மூன்று நாட்கள் தாம்பத்தியம்.. என்ன உணர முடியும் புதுமணமகனுக்கு, போதவில்லை.. வேறுவழியில்லை.. கடமை அழைக்க கிளம்பிவிட்டான். அங்கு சென்று அவளுக்கான தேடலுடன் கணவனாய் பேச முழு ஏமாற்றம். அவன் எதிர்பார்த்த வெட்கம், சிணுங்கல், கொஞ்சல் ஏதும் இல்லை.
இருவருமே ஒருவரை ஒருவர் உணராமலே.. புரியாமலே அடுத்த நிலைக்கு சென்றுவிட்டனர். தந்தை ஆனான். மனைவியின் வயிற்றில் குழந்தைக்கான எந்த சந்தோஷத்தையும் நேரடியாக அனுபவிக்கவில்லை. ஆனால் மனைவி சிறுபெண் பிரசவத்திற்கு கண்டிப்பாக உடனிருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஊருக்கும் வந்து சென்றான்.
அவன் நினைத்திருந்தால் அடுத்த விடுமுறைக்கே சென்று மனைவியுடன் உல்லாசமாய் இருந்திருக்கலாம், ஆனால் செய்யவில்லை. கணவனாக மனைவியை தாங்க வந்தான். ஆனால் மனைவி தன்னை அப்படி நினைக்கவில்லையோ..” தனக்கான தேடல் அவளிடம் இல்லையோ..” என்று அவளின் இணக்கத்தை எதிர்பார்த்து எதிர்பார்த்து ஏமாந்து பல எண்ணங்கள் அவனுள்.
“சரி.. ஊருக்கு போறோம் இல்லை.. அவகிட்டேயே உட்கார்ந்து பேசலாம்.. எங்கேயாவது வெளியே அழைச்சிட்டு போலாம்.. அவளுக்கு தேவையானதை வாங்கி கொடுக்கலாம்.. இந்த லீவை அவகூடவும், மகன்கூடவும் சந்தோஷமா அனுபவிக்கனும்..” என்று பல பல கனவுகள்.. திட்டங்கள்.. ஏக்கங்கள்.
ஆனால் வந்த முதல் நாளே மறுபடியும் ஏமாற்றம் கொடுத்தாள் மனைவி. அவளுக்கு பால் கொடுக்க கீழே வைத்தாள். வந்து பேசவும் செய்யாமல் கீழே படுத்தும்விட்டாள். அப்போதும் மறுநாள் தானே அவளை நெருங்கியும் தன்னை வலுக்கட்டாயமாய் விலக்கி தள்ளி வைத்தாள்.
தொடர்ந்து திவாகர் பிரச்சனை.. இவள் பேச.. தான் பேச.. திரும்பவும் அதே வார்த்தைகள்.. “உங்ககூட படுக்..” என்று கேட்டு அவளுக்கான அவனின் தேடலை கொச்சப்படுத்தி.. திரும்பவும் கை நீட்ட வைத்தது. அவன் அவளை அடித்தது தவறென்று மனதிற்கு புரிந்தது.
எதோ ஒரு மூலையில் அவனின் எண்ணம் அதுவாக தான் இருந்தது. இவள் தன்னை கணவனாக நினைக்க வில்லையோ.. கடமைக்கு இருக்கிறாளோ.. என்ற அடிமனதின் நமைச்சலே நீ நல்ல பொண்டாட்டியா..? என்று கேட்க வைத்தது. புரிந்த மனசாட்சி அவனை குத்தியது. ஆனாலும் கணவனாக மனதின் இடறல்.. அவள் என்கூட இணக்கமா இருந்திருந்தா இந்த பேச்சே இல்லையே..? என்று எண்ண வைத்தது.
அதோடு தம்பியின் துரோகம்.. அவன் மழையிலும், வெயிலிலும், பனியிலும் அரும்பாடு பட்டு சம்பாதித்த பணம் தம்பியின் உல்லாசத்திற்கு தான் என்பதை கடுகளவும் தாங்க முடியவில்லை.
“எவ்வளவு நம்பினேன்..? கேட்டப்போ எல்லாம் கொஞ்சம் கூட குறையாம பணம் கொடுத்தேனே.. கையில் இல்லைனாலும் ப்ரண்ட்ஸ்கிட்ட வாங்கி கொடுத்தேனே.. எல்லாம் இவன் தண்ணி அடிக்கவும், காதலியுடன் ரூம் போடவும் தானா..?” உள்ளம் கொதித்தது.
