Advertisement

கைநீட்டினேன் என்னை கரைசேர்க்க வா 09

                  தன் வீட்டின் தோட்டத்தில் இருந்த கல் இருக்கையில் அமர்ந்து இருந்தாள் ஆதி. தன் மாமன் வீட்டிலிருந்து எப்படி இங்கே வந்தாள் என்று கேட்டால் கூட தெரியாது அவளுக்கு… அப்படிப்பட்ட ஒரு மனநிலையில் தான் இருந்தாள் அவள்.

                  தமிழ்மாறனின் இந்த அதிரடியும், அவன் கண்களில் தெரிந்த காதலும், இது அனைத்திற்கும் மேலாக இறுதியில் அவன் கொடுத்திருந்த இதழ் முத்தமும் அவளை மேலே எதுவும் சிந்திக்க முடியாதபடி கட்டி வைத்திருந்தது.

                 இவன் என்ன இப்படி மாறிவிட்டான் என்று அதிர்ச்சியாக இருந்தாலும், உள்ளுக்குள் ஏதோ ஒரு மூலையில் சற்றே குளுகுளு உணர்வு தான். ஆனால், அவனை திருமணம் செய்து கொள்ள எல்லாம் அவள் மனம் நிச்சயம் தயாராக இல்லை.

                 இவன் விருப்பப்படி இவன் வளைக்கும் விதத்திற்கெல்லாம் தான் வளைய வேண்டுமா?? என்று கோபம் தான். இவன் சரியாக இருந்திருந்தால் தன் வாழ்வில் இந்த சித்தார்த், அந்த மந்திரியின் மகன் என்று யாருமே குறுக்கிட்டு இருக்க மாட்டார்களே.. இன்று பெரிய இவன் போல் வந்து குதித்து விட்டால் மூன்று ஆண்டுகளும் மந்திரமாக மறைந்து விடுமா??

                 அதுவும் கொஞ்சம் கூட தயக்கமே இல்லாமல், கல்யாணம் பண்ணிக்கிட்டோம் ன்னு சொல்றான், அரைகுறை பைத்தியம்… இவன்தான் பைத்தியம் ன்னா என்கூட பிறந்தது ஒரு அதிர்ச்சி பைத்தியம்… அவன் சொன்னா இந்த எருமைக்கு அறிவு எங்கே போச்சாம்.. எத்தனை நாள் காத்திருந்தாளோ, எருமைமாடு… என்று தன் தமக்கையையும் வஞ்சனை இல்லாமல் திட்டி தீர்த்துக் கொண்டிருந்தாள் அவள்.

                 ஆனா, கொஞ்சம் கூட பயமே இல்லாம போச்சு இவனுக்கு.. அவ்ளோ உரிமையா பொண்டாட்டி ன்னு சொல்றான்.. மூணு வருஷமா எங்கே போயிருந்தான்… இதுல இன்னும் ஒரு மாசத்துல கல்யாணம் வேற பண்ணுவாராம் சாரு….நான் ஏமாந்தவளாகவே இருந்தா நீ எல்லாம் பண்ணுவடா… என்று அர்ச்சித்தவள் “என்னை மீறி நீ என்ன செய்யுற ன்னு பார்க்கிறேன்…” என்று தனக்குத்தானே பேசிக் கொண்டு அமர்ந்திருக்க, அவளின் அன்னை வந்துவிட்டார்.

                       கையில் அவளுக்கு பிடித்த பனானா சாக்லேட் மில்க்ஷேக்…  இருந்தே அவள் யாரையோ வறுத்துக் கொண்டிருக்கிறாள் என்பது வரை அவருக்கு புரிந்தது… யாரையோ என்ன யாரையோ, அதுதான் அவரின் அண்ணன் அழைத்து நடந்த அத்தனையும் கூறி இருந்தாரே…

                      இந்நேரம் அவள் வாயில் அரைபடுவது தமிழாகத்தான் இருக்கும் என்று தெரிந்தது அன்னைக்கு. அதா பற்றிக் கேட்காமல் அவளின் அருகில் அமர்ந்து கையில் இருந்த பானத்தை அவளிடம் கொடுக்க,வாங்கி ஒருவாய் குடித்தவள் தன் மேலுதட்டில் எல்லாம் ஒட்டிக் கொள்ள, வழக்கம் போல அவள் தலையில் தட்டி அவள் வாயை துடைத்து விட்டார் அன்னை.

