Advertisement

“மதி…மா… போலாம் வா”,  என சற்று குரலை உயர்த்தி அழுத்தமாக கூறிவிட்டு மதியுடன் விறுவிறுவென படிக்கட்டில் ஏறி விட்டான்.

மூவரும் அவனை ஆச்சரியமாக பார்திருந்தனர்.   கோவத்தின் உச்சியில் இருந்த கௌதமி கூட அவன் குரலையும் அந்த பாவனையும் கண்டு அமைதியாகிவிட்டார்.

ஏனெனில்  ரகு இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு இப்பொழுது தான் இத்தனை அழுத்தமாகவும் கோவமாகவும் பேசிவிட்டு செல்கிறான்.

ரகுவின் முகமும், அவன் தன் கையில் கொடுத்த அழுத்தமும்,  அவன் எத்தனை கோபத்தில் இருக்கிறான் என்பதை உணர்த்தியது மதிக்கு.   இருப்பினும் அவன் பார்வை தன் பாதத்திலே இருப்பதைக் கண்டு என்னவென யோசித்தவள் சட்டென்று நடையை நிறுத்தி விட,

“என்னாச்சு மதி.  ஏன் நின்னிட்ட.  வேற எங்கயாவது அடிபட்டு இருக்கா?வலிக்குதா?” என பதட்டமாக வினவினான் ரகு.

இல்லை என தலை அசைத்தவளின் பார்வை தன் முகத்திலேயே இருப்பதை கண்டவன், “என்னாச்சும்மா?” என மீண்டும் கேள்வி எழுப்பினான் சற்று அழுத்தமான குரலில்.

“ஒன்னும் இல்ல ரகு மேல போகலாம்”,  என்ற என்று அவள் கூற, இருவரும் படிக்கட்டை கடந்து அவர்கள் அறைக்குச் சென்றனர்.

உள்ளே அறைக்கு சென்றதும் மதியை அங்கிருந்து மெத்தையில் அமர்த்தி விட்டு,  இவன்  அந்த அறையின் ஓரத்தில் அமைந்திருந்த குளிர்சாதன பெட்டியை நோக்கி சென்றான்.

மெத்தையில் அமர்ந்ததும் மதி ஒரு பெருமூச்சுடன் கண்களை மூடிக்கொள்ள, சிறிது நேரத்தில் அவன் அருகே வரும் அரவம் கேட்டு கண்விழித்து பார்த்தாள்.

மெத்தையில் மதியின் அருகே அமர்ந்தவன்,  அவன் கையில் வைத்திருந்த ஐஸ் கட்டிகளை வைத்து,  அவள் கன்னத்தில் இருந்த வீக்கத்திற்கு ஒத்தனம் கொடுக்க ஆரம்பித்தான்.

அவன் எத்தனை மெதுவாக வைத்தாலும் அவளுக்கு வலிக்கத்தான் செய்தது.  அது அவள் முகத்திலேயே தெரிய, ரகுவால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை, “மதிமா என்கிட்ட சொல்ற ஐடியா உனக்கு இல்லையா?” என்றான்.

அவனையே பார்த்துக் கொண்டிருந்தவள் அவன் கேள்விக்கு பதிலாக,”ரகு இது என் வேலை சம்பந்தப்பட்ட ஒரு விஷயம்.   அதை உன்கிட்ட சொல்ல வேணாம்னு நினைக்கிறேன்.  அவ்வளவுதான்” என்றாள்.

“மதிமா, உன் வேலை சம்பந்தப்பட்ட விஷயம் என்பது நீ காயப்படாம இருக்கிற வரைக்கும் தான்.  உனக்கு காயம்படும்னு தெரிஞ்சாலே, அத நான் பாத்துட்டு சும்மா இருக்க மாட்டேன்.

ஆனா இன்னைக்கு இந்தளவு நீ காயப்பட்டு வந்து உட்கார்ந்து இருக்கும் போது, என்ன பார்த்துட்டு அமைதியா இருக்க சொல்றியா? நீ இதை என்கிட்ட சொல்லலனாலும் என்னால இது என்னன்னு கண்டுபிடிச்சு அதை தீர்க்க முடியும்.

ஆனால் இதை  உன்கிட்ட கேட்கிறதுதான் சரி.   அதனால தான் பொறுமையா கேட்டுட்டு இருக்கேன் பதில் சொல்லுமா “, என்றான்.

