Advertisement

கைநீட்டினேன் என்னை கரைசேர்க்கவா 03

                                         சேது மாதவனின் திடீர் மரணம் அவர் குடும்பத்தை முழுவதுமாக புரட்டிப்போட, கணவர் இறந்த ஒரே வாரத்தில் சத்யவதி உடல்நலமில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட, கணவரின் இறப்பு அவரின் இருப்பையே முடக்கி போட்டிருந்தது.. பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு உடலின் இடதுபாகம் முழுவதும் செயலிழந்து நின்றார் சத்யவதி.

                                        தந்தையின் இறப்பில் இருந்தே முழுதாக வெளியே வந்திருக்காத மகன்கள் இருவரும், தாயின் நிலையில் இன்னமும் ஒடுங்கி போயிருந்தனர். அடுத்த நான்கு நாட்களும் மருத்துவமனையை கதியென்று கிடக்க, முதலில் தெளிந்து கொண்டவன் தமிழ்மாறன் தான்.

                              எத்தனை உறவுகள் உடன் இருந்தாலும், இனி தாய்க்கும், தம்பிக்கும் தான் ஒருவன் மட்டும் தான் என்பது மனதில் பதிந்து போக, பன்னிரண்டாம் வகுப்பில் இருந்த தம்பி படிப்பை பற்றிய சிந்தனையே இல்லாமல், தாயின் முகத்தையே வெறித்து கொண்டு அமர்ந்திருப்பது அப்போது தான் கண்ணில்பட்டது.

                            பொறுப்பான அண்ணனாக அந்த நொடி முதல் தன் துக்கத்தை மறைத்துக் கொண்டவன் அடுத்து அன்னை கண்விழித்த போதும், மிகுந்த நம்பிக்கையோடு பேசினான். “நான் இருக்கிறேன்..” என்ற நம்பிக்கையை அவர்களுக்கு கொடுத்தவன், அவனுக்கான ஆறுதலை யாரிடம் தேட முடியும்…

                        ஆனால், அதை எல்லாம் யோசிக்கும் அளவுக்கு கூட காலம் அவனுக்கு நேரம் வழங்கவில்லை… அடுத்தடுத்து தொழிலில் பிரச்சனைகள்.. தாயை வீட்டிற்கு அழைத்து வந்தவன் ஒரு முழுநேர செவிலியை அவரை பார்த்துக் கொள்ள ஏற்பாடு செய்துவிட்டான்.

                       தம்பியையும் அடுத்த வாரத்திலேயே பள்ளிக்கு அனுப்பிவிட, வீட்டிலும் அவனுக்கு பாடம் கற்பிக்க ஒருவரை நியமித்து இருந்தான். எழிலனின் மருத்துவக்கனவை புரிந்தவன் என்பதால் அவனை எப்படியாவது படிப்பில் திசை திருப்பத்தான் முயற்சித்தான் அந்த பாசக்கார அண்ணன்.

                            ஆனால், பிறந்தது முதலே தாய், தந்தை, அண்ணன் என்று மொத்த குடும்பமும் சீராட்ட வளர்ந்திருந்த எழிலரசு, கண்ணீர், கவலை இதையெல்லாம் உணர்ந்ததே இல்லை. முதல் முறையிலேயே கண்ணீரும், கவலையும், ஏக்கமும் அவனை பெரிய அளவில் அடித்து போட்டிருக்க, அவனால் மீளவே முடியாமல் போனது என்பதே நிதர்சனம்.

                         மாநில அளவில் தேர்ச்சி பெறுவான் என்று நம்பப்பட்டவன் இரண்டு பாடங்களில் சரியாக முப்பத்தி ஐந்து மதிப்பெண்கள் மட்டுமே பெற்று தேர்ச்சி பெற்று இருந்தான். அவனின் மருதுவாகனவு முற்றிலுமாக சிதைந்து போக, தமிழ் பணம் செலுத்தி சீட் வாங்க முற்பட்டபோதும், “என்னால கான்சன்ட்ரேட் பண்ண முடியல ண்ணா… என்னை விட்டுடு.. நான் காலேஜ் எல்லாம் போகல..” என்று கதறி தீர்த்துவிட்டான்.

                        தந்தையின் மரணம் ஒருவனை இரும்பாக்கி நூறு மடங்கு வலிமையை அவனுக்கு கொடுத்திருக்க, அதே மரணம் மற்றொருவனை ஜீவனே இல்லாத ஒரு பயந்தான்கொள்ளியாக மாற்றி விட்டிருந்தது.