                   அவரின் செயலில் சிரித்துக் கொண்டே, அதை குடித்து முடித்தவள் அமைதியாக அன்னையின் மடியில் படுத்து கொண்டாள்… சில நொடிகள் அமைதியில் கழிய, தன் அன்னை தானாக எதுவும் கேட்கமாட்டார் என்று தெரியும் ஆதலால்,

                   “என்னம்மா..உன் அண்ணன் போன் எதுவும் பண்ணலையா…” என்று அவளே ஆரம்பித்தவள் “உன் அண்ணன் பண்ணல னாலும் என் அக்கா பண்ணி இருப்பாளே…” என்று குரலில் விரவி இருந்த நக்கலோடு கேட்டாள் ஆதி.

                   “யார் கூப்பிட்டா என்ன… எனக்கு என்ன தெரியனுமா அதை என் மக சொல்லுவா…” என்று உமாதேவி நம்பிக்கையுடன் பேச, தன் அன்னையின் நம்பிக்கையில் சற்றே கர்வமாக இருந்தது ஆதிக்கு…

                  அவரின் கையை கழுத்தோடு சுற்றிக் கொண்டவள், சற்றே அழுகை குரலில் “அபி என்ன அடிச்சிட்டாம்மா…நான் தப்பே பண்ணாம அடி வாங்கி இருக்கேன்.. அவ இஷ்டத்துக்கு பேசுறாம்மா…” என்று புகார் சொல்ல ஆரம்பிக்க,

                  “அவ ஒரு பைத்தியக்காரி ஆதிம்மா…அவளோட அவசரபுத்தி உனக்கு தெரிஞ்சது தானே… அவ தெரிஞ்சதும் அவளே வந்து உன்கிட்ட சாரி சொல்வா பாரு.. அப்போ நீ ரெண்டு கொடுத்திடு…” என்று அவள் கண்களை துடைத்து விட்டார்.

                  “நிஜமாம்மா.. இந்த முறை பாரு.. அவ கன்னம் பன்னு மாதிரி வீங்கனும்.. அப்படி கொடுக்க போறேன் பாரு…” என்று வீராவேசமாக கூறியவள், உடனே “ஆனா, அவளையும் தப்பு சொல்ல முடியாது… எல்லாம் அந்த அரைவேக்காடு இருக்கே.. அது பண்ணின வேலை..” என்று சலித்துக் கொள்ள, இப்போது “ஆதிம்மா..” என்று அதட்டினார் அன்னை..

                  “ம்மா.. சும்மா அவனுக்கு சப்போர்ட் பண்ணாத சரியா.. நீ இருந்துருக்கணும் அங்கே.. அத்தனை பேர் முன்னாடி கொஞ்சம் கூட கூச்சமே இல்லாம கல்யாணம் பண்ணிட்டோம் ன்னு பொய் சொல்றான்.. இதுல நான் அவன் பொண்டாட்டியாம்.. கையில போலியா ஒரு மேரேஜ் சர்டிபிகேட்.. எவ்ளோ ஈஸியா ஏமாத்திட்டான் தெரியுமா..”

                    “நம்ம வீட்டு அறிவாளிங்க, அவன் சொல்றது உண்மையா பொய்யா ன்னு யோசிக்கவே இல்லம்மா… அவன் கொடுத்த சர்டிபிகேட் பார்த்ததும் மொத்தமும் அமைதியாகிடுச்சுங்க… இதுல உன் அண்ணன் வேற, பாவமா என்னை லுக் விட்டுட்டு நிற்கிறார்…”

                     “இத்தனை பேர் இருக்காங்க.. அவன் ஒருத்தவன் வாயை அடைக்க தெரியல… நீ பெத்ததும் என்னை தான் அடிச்சுது.. அவன்கிட்ட வெறும் வாய்ப்பேச்சு தான்.. அவனையும் ரெண்டு வச்சிருக்கணும் இல்ல…”

