Advertisement

கைநீட்டினேன் என்னை கரைசேர்க்கவா 01

                           சென்னை உயர்நீதிமன்றம்… நூறாண்டு வரலாறு கொண்ட அந்த சிவந்த கட்டிடம் தனக்கே உரிய கம்பீரத்துடன் நிமிர்ந்து நிற்க, அதன் வளாகத்தில் தான் எத்தனை வகையான மனிதர்கள். வழக்கறிஞர்கள், நீதிபதி, காவல்துறையினர் முதல் குற்றவாளிகள், அவர்களின் உறவினர்கள், சட்டம் படிக்கும் மாணவர்கள், வாசலில் டீ கடை, டிபன் கடை வைத்திருக்கும் தொழிலாளர்கள் என்று அத்தனை பேரையும் அரவணைத்து கொண்டிருந்தது அந்த வளாகம்.

                         அந்த வளாகத்தில் இருந்த வழக்கறிஞர்களின் ஓய்வு அறையில் தனக்கு முன்பாக இருந்த சட்டப்புத்தகத்தில் மொத்தமாக மூழ்கி போயிருந்தாள் ஆதிரையாழ்.பொதுவாக அழைப்பது ஆதிரா.. நண்பர்களுக்கும், உறவுகளுக்கும் ஆதி… இன்னமும் நெருக்கமான ஒருவன் யாழி என்று உருகியதும் உண்டு…

                       அவள் கவனம் சுற்றி இருந்த யார் மீதும் இல்லை.. அன்றைய அவளின் வழக்கு நேரம் முடிந்து போயிருக்க, வீட்டிற்கு செல்ல விருப்பம் இல்லாமல் அங்கே முடங்கி இருந்தாள். முடங்கி இருந்தாலும் தன் தொய்வை வெளியே காட்டிக் கொள்ள விருப்பம் இல்லாமல், தன் அடுத்த வழக்கு தொடர்பாக குறிப்பெடுக்க தொடங்கி இருந்தாள் அந்த அழகி..

                     நிச்சயம் அழகி தான்.. சராசரி பெண்களை விட சற்றே கூடுதலான உயரம்.. கண்களில் லேசான மை, உதட்டில் லிப்க்ளாஸ், நெற்றியில் ஒரு குட்டி வட்ட பொட்டு.. அவ்வளவே அவள் ஒப்பனை.. முதுகுக்கு கீழ் வரை வெட்டி விட்டிருந்த மொத்த கூந்தலையும் ஒரு ரப்பர் பேண்ட் கொண்டு முடிந்திருக்க, அவளின் முன்நெற்றி முடிகளை காதோரம் ஒரு கையால் ஒதுக்கி கொண்டே இருந்தாள் அவ்வபோது.

                   ஆனால், காற்றில் பறந்து கொண்டிருந்த அந்த மெல்லிய கேசம் அவளை படிக்க விடவே மாட்டேன் என்பது போல் அவளின் கண்களை மறைத்து விளையாட்டுக் காட்டிக் கொண்டே இருந்தது…  அவள் தன் கையில் இருந்த பென்சில் கொண்டு தன் கையில் இருந்த புத்தகத்தில் சில இடங்களில் குறித்து வைக்க, சரியாக  அந்த நிமிடம் அவளின் அலைபேசி இசைத்தது..

                    அதன் திரையில் மின்னிய எண்ணை கண்டதும் எடுப்பதா?? வேண்டாமா?? என்று கூட யோசிக்காமல், அதை துண்டித்து பக்கத்தில் வைத்துவிட்டு அவள் தன் வேலையை தொடர, அடுத்த சில நொடிகளில் மீண்டும் அதிர்ந்தது அவள் அலைபேசி.. “என்னை நிம்மதியாவே விடமாட்டிங்களாடா…” என்று கறுவி கொண்டே அவள் அந்த அழைப்பை ஏற்க

                    மறுமுனையில் பதட்டமாக ஒலித்தது எழிலனின் குரல். “ஆதி.. ஆதி எங்கே இருக்க நீ..இங்கே அண்ணனை போலீஸ் பிடிச்சிட்டு போய்ட்டாங்க ஆதி… எனக்கு என்ன செய்றதுன்னே தெரியல.. நீ வர்றியா…” என்று அவன் அலற

