Advertisement

கைநீட்டினேன் என்னை கரைசேர்க்க வா 05

                          தமிழ்மாறன் மனம் ஒரு நிலையில் இல்லாமல் தவித்து கொண்டே இருக்க, அன்றைய மீட்டிங் மற்றும் முக்கியமான வேலைகள் அனைத்தையும் வேறு தேதிக்கு மாற்றி விட்டு அமர்ந்து கொண்டான். மனம் அன்னையிடம் சொன்ன “சரிம்மா..” என்ற வார்த்தையையே பிடித்துக் கொண்டது.

                         “உன்னால முடியுமா..” என்று மூளை கேள்வி கேட்க, “பதில் சொல்லிடேன் நீ..” என்று ஏளனம் செய்தது மனது. மனதை தட்டி வைக்க வேண்டுமானால் கூட, ஏதோ ஒரு நம்பிக்கை வேண்டும் அல்லவா.. அவனுக்குத்தான் அவன் யாழியை தாண்டி வேறு தோன்றவே இல்லையே..

                        அவளை தாண்டி அவன் சிந்தித்தால் அல்லவா அவன் வேறு பெண்ணையோ திருமணத்தையோ யோசிக்க?? காலையில் சரி என்ற போது வராத தயக்கம், இப்போது அவனை இயங்கவிடாமல் தடுத்துக் கொண்டிருக்கிறது.

                         அடுத்த மூன்று மணி நேரங்கள் மௌனத்தின் சொத்தாகி போக, அந்த தனிமை அவனை சரியான வழியில் செலுத்த தொடங்கி இருந்தது. அன்னையிடம் தன் மறுப்பை சொல்லி விடுவது என்று தனக்குள் முடிவெடுத்துக் கொண்டவன் “அடுத்து??” என்று கேள்வி எழுப்பிய உள்ளத்திடம்

                          “அடுத்து எல்லாம் எதுவும் இல்ல.. ஏன் கல்யாணம் பண்ணிக்காம இருக்கவன் எல்லாம் செத்தா போய்ட்டான்…” என்று அவன் பதில் கேள்வி எழுப்ப

                      “உன் அம்மா உன்னை அப்படியே விடுவார்களா தம்பி…” என்று ஏளனமாக சிரித்தது மனம்..

                     “முதல்ல இந்த பிரச்சனையை முடிப்போம்.. மீதி எல்லாம் அப்புறம் யோசிப்போம்..” என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டு அவன் வீட்டை அடைய, அவன் அன்னையும் அவனுக்காகவே காத்திருந்தார்.

                   ஹாலில் சோஃபாவில் எழில் அமர்ந்திருக்க, சத்யவதி தன் சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்தார். கையில் ஏதோ ஒரு புகைப்படம்.. அவர் கண்கள் அடிக்கடி ஆவலாக வாசலை தொட்டு திரும்ப, அவரின் எதிர்பார்ப்பை பொய்யாக்காமல் தமிழ்மாறன் வீட்டிற்கு வந்து இருந்தான்.

                     அவனை கண்டதும் மலர்ந்து சிரித்தவர், மகன் அருகில் வரவும் தன் கையில் இருந்த நிழற்படத்தை அவனிடம் நீட்டினார். தமிழ் அவரின் வேகத்தில் திகைத்து போய் அவர் முகத்தை பார்க்க, “பொண்ணு பேர் நிரஞ்சனா… இன்ஜினீரிங் படிச்சிருக்காங்க.. அவங்க அப்பா பிசினஸ் பார்த்துக்கறாங்க இப்போ… மத்த எல்லா விஷயமும் ஓகே தான்.. பிசினஸ் பண்ற பொண்ணு, உனக்கு சூட் ஆகும்ன்னு அம்மா பீல் பன்றாங்க.. உனக்கு உதவியா இருப்பாங்களாம்…” என்று எழில் தகவல் கொடுத்தான்.

