Advertisement

கைநீட்டினேன் என்னை கரை சேர்க்க வா 07

                        ஆதி தன் வீட்டிற்கு திரும்பி வந்து முழுதாக ஒருநாள் முடிந்து போயிருக்க, இன்னமும் அவள் அறையில் தான் இருந்தாள். வீட்டிற்குள் நுழையும்போதே தந்தை எதிர்ப்பட, அவரை நிமிர்ந்து கூட பார்க்காமல் தன்னுடைய அறைக்கு சென்று ஒளிந்து கொண்டிருந்தாள்.

                      உண்மையில் ஒளிந்து கொண்டதாக தான் தோன்றியது ஆதிக்கு. எதற்காக தான் இந்த வீட்டை விட்டு வெளியேறினோம்?? இப்போது யாருக்கு பயந்து மீண்டும் இங்கே வந்திருக்கிறோம்? என்று யோசித்து பார்த்தால் அவளின் தனிப்பட்ட காரணங்கள் என்று ஏதும் தென்படவே இல்லை.

                     தான் வீட்டை விட்டு சென்றதாலோ, இப்போது மீண்டும் இங்கே திரும்பி விட்டதாலோ எதுவுமே, அவள் சம்பந்தப்பட்ட யாருமே மாறிவிடவும் இல்லை என்பதும் புரிந்து விட, என்னவோ செய்து கொள்ளுங்கள்… என்ற மனநிலை தான்.

                    இனி யாருக்காகவும் பார்ப்பதில்லை என்று பலமுறை தனக்குள்ளே பாடம் எடுத்துக் கொண்டிருந்தாள். மருத்துவர் கொடுத்த கிரீமின் உபயத்தால் முக வீக்கம் ஓரளவுக்கு மட்டுப்பட்டிருக்க, முழுதாக சரியாக இன்னமும் இரண்டு நாட்கள் எடுக்கும் என்றே தோன்றியது..

                  முக வீக்கம் சரியானதும் தான் ஏற்றுக் கொண்டிருந்த வழக்குகளை பார்க்க வேண்டும்.. தன் தொழிலில் கவனம் செலுத்த வேண்டும்.. என்று எண்ணம் முழுவதும் தன்னை குறித்து தான்.. தான் என்ன செய்ய வேண்டும்.. இனி எப்படி இருக்க வேண்டும் என்று அத்தனை அத்தனை திட்டமிடல்கள்..

                 அவள் அவளை குறித்த திட்டமிடலில் இருக்க, மெல்ல அவளின் அறைக்கதவு தட்டப்பட்டது. அதன்பின்னே கதவு திறக்கும் ஓசையும் கேட்க, மெல்ல தலையை நிமிர்த்தி அவள் அறைவாயிலை பார்க்க, அவளின் தந்தை வரதராஜன் நின்று கொண்டிருந்தார் அங்கே.

                அவரை கண்டதுமே முகம் மாறிவிட, எதுவுமே பேசாமல் எழுந்து கொண்டவள் தன் அறையோடு இணைந்திருந்த பால்கனியில் சென்று நின்று விட்டாள். அவரின் கவலையான முகம் வாட்டினாலும், சேது மாதவனின் களங்கமில்லாத முகமும் கண்ணெதிரே வந்து போனது.

                  அவரின் வீட்டிலேயே இருந்து  புறக்கணித்து விட முடியுமா உன்னால்??? என்று மனம் கேள்வி கேட்க, “இது என் தாத்தா கட்டின வீடு.. இது எப்போ அவர் வீடா இருந்துச்சு..” என்று கோபமாக பதில் கூறிக் கொண்டாள் ஆதி. ஆனாலும் அவள் மனம் அடங்காமல், “உன் தாத்தா வீடு தானே.. அப்போ ஏன் மூணு வருஷத்துக்கு முன்னாடி வீட்டை விட்டு போன…” என்று கேட்டு வைக்க

                  “அப்போ ஏதோ கோபம்.. போய்ட்டேன்..” என்று அவள் நினைத்த கணம், “இப்போது அந்த கோபம் இல்லையா??” என்று மீண்டும் எழுந்தது கேள்வி. இவள் தனக்குத்தானே வாதப் பிரதி வாதங்கள் நடத்திக் கொண்டிருக்க, வரதன் கூம்பிய முகத்துடன் அங்கிருந்து விலகி சென்று விட்டிருந்தார்.

