Advertisement

கைநீட்டினேன் என்னை கரைசேர்க்க வா 13

                              முன்பே எழில் அழைத்து சொல்லி இருந்தாலும், ஒருவாறாக தன்னை நிலைப்படுத்திக் கொண்டு இருந்தாலும் சத்யவதி தன் வீட்டு வாசலில் நின்ற கணம் கண்ணீர் பெருக்கெடுத்தது உமாதேவிக்கு.அதுவும் அந்த சக்கர நாற்காலியில் அவரை பார்க்கவும் தாளவே முடியவில்லை அவரால்.

                             சேலைத்தலைப்பை கையில் பிடித்து, அதே கையால் தன் வாயை மூடிக் கொண்டவர் சத்தமில்லாமல் குலுங்க, சத்யவதி ஆறுதலாக பார்த்தார் அவரை. எழில் வேகமாக தன் அத்தையை நெருங்கி அணைத்துக்கொள்ள, அவன் அணைப்பில் சற்று அழுகை குறைந்தது அவருக்கு.

                          கண்களை துடைத்துக் கொண்டு அவர் சத்தியவதியை நெருங்கி, அவரது கையை பிடித்துக் கொண்டு மண்டியிட, சத்யாவும் லேசாக கலங்கிய விழிகளுடன் அவரை நன்றாக இருந்த தன் வலக்கையால் அணைத்துக் கொண்டார்..

                           உமா “என்னை மன்னிச்சுடு சத்யா… என்னால எதுவுமே செய்ய முடியாம போச்சு..” என்று மன்னிப்பை வேண்ட

                        “நீ என்ன செய்வ உமா… இதுல உன்னோட தப்பு என்ன இருக்கு..நடந்ததை அப்படியே ஏத்துக்கிட்டு கடந்து வர பார்க்கிறேன்.. நீயும் எல்லாத்தையும் மறந்திடு..” என்றதோடு அந்த பேச்சை முடித்து விட்டார் சத்யவதி.

                       எழில் தன் அன்னையின் முகத்தை ஆராய்ந்து கொண்டே அருகில் நின்றான். அவர் முகத்தில் சின்னதாக ஏதேனும் அசௌகரியமோ, கலக்கமோ தெரிந்தால் அடுத்த நிமிடமே இங்கிருந்து கிளம்பி விட வேண்டும் என்ற முடிவுடன் தான் அவரை அங்கே அழைத்து வந்திருந்தான். ஆனால், இப்போது தன் அன்னையின் இந்த நிதானமான பேச்சு, அவரின் முதிர்ச்சியை தெரிவிக்க, சற்றே ஆறுதலாக இருந்தது அவனுக்கு.

                        உமா கண்களை துடைத்துக் கொண்டு அவர்களை வீட்டிற்குள் அழைத்து வந்து அமர வைக்க, சத்யவதி ஆதியைத் தான் கேட்டார் முதலில்… “ஆதியை கூப்பிடு உமா..” என்று அவரே கேட்டு விட, எழில் “நான் கூட்டிட்டு வரேன்மா..” என்று மேலேறினான்.

                       உமா தன் தோழியுடன் அமர்ந்து கொள்ள, எழில் சென்ற நேரம் ஆதி அறையின் கதவு திறந்து தான் இருந்தது. கட்டிலில் சுருண்டு படுத்திருந்தவளை காண பாவமாக இருந்தாலும், எப்போதும் போலவே அவள் காதருகில் இருந்த தலையணை எடுத்து ஒன்று வைத்தவன் “இன்னும் தூக்கம் விடலையா உன்னை..” என்று கேட்டுக் கொண்டே அருகில் அமர்ந்தான்.

                      அவனை அதிர்ச்சியாக பார்த்தவள் “நீ எப்படிடா இங்கே வந்த.. உன் அண்ணன் வந்திருக்காரா??” என்று விட்டு வேகமாக அறைவாசலை பார்க்க

                       “ப்பா.. அலர்ட்டு தான்… அதான் அவனை வாசலோட துரத்தி விட்டுட்டியே எப்படி வருவான்…” என்று கோபமாக காட்டிக் கொண்டான்..

                       “ஹ்ம்ம்.. உன் அண்ணன் என்னை துரத்தினத எல்லாம் நீ கணக்குல எடுத்துக்கவே மாட்டியா…” என்றவள் குரலில் ஆதங்கம் தான் முழுதாக வெளிப்பட்டது.