உண்மையில் மதிக்கு இது வேலை சம்பந்தப்பட்ட விஷயமாக இருந்தாலும் கூடவே இன்னொன்றும் அவளை சொல்ல விடாமல் தடுத்தது.

முதல் நாள் இருந்து திட்டம் காலையில் சட்டென்று மாறிவிட,  அதனால்தான் அவள் அந்த வேலையை செய்ய வேண்டியதாகி விட்டது.

அந்த வேலையை தான் செய்தால் மட்டுமே அந்த பிஞ்சுகளின் உயிரை காப்பாற்ற முடியும் என்னும் போது அதை எப்படியோ செய்துவிட்டாள்.   ஆனால் இப்போது ரகுவிடம் அதை சொல்ல முடியாமல் சற்று தயக்கமாக இருந்தது.

“என்ன யோசனை மதிமா சொல்லு”

மீண்டும் அவன் கேள்வி எழுப்ப மதிக்கு சொல்ல முடியாமல் தடுமாற்றம் கூடியது.

அவளுக்கே தன்னை நினைத்து அச்சமயம் கோபம் எழுந்தது.  இப்படி எதற்கும் தயங்கி பேசும் ஆள் இல்லை அவள்.  ஆனால் இன்று அவனிடம் தான் செய்த செயலை சொல்ல முடியாமல் மிகவும் தவித்துக் கொண்டிருந்தாள்.

சரியாக அச்சமயம் ரவி கதவை தட்டி விட்டு உள்ளே வரலாமா என குரல் கொடுக்க,  ரகு உடனே உள்ளே அனுமதித்து விட்டான்.

இவ்வளவு நேரம் மனைவியின் பக்கம் இருந்த கவனம் ரவி பக்கம் சென்று விட மதி சற்று மூச்சு விட்டாள்.

“என்னாச்சு ரவி டாக்டர் வந்துட்டாரா”

“இல்ல ரகு.  டாக்டர் இன்னும் வரல .  ஆனா மதிய பார்க்க ஜெய் வந்து இருக்கான்.  ஏதோ பெண்ட்ரைவ் கொண்டு வந்து இருக்கானாம்.  அத பத்தி மதி கிட்ட சொல்லிட்டு, குடுத்துட்டு போனுமா அதுக்காக வெளியே வெயிட் பண்றான்”

‘ச்சே…நம்ம பார்க்கிங்ல நிக்கும் போது, இவன் தான் உள்ள வந்தானா ? இவன் தான் தெரிஞ்சிருந்தா அங்கேயே நின்னு இருக்கலாமே. இப்படி வந்து ரகுகிட்ட மாட்டிருக்க வேணா ‘என்று மனதோடு எண்ணிக் கொண்டாள் மதி.

இவள் மனதில் எண்ணிக் கொண்டிருக்கும் போதே ஜெய், ரகுவின் அனுமதியோடு அறைக்குள் வந்திருந்தான்.

“ஹலோ ரகு சார்”,என ரகுவிற்கு ஒரு  வணக்கம் வைத்துவிட்டு, மதியிடம் திரும்பி

“சீனியர் நீங்க இந்த பென்டிரைவ் அங்கேயே வச்சுட்டு வந்துட்டீங்க.  இன்னைக்கு நடந்த விஷயத்திற்கு இது இருந்தா தான ஸ்டோரி எழுத முடியும். மறந்திட்டீங்களா இந்தாங்க” என்றான்.

பேசி முடித்த பின் தான் அவனும் அவன் சீனியர் முகத்தை நன்றாக கவனித்தான். “அச்சச்சோ சீனியர், இது என்ன. இது நேரமாக ஆக பெரிசாகிட்டே போகுது.

உங்களை இப்படி அடிச்சவன வேற எதுவும் பண்ண வேணாம்னு சொல்லிட்டீங்க.  எனக்கு இதை பார்க்க பார்க்க அவனை நாலு சாத்து சாத்தாம வந்துட்டோமேன்னு இருக்கு சீனியர்”, என்று கோவமா கத்துக்க கொண்டு இருந்தான்.

“என்ன சொல்ற ஜெய், இது சுவத்தில இடிச்சுக் கிட்டதில்லையா? மதிய அடிச்சாங்களா? யாரு அடிச்சாங்க ஜெய்” என ரவியிடம் இருந்து வேகமாக வந்தது கேள்வி கணைகள்.

