Advertisement

கைநீட்டினேன் என்னை கரைசேர்க்க வா 10

                                  சத்யவதியின் மாதாந்திர பரிசோதனை முடித்து காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர் தமிழும், எழிலும்.. அன்னை பின் சீட்டில் கண்மூடி சாய்ந்திருக்க, முன்னால் அண்ணனும் தம்பியும்… சத்யவதியின்  உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை என்று மருத்துவர் கூறியதே சஞ்சலம் தான் இருவருக்கும்.

                            இதில் அவரின் ரத்த அழுத்தமும் ஏறி இருப்பதாக மருத்துவர் கூறிவிட, தன்னால் தானோ என்று மருகி கொண்டிருந்தான் தமிழ். இத்தனைக்கும் அவன் யாழியிடம் பேசியதோ, அவள் மாமன் வீட்டிற்கு சென்றதோ எதுவுமே தெரியாது சத்யவதிக்கு.. அவன் பெண் பார்க்க வேண்டாம் என்றதற்கே இந்த நிலை..

                           தமிழ்மாறனின் மனம் சுழன்று கொண்டே இருக்க, தன் அன்னையிடம் பொறுமையாக எடுத்து கூறினால் நிச்சயம் தன்னை புரிந்து கொள்வார் என்றே தோன்றியது… கேட்டு பார்க்கலாமே என்ற எண்ணம் ஆழமாக வேரூன்ற, அவரை வீட்டிற்கு அழைத்து வந்தவன் காரிலிருந்து அவனே தூக்கி கொண்டு நடந்தான்.

                           அவரின் அறையில் அன்னையை அமரவைத்து மகன்கள் இருவரும் அவரின் காலடியில் அமர்ந்து கொள்ள, அவர்களை அப்படி பார்க்கவே பாவமாக இருந்தது சத்யவதிக்கு… மருத்துவர் கூறியதை எல்லாம் அவரும் தான் கேட்டிருந்தாரே…

                      “எனக்கு ஒன்னும் இல்ல தமிழ்… நீ டாக்டர் சொல்றதை எல்லாம் பெருசா எடுத்துக்காத.. நீ நிம்மதியா இரு..” என்று பெரிய மகனிடம் கூறியவர்

                        “என்கூடவே தான இருக்கே.. உனக்கு என்னடா.. நீயும் ஏன் மூஞ்சியை தூக்கி வச்சிட்டு இருக்க…” என்று சின்னவனையும் அதட்ட

                        “ம்மா.. நீ ஒழுங்கா இருந்தா நான் ஏன் இப்படி இருக்க போறேன்.. என்னமா யோசிக்கிற.. ஏன் இவ்ளோ ப்ரெஷர் எடுத்துக்கணும்… என்ன நினைக்கிறியோ அதை சொல்லிடேன்…” என்று எழில் கேட்க

                          “எனக்கு என்ன கவலை எழில். நான் நல்லா இருக்கேண்டா..” என்று அன்னை மகனை தேற்ற

      

                        தமிழ்மாறன் அமைதியாக இருந்தவன் அப்போது தான் பேசினான்.. “ம்மா… நான் உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்.. இப்போ பேசுவோமா??? ” என்று அனுமதி கேட்க

                       “சொல்லு கண்ணா..”  என்று அவர் அனுமதி கொடுக்கவும், அவர் கைகளை பிடித்துக் கொண்டவன் “ம்மா.. நான்.. எனக்கு..”என்று திணறியவனுக்கு வார்த்தைக்கு பஞ்சமாய் போனது போல.. அவரின் முகம் பார்த்து கேட்க முடியாமல் திணறிக் கொண்டே இருந்தான்..

                        அவனின் தடுமாற்றம் அவனின் சிறுவயதை நினைவுபடுத்த அன்னையாய் சிறுபுன்னகை பூத்தார் சத்யவதி.. முழுதாக இரண்டு நிமிடங்கள் கழிந்தும் அவன் சொல்வதாக இல்லை எனவும், “என்கிட்டே என்னடா கண்ணா தயக்கம்.. அம்மா நிச்சயமா உனக்கு எதையும் மறுக்கமாட்டேன்… நீ என்ன சொல்லணுமோ சொல்லு…”என்று ஊக்கம் கொடுத்தார்..

