Advertisement

கைநீட்டினேன் என்னை கரைசேர்க்க வா 06

                               ஆதிரையாழின் கழுத்தை பிடித்து விட்டாலும், அவள் மீது கோபம் எல்லாம் இல்லை தமிழ்மாறனுக்கு. அவள் செருப்பை தூக்கி எறிந்தது கூட, தன் மீது இருந்த அளவில்லாத காதலால் வந்த ஏமாற்றம் தான் என்பதை அவனால் உணரமுடிந்தது.

                            அந்த நேர கோபத்தில் அவள் கழுத்தை பிடித்து விட்டாலும் கூட, அவள் மூச்சுக்கு திணறுவதை எப்படி பொறுக்க முடியும் அவனால். அவள் திணறலை கண்ட நிமிடமே கோபம் விலக கையை எடுத்து விட்டிருந்தான். ஆனால், அதன் பின் அவள் பேசிய வார்த்தைகள்… ஒவ்வொன்றும் உண்மை என்பதை விட ஒன்றுமே பொய்யில்லை.

                            உண்மையில் அதுதான் செருப்படியாக இருந்தது அவனுக்கு. தன்னை தன் நிறை குறை அனைத்தையும் பொறுத்துக்க கொண்டவளுக்கு வெறும் கண்ணீரை மட்டுமே தான் எப்போதும் பரிசளிக்கிறோம் என்பதே வேதனையான விஷயம் அல்லவா…

                              அத்தனையும் பேசி விட்டாலும், உள்ளுக்குள் அவனை பேசியதற்காக எத்தனை தூரம் வருந்துவாள் எத்தனை வேதனைப்படுவாள் என்பதும் அவனுக்கு புரிந்தே இருக்க, கடைசியான அவளின் அந்த கண்ணீர் கண்திறப்பு தான் அவனுக்கு.

                          ஆனால், அந்த நேரம் அவளிடம் எதையுமே பேசத் தயாராக இல்லை அவன். அவளை அள்ளி அணைத்து நெஞ்சோடு பொருத்திக் கொண்டிருந்தால் கூட ஏனென்று கேட்காமல் அவன் நெஞ்சில் அடங்கி கொள்பவள் தான். ஆனால், அப்போதும் ஏதோ தடுத்து விட, அமைதியாக அவளை கடந்து சென்று விட்டான் தமிழ்.

                             அந்த கணங்களின் வலியை அவளுக்கு குறையாமல் தானும் அனுபவித்தவன் காரை எடுத்து கொண்டு கிளம்பிவிட, அவனால் முன்னேற முடியாமல் போனது. காரை சாலையின் ஓரத்தில் நிறுத்தி விட்டவன் காரை விட்டு இறங்கி சாலையோர நடைபாதையில் அமர்ந்து கொண்டான்.

                        என்னவோ அந்த நிமிட உந்துதல் அமர்ந்து கொண்டான். ஆளில்லாத அமைதியான சாலை. அங்கொன்றும் இங்கொன்றுமாக விளக்குகள். துணையாக இரண்டு மூன்று தெருநாய்… ஆனால் எதையுமே கணக்கில் கொள்ளாமல் யாழிசைத்து கொண்டிருந்தான் தமிழ்.

                         அவனின் கணங்கள் சற்று நிதானமாவே கடக்க, யாழி இன்னமும் வரவில்லையே என்றும் தோன்றியது. அவள் தங்கி இருக்கும் இடத்திற்கு இவனை கடந்து தான் செல்ல வேண்டும்.. இன்னும் வரவில்லை என்றால், கடவுளே அழுது கொண்டிருக்கிறாளா இன்னும்??? என்று எண்ணியவன்,  “நடப்பது நடக்கட்டும்.. முதலில் அவளை பார்ப்போம்…” என்று முடிவு செய்து தான் அந்த ஹோட்டலுக்கு மீண்டும் வந்தது.

                      அந்த பார்க்கிங்க ஏரியாவில் நுழையும்போதே, யாழியின் காரையும் வெளியே நின்ற வாலிபர்களை பார்த்து விட்டிருந்தான் அவன். பார்த்த நிமிடமே அவளை சூழ்ந்த ஆபத்து புரிந்து விட, அவன் நெருங்கும் நேரத்தில் தான் யாழியை தாக்கி இருந்தான் ஒருவன்.