                     “இவ யோசிக்கவே மாட்டாளாம்மா… அப்படி யார்கிட்டேயும் சொல்லாம நான் கல்யாணம் பண்ணுவேனா… இவ தங்கச்சி தானே நான்.. நான் செய்வேன் இல்லன்ன்னு இவளுக்கு தெரியாதா..” என்று மீண்டும் தன் அக்காவிடம் வந்து நின்றாள் ஆதி..

                          தன் கடைக்குட்டி தன் மூத்த மகவால் மிகவும் புண்பட்டு இருப்பது புரிய, “நீ இதை அங்கேயே சொல்லி இருக்கலாம் இல்ல.. அவ அடிக்க வந்தப்பவே என் மேல எந்த தப்பும் இல்ல, அவனை கேளுன்னு சொல்ல வேண்டியது தானே..” என்று அன்னையாய் அவர் கண்டிப்புடன் கேட்க

                      சற்றே கோபமாக “ஏன் சொல்லணும்..” என்று முறைத்தாள் அவள்…

                  உமா அமைதியாக இருக்கவும், “நான் சொல்லாமலே இவங்க என்னை நம்பி இருக்கணுமா இல்லையா?? நான் சொல்லி அதுக்கு பிறகு இவங்க என்ன என்கூட நிற்கிறது?? தேவையே இல்ல போ..” என்று முகத்தை திருப்பிக் கொண்டாள்.

                  அவளின் அன்னை லேசாக சிரித்தவாறு, “நிஜமா இது மட்டும்தான் காரணமா.. ” என்று விட

                   “என்ன.. நிஜமா… வேற என்ன காரணம் இருக்கும்?” என்று கோபமாக மகள் கேட்கவும், “ஒருவேளை  தமிழை யாரும் எதுவும் சொல்லக்கூடாது ன்னு நீ சொல்லாம இருந்தியோ என்னவோ… “என்று அவர் ஆழம் பார்க்க

                   “ம்மா.. அப்படி எல்லாம் எதுவுமே இல்ல..”

                   “இல்லன்னா எனக்கும் நிம்மதிதான்… விடு.. மாமாகிட்ட சொல்லி வேற மாப்பிளை பார்க்க சொல்றேன்…”

                  “இதுக்குமேல எனக்கு தெரியாம அப்படி எதுவும்செஞ்சு வைக்காதம்மா… ஒருமுறை பட்டதே போதும்.. இதுல உன் ஆசை மருமகன் வேற… ஒரு மாசத்துல கல்யாணம் பண்ணியே தீருவேன் ன்னு சொல்லிட்டு போயிருக்காரு…”என்றுவிட்டாள்..

                “தமிழா அப்படி சொல்லுச்சு ஆதி…” உமா சற்று மகிழ்ச்சியுடன் கேட்க

                “ம்ம்ம்.. அவரே தான்.. இன்னும் ஒரு மாசத்துல கல்யாணம் பண்ணுவானாம்.. தயாரா இருக்கணுமாம்.. இங்கே அப்படியே காத்துட்டு இருக்காங்க பாரு… அவனை என்ன செய்றேன் பாரு…”என்று குமுறினாள் மகள்…

                 ஆனால், அது எல்லாம் உமாதேவியின் மகிழ்ச்சியை குறைக்கவே இல்லை.. அவரை பொறுத்தவரை தமிழ் பேசியதே போதும்… அவன் அப்படி ஒன்றும் தன் மகளை விட்டுவிட வில்லை என்பது நிம்மதியாக இருந்தது அவருக்கு…

                     இனி இவளை சரிக்கட்டும் வேலை மட்டுமே என்று சலித்து கொண்டவர் கூடவே, “அதையும் அவனே பார்த்துப்பான்.. என் மருமகன் சமத்து..” என்று கொஞ்சிக் கொண்டார் அவனை… பின்னே ஆதியை பெற்றவர் என்றால் அவனை தூக்கி வைத்து வளர்த்தவர் அல்லவா..