ரவியின் கேள்விகள் மூளையை அடைந்த பின்பு தான், ஜெய்க்கு அங்கு இருக்கும் சூழ்நிலை புரிய, சட்டென்று திரும்பி மதியை பார்த்தான்.

அவள் இவனை உக்கிரமாக அவனை முறைத்துக் கொண்டிருந்தாள்.  அவள் தான் இவன் ஆரம்பிக்கும்போதே இவனிடம் சொல்லாதே என்பது போல் தலையசைத்துக் கொண்டிருந்தாளே.   ஆனால் அவன் அதை கவனிக்காமல் அனைத்தையும் கொட்டிவிட்டான்.

ஜெய்க்கு தன் பார்வையை மதி பக்கம் வைக்க முடியாமல் ரகுவிடம் திருப்ப, இப்போது அவன் நிலைமை இன்னும் மோசம் ஆகிவிட்டது.

ஜெய் ரகுவுடன் பழகிய இந்த கொஞ்ச காலகட்டத்தில் அவனை ஒருமுறை கூட இத்தனை இறுக்கமாக பார்த்ததே இல்லை.

அந்தப் பார்வை அவனை ஏதோ செய்ய, அவனிடம் ஏதாவது ஒரு பொய் சொல்லி சமாளித்து விடலாம் என்று கூட அவனால் எண்ண முடியவில்லை.

இருந்தும் அவன் தன்னை சமாளித்துக் கொண்டு, “இல்ல ரகு சார், நான் இத தெரியாம சொல்லிட்டேன் அவங்க சுவத்தில தான் இடிச்சுக்கிட்டாங்க” என்று மழுப்பினான்.

“பொய் சொல்லாதடா”, என ரவியிடமிருந்து குரல் வர,

ரகுவின் பார்வை மாறாமல் நேராக தன்னை நோக்கி இருப்பதை கண்டு ஜெய்க்கு அச்சம் பரவ, எச்சிலை முழுங்கி கொண்டு,  “ஆமா சார்.  நான் பொய் தான் சொல்லிட்டேன்.  அவங்கள அடிச்சிட்டாங்க”, என்றான்.

“யார் அடிச்சாங்க? என்ன நடந்துச்சு?” என்று மீண்டும் ரவியிடம் இருந்து கேள்வி வர,

“அது வந்து சார், காலைல.. குழந்தை.. ஹஸ்பண்ட் அண்ட் வைஃப்..” என்று அவன் உளர ஆரம்பித்தான்.

“டேய் உளராம ஒழுங்கா சொல்லுடா” என்றவனை,

“அய்யோ இவரு வேற இப்படி கேள்வியா கேட்டுக் கொல்றாரே. இப்ப நான் என்ன பண்ணுவேன்” என்றவாறு மனதில் புலம்பியவன்,

“ஹான்…….பிரேக்கிங் நியூஸ் சார்…பிரேக்கிங் நியூஸ் பாருங்க.  அதுல காலைல  மதி அக்கா பண்ணது வந்துட்டு இருக்கு”, என்றான்.

இப்போது ரகு தன் பார்வையை மதிப் பக்கம் திருப்பி, ஒரு நொடி அவளை உற்றுப் பார்த்துவிட்டு, ரவியை பார்க்க, அவன் அங்கிருந்த தொலைக்காட்சிக்கு உயிர் கொடுத்தான்.

ரவி ஒன்று, இரண்டு செய்தி சேனல்களை மாற்றிக் கொண்டிருக்க, ஜெய் ஒரு சேனலை கை காமித்து அதை நிப்பாட்டுமாறு சொன்னான்.  அதில் வந்த செய்தி

“இன்று காலை சென்னையில் 27 கைக் குழந்தைகள் கடத்தல் காரர்களிடம் இருந்து காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளனர்.

இக்குழந்தைகள் எந்த உயிர் சேதமும் இன்றி மீட்கப்பட மிகவும் உதவியது இரண்டு பத்திரிகையாளர்கள் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் சென்னை மாநகராட்சியின் உதவி காவல் ஆய்வாளரான தேவன் இதைப் பற்றி கூறுகையில்,

குழந்தைகளுக்கு எந்த உயிர் சேதமும் இன்றி அவர்களை மீட்பதற்கு மட்டுமல்லாமல்,  கடத்தலில் ஈடுபட்டவர்களையும் கைது செய்வதற்கு பெரும் பங்கு வகித்த அந்த இரண்டு பத்திரிக்கையாளர்களையும் காவல்துறையில் சார்பாக நான் வெகுவாக  பாராட்டுகிறேன் என்றும்.  காவல்துறையிடம் தங்களுக்கு தெரிந்த இச்செய்தியை  கொண்டு சேர்த்தால் போதும், எங்கள் கடமை முடிந்து விடும் என்பதோடு நிறுத்திக் கொள்ளாமல்.

