Advertisement

கைநீட்டினேன் என்னை கரைசேர்க்க வா 11

                     ஆதிரையாழ் காலையில் கண்விழித்ததே தமிழ்மாறனின் அழைப்பில் தான்… காலை ஆறு மணிக்கெல்லாம் அவளை அழைத்து விட்டிருந்தான் அவன். அலைபேசியை பார்த்தவள் நேற்று இரவு அவன் வருவதாக சொன்னது நினைவில் வரவும் அழைப்பை ஏற்கவே இல்லை.

                     முழுதாக அடித்து ஓய்ந்த அலைபேசியில் குறுஞ்செய்தி வந்து விழ, அவனாகத்தான் இருக்கும் என்று அதை திறந்து பார்த்தாள் அவள். “கால் பிக் பண்ணுடி… இல்ல இன்னும் பத்து நிமிஷத்துல உன் வீட்ல இருப்பேன்..” என்று மிரட்டல் தான்.

                      அதை பார்த்ததும் அவளுக்கும் கோபம் வர, அவளே அழைத்து விட்டாள். “என்ன நினைச்சுட்டு இருக்கீங்க நீங்க..” என்று ஆதி சத்தம் போட

                      “சத்தியமா இந்த நிமிஷம் உன்னை மட்டும் தான்..” என்று ஆழ்ந்த குரலில் வந்தது பதில்.. இது குறுஞ்சேதியில் இருந்த தோரணையான மிரட்டல் அல்ல.. மூன்றாண்டுகளுக்கு முன்னர் எப்போதும் அவன் அருகாமையில் அவள் அனுபவித்து மகிழ்ந்திருந்த மென்மையான மீட்டல்…

                      அவனின் அந்த குரலில் அவனை திட்ட வந்தது கூட மறந்து விடும் போல் இருந்தது ஆதிக்கு… “ஆதி நோ… அவன் உன்னை எக்ஸ்பிளாய்ட் பண்றான்… விழுந்துடாத..” என்று பலமுறை அவளுக்கு அவளே நினைவுபடுத்திக் கொள்ள வேண்டி இருந்தது.

                    அவளின் மௌனத்தில் “கடலைமிட்டாய் பேசு.. இன்னும் தூக்கம் விடலையா..” என்றான் தமிழ்..

                     அவன் பேச்சை கத்தரிப்பது போல் “எதுக்கு கூப்பிட்டிங்க…” என்று உர்ரென்று அவள் கேட்க

                    “இங்கே வரைக்கும் அனல் வீசுது யாழிம்மா… பொசுங்கிடுவேன் போல.. பயமா இருக்கு” என்றான் அவன்.

                     “நீங்க ரொம்ப பயந்தவர் தான்… எதுக்கு கூப்பிட்டிங்க…” என்று மீண்டும் அவள் கேட்க

                    “இன்னிக்கு உன் அப்பாகிட்ட பேசப் போறேன் யாழி.. நம்ம விஷயமா… மூணு வருஷம் கழிச்சு அவர்கிட்ட நேரடியா பேசப்போறேன்… எனக்காக வேண்டிக்கோ.. எனக்கு நிறைய பொறுமையை கொடுக்க சொல்லு உன் சாமிகிட்ட…” என்றான்.. அதே ஆழ்ந்த குரல் தான் இப்போதும்..

                      “நான் தான் உங்களை இங்கே வரவேண்டாம் ன்னு சொல்றேனே… என் பேச்சை எப்பவும் கேட்கமாட்டீங்களா..” என்று அவள் கடிந்து கொள்ள, வார்த்தையில் இருந்த கடினத்திற்கு மாறாக குரல் மென்மையாகவே இருந்தது…

                      “என்னால இதுக்குமேல உன்னை விட முடியாது யாழி… எனக்கு நீ என் கூடவே வேணும்…” என்றான் இப்போது.. குரலில் மொத்தமாக பிடிவாதம் மட்டுமே..