                         அவன் குடும்பத்திற்கு கணவர் செய்த துரோகம் ஒன்றும் சாதரணமானது அல்ல என்றும் தெரிந்தே இருந்தது அவருக்கு.. அந்த ஒரு காரணத்தினால் தான் அவரும் இத்தனை நாட்களாக அமைதியாக காத்திருந்தது. அவன் மனம் கனியாதா என்ற அவரின் எதிர்பார்ப்பு இன்று பூர்த்தியாகி இருந்தது..

                         கூடவே, மகளின் காதலையும், அதற்கான அவளின் போராட்டங்களையும்,அவளது கண்ணீரையும் கண்கூடாக பார்த்தவர் ஆகிற்றே… தன் மகளுக்காகவாவது அவன் மனம் மாறிட வேண்டும் என்று அவர் வேண்டாத நாள் இல்லை…

                        இப்போதுதான் நேரம் கூடி வந்திருக்க, எப்பாடு பட்டேனும் மகளை தமிழிடம் சேர்த்து விட வேண்டும் என்று இன்னும் உறுதியாக எண்ணம் கொண்டார் உமாதேவி.

                    அருகில் அமர்ந்திருந்த மகளை அப்போதைக்கு எதுவும் சொல்லாமல் அவள் போக்கிலேயே விட்டவர், அவளை அழைத்துக் கொண்டு வீட்டிற்குள் வந்தார். அதன்பின் நேரம் தாய் மகளின் அரட்டையில் கழிய, தனது அறையில் தாயின் மடியில் படுத்துக் கொண்டு கதை பேசிக் கொண்டிருந்தவள் அப்படியே உறங்கி போயிருந்தாள்..

                   நேரம் மாலை ஆறுமணியை கடந்திருக்க, அவளை எழுப்ப மனம் வராமல் அவளின் அருகில் அமர்ந்திருந்தார் உமாதேவி.  வரதன் வேலையை முடித்து வீடு வந்தவர் நேராக மகளின் அறைக்கு வர, அவரும் மகள் உறங்கி கொண்டிருந்ததை கவனித்தார். அவள் முகம் சிறு பிள்ளை போல் சுருங்கி இருக்க, அத்தனை உரிமையாக தாய் மாடி சாய்ந்திருந்தாள்.

                    தன்னிடம் தன் மகள் எப்போதாவது இப்படி நெருங்குவாளா என்ற ஏக்கம் அவர் இயக்கத்தை தடுத்துவிட,  அறைக்கதவில் இருந்து கையை கூட எடுக்காமல் அப்படியே நின்று விட்டிருந்தார்… கதவு திறந்த சாதத்தில் திரும்பி பார்த்த உமா, கணவரின் முகத்தில் தெரிந்த ஏக்கத்தில் மனைவியாக ஒருமுறை தவித்து போனாலும், என் மகள் எத்தனை தவித்து இருப்பாள் என்று தனக்குள் இறுகி கொண்டார்.

                    இந்த மூன்று ஆண்டுகளாவே கணவனிடம் தேவையான பேச்சுக்கள் தான் உமாதேவி… அவராக ஏதாவது கேட்டால் கூட, ஆம், இல்லை என்று இரண்டே பதில்கள் தான்.. தன் மகளின் இந்த நிலைக்கு கணவர் மட்டுமே காரணம் என்று முழுமையாக நம்பியவர்,கணவரை கூடவே இருந்து தண்டிக்க முடிவு செய்து இருந்தார்..

                   பிரிந்து செல்வது எல்லாம் விஷயமே இல்லை.. அவரை தங்கமாக தாங்க அவரின் உடன் பிறந்தவர் இன்றும் தயாராக இருக்கிறார்.. ஏன் அவரின் மகளே பார்த்துக் கொள்வாளே… ஆனால், உமாவை அதே வீட்டில் பிடித்து வைத்ததும் காதல் தான்.. அது அவரின் கணவர் மீது அவர் கொண்ட காதல்..