                    அன்னையை ஏதும் சொல்ல முடியாதவன் தன் தம்பியை பார்க்க, “உனக்கு ஓகே தான தமிழ்.. உனக்கு பிடிச்சிருந்தா புதன்கிழமை நாள் நல்லா இருக்கு.. அன்னைக்கே பொண்ணை பார்த்துட்டு வந்துடலாம்…” என்று மேலும் அவன் பழிவாங்க,

                   இப்போது அன்னையை பாவமாக பார்த்தான் தமிழ்மாறன். அவர் முகத்தில் இருந்த ஆசையையும், ஆவலையும் அவனால் புறக்கணிக்க முடியாமல் போக, அதே சமயம் நடப்பதை ஏற்றுக் கொள்ளவும் அவன் தயாராக இல்லை.

                அன்னையை நேராக பார்த்தவன் “ம்மா.. எனக்கு கொஞ்சம் டைம் கொடேன்… இப்படி அவசரமா.. என்னை கொஞ்சம் யோசிக்க விடுங்கம்மா.. ப்ளீஸ்..” என்றவன் தன் அன்னையின் முகம் பார்க்க, சட்டென ஒரு ஏமாற்றம் அலையாக பரவியது அவர் முகத்தில்.

                  மென்மையாக தலையசைத்து மகனுக்கு ஒப்புதல் கொடுத்தவர், எழிலை பார்க்க, தன் அன்னையின் சக்கர நாற்காலியில் கையை வைத்தான் எழில். அண்ணனை முறைத்து கொண்டே அன்னையை அறைக்குள் அழைத்து சென்றவன் அவரை படுக்கையில் விட்டு, அவர் உறங்கும் வரை அருகில் இருந்தான்.

                  அந்த அறையின் மற்றொரு புறம் அவரின் செவிலி இருக்க, அவரிடம் அன்னையை பார்த்துக் கொள்ள சொல்லி, அவன் வெளியே வர , அண்ணன் இன்னமும் சோஃபாவில் தான். எழில் அண்ணனை கண்டுகொள்ளாமல் அவனும் தன் அறைக்கு சென்றுவிடம் தனித்து விடப்பட்டான் தமிழ்.

                    ஆனால், தனிமையில் இனிமை காணும் மனநிலையில் தான் அவன் இல்லை. நடந்தது அவன் விரும்பியது தான்… திருமண பேச்சை தள்ளி வைத்து விட்டான்… ஆனால், அதற்கான மகிழ்ச்சியோ, நிம்மதியோ  இல்லை… அன்னையின் முகத்தில் இருந்த அலைப்புறுதல் அவனை அமைதியடைய விடவே இல்லை.

                     ஏற்கனவே தந்தையின் மறைவில் அவ்வபோது உழல்பவன் தான் என்றாலும், இன்று அவரின் மரணம் பெரியதாகி தெரிந்தது.. அதுவும் வார்த்தைகளை எண்ணி எண்ணி பேசும் நிலையில் இருக்கும் அன்னை யின் இன்றைய மௌனம் கொடுமையாக பட்டது.

                     தான் மறுத்ததில் எத்தனை வேதனை அடைந்திருப்பார் என்று எண்ணியவனுக்கு தன் ஒருவனின் சுயநலத்திற்காக இத்தனை பேரை படுத்திக் கொண்டிருக்கிறோமோ என்றும் நினைக்க தோன்றியது. ஆனால்…. இந்த ஆனாலுக்கு விடை கிடைத்து விட்டால் தான் சிக்கலே இல்லையே..

                     தன் மனம் யாழை மீறி வேறு எதையும் யோசிக்கப்போவதுமில்லை தன் அன்னையின் பாரமும் இறங்கவே போவதில்லை என்ற எண்ணமே வாட்டியது அவனை. முதலில் தன் அன்னை அவளை ஏற்றுக் கொள்வார்களா?? நடந்த அத்தனை விஷயங்களும் அவருக்கும் தெரியும்.. தன் கணவரை கொன்றவனின் மகள் யாழி என்பது வரை…

                       அப்படி இருக்க, எப்படி ஏற்றுக் கொள்வார் அவர்?? எனக்காக, நான் கேட்டால் மறுக்கவே மாட்டார் என்றாலும், கேட்பதே சுயநலம் அல்லவா… தந்தையின் உயிரை விட தன் காதல் பெரியதா?? அத்தனை கேவலமானவனா நான்.. அதிலும் திருமணத்திற்கு பின் அவளை தான் வரதனின் மகளாக பார்க்க நேர்ந்தால் அவளின் வாழ்வும் கேள்விக்குறியாகி விடாதா??