                    சென்றவர் தன் பெரிய மக்களிடம் தன் குறையை கூறி கண்ணீர் வடிக்க, அபர்ணா அடுத்த ஒரு மணி நேரத்தில் தன் கணவன் ராமுடன் தந்தை வீட்டிற்கு வந்து விட்டிருந்தாள். உமா அவர்களை வரவேற்று கவனித்து சாப்பிட கொடுக்க, இன்னமும் மகள் அறையிலிருந்து எட்டி கூட பார்க்கவில்லை.

                       அபர்ணாவுக்கு அதுவே தலையிறக்கமாக இருந்தது கணவனின் முன்னால். அதுவும் தன் கணவனை அவள் வந்து வா என்று கூட அழைக்கமாட்டாளா என்று கொதித்து கொண்டு வந்தது அவளுக்கு. ராம் அப்படி எல்லாம் எதுவும் நினைக்காமல் இயல்பாக இருக்க, அபர்ணா தன் தாயுடன் இருந்த நேரத்தில் அவரிடம் பொரிந்து தள்ளி விட்டாள்.

                      “ஏன்மா.. உன் சின்ன மகளுக்கு மூணு வருஷம் யாரையும் மதிக்காம தனியா உக்கார்ந்துட்டு இருந்தது போதலையாமா.. நான் அவளுக்கு அக்கா தானே.. எத்தனை நாள் கழிச்சு வீட்டுக்கு வந்திருக்கேன்.. வந்து வா ன்னு கூப்பிட்டா என்ன.. என்னை கூட விடு, என் புருஷனுக்காவது மரியாதை கொடுக்கணும் இல்லையாமா..” என்று சத்தம் போட

                 உமா நிதானம் தவறாமல் “நீ அவளுக்கு அக்கா தானே.. அவ நிலை என்னன்னு நேத்து அவளை அழைச்சுட்டு வரும்போதே உனக்கு கூப்பிட்டு சொன்னேன்ல… உடனே ஓடி வந்தியா… அதோட நீ வந்து ஒருமணி நேரமாச்சு.. இதுவரைக்கும் தங்கை எப்படி இருக்கா ன்னு ஒரு வார்த்தை கேட்டியா…”

                 “அப்புறம் அவ மட்டும் உன்னை கேட்கணும்ன்னு எப்படி எதிர்பார்க்கிற… எனக்கு நீங்க ரெண்டு பேரும் ஒண்ணுதான்.. நீ முதல்ல அவகிட்ட பாசமா நடந்துக்கோ.. அவளும் உன்கிட்ட சரியா நடந்துப்பா.. அவ ஏற்கனவே ரொம்ப மனசொடிஞ்சு வந்துருக்கா… நீ உன் பங்குக்கு எதையும் பேசி அவளை நோகடிச்சுட்டு போயிடாத… புரியுதா… அதோட உங்க ரெண்டு பேர் விஷயத்துல உன் புருஷனை உள்ளே கொண்டு வராத… அவன் இந்த வீட்டு பிள்ளை.. அவனுக்கு எல்லா விஷயமும் தெரியும்… அவனுக்கு ஆதியையும் தெரியும்…”

                    “உன் அப்பா புலம்பலை கேட்டு தானே வந்த… போ.. போய் அவருக்கு போன் போடு.. எப்போ வர்றாருன்னு கேளு…” என்றதோடு அடுப்பில் வைத்திருந்த பாத்திரத்தில் கவனம் செலுத்த தொடங்கி விட்டார். அவரின் மூத்த மகள் முகசுணக்கத்துடன் அங்கிருந்து நகர, அவளை நினைத்து ஒரு பெருமூச்சு வெளிப்பட்டது உமாவிடம்.