                         அன்னை புரிந்து கொண்டது சிறுநிம்மதியை தந்தாலும், அதற்குமேல் என்ன பேசுவது என்று தெரியவில்லை தமிழுக்கு… அவன் இன்னுமே பாவமாக அவரை பார்க்க “நீ ஆதியை இந்த வீட்டுக்கு மருமகளா கொண்டு வந்தா நிச்சயம் எனக்கு சந்தோஷம் தான் கண்ணா.. உன் அப்பா ஆசைப்பட்டு, உனக்காக பார்த்த பொண்ணு அவ.. நீ என்ன நினைக்கிறியோ ன்னு தான் இத்தனை நாள் அமைதியா இருந்தேன்..”

                           “ஆனா, இப்போ எனக்கு ஓரளவுக்கு புரியுது.. உனக்கு விருப்பம் இருந்தா அவளை கட்டிக்கோ.. எனக்காக பார்க்க வேண்டாம்… அதே சமயம், அவளை கல்யாணத்துக்கு பிறகு உன் மனைவியா மட்டும் தான் பார்க்கணும்.. வரதன் அண்ணா மகளா எப்பவும் நீ அவளை நடத்த கூடாது…”

                          “உன்னால அது முடியும்ன்னா நீ அவளை கட்டிக்கோ..” என்று அவர் கூறி முடிக்க, பிள்ளை அன்னையின் மடியில் தலையை புதைத்துக் கொண்டான்.. அவன் கண்களில் கண்ணீர் வடிய, அன்னையின் கை அவன் தலையை தடவிக் கொடுத்துக் கொண்டிருந்தது..

                            உண்மையில் சத்யவதிக்கு ஆதிரையின் மீதெல்லாம் கோபம் எதுவும் இல்லை.. ஏன், அவருக்கு வரதனின் மீதே கோபம் எல்லாம் இல்லை சற்றே வருத்தம் மட்டுமே… தன் கணவனின் இழப்பு அவரை பக்குவப்படுத்தி இருக்க, இவர்கள் மீது கோபப்பட்டு என்ன ஆக போகிறது என்ற எண்ணம் தான் ஆரம்பத்தில் இருந்தே..

                         உடல்நிலையும் போக்கு காண்பிக்க தொடங்கவும், “என் மகன்களுக்கு யாருமே இல்லை.. அவர்கள் இருவரின் நலனை கருதியாவது என்னை விட்டுவிடு இறைவா..” என்றுதான்  வேண்டி கொண்டார்.. பிழைத்த வந்தும் அவரின் இயக்கம் அந்த வீட்டிற்குள் மட்டுமே என்றாகிவிட, வரதனை பற்றிய எந்த விஷயமும் அவர் வராமல் பார்த்துக் கொண்டான் மகன்.

                         இப்போதும் தன் முடிவு தன் மக்களுக்காக என்று நினைத்தவர் எழிலையும் கையை நீட்டி அணைத்து கொண்டார். தன் அண்ணனின் விருப்பத்தை அறிந்தவனாக ஆரம்பத்தில் இருந்தே அன்னையை வற்புறுத்தி வந்தவன் அல்லவா.. அவ்வபோது யாழியை பற்றிய தகவல்களையும் அவன்தான் அவருக்கு கூறுவான்..

                      ஆதி, எழிலின் பிணைப்பை உணர்ந்தவர் என்பதால், இனி தன் இளைய மகனை பற்றியும் தான் கவலை கொள்ள வேண்டி இருக்காது.. என்று ஆறுதலாக உணர்ந்தார் அவர்..

                       அங்கே சில நிமிடங்கள் அழகான ஒரு ஓவியத்தின் இனிமையுடன் விடைபெற, முடிவில் தமிழ் பேசினான்..” ம்மா… உங்களுக்கு நிஜமா சம்மதம் தானே.. உங்களுக்கு ஏதும் சங்கடம் இருந்தா, நாம இதை பத்தி பேசவே வேண்டாம்மா.. நீங்க நிம்மதியா இருந்தா போதும் எனக்கு..” என்று உருகினான் அவன்..

