Advertisement

கைநீட்டினேன் என்னை கரைசேர்க்க வா 08

                            தமிழ் மாறன் என்ன பேசினாலும், அவனை எதிர்த்து ஆதிக்கு ஆதரவாக நின்றுவிட தயாராக இருந்தான் சித்தார்த்.. ஆனால், தமிழ் அவனை பேசவே விடாமல்  தன் திருமண சான்றிதழை அவனிடம் நீட்டிவிட, அது பொய்யாக இருந்து விடாதா என்று அப்போதும் ஒரு எண்ணம் இருந்தது அவனுக்குள்.

                          ஆனால், அதற்கு வாய்ப்பே இல்லை அங்கே.. அவர்களின் திருமணம் சட்டப்படி பதிவு செய்யப்பட்டு இருக்க, இருவரின் புகைப்படத்தோடு, முத்திரை குத்தப்பட்டு, பச்சை மையில் கையெழுத்து  இடப்பட்டு இருந்தது. இது அத்தனைக்கும் மேலாக கீழே சம்பந்தப்பட்ட இருவரின் கையொப்பம் வேறு.

                        அந்த சான்றிதழை பார்த்ததுமே சித்தார்த்தின் நம்பிக்கை ஆட்டம் காண, அவன் கையில் இருந்து அதை கிட்டத்தட்ட பிடுங்கி இருந்தார் அவன் தந்தை. அவரும் அந்த பத்திரத்தை மேலோட்டமாக பார்த்தவர், மிகவும் நாகரிகமாக, “இது உங்க குடும்ப விஷயம் ஜெகன்… நீங்க பேசி முடிங்க..ஆனா, இனி என் மகனை இதுக்குள்ள இழுக்காத..” என்றதோடு மகனின் கையை பிடித்து இழுத்துக் கொண்டு சென்று விட்டார்.

                       இப்போது அந்த பதிவு திருமண சான்றிதழ் ஜெகநாதனின் கையில் இருக்க, அதை ஒரு பார்வை பார்த்தவர் ஆதியை பார்க்க, அதற்குள் ராம் அந்த சான்றுதழை வாங்கி இருந்தான். அவன் அதை பார்த்துக் கொண்டிருக்கையில், அபர்ணாவும் அதை பார்வையிட, அதில் இருந்த தங்கையின் கையெழுத்து முதல் பார்வையிலேயே பிடிபட்டு விட்டது அவளுக்கு.

                       அதற்குமேல் யோசிக்க எல்லாம் நிதானம் இல்லை அவளிடம்… வீட்டிற்கு தெரியாமல் இவனை திருமணமே செய்து கொண்டாளா??? என்பது ஒன்றே முன்னால் நிற்க, இப்போது தன் மாமன் அவமானப்பட்டு நிற்பதும் இவளால் தான் என்று ஆதியின் மீது ஆத்திரமாக வர, தன் மொத்த கோபத்தையும் கைகளில் தேக்கியவள் என்ன?? ஏதென்றே விசாரிக்காமல் ஆதியை அடித்து விட்டிருந்தாள்..

                        அவள் அப்படி அடித்து விடுவாள் என்று எதிர்பார்க்காத ராம், அவள் அடித்த பிறகே அவள் கையை பிடித்து அவளை இழுத்து தூர நிறுத்தினான்.. ஆனால், அவள் அப்போதும் அடங்காமல் “இன்னும் என்ன செய்ய காத்திருக்க டி நீ.. இதுவரைக்கும் எங்களை அவமானப்படுத்தினது எல்லாம் போதாது ன்னு, இப்போ இப்படி செஞ்சு வச்சுருக்கியா…”

                     “ஹேய்.. முதல்ல உனக்கு எங்கே இருந்து வந்தது இவ்ளோ தைரியம்.. திருட்டு கல்யாணம் பண்ற அளவுக்கு  உன்னை மயக்கி வச்சிருக்கானா இவன்.. அப்படி என்னடி இவன்தான் வேணும் ன்னு.. பெத்தவங்க, மத்தவங்க, கூடப் பிறந்தவங்க அத்தனையும் மறக்க வைக்குதா உன்னோட காதல்..”