                  அவர் என்ன செய்து இருந்தபோதும், அவரை தனித்துவிட மனம் வந்ததே இல்லை உமாவிற்கு.. ஆதியும் இது புரிந்ததால் தான் அன்னையையே அழைக்காமல் தான் மட்டும்  தனியே சென்றது..

                  தன் கணவரை என்ன என்பது போல் உமாதேவி பார்க்க, “கொஞ்சம் பேசணும் ன்னு வந்தேன்… தூங்கிட்டு இருக்கா..” என்றார் தயக்கமாக..

                  தன் மகளை மடியில் இருத்திக் கொண்டே, “என்ன விஷயம்… என்கிட்டே சொல்லுங்க..” – உமா..

               “இல்ல.. ஜெகன் வீட்ல தமிழ் ஏதோ தகராறு பண்ணிட்டானாமே… அதை பத்தி தான்..”

              “அதைப்பத்தி ஆதிகிட்ட பேச என்ன இருக்கு..”

               “என்ன இப்படி பேசற.. அவன் இந்த ஆட்டம் போட ஒரே காரணம் ஆதிதான்.. இவ மட்டும் அவனை கண்டுக்காம விட்டா, அவனால என்னசெய்ய முடியும்..என் மகளுக்கு என்ன தலையெழுத்து அவன் பின்னாடி அலைய..” என்று அவர் அவரின் வழக்கமாக பேச

                 “இதெல்லாம் திருந்தாத ஜென்மம்..” என்று தலையில் அடித்துக் கொண்டார் உமாதேவி..

                 “என்ன.. என்ன தலையில் அடிச்சிக்கிற… இது என் மக வாழ்க்கை… எப்படி என்னால விட முடியும்…” என்று அவர் கோபம் கொள்ள

                “விடாம..விடாம என்ன செய்ய போறீங்க..” என்றுஅவரின் மனைவி கேட்க

               “நான் என் மகளை அவனுக்கு கட்டிக் கொடுக்க மாட்டேன்… அவன் என்மேல இருக்க கோபத்துல என் மகளை கஷ்டப்படுத்துவான்.. அதை நான் வேடிக்கை பார்ப்பேனா..”

               “அவன் என்ன வரதராஜனா…” என்று அழுத்தமாக கேட்டார் உமாதேவி…

              கணவர் அதிர்ந்து பார்க்க, “நீங்க எல்லாரையுமே உங்க மாதிரியே எடை போடுவீர்களா… இத்தனை வருஷம் அவனை பார்த்துட்டு இருக்கோம்.. அவன் என்ன செய்வான் செய்யமாட்டான் தெரியாது உங்களுக்கு… உங்கமேல இருக்க கோபத்துக்குதான் மூணு வருஷமா உங்களை வாட்டிட்டு இருக்கான்..”

                “அவனுக்கு இன்னமும் கோபம் வந்தா கூட நியாயம் தான்… அவனோட இழப்பு அந்த அளவுக்கு பெருசு.. ஆனா, அவன் கோபத்தை நேரடியா உங்ககிட்டேயே காட்டுவான் அவன்..  உங்க பொண்ணை வச்சு உங்களை பழிவாங்குற அளவுக்கு அவன் கேவலமானவன் இல்ல.. அவனுக்கு ஆதி வேணும்ன்னா அவன் கட்டிக்கட்டும்.. என் மக வாழ்க்கையிலே இனி நீங்க எதுவும் செய்யக்கூடாது..” என்று அடக்கப்பட்ட ஆத்திரத்துடன் அவர் பொரிந்து விட

                “அதென்ன உன் மக.. அவ எனக்கும் பொண்ணு தான்.. ஒரு அப்பனா என் மகள் வாழ்க்கையை பத்தி நான் யோசிக்கிறது சரிதான்… “என்று அடித்து பேசியவர்

                “அவனோட இழப்புக்கு எந்த வகையிலும் நான் காரணம் இல்ல.. அவன் பிழைக்க தெரியாம பிழைச்சு உயிரையே விட்டான்.. அதுக்கு நானா பொறுப்பாக முடியும்.. அதுவும் நானா அவனை கொன்னேன்.. உடம்பு முடியாம அவன் இறந்து போனதுக்கு நீங்க என்னை குத்தம் சொல்லிட்டு இருக்கீங்க..”