                       “நீயும், ஆதியும் நல்லபடியா வாழறது தான் நிம்மதி எனக்கு…சீக்கிரமே அவளை இந்த வீட்டுக்கு கூட்டிட்டு வந்திடு… நான் பேசவா.. வரதன் அண்ணாக்கிட்ட..” என்று அவர் கேட்க

                      “ம்மா.. நீங்க எங்கேயும் போக வேண்டாம்.. அவர் வந்து பேசுவார்…நீங்க என்கிட்டே சொல்லிட்டீங்க இல்ல.. நிம்மதியா இருங்க..” என்றான் தமிழ்..

                      எழில் “ஆமாம்மா.. இனி அண்ணன் எப்படி தீயா வேலை செய்யுறான் பாருங்க.. நீங்க ஜோசியர்கிட்ட பேசிடுங்க.. முடிஞ்சா அடுத்த முகுர்த்தத்தையே பிக்ஸ் பண்ணிடுவோம்..” என, சத்யவதி லேசாக சிரித்தார்…

                          அவரின் முகத்தில் இப்போது ஒரு நிம்மதி நிறைந்திருக்க, தன் விஷயம் தான் அவரை முழுதாக பாதித்து இருக்கிறது என்பதை முழுதாக உணர்ந்து கொண்டான் மகன்.. அதை கூடிய விரைவில் சரி செய்தே தீருவது என்று வைராக்கியமாக அவன் நினைக்க, அவன் நினைப்பை பொய்யாக்க அங்கே ஒருத்தி தவமிருந்தாள்..

                        அன்றைய நாள் தமிழின் குடும்பத்திற்கு சற்றே மகிழ்ச்சியான நாளாக அமைந்து விட, இரவு உணவு முடிந்தவுடன் எழில் தன் மகிழ்வை வெளிப்படுத்தும் விதமாக ஆதிக்கு அழைத்து விட்டான்… எடுத்த எடுப்பிலேயே

                      “ஹேய் அண்ணி… எப்படி இருக்க… என்ன உன் மாறன் பேசிட்டானா..” என்று ஆர்வமாக கேட்க

                    எதிர்புறம் இருந்தவள் “என்ன அண்ணியா… இது எப்போ இருந்து… அதோட மாறன் யாரு..” என்று கடுகடு குரலில் கேட்டாள்..

                     “அடிப்பாவி அண்ணி.. என் அண்ணனையா யாருன்னு கேட்கிற.. உனக்கே அநியாயமா இல்லையா ஆதி..” என்று எழில் பொங்கிவிட, சத்தமே இல்லாமல் அவனுக்கு பின்னால் வந்து நின்றிருந்தான் தமிழ்..

                      “இந்த அண்ணியை எங்கே இருந்துடா பிடிச்ச.. பிசாசே.. உன் அண்ணன் யாரோதான்.. அவனுக்கு சப்போர்ட் பண்ண, உன் நம்பரையும் ப்ளாக் பண்ணிடுவேன்..” என்று பகிரங்கமாக மிரட்ட

                      “நீ  என்னோட அண்ணிதான அண்ணி… உன்னை வேற எப்படி கூப்பிட முடியும்..” எழில் இன்னும் வெறுப்பேற்ற

                    “வேண்டாம்டா… மரியாதையா ஆதி ன்னு கூப்பிடு… இல்ல உன்னை கொன்னுடுவேன் எழில்..”