                    “போலீஸ் பிடிச்சுட்டாங்களா..” என்று துடித்து போனது ஆதிரையின் உள்ளம்.. ஒரு நொடி அதிர்ச்சியில் அமைதியாகி விட்டவள் சட்டென தெளிந்து, “எதுக்கு.. எதுக்குடா பிடிச்சுட்டு போனாங்க.. நீ எங்கே இருக்க…” என்று பேசிக்கொண்டே தன் புத்தகத்தை ஒரு கையில் எடுத்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பிவிட்டாள்..

                     “நான் இங்கே ஸ்டேஷன் வெளியே தான் இருக்கேன் ஆதி.. அண்ணனை பார்க்ககூட விடல ஆதி…நீ கொஞ்சம் சீக்கிரம் வாயேன்…” என்று கவலையுடன் எழிலன் பேச, அவன் குரலே முழுவதும் உடைந்து இருந்தது.

                    அவன் அழுகையை வெகுவாக அடக்கி கொண்டிருக்கிறான் என்பது புரிய, “நான் கிளம்பிட்டேண்டா… நீ அங்கேயே இரு.. பத்தே நிமிஷம்… நான் வந்திடுவேன்..” என்று அழைப்பை துண்டித்தவள் கையில் கார் பறந்தது…

                      அவள் மனம் முழுவதும் மாறன் நிறைந்திருக்க, “என்ன நடந்து இருக்கும்..” என்பதிலேயே உழன்று கொண்டிருந்தது அவள் மனம். கூடவே “ஏன் இப்படி ஆனது..” என்றும்…

                      ஊர்கூடி நிச்சயித்தது இல்லை என்றாலும், இருவீட்டினரும் ஒரே மனதாக பேசி முடித்து, நிச்சயித்த அவர்களின் திருமணம் சபை ஏறாமல் போயிருக்க, அதுவே வலி தான்… ஆனால், அதற்கும்  மேலாக அவளை கண்டாலே எட்டிக்காயை தொட்டது போல விலகி ஓடிக் கொண்டிருக்கிறான் மாறன்.. அவளின் தமிழ்மாறன்…

                     அவளை பார்வையால் எட்டி நிறுத்தும் அவனை விட, அவன் புறக்கணிப்பை புரிந்தும்கூட அவன் பின்னே சென்று நிற்கும் தன்னை நினைத்துதான் அதிக வேதனை ஆதிரைக்கு…

                       தன் யோசனையில் இருந்தாலும், கவனம் சாலையிலேயே இருக்க, சொன்னது போலவே பத்து நிமிடங்களில் வந்து சேர்ந்து விட்டிருந்தாள்.

                     அந்த காவல் நிலைய வாசலில் அவன் நண்பர்களும், கூடவே எழிலனும் நின்றிருக்க, ஆதி காரை நிறுத்தி இறங்கவும், வேகமாக அவளை நெருங்கினான் எழில்.கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்துக் கொண்டிருக்கும் மாணவன்.. அவன் வாழ்வில் நடந்த கசப்பான நிகழ்வுகள் அவனை முற்றாக உடைத்து போட்டிருக்க, ஆதியை கண்டதும் அவன் கண்களில் கண்ணீர் வடிந்தே விட்டது.

                   “ஆதி..” என்று அவள் கையை பிடித்துக் கொண்டவன், அதற்குமேல் பேசமுடியாமல் தள்ளாட, அவனை பிடித்து நிறுத்திக் கொண்டு, அவள் பேசிக் கொண்டிருக்கும்போதே அவர்களை கடந்து நான்குபேர் காவல் நிலையத்திற்குள் செல்ல, அவர்களுடன் செல்வா… அவன் உள்ளே இருப்பவனின் பிஏ…

