Advertisement

கைநீட்டினேன் என்னை கரைசேர்க்க வா 13-2

                              சத்யாவும், எழிலும் வரதனின் வீட்டிற்கு சென்று விட்டு தங்கள் வீட்டுக்கு திரும்பி வர, இவர்களுக்கு முன்பாகவே அங்கு காத்திருந்தான் தமிழ். அன்னையையும், தம்பியையும் கண்டதும் அவன் கண்கள் கோபத்தில் சிவக்க, எதையும் காட்டிக் கொள்ளாமல் அமர்ந்திருந்தான். எழிலுக்கு அண்ணனின் சாதாரண பார்வையே பயத்தை கொடுத்தது.

                             சத்யவதி தன் மகனை போலவே தானும் அமைதியாக முகத்தை வைத்திருக்க, அவர்கள் இருவரும் நெருங்கவும், “எங்கம்மா போயிருந்திங்க..” என்றவன் பார்வை எழிலை பார்க்க

                         “என் மகனுக்கு கல்யாணம் பேசிட்டு வரேன்…என் அண்ணன் வீட்டுக்கு போயிருந்தேன்..” என்றார் சத்யவதி…

                          “அந்தாளை எப்படிம்மா உங்களால அண்ணன்னு சொல்ல முடியுது.. என் அப்பாவை கொன்னவன் அந்தாளு..” என்று  தமிழ் ஆத்திரத்தோடு இரைய

                         “எதை வச்சு உன் அப்பாவை கொன்னுட்டதா சொல்ற தமிழ்… கத்தி எடுத்து உன் அப்பாவை குத்திட்டாரா.. இல்ல, உன் அப்பா தற்கொலை ஏதும் செஞ்சுக்கிட்டாரா??” என்று சத்யவதி இறுக்கமான முகத்துடன் கேட்க

                           “கத்தி எடுத்தா தான் கொலையா, என் அப்பா மனசொடிஞ்சு போகிற அளவுக்கு அவன் பேசி இருக்கான்… அத தாங்க முடியாம தான் அப்பாவுக்கு நெஞ்சுவலி வந்தது.. உங்களால எப்படிம்மா அவரை மன்னிக்க முடியுது..” என்று குமுறினான் மகன்..

                       அவன் வலி புரிந்தாலும், அது நல்லதுக்கு அல்ல என்று பட்டது சத்யவதிக்கு. இந்த கோபமும், பழிவெறியும் அவன் அழித்து விடும் என்பதை ஒரு அன்னையாக அவரால் உணர முடிந்தது. அந்த ஒரு காரணத்திற்காக  தான், அவர் தன் வலியை மறைத்துக் கொண்டது.

                    இப்போதும் கூட “உன் அப்பா நம்மை விட்டு போக யாரும் காரணம் இல்ல தமிழ்.. அவர் உன் மேல நிறைய நம்பிக்கை வச்சு இருந்தாரு.. என் மகன் என் குடும்பத்தை பார்த்துப்பான்ங்கிற நம்பிக்கையோட தான் போயிருப்பார்… நீ அதை கெடுக்கமாட்டே ன்னு நானும் நம்புறேன்…” என்றவர்

                      “வரதன் அண்ணா மேல உனக்கு கோபம் இருக்கறதை நான் தப்பு ன்னு சொல்லமாட்டேன்..ஆனா, அந்த குடும்பத்துல அவரை தவிரவும் நிறைய பேர் இருக்காங்க… எனக்கு அவங்களும் முக்கியம்.. என்னால அவங்க யாரையும் எதிரியா பார்க்க முடியாது…”

                      “நீ ஆதியை பிடிச்சு தானே கல்யாணத்துக்கு கேட்ட.. அப்புறம் நான் அங்கே போகாம எப்படி கல்யாணத்துக்கு பேச முடியும்.. அப்போ நீ என்ன எண்ணம் வச்சிருந்த உன் மனசுல…”

                        “நீயும் அவளும் ஏற்கனவே கல்யாணம் பண்ணிகிட்டதா வேற பொய் சொல்லி இருக்க.. என் மகன்கிட்ட நான் இதையெல்லாம் எதிர்பார்க்கல தமிழ்.. உனக்கு நிஜமாவே ஆதியை கல்யாணம் பண்ற அளவுக்கு பிடிச்சு இருக்கா, இல்ல உன் பழிக்கு ஆள்தேடி அவளை உள்ளே கொண்டு வர்றியா…” என்று கேட்டுவிட்டார் சத்யா.