களத்தில் இறங்கி இருவரும் வேலை செய்து குழந்தைகளை மீட்டது, பொது மக்களுக்கு ஒரு முன்னுதாரணமாக அமைந்துள்ளது என்றும் கூறினார். மேலும் அவர்களின் நலன் கருதி அவர்களை பற்றிய  தகவல்கள் எதுவும்  வெளிப்படுத்தவில்லை என்றும் தெரிவித்தார்”

செய்தி முடிவடைந்ததும் தொலைக்காட்சி நிறுத்தப்பட, இப்போது அனைவரின் பார்வையும் மதி பக்கம் திரும்பியது.  மதி ரகுவை மட்டும் பார்த்தவாறு அமர்ந்து இருந்தாள்.

அடுத்து யாரிடம் என்ன கேள்வி வருமோ என பயந்தவாறு ஜெய் நிற்க, அதற்குள் கதவு தட்டும் சத்தம் கேட்டது.  அங்கே மருத்துவர் உடன் தேவி கௌதமி இருவரும் நின்றிருந்தனர்.

மூவரும் உள்ளே வர மருத்துவர் மதியின் அருகே வந்து, “அட நீ தான் வேகமதியா மா. கீழ இருந்து மேல வரதுக்குள்ள உன்  மாமியார் உன்னை பத்தி ஒரு புராணமே படிச்சிட்டாங்க.  அட என்ன கன்னம் ரொம்ப வீங்கிருக்கே.  ஆமா, உனக்கு எப்படி அடிபட்டுச்சு”, என்று கேட்டவாறு அவள் காயத்தை ஆராய ஆரம்பித்தார்.

அதற்கு மதி கீழே சொன்னா அதே காரணத்தை இவரிடமும் கூற, அவர் அவளை  ஒரு நிமிடம் பார்த்துவிட்டு, அவள் காயத்திற்கு மருந்து அளித்து சில மாத்திரைகளை எழுதி ரகுவின் கையில்  கொடுத்துவிட்டு,

“உன் காயத்தை பாத்தா சுவத்துல இடிச்சிட்ட மாதிரியே இல்லை. சரி பரவால்ல விடு. நீ என்கிட்ட சொல்ல விரும்பலன்னு நினைக்கிறேன். அடடா நான் என்னை அறிமுகப்படுத்திக்கவே இல்ல பாரு.  நான் டாக்டர் வெங்கட் மா.  இவங்களுக்கு ஃபேமிலி டாக்டர்” என்றவர்,

சரிமா காயம் லைட்டா தான் இருக்கு இருந்தாலும், வீக்கம் அதிகமா இருக்கனால ஒரு ஒன் வீக் ஆகும் சரியாக.  மறக்காம டேப்லெட் எல்லாம் கரெக்டா எடுத்துக்கோ. ஓகேவா.  சரி ரகு நான் கிளம்புறேன்.  ரெண்டு பேருக்கு ஹாப்பி மேரீட் லைஃப்.

உங்க கல்யாணத்தை தான் சொல்லாம செஞ்சிட்டீங்க.  ரிசப்ஷன் அப்பவாவது என்ன கூப்பிடுங்க ஓகேவா? ” என்று விட்டு அனைவரிடமும் விடை பெற்று கிளம்பிட, கௌதமி அவரை மேனேஜருடன் அனுப்பி வைத்தார்.

“மதி, இவர் என்னடா சொல்லிட்டு போறாரு சுவத்துல இடிச்சதில்லைன்னு சொல்றாரு. என்ன ஆச்சு உண்மைய சொல்லு” என்று அவர் அருகில் அமர்ந்து கொண்டு கேள்வி எழுப்ப,

இப்போது அனைவரின் பார்வையும் தன்னை நோக்கி இருக்கவும்.  மதி இதற்கு மேல் மறைத்து வைத்தால் சரி வராது என சொல்ல ஆரம்பித்தாள்.

காவல் புரிவா(ள்)ன்…

மகா ஆனந்த் ✨

Advertisement