தனை பேரும் கப்சிப் தான்…

                  ஆனால், சத்யவதி எழும் வரை காத்திருந்தவர்கள் அவரிடம் சென்று நிற்க, மாறனின் அத்தை, “நல்ல மருமகளை கொண்டு வந்திருக்க நீ… இப்போவே உன் மகன் அவளை ஒன்னு சொல்ல விடாம பாதுகாக்கிறான்.. அப்பனுக்கு மேல இருப்பா போல.. நீ பார்த்து இருந்துக்கோ… ” என்றும்

                    “நீ இருக்கும்போதே சின்னவனுக்கு ஒரு வழி பண்ணிடு..” என்றும் கூற, உடன் நின்றிருந்த மாறனின் சித்தி “நீங்க வேற ஏன் மதனி.. இனி இவர்களுக்கே அவதான் படி அளக்கணும் போல.. நிலைமை அப்படிதான்க்கா இருக்கு.. நீங்க புரிஞ்சு நடந்துக்கோங்க.. வியாபாரம் எல்லாம் இப்போவே பெரியவன் கையில தான் இருக்கு.. அதையும் மனசுல வச்சுக்கோங்க..” என்று கூறிக் கொண்டு இருக்க, சத்யவதிக்கு உணவை வாங்கி கொண்டு வந்திருந்த ஆதிரை மொத்தத்தையும் கேட்டுவிட்டிருந்தாள்.

Advertisement