Advertisement

                           “அடப்பாவி.. ஆதி வீட்டுக்கு வரும்போதெல்லாம் உன்னையும் பார்த்துட்டு தானேடா வந்தேன்… இப்போ கொஞ்சம் கூட  பாசமே இல்லாம பழி போடற..” என்று அவர் கேட்க

                        “உங்க பொண்ணை பார்க்க நீங்க வந்தீங்க.. என்னை பார்க்கவா வந்திங்க.. ” என்று அவன் வம்புக்கு இழுக்க

                        “கொஞ்சம் கூட உண்மையை சொல்லமாட்டியாடா…  உன்னை வரச்சொல்லிட்டு தானே அங்கே வருவேன் நான்… ஆதியை மட்டும் பார்க்க, உன்னை ஏண்டா வர சொல்லணும்..” என்று அவர் கோபம் கொள்ள

                          “சரி சரி விடுங்க.. எனக்காக தான் வந்திங்க… இப்போ உங்க பொண்ணு எங்க..” என்று அவன் ஆதியிடமே வர

                           “எங்கேன்னா.. அவ ரூம்ல இருக்கா..” என்றார் நொடிப்பாக

                           “என்னவாம்.. இந்த நேரத்துல வீட்ல என்ன பண்றா.. இவ லட்சணம் தெரிஞ்சு கேஸ் எதுவும் வரலையா..” என்று எழில் நக்கலடிக்க

                            “அதெல்லாம் சமத்து தான்.. இப்போ கொஞ்சம் திமிரெடுத்து போச்சு கழுதைக்கு… சேர்க்கை சரியில்ல கொஞ்ச நாளா.. அதான் காரணம் போல..” என்றார் உமா

                            “இதெல்லாம் கொஞ்சம் கூட சரியில்ல மாமியாரே… நீங்க என்னை ரொம்ப டேமேஜ் பண்றிங்க..”

                         “உனக்கே புரியுதா.. நான் உன்னைத்தான் சொல்வேன்னு..” என்று அதற்கும் சிரித்தார் உமா…

                         “கிரேட் இன்சல்ட்…” என்று அவன் நெற்றியில் தட்டிக் கொள்ள, “விடுங்க மாப்பிளை.. நமக்கு இதெல்லாம் புதுசா என்ன..” என்றார் உமாதேவி..

                        “ரொம்ப பேசறீங்க உமா மேடம்.. சரி.. என்னதான் ஆச்சு வக்கீலுக்கு.. ஏன் வீட்ல இருக்கா..” என்றான் மீண்டும்..

                        “ஒரு வாரமாவே அப்படிதான் இருக்கா எழில்.. உன்கிட்ட கூட பேசலையா.. “என்று அவர் கேட்க

                      “அவ பேசினா, நான் ஏன் உங்க வீட்டுக்கு கூப்பிட போறேன்.” என்றவன் “என்னாச்சு அவளுக்கு.. வீட்ல என்ன நடந்தது..” என்று விசாரணையை தொடங்க

                       “என்ன நடந்தது..தமிழ் அன்னைக்கு வீட்டுக்கு வந்துச்சு… அன்னைக்கு கொஞ்சம் வாக்குவாதம்.. தமிழுக்கும் அவ அப்பாவுக்கும்.. அதுல இருந்தே இப்படித்தான் இருக்கா..” என்று அவர் மெல்லிய குரலில் கூறிக் கொண்டிருக்க,

                      “அண்ணன் வீட்டுக்கு வந்தானா..” என்று அதிசயமாக கேட்டான் எழில்..

                     “உனக்கு தெரியாதா எழில்.. அப்போ சத்யாக்கும் தெரியாதா..” என்று அவர் பதற

                     “பேசறேன் ன்னு சொன்னான் அத்தை.. அங்கே வந்தது எல்லாம் சொல்லல.. என்ன பேசுனான்.. ஆதி இவ்ளோ கோபப்படற அளவுக்கு ஏதோ பேசி இருக்கான் இல்லையா..” என்றான்…

                       உமா ஒரு பெருமூச்சை வெளியிட்டவர் “தமிழ் பேசினது தப்பெல்லாம் இல்ல எழில்.. என் பொண்டாட்டியை என்னோட அனுப்பி வைங்கன்னு ஒரே ரகளை… அதுவும் உன் மாமாவோட மட்டும்தான்.. என்கிட்டே எல்லாம் மரியாதையா தான் பேசுச்சு…” என்றார் உமா.