                      அவனின் நிலை புரிந்தாலும், தந்தையை நினைத்தும் தவித்தது அவள் நெஞ்சம்… யாரையும் அவளால் தூர நிறுத்த முடியவில்லை என்பது தான் உண்மை. தவறிப் போயிருந்தாலும் தந்தை என்ற இடத்தில் இன்றுவரை எந்த சறுக்கலும் இருந்ததில்லை வரதனிடம்…

                      அதுவும் கடைக்குட்டி என்பதில் இன்னுமே நெருக்கம் தான் தந்தையோடு..அதிகம் சண்டை பிடிப்பது போல் வெளிப்பார்வைக்கு தெரிந்தாலும், ஒரு மெல்லிய நூலிழையாக புரிதல் இருக்கும் இருவருக்குள்ளும்… ஒரு தந்தையாக எங்கேயும் எப்போதும் அவர் மகளை விட்டு கொடுத்ததே இல்லை வரதன்.

                        தந்தையிடம் பேச்சு வார்த்தையை நிறுத்திக் கொண்டாலும் கூட, அவருக்கான அந்த அன்பு அப்படியே தான் இருந்தது ஆதியிடம்… ஒரு வகையில் அவர் இந்த நிலைக்கு ஆளானது கூட தன்னால் தானோ.. தன் நல்வாழ்விற்காக என்று சேது மாமாவை தண்டித்து விட்டாரோ என்று கூட தோன்றியதுண்டு…

                       எதிரில் நிற்பவன் எதிரியாக இருந்தால் நிச்சயம் அவள் தந்தையின் மீது தவறே இருந்தாலும், அவருடன் தான் நின்றிருப்பாள் அவள்.  ஆனால் இங்கே எதிரே நிற்பது அவளின் உயிரானவன் அல்லவா… அதுதான் அவளை துடிக்க வைத்தது..

                       தன் தந்தைக்காக அவனிடம் எந்த சமயத்திலும் வாதிடவே முடியாது அவளால்… அவனின் இழப்பு பெரியது… ஏன் சேது மாதவனின் இழப்பு அவளுக்கே தாங்கி கொள்ள முடியாதது தானே.. அப்படி இருக்க அவன் நிலையை சொல்லித்தான் புரிந்து கொள்வாளா அவள்… அதுவும் அதன் பின்னான சத்யவதியின் நிலை.. எழிலின் மாற்றங்கள் என்று அத்தனைக்கும் தொடக்கப்புள்ளி தன் தந்தையாக நின்றுவிட்டாரே…என்று வேதனை எப்போதுமே இருக்கும் அவளிடம்..

                     ஆனால், அதற்காக அவர்கள் இருவரும் அவர்கள் விருப்பத்திற்கு இருந்து விடட்டும் என்றும் அவளால் விட முடியாது… இருவருமே ஒருவரை ஒருவர் எதிரியாகவே பார்த்து வர, தன்னால் முடிந்தவரை தந்தையை அடக்கி வைத்திருக்கிறாள்… அவர் எத்தனை பேசியபோதும் அமைதியாக கேட்டுக் கொண்டு நிற்பவள் அவரை தமிழுக்கு எதிராக செயல்பட விட்டதே இல்லை இதுவரையில்…

                     ஆனால், மாறன் அப்படி இல்லையே.. ஏற்கனவே அத்தனை குடைச்சல்கள் தொழிலில்… அவரின் நட்பான அந்த அமைச்சரை அவரின் கட்சியே செல்லாக்காசாக்கி இருந்தது.. அதற்கும் பின்னணி இவன் தான்… தந்தையின் தொழிலை பெருமளவு அவன் முடக்கி இருந்தான் என்றே சொல்லலாம்…

                     முன்போல லாபம் எல்லாம் இல்லை. அதுவும் அந்த உதிரிபாக தொழிற்சாலை இன்னமும் திறக்கப்படாமல் தான் கிடந்தது.. தொழிலை முடக்கியவன் அதற்குமேல் அவரை நெருங்காமல் நின்றதற்கும் தான் மட்டும்தான் காரணம் என்று தெரியும் பெண்ணுக்கு…