                       “வரதனை கண்ணால் கண்டாலே அவனை கொன்று போட துடிக்கும் நான்.. யாழியை ஆயுதமாக்கி கொண்டால் அபத்தமாகி போகாதா..” என்று அந்த நல்லவன் தன்னை குற்றவாளியாக்கி விசாரணை நடத்திக் கொண்டிருக்க, மூடிய அவன் விழிகளின் ஓரம் லேசாக ஈரம்.

                        அவன் ஹாலில் இருப்பதோ, வீட்டில் வேலையாட்கள் இருப்பார்கள் என்பதோ எதுவுமே அவன் கவனத்தில் இல்லை அந்த நிமிடம். வெகுநேரம் கழித்தே சுதாரித்துக் கொண்டவனாக எழுந்து அறைக்கு சென்றான் தமிழ்.

                        அவன் குளித்து முடித்து வெளியே வரவும் தான் அன்று மாலை ஒரு வரவேற்பு நிகழ்ச்சிக்கு செல்ல வேண்டும் என்ற நினைவே வந்தது. ஏற்கனவே இருள் கவிந்து விட்டிருக்க, சுத்தமாக செல்லும் மனநிலை இல்லை. ஆனால், சென்றாக வேண்டும்.. மணமகனின் தந்தை அவனோடு தொழில் தொடர்பு வைத்திருப்பவர். அதோடு மணமகனும் இவனிடம் நட்போடு பழகுபவன் தான். அவர்களுக்காக சென்றே ஆக வேண்டிய நிலை.

                    தன் விருப்பு, வெறுப்பு, கோபங்களை ஒத்தி வைத்தவன் உடையை மாற்றிக் கொண்டு கிளம்பி விட்டான். வழியில் நகைக்கடையில் நிறுத்தி மணமக்களுக்கு அழகாக, விலையுயர்ந்த பரிசு ஒன்றை வாங்கி கொண்டவன் அந்த வரவேற்பு நடக்கும் ஹோட்டலை அடைந்தான்.

                       அந்த ஹோட்டலின் கார்டன் ஏரியாவில் வரவேற்பு நடக்க, குட்டி குட்டி வட்ட வடிவ மேசைகள், அதற்கு முன்னால் பூக்களால் அலங்கரிக்கப்பட்டு சிறிய மேடை.. சுற்றிலும் மின்விளக்குகளின் வெளிச்சம் என்று அமைதியான அழகுடன் இருந்தது அந்த இடம்…

                          தமிழ்மாறனும் தன் வேதனைகளில் இருந்து மெல்ல வெளியே வந்தவன், அங்கு இருந்த தன் நண்பர்களிடமும், தொழில்முறையில் தெரிந்தவர்களுடனும் பேசிக் கொண்டே நின்றுவிட்டான். கையில் தன்னுடைய குளிர்பானத்தை வைத்துக் கொண்டு அவன் நிற்க, சட்டென அவன் கண்ணில் பட்டாள் யாழி..

                         அவனது தடுமாற்றங்களுக்கு காரணம் ஆனவள், அவனது கவலைகளின் மொத்த காரணம் என்று அவன் கைகாட்டுபவள் அன்று அசத்தலாக இருந்தாள்.. அவளை கண்ட நிமிடம் “இவளை யாரு இங்கே வர சொன்னா…” என்று ஆத்திரமாக தான் எண்ணமிட்டான் அவன்.