                        அவர்கள் காரில் ஏறவும், அவள் காரை நெருங்கி விட்டவன் தன் பக்கம் இருந்த கதவை திறக்க, யாழியின் ரத்தம் வடிந்த முகம் தான் கண்ணில்பட்டது. வந்த கோபத்திற்கு இலக்காக எதிரில் இருந்தவனின் வாயை  உடைத்து விட்டவன் யாழியை வெளியே இழுத்து  கொண்டான்.

                      பயத்தில் வெளிறி போயிருந்த அவள் முகம், இன்னும் ஆத்திரத்தை கொடுக்க, அவள் வண்டியின் பின் சீட்டில் இருந்த ஒருவனை கீழே இழுத்து போட்டவன் அவனை துவைத்து எடுக்க, இதற்குள் மற்ற இருவரும் அவனை நெருங்கி இருந்தனர்.

                        குடி போதையில் இருந்த மூவரையும் எளிதாகவே சமாளித்தவன், அவர்களை எழுந்து கொள்ளவே முடியாத அளவிற்கு அடித்து போட்டிருந்தான். யாழி பயந்து போனவளாக அவர்களை பார்த்திருந்தவள், அவர்கள் அடிவாங்கி கீழே விழவும் தான் கொஞ்சம் இதமாக உணர்ந்தாள்.

                      அவன் மட்டும் வராமல் போயிருந்தால் என்று கேள்வி எழ, அவனால் தான் இந்த நிலையேஉனக்கு என்று இடித்துரைத்து மனசாட்சி.  அந்த எண்ணம் தோன்றிய பிறகு, அவளை நினைத்தே வருத்தமாக இருக்க, அப்படி என்ன இவன் என்னை ஆட்டி வைப்பது, நான் அதற்கு இடம் கொடுப்பது என்று கேள்வி எழுந்தது அவளுள்.

                     இவன் என்னை எந்த விதத்திலும் பாதிக்கவே கூடாது என்று கூறிக் கொண்டவள், மெதுவாக தன் காரை எட்டி பார்க்க, சாவி உள்ளே தான் இருந்தது. எதையுமே யோசிக்கவில்லை அவள்.. தமிழ்மாறன் அவளிடம் நெருங்குவதற்கு முன்பாகவே காரை திறந்து ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்து கொண்டாள்.

                      தமிழ் அவள் செயல் உணர்ந்தவனாக ஓடிவந்து, அவளின் அருகில் இருந்த இருக்கையில் அமர, அவனை பார்க்காமல் எதிரே இருந்த கண்ணாடியில் வெளியே வெறித்தவள் “கீழே இறங்குங்க..” என்றாள் அமைதியாக..

                       தமிழ் கோபப்படாமல் “யாழி.. தனியா எப்படி போவ… அடிவேற பட்டு இருக்குமா… நான் வீட்ல விடறேன்… நீ இந்தப்பக்கம் வா..” என்று அவளை தொட கையை நீட்ட, தன் கையை உடனே விலக்கி கொண்டாள் அவள்.

                       “தனியா இருக்கறது எனக்கு பழக்கம் தான்.. எனக்கு உங்களோட உதவி தேவை இல்ல… என்னை விட்டுடுங்க..” என்று முடிவாக அவள் கூற

                      “பைத்தியமா யாழி நீ.. அப்படியே எப்படி போக முடியும். அட்லீஸ்ட் ஹாஸ்பிடலுக்காவது கூட வர்றேண்டி..” என்றான் தமிழ்.

                      “வேண்டாம்.. இறங்குங்க..” என்றவள் அவன் இறங்காமல் அவளின் முகத்தையே பார்த்திருக்கவும்,

                       “இப்போ காரை விட்டு வெளியே போறிங்களா, இல்ல நான் இப்படியே இறங்கி, ரோட்ல நடந்து போகட்டுமா…” என்று ஒற்றை விரலை நீட்டி மிரட்டல் விடுக்க, அவளை முறைத்தாலும், அவளின் பிடிவாதம் உணர்ந்தவனாக காரிலிருந்து கீழே இறங்கி இருந்தான் தமீழ்..