                        அன்றைய தினம் அப்படியே கழிய, அன்று இரவு ஆதியின் தாய்மாமா ஜெகந்நாதன் தன் தங்கையின் வீட்டிற்கு வந்திருந்தார். வெகு நாட்கள் கழித்து மருமகள் வீடு வந்திருக்க,அவளைக் காண்பதற்காக வந்திருந்தார் அவர். ஆனால், அவர் வந்தது கூட தெரியாமல் அறையில் முடங்கி இருந்தாள் ஆதி.

                    ஜெகன் தன் தங்கையுடன் பேசிக் கொண்டிருந்தவர், தன் மச்சானிடமும் சில வார்த்தைகள் பேசி விட்டு தன் மருமகளை காண படிகளில் ஏற, வரதனுக்கு தான் உள்ளுக்குள் ஒரு குறுகுறுப்பு… மகள் ஜெகனிடம் பேசுவாளா என்பது போல்…

                    ஆனால், அதற்கெல்லாம் அவசியமே இல்லை என்பதை போல், மாமனைக் கண்ட நொடி “வாங்க மாமா..” என்று வரவேற்றவள் எழுந்து அவரின் அருகில் வர, தன் மருமகளை தோளோடு அணைத்து கொண்டார் ஜெகநாதன்..

                      ஆதியின் அந்த ஓய்ந்த தோற்றம் அவரை அசைத்து பார்க்க, “என்ன ஆதிம்மா.. ஒருவழியா வீட்டுக்கு வர மனசு வந்துடுச்சு போலவே…” என்று கேட்க

                     அவரை திரும்பி பார்த்தவள் பதிலேதும் சொல்லாமல் அவரின் அருகிலமர்ந்து கொண்டாள். அந்த அறையில் அவர்கள் இருவர் மட்டுமே இருக்க, “என்ன வக்கீலம்மா.. எப்படி இப்படி அஜாக்கிரதையா இருந்த… தப்பு இல்லையா…” என்று அவர் கேட்க

                     ” பிரெண்ட் மேரேஜ் மாமா.. அங்கே இருந்து கிளம்ப கொஞ்சம் நேரமாகிடுச்சு.. இப்படி நடக்கும்ன்னு எதிர்பார்க்கல..”

                     “உன் பிரென்ட் கல்யாணத்துல தமிழ் எப்படி வந்தான் ஆதி…அதுவும் வீடு வரைக்கும் வந்திருக்கான். அவன் தம்பியை உன்கூட தங்க வச்சு, வைத்தியம் பார்த்து.. இதெல்லாம் என்ன ஆதி.. என்ன நடக்குது உன்னை சுத்தி..” என்று அவர் கண்டிப்புடன் கேட்க

                    கலங்கிய கண்களை கட்டுப்படுத்திக் கொண்டு “எனக்கும் தெரியல மாமா… அன்னிக்கு அவரை அங்கே நான் எதிர்பார்க்கல.. வழக்கம் போல முட்டிகிட்டோம்… அதோட கிளம்பி இருக்கணும்.. என்மேல தான் தப்பு.. ” என்று அவள் பாதி பாதியாக கூற, அவள் தமிழை எப்போதும் விட்டு கொடுக்கமாட்டாள் என்று அவருக்கு தான் ஏற்கனவே தெரியுமே…

                     அவளின் தலையை தட்டியவர் “சரி.. இதையெல்லாம் விடு.. என்ன முடிவு பண்ணி இருக்க.. என்ன செய்ய போற அடுத்து..” என்று கேட்க

                     “முகம் கொஞ்சம் சரி ஆனதும் கோர்ட்டுக்கு போகணும்.. நிறைய கேஸ் இருக்கு.. இப்போதைக்கு அதுக்குள்ள தான் கவனம் எல்லாம்… “

                      “சரி.. என் பொண்ணு வாழ்க்கைக்கு என்ன வழின்னு கேட்டு சொல்லுங்க ன்னு உன் அம்மா நிற்கிறாளே..அவகிட்ட என்ன சொல்ல…”

                       “சொல்றதுக்கெல்லாம் எதுவும் இல்ல மாமா… கொஞ்ச நாள் இப்படியே போகட்டும்..”