                     அவனிடம் இதைவிட என்ன எதிர்பார்க்க முடியும்… இன்று அவன் வந்து நின்றால் கூட, தந்தை நிச்சயம் ஏதாவது பேசுவார் தான்… அவனை பொறுத்து கொள்ள சொல்லும் அதிகாரம் தனக்கு ஏது???? அப்படியே சொன்னாலும் அவன் ஏற்றுக் கொள்வானா?? என்பதைவிட,அப்படி சொல்வதே சுயநலம் அல்லவா?? என்பதுபோல ஏகப்பட்ட குழப்பங்கள் அவளிடம்…

                       தன் நிலையில் கருத்தை பதித்தவள் அலைபேசியின் மறுபுறம் இருந்தவனை மறந்து விட்டிருந்தாள். அவன் இரண்டு மூன்று முறை அழைத்து பதில் இல்லாமல் போகவும், அழைப்பை துண்டித்துவிட்டு மறுபடியும் அழைத்திருந்தான் தமிழ்.

                      அலைபேசியின் ஓசையில் தவம் கலைத்தவள் அழைப்பை ஏற்க, அவனும் எதுவும் பேசாமல் மௌனம் சாதித்தான். அப்போது தான் அவன் கூறியதற்கு தான் எதுவுமே பேசாமல் மௌனமாகி விட்டது ஞாபகம் வந்தது அவளுக்கு.

                      அவளாகவே “ஹெலோ…” என

                     “இதுக்கு நான் என்ன சொல்லணும்…” என்றான் இடக்காக

                     ஆதி அமைதியாக, “இல்ல.. பேசுறது நாந்தான் தெரியும்.. அப்பவும் ஹலோ சொன்னா, நான் என்ன பதில் சொல்லணும்.. அதையும் நீயே சொல்லிடு..” என்றான் தமிழ்..

                       அவனின் பேச்சில் சிரிப்பு வர, “அதான் அரைமணி நேரமா பேசிட்டு இருக்கீங்களே..நீங்களே சொல்லுங்க..” என்றாள் அவள்.

                       “நான் வர்றதுல என்ன பிரச்சனை..” என்று மீண்டும் மாறன் கேட்க

                      “வரணும் ன்னு முடிவு பண்ணிட்டீங்க தானே.. வாங்க..” என்றுவிட்டாள் ஆதி..

                    “நான் அங்கே வர்றது விஷயமே இல்ல.. என் யாழி என்னோட நிற்கனும் அங்கே.. எனக்காக நிற்கணும்…” என்று அவன் மென்மையாக சொல்லிவிட, அவள் இதயம் தாளம் தப்பியது..

                    அவன் எங்கே வருகிறான் என்று புரிந்து விட்டது அவளுக்கு..அவனை மறுத்து பேச முடியாமல் அவள் அமைதியாக, தமிழ் தொடர்ந்தான்…

                      “உன் அப்பா நிச்சயமா உன்னை என்கிட்டே தூக்கி கொடுக்கமாட்டார் யாழ்.. எப்படியும் நிறைய பேசுவாரு…நானும் அமைதியா இருக்க மாட்டேன். ஆனா, எது நடந்தாலும் நீ என்கூட தான். அதை மட்டும் ஞாபகம் வச்சுக்கோ..” என்றவன்

                        “இன்னிக்கு இந்த நிமிஷம் நீ என் பொண்டாட்டி.. உன் அப்பாவுக்கு பொண்ணு இல்ல.. அங்கே நான் என்ன சொன்னாலும், அதுக்கு நீயும் பொறுப்பு.. பார்த்துக்கோ..” என்று முடித்துக் கொண்டான்..

                       “என்ன தைரியத்துல இப்படி பேசறீங்க நீங்க.. நான் முடியாது ன்னு சொன்னா என்ன செய்விங்க..” என்று அவள் சீற

                        “நீ சொல்லமாட்ட, சொல்ல போறதும் இல்ல… ” என்றான் அழுத்தமாக

                      “இது சரியே இல்ல மாறன்… நீங்க பண்றது நியாயமே இல்ல..” யாழி கண்ணீருடன் சொல்ல

                     “இது நியாயம் அநியாயம் எல்லாம் பார்க்கிற நேரம் இல்ல யாழி… எனக்கு நான் நினைச்சது நடந்தே ஆகணும்…” என்றான் அவன்.