                       “அவனை பழிவாங்குறியா நீ..” என்று எழில் அவள் முகம் பார்க்க, “முடியுமா உன்னால்..” என்று கேளாமல் கேள்வி கேட்டது அவன் பார்வை

                          “பாடம் நடத்துறேன்…” என்றாள் விடையாக… எழில் புரியாமல் பார்க்க, “உன் அண்ணன் வரதராஜனை ஜெயிக்க நினைக்கிறார்… என்னை வச்சு.. அது தப்பு.. நான் அதுக்கான ஆள் இல்ல ன்னு சொல்லி கொடுக்கிறேன் உன் அண்ணனுக்கு…”என்றாள் ஆதிரையாழ்.

                   “நீ என்ன நினைக்கிற… உன் ஆளுக்கு புரிஞ்சிடுமா..” என்று எழில் நக்கலாக கேட்க

                   “புரியாம போனா, இப்படியே அலையட்டும்.. “என்றாள் இரக்கமில்லாமல்

                 “அவன் அலையுறதா இல்ல.. அதான் அம்மாவை அனுப்பி வச்சிருக்கான்…எப்படியும் உன்னை தூக்கிடுவான் அவன்..” என்று எழில் எரிச்சலூட்ட

                    “அம்மா..சத்யா அத்தை வந்திருக்காங்களா எழில்..” என்றாள் அதிர்ச்சி மற்றும் ஆச்சரியத்துடன்..

                    “கீழே வெயிட்டிங்.. உனக்காக..” என்று அவன் அப்போதும் சாதாரணமாக சொல்ல,அவனை கண்டு கொள்ளாமல் வேகமாக கீழிறங்கி விட்டாள் அவள்.

                      படிகளில் வரும்போதே கால்கள் பின்னலிட்டுக் கொண்டது போல தடுமாற, சத்யாவை கண்டதும் நடை நின்றே விட்டது.. சத்யாவும் அவளை பார்த்து விடவும், சின்னவள் கண்களை கசக்க, சத்யா தன் வலக்கையை “வா..” என்பது போல் உயர்த்திக் காட்ட, அதற்குமேல் யோசனை இல்லை அவளிடம்..

                        வேகமாக நான்கே எட்டுக்களில் அவரை அடைந்து விட்டவள் அவரை அந்த நாற்காலியிலேயே இடுப்போடு சேர்த்து கட்டிக் கொள்ள, அவர் வயிற்றில் அழுத்தமாக புதைந்து போனது அவள் முகம். அவள் உடல் அழுகையில் குலுங்க, அவள் தலையை தடவி கொடுத்தவர், “என் மருமக வளர்ந்துட்டதா நினைச்சேன்.. இன்னும் இப்படி சின்ன பிள்ளையாட்டமா கண்ணை கசக்கிறாளே…” என்று சிரிக்க

                      அவரின் வயிற்றில் இப்படியும் அப்படியுமாக முகத்தை திருப்பியவள் “என்னை பார்க்கணும் ன்னு தோணவே இல்லையா உங்களுக்கு..” என்று கேட்க

                     “அதெப்படி நினைக்காம இருப்பேன்… என் வீட்டு மகாலக்ஷ்மியை நானே கஷ்டப்படுத்த நினைப்பேனா… ” என்றார் அவர்…

                     “நீங்க கூப்பிடாம தான் கஷ்டப்பட்டேன்.. ஹாஸ்பிடல்ல கூட உங்களை பார்க்கவிடல உங்க மகன்.. ” என்று புகார் படித்தாள் ஆதி..

                 “அதுதான்டா காரணம்,… அவன் ஒரேடியா ஒதுங்கிட்டானே… உன்னை நான் வந்து பார்த்து நீ மனசுல ஆசையை வளர்த்துட்டு ஏன் சங்கடப்படணும்.. அதனால தான் விலகிடுவோம்ன்னு இருந்துட்டேன்டா… நீயாவது ஒரு நல்ல வாழ்க்கையை வாழனும் இல்லையா..” என்று அவளின் ஒரு பக்க கன்னத்தை கையில் பிடிக்க, அந்த கையை கன்னத்தோடு அழுத்திக் கொண்டவள் இன்னும் கண்ணீர் வடித்தாள்..