                   “மூணு வருஷத்துக்கு முன்னாடியும் இதே தான் சொன்ன ஆதி.. உன்னை நாங்க தொந்தரவு பண்ணவே இல்லையே…”

                     “இந்தமுறை எந்த குற்றஉணர்ச்சியும் இல்ல மாமா.. அதோட எந்த காத்திருப்பும் இல்ல… நான் கொஞ்சம் தெளிவாக தான் இந்த அவகாசம் ன்னு நினைச்சுக்கோங்களேன்…” என்று ஆதி தன் மாமனின் தோளில் சாய்ந்து கொண்டாள்.

                      ஜெகநாதன் ஆதியின் தலையை கோதி கொடுத்தவர் “காத்திருப்பு எதுவும் இல்லன்னு சொன்னா, நான் என் மருமகளுக்கு ஏத்த வரனா பார்க்கட்டுமா… உனக்கு தான் காத்திருப்பு இல்ல… ஆனா உனக்காக உன்னை கட்டிக்க நிறைய பேர் காத்திருக்காங்க ஆதி… “

                          “நீ உறுதியா சொல்லு.. மாமா உன்கூட இருக்கேன்.. உன் அப்பா செஞ்சதுக்கு நீ உன் வாழ்க்கையை பணயம் வைக்க வேண்டாம் ஆதி… உன்னால தமிழ்மாறன் கூட வாழ முடியாது.. அவன் மொத்தமா மாறி நிற்கிறான் ஆதி.. உன் அப்பாவை பழிவாங்க என்ன வேணா செய்வான் அவன்…

                        “அவன் எப்படி உன்னை நல்லபடியா வச்சு பார்த்துப்பான்.. “இந்த வீட்டோட கடைக்குட்டிடா நீ.. உன்னை எப்படியோ போகட்டும் ன்னு அப்படியே எப்படி விட முடியும்..” என்று காரண காரியங்களோடு அவர் விளக்கம் கொடுக்க, தன் மாமன் பேசுவது தன் மீது உள்ள பிரியத்தால் என்பதால் அவரை மறுத்து பேச முடியாமல் அமர்ந்திருந்தாள் ஆதி..

               ஆனால், அவர் விடாமல் “ஏதாவது பதில் சொல்லணும் ஆதிம்மா.. இப்படி அமைதியாவே இருந்தா, நான் என்னன்னு நினைக்க..” என்று விரட்ட

                 “ஏன் மாமா.. நீங்க இவ்ளோ ஆர்வமா இருக்கறதை பார்த்தா, மாப்பிளை ஏதும் பார்த்து வச்சிட்டீங்களா…” என்று சந்தேகத்தோடு ஆதி அவரை பார்க்க

                      “நீ சரி ன்னு சொல்லு.. மாமா உனக்கேத்த மாப்பிள்ளையா நாளைக்கே கொண்டு வந்து நிறுத்தறேன்…” என்றவர் ஆதியின் முகத்தை ஆர்வமாக பார்த்தார்.

                     அவரின் பேச்சில் சிரித்தவள் “ரொம்ப வேகமா போறீங்க மாமா.. ஆனா, உங்க வேகத்துக்கு என்னால வர முடியல… கொஞ்சநாள் போகட்டும், பார்க்கலாம்..” என்று பிடிகொடுக்காமல் முடித்துவிட்டாள்.. ஆனால், அவள் இன்னும் கொஞ்சம் அழுத்தமாக சொல்லி இருக்கலாம் போல..