                    “உனக்கு எத்தனை அழுத்தம் இருந்தா இப்படி ஒரு காரியத்தை செஞ்சிருப்ப..” என்று கத்தியவள் “நீங்க விடுங்க என்னை..” என்று கணவனிடம் கத்திக் கொண்டே மீண்டும் அவளை நெருங்க

                     “வேண்டாம் அபி..  இன்னொரு முறை, அவ மேல கையை வைக்காத… ” என்று எச்சரித்தான் தமிழ்மாறன்..

                     இப்போது மொத்த கோபமும் அவன் மீது திரும்பி விட, தன் கணவன் கையை உதறியவள் தமிழ்மாறனை நெருங்கி இருந்தாள்.

                    எடுத்த எடுப்பிலேயே “நீ யாருடா என்னை மிரட்ட.. என்னையும் இவளை மாதிரி ஏமாளி ன்னு நினைச்சிட்டியா…”

                     “முதல்ல நீ யாரு எங்களுக்குள்ள.. அவ என் தங்கச்சி நான் அவளை அடிப்பேன்.. திட்டுவேன்.. என்ன வேணா செய்வேன்.. நீ யாரு..வெளியே போடா..” என்று அவள் சத்தம் போட, அவளை பிடித்து வைப்பதே பெரும்பாடாக இருந்தது ராமுக்கு.

                   தமிழ் அவளின் இத்தனை பேச்சுக்கும் எந்த பதிலும் கொடுக்காமல் நிற்க, அடுத்ததாக ஜெகநாதன் ஆரம்பித்தார்.. “ஏன் தமிழ் இப்படி நடந்துக்கற… ஏன் அவளை இப்படி சித்ரவதை பண்ற… இதுவரைக்கும் நடந்தது எல்லாம் போதாதா.. இப்போ இந்த கல்யாணம் வேறயா..”

                   “அவளை உயிரோட புதைச்சுடனும் ன்னு முடிவு பண்ணிட்டியா நீ… அவளை விட்டுடு தமிழ்…அவ வாழ்க்கையில் குறுக்கிடாத..” என்று அவர் மிரட்டுவது போல் கூற,

                   தமிழ் இப்போது லேசான புன்னகையுடன், “இதுவரைக்கும் நடந்த எல்லாமே போதும் ன்னு முடிவு பண்ணிதான் இப்போ வந்திருக்கேன் அங்கிள்… எனக்கு என் மனைவி வேணும்.. என்னோட அனுப்பி வைங்க… உங்க பொண்ணு வாழ்க்கைக்கு நான் பொறுப்பு..” என்று நிதானமாக பேசினான்.

                  அவனுக்கு ஜெகன் பதில் கூறும் முன்பே,  “ஹேய்.. நீ  முதல்ல வெளியே போடா.. என் தங்கச்சியை உன்னை நம்பி அனுப்பி முடியாது.. அவ கல்யாணமே செய்யாம எங்களோட இருந்தா கூட பரவாயில்ல.. ஆனா, உன்னை மாதிரி ஒருத்தனோட அவ வாழவே வேண்டாம்..” என்று அபி கத்தி விட்டாள்

                இத்தனை கலவரத்திற்கும் ஒரு வார்த்தை கூட பேசாமல் சிலையாகவே ஆதி நின்றிருக்க, ஜெகநாதன் அவளைத்தான் பார்த்திருந்தார். அபர்ணாவின் கோபம் அவள் தங்கையின் நல்வாழ்வை மனதில் கொண்டே என்று புரிந்தாலும், தன் சின்ன மருமகள் மனம் தெரியாமல் என்ன பேசுவது என்று புரியவில்லை அவருக்கு.