                      “இதெல்லாம் அநியாயம் மாமியாரே.. இன்னும் கல்யாணமே ஆகல..அதுக்குள்ள பொண்டாட்டியை அனுப்பி வைங்க  ன்னு சண்டைக்கு நிற்கிறான்.. அவன் நல்லவன்.. உங்ககிட்ட மரியாதையா பேசினான் ன்னு சொல்றிங்க நீங்க..” என்று எழில் வாயை பிளக்க

                     “கல்யாணம் ஆகலையா.. மூணு வருஷத்துக்கு முன்னாடியே கல்யாணம் முடிச்சிட்டானாம்டா உன் அண்ணன்.. கையில எப்போதும் ஒரு மேரேஜ் சர்டிபிகேட் வேற.. அதை எங்கே இருந்து பிடிச்சான் தெரியல.. அவன் வந்த வேகத்துக்கு என் பொண்ணை கூட்டிட்டு போயிடுவான் ன்னு தான் நெனச்சேன்…”

                       “நான் சொல்லவும், என்  பேச்சை கேட்டு அப்படியே விட்டு போனானே.. அது போதாதா..” என்றார் அவர்… குரலில் ஏக பெருமிதம்..

                        “அட மக்கு மாமி… உன் பொண்ணை கல்யாணம் பண்ணிட்டேன் ன்னு பொய் சொல்லி இருக்கான்.. அத ஏன் ன்னு கேட்கல… அவனுக்கு சப்போர்ட் வேறயா..” என்று அவன் இன்னமும் பேச

                       “அதுக்குதாண்டா இவ மலையேறிட்டா… அவன் வந்து பேசி கூட உள்ளவே இருந்துட்டா.. இன்னமும் அப்படியே தான் இருக்கா…”

                     “ஏதோ சரி ஆகி வருது.. ரெண்டு பேரும் சரி ஆகிடுவாங்க ன்னு நம்மை நிம்மதியா இருக்க விடறாங்களா.. அதுக்குள்ள இதோ, மறுபடியும் முதல்ல இருந்து தொடங்கியாச்சு..” என்று அலுத்து கொண்டார் உமாதேவி..

                      “அட விடுங்க மாமியாரே.. நமக்கு என்ன இது புதுசா… இவங்க ரெண்டு பேரும் தானே  எல்லாம் வழிக்கு வரமாட்டாங்க.. நாமளே பார்த்து இழுத்துட்டு வந்தா தான் உண்டு..நீங்க இவங்களை நெனச்சு கஷ்டப்படுத்திட்டு இருக்காதிங்க… நான் என்ன செய்யுறது பார்த்துட்டு கூப்பிடுறேன்..” என்று அழைப்பை துண்டித்தான் அவன்.

                                                உமாதேவி அவனிடம்  பேசியதில் சற்றே நிம்மதி அடைய, இங்கே எழில் தன் அடுத்தகட்ட வேலையை தொடங்கி இருந்தான். தன் வீட்டின் போர்டிகோவில் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டே யோசித்தவன் ஒரு முடிவுக்கு வந்தவனாக அன்னையின் முன் சென்று நின்றான்.

                         சத்யவதியின் உடற்பயிற்சி நேரம் முடிந்திருக்க, குளித்து முடித்து புத்துணர்வோடு அமர்ந்திருந்தார் அவர். மகனை பார்க்கவும் வாஞ்சையாக “சாப்பிட்டியா எழில்.. எதுவும் வேலை இல்லையா.. வீட்டிலேயே இருக்கியே..” என்று கேட்க

                        தன் அன்னையின் அருகில் கட்டிலில் அமர்ந்தவன் “ம்மா.. உன் பெரிய பையன் மறுபடியும் சொதப்பி வச்சிருக்கான்..” என்று அண்ணனை புகார் சொல்ல

                       “அவனை குறை சொல்லாம உனக்கு தூக்கமே வராதுடா.. என்ன செஞ்சான் என் மகன்..” என்று அன்னை கேட்க, உமா சொன்னது மொத்தத்தையும் அன்னையிடம் கூறி முடித்து விட்டான் எழில். கேட்டிருந்த சத்யவதியின் முகம் கலங்கி போக,

                        “இவன் ஏன்  இப்படியே இருக்கான்.. ஏன் அவரோட போட்டிக்கு நிற்கணும்… இப்போ முன்ன மாதிரி மல்லுக்கு நின்னா அது ஆதியை தானே பாதிக்கும்.. அது புரியலையே இந்த பையனுக்கு.. அவளை அழ வச்சு, இவன் எப்படி நிம்மதியா இருப்பான்..” என்று புலம்ப தொடங்கி விட்டார் சத்யவதி.

                        “அம்மா.. நீங்க டென்சன் ஆகாதிங்க.. உங்க பையனை எப்படி வழிக்கு கொண்டு வர்றது.. அதை யோசிங்க..” என்றான் எழில்..