                   ஆதிக்கு அப்போதுதான் தன் முட்டாள்த்தனம் உரைத்தது.. தான் வந்து வெளியே எடுக்க வேண்டிய நிலையிலா அவன் இருக்கிறான் என்று கசப்போடு நினைத்தவள் தன் நினைப்புக்கு மாறாக வெளியே சிரித்துக் கொண்டிருந்தாள். எழிலை மட்டும் திடப்படுத்துவது போல் அவன் கைகளில் மேலாக, தட்டிக் கொடுத்துக் கொண்டே நிற்க, அடுத்த பத்து நிமிடங்களும் கனமானவையே…

                     அங்கே நின்றிருந்த மாறனின் நண்பர்கள் ஆதியையும், எழிலையும் பார்த்திருக்க, அவர்களின் சாதாரண பார்வை கூட பரிதாபமாக பட்டது ஆதிராவுக்கு.. அவர்களின் பக்கம் திரும்பிக்கூட பார்க்காமல் அவள் நின்றிருக்க, அவள் எதிர்பார்த்த ஒருவன் அவள் எதிர்பார்த்திராத வேகத்தில் அவளை நெருங்கி கொண்டிருந்தான்..

                     ஆறடியை தாண்டி வளர்ந்துவிட்டானோ என்று நினைக்க வைக்கும் உயரத்துடன், ஆதிரையை நெருங்கி கொண்டிருந்தான் தமிழ்மாறன். மாநிறத்தில் இருந்த அவன் முகம் முழுவதுமாக செம்மை படர்ந்து ருத்ரமாக காட்சி கொடுக்க, கண்களும் நெருப்பில் இட்ட இரும்புக்கு இணையாக தான் தகித்துக் கொண்டிருந்தது..

                    அவன் உடல்  மொழியில் இருந்தே அவன் வீசப்போகும் விஷம் தாங்கிய அம்புகளை எதிர்நோக்கி தான் காத்திருந்தாள் ஆதிரா.. அவள் எதிர்பார்ப்பை அப்படியே பூர்த்திப்பவன் போல், அவளை நெருங்கிய நிமிடம் அல்லாமல், தன் தம்பியை இழுத்து தன் அருகில் நிறுத்திக் கொண்டான் தமிழ்மாறன்.

                   அவன் கைகள் இன்னமும் ஆதியின் கைப்பிடியில் இருக்க, ஆதியை எரித்து விடுவேன் என்பது போல்முறைத்தவன் பார்வை அவள் பிடித்திருந்த எழிலின் கையின் மீது படியவும், தன் கையை விலக்கி கொண்டாள் அவள்.

                    அவள் கையை விலக்கிய நொடி, எழில் “அண்ணா… நாந்தான்..” என்று பேசத்தொடங்க, அவனை பேசவே விடாமல் “போய் கார்ல ஏறு எழில்…” என்றுவிட்டான் மாறன். எழில் மீண்டும் “அண்ணா..” என்கையில், மாறன் எதுவுமே பேசாமல் தீர்க்கமாக ஒரு பார்வை பார்க்க, எழில் ஆதியைத் தான் பாவமாக பார்த்து வைத்தான்.

                  ஆதி மெல்ல தலையசைக்கவும், எழில் அமைதியாக அங்கிருந்து விலகிச்செல்ல, அது இன்னமும் கொதிப்பை கொடுத்தது மாறனுக்கு.. சும்மாவே ஆடுபவன் அன்று காலில் சலங்கை வேறு கட்டிக் கொண்டு விட, எதிரில் நின்றவளை கொன்று குடித்துவிடும் அளவுக்கு ஆத்திரம் தான்.

                   ஆனால், அத்தனை ஆத்திரத்திலும், நிதானமாக ஆதியை பார்வையிட்டவன் “என்ன உன் அப்பன் அனுப்பி வச்சானா??? நான் உள்ளே வைக்கிறேன்.. நீ போய் வெளியே எடுத்து அவன்கூட ஒட்டிக்கோ ன்னு சொன்னானா…” என்று வார்த்தைகளை கடித்து குதற, அசையாத பார்வையால் அவனை அளந்து கொண்டிருந்தாள் ஆதி.