                        அவனை அங்கேயே விட்டு  காரை எடுத்து சென்றவள் தன் மூக்கில் வழிந்த ரத்தத்தை புறங்கையால் துடைத்துக் கொண்டே வண்டியை செலுத்தி ஒருவழியாக வீடு வந்து சேர்ந்திருந்தாள். தமிழ் அவளின் பின்னோடு வந்திருக்க, அவள் மருத்துவமனைக்கு செல்லாததில் கோபம் கொண்டவன் வண்டியை விட்டு இறங்கி அவளின் வீட்டை நோக்கி நடந்தான்.

                         இங்கு வீட்டிற்கு வந்தவளோ, நேராக குளியலறை சென்று ஷவரை திறந்து விட்டு, அதன் அடியில் நின்றிருந்தாள். தன்னை பிடித்திருந்த கரங்களின் அழுக்கு எல்லாம் தன்னை விட்டு விலகுவது போல் தோன்ற, மனம் ஒருநிலைப்படும் வரை அங்கேயே தான்..

                        வெகுநேரம் கழித்து அவள் குளித்து முடித்து ஒரு இரவு உடையை அணிந்து கொண்டு வெளியே வர, அலைபேசி அடித்து கொண்டிருந்தது.. டீபாயில் இருந்த அலைபேசியை அவள் எடுக்க, கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் கழித்து மாறன் அழைத்திருந்தான். அதை கண்டதும் அவளையும் அறியாமல் ஏளனமாக ஒரு புன்னகை வந்துவிட, அதை எடுக்காமலே துண்டித்து விட்டாள் அவள்.

                        அவள் அழைப்பை துண்டித்த அடுத்த நொடி, வீட்டின் அழைப்பு மணி ஒலிக்க, அவனாக இருக்குமோ என்றுதான் நினைத்தது நெஞ்சம்.. மெல்ல அடியெடுத்து வைத்தவள் வாசல் கதவை நெருங்கி, அதில் இருந்த சின்ன லென்ஸ் வழியாக வெளியே பார்க்க, அவனே தான்..

                         ஆனால், ஏனோ அவளால் மகிழவே முடியவில்லை. “என்னவாம் இவனுக்கு..” என்று தான் வந்தது. “யாரோ கையை பிடித்து இழுத்து, ரத்தம் வர தாக்கவும் தான் இவனுக்கு என் ஞாபகம் வருமா?? மூணு வருஷமா இதே வீட்ல தானே இருக்கேன்.. இத்தனை நாள் இல்லாம இன்னிக்கு என்ன வந்து தொலைச்சது இவனுக்கு..” என்று பொருமிக் கொண்டாள் அவள்.

                     இதுவரையில் கதவையும் திறக்கவில்லை. அழைப்புமணி விடாமல் ஒலிக்க, பக்கத்தில் இருப்பவர்களுக்கு தொல்லையாக போய்விடுமோ என்ற எண்ணத்தில், “என்னை தனியா விடுங்க ப்ளீஸ்..” என்று ஒரு மெஸேஜ் போட்டுவிட்டு, அலைபேசியையும் அணைத்து விட்டாள்.

                        இதற்குள் மூக்கு மட்டும் இல்லாமல், கண் நெற்றி என்று முகமே வீக்கம் கண்டிருக்க தலைவலி வேறு மண்டையை பிளந்தது. இருக்கும் மனநிலையில் யார் முகத்தையும் பார்க்கும் தைரியம் இல்லை. மருத்துவர்களின் கேள்விக்கு பதில் கொடுக்கும் எண்ணமும் இல்லை.

                    இப்போதைக்கு நடந்த விஷயம் என் மனதிலிருந்து மறைந்து விட்டாலே போதும் கடவுளே… என்றுதான்  இருந்தது… அதற்கு மேலாக உடல் சோர்வு, வலி இதெல்லாம் பெரிதாக தோன்றவே இல்லை. வீட்டின் ஹாலில் இருந்த சோஃபாவில் அவள் படுத்துவிட, நடந்த நிகழ்வுகள் திரும்ப திரும்ப அவள் மறுத்தும் கூட, கண்முன் தோன்றி அவளை அச்சமூட்டிக் கொண்டிருந்தது.