                அவரின் வயது அவரை சிந்திக்க வைக்க, அபர்ணா போல் ஆத்திரத்துடன் கத்தாமல், அடுத்து என்ன என்று ஆதியை பார்த்திருந்தார் அவர். அவள் வாழ முடிவெடுத்து விட்டால், தமிழின் முகம் பார்க்க வேண்டுமேஅதுவே அவரை நிதானிக்க வைத்தது..

                   ஆனால், ஆதி அவருக்கு எந்த பதிலும் கொடுக்காமல் ராமை நெருங்கியவள் அவன் கையில் இருந்த சான்றிதழை வாங்கி பார்க்க, அதில் இருந்தது அவளின் கையொப்பம் தான்… கூடவே அதில் இருந்த முத்திரை, மற்ற கையெழுத்துகள் என்று அத்தனையும்  அசலை போலவே இருக்க, ஒரு நிமிடம் நிதானமாக அதை பார்வையிட்டாள்..

                    அதன்பின் தமிழின் அருகில் வந்தவள் அவன் கண்களை பார்க்க, அவள் பார்வையை தயங்காமல் சந்தித்தான் அவன். அவன் கண்களில் இத்தனை நாட்களாக பார்த்திருந்த வெறுப்பு காணாமல் போயிருக்க, அங்கே அவள் மீதான காதலும், கனிவும் மீண்டு இருந்தது.

                     அவன் பார்வையின் பொருள் புரிந்தாலும், அதை ஏற்க அவள் மனம் தயாராக இல்லையே.. எனவே அவன் பார்வைக்கு பதில் பார்வை எல்லாம் கொடுக்கவில்லை ஆதி. மாறாக ஒரு வெற்றுப்பார்வை மட்டுமே.  அதன் முடிவில் “உங்களோட வாழ நான் தயாரா இல்ல.. எனக்கு நீங்க வேண்டாம்.. ” என்று அழுத்தமாக சொன்னவள்

                 கையில் இருந்த பேப்பரை அவனிடம் நீட்டி, “இதுக்குமேல எதுவும் பேசுறதா இருந்தா, கோர்ட் மூலமா பேசுவோம்… நான் உங்களை கல்யாணம் பண்ணிட்டு கூட வாழ மறுக்கிறேன் ன்னு கேஸ் கொடுங்க..” என்றவள் அங்கிருந்த யாரையும் திரும்பியும் பாராமல், “நான் கிளம்புறேன் மாமா..” என்ற வார்த்தையுடன் வெளியேறி விட்டாள்.

                   அந்த சான்றிதழை கையில் வைத்திருந்தவன் அவள் பின்னால் ஓட, அவனை கண்டு கொள்ளாமல் அங்கே நின்றிருந்த தன் காரின் அருகில் சென்றவள் கார் கதவை திறக்க முற்பட, அவள் கையை அழுத்தமாக பற்றி இருந்தான் தமிழ்… கூடவே ஒரு “சாரி…”

                  அவனின் இந்த வார்த்தையில் இன்னமும் கோபம் வந்தது அவளுக்கு.. “கையை விடுங்க..” என்று அடக்கப்பட்ட ஆத்திரத்துடன் அவள் முறைத்து நிற்க

                    “யாழி…” என்று அவன் தொடங்கும்போதே

                   “நான் ஆதி..” என்று ஒற்றை விரலை நீட்டி எச்சரித்தவள் “என்ன… என்ன வேணும் உங்களுக்கு.. அதான் நீங்க நினைச்சது எல்லாம் நடந்துடுச்சே… அப்புறம் என்ன..?” என்றாள் கோபத்துடன்.