                    இத்தனை நாட்களாக திருமண பேச்சை எடுத்தாலே, அதை வெட்டி விட்டு ஓடுபவள் இன்று அமைதியாக பதில் கொடுத்ததை அவளின் மனமாற்றமாக எண்ணி, அடுத்த நாளே காரியத்தில் இறங்கிவிட்டார் ஜெகநாதன்.

                       தன் நெருங்கிய நண்பரின் மகனை தன் மருமகளுக்காக தேர்ந்தெடுத்தவர் ஒரு தந்தையை போல் பொறுப்பாக, அவளின் கடந்த காலம், அவர் தந்தையின் செயல் என்று அனைத்தையும் கூறி, தமிழை பற்றியும் கூறி முடித்தே மாப்பிளை பேசி இருந்தார்.

                       அவர் பார்த்த மாப்பிள்ளையும் நல்லவனாகவே இருக்க, ஆதியின் நியாயத்தை உடனே புரிந்து கொண்டான் அவன்… அவள் தந்தை செய்த தவறுக்கு ஆதி என்ன செய்வாள்?? தந்தையை போல ஏமாற்றி விடாமல், அவனுக்காக காத்திருப்பதே அவளின் மனதை காட்டவில்லையா என்று நேர்வழியில் யோசித்த சித்தார்த், ஆதியை மணந்து கொள்ள முழு மனதாக தான் சம்மதித்தான்.

                        ஜெகநாதன் ஆதியின் தற்போதைய நிலையையும் அவனிடம் கூறிவிட, “எனக்கு அவங்களை பிடிச்சிருக்கு அங்கிள்.. அவங்களுக்கு கொஞ்சம் டைம் கொடுங்க.. அவங்க அவங்களா வெளியே வரட்டும்.. “என்று புரிதலோடு சொன்னவனை கட்டிக் கொள்ள வேண்டும் போல் இருந்தது மாமனுக்கு…

                         அனைத்தும் அவர் திட்டமிட்டபடியே நல்லவிதமாக நடக்க, ஆதியும் அடுத்த ஒருவாரம் ஓய்வில் இருந்துவிட்டு, எப்போதும் போல தன் பணிகளை கவனிக்க ஆரம்பித்து இருந்தாள்…

                  அவள் வழக்கம் போல் கோர்ட்டுக்கு சென்றிருக்க, அவளின் மாமா தான் அழைத்திருந்தார்.. அழைப்பை ஏற்றவள் “சொல்லுங்க மாமா..” எனவும்

                   “வேலை எல்லாம் முடிஞ்சதா ஆதி..” என்று ஜெகன் கேட்க

                     “எல்லாம் ஓவர் மாமா.. வீட்டுக்கு தான் கிளம்ப போறேன்..” என பதில் கொடுத்தாள் ஆதி.

                    “ஆதிம்மா.. மாமா வெளியே வெயிட் பண்றேன்டா.. நீ வா..” என்று வைத்துவிட

                 ஆர்வமாகவே வெளியில் வந்தாள் அவள். “என்ன அதிசயம்.. கோர்ட்டுக்கே தேடி வந்து இருக்கீங்க..” என்று சிரிப்புடன் கேட்டவள் “கார் எடுத்துட்டு வந்திருக்கேன் மாமா..” என்று பாவமாக கூற, தன் டிரைவரிடம் அவள் காரை எடுத்து வர சொன்னவர் தன் காரின் சாவியை மருமகளிடம் கொடுத்தார்.

                    அவரை பார்த்து “என்னவோ பெருசா பிளான் பண்றிங்க போலயே.. என்ன விஷயம்.. ஏன் என்னை கடத்திட்டு போறீங்க….” என்று கேட்டுக் கொண்டே காரை எடுக்க

                       “என் மருமகளை கடத்திட முடியுமா.. வக்கீல் அம்மா வேற..” என்று சிரித்தாலும், உள்ளுக்குள் லேசான தடதடப்புதான் ஜெகநாதனுக்கு.