                   “எனக்கு அண்ணிதான் பிடிச்சிருக்கு… நீ மரியாதையா சீக்கிரம் என்வீட்டுக்கு வர்ற வழியை பாரு…”

              “அவன் தம்பி  தானே நீ, வேற எப்படி இருப்ப… என்னை பத்தி யோசிக்கவே மாட்டிங்களாடா… உன் அண்ணன் வான்னா வரணும் இல்ல…” என்று ஆதி வெடிக்க

                  “ஹேய் ஆதி.. ஏன் இவ்ளோ எமோஷனல் ஆகுற… என்ன உன்னை பத்தி யோசிக்கல.. மூணு வருஷமா எத்தனை முறை சொல்லி இருப்பேன்.. வேற யாரையாவது கல்யாணம் பண்ணிக்கோ ன்னு… கேட்டியா நீ. அவன்தான் வேணும் ன்னு அவன் பின்னாடியே சுத்தினது யாரு..”

                    “அன்னிக்கு போலீஸ் ஸ்டேஷனுக்கு கூப்பிட்டேனே.. ஏன் பதறி அடிச்சு ஓடி வந்த.. வரமாட்டேன் ன்னு சொல்லத்தான… அவனை மாதிரியே இருக்காங்களாம்… நல்லா வந்து வாய்ச்சீங்க ரெண்டு பேரும்..” என்று  கத்தினான் எழில்..

                      அந்தப்பக்கம் இருந்தவள் பதில் பேசாமல் இருக்க, “ஏய்.. ஏதாவது பேசு.. உன்கிட்டதானே கத்திட்டு இருக்கேன்…எரும..” என்று எழில் மிரட்ட

                      “போ.. நீயும் அவனுக்கு தான் சப்போர்ட் பண்ற..” என்றாள் கோபமாக

                       “சரி சொல்லு.. உனக்கே சப்போர்ட் பண்றேன்.. அவனை கல்யாணம் பண்ணிக்க வேண்டாம்.. வேற என்ன பண்ணலாம்…உனக்கு மாப்பிளை பார்க்கவா… நீ கல்யாணம் செஞ்சுக்கறியா.. அவனை இப்போவே இப்படியே கழட்டி விட்டுடலாம் சொல்லு..” என்று அவன் மிரட்ட, அவன் பின்னந்தலையில் பொட்டென்று ஒரு அடி விழுந்தது..

                      அதிர்ந்து அவன் திரும்பி பார்க்க, வாயில் விரல் வைத்து அவனை அமைதியாக்கினான் தமிழ்… எழிலின் அலைபேசியை வாங்கி ஸ்பீக்கரில் போட்டவன் “பேசு..” என்று கண்காட்ட, அவனை நக்கலாக பார்த்தவன் “ஆதி பேபி.. நாம நாளைக்கு பேசுவோம்டா.. இங்கே டிஸ்டபர்ன்ஸ் அதிகமா இருக்கு..” என்று விட்டான்..

                      ஆதியும் அவனை புரிந்தவளாக, “என்ன உன் அண்ணன் பக்கத்துல இருக்கானா… அவனுக்கும் கேட்கட்டும்.. நீ வேற மாப்பிளை பாரு..எனக்கு ஓகே தான்… நீ யாரை சொன்னாலும் நான் கல்யாணம் பண்ணிக்கிறேன்.. ஆனா, உன் அண்ணன் எப்பவும் வேண்டாம்… அவனுக்கு நோ தான்..” என்றாள் அழுத்தம் திருத்தமாக

                     எழில் வாயை பொத்தி சிரிக்க, அவன் மண்டையில் தட்டி சிரித்தவன் போனை காதுக்கு மாற்றிக் கொண்டே நடந்தான்.. எழில் தன் அண்ணனை சிரிப்புடன் பார்த்து நிற்க, இங்கே தமிழ் ஆதியிடம் வம்பு வளர்க்க தொடங்கினான்..

                    “சொல்லுடி..” என்று சாவகாசமாக அவன் ஆரம்பிக்க

                   “உன்கிட்ட சொல்ல ஒண்ணுமே இல்ல…”

                   “அப்போ உன் கல்யாணத்துக்கு கூட சொல்லமாட்டியா..”

                    “ஏன் சொல்லாம.. வேணும்ன்னா இன்விடேஷன் கூட அனுப்பி வைக்கிறேன்..”