“தெரிஞ்சு கேட்டப்போ.. எப்பப்பப்பா.. எப்படி எல்லாம் நடிச்சான்.. அதை நானும் நம்பிட்டேனே.. திலோ கூட சொன்னாளே..” என்று எரிமலையாய் வெடித்தவன், அதே கோவத்தில் வண்டியை ஓட்ட, எதிரில் கார்.. என்ன என்று உணரும் முன் தூக்கி வீசபட்டான்.
விழித்த போதும் மனதில் அதுவே நின்றது. திவாகர் காண வந்த போதும் தலையை மட்டுமே அசைத்தான். நல்ல வேளை அவனே இன்டெர்வியூக்கு என்று கிளம்பிவிட்டான். இல்லை எனில்.. என்று கட்டுப்படுத்தி கொண்டவனுக்கு, மனைவி மீதான கோவமும் குறையவில்லை.
மாலை அவளின் வீட்டில் வைத்து தொட்ட போதும் அதே தான் கேட்டாள்.. போதும் இதோடு மூன்று முறை.. அப்படியென்ன..? போடி.. என்ற கணவனின் வீம்பு “எனக்கு எதுவும் செய்யாத..” என்று சொல்ல வைத்தது.
அவனுக்கு மனைவியிடம் கேட்க ஒரு கேள்வியும் உள்ளது. அதற்கான பதில் தான் என் தேடலுக்கான பதில்.. என் குழப்பத்திற்கான பதில்.. அந்த பதில் தான் தான் எங்களின் வாழ்க்கையையும் முடிவெடுக்கும்.. என்று உறுதியாக நம்பினான். போதும் இந்த கண்ணாமூச்சி விளையாட்டு.. இதுக்கு ஒரு முடிவு கட்டுறேன்.. என்ற வைராக்கியத்துடன் மனைவியிடமும் பேசினான்.
“சரி.. நான் கேர் டேக்கரை அனுப்பிடுறேன்.. நீயே என்னை பார்த்துக்கோ.. ஆனா அதுக்கு முன்னாடி எனக்கு ஒரு கேள்விக்கு பதில் வேணும்..” என்றான் மனைவி வரவும்.
“என்ன..?” என்று திலோ கணவனின் புதிரான முக பாவத்தில் புரியாமல் கேட்டாள்.
“நீ என்கூட முழு மனசோட தான் இருக்கியா..?” என்றான்.
“என்ன பேசுறீங்க நீங்க..?” என்று திலோ கோவப்பட,
“பதில் சொல்லு.. என் பொண்டாட்டியா நீ விருப்பப்பட்டு தான் இருக்கியா..?” என்றான் மீண்டும்.
“உங்களுக்கு என்மேல என்ன கோவம்..? சொல்லுங்க.. நான் உங்க தம்பி விஷயத்துல பேசினது தப்பு தான்.. விடுங்க.. அதுக்காக நாம சண்டை போட்டுக்க வேணாம்..” என்றாள் கணவன் உயிருக்கு போராடி வந்ததில் அவனுக்காக துடித்து.
“அது என்னோட தப்பு.. நீ சொல்றதை கேட்டிருக்கணும்.. சாரி..” என்றான் மனதார.
“அப்போ உங்களுக்கு..?”
“எல்லாம் தெரியும்.. அதை விடு.. நீ உன் விருப்பத்தை பத்தி சொல்லு..”
“என் விருப்பம் என்ன..? ஒரு மகன் வந்ததுக்கு அப்புறமும் ஏன் இப்படி பேசிகிட்டு இருக்கீங்க..? எனக்கு பிடிக்கல.. நிறுத்துங்க..”
“எனக்கு இன்னும் பதில் வரல.. நீ உன் விருப்பத்தோட தான் என்கூட வாழ்ந்தியா.. அந்த மூணு நாள்..” என திலோவிடம் ஒரு திடுக்கிடல்.
“என்ன..? ஏன் இப்போ அதை பத்தி..?” என்று தன் தடுமாற்றத்தை மறைத்து பேச, ஆர்மிக்காரன் கண்டுகொண்டான். மனதில் லேசாக வலி.
“என்னங்க ஆச்சு உங்களுக்கு..? ஏன் இப்படி எல்லாம் பேசிட்டு இருக்கீங்க..? நீங்க என்னோட எல்லாமே.. இது உண்மை.. சத்தியம்..” என்றாள் அவனின் கை பிடித்து.
“திலோ.. நான் கேட்டதுக்கு தான் பதில் வேணும்.. சொல்லு.. நாம வாழ்ந்ததுல உன்னோட விருப்பம் இருந்துச்சா இல்லையா..?” என்றான் அழுத்தமாக.