                 “இப்பவும் சொல்றேன்.. என் மக ஒண்ணுமில்லாத இடத்துல வாழ வேண்டாம்ன்னு தான் அன்னிக்கு சம்பந்தம் பண்ணிக்க வேண்டாம்ன்னு சொன்னேன்.. இவ இந்த அளவுக்கு உறுதியா இருப்பா ன்னு எனக்கு எப்படி தெரியும்..”

                “அதோட சேதுமாதவன் எனக்கும் நண்பன் தான்… அன்னிக்கு கடைசியா பேசினப்ப கூட, பாக்டரில இருக்க அவன் பங்குபணத்தை பிரிச்சு கொடுக்கறேன் னு தான் சொன்னேன்.. நான் எந்த இடத்துலயும் அவனை ஏமாத்த நினைச்சதே இல்ல உமா..” என்று வரதன் தன் நியாயத்தை அடுக்கி முடிக்க

               “அப்படியா… உங்கமேல எந்த தப்பும் இல்லையா.. பாக்டரில தரமில்லாத பொருளை தயாரிச்சது யாரு?? சேது அண்ணாவா?? நடந்த அத்தனை விஷயத்துக்கும் மூலப்புள்ளி நீங்க வச்சது தான்.. நீங்க செஞ்ச அந்த விஷயத்துல தான் அந்த அமைச்சர் உள்ளேவந்தது..

              “சேது அண்ணா அவரை எதிர்த்து நிற்கவும் அவன் அவருக்கு குடைச்சல் குடுக்க தொடங்கினான்.. அதோட விட்டிருந்தாலும் நிமிர்ந்து இருப்பாரு.. ஆனா, நீங்க அவருக்கு துரோகம் பண்ணி அந்த அமைச்சரோட சேர்ந்து என்னென்ன ஆட்டம் போட்டீங்க…”

                “எல்லாம் மறந்து போச்சோ… இத்தனையும் செஞ்சிட்டு நான் என் பொண்ணு நல்லதுக்கு பேசினேன் ன்னு என்கிட்டேயே சொல்றிங்களா… இத்தனையும் நீங்க உங்க பணத்தாசைக்காகவும், உங்க சுயநலத்துக்காகவும் மட்டும் தான் செஞ்சீங்க…”

                 “இதுல அநியாயமா பாதிக்கப்பட்டு நின்னது என் மக.. என் மக வாழ்க்கையை கெடுத்ததே நீங்க தான்… உங்களால எப்பவும் அதை மறுக்கவே முடியாது… அவளுக்கு நல்லது பண்றேன் ன்னு இனியும் எதுவும் செஞ்சு அவளை ஒரேடியா இல்லாம பண்ணிடாதீங்க…”

                 “அவளுக்கு என்ன வேணும்ன்னு அவ முடிவெடுப்பா… நான் என் மகளை அப்படிதான் வளர்த்து இருக்கேன்.. அவ முடிவு பண்ணட்டும்.. அவ தமிழோட சேர்ந்து வாழ போறாளா இல்லையா எதுவா இருந்தாலும் அவ முடிவு தான்…”

                “இந்த விஷயத்துல நீங்க வாயை திறந்திங்க.. உங்களுக்கு பொண்ணு மட்டும் இல்ல பொண்டாட்டியும் இல்லாம போய்டுவா…” என்று எச்சரித்தார் உமாதேவி… வரதன் அவரின் வார்த்தைகளில் கொதித்து நின்றாலும், இதற்குமேல் மனைவியிடம் வாதிட தயாராக இல்லை..

                  அவர் பேச நினைத்தாலும், அவர் மனைவி வலிக்க திரும்ப கொடுத்து விடுவார் என்பதும் காரணமாக இருக்க, தலையை தொங்கப்போட்டு கொண்டு அங்கிருந்து அகன்றார் அவர்.

Advertisement