                    மருந்துக்கும் உறக்கம் என்பது இல்லாமல் போக, விட்டத்தை வெறித்துக் கொண்டே படுத்திருந்தாள் அவள்.

                      வெளியில் நின்றிருந்த தமிழ் அவளின் குறுஞ்செய்தியை படித்தாலும், அங்கிருந்து கிளம்பும் எண்ணமே இல்லை அவனுக்கு. ரத்தம் வழிந்த அவளின் முகமே கண்ணில் இருக்க, எப்படி செல்வான்… சிறிது நேரம் அங்கேயே நின்றவன், அலைபேசியை எடுத்து தன் தம்பிக்கு அழைக்க, நல்ல உறக்கத்தில் இருந்தான் எழில்.

                    உரக்க கலக்கத்தோடு அவன் பேச, தமிழ் எதுவும் கூறாமல் “கிளம்பி யாழி வீட்டுக்கு வாடா..” என்று விட, முதலில் ஒன்றும் புரியாமல் முழித்தவன், சில வினாடிகளில் “என்ன.. எதுக்கு அங்கே வரணும் தமிழ்.. என்னடா பண்ண அவளை… என்ன ஆச்சு அவளுக்கு..” என்று பதட்டமாகி போனான்.

                    தமிழ் “டேய்.. அவளுக்கு ஒன்னும் இல்ல.. நல்லாதான் இருக்கா.. முதல்ல நீ கிளம்பி வா… நான் எல்லாத்தையும் சொல்றேன்..” என்று அதட்டி, டிரைவருக்கும் அழைத்து பேச, அடுத்த அரைமணி நேரத்தில் எழில் வந்து விட்டிருந்தான்.

                   அவன் வரும்போது அங்கு ஏற்கனவே மருத்துவர் ஒருவரும் நின்றிருக்க, பார்த்த எழிலுக்கு ஏற்கனவே இருந்த பயம் இன்னும் அதிகமாக, “என்ன ஆச்சு தமிழண்ணா.. என்னதான் நடக்குது இங்கே சொல்லேண்டா.. பயமா இருக்குடா..” என்று அழுகைக்கு தயாராகி விட்டான்.

                   தமிழ் மீண்டும் அவனை அதட்டியவன் “யாருக்கும் ஒன்னும் இல்ல. உன் பிரெண்டுக்கு சின்னதா அடிபட்டு இருக்கு.. நான் கதவை தட்டினா அவ திறக்கவே இல்லை.. நீ கூப்பிடு.. என்னன்னு பாரு..” என்றவன் மருத்துவரையும் அவனோடு இருத்தி, தான் கீழே இறங்கி விட்டான்.

                       எழில் கொஞ்சமாக தெளிந்து, ஆதியின் வீட்டு கதவை தட்ட, அவள் எழுந்து வரும் நேரம் கூட அவனுக்கு பொறுமையில்லை. அதற்குள் படபடவென மீண்டும் தட்டி விட்டான். ஆதி கோபமாக எழுந்து வந்தவள் லென்ஸ் வழியே மீண்டும் பார்க்க, முகத்தில் பதட்டத்துடன் எழிலை காணவும் சட்டென கதவை திறந்து விட்டாள்.

                  அவளின் முகம் நன்றாக வீக்கம் கண்டிருக்க, முகமே அடையாளம் தெரியாமல் மாறி இருந்தது. எழில் பார்த்த நிமிடமே “ஆதி.. என்னடா ஆச்சு.. எப்படி இப்படி அடிபட்டது..” என்று அவளை நெருங்க, அதுவரை அழுகையை அடக்கி இருந்தவள் அவனை காணவும் “எழில்..” என்று அவன் தோளில் சாய்ந்து விட்டாள்.