                     ஓரளவுக்கு அவள் ஊகித்த விஷயம் தான், இப்போது அவர் வாயால் கேட்கவும் இன்னும் அழுகை வந்தது.. அவள் அப்படி அழுவதை பொறுக்க முடியாமல் “போதும் ஆதி.. எதுக்காக இந்த அழுகை.. அதுதான் நானே என் மருமகளை தேடி வந்துட்டேனே..” என்று சத்யா கொஞ்சலாக கூற

                     மறுப்பாக தலையசைத்தவள் “உங்க மகனுக்காக வந்திருக்கீங்க…” என்றாள் வீம்புடன்

                   “சரி என் மகனுக்காக தான் வந்திருக்கேன்.. சொல்லு.. என் வீட்டுக்கு மருமகளா வர்றியா…” என்று தடாலடியாக கேட்க, அவர் அப்படி கேட்பார் என்று அந்த நிமிடம் எதிர்பார்க்கவில்லை அவள்..

                 கண்களில் மீண்டும் ஒற்றை துளியாக கண்ணீருடன் அவள் தடுமாற, “என்னால என் ரெண்டு பிள்ளைகளையும் நல்லா பார்த்துக்க முடியல ஆதி.. என் வீட்ல உயிர்ப்பே இல்ல… முக்கியமா என் பிள்ளைகளோட முகத்துல ஜீவனே இல்ல…”

                 “முக்கியமா, தமிழ்… மொத்தமா மாறி நிற்கிறான்.. என்னால அவனை நெருங்க முடியல ஆதி…எனக்கு என் மகனை மீட்டு கொடுப்பியா…” என்று கேட்டவர் ஆதியின் முகத்திலேயே பார்வையை நிலைக்கவிட, கண்ணீருடன் லேசாக சிரித்தாள் அவள்.

                    இன்னமும் தமிழுடனான அவளின் பிணக்கு அப்படியே தான் இருந்தது.. ஆனால், தன்னிடம் இப்படி வந்து நிற்கும் இவரை மறுக்க முடியுமா??? என்று நினைத்தவளுக்கு தமிழ் மீண்டும் அவளை வெற்றி கொள்வதாகவே தோன்றியது…

                    ஆனால், இந்த நிமிடம் அவளால் சத்தியவதியை மறுக்க முடியாது…. அவரின் முகம் பார்த்தவள் அவருக்கு இசைவாக தலையசைக்க, அவளின் உச்சந்தலையில் கையை வைத்து ஆசிர்வதித்தார் சத்யவதி.. அவர் தலையில் கையை வைக்கும் நேரம்தான் வரதன் வீட்டிற்குள் வந்தது.

                      இத்தனை நேரம் தள்ளி நின்றிருந்த எழில் வரதனை  கண்டதும் அன்னையை நெருங்கி நிற்க,அவன் எதிர்பார்த்தது போல் வரதராஜன் நடக்கவே இல்லை. மாறாக, சத்யாவை கண்டவர் முழுதாக முகத்தில் காட்டியது அதிர்ச்சிதான்.. கூடவே கொஞ்சம் தவறு செய்துவிட்ட பாவனை.

                     சத்யா சில நிமிடங்கள் கழித்தே வரதனை கண்டவர் “வாங்க அண்ணா..” என்று எப்போதும் போல் மரியாதையாக விளிக்க, வரதனின் முகத்தில் அறைந்தது போல் இருந்தது.. சில நேரங்களில் மன்னிப்பும் தண்டனையே அல்லவா…. சத்யா வரதனுக்கு கொடுப்பது அத்தகைய தண்டனை தான்…

                  தமிழை எதிரியாக பாவித்து எதிர்த்து நிற்பவரால், சத்யாவின் முகத்தை நேராக பார்க்க முடியாமல் போக, அவரை இன்னும் குன்ற வைத்தது அவரின் வெறுமையான நெற்றியும், அவர் அமர்ந்திருந்த சக்கர நாற்காலியும்.

                    அன்று தமிழிடம் சேதுமாதவன் இறப்பிற்கு தான் காரணமில்லை என்று குதித்தவருக்கு, இன்று தன்னால் தான் என்ற எண்ணம் தானாகவே எழுந்தது.. சத்யவதி கலங்கி கண்ணீர் விட்டு சட்டையை பிடித்து சண்டையிட்டு இருந்தால் என்ன செய்து இருப்பாரோ, அவரின் இந்த அமைதியான புன்னகையும், “அண்ணா..” என்ற அழைப்பும் அவரை மிகவும் பாதித்தது.