                   “அனுப்புவடி.. அனுப்புவ.. நான் கேணையா இருந்தா எல்லாம் பண்ணுவ.. நான் இருக்கும்போது எவண்டி உன்னை கல்யாணம் பண்ண வருவான்..”

                     “ஏன் என்ன பண்ணுவீங்க வந்தா… ஓஹ்.. மறந்துட்டேன்.. அதான் புதுசா போலி பத்திரம் தயார் பண்ற தொழில் வேற தொடங்கி இருக்கீங்களே…” என்றாள் நக்கலாக..

                    தமிழ்மாறன் சத்தமாக சிரித்துக் கொண்டே “ஹேய் கடலைமிட்டாய்.. ரொம்ப பேசுறடி.. மொத்தமா வாங்க போற பாரு…” என்றுவிட, அவன் கடலைமிட்டாய் என்றதில் வெட்கமே இல்லாமல்  போனவள், அடுத்த நொடியே கண்ணீரும் கொண்டாள்..

                    “பாவி… பாவி..இதை எல்லாம் இவ்ளோநாளா எங்கேடா வச்சிருந்த…மூணு வருஷமா என்னை அழ வச்சிட்டு, இப்போவும் என்னை சரிக்கட்ட இதெல்லாம் சொல்றியேடா..” என்று குமுறியது அவள் மனம்..

                    தமிழ் அவள் மனநிலை உணராமல், “சொல்லு.. எப்போ கல்யாணம் பண்ணிக்கலாம் யாழி..” என்று ஆவலாக கேட்க

                    “நான் இந்த கல்யாணம் வேண்டாம் ன்னு சொன்னா விட்டுட போறியா நீ..” என்று ஆத்திரமாக கேட்டாள் அவன் காதலி..

                   “இந்த முறை எதுக்காகவும் விடறதா இல்ல யாழி.. நீயே வேண்டாம்ன்னு சொன்னாலும் கூட..”

                    “அப்புறம் ஏன் என்கிட்டே கேட்குறீங்க.. உங்களால முடிஞ்சதை நீங்க பாருங்க…” என்று விட்டேற்றியாக யாழி மொழிய

                   “ஓஹ்.. அப்போ உன்னால முடிஞ்சதை நீ செய்வ…” என்று கேள்வியாக முடித்தான் தமிழ்.

                   “நிச்சயமா.. என்னோட இந்த மூணு வருஷ இழப்புக்கு நீ பதில் சொல்ல வேண்டாம்… என்னை அளவிட்டு வேடிக்கை பார்த்த இல்ல… அது எல்லாத்துக்கும் மேல, அன்னிக்கு அந்த ரிஸப்ஷன்ல…” என்றவள் வார்த்தையை முடிக்காமல் விட

                      “திரும்ப திரும்ப இதையே சொல்லிட்டு இரு.. கன்னம் பழுக்க ரெண்டு கொடுத்தேன்னா அப்போ வழிக்கு வருவ.. என்ன மூணு வருஷம், மூணு வருஷம் ன்னு அதையே சொல்ற.. உனக்கு கொஞ்சம் கூட குறையாம நானும் அனுபவிச்சிருக்கேன்…”

                    “அப்பவும் நீ மட்டும்தான்… நீ இல்லாம போனா நிச்சயம் எதுவும் இல்ல ங்கிற  என் முடிவு எங்கேயும் ஆட்டம் கண்டதே இல்ல…அன்னிக்கு நீ பேசின பேச்சுல உடனே மனசு மாறிடுவேனா நான்… அவ்ளோ நல்லவனும் இல்ல.. அப்படி உன் பேச்சை கேட்கிற ஆளும் இல்ல.. உனக்கு தெரியாதா??? “

                    “உன்னை கஷ்டப்படுத்திட கூடாது ன்னு தான் விலகி போனேன்.. இப்பவும் நீ கஷ்டப்படக்கூடாது ன்னு தான் உன் முன்னாடி நிற்கிறேன்… சும்மா சின்னப்பிள்ளை மாதிரி அடம் பிடிச்சா நானும் என்ன பண்ணட்டும் சொல்லு…” என்று அவன் முடிக்க