                  தன் அன்னையை பார்த்தவன் “என்னை பார்த்தா உங்களுக்கு எப்படி தெரியுதும்மா.. நான் அதுவும் ஆதியை வச்சு அவரை பழிவாங்குவேனா.. என்ன பேசறீங்க மா நீங்க…” என்று மகன் கத்த

                   “நீ பேச வைக்கிற தமிழ் என்னை… நீ ஆதியை விரும்புறது நிஜமா இருந்தா, கல்யாணம் முடியுற வரைக்கும் அவளை நிம்மதியா விடு.. அவளை அழ வச்சு வேடிக்கை பார்க்க நினைச்ச, நீ உன் அம்மாவையும் மறந்திட வேண்டி இருக்கும்..” என்று கடுமையாக எச்சரித்தார் சத்யா…

                 அதற்குமேல் ஏன் வாயை திறக்க போகிறான் தமிழ்… எத்தனை பெரிய வார்த்தையை எவ்வளவு சுலபமாக சொல்லி விட்டார் என்று அன்னையின் மீதும் கோபம் வர, தன் கையில் இருந்த அலைபேசியை தூக்கி அடிக்க, சற்று தள்ளி இருந்த படிக்கட்டுகளில் விழுந்து நொறுங்கி போனது அவன் அலைபேசி…

                  அதுவே அவன் கோபத்தை காட்ட, விறுவிறு வென்று படிகளில் ஏறி தன்னறைக்கு வந்துவிட்டான். தன் அறையின் கதவையும் உடைப்பது போல அடித்து சாத்தியவன் கண்களை மூடி கட்டிலில் விழுந்து இருந்தான்..

                    இந்த சூழ்நிலைகளை எதிர்கொள்ள வேண்டி வரும் என்பதால் தான் ஆதியை அவன் அறவே தவிர்த்து வந்தது.. ஆனால், அவனை விடாமல் துரத்தி வெற்றி கொண்டிருந்தாள் அவள். இதோ இப்போதே தொடங்கிவிட்டது தனக்கான சோதனைகள் என்று தோன்றிய கணம் மனம் வெகுவாக சோர்ந்து போனது.

                     வரதனை இனி உறவாக நினைக்க வேண்டும் என்ற நினைவே கசப்பாக இருந்தது அவனுக்கு… அதுவும் முக்கியமான உறவு… தன்னால் தன் யாழியை காயப்படுத்தாமல் இருக்க முடியுமா?? என்பதும் பெரிய கேள்வியாக அவன் முன் நிற்க, கூடவே தந்தையின் நினைவும்  அலையாக எழுந்தது.

                       “ஏன்ப்பா இப்படி என்னை விட்டுட்டு போனீங்க..” என்று கலங்கி தவித்தவன், “நீயும் உன் அப்பனை மாதிரி இருந்திருக்க வேண்டியது தானேடி..” என்று மனம் கவர்ந்தவளிடமும் மானசீகமாக மண்டியிட்டு கொண்டிருந்தான்…

                     “எப்படி சமாளித்து வெளி வரப்போகிறோம்” என்று அவன் மலைத்து நிற்க, அவனுக்காக எல்லாம் காத்திருக்கவே இல்லை சத்யவதி.. கையில் பணமும், சொன்னதை சொன்னபடி செய்து முடிக்க இளைய மகனும் இருக்கையில் அவருக்கென்ன கவலை இருக்க முடியும்…

                     மகனின் திருமணம் என்ற எண்ணம் அவரின் நோயையும் தற்காலிகமாக விரட்டி விட, வேகமாக செயல்பட்டார் அவர். அடுத்தடுத்த வேலைகளை பட்டியலிட்டவர், திருமணத்திற்கான மொத்த வேலைகளையும்  அதற்கென இருந்த ஒரு ஏஜென்சியிடம் ஒப்படைத்து விட்டார்.

                      எழில் கொடுத்த யோசனை தான். அடுத்ததாக யாரை அழைக்க வேண்டும், உறவு, நட்பு, தொழில் வட்டம் என்று அழைக்கும் பட்டியல் நீள, வீட்டில் செய்து முடிக்க வேண்டிய சடங்குகள், சம்பிரதாயங்கள் என்று அத்தனை கவலை அவருக்கு… தமிழ் இரண்டு நாட்கள் இது அனைத்தையும் பொறுமையாக பார்த்திருந்தவன் மூன்றாவது நாள் யாழியின் முன் சென்று நின்றான்…

                       அவன் சென்ற நேரம் அவள் வீட்டிலேயே இருக்க, தமிழை கண்டதும் பழைய கோபம் மீண்டும் தலைதூக்கியது தான்… ஆனால், அவனின் சோர்ந்த முகமும், தளர்ந்த உடலும் அவளை தமிழிடம் தானாகவே நெருங்க செய்ய, அவனுக்கு அருகில் வந்து நின்றவள் “என்னாச்சு.. ஏன் இப்படி இருக்கீங்க..” என்று தன்னவனை கேட்க,

                     “நான் பேசணும் யாழி.. என்னோட வா..” என்று மட்டும் சொல்ல,

                    என்னவோ என்று மனம் தவித்தாலும், தன் உடையை பார்த்தவள் “ரெண்டு நிமிஷம் இருங்க.. டிரஸ் மாத்திட்டு வரேன்..” என்று அவனை அறையில் அமர்த்தி, அன்னைக்கு அழைத்து காஃபி கொண்டு வர சொல்லி உடைமாற்ற சென்றாள்.