                   அவனே தொடர்ந்து, “அதான் மொத்தமா எல்லாம் முடிஞ்சதே… உன் மூஞ்சியை கூட பார்க்க சகிக்கல ன்னு சொல்றேன்.. நாய் மாதிரி என்பின்னாடி அலையுறியே, உனக்கெல்லாம் அசிங்கமா இல்லையா… இல்ல வரதராஜன் பொண்ணுதானே.. இதெல்லாம் எதிர்பார்க்காத ன்னு சொல்றியா..” என்றவன் வார்த்தைகள் ஆதியை பாதிக்கவே இல்லை என்பது போல் அவள் நிற்க, இன்னமும் கடுப்பானது மாறனுக்கு.

                   “என்ன பொண்ணுடி நீ… பணத்துக்காக உன் அப்பன் என்ன சொன்னாலும் செய்வியா… ஆனா ஒன்னு, இன்னொருமுறை உன்கிட்ட மயங்கி, மொத்தமா நாசமா போக நான் ஆளில்லை… ஏற்கனவே மண்டை சூடாகி போய் இருக்கேன்… திரும்ப திரும்ப என் முன்னால வந்து நிற்காத..”

                  “உன் அப்பனோட குறுக்கு புத்திக்கும், நீ இருக்க இருப்புக்கும் என்னைவிட பசையுள்ளவனா எவனாவது சிக்குவான்… அவன் முன்னாடி போய் இப்படி மினுக்கிட்டு நில்லு…உன் கால்ல விழுந்து கிடப்பான்…” என்று ஏளனமாக கூறியவன் “இனி என் தம்பி விஷயத்துல நீ தலையிடவே கூடாது… ஏன் அவனை பார்க்கணும்ன்னு கூட நினைக்காத.. நானே கொன்னுடுவேன்…” என்று அவள் கழுத்தை நெறித்து விட்டிருந்தான் மாறன்..

                ஆதிரையின் கண்களில் தேங்கி இருந்த கண்ணீர், அந்த நிமிடம் மடை திறக்க கண்டுகொள்ளவே இல்லை மாறன். ஆனால், அவர்கள் நின்றிருந்தது காவல் நிலையத்தின் வாசலில் அல்லவா.. அதுவும் அவன் நண்பர்களும் உடன் இருக்க, சட்டென ஓடி வந்து அவனை ஆதியிடமிருந்து பிரித்து நிறுத்தினர் அவர்கள்.

                 ஆதி தடுமாறி நிற்க, இதற்குள் எழிலும் அவளிடம் வந்து விட்டிருந்தான். “ஆதி.. என்ன ஆச்சு.. என்ன பண்ணுது ஆதி..” என்று அவன் பதற,மாறன் அசையவே இல்லை. நண்பர்களின் பிடியில் இருந்து ஒரே உதறலில் தன்னை விடுவித்து கொண்டவன், ஆதியின் முகம் பார்க்காமல் திரும்பி நின்று கொண்டான்.

                 தன் வலது கையை குவித்து நெற்றியில் குத்திக் கொண்டவன், இருகைகளாலும் தலையை அழுத்தமாக கோதி, தன்னை நிலைப்படுத்திக் கொள்ள போராடி கொண்டிருந்தான். இரண்டே நிமிடங்களில் அவன் வெற்றியும் கண்டுவிட, கழுத்தை பிடித்துக் கொண்டு நின்ற ஆதியை கண்டு கொள்ளாமல், தன் தம்பியின் கையை பிடித்து இழுத்துக் கொண்டு நடந்து விட்டான் அவன்.

                            ஆதி கலங்கிய தோற்றத்துடன் தன்னை கடந்து சென்ற அந்த காரையே பார்த்துக் கொண்டிருக்க, இரண்டே வினாடிகளில் அவள் கண்ணை விட்டு மறைந்து விட்டது அந்த ஆடி A4 ரக கார்.