                      “உங்க புத்தி எல்லாம் மாறவே மாறாது.. இப்போ மொத்த பழியும் என்மேலேயே போட்டாச்சு இல்ல… இப்போகூட எனக்காக நான் கஷ்டப்படாம இருக்க கல்யாணம் பண்ணிக்கிறிங்களா.. தேவையே இல்ல.. என் வீட்டு பக்கமே வராதீங்க… ஆளும் மூஞ்சியும்…” என்று அவள் பொரிய

                       மீண்டும் சத்தம் இல்லாமல் சிரித்தவன் “இப்போ என்ன எனக்காக என்னை கட்டிக்கோ ன்னு சொல்லனுமா.. சொல்லிட்டா, என்னை கல்யாணம் செஞ்சுப்பியா..” என்று ஆவலாக கேட்க

                      “சொல்லிட்டாலும்…” என்று வாய்க்குள்ளாக முனங்கியவள் “நீங்க சொல்லவே வேண்டாம்… ஒழுங்கா உங்க வேலையை பாருங்க.. போதும்..” என்றிட

                        “அதைத்தானேடி பண்றேன்… நாளைக்கு காலையில வீட்டுக்கு வர்றேன்… அங்க வச்சு பேசிப்போம்… உன் அப்பாவுக்கு ஷாக் கொடுக்க வேண்டாம்..”

                          “ஹேய் வீட்டுக்கு எல்லாம் வராதீங்க… என்னை ஏன் இப்படி இம்சை பண்றிங்க.. உங்களுக்கு புரியவே இல்லையா..” என்றவள் குரல் பதட்டத்தில் இருக்க

                        “நீ இவ்ளோ எல்லாம் டென்சன் ஆகாத யாழி.. உன் அப்பாகிட்ட நான் பேசிக்கறேன்…” என்று நம்பிக்கை கொடுக்க

                          கடவுளே.. இவர்கள் இருவருக்குள் மீண்டும் ஏதாவது பகை வந்துவிடுமோ என்றுதான் அஞ்சினாள் அவள்.  அதை வெளிப்படுத்த தெரியாமல் அவனிடம், “நாந்தான் கல்யாணமே வேண்டாம் ன்னு சொல்றேனே… என்னை ஏன் இப்படி பண்றிங்க…” என்று அழுகையுடன் அவள் கேட்க

                       “அழறியா நீ..” என்றான் கூர்மையாக

                      “மூணு வருஷமா அழுதுருக்கேன்… இன்னிக்கு தான் உங்க கண்னுக்கு தெரியுது போல..” என்றாள் அப்போதும்..

                       “இப்போ தெரிஞ்சிடுச்சு இல்ல.. இனிமே அழாம பார்த்துப்பேன்…”

                      “ஒன்னும் தேவையில்லை போடா..” என்றாள் வாய்க்குள்ளே

                      ஆனால், அதற்கும் “ஏதாவது சொன்னியா..” என்று அவன் கேட்க

                        “இல்லையே…” என்றுவிட்டு “ஆமா சொன்னேன்… ஒன்னும் தேவையில்லை போடா ன்னு சொன்னேன்” என்றாள் கடுப்புடன்

                       “எனக்கு வா வா ன்னே கேட்குதுடி.. நாளைக்கு காலையில பார்ப்போம்… வரதனை வெய்ட் பண்ண சொல்லு..” என்றான் முடிவாக

                         “நான் எதுவுமே சொல்லமாட்டேன்.. நீ என்னமோ பண்ணிக்கோ..” என்று அவள் கத்த

                      “சொல்லிட்ட இல்ல விடு.. உன் அப்பாவை நான் கவனிக்கிறேன்…” என்று விவகாரமாக சொன்னவன் அழைப்பை துண்டித்து விட்டான்.

                        இவன் என்ன செய்து வைக்க போகிறானோ…. என்ற பதட்டத்திலேயே அவள் இரவை உறங்காமல் கழிக்க, அவள் பதறியபடியே அடுத்தநாள் வந்து நின்றான் அவன்.

                     

                    

                   

Advertisement