                   அதன்பிறகு ஒருவழியாக அவளின் அழுகையை குறைத்து, அவளின் காயத்தை சுத்தம் செய்து, அவளின் வீக்கத்திற்கும் மருந்தை செலுத்த அவளின் கூடவே இருந்தான் எழில். சில மாத்திரைகளை அவளுக்கு கொடுக்க சொன்னதோடு அந்த மருத்துவர் கிளம்ப, எழிலின் தோளில் சாய்ந்து அமர்ந்திருந்தாள் ஆதி.

                  எழில் உள்ளே வந்ததும் “என்ன ஆச்சு..” என்று கேட்டது தான். அதன்பிறகு அவள் அழுகையில் அவளிடம் எதுவுமே கேட்டிருக்க வில்லை. இப்போது அவள் வெகுவாக சோர்ந்து போயிருக்கவும், அவளை சோஃபாவில் படுக்க வைத்தவன் சமையல் அறைக்கு சென்று பாலை காய்ச்சி கொண்டு வந்து கொடுக்க, மறுக்காமல் குடித்து முடிக்கவும் மாத்திரைகளையும் அப்போதே கொடுத்து விட்டான்.

                  அவளை அவள் அறையில் படுக்க வைத்தவன், ஹாலில் இருந்த சோஃபாவில் அவன் படுத்துக் கொண்டான். ஆதி அமைதியாக படுத்திருந்தவள், பாத்ரூம் செல்ல நடுவில் எழுந்து கொள்ள, உறக்கம் வராமல் போகவும் அறையின் பால்கனி வழியே வெளியே பார்க்க, கீழே நின்றிருந்தது அந்த ஆடி கார்..

                 அது தமிழ்மாறனுடையது என்பது பார்த்ததும் தெரிய, சற்றே பார்வையை கூர்மையாக்கி அவள் பார்க்க, ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்திருந்தான் அவன். சட்டென அவனிடம் அசைவு தெரிய, தலையை வெளியே நீட்டி அவளை பார்த்தான் தமிழ், அவன் பார்வையை உணர்ந்தவள் வேகமாக உள்ளே வந்துவிட்டாள்.

                 அவன் இத்தனை நேரம் காத்திருப்பான் என்றெல்லாம் நினைக்கவே இல்லை அவள். எழிலை அனுப்பியதோடு கடமை முடித்து சென்றிருப்பான் என்று அவள் நினைத்திருக்க, அவன் காத்திருந்தது அதிர்ச்சி தான். நிச்சயம் அதிர்ச்சி தான் அதற்கு மேலாக அதை நினைத்து மகிழவோ, பெருமிதம் கொள்ளவோ முடியவே இல்லை அவளால்.

                 இன்று நடந்த நிகழ்ச்சிகள் அவளை கடினமாக்கி இருக்க, அந்த அறையில் இருப்பதே அவன் பார்வையில் படுவது போல் இருக்க, தலையணையும்,போர்வையும் எடுத்துக் கொண்டு வெளியில் வந்தவள் எழிலின் அருகிலேயே தரையில் விரித்து படுத்து விட்டாள்.

                நீண்டநேரம் கழித்தே அவள் உறங்க, அன்று விடியலில் காய்ச்சலும் அவளை வாட்ட தொடங்கி இருந்தது. மருத்துவர் சொன்னது போல, மருந்துகளை கொடுத்தவன் கூடவே காலை உணவும் வரவைத்து கொடுக்க, உண்டு முடித்தவள் அன்று முழுவதும் எழிலின் மேற்பார்வையில் ஓய்வில் தான் இருந்தாள்.

எழில் நேற்று இரவில் இங்கு வந்ததோடு சரி. அதன்பிறகு தன் அண்ணனுக்கோ அன்னைக்கோ அவன் அழைக்கவே இல்லை. இப்போது ஆதி உறங்கி கொண்டிருக்கவும் தன் அன்னைக்கு அழைத்தவன் நண்பர்களுடன் வெளியே வந்திருப்பதாகவும் நாளை வந்துவிடுவதாகவும் கூறி முடித்தான்.