“இருந்துச்சு.. இருந்துச்சு.. போதுமா.. விடுங்க..”
“அப்போ என்மேல சத்தியம் பண்ணு..” என்று அவளின் கையை தன் ஒரு கையால் இழுத்து கேட்டான்.
“என்ன..?” என்று திலோ அதிர்ந்து பின் வாங்க, விடாக்கண்டனான கணவன் அவளின் கையை விடவே இல்லை. அவனின் தலைக்கு கொண்டு போக, ஏற்கனவே உயிர் எல்லை வரை சென்று மீண்டு வந்த கணவன் மேல்.. முடியாது..
“இல்லை.. இல்லை.. அப்போ எனக்கு அது பிடிக்கல, உங்களுக்காக.. அத்தைக்காக பொறுத்துகிட்டேன்..” என்றுவிட்டாள்.
ருத்ரன் கண்களில் கண்ணீர் தேங்க, ஆண்மகனாக எவ்வளவு பெரிய அடி.. வலி.. தன்னுடனான தாம்பத்தியம் மனைவிக்கு பிடிக்கவில்லை. கடமைக்காக.. ஊருக்காக தன்னை பொறுத்து கொண்டாள்.. கேட்க கேட்க நெஞ்சில் ஊசியாய் குத்தியது.
“இதுதான் என்னை இத்தனை வருஷமாய் தவிக்க வைச்சது. அவ விருப்பம் இல்லாமல் அவளோட நான் வாழ்ந்திருக்கேன்.. அதனால தான் என்னை அவ அந்த வார்த்தைகளை எல்லாம் கேட்டது..” என்று தனக்குள்ளே மறுகியவன், மனைவியிடம் இருந்து முழுதும் விலகி கொண்டான். அவள் பேச வருவதை கேட்கவில்லை.
அங்கிருந்த ஒரு மாதமும் திலோ எவ்வளுவோ முயன்றாள் தன் மனநிலையை.. மனமாற்றத்தை கணவனிடம் சொல்ல, அவன் மனைவியை முற்றிலும் தள்ளி வைக்க, திலோ அவளின் பக்க நியாயத்துடன் கணவன் முன் நின்றாள்.
“நீங்க என்கிட்ட அப்போ நடந்துக்கிட்டது எனக்கு ஏத்துக்க முடியல, என்னோட விருப்பம் கேட்காம நடந்துக்கிட்டிங்க.. அதனால தான் என்னால உங்ககூட இணக்கமா இருக்க முடியல.. ஒத்துகிறேன்..”
“ஆனா அதையே வச்சு நீங்க என்னை நல்ல பொண்டாட்டி இல்லன்னு சொல்வீங்களா..? தள்ளி வைப்பீங்களா..? இது எப்படி சரியா இருக்க முடியும்..? என்னால எப்படி பொறுத்துக்க முடியும்.. சொல்லுங்க.. அப்போ இதுதான் என்னை உங்ககிட்ட பொண்டாட்டியா நிலை நிறுத்துறதா..?” என்று வெடித்தாள்.
ருத்ரன் பதில் சொல்லாமல் அவளை தீர்க்கமாக பார்க்க, திலோ பெரு மூச்சு எடுத்து தன்னை நிதானித்தாள்.
“இதுக்கும் மேல இதை பத்தி பேச எனக்கு விருப்பமில்லை.. நீங்க என்கிட்ட எப்படியோ..? அப்படியே நானும் உங்ககிட்ட இருந்துகிறேன்..” என்று தன் நிலையில் நின்றுவிட்டாள். அவனுக்கான தன் மாற்றத்தை, ஏக்கத்தை புரிய வைக்கமாலே தானும் விலகிவிட்டாள்.
நிழல் தேடிடும் ஆண்மையும்..
நிஜம் தேடிடும் பெண்மையும்..
ஒரு போர்வைக்குள் வாழும் இன்பம்..
தெய்வம் தந்த சொந்தமா..?
காலம் காலமாக உடன் வாழும் தம்பதிகளுக்கே புரிதல் என்பது இறுதிவரை கேள்வி குறியே.. இவர்களை போன்று வருடத்திற்கு ஒருமுறை சேர்ந்து வாழ்பவர்களின் புரிதல்..???
அந்த வருட விடுமுறை முடிந்து ருத்ரன் பூரண நலனுடன் ஆர்மிக்கு திரும்பிவிட்டான். அடுத்து வருடங்களில் ஒருமுறை மட்டுமே ஊருக்கு வந்தான். அவனின் முன்னேற்றத்தில் ஊன்றிவிட்டான். இங்கு அவனின் குடும்பம்..? மனைவி..? மகன்..?