                   யாழி கண்ணீர் மாறாமல், “அவர் தாங்கமாட்டார் மாறன்… என்னை அவருக்கு முன்னாடி நிறுத்தாதீங்க..” என்றுவிட

                       “உன் அப்பா தாங்க முடியாத அளவுக்கு எதுவும் நடக்க போறது இல்ல…  இப்பவும் உன் அப்பாவுக்கு துணையா உன் மொத்த குடும்பமும் இருக்கு… எப்பவும் இருக்கும்… எனக்கு நீ மட்டும்தான் அங்கே… நீ என்கூட நில்லு..” என்றுவிட்டான்..

                       யாழ் எதுவுமே பேசாமல் அமைதியாக, “உன் அப்பாவை நான் கடிச்சு திங்க போறது இல்ல யாழி.. ரொம்ப கவலைப்படாத.. அழாம அமைதியா வந்து என்முன்னாடி நில்லு.. நான் பேசும்போது நீ என்னோட இருக்கணும்..” என்று மீண்டும் ஒருமுறை நினைவுபடுத்தி அழைப்பை துண்டித்தான்.

                       அதிரையாழ் கண்களில் வடிந்த கண்ணீரை கூட துடைக்காமல் அமர்ந்திருந்தாள் அங்கே.. தமிழுக்கும் கூட கொஞ்சம் குற்ற உணர்ச்சிதான்.. யாரையோ தண்டிக்க, தன்னவளை வேதனைப்படுத்துகிறோமோ என்று.. ஆனால், இதைவிட்டால் அவனுக்கு வேறு வழியும் கிடையாதே…

                        வரதன் எல்லாம் நியாயமாக பேசினால் வழிக்கு வருபவரா??? அவரை எல்லாம் இப்படி ஏதாவது செய்து அடக்கினால் தான் உண்டு.. இல்லை இந்த ஜென்மமே போனாலும், எங்களை அவர் சேர விட மாட்டார் என்று தெரிந்திருந்தது அவனுக்கு.

                        அதனை கொண்டே, யாழிடம் பேசி இருந்தான்… கண்களை மூடி பால்கனியில் இருந்த நாற்காலியில் அமர்ந்திருந்தவன் சில நிமிடங்கள் எதிரே தெரிந்த கடலை வெறித்து நோக்கி கொண்டிருந்தான். மனதில் சில கணக்குகள் போட்டுக் கொண்டு எழுந்து குளித்து கிளம்பியவன் தன் தந்தையின் படத்தின் முன்பு இரு நிமிடங்கள் நின்றுவிட்டு, அன்னையையும் பார்த்து, அதன்பின்பே வீட்டிலிருந்து கிளம்பினான்.

                               இங்கு ஆதிரையோ இன்னும் அறையை விட்டே வெளியே வந்திருக்கவில்லை.குளித்து முடித்து தன் அறையின் பால்கனியில் நின்றிருந்தாள் அவள். வெளியே சென்று யாரையும் சந்திக்கும் மனநிலை நிச்சயம் இல்லை. தலையைக் கூட துவட்டாமல் துண்டால் கட்டிக் கொண்டு அவள் நிற்க, அடுத்த சில நிமிடங்களில் அந்த ஆடிக்கார் உள்ளே நுழைந்தது.

                        இதயம் காதுக்கு அருகில் வந்துவிட்டது போல் துடிப்பின் ஓசை அத்தனை சத்தமாக கேட்க, அவள் சிலையாக நிற்பதை பார்த்துக் கொண்டே தான் காரிலிருந்து இறங்கினான் அவன். அவளை பார்த்து ஒரு விரிந்த புன்னகையை பதிலாக கொடுத்தவன் லேசாக கண்களை சிமிட்ட, அவனை பார்வையால் பொசுக்கி கொண்டிருந்தாள் அவள்.

Advertisement