Advertisement

அனைத்தையும் கேட்ட இருவரின் முகமும் கோபத்தையே பிரதிபலித்தது.  “அவரை இப்பயே இங்க வர சொல்ல அக்கா நாங்க அவர் கிட்ட பேசணும்”, இதைத் தவிர வேறு ஒரு வார்த்தை கூட மதி இடம் அவர்கள் பேசவில்லை.

சரி என உரைத்த மதி ரகுவை அழைக்க அலைபேசியை கையில் எடுக்கும் நேரம் அழைப்பு மணியின் ஓசை கேட்டது.

வந்திருப்பது யாரென அறிய மதி அறையின் கதவை திறந்து எட்டிப் பார்த்தாள், அங்கே ரகு கதவுக்கு பின்னால் நின்றிருந்தான்.

“ஹாய் மதி உன் தங்கச்சிங்க வந்துட்டாங்களா.  அவங்க கிட்ட நீ மட்டும் இல்ல நானும் பேசணும் இல்ல அதுக்கு தான் வந்தேன்”, என்று கூறியவாறு மதியை ஒரு கையால் விலக்கிக் கொண்டே அறையின் உள்ளே வந்தான்.

உள்ளே வந்து இருவரையும் கண்டவன் “ஹாய்” என்றான். ஆனால் எதிரிலிருந்து இவனுக்கு எந்த பதிலும் கிடைக்கவில்லை.  இருவரின் முகமும் கோபத்தை பிரதிபலிக்க மதியிடம் திரும்பி,

“மதி எனக்கு ஒரு காபி கொண்டு வா.  பத்து நிமிஷம் கழிச்சு வா, ஓகே ?”,என்றவாறு மதியை அறைக்கு வெளியே நகர்த்தி நிறுத்திவிட்டு அவள் காதுகளுக்கு மட்டும் கேட்குமாறு, “இவங்க கிட்ட நான் கொஞ்சம் தனியா பேசணும், மதி” என்று கூறினான்.

மதி வேறு ஏதும் பேசும் முன் கதவை அடைத்தவன், உள்ளே வந்து இருவரையும் பார்த்தவாறு நாற்காலியில் அமர்ந்து கால் மேல் கால் போட்டுக் கொண்டு, “என்ன உங்க ரெண்டு பேருக்கு இப்ப, இந்த கல்யாணத்தை நிறுத்த போறிங்களா ?”, என தெனாவட்டாக கேட்டான்.

“ஹலோ மிஸ்டர் ரகுநந்தன்.  நீங்க இவ்ளோ பெரிய டைரக்டரா வேணா இருந்துட்டு போங்க. அதுக்காக எல்லாம் எங்க அக்காவும் உங்களுக்கு கட்டி கொடுக்க முடியாது”, என்றவள் ஜீவா.

“ஜீவா கூல்.  மிஸ்டர் ரகு, எங்களுங்கு ஒரு பதில் சொல்லுங்க.  ஒரு ப்ரோபர்ட்டிக்காக எங்க அக்காவ கல்யாணம் பண்ணிக்கிறது உங்களுக்கே நல்லா இருக்கா?” இப்போது சக்தி.

“ஒரு பிராப்பர்ட்டிய ரீசனா வச்சு நான் கல்யாணத்துக்கு கேட்டா உங்க அக்கா ஒத்துப்பான்னு நீங்க நினைக்கிறீங்களா?”

“எங்க அக்கா செய்ற எந்த செயலுக்கும் பின்னாடி இருக்கிற காரணம் எங்களுக்கு தெரியலனாலும், எங்களுக்கு அவளை தெரியும் அவ எப்பவும் தப்பான முடிவு எடுக்க மாட்டாங்கறது எங்களுக்கு நல்லாவே தெரியும்.  இப்ப பிரச்சனை அவ எடுத்த முடிவு கிடையாது ,

உண்மையாவே எந்த காரணத்துக்காக எங்க அக்கா கிட்ட கல்யாணத்தை பத்தி நீங்க கேட்டீங்க அப்படீங்கிறது தான் இப்ப பிரச்சனை,” என்று தொடர்ந்து பேசி முடித்தாள் சக்தி.

தீவிரமும் கோபமும் ஆன முக பாவனைகளுடன் தன் முன்னே வாதிட்டுக் கொண்டிருக்கும் இருவரையும் காண்கையில் ரகுவிற்கு எதிர்மறையான எந்த எண்ணமும் தோன்றவில்லை‌.  மாறாக இவர்கள் இருவரும் மதி மேல் வைத்திருக்கும் அன்பு ரகுவை நெகிழ்ச்சி அடையச் செய்தது.

“பதில் தான வேணும் சொல்றேன்.  கேட்டுக்கோங்க.   ஐ அம் இன் லவ் வித் ஹர்(I am in love with her).”

தங்கைகள் இருவரும் அவனை சற்று ஆச்சரியமாக பார்த்தனர்.  அக்கா தங்களுக்கு சொன்ன கதையில் இவனுக்கு அவளை சற்று பிடித்திருக்கிறது என்பதாக எண்ணினர். இவன் சொல்வதோ வேறாக இருக்கிறதே என்று.