                   ஆனால், அந்த கார் மறைந்தது போல், அவளின் காதல் மறைந்து போக வழியில்லாமல் போனதே என்றுதான் அழுதது அவள் உள்ளம். நிற்குமிடம் உணர்ந்து காருக்கு வந்துவிட்டவள் காரில் அமர்ந்து, ஸ்டியரிங் வீல் மீது தலையை சாய்த்துக் கொண்டு சில நிமிடங்களை மௌனகண்ணீரில் கரைத்துவிட்டு தான் கிளம்பினாள்.

                தான் தங்கி இருந்த அந்த ஒற்றை அறை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் வந்து விழுந்தவள் ஆற்றவோ, தேற்றவோ ஆளில்லாமல் அடுத்த ஒருமணி நேரத்தை அழுகையில் கரைத்துவிட்டு அப்படியே உறங்கி போக, அன்றைய நாள் அவளின் வேதனை இன்னமும் மிச்சமிருந்தது போலும்.

                   நன்றாக உறங்கி கொண்டிருந்தவள் அலைபேசியின் சத்தத்தில் கண்விழித்து பார்க்க, அழைப்பு அவள் தந்தையிடம் இருந்து தான். ஆனால் அவரின் அழைப்பை கண்ட நொடி, முகம் கடினமாக மாறிவிட, ஒரு இறுக்கத்துடனே தான் அழைப்பை ஏற்றாள் ஆதிரா…

                          வரதராஜனும் மாறனுக்கு சற்றும் குறையாத கொதிநிலையில் தான் இருந்தார். எடுத்த எடுப்பிலேயே “உனக்கெல்லாம் எவ்ளோப்பட்டாலும் அறிவே வராது இல்ல…நீ எல்லாம் எப்படித்தான் எனக்கு மகளா பொறந்தியோ… உன் அக்கா எல்லாம் என் பேச்சை கேட்டு வாழல..

                      “நீ அவன் பின்னாடி போகப்போக தான் அவனை கொன்னுபோடனும் ன்னு தோணுது எனக்கு…ஒழுங்கா நான் சொல்றவனை கல்யாணம் பண்ணிக்கிட்டு குடும்பம் நடத்துற வழியை பாரு… உன்னை தனியா விட்டு வச்சிருக்கேன் தான்.. ஆனால், உன் விருப்பத்துக்கு விடல… நீ எப்பவும் என் மக தான்… உன் வாழ்க்கையும் என் முடிவு தான்…”

                            “நீ இனி அவனை தேடி போகக்கூடாது ஆதி..” என்று அப்படி ஒரு சத்தத்துடன் கத்தினார் அவர்.

                     ஆதிரா அவர் பேச்சுக்கு ஒரு வார்த்தை கூட பதில் சொல்லாமல் அமைதியாகவே இருக்க, “ஏதாவது பேசு ஆதி… உன்னை மதிக்காத ஒருத்தனை தேடிப்போய் பேசற இல்ல… உன்னை பெத்தவன் தானே நான், என்கிட்டே பேச என்ன.. முத்தா உதிர்ந்திடும்..” என்று அதற்கும் அவர் பேசி வைக்க, ம்ஹூம்.. ஒரு வார்த்தை கூட பதில் இல்லை அவளிடம்.

                      வரதராஜன் வெறுத்து போனவராக அழைப்பை துண்டித்துவிட, அடுத்த நிமிடம் அவளின் அன்னை உமா அழைத்துவிட்டார். தந்தை நிச்சயம் உடன் இருப்பார் என்று தெரிந்தது மகளுக்கு. ஆனாலும், தவிர்க்க முடியாமல் அவள் அழைப்பை ஏற்க, உமா பாசமாக “ஆதிம்மா..” என்று அழைக்க, அந்த ஒரு வார்த்தையிலே அன்னை மடிக்கு ஏங்கியது அவள் மனம்.

                     அவள் மௌனமாக அவரின் அழைப்பை ரசிக்க, உமா அதற்குள் “அம்மாகிட்ட பேசமாட்டியா ஆதி..” என்று கேட்டுவிட,

                     “ம்மா.. ஏன்மா நீயும் சாகடிக்குற…” என்று அழுகுரலில் அவள் கேட்கும்போதே,

                    “அழாதடா.. அம்மா தெரியாம சொல்லிட்டேன் ஆதிம்மா… அழாதம்மா..” என்றார் உமா.