                   பத்து நிமிடங்கள் கழித்து அவள் வெளியே வர, அதற்குள் அவனுக்கு குடிக்க கொடுத்திருந்தார் உமாதேவி. அவரும் அந்த அறையில் இருக்க, காஃபியை குடித்து முடித்தவன் “நான் கூட்டிட்டு வந்து விடறேன் அத்தை..” என்று அவரிடம் சொல்லிவிட்டு யாழியை பார்க்க, அவளும் அன்னையிடம் மெல்ல தலையசைத்து விட்டு அவன் பின்னால் நடந்தாள்..

                  அமைதியாக காட்டிக் கொண்டாலும், “ஏன் இப்படி இருக்கிறான்…” என்று தவித்து போனது அவள் உள்ளம்.. எத்தனையோ எண்ணங்கள்.. மீண்டும் திருமணத்தை மறுக்க போகிறானோ?? தன் மீது கோபமாக இருக்கிறானோ??? இல்லை வேறெதுவுமோ?? என்று என்னென்னவோ எண்ணி அவள் உழல, அமைதியாக காரை செலுத்திக் கொண்டிருந்தான் அவன்.

                    அவனுக்கு சொந்தமான பீச் ஹவுஸ் ஒன்று நீலாங்கரையில் இருக்க, அங்குதான் அழைத்து வந்திருந்தான் அவளை. செக்யூரிட்டி கதவை திறக்க, காரை வாசலில் நிறுத்தி இறங்கினான் அவன்.

                     “யாருடைய வீடு இது..” என்று கேள்வி எழுந்தாலும், அமைதியாக அவனுடன் நடந்தாள் யாழி… வீட்டை சுற்றிலும் வராண்டா போல இடம்விட்டு கைப்பிடி சுவரும் இருக்க, அந்தப்பக்கமாகவே அழைத்து சென்றான் அவளை… இருவரும் வீட்டின் பின்புறம் வர, செயற்கையாக அமைந்த ஒரு தோட்டம் கண்களுக்கு விருந்தானது.

                   ஆனால், இயற்கையிலேயே அமைந்துவிட்ட காடு போல, அத்தனை அழகுடன் அந்த இடம் காட்சியளிக்க, பாரிஜாதப் பூக்களும், இருவாட்சி பூக்களும் மலர்ந்து மணம் பரப்பிக் கொண்டிருந்தது அங்கே.. அந்த தோட்டத்தின் நடுவே அந்த செடிகளை கொண்டே கூடாரம் அமைத்தது போல, ஒரு கம்பி வேலி அமைக்கப்பட்டு இருக்க, அத்தனை குளிர்ச்சியாக இருந்தது..

                    அந்த கூடாரத்தின் நடுவே மரத்தினால் ஆன சில இருக்கைகள் இருக்க, அந்த கூடாரத்தின் ஒருபுறம் ஒரு ஊஞ்சல்… அதுவும் மரத்தில் செய்யப்பட்டு இருக்க அத்தனை வேலைப்பாடுகளுடன் அழகாக இருந்தது…

                    அந்த ஊஞ்சலும், அந்த இடமும் என்றோ கண்ட கனவை கண்முன் நிஜமாக்குவது போல தோன்றவும், அந்த கூடாரம் போன்ற அமைப்பின் வாசலிலேயே நின்றுவிட்டாள் யாழி… மாலை வெயில் இன்னமும் மீதி இருக்க, அந்த கூடாரத்திற்குள் ஆங்காங்கே புள்ளியாக ஊடுருவிய வெயில், அவளின் கன்னத்திலும் மெல்ல பட்டு சிதற, அவளின் கண்ணீர் துளி முத்து போல் மின்னியது அந்த வெயிலில்…

                     தமிழ் அவள் முகத்தை பார்த்தவன் தன் கைகளை விரிக்க, நின்ற இடத்திலேயே துவண்டு விடும் நிலையில் இருந்தாள் யாழி.. தமிழ் அவளின் நிலை அறிந்தாலும், நின்ற இடத்திலிருந்து அசையாமல் இருக்க, மெல்ல தன் வலது கையை அவன் முன்னால் நீட்டினாள் யாழி.

                     அவளை உணர்ந்தவனாக அவள் கையை பிடித்து இழுத்தவன் அவளை தன் நெஞ்சில் சாய்த்துக் கொள்ள, தன் கையால் வாயை அழுத்தமாக பொத்தி கொண்டாள்.. அதையும் மீறி அவள் கேவல் சத்தம் வெளியே கேட்டுவிட, மாறனின் கண்களிலும் கண்ணீர் தான்…

                     அந்த அணைப்பு இருவருக்குமே ஆறுதலாக இருக்க,  அவனுக்குள் கரைந்து விடும் எண்ணத்தில் இருந்தால் போலும்.. அவன் நெஞ்சில் தன் கன்னத்தை பதித்து இருந்தவள் அணைப்பை இறுக்கி கொண்டே போக, அவன் இடுப்பை வளைத்திருந்தது அவள் கைகள்…

Advertisement