                       “என்னசெய்ய முடியும் எழில்.. சின்னபையனா அவனை அடிச்சு திருத்த… “

                      “நீங்க அடிச்சிட்டாலும்… என்னை மட்டும்தான் தாயே வெளுத்து இருக்கீங்க அப்பவும்..” என்று மகன் குறை கூறினான்..

                        “நீ நிறைய சேட்டை பண்ணுவ…ஆனா, தமிழ் அப்படி இல்லையே.. நான் சொன்னதை அப்படியே கேட்பான்… ரொம்ப அடம் பிடிச்சதும் கிடையாது..அவனை ஏன் அடிக்கணும்..” சிரிப்புடன் சத்யவதி கேட்க

                        “அதானே.. இப்படியே செல்லம் கொடுத்து தான் அவனை கெடுத்து வச்சிருக்கீங்க… ஒழுங்கா தலையிலேயே ரெண்டு தட்டு தட்டி கல்யாணம் பண்ணி வச்சிடுங்க.. அதுக்குமேல சண்டை வந்தா, அதுங்களே சமாளிக்கட்டும்..” என்று எளிமையாக வழி சொல்லிவிட்டான் அவன்.

                         “என்னடா..அதுங்க இதுங்க ன்னு சொல்ற… கொஞ்சம் கூட மரியாதை கொடுக்கமாட்டியா நீ..” என்று அவனையே அன்னை கடிய

                          “இதை மட்டும் சரியா செய்ங்க..” என்று முனகினான் மகன்…

                        “என்னை என்ன எழில் செய்ய சொல்ற..” என்றவர் பாவமாக மகன் முகத்தை பார்க்க

                         “ஆதிக்கிட்ட நீங்க பேசுங்க.. அவ ஒத்துப்பா…” என்று எழில் கூறவும், சத்யவதி சில கணங்கள் யோசித்தவர் “என்னை கூட்டிட்டு போறியா அங்கே…” என்று கேட்க

                        “ம்மா.. இதுக்கு எதுக்கு நீங்க போகணும்.. ஆதிக்கு போன்ல பேசலாம்..” என்றான் மகன்..

                       “கல்யாண விஷயம் எப்படி போன்ல பேச முடியும் எழில்.. நீ என்னை கூட்டிட்டு போ..”

                       “எதுக்கு உங்க மகன் என் காலை உடைக்கவா.. ம்மா.. அண்ணனுக்கு தெரிஞ்சா கண்டிப்பா அடிப்பான்.. அங்கெல்லாம் வேண்டாம்.. நான் ஆதியை இங்கே வரச்சொல்றேன்..” என்று எழில் முடிவாக சொல்லிவிட

                        “என்னை கூட்டிட்டு போ எழில்.. நாம பொய் பேசுவோம்… முறையா செய்யணும் இல்ல..” என்று சத்யவதி எழிலை பார்க்க

                        “ம்மா நீ எப்படிம்மா அங்கே.. அங்கே அவர் வேற இருப்பாரு.. வேண்டாம்மா.. உனக்கு கஷ்டமா இருக்கும்மா.. வேண்டாம்..” என்றுவிட

                        “நான் சொன்னேனாடா உங்ககிட்ட… என் மகன் வாழ்க்கை இது.. என்னை பத்தி யோசிச்சா ஆகுமா??? நீ என்னை கூட்டிட்டு போ.. வரதன் அண்ணன்கிட்ட கூட நானே பேசறேன்.. உன் அண்ணனை பேசவிட்டா வம்புதான்” என்றார் முடிவாக

                    அன்று மதியமே இருவரும் செல்வதாக முடிவாக, முன்னமே உமாதேவிக்கு அழைத்து சொல்லிவிட்டான் எழில். உமா ஒரு மெல்லிய பதட்டத்துடன் இவர்களுக்காக காத்திருக்க, சத்யவதி எதையும் காட்டிக் கொள்ளாமல் அமைதியாக தன் மருமகளிடம் அவள் வாய் வழியாகவே சம்மதம் பெற்று விட்டார் திருமணத்திற்கு…

                        அழையா விருந்தாளியாக மாலையில் வரதனும் வந்து நிற்க, தன் வீட்டில் அதிகாரமாக அமர்ந்திருந்த சத்யவதியை கண்டு குறுகி போனார் மனிதர். தமிழிடம் வந்த ஆவேசம் இப்போது வரவில்லை.. மாறாக நெஞ்சம் எங்கும் குற்ற உணர்ச்சியே நிறைந்து இருந்தது அந்த நிமிடம்.

Advertisement