                        இருவரும் பேசிக் கொண்டே அவரின் வீடு வர, ஜெகநாதனின் மனைவி கெஜலக்ஷ்மி ஆரவாரமாக வரவேற்றார் அவளை..

                     “ஆதி…” என்று அவளை கட்டியணைத்து அவர் வரவேற்க, அருகில் நின்றிருந்த ராம், “வாங்க லாயர் மேடம்.. இப்போதான் வழி தெரியுதா..” என்று குறைபட

                     “அதான் வந்துட்டேன்ல.. விடுங்க அத்தான்..” என்று அவன் கையை கோர்த்துக் கொண்டே உள்ளே சென்றாள் அவள்.

                     கெஜலக்ஷ்மி அவளுக்காக பார்த்து பார்த்து சமைத்திருந்தது பார்த்ததும் புரிந்தது அவளுக்கு. அவளுக்கு மிகவும் பிடித்த கடல் உணவுகள் கிட்டதட்ட அனைத்துமே அங்கே இருந்தது.. வெகு நாட்களுக்கு பிறகு எந்த  கவலையும் இல்லாமல் அவள் ரசித்து உண்ண, அபர்ணா கூட தன் தங்கையை பாசமாக தான் பார்த்து நின்றாள்..

                     ஜெகநாதன் மருமகளுடன் அமர்ந்து கொண்டார்.. அவள் சாப்பிட்டு முடிக்கவும், ஹாலில் அமர்ந்து அவர்கள் பேசிக் கொண்டிருக்க, அந்த நேரத்தில் தான் தன் பெற்றோருடன் அங்கே வந்தான் சித்தார்த்.. ஆதி சந்தேகத்துடன் தன் மாமனை பார்க்க, யாவருமே முகத்தில் ஆச்சரியத்தை தான் காட்டினார்..

                     “ஹேய் கிருஷ்ணா.. வரேன்னு சொல்லவே இல்லையடா.. வா வா.. வந்து உட்காரு..” என்று எழுந்து நின்று வரவேற்றவர், நண்பனை அருகில் அமர்த்திக் கொண்டார்…

                      சித்தார்த் ஆதிக்கு எதிரில் இருந்த சோஃபாவில் அமர்ந்து கொள்ள, அவன் பார்வை சற்றே ஆர்வமாக ஆராய்ந்தது பெண்ணவளை… தூய்மையான அந்த வெண்மை நிற உடையில் ஒரு பூவைப்போலவே இருந்தாள் அவள்…

                                  ஆனால், ஆதிக்கு தான் அங்கு நடப்பது புரியவில்லை. வந்தவர்கள் பொதுவான விஷயங்களையே ஜெகநாதனிடம் பேசிக் கொண்டிருக்க, மருந்துக்கும் கூட அவளிடம் எதுவும் பேச்சில்லை.. அதனால் தவறாக நினியாக்கவும் வழியில்லை..

                   இது உண்மையில் நட்பு ரீதியான சந்திப்பு தானோ என்று ஆதி எண்ணமிடும் வேளையில் தான், “எப்படி இருக்க ஆதி.. அபர்ணா கல்யாணத்துல பார்த்தது உன்னை.. ” என்றார் சித்தார்த்தின் அம்மா..

                    “ஹான்.. நல்லா இருக்கேன் ஆன்டி..நீங்க எப்படி இருக்கீங்க..” என்று அவளும் விசாரிக்க, அதன்பிறகு அவர் கேள்வியாக கேட்க, அமைதியாக அவருக்கு பதில் சொல்லிக் கொண்டு அமர்ந்திருந்தாள் அவள்..

                      எங்கேயும் எந்த அபஸ்வரமும் தட்டாமல் அத்தனை அழகாக நேரம் கழிய, ஆதியும் இயல்பாகவே இருந்தாள் அவர்களிடம். இவர்களின் பேச்சு இன்னமும் நீண்டு கொண்டிருக்க, வெளியே ஏதோ கார் வந்து நிற்கும் சத்தம்..