                    “என்ன நினைச்சேன் நான்.. ரொம்ப தெரியுமா உனக்கு.. “என்று அவனும் கோபம் காட்ட

                    “ஏன் தெரியாம, உங்களுக்கு நான் நிம்மதியா இருக்க கூடாது.. அதுக்காக என்ன வேணாலும் செய்விங்க.. இப்போ நடந்தது கூட அதுக்காக தான்.. அதான் மொத்தமா இத்தனை பேர் முன்னாடி திருட்டு கல்யாணம் பண்ணினேன் ன்னு பட்டம் வாங்கி கொடுத்து முடிச்சாச்சே…இன்னும் ஏன் நடிக்கிறிங்க..” என்று ஆத்திரமாக அவள் வினவ

                      “ஏன் அது பொய் ன்னு வாயை திறந்து சொல்ல வேண்டியது தானே.. ஏன் அமைதியா இருந்த… எனக்காக தானே.. நானும் அப்படிதான்.. உனக்காக தான் வந்தேன்..” என்றான் தமிழ்..

                     “ஓஹ்.. நான் அமைதியா இருந்தது உங்களுக்காகவா.. எனக்கு தெரியாம போச்சு பாருங்களேன்… ” என்று நக்கலடித்தவள் “இன்னமும் என்னை முட்டாளாவே நினைச்சுட்டு இருக்கீங்க மிஸ்டர். தமிழ்… அங்க நீ சொன்னதை மறுக்க முடியாம நான் அமைதியா இல்ல.. மறுத்து என்ன ஆகப் போகுது ன்னு தான் அமைதியா இருந்தேன்…”

                   “என்கூட பிறந்தவளே என்னை நம்பல.. அப்புறம் அவங்க எப்படி என்னை நம்புவாங்க.. என்னை நம்பாத யாருக்கும் நான் எதையும் நிரூபிக்க வேண்டியது இல்ல…அதனால தான் அமைதியா இருந்தேன்.. வேற எதுவுமே இல்ல..” என்று அவள் அடித்து கூற

                    “அப்போ நீ சம்மதிச்சு தான் இந்த பெண் பார்க்கும் படலமா..”

                  “ஏன்.. என்ன தப்பு.. உங்களை ஏதோ ஒரு காலத்துல கதைச்ச குற்றத்துக்காக, காலம் முழுக்க உங்களை நினைச்சு உருகிட்டு இருக்கணுமா.. அதுவும் நீங்க இன்னொருத்திக்கு ஓகே சொன்ன பிறகும் கூட, அப்படியே இருக்கணுமா???”

                      “ஏய்.. அது அம்மா கேட்கவும் மறுக்க முடியாம, அந்த நேரத்துக்கு சொன்னதுடி.. அடுத்த நாளே முடியாது சொல்லிட்டேன்.. உன் பிரென்ட் அதை உன்கிட்ட சொல்லலையா..” என்று தமிழ் முறைக்க

                    “சோ.. என்ன பண்ணனும்… நீங்க முடியாது சொல்லிட்டீங்க, அதுக்காக நான் உங்க பின்னாடியே வந்திடணுமா..??” என்று அப்போதும் முரண்டினாள் ஆதி..

                    “யாழி…” என்று தொடங்கியவன் அவளின் முறைப்பில் “என்னால மாத்திக்க முடியாது.. நான் அப்படிதான் கூப்பிடுவேன்…” என்று அழுத்தமாக சொல்ல, ஏளனமாக சிரித்தவள் முகத்தை திருப்ப,அவள் முகத்தை அழுந்த பற்றி தன் முகம் பார்க்க வைத்தவன்

                       “மூணு வருஷமா உன் பேரை சொல்லல. உண்மைதான்.. ஆனா, ஒருநிமிஷம் கூட உன்னை மறக்கல.. உனக்கும் தெரியும் அது… அம்மாவோட நிலைமை தெரியும் இல்ல உனக்கு.. அவங்க ஏக்கமா என் முகத்தை பார்க்கும் போது நான் என்ன பேச முடியும்..??” என்று அவன் தன் நிலையை விளக்க

                       “உங்க அம்மா இப்பவும் அப்படியே தான் இருக்காங்க.. நீங்க அவங்களை சங்கடப்படுத்த வேண்டாம்.. அவங்க சொல்றவங்களை கல்யாணம் பண்ணிக்கோங்க…”