                       பின்னே, அவன் கவலையில் இருக்க, அவன் காதலி அம்சமாக வந்து இறங்கி, அங்கு இருப்பவர்களின் மொத்த கவனமும் அவள் மீது பதிந்தால் எரியாமல் அவனும் என்ன செய்வான்??… உண்மையில் சொக்கி போகும்படி தான் இருந்தாள் யாழி.

                       அழகான கருப்புநிற சேலை.. அவள் முழங்கால்களுக்கு மேல்வரை மூன்று அடுக்குகளாக ப்ரில்ஸ் இருக்க, அவள் நடக்கும் போது அவை துள்ளி குதிப்பது போல் இருந்தது… அதற்கு மேலாக அந்த சேலை முழுவதும் வெல்வெட்டினால் ஆன கருப்பு பூக்கள் வாரி இறைக்கப்பட்டிருக்க, அதில் நடுநடுவே வெள்ளை முத்துக்கள்…

                      போட் நெக் வைத்து தைக்கப்பட்டிருந்த அகலமான முதுகுடன் கூடிய ப்ளவுஸ்… கழுத்தில், காதில் கையில் என்று அத்தனையும் முத்துக்களை கொண்டே வடிவமைக்கபட்டிருந்த அணிகலன்கள்… நெற்றியில் ஒரு குட்டி வட்டபொட்டு கருப்பும் வெள்ளையும் கலந்தது போல்… தலைமுடியை விரித்து விட்டு, ஒரு பக்கமாக முன்னால் எடுத்து விட்டிருக்க, அதுவேறு அவள் நடக்கும் போதெல்லாம் அவளின் அசைவுக்கு ஏற்ப அசைந்து கொண்டிருந்தது…

                       இப்படி வந்து நிற்பாள் என்று முன்னமே தெரிந்து இருந்தால் இந்த பக்கமே வந்திருக்கமாட்டானோ என்னவோ.. ஆனால், அவளை பார்த்து விட்ட இந்த நிமிடம் அவனால் நிச்சயமாக தன்னை அடக்க முடியாமல் போனது… கண்கள் அவன் கோபத்தையும் மீறி அவளை அளவெடுக்க, அவன் கவனத்தில் முதலில் பதிந்தது அவளின் உதட்டு சாயம் தான்.

                      காலையில் பார்த்தது போல் அடர்ந்த வண்ணம் இல்லை இப்போது.. இதழ்களின் இயல்பான பிங்க் நிறத்தில் இருப்பதே தெரியாமல் இருந்தது லிப்க்ளாஸ்.. ஆனால், இருந்தது  பார்வையால் கண்டு கொண்டிருந்தான் கள்வன்.

                      யாழி அவள்பட்டிற்கு வந்தவள் அங்கிருந்த தன் தோழர்கள் குழாமுடன் சேர்ந்து விட, ஒரே பேச்சும், சிரிப்பும் தான்… சற்று தள்ளி நின்றிருந்த தமிழை அவள் கவனிக்கவில்லை. அவளுக்கு தமிழ் இந்த விழாவிற்கு வருவான் என்பதே தெரியாதே…

                      மணப்பெண் அவளின் சட்டகல்லுரி தோழியாக இருக்க, இயல்பாக அவளின் திருமணத்தில் பங்கெடுக்க வந்திருந்தாள் அவள். தன் தோழர்கள் சூழ்ந்து கொள்ளவும் தங்கள் அரட்டையிலேயே நேரம் கழிய, சுற்றுப்புறத்தை மறந்தும் கவனிக்கவில்லை..

                    ஆண்களும், பெண்களுமாக மொத்தம் பத்து  பேருக்கும் மேலாக இருக்க, அத்தனை பேருமே கருப்பு நிற உடையில் தான் இருந்தனர்.. மேடைக்கு செல்லும் போதும் நண்பர்கள் மொத்தமாகவே செல்ல, மொத்த கூட்டத்தின் கவனமும் இவர்கள் மீதே இருக்க,அவர்கள் கண்டுகொள்ளவே இல்லை.

Advertisement