                        ராம் “யாரு..” என்பது போல் புருவத்தை சுருக்கி வெளியே செல்ல, அதற்கு அவசியமே இல்லாமல் உள்ளே வந்து விட்டிருந்தான் தமிழ்மாறன்..

                          அவனின் இந்த திடீர் வரவில் அங்கிருந்த அத்தனை பேருமே அதிர்ந்து நிற்க, ஜெகநாதன் உடனே சுதாரித்து “என்ன தம்பி.. என்ன விஷயம்.. என் வீட்டுக்கு வந்திருக்கீங்க..” என்று அவனை விசாரிக்க தொடங்கினார்…

                        “சொல்றேன் அங்கிள்.. சொல்லத்தானே வந்திருக்கேன்…” என்றான் நிதானமாக

                      ஜெகநாதனுக்கு இப்போது கோபம் வர, “சொல்லுங்க தம்பி.. சொல்லிட்டு கிளம்புங்க.. என் வீட்டுக்கு கெஸ்ட் வந்திருக்காங்க…” என்று காரராகவே கூறிவிட்டார்..

                      “யார் அங்கிள் கெஸ்ட்… இவங்களா… எதுக்கு வந்திருக்காங்க… பொண்ணு பார்க்கவா..” என்றான் இன்னும் நிதானமாக..

                       ஆதி அமைதியாக ஒரு வேடிக்கை பார்க்கும் மனநிலையை முயன்று தனக்குள் கொண்டு வர, கைகளை கட்டிக் க்கொண்டு நின்றுவிட,

                       ஜெகநாதன் “ஏன் தேவையில்லாத பேச்செல்லாம்… இது எங்க விஷயம் தமிழ்.. உங்களுக்கு என்ன வந்தது.. நீங்க வந்த விஷயத்தை சொல்லிட்டு கிளம்புங்க..” என்று அவனை கிளப்புவதிலேயே குறியாக இருக்க

                      “எது தேவை இல்லாத பேச்சு.. இவளுக்கு பொண்ணு பார்க்கிறதா… எனக்கு தேவை இல்லாத விஷயமா..” என்று அவன் நக்கலாக சிரிக்க

                        சித்தார்த் இப்போது வாயை திறந்திருந்தான்.. “பொண்ணு பார்க்க தான் வந்திருக்கோம் தமிழ்.. என்ன பிரச்சனை உங்களுக்கு.. உங்களுக்கும், அவங்களுக்கும் தான் ஒன்னும் இல்லன்னு ஆகிடுச்சே… ஏன் அவங்களை பொண்ணு பார்த்தா என்ன தப்பு..” என்று அழுத்தம் திருத்தமாக கேட்க

                         “நீ  பொண்ணு பார்க்கிறது தப்பு இல்ல தம்பி… ஆனா, என் பொண்டாட்டியை பார்க்கிறது தப்பு… இங்கே நிற்கிறவ என் பொண்டாட்டி..” என்றான் அழுத்தமாக

                        சித்தார்த்  கொஞ்சம் கூட அதிராமல், “பொண்டாட்டியா.. எப்போ உங்களுக்கு கல்யாணம் ஆச்ச… உங்க பேச்சை நாங்க நம்பணுமா இப்போ..” என்று நக்கலாக சிரிக்க

                      “என் பேச்சை நம்ப வேண்டாம்.. இதை நம்பு…” என்றவன் தன் சட்டை பாக்கெட்டில் இருந்து ஒரு பேப்பரை எடுத்து அவனிடம் நீட்ட, கையில் வாங்கியவன் அடுத்து பேச முடியாமல்நின்றுவிட்டான்..

                     அது ஆதிரையாழ் – தமிழ்மாறனின் திருமண சான்றிதழ் தான்… அதுவும் சட்டப்படி பதிவு செய்யப்பட்ட சான்று…

                     

Advertisement