                      “அதை நீ சொல்லாத..  நான் யாரை கல்யாணம் பண்றது ன்னு நான் பார்த்துக்கறேன்… நீ முடிவு பண்ணாத… ” என்று தமிழ் அழுத்தம் திருத்தமாக கூறியவன் அவளை முறைக்க

                      “அதேதான் நானும் சொல்றேன்.. என் கல்யாணத்தை நான் முடிவு பண்றேன்.. நீங்க குறுக்கே வராதீங்க..” என்றாள் ஆதிரையாழ்…

                        “ஓஹ்.. அப்போ மேடம் இன்னொரு கல்யாணத்துக்கு தயார் ஆகிட்டிங்க… வாழ்த்துக்கள்… ஆனா, நாந்தான் கெடுத்து விட்டுட்டேன் இல்ல.. ஒன்னும் பிரச்சனை இல்ல… அந்த சித்தார்த் கிட்ட நானே பேசறேன்… அவன் தான் எப்போ எப்போ ன்னு இருக்கானே..நிச்சயமா புரிஞ்சிப்பான்…”

                      “இப்போவே கால் பண்ணட்டுமா.. வேணும்ன்னா இன்னிக்கே திரும்ப வர சொல்லவா..”

                      “ஏன்.. புதுசா ப்ரோக்கர் வேலையும் பார்க்க ஆரம்பிச்சு இருக்கீங்களா…” என்றாள் அவனை கோபப்படுத்த வென்றே..

                      “ஆமா.. அதுவும் பொண்டாட்டிக்கே மாப்பிளை பார்க்க போறேன்..” என்று மெல்லிய சிரிப்புடன் அவன் நிற்க

                      “போலி பத்திரத்தை கையில வச்சுட்டு, பொண்டாட்டி வேறயா… மரியாதையா போய்டுங்க..” என்றவள் விரல் நீட்டி மிரட்டி வைக்க

                        அவள் விரலை பிடித்துக் கொண்டவன் “பத்திரம் தான் போலி.. பொண்டாட்டி அசல் தான்… அதுவும் எனக்கே எனக்கான ஒரே ஒரு பொண்டாட்டி..” என்று அவன்  காதல் கணை வீசினான் அவன்.

                       அவன் பேச்சில் வரவிருந்த சிரிப்பை அடக்கி கொண்டவள் “ஆமா.. ஊர்ல மத்தவன் எல்லாம் பத்து பதினஞ்சு பொண்டாட்டி வச்சிருக்கான்.. ஒரே ஒரு பொண்டாட்டியும்… என் முன்னாடி நிற்காதிங்க சொல்லிட்டேன்..”

                         “நமக்கு அத்தனை எல்லாம் தாங்காது தாயே.. உன் ஒருத்தியை வச்சுட்டே சமாளிக்க முடியல என்னால.. இதுல பத்து, பதினஞ்சு எல்லாம் ரொம்ப ஓவர் யாழி..” என்று அப்போதும் சிரிப்புதான் தமிழிடம்…

                           இவன் பேச்சை வளர்த்துக் கொண்டிருக்கிறான் என்பது வெகு தாமதமாகவே ஆதிக்கு புரிய தொடங்க, அவனுக்கு பதில் சொல்லாமல் அவள் மீண்டும் கார் கதவில் கையை வைக்க, அந்த கதவின் மீது சாய்ந்து கொண்டு திறக்க 

                            முடியாமல் செய்தவன் “எனக்கு பதில் சொல்லிட்டு போடி..” என்றான் அதிகாரமாக

                      புரியாத பார்வை பார்த்தவள் “என்ன பதில் சொல்லணும்…” என்று கையை கட்டிக் கொண்டு நிற்க

                    “எப்போ கல்யாணம் பண்ணிக்கலாம்..”

                    “இன்னமும் உங்க காரணங்கள் எல்லாம் அப்படியே தான் இருக்கு… என் அப்பா, உங்க அப்பா, உங்க பிடிவாதம் எதுவுமே மாறல…”

                      “எல்லாம் இருக்கு யாழி… இதோட என்னோட காதலும் இருக்கு..”