                        முழுக்க, முழுக்க பெற்றோரின் கைக்குள்ளேயே வளர்ந்து இருந்தவன் மொத்தமாக தடுமாறி போக, அவனை அப்படியே விட்டு விடாமல், ஒரு பெரிய கல்லூரியில் நண்பர் ஒருவரின் உதவியோடு உயிரி தொழில்நுட்பவியல் பிரிவில் இளங்கலை படிப்பில் சேர்த்து இருந்தான்.

                       ஆனால், எழிலன் அதற்கும் மறுப்பு தெரிவித்து மீண்டும் கண்ணீரை கையில் எடுக்க, இந்த முறை தம்பியை முதல் முறையாக கைநீட்டி அடித்து இருந்தான் தமிழ்… அவன் அதிர்ந்து பார்க்கும் போதே “அப்பா செத்து போய்ட்டாரு தான்… என்ன பண்ண சொல்ற என்னை.. இல்ல என்ன செய்யலாம் சொல்லு… நாமும் செத்து போய்டுவோமா… அம்மா ஏற்கனவே அரை உயிரா தான் இருக்காங்க.. அவங்களையும் கொன்னுட்டு நானும் போய் சேர்ந்திடவா… அப்போவாச்சும் நீ பழையபடி இருப்பியா..”

                      “இல்ல.. அம்மாவை உன்னோட விட்டுட்டு நான் மட்டும் போய்டவா.. கண் காணாம எங்கேயாவது போய்டவா…” என்று தமிழ்மாறன் கோபத்தில் வெடித்துவிட, அண்ணனின் வார்த்தைகளில் பயந்து போனவன் அவனை கட்டி கொண்டான். கூடவே “என்னை விட்டுட்டு போயிடாதடா அண்ணா… நான் படிக்கிறேண்டா.. படிப்பேண்டா…” என்று அழுகை வேறு..

                      தமிழ் தம்பியின் நிலை குறித்து உள்ளுக்குள் அழுதாலும் பெரிதாக வெளியில் காட்டிக் கொள்ளமாட்டான். கண்டிப்பாய் மட்டுமே காட்டி அவனை தேற்றியவன், அன்னையையும் தன் தந்தையை போலவே கவனித்துக் கொண்டான்…

                    தகப்பனை தவறவிடும் மூத்த குழந்தைகள் பெரும்பாலும், தாயாகவோ, தகப்பனாகவோ தான் மாறிபோய்விடும் போல… இங்கும் தமிழ் தன் தம்பிக்கு தந்தையாக தான் மாறி இருந்தான்…

                       எழிலன் ஓரளவிற்கு தெளிந்து படிப்பில் கவனத்தை வைக்க, தமிழ்மாறன் முழுமையாக தொழிலில் இறங்கி இருந்தான். தன் தந்தையின் தொழிலில் இருந்த சிக்கல்களை களைந்தெடுத்தவன் முழு வீச்சில் இரவுபகல் பார்க்காமல் உழைத்தாலும், ஓரளவிற்கு மேல் லாபம் பார்க்கமுடியாமல் போனது.

                     தந்தையின் கார் டிரைவர் வழியாக, தந்தை கடைசியாக வரதனை சந்தித்ததும் தெரியவர, அவரைவிட ஒருபடி உயர்ந்து நிற்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தவனுக்கு இந்த நிகர லாபகணக்கு திருப்தியாக இல்லை… அவனுக்கு இப்படி காலாண்டு, அரையாண்டு  லாபம் பார்ப்பதில் நாட்டமில்லை..

                   என்ன செய்வது.. என்ன செய்வது.. என்று அவன் திணறிக் கொண்டிருந்த நேரத்தில் தான், அவன் நண்பன்  தங்கபாண்டியனை அவன் சந்தித்தது. தங்கபாண்டியன் மத்திய அமைச்சர் ஒருவரின் மகன். இருவரும் முதுகலை படிப்பை ஒன்றாக முடித்திருக்க, நெருக்கம் அதிகம்.

                    தங்கபாண்டியனிடம் எதேச்சையாக தன் நிலையை கூறி தமிழ் புலம்ப, கேட்டுக் கொண்டிருந்தவன் தான் உதவுவதாக கூறினான். தமிழ்மாறன் அவனை புரியாமல் பார்க்க, “அப்பாக்கு இங்கே சில சொத்துக்கள் எல்லாம் இருக்கு தமிழ்.. எல்லாம் கணக்குல வராத பினாமி தான்.. கூடவே பைனான்ஸ் வேற…”

                  “அவரால இதை எல்லாம் நேரடியா பார்க்க முடியாது…நான் பார்த்துக்கலாம்.. ஆனா, அவருக்கு இதுல விருப்பம் இல்ல.. அவர் என்னை முழுநேர அரசியல் வாதியா தயார் பண்ற ஐடியால இருக்காரு.. எனக்கு நம்பிக்கையா ஒரு ஆள் வேணும்.. இதையெல்லாம் பார்க்க…”