                     ஆதி கண்களை துடைக்கவும், “ஏன் ஆதி என்னை கூட நினைக்க மாட்டியா… நீ ஏண்டா தனியா கிடந்து இப்படி கஷ்டப்படணும்..அம்மாட்ட வந்திடு ஆதிம்மா… ” என்று அவர் அழைக்க

                   “மாறனுக்கு அப்பா இல்லையேம்மா… அவர் எப்படி மாறிட்டாரு தெரியுமா… சிரிக்கவே மறந்துட்டாரும்மா அவரு… அவரை இப்படி விட்டுட்டு நான் எப்படி நல்லா இருக்க முடியும்…”

                  “அவரோட இந்த நிலைமைக்கு என் அப்பாவும் ஒரு காரணம் இல்லையா.. கேவலம் பணத்துக்காக இருபது வருஷ நட்பை ஒண்ணுமே இல்லாம தூக்கி போட்டவர் ஆச்சே.. அவரோட எப்படிம்மா என்னை இருக்க சொல்ற…”

                  “என்னைப்பத்தி அன்னைக்கு யார் யோசிச்சா… என் அப்பாவுக்கு பணம் முக்கியம்… சேது மாமாவுக்கு அவரோட மரியாதை முக்கியம்.. மாறனுக்கு அவர் அப்பா முக்கியம்.. அப்போ இப்பொமட்டும் என்னைப்பத்தி யோசிக்க என்ன இருக்கு…”

                   “அம்மா இன்னும் உயிரோட இருக்கேனே ஆதிம்மா…”

                  “நானும் அந்த தைரியத்துல தான் உயிரோட இருக்கேன்மா.. என் போராட்டம் என்னிக்கு முடிவுக்கு வருதோ அன்னிக்கு உன்கிட்ட வந்திடுவேன்… எனக்காக காத்திரும்மா…” என்றவள் அழைப்பை துண்டித்துவிட்டாள்…

அன்னையிடம் பேசியதும் அவரின் ஆதரவும் ஏதோ ஒரு வகையில் ஆறுதலாக இருக்க, ஆதிரா மெல்ல தெளிந்து கொண்டாள்.

                    நாளை விசாரணைக்கு வரும் வழக்கை பற்றியும் யோசனை வர, நிதானமாக குளித்து முடித்து, பெயருக்கு சமையல் என்று எதையோ செய்து வயிற்றை நிறைத்து கொண்டு தன் கேஸ்கட்டுடன் அமர்ந்து விட்டாள்.

                   அதே நேரம், தன் அறையின் பால்கனியில் இருந்து எதிரே விரிந்து பரந்திருந்த நீலக்கடலை வெறித்து கொண்டிருந்தான் தமிழ்மாறன். பாரதியார் பாடலில் வருமே

“நெரித்த திரைக்கடலில் நின்முகங் கண்டேன்;

நீல விசும்பினிடை நின்முகங் கண்டேன்;

திரித்த நுரையினிடை நின்முகங் கண்டேன்;

சின்னக் குமிழிகளில் நின்முகங் கண்டேன்;

பிரித்துப் பிரிந்துநிதம் மேகம் அளந்தே,

பெற்றதுன் முகமன்றிப் பிறிதொன் றில்லை;

சிரித்த ஒலியினில்ன் கைவி லக்கியே,

திருமித் தழுவியதில் நின்முகங் கண்டேன்.” என்று… அந்த நிலையில் தான் இருந்தான் கிட்டத்தட்ட…

                          என்ன காதலி கண்களை மறைக்கவில்லை… அவள் மறைக்க தயாராக இருந்தாலும், இவன் அனுமதிப்பதற்கு இல்லை…

                         எங்கெங்கு நோக்கினும் அவள் முகமே தெரிய, அதற்கும் அவளையே பலியாக்கி கொண்டிருந்தான் மாறன்… “எனக்கு நீ வேண்டாம் யாழி….” என்று வாய்விட்டு கத்த வேண்டும் போல் இருந்தது அவனுக்கு…

Advertisement