                       “என் கண்ணுக்கு காதல் தெரியவே இல்ல.. காதல் இருந்திருந்தா, அன்னிக்கு அந்த நேரத்துல என்னை விட்டு போயிருக்க மாட்டிங்க..” என்று ஆதங்கமாக அவள் சொல்ல

                       “போக முடியாம தான் திரும்பவும் வந்தேன் யாழி.. என்னை புரிஞ்சிக்கமாட்டியா நீ..” என்று அவனும் அதே குரலில் கேட்க

                       “அன்னிக்கு நான் சாதாரணமா அழுதுட்டு இருந்திருந்தா, விட்டுட்டு போயிருப்பிங்க நீங்க…  ரத்தம் வடிய என்னை பார்த்ததும் உங்களுக்கு வந்தது பரிதாபம்… காதல் இல்ல… யார் இருந்தாலும் அப்படிதான் நடந்து இருப்பிங்க.. ” என்றாள் ஆதி..

                       “யாழி… நீ விதண்டாவாதம் பண்ற… உன்மேல எனக்கு பரிதாபமா.. அபத்தமா இருக்கு யாழ்..” என்று அவன் மன்றாட

                       “எனக்கு பயமா இருக்கு.. நான் இந்தளவுக்கு பைத்தியமா ன்னு நினைச்சு பயமா இருக்கு… அன்னிக்கு வேற ஏதாவது தப்பா நடந்து இருந்தா, அதுக்கு மொத்த காரணமும் நான் மட்டும்தான்..”

                  “நான் மட்டும் கவனமா இருந்திருந்தா, எதுவுமே நடந்து இருக்காது… என்னால ஈஸியா அங்கே இருந்து கிளம்பி இருக்க முடியும்.. ஆனா, நான் செய்யலையே.. சுத்தி நடக்கிற எதுவுமே புரியாம, யாரு என்னன்னு பார்க்காம, பைத்தியம் மாதிரி இருந்து இருக்கேன்..”

                  “அதனால தான் சொல்றேன்.. எனக்கு இந்த காதல் வேண்டாம்.. நீங்களும் வேண்டாம்..”  என்று முடித்துக்கொண்டாள் அவள்..

          அவள் கூறியது மொத்தத்தையும் அமைதியாக கேட்டுக் கொண்டவன், “நடந்த எதையும் என்னால மாத்த முடியாது.. ஆனா, இனி நடக்க போறது மொத்தமும் என் பொறுப்பு… உன்னையும் சேர்த்து..”

                  “நீ என்ன சண்டை போட்டாலும் சரி.. இல்ல வேற என்ன செஞ்சாலும் சரி… அடுத்த மாசம் நமக்கு கல்யாணம்… நான் நடத்திக் காட்றேன்..”

                     “உன் அப்பன், நீ, உன் மாமா யார் வந்தாலும் தடுக்க முடியாது.. நீ ரொம்ப முரண்டு பிடிச்சா, தூக்கிட்டு போகவும் தயாரா தான் இருக்கேன்… யோசிச்சுக்கோ..” என்று அதிரடியாக கூறியவன் அவளுக்காக கார்கதவை திறந்து விட, கோபத்தில் மேல்மூச்சு, கீழ்மூச்சு வாங்கியது அவளுக்கு…

                    காரின் உள்ளே அமர்ந்தவள் கார் கதவை இழுக்க, கதவின் இடைவெளியில் குனிந்தவன் “கல்யாணம் முடியுற வரைக்கும் இப்படி எல்லாம் மூச்சு வாங்காத.. என் மூச்சு நின்னுடும் போல.. அப்படியே தூக்கிட்டு போய்டணும் போல தோணுது…” என்றவன் அவள் எதிர்பார்க்காத நேரம் அவள் கன்னத்தில் முத்தமிட்டு, கதவை மூடி சென்றான்…

                    

                 

Advertisement