“ரெண்டு பேருக்கும் ஷாக்கா இருக்கா? ஆக்சுவலா நேத்து மார்னிங் தான் நானே இந்த விஷயத்தை புரிஞ்சுகிட்டேன்.  நான் மதிய லவ் பண்றேங்கிறத.  ஃபர்ஸ்ட் டைம் உங்ககிட்ட தான் சொல்றேன்.   இந்த விஷயம் மதிக்க கூட இன்னும் தெரியாது”

சற்று அதிர்ச்சியில் இருந்து வெளிவந்த சக்தி,”எங்க அக்காவ உங்களுக்கு முன்னாடியே தெரியுமா”, என்றாள்.

“முன்னாடியேனா?”

“அதான் அந்த இன்டர்வியூக்கு முன்னாடியே உங்களுக்கு தெரியுமான்னு கேட்கிறேன்?”

“இல்லை “

“அப்புறம் எப்படி?”

“சத்தியமா தெரில.  பட் நேத்து மதி அம்மாகிட்ட அத்தை மாமா பத்தி பேசும்போது அவ கண்ணுல தெரிஞ்ச வலி, அது என்ன உள்ள வர போய் என்னை கொண்ணுடுச்சு.  அந்த நிமிஷமே எனக்கு புரிஞ்சிடுச்சு நான் மதிய உயிருக்குயிரா காதலிக்கிறேன்.”

இருவரிடத்திலும் அமைதியே பதிலாக கிடைக்க இருவரையும் நிமிர்ந்து பார்த்த ரகு சட்டென்று தலையில் அடித்துக் கொண்டான்,” ஞாபகப்படுத்திட்டேனா? சாரி டா”,  என பக்கத்தில் வந்து நின்று இருவரின் கைகளையும் பிடித்துக் கொண்டான்.

“இல்ல சாரி சொல்ல வேண்டிய அவசியம் இல்ல”

“எனக்கு தெரியும் இந்த கல்யாணம் நடக்கிறதுல உங்க ரெண்டு பேருக்கும் எந்த பிரச்சினையும் இல்லை.  உங்க அக்காக்கு பிடிச்சிருந்தா போதும் அதை நீங்க தடுக்க மாட்டீங்க.

ஆனா நான் எப்படி, என் மனசுல என்ன இருக்குன்னு தெரிஞ்சுக்க தான் நீங்க இங்க வந்து நின்னு சரமாரியா என் கிட்ட கேள்வி கேட்டுட்டு இருக்கீங்கன்னு எனக்கு நல்லா புரியுதுடா, உங்க கேள்விக்கு பதில் கிடைச்சிருச்சா?”

“அக்காவ நல்லா பாத்துப்பீங்க இல்ல”, சற்று மெதுவான குரலில் ஜீவாவிடம் இருந்து வந்தது கேள்வி.

“நான் இப்ப வாழ்க்கையா வாழ்ந்துட்டு இருக்கிறதே, எங்க அப்பாவோட வார்த்தைகளை தான்.  என் அப்பாவோட வார்த்தைகளை நான் இந்த அளவுக்கு பின்பற்ற காரணம்,  அவர் மேல நான் வச்சிருந்த எல்லையற்ற பாசம்.

 அவர் மேல சத்தியமா சொல்றேன்.  உங்க அக்காவ நான் ரொம்ப நல்லா பாத்துப்பேன் ஓகே?”

அந்த வார்த்தைகளும் அதில் இருந்த உறுதியும் மட்டும் இருவருக்கும் போதுமானதாக இருந்தது அதன்பின் கல்யாணத்தைப் பற்றி எதுவும் கேட்காமல், ” உங்களை நாங்க எப்படி கூப்பிடனும்?”,  என ஜீவா ஆரம்பிக்க, கதவு தட்டும் ஓசை கேட்டது, கூடவே மதியின் குரலும்.

ரகு சென்று கதவை திறக்கவும் உள்ளே வந்த மதி “என்ன உங்க கேள்வி படலம் எல்லாம் முடிஞ்சிடுச்சா?” என்றாள்.

அதற்கு ஜீவா ,”இன்னும் முடியல அதுக்குள்ள நீ கதவை தட்டிட்ட” என்றாள்.

“நீங்க மூணு பேரும் தனியா பேச ஆரம்பிச்சு 15 நிமிஷம் ஆச்சு இன்னுமா நீங்க கேள்வி கேட்டு முடிக்கல. என்னடி வேணும் உங்களுக்கு?”

“எங்க அக்காவ கட்டிக்க போற இவரை நாங்க எப்படி கூப்பிடனும் கேட்டுட்டு இருந்தேன் அதுக்குள்ள நீ வந்துட்ட.  நான் என்ன பண்றது”.

மதி ஆச்சரியமான பாவனையுடன், “என்னடி சொல்ற நெஜமாவா ?, என மகிழ்ச்சியோடு கேட்டாள்.