                       அவரின் கண்களை சந்திக்க முடியாமல் மெல்ல தலையசைத்தவர் சோஃபாவில் அமர்ந்து இருந்தவர்களை நெருங்க, ஆதி எழுந்து சத்யாவின் அருகில் நின்று கொண்டாள். வரதன் அங்கே இருந்த ஒற்றை சோஃபாவில் அமர, உமா தன் கணவரை பயத்துடன் பார்த்தார்…

                     அவருக்கு தெரியாதே வரதன் எண்ண அலைகள்.. எனவே அமைதியாக அவரை பார்த்திருந்தார் உமா… அனால் அதற்கெல்லாம் தேவையே இல்லாமல், சத்யவதி “நான் உங்ககிட்ட பேச தான் வந்தேன்ண்ணா… தமிழ்-ஆதி கல்யாண விஷயமா.. நான் வந்து பேசறது தான் முறை இல்லையா..??” என்றதும் வழக்கம் போல் அவரின் பிறவிக்குணம் தலை தூக்க

                    “எல்லாம் முறையா தான் நடக்குதா.. அதுதான் கல்யாணமே முடிஞ்சுது ன்னு சாதிக்கிறானே உன் மகன்..” என்று விட்டார் வரதன்..

                     “தமிழை பத்தி நான் சொல்லித்தான் உங்களுக்கு தெரியனுமா அண்ணா… வீம்பு பிடிச்சா பிடிச்சது தான்… அவன்கிட்ட நாம நடந்துக்கறதை பொறுத்து தான் அவனும் நடப்பான்… அவ வீம்புக்காக நான் என் மருமகளை அப்படியே கூட்டிட்டு போக முடியாது இல்லையா…”

                    “அவன்கிட்ட என்னால எதுவும் பேச முடியாது.. ஒரு அளவுக்கு மேல பேசினா, உங்ககிட்ட சொன்னதுபோலவே,  கல்யாணம் முடிஞ்சிடுச்சு…என் பொண்டாட்டியை கூட்டிட்டு வந்துட்டேன் ன்னு சொல்லுவான்… அப்படி நடக்காம இருக்கத்தான் நான் வந்திருக்கேன்..”

                       “ஆதி என் வீட்டு மருமக..” என்று அவள் கையை பிடித்துக் கொண்டவர் “அவளை மரியாதையா என் வீட்டுக்கு அழைச்சிட்டு போகத்தான் எனக்கு விருப்பம்.. உங்களுக்கும் உங்க மகளை அப்படி அனுப்பி வைக்க தான் விருப்பம் இருக்கும்… “

                     “நாம முடிவெடுப்போம் அண்ணா.. நீங்க சொல்லுங்க என்ன செய்யலாம்..” என்று கேட்டு பதிலுக்காக அவர் முகம் பார்க்க, என்ன சொல்லி விட முடியும் வரதனால்… இது பெண் கேட்பா இல்லை மறைமுகமான மிரட்டலா என்று யோசித்துக் கொண்டிருந்தார் அவர்..

                       எப்படியும் என் மகன் உன் மகளை விட்டு விட மாட்டான் என்று சொல்லாமல் சொல்கிறாரோ சத்யவதி என்ற எண்ணம் தான்… ஆனால், இதற்குமேல் மறுத்தும் என்ன பயன்?? தன் மகளே தனக்கு துணையாக இல்லையே… என்று நினைத்தாரோ என்னவோ, “உங்களுக்கு என்ன தோணுதோ செய்ங்க…எல்லாம் என்னை கேட்டு நடக்குதா என்ன..?” என்றதோடு எழுந்து கொண்டார் வரதன்..

                     அவர் இந்தளவுக்கு அமைதியாக இருப்பதே போதும் என்று நினைத்தாரோ என்னவோ உமாதேவி நிலைமையை கையில் எடுத்துக் கொண்டார். அன்றே ஜோசியரை வரவழைத்து திருமணத்திற்கு நாள் பார்க்க சொல்ல, அவர் ஒரு வாரம் சென்று ஒரு முஹூர்த்தம் இருப்பதாக குறித்துக் கொடுத்திருந்தார். அதை கையில் வாங்கி கொண்டு சத்யா தன் வீட்டை அடைய, அங்கே ருத்ர மூர்த்தியாய் வானுக்கும் பூமிக்குமாக குதித்தான் மகன்.

                    

                         

Advertisement