                    “நீ அடிதடி, கட்டப்பஞ்சாயத்து இதெல்லாம் செய்யப்போறது இல்ல.. அதுக்கெல்லாம் ஆளுங்க இருக்காங்க… எல்லாம் சரியா நடக்குதா… வரவேண்டிய பணம் சரியா உள்ளே வருதா??? அதை இன்னும் வேற எதுல இன்வெஸ்ட் பண்ணலாம்?? அதை எல்லாம் பாரு… “

                    “நீதான் இதுபோல விஷயங்கள்ல புலியாச்சே.. கொஞ்சம் என் கருப்பு பணத்தை எல்லாம் வெள்ளையா மாத்திக் கொடேன்…” என்று உதவியாகவே கேட்டான் அவன்.

                    தமிழ்மாறனுக்கு அவன் கேட்பதில் தவறு எதுவும் இருப்பதாக தெரியவில்லை. அவனுக்கு நண்பனை பற்றியும் தெரியும்.. ஏமாற்றுக்காரனோ, எதிலும் இழுத்து விடுபவனோ இல்லை என்பதால் தைரியமாகவே ஒப்புக் கொண்டான் தமிழ்.

                  அவன் சம்மதித்ததில் தங்கபாண்டியனுக்கு நிம்மதிதான். “எங்கே நீ மறுத்துடுவியோ ன்னு பயந்துட்டே இருந்தேன்டா.. இப்போதான் நிம்மதியா இருக்கு.. இந்த தலைவலி எல்லாம் இல்லாம, நிம்மதியா என்வேலையை பார்ப்பேன்..” என்று பெருமூச்சு விட்டுக் கொண்டான் அவன்.

                   தமிழ்மாறன் அவனின் வரவு, செலவுகளை பொறுப்பேற்றுக் கொள்ள, அவன் கேட்காமலே பத்து கோடியை அடுத்த ஒரே வாரத்தில் அவன் கணக்கிற்கு மாற்றி விட்டிருந்தான் தங்கபாண்டியன். தமிழும் அவன் நம்பிக்கையை காப்பாற்ற, அவன் லாபத்தில் பத்தில் இரண்டு பங்கை தமிழுக்கு கொடுத்துவிடுவான் தங்கபாண்டியன். அதுவே மாதம் சில கோடிகளை தொட, ஒரே வருடத்தில் தன் தந்தை விட்ட இடத்தை பிடித்து இருந்தான் தமிழ்மாறன்.

                   ஆனால், அதற்கு அவன் கொடுத்த விலை ஆதிரையாழ் என்பதை விட, அவனையே அவன் விலையாக கொடுத்துவிட்டான் என்றால் சரியாக இருக்கும்.

                         சேது மாதவன் இறந்த முதல் ஓர் ஆண்டு காலம் தமிழ்மாறனின் வாழ்வை மட்டுமல்லாமல் ஆதியையும் முழுமையாக புரட்டி போட்டிருந்தது என்பதே உண்மை.. தமிழ்மாறனுக்காவது தான் நேசித்தவள் தன்னை எப்போதுமே கைவிடவே இல்லை என்று ஒரு ஆறுதல் இருந்தது.

                   ஆனால், ஆதியின் விஷயத்தில் அதுவும் பொய்த்து போனது. எப்போதும் போல் அன்றும் அவள் கல்லுக்குறிக்கு சென்று மாலையில் வீடு வர, அன்னையின் கண்ணீர் படிந்த முகம் தான் அவளை வரவேற்றது. பதறியவள் “என்னமா… ” என்று கேட்க

                   அப்போது தான் சேது மாதவன் இறந்து போன விஷயமே தெரியும் அவளுக்கு. ஒரேடியாக அதிர்ந்து போனவள் முதலில் யோசித்தது தமிழ்மாறனைதான்… அதன்பிறகே அவள் தந்தையை தேட, தந்தை வீட்டிலேயே இல்லை.

                   மாறாக, ரத்னவேல் பேத்தியை கண்டதும் அவள் கையை பிடித்துக் கொண்டு அழ, அவரை தேற்றியவள் அவரையும், அன்னையையும் அழைத்துக் கொண்டு தமிழின் வீட்டிற்கு செல்ல, தமிழ் அவர்களை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. சில தினங்களாகவே அவன் இப்படித்தான் இருக்கிறான் என்றாலும், அன்று அவனின் அந்த பாராமுகம்.. அதற்கும் மேலாக அவன் முகத்தில் இருந்த இறுக்கமும், வேதனையும் அவன் நெஞ்சம் கொண்டவளை கொன்று போட்டது..

Advertisement