“ஓ நாங்க இவரை ” நிஜமாவா”ன்னு கூப்பிடனுமா?”  என கிண்டல் தொனி மாறாமல் பேச,

“ஏய். சீரியஸா பதில் சொல்லு டீ”

“ஐசியு வாட்ல படுத்துக்கிட்டு பதில் சொல்லனுமா?”

“என்கிட்ட அடி வாங்க போற நீ. போடி. சக்தி நீ சொல்லு டா. உங்களுக்கு ஓகேவா”

“டபுள் ஓகே” என இருவரும் ஒன்று போல் கூறினர்.

இப்போது மதி தன் முழுமதி புன்னகையுடன் இரு தங்கைகளையும் கட்டி அணைத்துவிட்டு ரகுவிடம் திரும்பி,  “தேங்க்ஸ்” என்றாள். முகத்தில் புன்னகை மாறாமல், “உங்க காபி ரெடி ஆகிடுச்சு வந்து குடிங்க”,  என்றவாறு வெளியே சென்றாள்.

“ஓகே நான் முடிவு பண்ணிட்டேன் நான் உங்களை மாமானு தான் கூப்பிட போறேன்”  என்று அறையில் இருந்து வெளியேறியவாறு கூறினாள் ஜீவா.

அவள் அப்படி கூறியது முன்னே சென்று கொண்டிருந்த மதி,  திரும்பி ஜீவாவை ஒரு பார்வை பார்க்க அது சக்தி கண்களிலும் பட்டது.  ரகு மட்டும் காண தவறி விட்டான்.

அவள் பார்வைக்கு சற்று எச்சில் முழுங்கியவாறு, ” இல்லல்ல அது கொஞ்சம் பழைய பெயரா இருக்கு வேற மாதிரி கூப்பிடலாம்”,என்றாள்.

“மாமாவே நல்லா தானடா இருக்கு”,  என்று ரகு கூற,

“இல்ல எங்க ஊரு பக்கம் அக்கா ஹஸ்பண்ட மச்சான் தான் சொல்லுவாங்க.  அதனால அப்படி வேணா கூப்பிட்டு பாக்கவா”

“இது மட்டும் டிரெண்டாவாடா இருக்கு. ஏண்டா பாப்பா அதுக்கு மாமாவே பெட்டர் அப்படியே கூப்பிடுங்க”

“அந்த ரிஸ்கை மட்டும் நான் எடுத்தேன் கொஞ்ச நாளைக்கு நான் ரஸ்க் மட்டும்தான் சாப்பிட முடியும்”, என மனதில் கூறிக் கொண்ட ஜீவா, மதியை திரும்பிப் பார்க்க அவள் தன் குழம்பிக் கோப்பையில் கண் பதித்திருந்தாள்.

இப்போது சக்தி இடைப்புகுந்து, “அப்போ இப்படி கூப்பிடலாம்.  உங்களை நாங்க இனிமேல் “அத்து” அப்படினு கூப்பிட போறோம். ஓகேவா ?, என்றாள்‌

“அத்துவா ஏதும் கொரியன் லாங்குவேஜா டா”,  என கேட்டான் ரகு.

“இல்ல அத்து. “அத்தான் “.  அத்தானோட ஷார்ட் ஃபார்ம் தான் அத்து ட்ரெண்ட் ப்ளஸ் ட்ரெடிஷன் நல்லா இருக்கா?”

“பாரேன் சக்தி உனக்கு கூட அறிவு இருக்கு”, என ஜீவா கலாய்க்க சக்தி அவளை துரத்தி வர, ரகு இடையில் வந்து தடுக்க அந்த வீடு சிறிது நேரம் விளையாட்டு திடலாக மாறியது.

ரகுவிற்கும் அந்த அழைப்பு பிடித்திருக்க இருவரையும் அவ்வாறே கூறுங்கள் என்று கூறிவிட்டான்.

அதன்பின் எத்தனை முறை மதி அவர்கள் என்ன பேசிக் கொண்டார்கள் என்று கேட்டபோதும் மூவரும் சொல்ல மறுத்து விட்டனர்.  ஏனென்றால் ரகு அவற்றை ரகசியமாக வைத்திருக்க வேண்டும் என்று கூறி இருந்தானே.

—————————————————————

இவற்றையெல்லாம் எண்ணியவாறே மதியின் கைகளோடு தன் கைகளை கோர்த்துக்கொண்டு மாடிக்கு தங்கள் அறைக்கு வந்து சேர்ந்தான் ரகு.

அறைக்கு சென்ற நொடி “மதி ………”, என்ற அலறல் ஒலியில் திடுக்கிட்டு ரகுவை திரும்பிப் பார்த்தாள் மதி.

மதி பதறிப் போய் ரகுவிடம் என்ன என்று கேட்க, ” மதி இன்னைக்கு என்ன நாள் மறந்துட்டியா? பால் சொம்பை எடுக்காம வந்துட்ட பாரு”, என்றதும்,

மதி மூச்சு விட முடியாமல் அவனைப் பார்த்தவாறு நின்றாள்.

காவல் புரிவா (ள்)ன்.

மகா ஆனந்த்✨

Advertisement