                         அவன் டிவி பார்த்துக் கொண்டு அமர்ந்து விட, உள்ளே என்ன நடந்திருக்கும் என்று ஓடிக் கொண்டே இருந்தது. அண்ணனின் முகத்திலிருந்து விஷயம் பெரியது என்று நேற்று புரிந்து இருக்க, ஆதியின் அழுகையும் அதை உறுதி செய்திருந்தது. ஆனால், என்ன விஷயம் என்று இதுவரையிலும் தெரியாமல் குழப்பிக் கொண்டிருந்தான் எழில்.

                     அன்று இரவு எட்டு மணிக்கு மேலாக ஆதி மெல்ல உறக்கம் களைந்து எழ, ஏற்கனவே வாங்கி வைத்திருந்த உணவுகளை அவளிடம் கொடுக்க, மெதுவாக அவள் உண்டு முடிக்கவும், நண்பர்கள் இருவரும் ஓய்வாக அமர, அப்போதுதான் ஆரம்பித்தான் எழில்.

                    “நீ இப்போ ஓகே வா..” என்று கேட்க, மெல்ல தலையசைத்தாள் ஆதி.

                    “வாய் திறந்து பேசேன்.. நம்ம ரெண்டு பேர் தான் இருக்கோம்.. ஒன்னு அழற, இல்ல அமைதியா இருக்க.. நான் என்னன்னு நினைக்கட்டும்.. நேத்துல இருந்து படுத்தி வைக்கிறிங்க ஆதி ரெண்டு பேரும்… நைட் ஒரு மணிக்கு தூக்கத்துல எழுப்பி வர சொன்னான்.. வந்து பார்த்தா முகமெல்லாம் வீங்கி போய், அழுதுட்டு நிற்கிற… என்னதான் நடந்தது.. ஏதாவது சொல்லேன்..” என்று அவன் மன்றாட

                   பத்து நிமிடம் எடுத்துக் கொண்டு யோசித்தவள் நேற்று நடந்தது அத்தனையும் ஒன்று விடாமல் அவனிடம் சொல்லி முடித்தாள். கேட்டுக் கொண்டு இருந்தவனுக்கு அண்ணனின் மீது தான் கோபம் வந்தது இப்போது..

                “இவன் என்னதான் எதிர்பார்க்கிறான்..” என்று நினைத்தவனுக்கு கூடவே அவனின் நேற்றைய வேதனையான முகமும் நினைவில் வர, “பைத்தியக்காரன்..” என்றுதான் திட்ட தோன்றியது தன் அண்ணனை.

                    அவனை விடுத்தது எதிரில் இருப்பவளிடம் கவனம் செலுத்தியவன் “இதுக்கு என்னதான் முடிவு ஆதி.. இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி ரெண்டு பேரும் சண்டை போட போறீங்க..” என்று கேட்க

                  “நான் சண்டை போடறேனா.. உனக்கும் அப்படி தோணுதா எழில்..” என்று பாவமாக கேட்டாள் ஆதி.

                  எழில் ஒருநிமிடம் அவளுக்கு என்ன பதில் சொல்வது என்று புரியாமல் திகைத்து நின்றான். உண்மைதானே அவள் சொல்வது.. அவள் எங்கே சண்டையிட்டாள்.. இந்த நிமிடம் வரை அவளை படுத்தி கொண்டிருப்பது தன் அண்ணன் அல்லவா…

                 இதில் அவளை குறை சொல்லி என்ன செய்ய..?? என்று அவன் தனக்குள் நினைக்க, ஆதி வேறு முடிவிற்கு வந்திருந்தாள்…

                 அடுத்த நாள் எழில் அவன் வீட்டிற்கு கிளம்ப, அன்று மதியமே தன் அன்னைக்கு அழைத்து விட்டாள் அவள். தன்னை வந்து அழைத்து செல்லுமாறு கூறியவள் அன்று மாலைக்கெல்லாம் தன் வீட்டிற்கு சென்று விட்டிருந்தாள்…

                   இங்கே எழில் தன் வீட்டிற்கு வந்தவன் அண்ணனை கோபத்துடன் முறைத்துவிட்டு, நேராக சென்று நின்றது அன்னையிடம் தான். அவன் இரண்டு நாட்களாக நடந்தது அத்தனையும் ஒன்றுவிடாமல் தன் அன்னையிடம் கூறி முடித்திருந்தான்.

              

Advertisement